Thursday, 30 April 2026

சமர்க்களநாயகன் பால்ராச். 1

🔺நுழைவுவாயில் 🔺
~~~~~~~~~~~~~~~~~~
விடுதலைப் போர் மிகவும் இறுக்கமான கட்டத்தை அடைந்து கொண்டிருந்த 2008ம் ஆண்டின் மே மாதம் இடியாக இறங்கியது பால்ராஜ் அவர்களின் சாவுச் செய்தி. எத்தனையோ களமுனைகளில் விழுப்புண் அடைந்தும் வீழாத அந்த வீரனை, மிகவும் இக்கட்டான ஒரு கட்டத்தில் புலிகள் இழந்ததென்பது அந்த இயக்கத்திற்கு மட்டும் ஏற்பட்ட ஒரு பாரிய இழப்பாக பார்க்க வில்லை. தங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகவே தமிழினம் கருதியது.

'ஆனையிறவு எவர் வசம் இருக்கின்றதோ அவர்கள் வசமே யாழ்குடா இருக்கும்' என்பது போரியல் வல்லுனர்களின் கருத்தாக இருந்தது. அந்த ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு புலிகள்'ஆகாய கடல் வெளி எனும் பெரும் மரபுவழிச் சமரை நடத்தியிருக்கின்றார்கள். அவற்றைவிட பெயர் குறிப்பிடாத எத்தனையோ நடவடிக்கைகளை அத்தளத்தின் மீது மேற்கொண் டிருக்கின்றார்கள். இறுதியாக அவர்கள் ஆனையிறவை வெற்றிகொண்டது குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலமாகத்தான். மிகவும் ஆபத்து மிகுந்த குடாரப்புத் தரையிறக்க நடவடிக்கையைச் செய்வதற்கு 1200 போராளிகளைக் கொடுத்து தலைவர் அனுப்பி வைத்திருக்கின்றார் என்றால், பால்ராஜ் மீதிருந்த அளவு கடந்த நம்பிக்கைதான் காரணம். தலைவரின் நம்பிக்கையை உறுதியாக்கி, விழுத்தவே முடியாது என்று சிங்களம் இறுமாந்திருந்த ஆனையிறவை வீழ்த்தி வெற்றிகொண்டது மட்டுமல்ல, நவீன போரியல் வரலாற்றில், வெற்றிகரமான தரையிறக்கத்திற்குப் பெயர் பெற்றது பிரான்சிலுள்ள நோர்மோண்டித் தரையிறக்கம். இரண்டாம் உலகப் போரில் கிட்லரின் நாசிப்படைகளின் பிடியிலிருந்து பிரான்ஸ் நாட்டை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட அந்தத் தரையிறக்கத்திற்கு நிகராக, குடாரப்புத் தரையிறக்கத்தை பால்ராஜ் அவர்கள் வரலாற்றில் பதியவைத்தார். வரலாற்றின் பொன் எழுத்துக்களில் பொறிக் கப்பட்ட அந்த வெற்றியின் நாயகன் பால்ராஜ் அவர்கள்தான். 1991ல் 53 நாட்கள் போர்புரிந்தும் மீட்கமுடியாத ஆனையிறவை, அன்றையதை விட மிகக் குறைந்த போராளிகளின் இழப்புக்களுடன் 34 நாட்களில் புலிகள் வெற்றி கொள்ள முடிந்ததென்றால், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தலைமையிலான குடாரப்பு தரையிறக்கம் மிக முக்கியகாரணம்.

மறைந்த மாமனிதர் தராகி சிவாராமுடன் பரிசில் அமைந்திருந்த ஈழமுரசு அலுவலகத்தில் ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு தகவலைக் கூறினார். அமெரிக்க இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக இருந்த ஒருவர், கொழும்பில் தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்த போது, ஓர் உதவி செய்து
தருமாறு தன்னிடம் கேட்டிருந்தாராம். புலிகளிடம் தனக்கிருக்கும் தொடர்பை, செல்வாக்கைப் பயன்படுத்தி அதற்கான ஏற்பாட்டைச் செய்து தருமாறு அவர் தன்னிடம் கோரியிருந்ததாகத் தராகி கூறினார். அந்த அமெரிக்கப் படைத் தளபதி கேட்டிருந்த உதவி, தளபதி பால்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பு.

தளபதி பால்ராஜ் பல போர்க் களங்களைச் சந்தித்திருந்தார் என்பதும் பல வெற்றிகரமான தாக்குதல்களை முன்னின்று நடத்தினார் என்பதும் உலகறிந்த உண்மைதான். அதேவேளை, புலிகளிடம் அவரைவிட எத்தனையோ பல தளபதிகள் இருந்தார்கள். ஆனால், 'பால்ராஜை மட்டும் பிரத்தியேகமாக சந்திப்பதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்?' எனத் தான் அவ் அமெரிக்கப் படைத் தளபதியிடம் கேட்டாராம். அப்போது,

'குடாரப்புத் தரையிறக்கம் பற்றி தான் பால்ராஜிடம் இருந்து நேரடியாக அனுபவத் தகவல்களைப் பெற விரும்புவதாக' அந்தப் படைத்தளபதி தன்னிடம் கூறியதாகத் தராகி சிவராம் அவர்கள் அந்த உரையாடலின்போது குறிப்பிட் டிருந்தார். இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், பிரிகேடியர் பால்ராஜ் விடுதலைப் புலிகளின் சாதாரண ஒரு தளபதியல்ல, உலக இராணுவ வல்லுனர்களே வியந்து பார்த்த ஒரு சிறந்த வீரத் தளபதியாகவே அவர் இருந்திருக்கின்றார் என்பதற்காகத்தான்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இழப்புச் செய்தி கேட்டவுடன், அவர் குறித்த விடயங்களை அறியவேண்டும், அவற்றை பத்திரிகையின் ஊடாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. போர் மிகவும் இறுக்கமான கட்டத்தை அடைந்துகொண்டிருந்த நிலையில், தாயகத்தில் இருந்து அவருடன் நின்ற போரளிகளையோ, தளபதிகளையோ தொடர்புகொண்டு அவற்றைப் பெறுவதென்பது இயலாதிருந்தது. அப்போது நினைவுக்கு வந்தவர்தான் விதானையார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவருக்கு கஜன் என பெயர் சூட்டப்பட்டிருந்த போதும், அவரது நடவடிக்கை களைப் பார்த்து பால்ராஜ் அவர்கள் சூட்டிய பெயர்தான் விதானையார்.

இந்திய இராணுவ காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரான சில காலப் பகுதியிலும் பால்ராஜ் அவர்களுடன் நின்றிருந்த விதானையார், பால்ராஜ் குறித்து எப்போதும் வியப்பாகப் பேசுவதைக் கேட்டிருக்கின்றேன். விதானை யாரிடம் இருந்து தகவல்களைப் பெற்று ஒரு சில வாரங்கள் அவற்றை வெளியிட முடியும் என்றே எண்ணினேன். ஆனால், மழையாகக் கொட்டிய அவரது அனுபவங்களை உள்வாங்கி, தொகுத்து எழுதத் தொடங்கியபோது, அது பெரும் வரலாறாக விரிந்துகொண்டே சென்றது. ஒரு சில வாரங்கள் அல்ல, சுமார் 52 வாரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து வாசகர்களிடமும், தாயகத்தில் இருந்த பொறுப்பாளர்களிடம் இருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்னும் பல வாரங்கள் வெளிவரக்கூடிய தகவல்கள் நிறைந்து கிடந்தும், முள்ளிவாய்க்கால் பேரவலமும், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் அந்தத் தொடரை 2009 மே உடன் இடைநிறுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

25 ஆண்டுகால பால்ராஜ் அவர்களின் போராட்ட வாழ்வில் சுமார் மூன்று ஆண்டுகால, அதுவும் இந்திய இராணுவத்துடனான போரின் போது இடம்பெற்ற வரலாறே அத் தொடரில் பதிவாகியிருந்தது.புலிகள் கெரில்லாப் போராளிகளாக வாழ்ந்த காலமே அது. இந்திய இராணுவம் வெளியேறியதன் பின்னர், புலிகள் மரபுப் படையணியாக வளர்ச்சிகண்டனர். அதன் பின்னர் சுமார் 18 ஆண்டுகள் களமுனையில் பால்ராஜ் அவர்கள் நின்றிருக்கின்றார். எத்தனையோ உலகம் வியந்த பல வெற்றிகரமான தாக்குதல்களின் தளபதியாக நின்று, படைகளை அவர் வழிநடத்தியிருக்கின்றார். அந்த அனுபவங்களை அவருடன் நின்ற போராளிகள் வரலாறாகப் பதிய முனைந்தால் அது இன்னும் இன்னும் பல நூற்றுக் கணக்கான பக்கங்களாக விரிந்துசெல்லும்.

இது பால்ராஜ் என்ற மாவீரனின் விடுதலைப் போராட்ட வாழ்வின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மட்டுமல்ல, அவருடன் இணைந்து நின்று களமாடிய எத்தனையோ மாவீரர்களின் வரலாறுகளும் உள்ளடங்கியுள்ளன. 'போராளிகளை மதித்து நடத்துவதில் பால்ராஜ் அண்ணா விற்கு நிகர் யாரும் இல்லை' யென்று, அவருடன் நின்ற ஒவ்வொரு போராளியும் கூறியிருக்கின்றனர். இந்த வரலாற்றைப் படிக்கும்போது அந்த உண்மையை நீங்கள் ஒவ்வொருவரும் உணருவீர்கள்.

-கி.ஜெய்சந்தர்

பொறுப்பாசிரியர் ஈழமுரசு

20.04.2016.

-பசீலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ்

Wednesday, 29 April 2026

நான் ஆழமாக நேசித்த தலைசிறந்த போர்த்தளபதி -மேதகு தேசியத்தலைவர்.

நான் ஆழமாக நேசித்த தலைசிறந்த போர்த்தளபதி!
~~~~~~~~~~~~~~
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொளுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன்.

அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப்பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தி யாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறி தவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப் பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதே நேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

-மேதகு தேசியத்தலைவர்.

