விலங்குகள், காட்டுவாசிகள், பண்பாடடைந்த மக்கள் என்ற பல் வேறுபட்ட நிலைகளின் வளர்ச்சிப் போக்கில் காலத்திற்குக் காலம் போர்கள் வேறுபட்ட வடிவங்களில் இடம்பெற்றே வந்துள்ளன. மக்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ப போர்க்கருவிகளும், போர் முறைகளும் போரின் குறிக்கோள்களும் மாற்றம் பெற்றே வரலாயின. மக்களாட்சி பெரிதும் இடம் பெறுகின்ற இக்காலகட்டத்திலே போர்கருவி உற்பத்தியும் போர்களும் வேண்டப்படாதனவாக இருந்தபோதிலும், இவ்விருசெயல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பண்டைய அரசியல் அமைப்பு முறையில் போர்கள் தவிர்க்க முடியாதனவாகவும், களிப்புத்தரும் மறச்செயல்களாகவும் அமையலாயின. அக்கால நிலையில், அரச ஆணைக்குட்பட்டனவாகவும் மக்கள் நிலையாக வாழ்வதற்கு இன்றியமையாத ஒரு நடைமுறையாகவும் போர்கள் காணப்பட்டன.
போரினால் பெற்ற சாதனைகளே ஒரு நாட்டின் அரசியல் பலத்தையும் பண்பாட்டு வளர்ச்சியையும் உணர்ந்து கொள்வதற்குரிய அளவுகோல்களாக அமைந்து விடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் உலகில் எந்த நாடு பெருமளவு அணுக்குண்டுகளையும் போர் விமானங்களையும் கொண்டுள்ளதோ அந்நாடு உலக அரசியல் அரங்கில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றமையைக் காண்கின்றோம். போர் அனைவராலும் வெறுக்கப்பட்ட போதிலும் உலகில் எந்த அரசும் இராணுவ அமைப்பின்றித் தம் அரசியலை, நடத்தியதே இல்லை. அன்றியும் அனைத்து நாடுகளினது தேசிய தின விழாக்களிலே முதன்மை நிகழ்ச்சியாக அவ்வந் நாட்டுப்படைப்பலத்தை வெளிக்காட்டும் அணிவகுப்புகள் இடம்பெறுதல் கண்கூடு. எனவே போர் என்பது மனித பண்பாட்டு வரலாற்றிலே இடம்பெற்றுவந்த மிக இன்றியமையாத ஒரு நிகழ்ச்சி என்பது உறுதியாகின்றது.
பண்டைத் தமிழர் பண்பாட்டிலே இடம் பெற்ற போர்முறைகள், போர்முறைக் கோட்பாடுகள், போர்க் கருவிகள், காவல் அரண்கள், கோட்டைகள் முதலியன பற்றி ஆராயும்போது, அதனூடாக அக்கால மக்களின் பண்பாட்டுக் கோலங்களும் துலங்கவே செய்கின்றன.
சேரன் செங்குட்டுவன், சோழன் திருமாவளவன், இமயவரம்பன் நெடுஞ்செழியன் என்னும் மூன்று மன்னர்களும் தமிழ் நாட்டினின்று வடக்கே இமயம்வரை பகை படை எடுத்துச் சென்று, மன்னரை வென்று வெற்றியோடு திரும்பிய செய்திகளைப் பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம் என்பன கூறுகின்றன. இது போன்றே கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் தன் கடற்படை மூலம் பகைவரது கடற்படைகளைத் தோல்வியுறச் செய்த வீரச் செய்திகளும் பதிற்றுப்பத்திற் காணப்படுகின்றன. இவ்விரு செய்திகளும் அக்கால மக்களின் படைவலிமையையும் பொருளாதார மேம்பாட்டையும் உணர்த்துகின்றன.
சங்ககாலத் தமிழ் மன்னர்கள் தம் நாட்டின் எல்லையுட் பகைவர் எளிதில் நுழைந்திடா வண்ணம் காவல் அரண்களை அமைத்திருந்தனர். அவை இயற்கை அரண்களாகவும், செயற்கை அரண்களாகவும்
அமையலாயின. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடக்கே விந்தியமலை அரண்களும் ஏனைய மூன்றுபகுதிகளும் கடல் அரண்களையும் கொண்டிருந்தமையால் வெளிநாட்டுப்படை எடுப்புக்களால் பெரிதும் பாதிப்படையவில்லை. முடியுடை மூவேந்தர் காலத்தில் சேர, சோழ பாண்டியரில் ஒருவர் தலைமை அரசனாக மேலாண்மை செலுத்த முற்பட்ட காலங்களில் இவர்களிடையே பெரும் போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இதனால் ஒவ்வொரு மன்னர்களும் தன்னாட்டெல்லைகளிலும், நாட்டினுள்ளும் காவல் அரண்களைப் பலப்படுத்தி வைத்திருந்தனர் என்பதற்கு இலக்கிய சான்றுகளுள்ளன, அரண்கள் தோறும் தற்காப்புப் படைகளும் பாசறைகளில் போர்க்களம் செல்லும் படையணிகளும் அவர்களிடம் இருந்தன.
இப்படைகள் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என நான்கு பிரிவினராக அமைக்கப்பட்டிருந்தன.
