சந்தனம் மணக்கும்; அது தோன்றிய மலை மணக்காது. முல்லையின் மணம் மயங்க வைக்கும். ஆனால் அது தோன்றிய மண் மணப்பதில்லை.
தாமரை மலர்ந்து மணம் வீசும். ஆனால் தடாகம் மணக்காது. இயற்கையின் விதி இது. இதை மாற்ற யாராலும் இயலாது.
ஆனால் விதியின் எழுத்து கிழிக்கப்பட்டுவிட்டது.
மண் மணக்கிறது. ஆம்! தமிழீழத் திருமண் புகழ் மணம் கமழக் கமழ மணக்கிறது.
தாயகத்தை மீட்கப் போராடி, களத்தில் வீழ்ந்துவிட்ட மாவீரர்களின் புகழுடம்புகள் விதைக்கப்பட்ட மண் மணக்கிறது.
தமிழர்களின் வீரப்புகழ் மணம் காற்றிலே கலந்து கடல் கடந்து பரவி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
பொதிகையில் பிறந்து தமிழகத்தில் தவழ்ந்து வரும் தென்றல் தரும் சுகம் ஈடு இணையற்றது. ஆயினும் தமிழ்ப்புலிகளின் குருதியால் சிவந்த தமிழீழ மண்ணில் இருந்து வீசும் காற்றில் கலந்துவரும் மணத்திற்கு தென்றலும் நிகராகாது.
"நெற்றிக்கண்ணைத் திறந்து காட்டினாலும் நின் தேவியின் கூந்தலுக்குக்கூட இயற்கை மணம் கிடையாது" என இறைவனை நோக்கிக் கூறியவன் நக்கீரன். அந்த நக்கீரன் இன்று இருந்திருந்தால் தமிழீழத் திருமண் மணக்கிறது எனக் கூறியிருப்பான்.
தாய்த்திரு மண்ணைத் தமது தியாகத்தினால் மணக்க வைத்தவர்கள் மாவீரர்கள்.
வாழ்வின் வசந்த காலத்தில், வாழவேண்டிய வயதில், விரும்பி வாழ்வை முடித்துக் கொண்டவர்கள் மாவீரர்கள்.
இளம் வயதில் மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்றுத் தழுவிக் கொண்டவர்கள் மாவீரர்கள்.
மலராத மொட்டுக்களாகவே உதிர்ந்தவர்கள் மாவீரர்கள்.
தாயக விடுதலைக்காகப் போராடி தாய் மண்ணிலேயே புதைந்து அந்த மண்ணை மணக்க வைத்தவர்கள் மாவீரர்கள்.
- ஐயா பழ.நெடுமாறன்
No comments:
Post a Comment