லெப் கேணல் நிர்மா

எப்போதும் எதிரிக்கு பேரிடியாக.
லெப் கேணல் நிர்மா.
~~~~~~~~~~~~~~~~~~~
"இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்

லெப்.கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம். இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர்.

'ஜீவன்' கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப்.கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி)யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்லி பயிற்சி எடுத்த அந்த அணிக்கு வெற்றிக் களிப்பையும் மீறி கவலை வந்தது.

"எப்போது எங்களுக்குச் சண்டை?"

எல்லோர் மனதிலும் இதே கேள்விதான்.

"நீங்கள் வரப்போறீங்கள் எண்ட பயத்திலேயே அவன் ஓடி விட்டான்"

பயிற்சியாசிரியர்கள் கேலி செய்தனர்.

"நாங்கள் போக முதலே இப்பிடியெண்டால், போயிருந்தால் என்ன நடந்திருக்கும்

என்று வீரம் பேசிச் சமாளித்துக் கொண்டனர் லெப்.கேணல் நிர்மா முதலான பயிற்சியாளர்கள் சண்டை ஒன்று வராமலா போகும் என்று தம்மை ஆறுதற்படுத்திக் கொண்டனர்.

அது இரண்டாம் ஈழப்போர்க் காலம்.

களங்கள் விரிந்திருந்தன.

பலாலிப் படைத்தளம் போராளிகளால் காவலிடப்பட்டது. கட்டுவன், வீமன்காமம் போன்ற பகுதிகளில் ஆளுமையைக் கொண்டிருந்த நிர்மா ஆரம்பத்திலேயே சிறு அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிதும் பேசப்பட்ட எமது முதலாவது மரபு வழிமுறைப் போரான ஆனையிறவுத் தளம்மீதான ஆகாய கடல் வெளிச்சமருக்கும் அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராகவே போயிருந்தார்.

ஆனையிறவு எமது கையில் விழாமல் தடுக்குமுகமாக வெற்றிலைக் கேணியில் தரையிறங்கி, ஆனையிறவு நோக்கி நகர்ந்த படையினரை வழிமறித்து நடந்த சண்டைகளின் போது புல்லாவெளியில் காயமடைந்தார்.

காயம் ஆறியதும் கண்ணி வெடிகள் தொடர்பான சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டார். விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதலாவது கண்ணிவெடி அணியாகப் பயிற்சி முடித்து எமது அமைப்பின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட சின்னங்களுடன் பணி
செய்வதற்காய் வெளியேறினார்.

அதன் பின் தொடர்ந்த கஜபார எதிர் நடவடிக்கை(1992). பலவேகய -02 எதிர் நடவடிக்கை (1992) என்றவாறாக அவரின் களங்கள் தொடர்ந்தன.

1992இல் தொண்டமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான 150 காவலரண்கள் தகர்ப்பு நடவடிக்கைக்கு முன்னரான ஒழுங்கமைப்புக்களின்போது பகல்நேர அவதானிப்புக்கென ஒரு பகுதி நிர்மாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் எமது வேவு அணிகளுடன் முன்னகர்ந்து. தாக்குதல் அணிகள் உள்நுழையவுள்ள பாதைகளில் கிடக்கும் எதிரிகளின் கண்ணிகளை அகற்றுதல், பகலில் தொடர்ச்சியாக மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்தவாறு அவதானித்தல். மறுபடி இரவு கண்ணிவெடி அகற்றல் என்று கடைசி ஐந்தாறு நாட்களிலும் ஓய்வேயில்லத கடும் பணி.

இடையில் நிர்மாவின் அணியை வந்து பார்த்த நிர்மாவின் பொறுப்பாளர், எல்லோரையுமே பின்னணிக்குப் போய்க் குளித்துவிட்டு வருமாறு பணித்தார். பகல் நேர அவதானிப்புத்தானே என்று முழுப் பேருமே போகாமல் தன்னோடு ஒருவரை நிறுத்திக்கொண்டு ஏனையவர்களைக் குளிக்க அனுப்பினார் நிர்மா. சண்டை தொடங்க இன்னும் ஓரிரண்டு நாட்களே இருக்கும் போது தமது கவனக்குறைவால் ஏற்படப்போகும் சிறு தவறுகூட நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகவே இருந்தார். நிலைமை சிக்கலில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிர்மாவுடையது. பலாலி விமானத்தளப் பகுதியினுள் பகலில் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால். சாப்பிடுவதற்குக்கூட மரத்தை விட்டு இறங்காமல் தொலைநோக்குக் கருவியால் அவதானித்தவாறே இருந்தார். சண்டை தொடங்கும்போது நிர்மாவுக்கு பின்னணியில் நின்று காயக்காரர்களை வெளியேற்றும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகச் சண்டையில் தன் பங்கு இல்லை என்பது நிர்மாவால் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்தது. இருளில் நகர்ந்து கொண்டிருந்த அணிகளுடன் சேர்ந்து நகரத் தொடங்கிய நிர்மாவை அவரின் பொறுப்பாளரின் கூர்மையான விழிகள் கண்டுகொண்டன. உடனடியாகவே ஆளைப் பின்னணிக்கு அனுப்பிவிட்டார்.

சண்டை தொடங்கி முதற்தொகுதி காயக்காரர்களைப் பின்னணிக்கு நகர்த்திக் கொடுத்து விட்டு காவும்குழு மறுமுறை முன்னணிக்கு நகர்ந்தபோது நிர்மா அவர்களோடு இணைந்து கொண்டார்.

1993 இல் ஆனையிறவிலிருந்து யாழ்தேவி நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் விடுதலைப் புலிகளின் போர் அணிகளால் முறியடிக்கப்ட்டு, திருப்பி அனுப்பபட்ட வழியெங்கும் படையினர் விதைத்துச் சென்ற கண்ணிகளை அகற்றும் பணியில் நிர்மாவின் அணியும் ஈடுபட்டது.

கண்ணிகளை அகற்றும்போது. வெடிக்காமல் விழுந்து கிடந்த எறிகணைகளையும் அகற்றினர். எறிகணைகளைக் கையாளுவது வேறு தனியான அணியினரின் வேலையாக இருந்தபோதும், அது மக்கள் வாழ்ந்த பகுதி என்பதால் திடீரென வருகின்ற மக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க முயன்றார் நிர்மா. தன் அணியினரைக்கூட அனுமதிக்காது தானே எறிகணைகளை அகற்றினார்.

வேலைகளைப் பார்வையிட வந்த பொறுப்பாளர் நிர்மாவை மிகவும் கண்டித்து,

"வெடிக்காமல் கிடக்கும் எறிகணைகளை எடுக்க உங்களுக்கு அனுமதியே இல்லை”

என்று கடுமையாகச் சொல்லும் வரை நிர்மா எறிகணைகளையும் சேர்த்தே அகற்றினார். அதன் பின் எறிகணைகளருகே அடையாளத்துக்காகத் தடிகளைக் குத்தி விட்டு, எழுதுமட்டுவாளிலிருந்து கறுக்காய்
வரையான பகுதிக்குள் கண்ணிவெடிகளை அகற்றினார்.

ஆனால் அந்த வேலை முடிந்ததும் தானாகவே பொறுப்பாளரிடம் கேட்டு, வெடிக்காத எறிகணைகளை அகற்றும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். இதுதான் நிர்மா. தனக்குத் தெரியாது என்று எதையுமே விட்டு வைக்க எப்போதுமே அவர் விரும்பவில்லை.

இதன் பின் பூநகரிப் படைத்தளம் மீதான 'தவளை நடவடிக்கையில் பங்கு கொண்டு. அங்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி செய்தார்.

இவரது பணியைப் பல களங்கள் வேண்டி நின்றன. சூரியக் கதிர் - 01 எதிர் நடவடிக்கைக் களமுனையில் கண்ணிகளை விதைக்கும் பணியை இவரின் அணி செய்தது. அது மிகவும் நெருக்கடிமிகுந்த களம். ஒவ்வொரு நாளும் களமுனை இடம் மாறிக் கொண்டேயிருக்கும். சண்டையின் நிலைமைக்கேற்ப, சண்டையணிகளின் நகர்வுக்கேற்ப நிலக்கண்ணிகளை விதைப்பதும், வரைபடத்தில் குறிப்பதும், அணிகள் இடம் மாறும்போது அகற்றுவதும், மறுபடி விதைப்பதுமாக மிகச் சிரமமான பணி அது. கண்ணிவெடி அணியினரின் கைகள் காய்த்து விட்டிருந்தன. இடர்கள் நிறைந்த சூரியக் கதிர் - 01 களமுனையில் நிர்மா காயமடைந்தார்.

காயம் ஆறிய பின் புதிய அணி ஒன்றுக்கு கண்ணிவெடிகள் பற்றிய பயிற்சிகளை வழங்கும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில், சூரியக் கதிர் - 02 களம் நிர்மாவை அழைத்தது.

மூன்றாம் ஈழப்போரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஓயாத அலைகள் 01 முல்லை மீட்புச் சமர் மூலம் மீட்கப்பட்ட நிலப்பரப்பெங்கும் அங்குலம், அங்குலமாகத் தடவி ஆயிரம் ஆயிரம் கண்ணிகளை அகற்றி, பயமின்றி மக்கள் நடமாட வழிவகுத்த பெரும் பணியில் நிர்மாவின் பங்கு முக்கியமானது.

வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கைச் சமர்முனையில் கண்ணி வெடிப்பிரிவின் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றிய கடினமான அந்த நாட்கள்...

ஓயாத அலைகள் - 02 கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியின் கண்ணிவெடிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். எறிகணை வீச்சிலே தலையில் காயமடைந்தார்.
தொடர்ந்தும் எறிகணை வீச்சிலேயே நிர்மா காயமடைவதைத் தோழிகள் கேலி செய்தார்கள்.

"எறிகணைக்கு என்மேல் அத்தனை அக்கறை. அதுதான் தேடிவருகிறது."
என்று சிரித்தார் நிர்மா.

விடுதலைப் புலிகள் மகளிர் படையணியோடு இருந்த கண்ணிவெடி அணி, பின் மாலதி படையணியின் கண்ணிவெடிப் பிரிவாகி, பின் 1999.04.28 இல் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி மகளிர் அணியாகப் புதுத்தோற்றம் பெற்றபோது நிர்மா அந்த அணியின் 2வது பொறுப்பாளராக எமது தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியை விரிவாக்கம் செய்யவென வந்திருந்த புதிய போராளிகளின் தொடக்க படையியற் பயிற்சியையும் மேலதிக சிறப்புப் பயிற்சியையும் நேரடிப் பொறுப்பெடுத்துச் செய்தார். இன்று களமெங்கும் பரந்து நிற்கும் கண்ணிவெடி மகளிர் அணியின் அத்திவாரம் சின்னச்சின்ன விடயங்களில் கூட கவனமெடுத்து நிர்மா போட்ட அத்திவாரமே.

பயிற்சி முடித்த புதிய அணி பணி செய்யப் புறப்பட்ட போது நிர்மா கண்ணிவெடி மகளிர் அணியின் நிர்வாகப் பொறுப்பாளராகப் பணி புரிந்தார்.

அலை மூன்றில் நாம் ஏறி, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சிக்குள் படை நகர்த்தி எம் பலத்தை பகைவருக்கு உணர்த்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. களங்கள் அகல விரிந்திருந்தன. பளைப் பகுதியில் கண்ணிவெடி சார்ந்த
வேலைகளுக்குப் பொறுப்பாக நிர்மா நின்றார். ஓயாத அலைகள் 01, 02, 03, 04 எல்லாவற்றிலுமே நிர்மாவின் பங்கு கணிசமாக இருந்தது.

நாங்கள் அமைதியாக இருந்தோம் பகைவரோ பரபரப்பாக இருந்தனர். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை நான்கு மாதங்கள் வரை பொறுமையாக நீடித்தோம். பகைவரோ போர் நிறுத்த மீறல்களிலேயே காலத்தை நீடித்தனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அந்த நாளில். பகைவரின் பெரும் எடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்குத் தயாராக நாம் நின்றோம்.

அந்நிய நாட்டு நிபுணர்களின் ஆலோசனையோடும், அவர்கள் வழங்கிய ஆயுத, உபகரண உதவிகளோடும் சிறிலங்காப்படைத்தரப்பினர் ஆனையிறவில் சிங்கக் கொடி பறக்கவிடும் கனவோடு செய்த தீச்சுவாலை -01 படை நடவடிக்கையை எமது பெரும் பலத்தால் மூன்றே நாளில் அணைத்தோம்.

படையினர் பலர் எறிகணைகளாலும் கண்ணிவெடிகளாலும் பெருமளவில் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் படை அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு. களத்திலே நிர்மாவின் பங்கு பாரியது. இப்படி இப்படியெல்லாம் கண்ணிகளை விதைக்குமாறு எமது தலைவர் திரு. வே.பிரபாகரன் அவர்கள் தயாரித்த திட்டத்தை, தனது அணியினரை வைத்துச் செவ்வனே செய்து முடித்த நிர்மா.

எறிகணைகளாலேயே எப்போதும் காயமடைகின்ற நிர்மா

"எறிகணைக்கு என்மேல் அவ்வளவு அக்கறை அதுதான் தேடி வருகிறது!

என்று சிரிக்கின்ற நிர்மாவைத்தேடி அந்த எறிகணை, கடைசி எறிகணை வந்தது.

தீச்சுவாலை -01 எதிர் நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்து, அணிகள் மீளமைக்கப்பட்டு, எரிந்த வேலிகளும் சிதைந்த காப்பரண்களும் போராளிகளால் திருத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் இந்தச் செய்தி வந்தது.

நிர்மா எங்களோடில்லை.

கிளி, சென்திரேசா மகளிர் கல்லூரி தனது பழைய மாணவியை ஒரு கூடைப்பந்தாட்ட வீராங்களையை இழந்தது.

இழப்புக்கள் எப்போதுமே துயரத்தைத் தருபவை. ஆனால் உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும், ஈகங்கள் புரியாமலும் விடுதலை பெற்றதில்லை.

எமது தலைவர் அவர்கள் சொல்வது போல்

மாவீரர்களது அற்புதமான இலட்சியவாழ்க்கை அவர்களது ஈகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது.

-எரிமலை .டிசம்பர் 2002

உட்கார்ந்திருந்தது மரத்தின் வேரல்ல,மலைப்பாம்பு. தளபதி பால்ராச் வரலாறு.

உட்கார்ந்திருந்தது மரத்தின் வேரல்ல,மலைப்பாம்பு. 

போராளிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட நட வடிக்கைகளுக்கு பின்னர், போராளிகளுக்கு முகாம்களென்று சொல்லிக்கொள்ள நிரந்தரமாகக் காட்டில் எதுவும் இருக்கவில்லை. அதனால் காட்டில் போராளிகள் நடமாடிக்கொண்டே இருந்தார்கள். கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது மட்டும்தான் எங்காவது ஆதரவாளர்களின் வீடுகளில் அடைக்கலமாவது. மற்றும்படி காட்டில் போகும் இடங்களில், ஒரு மரத்தின் கீழேதான் அன்றைய இரவின் தங்குமிடம்.

அதுவும் மழைக் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. காட்டில் மழை பெய்தால், மழை ஓய்ந்தபின்தான் அதிகமாக நனையவேண்டும். காட்டு வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு இது நன்கு புரியும். கடும் மழை பெய்து கொண்டிருக்கும். இரவு தூங்குவதற்கு முடியாமல் வெள்ளம் ஓடிக்கொண்டே இருக்கும். எங்கையாவது கறையான் புற்றைத்தேடிப்போய் அந்த மேட்டுப் பகுதியில் தலைவைத்துத்தான் படுக்கவேண்டும். கறையான் புற்றெண்டாலும் அதற்குள் பாம்பு, உடும்பு போன்றவை இருக்கும். ஆனாலும், அதையும் விட்டால் காட்டில் வேறு வழியில்லை. மழை கொட்டிக்கொண்டே இருக்கும். இரு காதுகளுக்குள்ளும் விரல்களை வைத்து, தண்ணீர் காதுகளுக்குள் போகாதவாறு பார்த்துக்கொண்டு, அப்படியே கண்ணை மூடித் தூங்க வேண்டியதுதான். உடல் அலுப்புக்கு அந்த மழைக்குள்ளே எப்படித்தான் தூக்கம் வருகின்றதோ தெரியவில்லை, நன்றாகத் தூங்கிவிடுவார்கள்.

கால்களைக் கழுவியபடி வெள்ளம் சலசலத்தபடி ஓடிக்கொண்டே இருக் கும். சிலவேளைகளில் அந்த வெள்ளத்தில் அடித்து வரப்படும் பாம்புகள், புற்றைக் கண்டதும் அதன்மீது பாய்ந்து ஏறும்போது போராளிகளின் கால்களில் ஏறிவிடுவதும் உண்டு. ஏறியது பாம்பென்பதை உணர்ந்து, தூக்கம் கலைந்து போராளிகள் கத்திக்கொண்டு பாய்ந்தெழுகின்ற நிகழ்வுகளும் நடக்கும்.

மழை பெய்யும் வரைதான் காட்டில் தூங்க முடியும். மழை விட்ட பின்னர் எழுந்துவிடவேண்டியதுதான். ஏனென்றால் மரத்தில் இருந்து விழுகின்ற ஒவ்வொரு நீர்த் துளியும், உடலில் விழும்போது பெரும் சுத்தியலால் அடிப்பது போன்ற வலியை ஏற்படுத்திவிடும். உலகில் இது ஒரு சித்திரவதையாகக்கூட செய்யப்படுகின்றது. ஒருவரை அசையாமல் கட்டி வைத்துவிட்டு, அவரது (தணிக்கை) யில், நீரை துளித்துளியாக விழ வைப்பார்கள். ஆரம்பத்தில் அது சுகமாகத்தான் இருக்கும். இதுவும் ஒரு சித்திரவதையா என்றே கேட் கத்தோன்றும். ஆனால் நேரம் செல்லச்செல்ல, உயிரை எடுக்கும் வலியை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் உயிரையே எடுத்துவிடக்கூடியது.

எனவே, மழைவிட்டதன் பின்னர் மரங்களின் கீழே தூங்க முடியாது. எழுந்து வெளியான பகுதியைத்தேடி உடலையும், உடைகளையும் காயவைக்கத் தொடங்கிவிடுவார்கள் போராளிகள். அவர்கள் எவ்வளவுதான் நனைந்திருந்தாலும், அவர்கள் கைகளில் இருக்கின்ற ஆயுதங்கள் மட்டும் எப்போதும் நனைந்திருக்காது. எங்கெல்லாம் பொலித்தீன் பைகள் கைகளுக்கு கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றை எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கும் போராளிகள், மழை வந்தால் முதலில் தாங்கள் நனைந்துவிடுவோமா என்று யோசிப்பது கூட இல்லை, உடனடியாகவே ஆயுதங்களைத்தான் மூடிக்கட்டி பாதுகாத்துக்கொண்டு விடுவார்கள்.

