வ உ சி கண்ட பாரதி ①︎
-----------------------------
பாரதிக்கும் எனக்கும் பழக்கம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாரதியாரின் தந்தை ஸ்ரீ சின்னச்சாமி ஐயர் எட்டையபுரம் சமஸ்தானத்தில் உத்தியோகம் வகித்து வந்தார். அதே காலத்தில் எனது தந்தையார் ஸ்ரீ.வ. உலகநாத பிள்ளை அதே சமஸ்தானத்தில் வக்கீலாக சேவை செய்துகொண்டிருந்தார். என் தகப்பனாருடன் பாரதியாரின் தந்தையார் எங்கள் சொந்த ஊராகிய ஒட்டப்பிடாரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.
எங்கள் ஊர் சரித்திரப் பிரசித்தமானது. 'மானம் பொழியுது, பூமி விளையுது; மன்னவன் காணிக்குக் கிஸ்தி எது?'என்று முழங்கி ஆங்கிலக் கும்பினியாரோடு அருஞ்சமர் புரிந்து பெரும்புகழ் எய்திய பாஞ்சாலங்குறிச்சிப் பாளைய மன்னன் -வீரன் கட்டபொம்மன் காலத்தில் ஒட்டப்பிடாரம் சீரும் சிறப்பும் பொருந்திய சிற்றூராகத் திகழ்ந்தது. பின்னர் சமீப காலம்வரை ஒட்டப்பிடாரத்தில் தாலூகாக் கச்சேரியும், தாலுகா மாஜிஸ்டிரேட் கோர்ட்டும் இருந்து வந்தன.
இவ்விரண்டு கச்சேரிகளில் ஏதாவது ஒன்றில் 'ஜோலி'யாகவே எங்களுருக்கு ஸ்ரீமான் ஐயர் என் தந்தையாருடன் வருவார்.
அங்கு வந்த காலத்தில் என் வீட்டிலாவது, என் வீட்டிற்கு மேற்கேயுள்ள பழைய பாஞ்சாலங்குறிச்சித் தானாதிபதிப்பிள்ளை வீட்டிலாவது தங்குவார், அப்பொழுது எனக்குப் பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். ஸ்ரீமான் ஐயர் எந்தையாரிடமும், என்னிடமும் மற்றையோரிடமும் பேசிய மாதிரியிலிருந்து அவர் ஒரு பெரிய மேதாவி என நான் நினைத்தேன்.
என் தகப்பனார் என்னிடம் ஸ்ரீமான் ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலியென்றும், சிறு பிள்ளையா யிருக்கும்போதே தமிழில் வெகு அருமையாகச் சுயம் பாடுவான் என்றும் கூறுவதுண்டு. ஐயரது குமாரன் பாடிய கவிகளை என்னிடம் சொல்லிக்காட்டி அவனைப்பற்றி என் தந்தை வெகுவாகப் புகழ்ந்து பேசுவார். சிறு வயதிலேயே கவி பாடிய அச் சிறுபிள்ளைதான் சுப்பிரமணிய பாரதி என்று இன்று உலகமெல்லாம் புகழ்பெற்று விளங்கும் பெரியார்.
முதல்சந்திப்பு
இப்பெரியாரை நான் முதன்முதலாகப் பார்க்கும் பாக்கியம் பெற்றது அவர் சென்னையில், 'இந்தியா' என்னும் பெயர் பெற்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்த காலத்தில்தான். அந்தக் காலத்தில் 'இந்தியா'வுக்குப் பேரும் புகழும் பெருஞ்செல்வாக்கும் இருந்தன. பத்திரிகையின் சிறப்புக்குக் காரணம் ஆசிரியர்தான் என்பது சொல்லாமலே தெரியும்.
அது 1906-ம் வருஷ ஆரம்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்போது நான் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்றிருந்தேன்.(எனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலிருந்து கச்சேரிகள் எல்லாம் எடுபட்டுவிட்டதனால் அப்பொழுது நான் தூத்துக்குடியில் வக்கீல் தொழில் புரிந்துவந்தேன்.) சென்னையில் திருவல்லிக்கேணியில் 'சுங்குராமசெட்டித் தெரு'வில் என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் பட்டணம் (town) போகிற வருகிற வழியில் ஒரு பெரிய வீடு இருந்தது. அதுதான் 'இந்தியா' பத்திராதிபர் ஸ்ரீமான் திருமலாசாரியார் வீடு என்று தெரிந்துகொண்டேன்.
