Sunday 13 April 2014

நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு தை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”
“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே!
சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 சுழலாண்டு முறையும் பார்ப்பனியம் திணித்த அறிவுகெட்ட முறையாகும்.
இதையும் ஆய்வு செய்து நம் அறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலை யடிகள் தலைமையில் அக்கூட்டம் நடந்தது. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது.
திருவள்ளுவர் காலம் கி.மு. 31, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்யப் பட்டது. பின்னர் 18.11.1935இல் திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்குத் தலைமை வகித்த மறைமலையடிகள் மீண்டும் இதை உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு கிருத்து ஆண்டுடன் 31ஐக் கூட்டிக் கணக்கில் கொள்ள வேண்டும். 2014 + 31 = 2045
நாமும் இதைச் செயல்படுத்துவோம்.

தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான் – பாவாணர்

ஆம் தோழர்களே, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழா இரண்டும் தை முதல் நாளே.

Saturday 12 April 2014

தமிழீழ விடுதைப் புலிகள் இயக்கத்தில் நாட்டுக்காக உயிர் நீத்த இஸ்லாமிய மாவீரர்கள் பாகம் : 1

1 வீரவேங்கை சாபீர் சரிபுதீன் முகமட் சாபீர் தியாவெட்டுவான், மட்டக்களப்பு. நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சாபீர் இயற்பெயர்:சரிபுதீன் முகமட் சாபீர் பால்:ஆண் ஊர்:தியாவெட்டுவான், மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரச்சாவு:13.05.1988 நிகழ்வு: நாசிவன்தீவில் ரெலோ கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு 2 வீரவேங்கை ரகீம் நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: ரகீம் வீரச்சாவு:08.05.1986
3 வீரவேங்கை உஸ்மான் கிழங்கு அப்துல்காதர் சாதிக் யாழ்ப்பாணம். நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: உஸ்மான்கிழங்கு இயற்பெயர்: அப்துல்காதர் சாதிக் பால்: ஆண் ஊர்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:10.05.1966 வீரச்சாவு:25.08.1986 நிகழ்வு: யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடன் சமரில் வீரச்சாவு 4 வீரவேங்கை லத்தீப் முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: லத்தீப் இயற்பெயர்:முகமது அலியார் முகமது லத்தீப் பால்:ஆண் ஊர்: ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரப்பிறப்பு: 16.11.1962 வீரச்சாவு: 24.12.1986 நிகழ்வு:மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ பி ஆர்எல் எப் கும்பல் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
5 கப்டன் பாறூக் அகமதுலெப்பை முகமது கனீபா அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு: 07.01.1987 6 கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய், திருகோணமலை. நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன் பால்:ஆண் ஊர்:பேராறு, கந்தளாய், திருகோணமலை. மாவட்டம்:திருகோணமலை வீரச்சாவு:28.04.1987 நிகழ்வு:திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு 7 வீரவேங்கை ரகுமான் நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:ரகுமான் வீரச்சாவு:08.05.1986 8 கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய், திருகோணமலை. நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன் பால்:ஆண் ஊர்: பேராறு, கந்தளாய், திருகோணமலை. வீரச்சாவு: 28.04.1987 நிகழ்வு: திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு 9 வீரவேங்கை சலீம் வீரச்சாவு:03.07.1987 நிகழ்வு: அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு 10 வீரவேங்கை நசீர் இயக்கப் பெயர்: நசீர் இயற்பெயர்: முகமட் நசீர் பால்:ஆண் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:15.03.1963 வீரச்சாவு:30.12.1987 நிகழ்வு:மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
11 வீரவேங்கை நகுலன் இயக்கப் பெயர்: நகுலன் இயற்பெயர்:யுனைதீன் பால்:ஆண் ஊர்:அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு:26.06.1988 நிகழ்வு:அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு 12 வீரவேங்கை நசீர் இயக்கப் பெயர்:நசீர் இயற்பெயர்:சம்சுதீன் நசீர் ஊர்:ஒலுவில், அம்பாறை. வீரப்பிறப்பு 19.02.1960 வீரச்சாவு:17.02.1989 நிகழ்வு: மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு 13 வீரவேங்கை ஜெமில் ஜெயாத் முகமது உசைதீன் இயற்பெயர்:ஜெயாத் முகமது உசைதீன் ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:28.03.1968 வீரச்சாவு:05.08.1989 நிகழ்வு: மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியில் இந்தியப்படையினருடனான