இவ்வாறுதான், ஒருநாள் நன்றாக மழையில் நனைந்து போராளிகள் விறைத்துப் போயிருந்தார்கள். மாலை நேரம் என்றாலும் மழைக்காலம் என்பதால் காடு சற்று இருண்டுபோய் இருந்தது. பசிக் களைப்பு ஒருபுறமும், மழைக்குள் நனைந்துகொண்டே இருந்ததால் ஏற்பட்ட களைப்பு மறுபுறமும் என உடல் சோர்ந்து போயிருந்த போராளிகள், அங்கிருந்த பெரும் மரம் ஒன்றின் வேர்களில் வந்து அமர்ந்துகொண்டார்கள். கதைப்பதற்கு கூட தைரியமின்றி இருந்த போராளிகளில் இருவருக்கு இடையில் திடீரென வாய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டது.

ஒரு போராளி, சற்று கோபமாக தனக்கு பக்கத்தில் இருந்த போராளியிடம்: “இருக்கிறதெண்டால் சும்மா இரு. இல்லாட்டி எழுந்து அங்காலை போய் இரு" என்று பேசினார். மற்றைய போராளிக்கும் கோபம் வந்திருக்க வேண்டும். “என்னத்துக்கு..?" என்று அவர் பதில் கேள்வி எழுப்பினார்.

"மனிசர் ஏலாதெண்டு இங்கை வந்து குந்தினால், வேரை ஆட்டிக் கொண்டிருக்கிறாய்” என்றார் அந்தப் போராளி.

"நான் எங்கை வேரை ஆட்டுறன் ? நீங்க தான் ஆட்டுறியள்" என்று மற்றப் போராளி அதற்குப் பதிலளித்தார்.

மழைக்குள் நனைந்து (பின்பக்கமும்) விறைத்திருந்ததால் அவர்கள் தாங்கள் வேர்களில்தான் இருந்துகொண்டிருக்கின்றோம் என்று நினைத்திருந்தார்கள். ஆனாலும் அமர்ந்தபோது வேர் சற்று நசிவதுபோலவும் அவர்களுக்கு தென் பட்டது. அதன்பின்னர்தான் தாங்கள் எதில் அமர்ந்திருக்கின்றோம் என்று உற்றுப் பார்த்தார்கள். இருவரும் கத்திக்கொண்டு பாய்ந்த பாய்ச்சல் இருக்கின்றதே இன்றைக்கும் அதனை மறக்கமுடியாது.

"அட இது வேரில்லையடா, வெங்கிடாந்திப் பாம்பு (மலைப்பாம்பு)" என்று அவர்கள் கத்திக்கொண்டு பாய்ந்தபின்னர் பார்த்தபோதுதான், ஒரு மலைப்பாம்பு மரத்தின் வேரோடு அங்கு சுருண்டு படுத்திருந்தது தெரிந்தது. அதனை வேர் என்று நினைத்து இவர்கள் அதன்மேல் அமர்ந்திருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் உடல் பாரத்தினால், பாம்பு தனது உடலை வளைத்து நெளித்து எழும்பியது. இவர்களுக்கு யாரோ வேரை ஆட்டுவதுபோன்று தெரிந்திருக்கின்றது. மலைப் பாம்புகள் கடிப்பதில்லை. ஆனால், ஆளையே விழுங்கி விடுவன. மழைக்குள் நனைந்து பாம்பும் சோர்ந்து கிடந்ததால் அன்றைக்கு தப்பித்துக் கொண்டார்கள்.

இன்னொருநாள் இப்படித்தான் போராளிகள் பெரும் பசியுடனும், களைப்புடனும் காட்டினுள் நடந்துகொண்டிருந்தார்கள். முல்லைத்தீவு மதவாளசிங்கம்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மரம் வெட்டும் சத்தம் கேட்கின்றது. இராணுவத்தினர் புதிதாக முகாம்களை அமைத்தால் தங்களின் அரண்களைப் பலப்படுத்த மரங்களைத் தறிப்பார்கள். எனவே, அப்பகுதியில் இராணுவத்தினர் புதிய முகாம் எதையாவது அமைக்கின்றார்களா என்ற கேள்வியுடன், சத்தம் வந்த திசையில் மெதுமெதுவாகச் சென்று பார்த்து வருமாறு இரு போராளிகளை பால்ராஜ் அண்ணை அனுப்பிவைத்தார். அவர்கள் நெருங்கிச் சென்று பார்த்தபோது, யாரோ இரு பொது மக்கள் விறகுக்காக மரம் தறிப்பது தெரிந்தது. பால்ராஜ் அண்ணைக்கு தெரிந்தவர்களாகப் படவே அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்குச் சென்று கதைத்துக் கொண்டிருந்தார். அவர்களில் ஒருவர் தங்களிடம் றொட்டி இருப்பதாகவும் சாப்பிடுங்கள் என்றும் போராளிகளைக் கேட்டார்.

பெரும் பசியுடன் இருந்த போராளிகளின் முகத்தில், நல்லதொரு சாப்பாடு கிடைத்துவிட்டதென்ற பெரும் மகிழ்ச்சி. ஆனால், பால்ராஜ் அண்ணை "எல்லோரும் இப்பதான் சாப்பிட்டு வருகின்றோம்" என்று கூறி அவர்களிடம் இருந்து அதனை வாங்க மறுத்தபோது, 'சூரியன் மறைந்த தாமரையாட்டம்' போராளிகளின் முகங்கள் சுருங்கியதைப் பார்க்க வேண்டுமே. ஆனாலும், அவர்கள் விடாப்பிடியாக சாப்பிடுமாறு வற்புறுத்தியபோது சரி உங்களுக்காக சாப்பிடுகின்றோம் எனக் கூறி எல்லோருக்கும் றொட்டியை வாங்கிக்கொடுத்தார் பால்ராஜ் அண்ணை. ஒரு சில விநாடிகளுக்குள் அத்தனை றொட்டிகளும் எப்படித்தான் தீர்ந்து காலியானதோ தெரியவில்லை. போராளிகளின் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்த, மரந்தறித்த அந்த இருவருக்கும் எல்லோரும் பசியோடு இருக்கின்றார்கள் என்பது புரிந்திருக்க வேண்டும்.

"வீட்டுக்குப்போய் இன்னும் றொட்டி சுட்டுக்கொண்டு வரட்டுமா?" என்று கேட்டார் ஒருவர். ஆனால் அவர்களின் நிலைமையை புரிந்துகொண்ட பால்ராஜ் அண்ணை, வேண்டாம் என்று அவர்களைத் தடுத்ததுடன், அவர்கள் தன்னிடம் இருந்த கொஞ்சப் பணத்தை எடுத்து கொடுத்து பிள்ளைகளுக்கு எதாவது வாங்கிக் கொடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார். பணத்தை வாங்கிய அவர்களுக்கு பெரும் சந்தோசம்.

அங்கிருந்து நடக்கத் தொடங்கியதன் பின்னர் பால்ராஜ் அண்ணை சொன் னார், "அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டவர்கள். விறகு வெட்டித்தான் குடும்பத்தை நடத்தவேண்டியவர்கள். அவர்களிடம் இருந்த றொட்டியையும் நாங்கள் வாங்கிச் சாப்பிட்டு விட்டோம். ஏற்கனவே அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு நாங்களும் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடாது. அதனால்தான் அவர்களுக்கு பணம் கொடுத்தேன்" என்றார். போர்க் களத்தில் இரும்பாய் இருக்கும் பால்ராஜ் அண்ணை, மக்களின் துயரத்தைப் பார்த்தால் இளகிப்போவார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

-பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ்

தூக்கமின்றியே விடுதலைக்காக நெடுந்தூரம் நடந்தவர் தளபதி பால்ராச்.

ஒரு மனிதன் சாதாரணமாக நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரம் என்றாலும் தூங்கவேண்டும் என்பதுதான் மருத்துவ ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், பால்ராஜ் அண்ணை நாளொன்றுக்கு முழுமையாக மூன்று மணி நேரம் தூங்கியதைக்கூட நாங்கள் பார்த்ததில்லை. மக்களின் விடுதலைக்காக 25 வருடங்களுக்கு மேலாக எப்போதும் விழித்திருந்த அந்தக் கண்கள், இப்போதுதான் ஓய்வென்றால் என்னென்று அறிந்துகொண்டிருக்கும் என நினைக்கின்றேன்.

காட்டில் ஓய்வின்றி ஒரு விடுதலைப் போராளியாக அவர் உழைத்த அந்த நாட்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும். போராளிகளுக்கு கட்டளையிடுபவராக மட்டுமில்லாது, அந்தப் போராளிகளோடு தானுமொரு போராளியாகவே அவர் வாழ்ந்து, ஏனைய போராளிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக அவர் இருந்தார்.

இந்திய இராணுவ முற்றுகை இறுகி, காட்டில் ஆயுதங்களுக்கு பெரும்
தட்டுப்பாடு நிலவிய காலம் அது. யாழ். தென்மராட்சி ஊடாக போராளிகள் கொண்டு வரும் பொருட்களை, ஆனையிறவுக்குப் பின்பக்கம் உள்ள நல்லதண்ணித்தொடுவாய்க்கு சென்று பெற்று வந்துதான் காட்டிலுள்ள போராளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களில் சென்று
அவற்றை ஏற்றிவரமுடியாது. கால்நடையாக இரகசியமாகச் சென்றே அங்கு காத்திருக்கும் போராளிகளிடம் ஆயுதங்களையும் பொருட்களையும் பெற்று
வரவேண்டும். மிக நீண்டதூரப் பயணம். திரும்பிவரும்போது பெரும் சுமையுடன் நடக்கவேண்டும். பொருட்களை வைத்துத் தூக்குவதற்கு பைகள் கூட
இருக்காது. சரத்தை மூட்டையாகக்கட்டி அதனுள் பொருட்களை வைத்து
முதுகில் அடித்துக்கொண்டுதான் வரவேண்டும்.

வவுனியாவின் ஒரு பிரதேசத்தில் நிற்கும் பால்ராஜ் அண்ணை, அங்கிருந்து நல்லதண்ணித் தொடுவாய்க்கு சாதாரண ஒரு பயணம் போலவே புறப்படுவார். மிக நீண்டதூரப் பயணம். வழியில் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க வேண்டும். ஆனாலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பை வகித்த பால்ராஜ் அண்ணை வவுனியா சென்று அங்குள்ள போராளிகளின் தேவைகளை அறிந்துகொண்டு, அங்கிருந்து முல்லைத்தீவிற்கு வந்து அங்குள்ள போராளிகளின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டே பயணத்தைத் தொடருவார்.

காட்டு வழியாக நடை தொடங்கினால், பகல் முழுவதும் நடைதான். காட்டு வெயிலும், நடைக் களைப்பும் சேர்ந்து, தண்ணீர்த் தாகம் எடுத்துவிடும். எல்லோரிடமும் சிறிய தண்ணீர் கான் இருக்கும். ஆனாலும் யாரும் நினைத்த மாத்திரத்தில் கானிலுள்ள தண்ணீரை எடுத்துக் குடித்துவிட முடியாது. அதற்கான நேரம் வரும். அப்போது எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து கானைத் திறந்து அதன் மூடியினுள் தண்ணீரை விட்டு குடிக்கவேண்டும். ஒரு மூடி தண்ணீர்தான். அவ்வளவும் தான் அப்போதைய தாகத்தை தீர்க்கும் மருந்து. பால்ராஜ் அண்ணையும் அந்த ஒரு மூடி தண்ணீரைத்தான் அருந்துவார். அந்தத் தண்ணீருடன்தான் மீண்டும் பயணம் தொடரும்.

காட்டுப் பாதைகளில் சிலவேளைகளில் குளங்கள் தென்படலாம். ஆனால், குளத்தில் நீரருந்த வரும் மிருகங்களை வேட்டையாடுவதற்கு கரைக்கு அருகில் மறைந்து காத்திருக்கும் வேட்டைக்காரர்களைப்போல், தண்ணீர் எடுக்க வரும் போராளிகளை சுட்டு வீழ்த்துவதற்கென்றே, குளக்கரைகளை இலக்குவைத்து இந்தியப் படையினர் எப்போதும் விழிவைத்துக் காத்திருப்பார்கள். கப்டன் வாதவூரானுக்கு தண்ணீர் எடுக்கச்சென்ற இரு போராளிகளும் அவ்வாறுதான் அவர்களின் இலக்கில் அகப்பட்டுக் கொண்டவர்கள். அந்தப் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது பின்னர்தான் தெரியவந்தது. அவர்கள் மீது படையினர் வேட்டுக்களைத் தீர்க்க, இருவரும் குளத்தில் பாய்ந்து நீந்த
முயற்சித்துள்ளனர். இதன்போது ஒரு போராளி இராணுவத்தினரால் கைது செய்யப்பட, மற்றைய போராளி வேகமாக நீந்தி மறுகரையை அடைந்து தப்பித்துக்கொண்டார். எனவே, காட்டுப் பயணத்தின்போது குளங்களில், அவசரப்பட்டு இறங்கி தண்ணீர் எடுக்க பால்ராஜ் அண்ணை யாரையும் அனுமதிப்பதில்லை. தண்ணீர் ஒரு மூடி என்றால், அன்றைய உணவு ஓரிரு பிஸ்கற்றுக்கள்தான்.

பகல் முழுவதும் நடந்து இருளும்போது சற்று ஓய்வெடுக்கலாம் என்று எதிர்பார்த்தால், அந்த நேரத்தில்தான் இராணுவத்தினர் நடமாட்டமுள்ள பகுதியைக் கடக்க முடியும் என பால்ராஜ் அண்ணை கூறுவார். இரவிரவாக இராணுவத்தினரின் பகுதியினூடாக நடைதொடரும். நள்ளிரவு தாண்டிய பின்னரே ஓய்வெடுக்க முடியும். மனம் உறுதியாக இருந்தாலும், உடல் சோர்ந்து எம்மையறியாமலே நல்ல உறக்கமும் வந்துவிடும். ஆனால், பால்ராஜ் அண்ணை உறங்கமாட்டார். அதிகாலை நான்கு மணிக்கு முன்னரே எழுந்து விடுவார். அந்த மம்மல் பொழுதில் கிராமத்தைக் கடந்தால்தான், மற்றப் பகுதிக்கு போகமுடியும் எனக்கூறி எல்லோரையும் எழுப்பி நடக்கத் தொடங்கிவிடுவார். மீண்டும் நடைப் பயணம் தொடரும். நயினாமடு, நெடுங்கேணி, பழம்பாசி, களிக்காடு, மதவாளசிங்கம்குளம், பூதம்வயல், முள்ளியவளை, தண்ணீரூற்று, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, பிரமந்தன், விசுவமடு நல்லதண்ணித்தொடுவாய் என பயணம் தொடரும். ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீற்றர்கள் நடக்கின்றோம் என்பது தெரியாது. ஆனால், நடையிலேயே நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்டும் புரியும்.

மலம் கழிக்க முடியாது. முதலில் சாப்பிட்டால்தானே மலம் கழிப்பதற்கு. அப்படிக் கழித்தாலும் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் இராது. அதனால், எங்கையாவது 'பேப்பரைக்' கண்டால் போராளிகள் விடமாட்டார்கள். 'இந்த ஒரு விடயத்தில்தான் நாங்கள் வெளிநாட்டவர்கள் போல் வாழ்கின்றோம்' என்று போராளிகள் நகைச்சுவையாகக் கூறுவார்கள். ஆனாலும், விசயம் தெரியாமல் தூள் சுற்றிய பேப்பரை எடுத்துவந்து, அதன் எரிவில் போராளிகள் அலறிய சம்பவங்களும் உண்டு.

பல் தீட்ட முடியாது. குளிப்பும் இராது. இந்த நிலைமையில் சில வேளை களில் கிராமங்களைக் கடந்து செல்லும்போது போராளிகளைக் கண்ட மகிழ்வில் மக்கள் ஓடிவந்து குவிந்து, நலம் விசாரிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், அவர்கள் கிட்ட நெருங்கி வரும்போது, போராளிகள் எட்ட எட்ட நகருவார்கள். வாரக்கணக்காக குளிக்காமல், பல் தீட்டாமல் இருக்கும் தங்கள் உடலின் நாற்றம் அவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம்தான் காரணம். ஆனால், அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் மக்கள் மிக நெருங்கி வந்து தோள்தடவி கதைக்கும்போது, இருந்த களைப்பும், பசியும் எங்கோ காணாமல்போய்விடும்.

-பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ்.

கரிக்கோடுகளில் ஒரு தாலாட்டு- கவிஞர் இன்குலாப்

இடிபாடுகளைக்
கடந்துதான்
இல்லம் வந்தோம்.

பனையும் தென்னையும் பச்சை உச்சங்களை இழந்து கனத்த நெடுங்குச்சிகளாய்க் காட்சி அளித்தது போலத்தான் வெறுஞ்சுவர்களாய் நீ பிறந்த வீடும்.

எல்லாக் கட்டடங்களிலும் ஏதாவது ஒரு காயம். 'ஷெல்' அடியில் ஜன்னல் தொலைத்தவை தோட்டாக்களால் அம்மைக்குழிகள், உரிந்த தோலுக்கடியில் சிவந்த சதையைப் போலத்தான் மனிதர்கள் கவலை கிழித்த முகங்களுடன்.

புல்வெளியின் மௌனத்தில் புதைந்து கிடக்கும் உயிர் அச்சம்!

குளிர்தருவின் நிழல்பிளந்து பீறிடக் காத்திருக்கும் தீயின் கொழுந்துகள்...

நம்பற்குரியனவாய் இல்லை எந்த ஒரு பசுமையும் இதந்தரும் நிழல்களும்.....

சாலையில் இருமருங்கும் 'கண்ணி வெடி கவனம்’ வெளிகளின் நீட்சியில் வீழ்ந்து கிடக்கும் கவச வாகனங்களின் மீது ஊர்ந்து செல்லும் பறவைகளின் நிழல்கள்... யுத்தம் நாறும் புகை மூட்டங்களுக்கெல்லாம் தத்தம் மொழிகளில் சாட்சியம் சொல்லி...

காதுகளுக்கெட்டும் தொலைவில் ஓயாமல் பேசும் கடலலைகள். இன்னும் அதன் வெண்ணுரைகளில் மூழ்கிய புதல்வர்களின் குருதிச் செம்மையும் கடைசி மூச்சும் சிதைந்து போன உனது கூட்டில்...

தொட்டில்கயிறு மேற்கூரைச் சட்டகமில்லா தவழ்ந்த முற்றத்தில் புதர் மண்டிக் கிடக்கும்... தாலாட்டை எதிரொலித்த சுவர்கள் மட்டுமே ...

உன் மூச்சால் கனத்த காற்றும் சுவடுகளால் நிறைந்த மண்ணும் தோள்களில் கிளைத்த தோழமையும் பல்கிய ஊர் இஃதென்பதால் புறாச்சிறகு போர்த்திய பருந்துகள் கொத்தியும் பிறாண்டியும் வெறிதீர்த்த வடுக்கள் வல்வெட்டித்துறையின் மேனி எங்கும்......

சுவர் கிறுக்கும் விடலைகள் அல்லர் என் உடன்வந்தோரும் நானும்.

அந்த வயதினரால் கிறுக்கப்படாத சுவர்கள் எந்த நாட்டிலும் இல்லை எழுதப்படும் சொற்கள்தாம் ஏறுமாறாய்...

உன் சுவர்களிலும் கரி எழுத்துகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏதோ ஓரிடத்தில் சிங்களத்திலும் கூட.

பிஞ்சு மனங்களால் இழைத்து இழைத்து... எனக்குத் தெரிய அந்தக் கறுத்த வரிகள் உன்னை வாழ்த்துபவை வீர வணக்கம் செலுத்துவை இயக்கத்துக்கு நம்பிக்கை தெரிவிப்பவை.

பெரியவர்கள் சாதிமத இனக் கரிக்கோடுகளை இன்னும் கிறுக்கலாம் தங்கள் மனங்களில்.

பிஞ்சு எழுத்துகளே உன் சுவரில் இப்படி:

'பிரபாகரன் என்றும் எம்முடன் அ.மீரான் ஷாகிர், கொழும்பு'

உன் அன்னை பாடிய தாலாட்டு இன்னும் ஒலிப்பதை நாங்களும் கேட்டோம் சுவர்களில்.. கரிக்கோடுகளில்...

-கவிஞர் இன்குலாப்

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்

புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசனாரின் பிறந்தநாளில் ஐயாவுக்கு புகழ்வணக்கம் 🙏

29/4/1891

மாமனிதர் தராக்கி சிவராம்

போரியல் கல்வி.
~~~~~~~~~~~~~~
தலைவர் ஆரம்பகாலத்தில் இருந்தே கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பதுதான் எங்களுடைய போராட்டத்தைப் போரியல் அடிப்படை யில் உலகின் வேறு வேறு போராட்டங்களில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றது.