ஒருநாள் மாலை நாலு மணி சுமாருக்கு நான் 'இந்தியா' அதிபர் திரு .ஆசாரியாரைப் பார்ப்பதற்காக அப்பெரிய வீட்டிற்குள் புகுந்தேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில், 'அவர் மாடியில் இருக்கிறார்" என்றனர்.
நான் மாடிக்குச் சென்றேன்; அங்கு ஒரு அய்யங்கார் அமர்ந்திருந்தார். அவர் இளவயதினராகக் காணப்பட்டார். முகத்தில் அறிவுச்சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்தான் அதிபராக இருக்க வேண்டுமென நினைத்து அவரைக் கேட்டேன்.
"ஆம்" என்றார் அவர்.
அவரிடம் என் ஊரும், பேரும் சொன்னேன்.
அவர் மாடியின் உள்ளரங்கை நோக்கி, "பாரதி! உங்கள் ஊரார் ஒருவர் உம்மைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்" என்று உரக்கக் கூறினார்.
உடனே உள்ளிருந்து இருவர் வந்தனர். முண்டாசுக் கட்டுக்கும் முறுக்கு மீசைக்கும் பெயர் பெற்றது எங்கள் ஜில்லா. எனவே தலைப்பாகைக் கட்டைப் பார்த்ததுமே பாரதியார் என்பதைத் தெரிந்துகொண்டேன். முறைப்படி அதிபர் ஸ்ரீமான் ஆசாரியார், "இவர்தான் 'இந்தியா' ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி" எனப் பாரதியாரைச் சுட்டிக்காட்டி அறிமுகப்படுத்தினார்.
ஆசிரியர் பாரதியார் என் ஊரையும், பெயரையும் பற்றி உசாவினார்.
நான், "ஒட்டப்பிடாரம் வக்கீல் உலகநாதபிள்ளை மகன், சிதம்பரம் பிள்ளை'' என்றேன்.
''ஓ, அப்படியா! பிள்ளைவாளின் பிள்ளையாண்டானா நீங்கள்! உட்காருங்கள்!'' என்று கூறி அருகிலிருந்த நாற்காலியில் அமரச் செய்தார். அவரும் மற்றவரும் வேறு இரு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர்.
பாரதியார் ஆரம்பித்தார்
"உங்கள் தகப்பனார் என் தகப்பனாரின் அத்யந்த நண்பர். அவாளை எனக்கு நன்னாத் தெரியும். உங்களைப்பற்றியும் கேள்விப் பட்டிருக்கேன்" என்றார் பாரதியார்.
ஆமாம்! எங்கள் ஜில்லாவிற்கே உரித்தான அந்தச் சிறந்த தமிழ்ப்பாணியில் அவர் பேசினார். பின்னர் பல்வேறு விஷயங்களைப் பற்றி நால்வரும் - குறிப்பாக நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம். தேச காரியங்கள் பற்றிய பேச்சுக்களே எங்கள் அளவளாவுதலில் தலைமை வகித்தன. இந்த முதல் சந்திப்பும் பேச்சும் என்னைச் சோழனாகவும் அவரைக் கம்பனாகவும் நான் நினைக்கும்படி செய்தது. பாரதியார் என்னை கடற்கரைக்கு அழைத்தார். நாங்கள் நால்வரும் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்று வெகுநேரம் அரசியல் விஷயங்களைப் பற்றிப் பரஸ்பரம் பேசிக்கொண்டிருந்தோம். வங்க மாகாணத்தின் சிங்கச் செயல்கள் பற்றியும் விபின் சந்திர பாலரின் தேசபக்தி, பிரசங்கங்கள் முதலியவை பற்றியும் பாரதியார் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார்.