நாற்படையுடன் படை எடுத்து வரும் அரசனை மாற்றரசன் தானும் அவ்வாறே நாற்படைகளுடன் சென்று எதிர்த்துப் போரிட வேண்டிய நிலையைத் தொல்காப்பியம் புறத்திணையில் விளக்குகிறது. காலாட்படைப் பிரிவில் வேற்படை, விற்படை, வாட்படை என்ற மூன்று பிரிவுகள் இருந்தன. மற்போர் புரிவோரும் இருந்தனர் என்பதை புறநானூறு 80 ஆம் செய்யுள் சான்று படுத்துகின்றது.
போர்வீரர்கள் மழவர், மறவர், பொருளர், பெரும்செய் ஆடவர், வில்லோர், எயனர், கணையோர் என்னும் சிறப்புப் பெயர்களால் வழங்கப்படலாயினர்.
போர் எனில் பூரிக்கும் தோள்வலிமை கொண்டவர்களாகவும், போர்களத்தில் எதிரியைக் காண்பதில் மகிழ்சி கொண்டவர் களாகவும், சங்ககால மறவர்கள் காணப்பட்டனர். எதிரிக்குப் பயந்து ஓடுவதைவிட்டு, எதிர்த்து நின்று போரிட்டு வீரச்சாவை அடைவதையே விரும்பினர். பகை மன்னனின் படைகளை அழித்து, வெற்றியுடன் திரும்புதலே தமது கடமை என்ற உணர்வுடன் அக்கால மறவர்கள் திகழ்ந்தனர், என்பதை,
"ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
என சாந்தையார் பாடுகிறார். தம் மண்ணுக்காகத் தம்மையே ஈகம் செய்யும் மனப்பாங்கும், வீரம் செறிந்த மான உணர்வும், அஞ்சா நெஞ்சமும் நாட்டின் புகழ் கருதி தம் உயிரையே தற்கொடை புரியும் உறுதியும் கொண்டவர்களாக அக் காலத் தமிழ் மறவர்கள் திகழ்ந்தார்கள் என்பதைப் புறநானுாறு கூறுகிறது. மேலும் தம் நாட்டுக்குப் பேரிடர் அல்லது பழி ஏற்படக் கூடிய செய்கைகளுக்கு உடந்தையாக இருப்பதால் பெரும் பேறு கிடைப்பினும், இழி செயல்களை கனவிலும் நினைத்துப் பார்க்காத செயல் மறவர்களாக சங்ககால வீரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை இளம்வழுதி என்ற புலவர் பின்வரும் வரிகளில் புலப்படுத்துவார்.
"துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்".
(4-182. 4.6)
பண்டைத் தமிழரின் படை அணிகளில் யானைப் படை சிறப்பு இயல்பு கொண்டதாகும் . யானைப்படை அணியில் யானை எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதில் அரசர்கள் அக்கறை கொண்டிருந்தனர். பல்யானை வேல் கெழுகுட்டுவன் என்ற சேர மன்னன் பெரும் யானைப்படை வைத்திருந்தான் எனப் பதிற்றுப் பத்து என்ற நூல் செப்புகிறது. இன்றைய தரைப் படைப் போர் முறைகளில் கனரக வாகனங்களில் ஒன்றான "டாங்கிகள்" அரண்களை உடைத்து முன்னேறப் பயன்படுவது போன்று, பண்டைத் தமிழர்
முறையில், பகை மன்னனின் மிக்க உறுதி வாய்ந்த கோட்டைக் கதவுகளை உடைத்து கோட்டையினுள் படைகள் புகுவதற்கு யானைப் படைகள் பெரிதும் பயன் படுத்தப்பட்டன. யானைக் கொம்புகளின் நுனிகளில் இரும்பு வளையங்கள் பொருத்தப்பட்டன. அன்றியும் பகை நாட்டு நீர்த் தேக்க அணைக்கட்டுக்களையும் யானைப் படை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. யானைகள் தம் வாயில் பெருங்கற்களைக் கவ்விச் சென்று தொலைவில் நிற்கும் எதி ரிகளின் படையணி மீது துதிக் கையால் கற்களை எடுத்து வீசித் தாக்கும் போர் முறை பற்றியும் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. (புறம் 30)
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர் சங்ககாலத்தில் அமைதிக் குரல் எழுப்பிய போதிலும், சங்ககால மன்னரின் ஆட்சியியலில் போர் முரசம் ஓயவில்லை.மக்களும் மன்னரும் போரை வெறுத்ததாகக் கூறப்படவில்லை. போரில் மறச் செயல் புரிந்தோரை மன்னரும் மக்களும் போற்றினர். போர் முறைகள் நன்கு திட்டமிடப்பட்டிருந்தன. வெட்சிப் போர், தும்பைப்போர், வாகைப்போர் எனப் போர்முறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
படை அமைப்பு, படைஎடுத்துச் செல்லும் முறைமை, போர் அறிவிப்பு, பாசறை அமைப்பு, போர், போர்க்கள உதவியாளர், வெற்றிக்களிப்பு முதலான விடயங்கள் திட்டமிட்டு வகுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாட்டிலும் தற்காப்புக் காவல் அரண்கள், கோட்டைகள், இயற்கை அரண்கள் என்பன பேணப்பட்டன. தாமே இயங்கும் படைக்கலப் பொறிகளும் காவல் அரண்களில் பொருத்தப்பட்டிருந்தன. இத்தகு போர் முறைகள் செம்மையடைவதற்குப் பல நூற்றாண்டுகள் எடுத்திருக்கலாம். இச் செய்திகள் தமிழர் பண்பாட் டின் வளர்ச்சிப் போக்கின் நுட்பங்களை எடுத்துக் காட்டும் ஒரு பகுதியாகும் .
-எரிமலை, மார்கழி 1992.
No comments:
Post a Comment