இதைப்பற்றி அமெரிக்க போரியல் ஆய்வாளர்களில் முக்கியமான ஒருவ ரான Steephan Gogan என்பவர் இந்திய இராணுவத்தைப் பற்றியும், அதனு டைய வரலாறு, மற்றும் போரிடும் குணாம்சங்கள் பற்றியெல்லாம் எழுதிய ஒரு மிகமுக்கியமான நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது இந்திய இராணுவத்துடன் போரிட்ட இயக்கங்களின் வரிசையில் புலிகள் வித்தியாசப்படுகின்றார்கள் என்று அவர் கூறுகின்றார். அவர் முக்கியமாகக் குறிப்பிடுவது, புலிகள் கல்விகற்ற ஒர் இராணுவ அமைப்பாக அதாவது, அவர்கள் தமது போரியலை நன்கு கற்றவர்களாக, தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததன் காரணமாகவே இந்திய இராணுவம் இலங்கையில் ஒரு பெரும் சவாலைச் சந்திக்க வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டு அதை இந்திய இராணுவத்துறை தமிழர் படையாக இருந்த மெட்ராஸ் ரெஜிமென்டுடன் ஒப்பிடுகின்றார்.

அதாவது இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் என்பதும் கல்வியில் சிறந்த ஒர் இராணுவ அணியாக இருந்ததாகவும் அதை விடச் சிறந்த முறையில் புலிகளுடைய போர் அணிகளின் கல்விப்பலம் மிகச் சிறப்பாக இருந்ததும், இந்திய இராணுவம் இலங்கையில் தோல்வியைச் சந்தித்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்ததென்றும் அமெரிக்க போரியல் ஆய்வாளரான Steephan Gogan தன்னுடைய 'இன்டி யன் ஆமி' (Indian Army) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.

-தராக்கி சிவராம்.

ஊடகப்போராளி, மாமனிதர் தராக்கி சிவராம் நினைவுநாள் இன்று, 28/4/2005.

தேசியத்தலைவரின் சிந்தனைகள்

"ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எமது தேசத்தின் நலன் கருதி. எமது மக்களின் நல்வாழ்வு கருதி நாம் முற்போக்கான கொள்கைகளை வரித்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்தக் கொள்கைகளை மக்கள் பற்றிக்கொண்டு, அவற்றைச் செயற்படுத்த உறுதிபூண்டு, போராட்டத்தில் பங்கு கொள்ளும்போதுதான் போராட்டம் வெற்றிப்பாதையில் செல்ல முடியும்."

-மேதகு தேசியத்தலைவர்

Saturday, 4 April 2026

வருகிறோம்....... -கிளிநொச்சி மூர்த்தி

வருகிறோம்......
~~~~~~~~~~~~ 

புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஜீப் ஒன்று வேகமாகச் சென்றது. “இது நம்மடை பொடியளின்ரை ஜீப்" சங்கக் கடைச் சந்தியில் நின்ற செல்லத்துரையர் முகத்தில் பெருமிதம் மலரக் கூறினார்.

"முந்தியெல்லாம் ஜீப்பைக் கண்டால் ஒரு சனம் சந்தியிலை நிக்குமே? இப்ப சந்தோசத்திலை கையைக் காட்டிறம். செல்லத்துரை அண்ணர் கதைசொல்ல ஆரம்பித்தால் ஒரு நாடகத்தையோ, திரைப்படத்தையோ பார்ப்பது போன்ற சுவாரஸ்யம் இழையோடிக் கொண்டிருக்கும். பல சமயங்களில், எப்பொழுதும் கையிலிருக்கும் தினசரிப் பத்திரிகையின் செய்திகளின் விளக்கவுரையாகவும் அமைந்து விடுவதுண்டு.

வயது அறுபதைக் கண்ட செல்லத்துரையர் தீவுப் பகுதியிலிருந்து விவசாயம் செய்வதற்காக முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே கிளிநொச்சியில் வந்து குடியேறியவர். தீவுப்பகுதியின் வரண்ட மண்ணிலேயே வெங்காயமும், புகையிலையும் விளைய வைத்த செல்லத்துரையருக்கு இரணைமடு நீர் பொங்கிப் பாயும் கிளிநொச்சி அள்ளி அள்ளிக் கொடுத்ததில் ஆச்சரியப்பட எதுவுமேயில்லை.

தொழில் தேடி இந்த மண்ணுக்கு வந்த செல்லத்துரையர், இதையே சொந்த மண்ணாக்கிக் குடும்பத்துடன் இங்கேயே குடியேறி விட்டார். அதனால் தான் போலும் அவர் அடிக்கடி "டேய், நான் கிளிநொச்சியை உருவாக்கினதிலை ஒருத்தனடா!" என்று கைமுஷ்டியை உயர்த்திப் பெருமையுடன் சொல்லிக் கொள்வார்.

தூரத்தே தள்ளாடியபடியே வந்து கொண்டிருந்த பால சுந்தரம் வாத்தியாரைக் கண்ட முருகேசு பதட்டத்துடன் செல்லத்துரையரிடம்," அண்ணை, வாத்தி வருகிது."

நிமிர்ந்து நோக்கிய செல்லத்துரையர், "ம்... வெறிபோலை கிடக்குது..." என்று இழுத்தார்.

முருகேசுவின் முகத்தில் வெறுப்புப் பொங்கி வழிந்தது.

"இவங்களுக்கெல்லாம் ஒரு வாத்தி வேலையும், அதிபர் பட்டமும், தாங்களும் அழிஞ்சு பள்ளிக்கூடத்தையும் குட்டிச்சுவராக்கிறாங்கள்."

செல்லத்துரையர் ஒரு நீண்ட பெருமூச்சொன்றை விட்டார், "ம்... மனுஷியும், பிள்ளையளும் ஷெல்லடியிலை செத்ததிலையிருந்து மனுஷன் இந்தக் கோலம் தானே!"

"அதுக்கு உப்பிடித் தன்ரை மரியாதையை இழக்கிறதே ..?"

"உண்மைதான்... அநீதியாலை பாதிக்கப்படுகிறவை கவலைப்படுறதோடை நிண்டு விடினம். அநீதியை ஒழிக்கிற வழியைப் பாப்பமெண்டு யோசிக்கினையில்லை"

இந்த வார்த்தைகள் முருகேசுவின் மனதில் என்னவோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். முகம் ஒரு முறை திடீரெண்டு கறுத்துத் தெளிந்தது "செல்லத்துரை, நான் துணைப்படைப் பயிற்சிக்கு வர மறுத்ததை வைச்சு நீ குத்திக் காட்டுறாய் ?"

செல்லத்துரையர் மெல்லச் சிரித்தார், "பயந்தாலும், பயப்பிடாட்டியும் எதிரி தாற தொல்லை, தொல்லை தானே. ஆனால் நாங்களும் எங்கடை பிள்ளையளோடை கூட நிண்டால்  பெலம் கூடின மாதிரியல்லே!"

"எனக்கேதேனும் நடந்தால் என்ரை பிள்ளை குட்டியை நீ பார்ப்பியே?", முருகேசு சற்று ஆத்திரமாய்க் கேட்டார்.

செல்லத்துரையர் மெல்லிய புன்னகையுடன் கூறினார். "இப்ப பிள்ளை குட்டியளெல்லே எங்களைப் பார்க்குதுகள். அதுகள் இல்லாட்டில் முந்தின காலம் மாதிரி ஜீப்பைக் கண்டிட்டு ஓட வேண்டியது தான்."

முருகேசுவுக்கோ செல்லத்துரையரின் ஒவ்வொரு வார்த்தைகளும் தன்னைக் கிண்டல் செய்வது போலவே தோன்றியது. மெல்ல அவர் முகத்தில் கோபத்தின் சாயை படர்ந்தது.

"இன்னும் ஒரு மூண்டு மாதம் போகட்டும் உன்னோடை வாறனோ இல்லையோ பார்?"

"ஏன் இப்ப காலம் கூடாதே?"

"என்ரை மூத்தவளுக்கு இப்ப ஏழுமாதம். பேரப்பிள்ளையை ஒருக்கால் தூக்கிக் கொஞ்சிப் போட்டு... பிறகு பாரன்."

இவை வெறும் ரோஷத்தில் பிறந்த வார்த்தைகள் என்பது செல்லத்துரையருக்கு விளங்கும். ஆனால் அவர் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை.

மாலை மங்கி இருள் பரவத் தொடங்கியது. வானத்தில் பறந்த பறவைகளின் ஓசைகள் அடங்கிவிட்டன. ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்பார்ப்பது போல் வௌவால்கள் பறந்து மரக்கிளைகளில் மோதிச் சடசடத்துக் கொண்டிருந்தன. சூழல் இருளுள் கறுத்துக் கிடந்தது.

செல்லத்துரையரும் அவரது குழுவினரும், கண்களால் கரிய இருளைத் துழாவியவாறு காவற்கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இப்பொழுதெல்லாம் செல்லத் துரையர் சுருட்டுப் பிடிப்பதில்லை. கள்ளுக் கொட்டிலில் மணிக்கணக்காகக் குந்தியிருந்து அரசியல் வியாக்கியானம் செய்வதைக் கூட விட்டுவிட்டார். முருகேசு கூட அவருடன் சகல விஷயங்களிலும் ஒத்துப்போகக் கூடிய நண்பர் தான். ஆனால் இந்தத் துணைப்படையில் இணைவதைப் பற்றிக் கதைத்தால் மெல்ல அவ்விடத்தை விட்டு கழன்று விடுவார்.

"முருகேசு. நல்லவன் ஆனால் பயந்தாங்கொள்ளி." ; இப்படி அவர் மனம் அசை போட்டது.

அன்று மிளகாய்க் கன்றுக்குப் பசளை போட்ட அலுப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முருகேசு அண்மையில் எங்கோ விழுந்து வெடித்த ஷெல் சத்தத்தினால் திடுக்கிட்டு விழித்தார்

அவருக்கு முன்னாலேயே விழித்துப் பரபரத்துக் கொண்டு நின்ற மனைவி மனோன்மணி "ஆமி வெளிக் கிட்டிட்டாங்கள் போலை கிடக்குது." என்றாள் பயத்துடன்.

முன் தெருவால் சனங்கள் கையில் கிடைத்ததை மட்டும் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருந்தனர். சமீபத்துக் கொண்டிருந்த ஷெல் சத்தங்களும், வெடியோசைகளும் அவர்கள் ஓட்டத்தைத் துரிதப்படுத்தின.

''வா! வா! நாங்களும் போவம்" முருகேசு பதட்டத்துடன் மனைவியைத் துரிதப்படுத்தினார். 

அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய ஓட்டம் அடுத்த ஊர்ப்பாடசாலை வளவுக்குள் கால் வைத்த பிறகு தான் நின்றது. பாடசாலை ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களால் நிரம்பி வழிந்தது.

"மனோன்மணி! பிள்ளையும் மருமோனும் என்னபாடோ தெரியயில்லை'' அப்பொழுது தான் அவர் மனதில் மகளின் வயிற்றில் வளரும் தனது பேரப்பிள்ளையின் நினைவு தோன்றியது.

"ஒருக்கால் சனத்துக்கை பாருங்கோ எங்களுக்கு முன்னாலை வந்தினமோ தெரியேல்லை" மனோன்மணியின் வார்த்தைகளில் ஒரு நம்பிக்கை இளையோடினாலும், நெஞ்சுக்குள் ஒரு நடுக்கம் இல்லாமல் இல்லை.

முதுரைமரக் கொப்புகளைக் கீழே தள்ளி விட்டு எட்டிப்பார்த்த பின்னிலவின் மங்கிய வெளிச்சத்தில் மகளையும், மருமகளையும் தேடிய முருகேசருக்குக் கவலைப்பட்டுக் குழம்புவதைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை. அவர்களைக் கண்டதாகச் சொல்லும் ஒரு மனிதஜீவன் கூட அந்தப் பெரிய கூட்டத்தில் இருக்கவில்லை.

கிழக்கு மெல்ல மெல்ல வெளிக்கின்ற அந்த நேரத்தில் தான் வெடிச் சத்தங்கள் ஒருவாறு ஓய்ந்தன .

நித்திரையின்மையால் சோர்ந்திருந்த கண்களை விட மூருகேசுவின் மனம் கூடுதலாகத் தொய்ந்து போயிருந்தது. ''மனோன்மணி, நான் ஒருக்கால் போய்ப்பார்த்துக் கொண்டு. வரட்டே?"

"இப்பதானே வெடிச்சத்தம் நிண்டிருக்கிது. கொஞ்சம் பொறுத்துப் போங்கோ!"

நடப்பது நடக்கட்டும் என்ற நினைவு எழும்பவே முருகேசு மனைவியிடம் எதுவும் சொல்லாமலே பாட சாலையை விட்டு வெளியே வந்தார் மனோன்மணியின் பிள்ளைப்பாசம், தடுக்க வேண்டும் என்று எழுந்த உணர்வை அப்படியே அமுக்கிவிட அவளும் அவர் போகும் பாதையைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள்.

குழம்பிய மனதுடன் தெருவால் நடந்து கொண்டிருந்த முருகேசுவின் கண்களில், தோளில் துவக்குகளுடன் சிலர் நடந்து வருவதைக் கண்டதும் நெஞ்சு ஒரு கணம் துணுக்குற்றது. சற்றுக் கூர்ந்து அவதானித்த பின்பு தான் அவர்கள் கட்டியிருப்பது சாரம் என்பதையும், முன்னால் வருவது செல்லத்துரையர் என்பதையும் அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது. 

முருகேசு மெல்ல அவர்களை நெருங்கினார்.

"முருகேசு ! என்ன விடியக்கா ...?"

"அண்ணை! பிள்ளையையும் மருமோனையும் காணயில்லை"

"அவை பின்னாலை வருகினம்". செல்லத்துரையர் வார்த்தைகள் முருகேசுவின் வயிற்றில் பாலை வார்த்தன; "ஆமி வெளிக்கிடயுக்கை அவையாலை இஞ்சாலை வர ஏலாமல் மாட்டுப்பட்டுப் போச்சினை. எங்கடை தம்பியவை களையாமல் நிண்டு அடிபட்டு ஆமியைத் திருப்பிக் கலைச்சுப் போட்டினை! நாங்களும் தம்பியவையோடை பக்கத்திலை நிண்டு எல்லா உதவியும் செய்தனாங்கள்."

செல்லத்துரையர் முகத்தில் பெருமிதம் தோன்றியது. தன்னுடைய மகளையும், மருமகளையும், பிறக்கப் போகும் பேரப்பிள்ளையும் காப்பாற்றிய அவர்களைக் கையெடுத்துக் கும்பிட வேணும் போன்ற ஒரு உணர்வு முருகேசர் மனதில் தோன்றியது.

செல்லத்துரையர் தொடர்ந்தார். "பேரப்பிள்ளையைக் கண்டபிறகு தான் எங்களோடை வரப்போறனெண்டாய். தம்பியவையும், நாங்களும் இரவு ஆயுதமேந்தி அடிபட்டுத் திருப்பிக்கலையாட்டில் நீ எந்தப் பேரப் பிள்ளையைக் கொஞ்சியிருப்பாய்?"

முருகேசுவின் கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது. செல்லத்துரையரின், தோளில் கிடக்கும் துப்பாக்கியையும், தோளில் குறுக்காகத் நேசபாவத்துடன் பார்த்தார். அந்தத் தொங்கிய தோட்டாப் பட்டியையும் ஒரு வித துப்பாக்கி தன்னுடைய தோளில் ஏறுவதான ஒரு பிரமை தோன்றவே ஒடுங்கியிருந்த அவரது நெஞ்சு தானாகவே நிமிர்ந்தது.

-கிளிநொச்சி மூர்த்தி

-வெளிச்சம்,பங்குனி 1993.

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

Friday, 3 April 2026

தாய் மண்ணுக்காக,தமிழ்மக்களுக்காக - லெப் வில்லியம்.

தாய் மண்ணுக்காக, தமிழ் மக்களுக்காக ...
~~~~~~~~~~~~