என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சி போன்று மின்னிக்கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. உணர்ச்சிப் பெருக்கால் இங்கு எழுதியுள்ள இதே வாக்கியத்தை நான் பாரதியாரிடம் சொன்னேன். இதே சமயத்தில் கடற்கரை மின்சார விளக்குகளும் 'பளிச்' சென ஒளிவிட்டு எரிய ஆரம்பித்தன.
பாரதி, "பிள்ளைவாள், சக்தி துணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்போது மின் ஒளியையும் பிரகாசிக்கக் செய்தது நம் அன்னை
பராசக்தியே/ அவள் வாழ்க! இனி நம் முயற்சி வெற்றி, எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுப சகுனம் இதுதான். வாழி அன்னை! வாழி அம்மை! சக்தி வாழி!" என ஆவேசம் வந்தவர் போலப் பேசினார். அவர் முண்டாசுக் கட்டின் முன்தானைத் துணி காற்றில் வெற்றிக்கொடி போலப் படபடவென்ற சப்தத்துடன் பறந்துகொண்டிருந்தது. கடல் அலை பேரிரைச்சலிட்டது. உள்ளம் நிரம்பிய மகிழ்வோடு நாங்கள் நால்வரும் திரும்பினோம்.
பின்னர் நாள்தோறும் நான் 'இந்தியா' ஆபீசுக்கும், அதிபர் வீட்டிற்கும். கடற்கரைக்கு செல்லலானேன்; அதிபரும், ஆசிரியரும் நானும் அவ்வப்போது அளவளாவுவது வழக்கமாகிவிட்டது. சுப்பிரமணிய பாரதியும் நானும் சோழனும் கம்பனுமாயிருந்தது மாறிக் கடைசியில் மாமனும் மருமகனும் ஆயினோம்.
அன்னைக்கா ஆடு பலி?
~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருநாள் மாலை வழக்கம்போல நாங்கள் மூவரும் (பாரதி, ஆசாரியார், நான்) திருவல்லிக்கேணிக் கடற்கரையில் வார்த்தையாடிக் கொண்டிருந்தோம். எங்கெங்கோ சென்று கொண்டிருந்த எங்கள் பேச்சு வங்க வள நாட்டின்மீது திரும்பியது. அப்போது காளி தேவிக்கு வங்கத்தில் ஆடு பலி கொடுப்பதைக் கண்டித்து விபின் சந்திரர் பேசிய பேச்சிற்கு மாமா உருக்கத்துடனும் ஆவேசத்துடனும் ஒரு வியாக்கியானம் செய்து முடித்தார். (இல்லை, 'பொழிந்து கொட்டினார்' என்று சொல்வதுதான் பொருத்தம்.) இவ்வியாக்கியானத்தைக் கேட்ட நான் கொழுத்த தேசாபிமானியாக மாறிவிட்டேன். (அதாவது இந்தக் காலத்திய தீவிரவாதி)இந்த வியாக்கியானத்தினால் நாங்கள் இருவரும் அதிகமாகப் பிணைக்கப்பட்டோம்; பெருமகிழ்ச்சி கொண்டோம். எங்கள் நட்பைப் பற்றி மாமா சொல்வார், "மாப்பிள்ளை, நமக்கினி யாரடா ஈடு?" என்று.
அது முதல் அவர் என் வீட்டிற்கு வருவதும் என்னோடு உண்ணுவதும் உறங்குவதும், நான் அவர் வீட்டிற்குப் போவதும் அவரோடு உண்ணுவதும் உறங்குவதுமாக இருந்தோம். பிரான்ஸ், இத்தாலி இவை போன்ற பிற தேசங்களின் சரிதத்தை மாமா ஆதியோடந்தமாக ஆவேசத்துடன் கூறிமுடிப்பார். நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பது வழக்கம். இடையிடையே ஏதாவது சந்தேகம் தோன்றினால் அவரிடம் கேட்பேன். அவர் காரணம் கூறி விளக்குவார்.
கேட்டவுடனே பாட்டு!