சமரில் வீரச்சாவு 14 வீரவேங்கை சியாத் நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சியாத் இயற்பெயர்:மீராசாகிபு காலிதீன் ஊர்:சாய்ந்தமருது, அம்பாறை. வீரப்பிறப்பு:18.08.1972 வீரச்சாவு:06.12.1989 நிகழ்வு: பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவு 15 2ம் லெப்டினன்ட் சாந்தன் நைனா முகைதீன் நியாஸ் இயக்கப் பெயர்: சாந்தன் இயற்பெயர்:நைனா முகைதீன் நியாஸ் ஊர்: நிலாவெளி, திருகோணமலை. வீரப்பிறப்பு:17.05.1972 வீரச்சாவு:06.02.1990 நிகழ்வு: திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ என் டி எல் எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு 16 வீரவேங்கை அலெக்ஸ் இயக்கப் பெயர்: அலெக்ஸ் இயற்பெயர்:அகமட் றியாஸ் ஊர்:மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:23.01.1970 வீரச்சாவு:04.05.1990 17 வீரவேங்கை சுந்தர் (சந்தர்) அகமட் லெப்பை செப்லாதீன் இயக்கப் பெயர்: சுந்தர் (சந்தர்) இயற்பெயர்:அகமட் லெப்பை செப்லாதீன் ஊர்:வேப்பானைச்சேனை, அம்பாறை வீரப்பிறப்பு: 25.02.1973 வீரச்சாவு:25.05.1990 18 வீரவேங்கை கமால் மட்டக்களப்பு வீரச்சாவு:07.06.1990
19 வீரவேங்கை தாகீர் இயக்கப் பெயர்: தாகீர் இயற்பெயர்:முகைதீன்பாவா அன்சார் ஊர்: திருகோணமடு, பொலனறுவை, சிறிலங்கா வீரப்பிறப்பு:29.04.1972 வீரச்சாவு:11.06.1990 நிகழ்வு: மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு 20 வீரவேங்கை கபூர் இயற்பெயர்:முகமதுஅலியார் முகமதுசலீம் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு. வீரச்சாவு:11.06.1990 நிகழ்வு: மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
21 லெப்டினன்ட் ஜெமில் இயற்பெயர்:கரீம் முஸ்தபா ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990 நிகழ்வு:திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
22 வீரவேங்கை தௌபீக் இயற்பெயர்:இஸ்மாயில் ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990 நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
23 வீரவேங்கை ஜிவ்றி இயற்பெயர்:முகம்மது இலியாஸ் ஊர்:4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:05.03.1974 வீரச்சாவு:13.06.1990 நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலையில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
24 வீரவேங்கை தர்சன் இயற்பெயர்:அப்துல்காதர் சம்சி வீரச்சாவு:13.06.1990
25 வீரவேங்கை கலையன் இயக்கப் பெயர்: கலையன் இயற்பெயர்:கச்சுமுகமது அபுல்கசன் ஊர்:1ம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. வீரச்சாவு:14.06.1990 நிகழ்வு: சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
26 வீரவேங்கை அன்வர் வீரச்சாவு:15.06.1990 நிகழ்வு: பாணமையில் சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முகாமை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
27 வீரவேங்கை ஜெகன் இயற்பெயர்:ஆப்தீன் முகமட் யூசுப் ஊர்:குச்சவெளி, திருகோணமலை. வீரப்பிறப்பு:08.04.1972 வீரச்சாவு:15.06.1990 நிகழ்வு: திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
28 வீரவேங்கை குபீர் ஊர்:அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு:15.06.1990 நிகழ்வு: பாணமையில் சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முகாமை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு 29 வீரவேங்கை ராவ் இயக்கப் பெயர்: ராவ் இயற்பெயர்:முகமது ரபீக் ஊர்:பொத்துவில், அம்பாறை. வீரச்சாவு:15.06.1990 நிகழ்வு: லகுகலவில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
30 வீரவேங்கை நியாஸ் ஊர்:மூதூர், திருகோணமலை வீரச்சாவு:17.06.1990 நிகழ்வு: மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
31 வீரவேங்கை மஜீத் இயற்பெயர்:முகமது இஸ்காக் கூப்சேக்அலி ஊர்:மீராவோடை, மட்டக்களப்பு. வீரச்சாவு:18.06.1990 நிகழ்வு: வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
32 வீரவேங்கை ஜின்னா இயற்பெயர்:லெப்பைதம்பி செய்னூர் ஊர்:ஓட்டமாவடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:20.10.1970 வீரச்சாவு:19.06.1990 நிகழ்வு: அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கித் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
33 வீரவேங்கை டானியல் இயற்பெயர்:கனீபா முகமதுராசீக் ஊர்:திருகோணமலை. வீரப்பிறப்பு:23.06.1970 வீரச்சாவு:22.06.1990 நிகழ்வு: திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
34 வீரவேங்கை ஹனியா இயற்பெயர்:அபுசாலி புகாரி ஊர்:அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு:15.07.1990 35 வீரவேங்கை நிர்மல் இயற்பெயர்:அப்துல நசார் ஊர்:புடவைக்கட்டு, திருகோணமலை. வீரப்பிறப்பு:19.01.1972 வீரச்சாவு:27.07.1990 நிகழ்வு: திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு

............தொடரும்


புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !

Wednesday 9 April 2014

நீந்திக் கடந்த நெருப்பாறு பகுதி :7

வோக்கியின் அருகில் தூக்கமும் விழிப்புமான சலன நிலையில் அமர்ந்திருந்த புனிதன் நீண்ட நேரமாக வெளியே போன சிவம் திரும்ப வராத காரணத்தால் எழுந்து வெளியே வந்து பார்த்தான்.
வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவத்திடம் “என்னண்ணை.. தனிய இருந்து கடுமையாய் யோசிக்கிறியள்?” எனக் கேட்டான்.சிவம் அவனைப் பார்க்காமலே, “கணேசுக்கு பயப்பிடுற மாதிரி ஒண்டும் நடவாது”, என்றான்.
புனிதனுக்கு எதுவுமே புரியவில்லை, “என்னண்ணை சொல்லுறியள்”, எனத் தடுமாற்றத்துடன் கேட்டான்.
அப்போது தான் சிவம் தன்னையறியாமலே ஏதோ நினைவுகளில் உளறிவிட்டதை உணர்ந்தான். பின்பு சமாளித்தவாறே, “கணேசுக்கு கொஞ்சம் கடுமையான காயம்” அதுதான் யோசினையாக் கிடக்குது” என்றான்.
புனிதன் சற்று நேரம் யோசித்துவிட்டு, “ரூபாக்காவுக்கு தெரியுமே?” என ஒருவித தயக்கத்துடன் கேட்டான்.
“இல்லை தெரியாது… அவ இப்ப பூநகரியில நிக்கிறா” என்றான் சிவம்.
கணேசும் ரூபாவும் அடிக்கடி சந்திப்பதில்லை. அவர்கள் சந்திப்பதற்காக ஒருவரைத் தேடி மற்றவர் போவதுமில்லை. ஆனால் சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நீண்ட நேரம் நிறையவே கதைப்பார்கள்.
எனினும் முகாமிலுள்ள அத்தனை போராளிகளுக்கும் அவர்களின் காதல் பற்றியும் கணேஸ் அவளில் வைத்துள்ள ஆழமான பாசம் பற்றியும் நன்கு தெரியும்.
எல்லோரையும் விட அவளின் காதலின் வலிமை பற்றி சிவம் நன்றாகவே புரிந்திருந்தான்.
கணேசின் தாயும் தகப்பனும் அவன் சிறுவனாக இருந்த போதே தென்னிலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது கொல்லப்பட்டுவிட்டனர். உறவினர் வீட்டில் வளர்ந்த அவன் பத்து வயதிலேயே தேனீர்க் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். பின் பல இடங்களிலும் மாறி மாறி வேலை செய்தான். பல வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்த போதுதான் போராட்டம் பற்றிய எண்ணங்கள் அவன் மனதில் படிய சில நாட்களில் அவன் போராளியாக இணைந்து கொண்டான். பாசமே என்னவென்று தெரியாமல் வளர்ந்த அவனுக்கு ரூபாவின் அன்பு கிட்டிய போது அந்த எண்ணங்கள் கூட எல்லையற்ற இன்பத்தைக் கொடுத்தன.