தண்ணீருக்கு நிறம் இல்லை, மணம் இல்லை, குணம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், அந்தத் தண்ணீருக்கும் நிறம் உண்டு - சிவப்பு நிறம்; மணம் உண்டு - அது இரத்தவாடை; குணம் உண்டு - எந்த உண்மையையும் மறைக்க முடியாத நிலையைத் தோற்றுவிக்கும் தன்மை.

தமிழர்களாய்ப் பிறந்ததால் அதிலும் மானமுள்ள தமிழர்களாய் இனப்பற்றுடன் இருந்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு, கும்புறு மூலையிலுள்ள விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்படுபவர்கள் இந்தத் தண்ணீரைக் காண்பார்கள். ஒரு பீப்பாயினுள் சகிக்க முடியாத நாற்றத்துடன் இருக்கும் இந்தத் தண்ணீருக்குக் கிட்ட, இவர்கள் கொண்டுசெல்லப் படுவார்கள்.

"இதுதான் வில்லியத்தப் போட்டெடுத்த தண்ணி."

வாடையை இவ்வாறுதான் அது அறிமுகப்படுத்தப்படும். அதன் நிறத்தைப் பார்த்து  நுகர்ந்ததும், மறந்து போயிருந்த விடயங்களெல்லாம் நினைவுக்கு வரும். அவர்கள் தமக்குத் தெரிந்த உண்மைகளையெல்லாம் சொன்னார்களோ சொல்லவில்லையோ, அதிரடிப்படையினர் அதற்குள் போட நினைத்தால் போட்டெடுக்கத்தான் செய்வார்கள்.

போட்டெடுத்து போட்டெடுத்து ... எதிர் பார்க்கும் தகவல் கிடைக்கவில்லையெனில் உயிரை போக்காட்டி விடுவார்கள் .

"வில்லியத்தப் போட்டெடுத்த தண்ணி" என்று விசேடமாகக் கூறுவதற்குக் காரணமென்ன? அவன் உயிரோடிருந்த காலத்தில் சிறீலங்காப் படையினரை கனவிலும் பயமுறுத்திக் கொண்டிருந்தான் அவனை உயிருடன் கைது செய்ய முடியுமென்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள் அவன் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாமலிருந்தது. அந்தத் தாக்குதல்களில் உயிர் தப்பியவர்களுக்கு தாம் உயிரோடிருப்பதையே நம்பமுடியாமலிருக்கும். தாக்குதல் முடிந்ததும் வில்லியம் காற்றாக விரைந்து விடுவான் அவன் போய்விட்டான் என்பதை உறுதிப்படுத்தியதும் இவர்கள் தமது அட்டகாசத்தைத் தொடங்குவார்கள். அப்போது இவர்களிடம் பிடிபடும் தமிழர்கள் ஏகோபித்த குரலில் கூறுவது இதைத்தான் -

"வில்லியம்தான் இதச் செஞ்சான்."

'எதிரிக்கு நிச்சயமாகத் தெரியும் என்ற தகவலை அவனிடம் கைதியாக இருக்கும்போது மறைப்பதில் பிரயோசனமில்லை. எந்தளவுக்கு அவன் அறிந்து வைத்திருக்கிறான் என ஊகித்து அதற்கேற்ற மாதிரிச் சொல்லி விடுவதே புத்திசாலித்தனம் - அதை மறைக்கப் போனால் எதிரி உயிர் போகும்வரை சித்திரவதை செய்து கொண்டேயிருப்பான் ஆகவே அதைச் சொல்லி விடவேண்டும். அதைச் செய்வதன் மூலம் அவனுக்குத் தெரியாத பல ரகசியங்களைக் காப்பாற்ற முடியும் அத்துடன் கைதுசெய்யப்பட முடியாதவன் அல்லது மரணித்தவன் தலையில் எல்லாப் பழியையும் போட்டுவிடவேண்டும்' - இது கைது செய்யப்படுபவர்கள் கையாளும் பொதுவான தந்திரம். எனவேதான் கும்புறுமூலை முகாமுக்குக்
கொண்டு செல்லப்பட்டவர்கள் எல்லோரும் இதைச் சொன்னார்கள்.

"...... இது எல்லாம் வில்லியம்தான் செஞ்சான். அவனுக்குத்தான் எல்லாம் தெரியும்.''

அப்போதெல்லாம் அவர்களிடம் படையினர் கேட்பார்கள். "நாங்கள் வில்லியத்தப் பிடிச்சு உங்ககிட்ட கொண்டுவந்தா நீங்க என்ன செய்வீங்க .....?"

அப்போதெல்லாம் அவர்கள் எவ்வித தயக்கமுமின்றிக் கூறுவார்கள்.

"அவனைக் கொண்டு வாங்கையா... அவன நாங்கள் நம்மட கையாலயே வெட்டிக் கொல்லுறம்......" 
எந்தக் கட்டத்திலும் வில்லியம் உயிருடன் கைதாகமாட்டான் என திடமாக நம்பியதாலேயே. அவர்கள் அவ்வாறு கூறினார்கள். இதற்குமேல் ஏதாவது கூறமுடியுமென்று தெரிந்திருந்தால் அதனையும் கூறியிருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை எதையாவது சொல்லி அந்தச் சித்திரவதைக் கூடத்திலிருந்து மீண்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் இந்த வார்த்தைகள் விபரீதத்தைக் கொண்டுவருமென்று. அவர்களுக்குத் தெரியவில்லை.

வில்லியம்.....!

வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவனது இயற்பெயர் ஜீவராசா மட்டக்களப்பில் நடந்த முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவன் இவன். பயிற்சி முடிந்தவுடனேயே இவனுக்கு சிறீலங்காப் படையினருக்கெதிரான தாக்குதல்களில் பங்கு பற்றவும் தனித்துத் தாக்குதல் நடத்தவும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன கிடைத்த வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்தினான்
அவற்றை எந்த ஒரு காரணத்துக்காகவும் இவன் பின்போட்டதில்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.

11.02.1986 அன்று இவன் கல்குடா வீதியில் பேய்த்தாழை என்னுமிடத்தில் சிங்களப்படைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தான்; தனியாளாகத்தான் அங்கு நின்றான். அப்போது அந்த வீதி வழியாக அவனது தந்தை வந்துகொண்டிருந்தார். இவன் தனித்து அந்த இடத்தில் நிற்பதால் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். என்று நினைத்தார் அவர். இப்போதெல்லாம் வெகு அபூர்வமாகத்தான் இவனைக் காணக் கிடைக்கிறது. இயக்கத்திற்குப் போன பின்பு இவனுடன் கதைக்கும் போதெல்லாம், யாரோ ஒரு பொதுமகனுடன் இவன் கதைப்பது போலத்தான் உணர முடிகிறது. ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்துத்தான் கதைக்கிறான். 'நம்மட புள்ளக்கி நாம துரோகம் பண்ணுவமா ...... ஏன் இப்பிடி ஒட்டாமப் பழகுறான் ......' என்று, அவர் பல தடவை நினைத்ததுண்டு - ஆனாலும் இவனிடம் எதையும் கேட்டதில்லை. கேட்டால் இந்தளவிற்கு இருக்கும் உறவைக்கூட முறித்து விடுவான் என்று பயம். 

இன்று கண்டாயிற்று. தனிய நிற்பதால் கூடிய நோம் கதைக்கலாம் என்றொரு ஆசை பாசம் மிதிவண்டியின் வேகத்தை அதிகரிக்கின்றது

இதோ கிட்ட கிட்ட மிகக்கிட்ட.

இதேவேளை பின்னால் கல்குடா பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சிங்களப்படையினரின் ஜீப் -அது இவரை முந்திவிட்டது. முன்னால் ஜீப்- பின்னால் தந்தை பெற்று வளர்த்து...... முத்தமிட்டு....தோளில் தூக்கி ......

அதையெல்லாம் நினைக்க நோமில்லை. தந்தைக்காக இந்தச் சந்தர்ப்பத்தை இழக்கத் தயாரில்லை அவன். எப்போது கழுத்தில் சயனைட் கட்டினானோ அந்தக் கணத்திலிருந்து அவன் இந்தத் தேசத்தின் புதல்வன். எனவே முடிவெடுத்து விட்டான்.

பயங்கரமான சத்தத்துடன் அந்தக் கண்ணி வெடி வெடித்தது. இதில் இரணடு அதிரடிப்படை வீரர்கள் பலியாகினர். மூவர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடக்குமென்று படையினர் மட்டுமல்ல அவனது தந்தைகூட எதிர்பார்க்கவில்லை. எப்படியோ அதிர்ஷ்ட தேவதை அவருக்குக் கை கொடுத்தாள் இல்லாவிட்டால் அன்று அவர் உயிர் தப்பியிருக்க முடியாது. இதன்பின் அடிக்கடி கூறுவார் அவர்-

"என்னையும் பாக்காம எண்டமகன் இப்படிச் செஞ்சு போட்டான்."

இக் கூற்றில் ஒரு தந்தையின் தவிப்பும் மகனைப் பற்றிய பெருமையும் இணைந்திருக்கும்.

13 01-1987 அன்று, வில்லியத்தை எதிர் பார்த்து வாழைச்சேனைப் பகுதியில் காத்திருந்தனர் சிறீலங்கா அதிரடிப் படையினர். காட்டிக் கொடுத்தவன் ஒழுங்காகத்தான் தகவல் வழங்கியிருந்தான் அன்று வில்லியத்துடன் சங்கரும் வந்து கொண்டிருந்தான் வில்லியத்தைப் போலவே இவனும் பல இடங்களில் இவர்களுக்கெதிரான தாக்குதல்களில் பங்கு பற்றியவன் இன்று இருவருமே தமது கொலை வளைபத்தினுள் மாட்டிக் கொண்டதை நினைக்கச் சந்தோசமாக இருந்தது அவர்களுக்கு.

"பட் .....பட் பட் " அவர்களது துப் பாக்கிகள் சராமாரியாகப் பொழிந்தன சங்கரும், வில்லியமும் இதனைச்சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சங்கருக்கு தோளில் வெடி; வில்லியத்துக்கு முழங்காலில் வெடி வில்லியத்தால் ஓடமுடியாது. அதற்காக அவனை அப்படியே விடமுடியாது அவனைத் தோளில் போட்டவாறே ஓடினான் சங்கர். படையினர் துரத்தினர் ஆனால் சங்கர் தப்பிவிட்டான் - தனது நண்பனுடன்.

இப்படியே நீண்டதூரம் சங்கரால் ஓடமுடியவில்லை அவனது காயத்திலிருந்து பெருந்தொகையான இரத்தம் வெளியேறி விட்டது. அவனுக்குச் சோர்வாக இருந்தது. அந்தக் கண்ணகி கிராமத்தில் சின்னச் சின்னப் பற்றைகள் தான் இருந்தன. அவற்றினுள் வில்லியத்தைக் கிடத்தினான் இப்போது தேவை வைத்தியம். இதற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு ஒரு ஆதரவாளனின் வீட்டிற்குள் புகுந்தான் சங்கர்.

படையினர் தேடினார்கள் - சங்கரும் வில்லியமும் மறைந்த வழி தெரியவில்லை: ஏமாற்றத்துடன் திரும்பிப் போய்விட்டார்கள். சங்கர் ஒரு வைத்தியரைச் சந்தித்தான். அவரையும் கூட்டிக் கொண்டு வில்லியத்தை நோக்கி விரைந்தான்.

இதற்கிடையில், "வில்லியத்துக்கு வெடிபட்டுட்டுது" என்ற செய்தியறிந்து பலர் அவனைப் பார்க்கச் சென்றனர். இந்த இடத்தில் வில்லியம் இருப்பது ஆபத்தானது எனக் கருதிய அவர்கள், இன்னும் கொஞ்சத் தூரத்துக்கப்பால் பற்றை மறைவுக்குள் அவனைக் கிடத்தினார்கள். அவன் வேதனையில் முனகிக்கொண்டிருந்தான்.

மீண்டும் படையினர் வரலாம் அதற்குள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் இவனோ முனகிக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் இவனுக்கு மயக்க ஊசி போடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அந்த வைத்தியருக்கு. 

சங்கர் வில்லியத்தைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டில் மும்முரமாயிருந்தான். ஆனால் அவனை விட இனத்துரோகி சுறுசுறுப்பாயிருந்தான் பொதுமக்களுடன் பொதுமக்களாகச் சென்று வில்லியத்தைப் பார்த்த அவன், நேரே படையினரின் முகாமூக்குச் சென்று அவர்களை அங்கே கூட்டிவந்தான்.

வில்லியம் நினைவு திரும்பாத நிலையிலேயே கைது செய்யப்பட்டான். சங்கரால் எதுவும் செய்யமுடியவில்லை யாரை நோவது? அன்றைய இரவு கண்ணீருடன் கழிந்தது.

சித்திரவதைகள் வில்லியத்தைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தன. அவனது உடலில் மேலும் பல காயங்கள் உருவாகின. உடல் முழுவதும் இரத்தம். அந்த நிலையில் பீப்பாவிற்குள் போட்டெடுத்து போட்டெடுத்து தண்ணீர்தான் சிவப்பாகியதே தவிர வில்லியத்தின் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை.

வில்லியம் கைதான மறுநாள் ...

மீண்டும் கேட்டனர் கைதிகளிடம், “வில்லியத்தைப் பிடிச்சுக் கொண்டு வந்தா என்ன செய்வீங்க?”