~~~~~~~~~~~~~~~~~
ஒருநாள் இத்தாலி நாட்டுத் தேசாபிமானி மாஜினியின் தேச ஊழிய யௌவன இத்தாலி சங்கத்தின் அங்கத்தினராகச் சேர்ந்தோர். செய்து வந்த விசுவாசப் பிரமாணச் செய்யுளை ஆங்கிலப் பாஷையில் மாமா எனக்குப்
படித்துக் காட்டினார். அதனைக் கேட்டதும் நான் சொக்கிப்போனேன்! அச்செய்யுளைத் தமிழ்ப் பாட்டாக மொழி பெயர்த்துத் தர மாமாவை வேண்டினேன். அவர் அன்றே அந்த இடத்திலேயே அதைத் தமிழில் கவிதையாக மொழி பெயர்த்துத் தந்தார். அதுதான் ''பேரருட் கடவுள் திருவடியாணை" எனத் தொடங்கும் பாட்டு.
பின்னர் நம் தேச ஆட்சியைச் சீக்கிரமே நாம் கைக்கொள்வதற்குச் செய்ய வேண்டியவைகளைப் பற்றிப் பேசுவதே வழக்கமாகிவிட்டது. தினம் ஒரு திட்டமிடுவதும் மறுநாள் மாற்றுவதும், மாற்றம் செய்தும் எங்கள் முயற்சிகளைப் 'பத்தரைமாற்றாக'ப் பக்குவம் செய்வதுமாயிருந்தோம். எங்கள் முயற்சிகளைப் பற்றி எங்கணும் பேசினோம், பிரசங்கம் புரிந்தோம். ஆனால் மாமா மட்டும் சொன்மாரி பொழிந்தார்.
தேசாபிமான ஊற்றென விளங்கும் திருவல்லிக்கேணி கோவில் பக்கத்திலுள்ள மண்டையன் கூட்டத்தாராகிய திருமலாசாரியார், ஸ்ரீநிலாஸாசாரியார் முதலியாரோடு அடிக்கடிப் பேசலானோம்; ஆலோசனை அனைத்தும் புரிந்தோம். அவ்வாலோசனையின் பயனாகத் திருவல்லிக்கேணியில் சென்னை ஜனசங்கம் " என்ற தேசாபிமானச் சங்கம் எழுந்தது. பின்னர் நான் எங்கள் யோசனைப்படி தூத்துக்குடி திரும்பினேன்; தேச ஆட்சியின் மீட்சிக்கான வேவைகளில் ஈடுபட்டேன்.
சூரத் காங்கிரஸில் தமிழர்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1907-ம் வருஷம் டிஸம்பர் மாதத்தில் சூரத்தில் நடப்பதாயிருந்த இந்திய தேசீய காங்கிரஸ் மகாசபையில் தலைமை வகிப்பதற்குச் கல்கத்தாவிலிருந்த பெரிய சீமானும் பெயர் பெற்ற வக்கீலுமான ஸ்ரீ ராஜ்பிகாரி கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. அது நம் பாரதியாரின் கண்களிலும் படாமல் போகவில்லை. தேச சேவையே பெரிதென நினைத்துச் சிறந்த தொண்டாற்றியதன் காரணமாகத் தேசம் விட்டுக் கடத்தப்பட்டு அப்பொழுதுதான் விடுதலையடைந்திருந்த லாலா லஜபதிராயை அவ்வருஷத்துக் காங்கிரஸின் தலைவராக்க வேண்டுமென பாரதியார் நினைத்தார்; என்னைச் சென்னைக்குப் புறப்பட்டு வரும்படித் தந்தி கொடுத்தார். நான் சென்னை சென்றேன். மாமா, நான், மற்றும் தேசாபிமானிகள் எல்லோரும் ஒருங்குகூடி ஆலோசித்தோம். லாலா வஜபதிராயையே காங்கிரஸ் மகாசபைக்குத் தலைவராக்க வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானித்தோம். அதற்கான வேலைகளைச் செய்யும் பொறுப்பு மாமாவுக்கும் எனக்கும் அளிக்கப்பட்டது. அவ்வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி வைப்பதன் பொருட்டு நான் அரசனாகவும் மாமா மந்திரியாகவும் மாறினோம்........
தொடரும்............
-வ உ சிதம்பரம் பிள்ளை