தங்கள் காதலை மற்றவர்களிடம் சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைந்தான். அவன் ரூபாவின் கெட்டித்தனங்கள் பற்றிப் பேசத் தொடங்கினால் வெகு சிரமப்பட்டே நிறுத்தவேண்டி வரும்.
ஒரு நாள் தானும் கணேசும் கதைத்தது சிவத்தின் ஞாபத்திற்கு வந்து உதைத்தது.
“நான் ரூபாவை எவ்வளவு நேசிக்கிறான் எண்டு தெரியுமே?”, சிவம் மெல்லிய சிரிப்புடன் கேட்டான்,
“அது நீ சொல்லியே தெரியவேணும்?”
“சிவம் எனக்கு அன்பு எண்டால் என்ன எண்டத உணர்த்தினவள் அவள் தான். அவள் எண்டைக்குமே கவலைப்படக் கூடாது”
“அப்பிடியெண்டால்..?”
கணேஸ் ஒரு சிறிய மௌன இடைவெளியின் பின்பு சொல்ல ஆரம்பித்தான், “நான் தற்செயலா வீரச்சாவடைஞ்சா நான் இல்லாத குறையை அவள் உணரக் கூடாது. என்ர இடத்த நீ தான் நிரப்ப வேணும்”
“சிவத்தின் குரலில் கோபம் ஏறியது” என்னடா மடைக் கதை கதைக்கிறாய்?.. காதல் என்னடா கால் செருப்பே அடிக்கடி மாத்த?”
“நான் அவளில வைச்சிருக்கிற அன்பையும் அவள் என்னில வைச்சிருக்கிற அன்பையும் நல்லாய் புரிஞ்சவன் நீ.. ஆனபடியால்..”
“உந்தக் கதையை நிப்பாட்டு பாப்பம்”
“கணேஸ் பரிதாபமாகக் கேட்டான்.. “அப்ப.. நீ வேற.. நான் வேற எண்டு நினைக்கிறியே?”
“இல்லை.. ஆனால் அது வேறை.. நீ கேக்கிறது வேறை”
சிவத்தின் குரலில் கடுமை ஏறியிருந்தது.
“அப்ப.. நான் வீரச்சாவடைந்தால்…” என்று ஏதோ சொல்ல முற்பட்ட கணேசை இடை மறித்த சிவம், “அதுக்கு முதல் நான் வீரச்சாவடைஞ்சிடுவன்… அதால அந்தப் பிரச்சினைக்கு இடமில்லை” என்றுவிட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்தான் சிவம்.
“சிவம்.. நான் இனி அதைப் பற்றிக் கதைக்கமாட்டன். ஆனால் என்ர விருப்பத்தை நிராகரிக்க மாட்டாய் எண்டு நம்பிறன்”, என்றுவிட்டு அவனும் எழுந்தான்.
மீண்டும் சிவம் மௌனமாகி விட்ட நிலையில், “என்னண்ணை பிறகும் யோசிக்கிறியள், அவருக்கு ஒண்டும் நடக்காது.. போய்ப் படுங்கோ”, என்றான் புனிதன்.
“ம்.. பாப்பம்”, என்றுவிட்டு எழுந்தான் சிவம்.