... "கொண்டு வாங்கையா, எங்கட கையாலயே அவன வெட்டுறம்;கொல்லுறம்.” அந்த முகாம் பொறுப்பதிகாரி முகத்தில் புன்னகை. அது மிகவும் குரூரமாகவிருந்தது. ஏனையோரிடம் கண்ணைக் காட்டினான் அவன். அவர்கள் வில்லியத்தைத் தூக்கி வந்தனர். கூடவே ஒரு கத்தியும் கொண்டு வரப்பட்டது. "உம் வெட்டுங்க ...... வில்லியத்தை வெட்டுறதெண்டூ சொன்னீங்களே
வெட்டுங்க........

சிலையாகி நின்றனர் அனைவரும். இப்படியொரு நிலையை எவருமே எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்ததை விட காட்டுமிராண்டியாக இருக்கிறானே இவன் என்று, ஆச்சரியத்துடன் விழிபிதுங்க நின்றனர். இரத்தோட்டமே நின்றுவிடும் போல் இருந்தது.

"உம் வெட்டுங்க......"

அவர்களை நெருங்கினான் அவன்...... மூளையும் மனதும் ஒப்பாமலே ஒருவர் கத்தியை ஏந்தினார். அந்தப் படையதிகாரி. ஏனையோரையும் வெட்டச் சொன்னான்
வெட்டுவதா..... எதிரே கிடப்பவன் மனிதன்... உயிரோடிருக்கிறான்....... துடிக்கிறான் ..... அதுவும் அவர்களால் நேசிக்கப்பட்டவன்.

தமிழ்ச்சாதியின் விதியை நொந்தவாறே கத்தியை ஓங்கினார் அவர் இவனை வெட்டுவதா ... ? கத்தி மெதுவாகத்தான் தொட்டது வில்லியத்தின் உடலை. அந்தப் பெரிய கூர்க்கத்தியினால் ஏற்படுத்திய காயம்,சவர அலகால் ஏற்படுவதை விடச் சிறியதாக இருந்தது....

வில்லியம் துடித்துக் கொண்டிருக்கிறான். கீழேயிருந்து, வெட்டுபவரிடம் கூறுகின்றான்-

"மெல்ல வெட்டாதீங்க... ஒரேயடியா வெட்டுங்க."

இதற்கு மேலும் அவரால் இயங்க முடியவில்லை. படையதிகாரி அதட்டினான். மீண்டும் கத்தியை எடுத்தார்.....

"மெல்ல வெட்டாதீங்க... ஓரேயடியா வெட்டுங்க......"

அவரால் இயல்பாக இயங்க முடியவில்லை. இதைப் பார்த்ததும் படையதிகாரிக்குக் கோபம்வந்தது.

"இப்படியா வெட்டுறது...? இந்தா பார் எப்பிடி வெட்டுறகெண்டு"

அசுர வேகத்தில் இயங்கினான் அவன். எல்லோர் கண்ணெதிரிலும் வில்லியம் துடித்துத் துடித்து ......

அன்றைக்கும் இலங்கை வானொலி "பயங்கரவாதியொருவர்" கொல்லப்பட்டதாகத்தான் தெரிவித்தது.

அன்று மாலையும் ரூபவாஹினி, புத்தர் சிலைக்கு முன்னால் வணக்கம் செலுத்தப்படும் காட்சியை ஒளிபரப்பியது!!

-விடுதலைப்புலிகள் இதழ் கார்த்திகை 1993.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்.

Thursday, 2 April 2026

இருள் பிளந்து ஒளி எழுந்த நாளொன்றில்...-தாரணி

இருள் பிளந்து ஒளி எழுந்த நாளொன்றில்.......
~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிளி கிளி கிளி ....
உற்சாகத்துடன் உயரே எழும்பி ஒலித்த அந்தக் குரல்களே கரிப்பட்டமுறிப்புச்சந்தியில் எம்மை வரவேற்றன.

ஓயாத அலைகள் மூன்றின் ஐந்தாம் நாள். நவம்பர் ஏழாம் திகதி எதிரியிடமிருந்து மீட்கப்பட்ட கரிப்பட்டமுறிப்பு மண்மீது எம் பாதம் பதிகின்றது. காலம் காலமாக வலி சுமந்த எம் மனங்களின் மீது, மகிழ்வையும், நிறைவையும், துணிவையும் நிரப்பிய நாட்கள் இவை. இனி என்றும் வீழோம் எனும் உறுதியுடன் என்றும் வெல்வதற்காகவே எம் கரங்கள் எழுந்தன என்பதன் சாட்சியாகி எங்கள் மண் மீண்டும் எங்கள் கரங்களில். அழிந்து போன ஆக்கிரமிப்பின் அடையாளமாக சிதைவடைந்த காவலரண்கள், அறுந்துபோன முட்கம்பி வேலிகள் என போர் ஓய்ந்த களம் ஒன்றின் காட்சி.

ஓரிரு நாட்களின் முன் எறிகணைகளும் துப்பாக்கி ரவைகளும் முழக்கமிட ஓட வழியின்றி எதிரி பிணமாகிக் கிடந்த நிலம் அது. அங்கே மாங்குளம் நோக்கிய வீதியின் சந்தியில் இருந்து இடப்புறமாகத் திரும்பும் வளைவில் பெண் போராளிகள் தாச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

லேசான மழைத் தூறல்களினூடு சூரியன் வானில் புதைந்து கொண்டிருந்த ஒரு மாலைநேரம். சூழல் மனதுள் இறக்கியிருந்த மௌனமான களம் ஒன்றின் இழைகள் இந்த இளசுகளின்  உற்சாகத் தெறிப்பில் மெல்ல அறுந்து போனது.

"வணக்கம் அக்கா" என்னுடன் வந்திருந்த பெண் போராளிக்கும் எனக்குமாக அந்தச் சின்ன வாய்கள் உற்சாகத்துடன் மலர்ந்தன.

உலகமே வியந்து நிற்கும் வெற்றிக்காக தமது வியர்வையையும், உதிரத்தையும் விலையாகக் கொடுத்தவர்கள் இவர்களே.

தமக்குரித்தான அந்த வெற்றி பற்றிய பெருமித எல்லைகளைத் தாண்டி....இயல்பான குழந்தைத் தனத்தோடு புன்னகைக்கும் அந்தத் தேசக் குழந்தைகளின் தழும்பேறிய கைகளை கண்களில் ஒற்றிக் கொள்ள மனம் விரும்பியது.

அவர்கள் வழிகாட்ட அங்கிருந்த அணித் தலைவியின் அனுமதியுடன் சிதறிக் கிடந்த எதிரி முகாமினுள் நடக்கத் தொடங்கினோம். அலையடித்துப் போனதன் அடையாளங்கள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கும் இராணுவ உபகரணங்கள், உடைகள், காலணிகள், குறிப்பேடுகள், சமையற் பொருட்கள் என சில நாட்களின் முன்பு வரை இங்கிருந்தவர்களை நினைவூட்டின. மரங்களிலும், நிலத்திலும்,காற்றிலுங் கூட அந்நியத்துள் புதைந்து மீண்டதன் அடையாளம் தெரிந்தது. மனிதர்களே அங்கு வாழவில்லை என்பதாகக் காற்று கனத்திருந்தது. புதர் மூடிய கட்டடங்கள், புல் மூடி அடையாளமே இல்லாதொழிந்த மக்களின் வாழ்விடங்கள். இரு வருடங்களின் முன்பு வரை உயிர்ப்பும், செழிப்பும் நிறைந்திருந்த அவ்வூரின் ஆன்மா தொலைந்து வெறுமை கொண்ட பேரிருள் மூடிக்கிடந்ததான தோற்றமே கண்களினுள்.அச்சூழலின் பேரமைதியைக் கிழித்து சூழலை இயல்பினுள் நகர்த்தும் போராளிகளின் பேச்சுக்குரல்களும், நடமாட்டமும் மீண்ட அந்த மண்ணின் மீதான எமது இருப்பை உறுதி செய்தன.

முகாமின் களஞ்சிய அறையை ஒட்டியபகுதி ஒன்றில் போராளிகள் இரவுச் சமையலில் ஈடுபட்டிருந்தனர். எங்களிற்கு இனிப் பிரச்சனையில்லை. ஸ்ரோர் கிளியர் பண்ணும் வரை ஒரே சமையல்தான் எனக் கூறிச் சிரித்தார்கள்.

வெள்ளைச்சம்பா அரிசியும், கருவாடும் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. எம்மை உட்கார வைத்து மகிழ்வுடன் உபசரித்தார்கள். இடம் எதுவானாலும் மாறிவிடாத உபசரிக்கும் அந்தப் பண்பு என் எண்ணத்துள் அவர்களை இன்னும் உயரவைத்தது.

ஓயாத அலைகள் மூன்றின் பிரமிப்பான வெற்றி பற்றிய தமது மகிழ்வை விட மக்களின் மனநிறைவையும், மனநிலையையும்
அறிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வம் தெரிந்தது. தமது மக்கள் முகங்களில் புன்னகை மிளிர வீதிகளில் இறங்கி போர்க்களத்தின் திசைவரை உணர்வுகளால் இணைந்து கால்களில் சிறகு முளைத்த சந்தோஷத்துடன் தமது நேற்றைய வாழ்வின் சுமைகளை மறந்து மகிழ்வுறுகிறார்கள் என்பதில் அந்த மனங்கள் நிறைவு கொண்டன.

இந்தச் சண்டைக்கான சூழலைத் தமக்குத் தந்த தலைவர் பற்றிப் பெருமை பொங்கப் பேசினார்கள். எங்கள் மனங்களில் எரிகின்ற தீயுடன் அவனுக்கு எங்கள் பலத்தின் முழுமையைச் சொல்கின்ற நாளுக்காக நாங்கள் காத்திருந்தோம். எங்கள் அண்ணா மிக அருமையான களத்தையும் காலமொன்றையும் எங்கள் கரங்களில் தந்துவிட்டார். அம்பகாமத்தில் அன்று நாங்கள் இழந்த எங்கள் பிள்ளைகளின் பெயர் சொல்லி இன்று நாம் சாதித்துவிட்டோம். அசைக்க முடியாதென்ற ஆணவத்தோடு அவன் பரவி நின்ற காவலரண்கள் கடந்து நாம் முன்னேறும் போது மனதுள் எழுந்தடங்கிய உணர்வின் நிறைவை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை என ஒரு அணியின் தலைவி உணர்வு பொங்கச் சொன்னார்.

காவலரண் வேலியிட்டு கண்விழிக்கத் தொடங்கிய நாளிலிருந்து எதிரியை ஓட ஓட விரட்டியே கால்கள் சோர்ந்துவிட்ட நேற்றைய சண்டைவரை ஓயாத வேலையில் அலுத்துக் களைத்திருந்த தனது உடலின் சோர்வையும் வேதனையையும் தாங்கியபடி அவள் பேசப்பேச சில
நிமிடமேனும் நீட்டி நிமிர்ந்து கைகளை வீசித் தூங்க அவள் உடல் கெஞ்சும் என்பதையும் இந்த வேதனைகளை எல்லாம் தாங்கியபடியேதான் இவர்கள் எமக்காக வருடங்கள் பல தாண்டியும் உறுதி சரியாது போராடுகிறார்கள் என்பதும் என் நினைவை வருத்தியது. ஒட்டுசுட்டான் முகாம் ஒன்றிற்கான தாக்குதலிற்கான தமது நகர்வுபற்றி இன்னுமொரு போராளி சொன்னாள்.

இருள் மூடிப் போயிருந்த நள்ளிரவில் எதிரி கண்ணில் மண்தூவிய நகர்வு, கால்களை முன்வைக்கவோ, எமக்கான திசையை அனுமானிக்கவோ முடியாத கரும் இருள், நிலமும், மரங்களும், வானும் கூட இருளில் குளித்து கருமையை தம் மேல் அள்ளிப் பூசியிருந்தன. நகர்வின் திசைமாறாதிருக்க முன் செல்பவரின் இடுப்புப் பட்டிகளையே இறுகப் பற்றி நடந்தோம் என எத்தனை நாள் தூக்கமோ விழிகளை அழுத்த கண்களை மூடியபடி சண்டையின் ஆரம்பத்திலிருந்து தன் நினைவில் இருந்தவைகளை மூச்சுவிடாது கூறி முடித்தாள். சண்டை அணியொன்றின் பிரதான போராளியாக நல்ல வளர்த்தியுடன் அழகும், உறுதியும் கொண்ட அவளுடைய பேச்சில் மட்டும் இன்னும் மாறாத மழலை தெரிந்தது. இருட்டு என்பதை இரிசல் என அவள் உச்சரித்த விதம் எம்மை ரசிக்க வைத்தது. இந்தச் சண்டையில் தனது கனரக ஆயுதத்தைக் காப்பாற்றுவதற்காக அதன்மேல் குப்புறப்படுத்து தன் உயிரைப் பலிகொடுத்த பெண் போராளி ஒருத்தி பற்றி அவர்களின் தளபதி ஒருவர் வேதளையும் பெருமையுமாகக் கூறினார்.

வாழ்வு என்பதையே நாலு கோட்டினுள் வரையறுத்து சமூக நிர்ப்பந்தங்களையே ஆபரணங்களாக்கி அழகு பார்க்கும் எங்களின் வாழ்விலிருந்து வந்த இவர்களாலேயே தம்மைப் புறந்தள்ளி தேசத்தின் நாளைக்காக எம் உள்ளம் கசியும் வகையில் உயிர்விட முடிகிறது.

நாம் அர்த்தப்படுத்தியுள்ள எம் நடைமுறை வாழ்வு மனங்களில் இருந்து முற்றாக விலகி உயர்ந்து மலர்ந்துள்ள இந்த அற்புதமானவர்களின் உள்ளத்தையும் உணர்வுகளையும் காலம் எழுதித் தீர்க்குமா?

இவர்கள் உணர்வு சொல்லும் வார்த்தைகள் என்றேனும் காலத்தின் கரங்களினுள் வசப்படுமா?

வெற்றி என்பது விண்ணிலிருந்து விடிகாலை ஒன்றின் பரிசாக எமக்காக வந்து சேர்வதல்ல, அதன் பின்னே வலியினதும் கண்ணீரினதும் இரத்தத்தினதும் நீண்ட வரலாறு உள்ளது. காவலரண்களில் தம் உடலின் உணர்வுகளையே மறந்து மழையிலும், பனியிலும், வெய்யிலிலும் வாடிய போராளிகளினதும் இயல்பான மனங்களின் அச்சங்களை வென்று சாவிடம் தம்மைக் கையளித்து நகரும் வேவுப்புலிகளினதும், இன்னும் சண்டை ஒன்றுக்காகத் தம்மை உடல் வருத்திப் பயிற்சி பெறும் புலி வீரர்களது உடலும் மனமும் சுமந்திருக்கக்கூடிய துயர்மிகு கணங்களிலிருந்தே எமது வெற்றிகளிற்கான காலம் உருவாகிறது. அவர்களின் வலி சுமந்த நாட்களைக் கடந்தே இன்றைய வெற்றியின் மகிழ்விற்கான நாட்கள் எழுந்து வந்துள்ளன.

விடுதலைப் போர் என்னும் நெருப்பு நதியில் மாறா உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பயணம் செய்யும் இவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள இன்னும் இன்னும் தோள்கள் உயருமா எனும் கேள்விக்கு வரும்போது நடந்தும் வாகனங்களிலும் வெறிச்சிட்ட மீட்கப்பட்ட நகரங்களை உயிர்ப்பித்தவாறு உலவிக் கொண்டிருந்த எல்லைப் படைவீரர்களினதும். தங்கள் மனம் நிறைவடையக் கூடியதாக இப்போருக்கான தமது பணிபற்றிய தேடலுடன் வீதிகளில் உலவும் மக்களினதும் முகங்களே மனதுள் வந்துபோயின.

சத்தியத்தைச் சுமப்பவர்களின் துயரினை மறந்து சரித்திரம் ஒருபோதும் தீர்ப்பினை எழுதுவதில்லை எனும் நினைவினை சுமந்து இருளும், குளிரும் பொழுதைப் போர்த்தியிருந்த அந்த முன்னிரவில் அவர்களிடமிருந்து விடைபெற்றோம்......

-தாரணி

-எரிமலை நவம்பர் 2000

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

ஆயர் ராயப்பு யோசப்பும்,தமிழ்த்தேசியமும் -எழில்ராஜன்

ஆயர் ராயப்பு யோசப்பும்,தமிழ்த்தேசியமும் 

பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது.
 
வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். 

ஆயரை வெறுமனே சமயத்தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக்கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மையின் அடிப்படையில் அடக்முறைக்கெதிராக அணிதிரட்டுகின்ற இயங்கு சக்தியாக இருக்கின்றது.

ஆயரின் சர்ச்சைத் தன்மை
~~~~~~~~~~~~~~~~~
எல்சல்வடோரில் பேராயர் ஒஸ்கார் றொமேரோ பற்றிய பொதுச் சொல்லாடல் அவருடைய திருப்புமுனையிலிருந்து, அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுக்க முனைந்ததிலிருந்து, முற்போக்கான பேராயராக பிரதிபலிக்கப்படுகின்றார். எல்சல்வடோர் விவசாயிகளை, அடித்தட்டு மக்களை பொறுத்தவரையல் பேராயர் வேறும் மதத் தலைவரல்ல, மதங்களைக் கடந்து, அடக்குமுறைக்குட்பட்ட மக்களை விடுதலையை நோக்கி அணிதிரட்டிய ஒரு தலைவராக நோக்கப்படுகின்றார். மறைந்த முன்னாள் ஆயரின் சர்ச்சைத் தன்மை பற்றிய கட்டமைப்பு பற்றி சுருக்கமாக நோக்கினால் ஆயரும் அவருக்குரிய பேசுபொருளும் சர்ச்சைக்குரியவைகள் அல்ல. ஆனால், அவை சர்ச்சைக்குரியவைகளாக கட்டமைக்கப்பட்டன. எல்சல்வடோரைப் பொறுத்தவரையில் அரச அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற குருக்களை அந்த அரசு சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிக்க முயன்றது. ஆனால், இது சர்ச்சைக்குரிய குருக்கள் பற்றியது அல்ல. அடக்குமுறையும் அதற்கேற்றதான எதிர்ப்பும், மக்களின் அரசியல் அணிதிரட்டலும் தொடர்பானது. அரச அடக்குமுறை இருக்கும் வரை அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கை இருந்துகொண்டே இருக்கப்போகின்றது. அரசின் அடக்குமுறையை சவாலுக்குட்படுத்தி நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக தனது குற்றத்தை அரசு இடம்பெயர்த்தி சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிப்பவர்கள் மீது பழியைச் சுமத்துகின்றது. ஆயர் இராயப்பு ஜோசப்பின் கூற்றுக்களில் சர்ச்சைக்குரியவைகள் என்று எதுவும் இல்லை. 
அரச அடக்குமுறைக்கெதிராக மக்களை அணிதிரட்டுவது சர்ச்சையல்ல, அரச அடக்குமுறை அசாதாரணமானது. அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு சாதாரணமானது. இதில் சர்ச்சை எனப்படுவது அசாதாரணமான அரச ஒடுக்குமறையே தவிர அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அணிதிரட்டல் அல்ல. அரசு தன்னுடைய அடக்குமுறையை  நியாயப்படுத்துவதற்காக சர்ச்சைக்குரிய பலிக்கடாக்களை கட்டமைக்கின்றது. இவ்வாறான பலிக்கடா கட்டமைப்பு ஒரு சமூக – அரசியல் கட்டமைப்பு. ஸ்ரீலங்கா அரசு இவ்வாறான கட்டமைப்பை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாக அமைவது சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரான அச்சுறத்தல். அவ்வாறான ஒரு அச்சுறுத்தலாகத்தான் ஆயரை சிங்கள – பௌத்த ஊடகங்களின் துணையோடு அரச இயந்திரம் ஆயருக்கெதிரான பரப்புரையை தென்னிலங்கையில் முன்னெடுத்தது. அதன் விளைவாக ஆயரை சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரானவராக கட்டமைத்தது. ஒரு இனம் அரச அடக்குமுறையால் பாதிக்கப்படுகின்றது, அதற்கெதிராக குரல் கொடுப்பது என்பது பொது அறம் சார்ந்தது, சர்ச்சைக்குரியது அல்ல.

ஆயரின் தமிழினத்திற்கான கூட்டுரிமைக் கோரிக்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆயர் தனது பொதுப்பணியை அரசு அடக்குமுறை சமூக – அரசியல் சூழ்நிலையில் தான் ஆரம்பிக்கின்றார். அவருடைய பட்டறிவும், அவர் சார்ந்த இனத்தின் கட்டமைப்பும் வெவ்வேறாக இருந்தில்லை. அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அடக்குமுறைக்கெதிரான பயணத்தில் அவர் தன்னை ஒருபோதும் அந்நியப்படுத்தியதில்லை. ஒரு இனத்தின் உரிமை மீறப்படுகின்றது, மறுக்கப்படுகின்றது என்பதை தனிநபர் சார் உரிமை மீறல் சொல்லாடல் வில்லைகளுக்குட்பட்டு பார்க்க முனைவது உண்மையை மறைத்தலும், மறுத்தலும் ஆகும். தனிநபரின் உரிமை மறுப்பும், மீறலும் தனி நபர் என்பதற்காக செய்யப்பட்டது அல்ல, தனிநபர் ஒரு இனக்குழும அடையாளத்தைக் கொண்டவர் என்பதால், இனக்குழும அடையாளத்தைக்கொண்டு கட்டமைக்கப்படுகின்ற இனப்பாகுபாடு ஏலவே திட்டமிடப்பட்டு வினைத்திறனோடு செயன்முறைப்படுத்தப்படுவது. அரச அடக்குமுறைக்கெதிரான ஆயரின் தமிழின கூட்டுரிமைக் கோரிக்கையை இனத்தின் சார்பாக அவர் முன்வைத்தது வரலாற்றுக்கு முரணானது அல்ல. அந்தக் கூட்டுரிமைக்கோரிக்கை அரசியல் தீர்வு தொடர்பிலும் சரி தமிழின படுகொலைக்கான நீதி கோருவதிலும் சரி தமிழினத்தின் கூட்டுரிமையை முன் நிறுத்தியே குரல் கொடுத்தார்.

ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என தனது நியாயப்பிரச்சாரத்தை உள்ளூரிலும், சர்வதேசத்திலும் மேற்கொண்டார். பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்காவில் வேறு எந்த ஆயராலும் முன்வைக்கப்படாத கோரிக்கையாக இருந்த போதிலும் மறைந்த ஆயர் தமிழின கோரிக்கையை முன்வைத்து, உள்ளக விசாரணையில் எந்தவிதமான நம்பிக்கையும் தமிழர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, ஸ்ரீலங்கா நீதித்துறை நிறுவனம் தமிழர்களுக்கு நீதியை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார். உள்ளக விசாரணையைப் பற்றி விபரிக்கையில் குற்றவாளிகளிடமே நீதி கோருதலில் ஆபத்தத்தைப் பற்றி தனது சந்திப்புக்களில் விளக்கத்தைக் கொடுத்தார். LLRC ஐ நிராகரித்து வெளியேறியது ஸ்ரீலங்கா அரசின் உள்ளகப்பொறிமுறையின் அறத்தையும் சட்ட வலுத்தன்மையையும் சிக்கலுக்குட்படுத்தியது.

இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய சர்வதேச விசாரணையில் ஸ்ரீலங்கா அரசு, தமிழினத்தை அதனுடைய இன அடையாளத்தை மையப்படுத்தியே இன அழிவை மேற்கொள்கின்றது. ஆகவே, ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை உள்நோக்கம் விசாரிக்கப்படுவது அவசியம் எனக்குறிப்பிட்டதோடு தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா அரசின் உள்நோக்கம் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து, தமிழினத்துக்குரிய அரசியல் தீர்வாக திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த (தாயகம், தேசியம், சுயநிர்ணயம்) தீர்வை முன்வைத்தார். வடக்கு – கிழக்கு நில, ஆள்புல கட்டுறுதியின் இணைப்பு தமிழின அரசியல் தீர்வில் மிக அவசியமானதென குறிப்பிட்டதோடு அல்லாமல் தமிழர்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் சுயாட்சி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் அவருடைய தெளிவு பல உரைகளில் வெளிவந்தது. முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் சாட்சியாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து, நீதிகோரியது அவரது பொதுப்பணியின் சூழமைவு சார்ந்த புரிதலை வெளிக்காட்டியது. அவருடைய எழுத்துக்களில் விடுதலை இறையியலின் தீவிரத் தன்மை வெளிப்படாவிட்டாலும் கூட, அவருடைய வாழ்தல், விடுதலை இறையியலின் அடிப்படையான PRAXIS முன்னிலைப்படுத்தியது. ஓஸ்கார் றொமேறோவினுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை போன்றதொரு திருப்புமுனை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தது என இதுவரைக்கும் யாரும் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த திருப்புமுனை வரலாற்றில் வாழ்தலினூடு ஏற்பட்டது என நம்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளூடான பயணமும், அனுபவமும் தனிநபர் சார்ந்த பயணம் அல்ல ஒரு கூட்டுப்பயணம். ஒரு இனத்தினுடைய கூட்டு அனுபவப்பயணமே அவரை மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவத்தை ஏற்கவேண்டிய காலகட்டாயத்திற்குள் அவரை நிர்ப்பந்தித்தது எனலாம்.

மாற்று அரசியல் பிரதிநிதித்துவமும் மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவமும்
~~~~~~~~~~~~~~~~~~
நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு சமாந்தரமாக மாற்று அரசியல் பிரதிநிதித்துவம் வடக்கு – கிழக்கில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். சிவில் சமூக அமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்தியதோடு அவற்றை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். தமிழ்த்தேசிய சபை தொடர்பிலான முன்னெடுப்புக்களுக்கு ஆர்வம் காட்டி அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தொடக்கி வைத்தது வரலாற்றில் நினைவிருக்கும். வடக்கு – கிழக்கில் சிவில் சமூக அமைப்புக்களையும், தமிழ்த்தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவ்வாறான சந்திப்புக்களுக்கு வரையறையின்றி காலத்தையும் வளங்களையும் முதலீடு செய்ததை அதில் பங்கு பற்றிய அனைவரும் அறிவர்.

ஆயர் மறைந்த பின்னர் வெளிவந்த இரங்கல் உரைகளும், அவர் தொடர்பான எழுத்துக்களும் அவருடைய தமிழினத்துக்கான தீர்க்க தரிசன நோக்கை மத வரையறைகளுக்குட்பட்டே பார்க்க விரும்பின. தமிழ்தேசியம் மத வரையறைகளைக் கடந்தது என்பதை தமிழ்த்தேசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கை ஆயருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் புரிதலில் தான் ஆயரின் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தன.

மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதற்குரிய காரணங்கள் அவருக்கு இருந்தன. ஒற்றையாட்சி நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் அவருக்கிருந்த அதிருப்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழினத்துக்கான நீதி கிடைக்கப்போதில்லை என்ற மன உறுதியும் அவரை மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை, நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சமாந்தரமாக கட்டமைக்க முற்பட்டதில் இருந்து தெளிவாகின்றது. ஆயர் கட்டமைக்க முன்னெடுத்த மாற்று அரசியல் பிரதிநித்துவம் தமிழ்த்தேசிய வெளிக்குள்ளே மட்டுமே கட்டமைக்க முடியும் என நம்பியதால்தான் மத வரையறைகளை கடந்து மாற்று பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரையும் ஒன்றிணைக்க முற்பட்டதை வரலாறு சொல்லும்.

மக்கள் சக்தியின் இயங்குதலில் நம்பிக்கை கொண்ட ஆயர், தமிழ்த்தேசியம் நாளாந்த இயங்கு தளத்தின் இயக்கமாக்கப்பட வேண்டும் என விரும்பியதால்தான் தமிழ் மக்களைப் பாதிக்கும் எல்லா அரச நெருக்கீடுகளையும் கண்டித்து வந்தார். குறிப்பாக, செறிவாக இராணுவ மயமாக்கப்படும் வடக்கு – கிழக்கு, சிங்கள -பௌத்த மயமாக்கம் அதன் விளைவான நில அபகரிப்பு, வரலாற்று திரிபு, அரசியல் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பட்டியல் நீண்டுகொண்டே போனது. ஸ்ரீலங்கா அரசு ஆயுதமற்ற போரை  வடக்கு – கிழக்கில் ஒவ்வொரு வாசலண்டையும்  திணித்தது. அப்போரின் பரிமாணங்கள் வெவ்வேறு வடிவில் உருப்பெற்றன, தொல்லியல், வன இலாகா, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழினப்படுகொலை மறுப்பு, தமிழின படுகொலைக்கான நீதி மறுப்பு, உண்மை மறுப்பு.

எண்ணிக்கை தொடர்பில் 2008 ஒக்ரோபர் தொடக்கம் 2009 மே வரைக்கும் விளக்கப்பட முடியாது புதிராகிப்போன 146,479 என முன்மொழிந்த போது இதுவரைக்கும் அந்த எண்ணிக்கையை ஸ்ரீலங்கா அரசு மறுத்ததாகவோ, நிராகரித்தாகவோ எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை.

ஆயரினுடைய தலைமைத்துவத்தை வெறுமனே மதம்சார்ந்து கட்டமைப்பது அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவத்தை வலுவிழக்க செய்வதாகும் அல்லது தலைமைத்துவம் தொடர்பான அறத்தை சாவாலுக்குட்படுத்துவதாகும் அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவம் மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அற ஒழுக்கத்தையும், அற நியாயத்தையும் சட்ட வலுவையும் வழங்கியது. அவ்வாறான தலைமைத்துவத்திற்கூடாக அவருக்கிருந்த அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை (Political Agency) இடம்பெயர்த்துவதாகவே அரசியல் தலைமைத்துவத்தை சிக்கலுக்குட்படுத்தல் இட்டுச்செல்கின்றது. அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை இடம்பெயர்த்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. அல்லது அவரை மத வரையறைகளுக்குட்படுத்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலை சிதைக்கின்றது. ஆயர் குறிப்பிட்ட மதவரையறைகளுக்குள் நின்று தமிழினத்தின் அரசியல் கோரிக்கைகளை பிரதிபலித்து பிரநிதித்துவப்படுத்தவில்லை மாறாக ஒட்டுமொத்த அரசியல் கோரிக்கைகளை தமிழினத்தின் பிரதிநிதியாக நின்று வெளிப்படுத்தியவர், மாற்று அரசியல் பிரதிநிதித்துவ வெளிக்கூடாக.

ஆயரும் தமிழ்த்தேசியமும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசிய வெளியின் அரசியல் வரலாற்றுப் பின்புலம் மாற்றமடைந்த சூழமைவில் தமிழ்த்தேசிய அரசியலின் புரிதல் பற்றிய கேள்விகள் பொதுவெளியில் எதிர்மறையாக எழுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய வெளியை சிதைப்பதற்கான உத்தியாக அது கையாளப்பட்ட போதும் அவ் உத்திகள் தமிழ்த்தேசிய அணுகுமுறைகள் சார்ந்ததே தவிர தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை ஒருபோதும் கூறுபோட்டதில்லை. வரலாற்றில் தமிழ்த்தேசியம் பல்வேறு அணுகுமுறைகளை பயன்படுத்தியது. அந்த அணுகுமுறைகளை சுய விமர்சனத்திற்குட்படுத்தல் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைத்தன்மைக்கு வலுச்சேர்க்குமே தவிர அடிப்படைத்தன்மையிலிருந்து விலகப்போவதில்லை. தமிழ்த்தேசியம் பிரத்தியேக அல்லது தவிர்த்தல் தன்மையை (மற்றவர்களின் இருப்பைத் தவிர்த்து அல்லது நிராகரித்து தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்படவில்லை) கொண்டதல்ல என்பதற்கு உதாரணமாக வடக்கிலிருந்த முஸ்ஸிம்களை வெளியேற்றியதை தவறென்று சுட்டிக்காட்டினார், அதேபோல் வடக்கு – கிழக்கில் பாரம்பரியமாக முஸ்ஸிம்கள் இருந்த இடத்தில் அவர்கள் மீள் திரும்ப வேண்டும் என்பதற்காக உழைத்த அதே நேரத்தில் முஸ்ஸிம்களின் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கவும் தவறவில்லை. வடக்கு – கிழக்கில் பாரம்பரியமாக இருந்த சிங்கள மக்களை வரவேற்றார். ஆனால், வடக்கு – கிழக்கு சிங்கள மயப்படுத்தலை எதிர்த்தார். தமிழ்த்தேசியத் தன்மை இன்னொரு குழுமத்தின்  கூட்டுரிமையை மறுப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ இல்லை என்பதோடு மட்டுமல்ல அவற்றை வலுவூட்டுவதாகவும் அமைந்திருந்தது.

தமிழ்த்தேசியத்தை பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணியாக அரசியல் கட்டமைப்புச் செய்ய முற்பட்ட போது தமிழ்த்தேசியம் அடக்குமுறைக்கெதிர்வினையாக எழுச்சி பெற்றதே எனவும் தமிழ்த்தேசியம் சிங்கள – பௌத்த மக்களுக்கெதிரானதும் அல்ல, முஸ்ஸிம் மக்களுக்கும் எதிரானது அல்ல, அது சிங்கள – பெளத்த அடக்குமுறைக்கெதிரானது. ஆனால், ஸ்ரீலங்காவின் தேசிய ஊடகங்கள் அவ் உண்மைகளை மழுங்கடித்து மறைந்த ஆயரை சிங்கள, முஸ்ஸிம் மக்களினங்களுக்கு எதிராக கட்டமைத்ததை வரலாறு ஒருபோதும் மறக்காது. உண்மை, நீதி மறுக்கப்படும் போது குரல் கொடுத்ததை புலிகளும் ஏற்றுக்கொள்வர். புலிகள் தொடர்பில் அவர்களுடைய அணுமுறை தொடர்பான விமர்சனத்தை முன்வைத்து அவர் எழுதிய கடிதங்கள் சாட்சியம் கூறும். தீவிரவாதியாக, பயங்கரவாதியாக சித்தரித்து மக்களிடமிருந்து ஆயரை அந்நியப்படுத்துவதற்கான முயற்சியை ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டிருந்ததை மக்கள் அனைவரும் அறிவர்.

பல்சமய உரையாடல் முன்னெடுப்புக்கள் மூலம் ஏனைய இன, மதங்களுக்கிடையே தமிழின ஆதரவு அலையை திரட்டுவதன் மூலம் தமிழின அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை முன்னெடுக்க முடியும் என நம்பினார். பல தெற்கு முற்போக்கு சக்திகளுடனான உரையாடல்களிலிருந்து, முற்போக்குச் சிந்தனையுள்ள சக்திகளின் கூட்டிணைவு தமிழின விடுதலைக்கு இன்றியமையாதது என கூறி வந்ததும் அவற்றை ஒருங்கிணைத்து தமிழின அழிப்பு பற்றியும், தமிழின அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தார். ஆயரின் தமிழின படுகொலை கோரிக்கையை சர்ச்சைக்குரியதாக்கி அதிலிருந்து அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களை அறிந்திருந்தும், தமிழின படுகொலை கோரிக்கையையும் சர்வதேச விசாரணையூடு மாத்திரமே நீதி கிடைக்க முடியும் என்பதிலே உறுதியாய் இருந்தமை விமர்சனத்திற்குரியதாய் இருந்தும் இறுதிவரைக்கும் தனது முடிவிலே உறுதியாய் இருந்தமை அவரைக் காணச் சென்ற பலருக்கு தெரிந்திருக்கும்.

தமிழ்தேசிய அடிப்படைப்பண்புகளை வலுப்படுத்திக்கொண்டே தமிழின விடுதலையை அடைய முடியும் என கருத்தாய் இருந்தது மட்டுமல்லாமல், வடக்கு – கிழக்கு ஒன்றிணைந்த தாயகம் பற்றிய கனவை பல்வேறு ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கூடாக செயற்படுத்த முயன்றார். ஒருங்கிணைக்கப்பட்ட தேசத்திலிருந்து  தமிழின அரசியல் தீர்வு அணுகப்பட வேண்டும் எனவும், ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு முற்றாக சாத்தியமற்றது என இடித்துரைத்து, சமஸ்டி முறையினூடான அவசியத்தை முன்வைத்தார். ஒற்றையாட்சி ஜனநாயக முறைமையின் ஒவ்வாத்தன்மையையும், அதன் தோல்வியையும், கொழும்பு மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதையும் பெரும்பான்மைவாத ஜனநாயகத் தன்மைமையையும் சிக்கலுக்குட்படுத்தி ஸ்ரீலங்கா பல் தேசிய ஜனநாயக முறைமையை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

‘ஈழத்தமிழ் தன்மைதான் தமிழின அடையாள கட்டமைப்புக்கு அடிப்படை நாதமாக உள்ளதென நம்பிக்கைக் கொண்டு அந்த அடையாள அடிப்டைத் தன்மை வலுவிழந்துவிடாது தக்க வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் அவரை அடையாள அரசியல் செய்கின்றார் என பழி சுமத்தப்பட்டதும் நினைவில் இருக்கும்.

ஆயரை தமிழ்தேசியத்தில் இருந்து அந்தியப்படுத்த வேண்டும் என்ற ஸ்ரீலங்கா அரசின் செயற்திட்டத்துக்கான ஒரு உதாரணத்தை மட்டும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆயரின் உடல் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது ஆயரில்லத்துக்கு வெளியே சிவப்பு, மஞ்சள் வர்ணத்தில் வீதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய இறுதி ஊர்வலமான திங்கட்கிழமை இராணு வாகனத்தில் வந்த இராணுவத்தினரால் அவை அகற்றப்பட்டதற்கு பலர் சாட்சி. அவருக்காக வழங்கப்பட்ட இரங்கல் உரைகள் பெரும்பாலுமே அவரைத் தமிழ்த்தேசியத்திலிருந்து அந்நியப்படுத்தி குறிப்பிட்ட மதத்தலைவராக கட்டமைக்கப்பட்ட சொல்லாடல் பயன்படுத்தல்களையும், அவர் முதன்மையாக முன்வைத்த ஈழத்தமிழ்த் தன்மை அடையாளத்தை முன்வைத்து சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புக்கோரிக்கை ஒரேயொரு தடவை மட்டும் உச்சரிக்கப்பட்டதையும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலினுடைய பிரதிபலிப்பாகவே கொள்ள வேண்டியிருக்கும்.

அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்த்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~
2009ற்கு பின்னர் அரசியல் கதாநாயக தன்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தோடு ஒன்றி கட்டமைக்கப்பட்டு, பிரதிநிதியைச் சுற்றித் தொண்டர், பின்பற்றுபவர் வட்டத்தை உருவாக்குகின்ற தன்மை தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். தலைமைத்துவத்திற்கும் கதாநாயகத் தன்மை உருவாக்குகின்ற கதாநாயகர்களில் தங்கியிருக்கின்ற தொண்டர் தன்மைக்குமிடையே பாரிய வெளி இருக்கின்றதை அறிகின்ற போது கதாநாயகர்கள் தலைவர்களாக இருக்க முடியாது என்பதை தீர்மானிக்கலாம். அதேவேளை தலைமைத்துவம் தொண்டர்களை உருவாக்க முடியாது. அரசியல் கதாநாயகத் தன்மையில் மேலோங்கியிருப்பது ‘விரைவான பழுது நீக்கும் தன்மையே’ (Quick Fix).

அது பெரும்பாலும் மீட்பர் மனப்பான்மையில் கட்டமைக்கப்பட்டதாய் அமைந்திருக்கும். மீட்பர் மனப்பாங்கு அடிப்படையில் காலணித்துவ தன்மை கொண்டது. மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையில் மக்களுக்கும் கதாநாயகனுக்கமிடையிலான அந்நியத் தன்மையை அவர்களை கதாநாயகர்களாக கட்டமைக்கின்றது. அரசியல் கதாநாயகத் தன்மை தமிழ்த் தேசியத்துடன் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்போராட்டத்தில் நீண்டகால அர்ப்பணிப்பு அவசியமாகின்றது, கதாநாயகத் தன்மையில் அப்படியில்லை. தமிழ்த்தேசிய வெளியில் அரசியல் கதாநாயகர்களின் உடனடி பழுது நீக்கும் முறைமை செல்லுபடியற்றது.

ஆயர் நீண்டகால அர்ப்பணிப்புடனான தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராதலால் தான் அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்க்க முற்பட்டார்.

-எழில் ராஜன்

-மாற்றம் இணையம்

வீரவேங்கை கிளிமொழி -எரிமலை

கிளிமொழி...
~~~~~~~~~~~~
சுடுகருவி தாங்கிய வீரர்களோடு சுடமுடியாத கருவி கொண்டு களமுனையெங்கும் உலாவந்தாள்....

களப்புலிகள் வீரத்தைக் கமராக்குள் சிறைப்பிடிக்க நெருப்பு மழைக்குள்ளும் நிமிர்ந்திவள் நின்றாள்.....

இவள் சிந்தனைத் தூரிகைகள் வரைந்த அந்த ஒளிஓவியங்கள் உலகத் திசையெங்கும் தாயக வீரத்தை முரசறைந்து கொண்டிருக்கும்.......

வேதனையில் வாடுகின்ற உறவுகளின் கோலங்களை வெளியுலகெங்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். பொய்தனைப் பரப்பும் பகைவனின்
செய்தியைப் பொய்களாக்கும்.......

வரிப்புலிகள் சேனைக்குள் கலைப்புலியாய் இவள் மிளிர்ந்தாள் களம்நடுவே கமராவுடன் இவள் மடிந்தாள்.......

வரலாற்றைப் பதியும்வேளை வரலாறாய் வீழ்ந்தவளே... நீ பதித்த காலப் பதிவுகள் போல் என்றும் நீ வாழ்வாய் - எம்மோடு.

எங்கள் நெஞ்சில் உந்தன் தாகம் உந்தன் சுவட்டில் எங்கள் பாதம்....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ஓயாத அலைகள் -3 நடவடிக்கையின்போது மாமுனை, குடாரப்பு பகுதியில் தரையிறங்கி கண்டி வீதியை ஊடறுத்து நிலை எடுத்திருந்த வேளை சிறீலங்காப் படையினருடன் நடைபெற்ற மோதலைப் படம்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

-செந்தோழன்

களப்படப்பிடிப்பாளர் வீரவேங்கை கிளிமொழி
(சடாச்சரம் - செல்வலட்சுமி) 
மாதகல் - யாழ் .
பிறப்பு - 03.09.1981 
வீரச்சாவு - 02.04.2000

 -எரிமலை இதழ் நவம்பர் 2000

வாழ்வு தந்து போனவர் -அன்பு

வாழ்வு தந்து போனவர்.
~~~~~~~~~~~~~~~~~~~~
09.01.1997 நடுநிசி தாண்டிய அதிகாலைவேளை. ஆனையிறவு பரந்தன் கூட்டுப் படைத் தளத்தினூடு புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்கு தலுக்கு சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள்,உப்பு வெளிகள், சிறிய - சிறிய உவர் நீர்க் கடல்கள், இப்படித் தான் இருந்தது அந்தச் சூழல். எனினும் முகாமின் முக்கியத்துவம் நன்கு உணரப் பட்டிருந்தது. போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடன், "எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டும்” என்ற மன உறுதியுடன் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடு ஊர்ந்து கொண்டிருந்தனர். அது ஒரு நீண்ட நகர்வு. புலிகளின் போரியல் வரலாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காக, சண்டையை எதிர் பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத் தக்கது. எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிய நகர்வு. எங்காவது
எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்து கொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிரும் கேள்விக்குறியாகும் நிலை.

அங்கே நகர்ந்து கொண்டிருந்த அணிகளில் ஒரு அணியாகத்தான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அந்தக் குறிப்பிட்ட அணியும் நகர்ந்து கொண்டிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுடையதாக இருந்தது சிக்கலான அவர்களின் அன்றைய பணியில் எமக்குக் கிடைக்கப் போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கி நிற்கிறது.

சண்டை தொடங்கிவிட்டிருந்தது. அவர்களுக்குரிய பாதை வழியாக அந்தக் குறிப்பிட்ட அணியும் சண்டையத் தொடங்கியிருந்தது. முட்கம்பி வேலிகளை 'டோப்பிட்டோ' குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்து
கொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத் துப்பாக்கிகள் இவர்களை நோக்கிச் சடசடக்க; அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை தெரிந்தது அவர்களுக்கு.

ஆம் ஏற்கனவே எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளைவிட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள்த் தடையை எதிரி அமைத்திருந்தான். 'செக்கன்'களும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஒரு இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையை தாண்டி உள்நுழையா விட்டால் எதிரி தன்னைத் தயார்ப் படுத்தக்கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமல் கூடப் போய்விடும். புதிதாகக் கிடந்த தடையை உடைக்க 'டோப்பிட்டோ'வும் கைவசம் இல்லாத நிலை. மாற்று வழிகளை பரிசீலிக்கக்கூட நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச்சென்ற எங்கள் தோழனும் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவைபட்டு வீழ்ந்துவிட, எதிரி அந்த இடத்தில் முட்கம்பிகள் வெட்டப்படாமல் இருப்பதையும், நாம் அவற்றை வெட்ட முயற்சிப்பதையும் கண்டு
கொண்டான். அவன் தன் முழுச் சூட்டு வலுவையும் இப்போது அங்கே மையங்கொள்ள வைத்தான். அது ஒரு வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல், அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஒரு அணி அங்கே தடையை உடைக்க  முடியாமல் நிற்க, தனியொருவனாய் சஜந்தன் நிலைமையை மாற்றியமைத்தான்.

அந்தத் தடையை அகற்ற வேண்டிய தேவையை அவன் உணர்ந்ததால், அன்றைய சண்டையின் முடிவு கண்களில் பட அவன் அவ்வாறு முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட் கம்பிச்சுருளின் மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின்மேல் அவன்கிடக்க, அவன் அமைத்துத் தந்த அந்த உயிர்த்துடிப்பான அந்தப் பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.

அவனது அணி தனக்குக் கொடுக்கப் பட்ட எதிரிப் பகுதியை பிடித்துக் கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழவேண்டியவர்களாய் இருந்த நிலைமாறி அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக் கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக்கணக்கான எதிரிகளை நாம் வீழ்த்தியிருந்தோம். எதிரியின் பீரங்கிகளை அழித்திருந்தோம். அந்த வெற்றிக்கு வழி சமைப்பதற்காக தன் உடலால் வழிசமைத்தவன் எங்கள் சஜந்தன்.

உடலின் ஒவ்வொரு உயிர் அணுக்களும் வேதனையால் துடிக்க, அத்தனை வேதனை உணர்ச்சி களையும் தாங்கி எதிரியின் முட் கம்பித் தடையின் மீது பாய்ந்து தோழர்களுக்கு வழிசமைத்தவனின் வீரம் அத்தனையும் அன்றைய சண்டையின் வெற்றிக்காய், அந்த வெற்றியால் தீர்மானிக்கப்படும் அவன் நேசித்த மக்களின் வாழ்விற்காய்.

"எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத் திலிருந்தே பிறக்கின்றது" என்ற தலைவர் அவர்களின் கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன், பின் ஜெயசிக்குறு சமரில் வித்தாகிப் போனான். இவன் போன்ற போராளி களின் தியாகங்களே இன்றும் தொடரும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.

- அன்பு 
-சூரியப்புதல்வர்கள் 1999.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்