அன்று பால் கொடுப்பதற்காகப் பரமசிவம் அண்ணாவியார் முத்தையா கடைக்குப் போன போது அந்த இடமே கலகலப்பாக காட்சியளித்தது. ஒவ்வொருவரும் தாங்களே போய் சண்டை பிடிச்சு, முள்ளிக்குளத்திலிருந்து இராணுவத்தை விரட்டி விட்டது  போன்று  பெருமையடித்துக் கொண்டிருந்தனர்.
பரமசிவம், “எல்லாரும் வெற்றியப் பற்றிக் கதைக்கிறியள்.. அந்த வீரச்சாவடைஞ்ச பொடியளப் பற்றி ஆரும் கவலைப்பட்டியளே? எனக் கேட்டார்.
முருகேசர் ஒரு மெல்லிய செருமலுடன்..“தியாகங்கள் இல்லாமல் வெற்றி வருமே?” என்று தத்துவம் பேசினார்.
“உன்ரை பொடியன் செத்திருந்தால் நீ உப்பிடிக் கதைப்பியே” எனக் கேட்டார் பரமசிவம்.
“அவர் இரண்டு பொடியளையும் சவுதிக்கும், கட்டாருக்கும் அனுப்பிப்போட்டார். அவர் கட்டாயம் தியாகம் பற்றிக் கதைப்பர் தானே? என நக்கலடித்தார் கதிரேசு.
“கதிரேசு. அப்பிடிக் கதையாத.. வெளிநாட்டில இருக்கிற எங்கட சனம் அனுப்பிற காசில எங்கட போராட்டத்துக்கு நிறைய பலன் கிடைக்குது தெரியுமே?” என்றார் பரமசிவம் சற்றுக் கண்டிப்புடன்.
“ஆமாங்க.. நாம எல்லாம் ஒவ்வொரு பக்கம் உதவி செஞ்சுறதால தானுங்களே,. நாம வெல்ல முடியுது என்றார் முத்தையா தேநீரை இழுத்து ஆற்றியவாறே”?
முள்ளிக்குளத்திற்கு இராணுவம் முன்னேறிய போது, எங்கே தாங்களும் இடம்பெயர வேண்டி வருமோ என அஞ்சிக் கொண்டிருந்த பாலம்பிட்டி மக்கள் அந்த வெற்றியைத் தமக்கு கிடைத்த பெரும் விமோசனமாகவே கருதினர். அந்த மகிழ்ச்சி ஒவ்வொருவர் முகங்களிலும் மின்னியது.
பரமசிவம் கேட்டார், “எங்களுக்காக பொடியள் இவ்வளவு கஷ்டப்பட்டு தியாகங்கள் செய்து ஆமியை கலைச்சிருக்கிறாங்கள். நாங்கள் ஏதாவது சந்தோஷமா செய்ய வேண்டாமே?”
“அது தானே முருகர் ஒரு பெரிய தாட்டான் மரையை வேட்டையாடிக் குடுத்திருக்கிறாரல்லே”, என்றார் கதிரேசு.
“அது முருகர் குடுத்தது. நாங்கள் என்ன செய்யப்போறம்?”
“பலகாரம் செஞ்சு அனுப்பிடலாமே?” என்றார் முத்தையா.
“அது நல்ல யோசினை தான். ஆனால் கடைசி மூண்டு கடகங்களிலையெண்டாலும் செய்தனுப்ப வேணும்”, என்றார் பரமசிவம்.
முருகேசர் திடீரெனக் குறுக்கிட்டார், “மூண்டென்ன, ஐஞ்சு கடகம் செய்வம்… அரைவாசிக் காசை நான் பொறுக்கிறன்.
கதிரேசர் உற்சாகத்துடன்..“மிச்சக் காசை நாங்கள் போடுவம்” என்றார்.
முத்தையாவும் தனது பங்குக்கு பலகாரம் செய்யும் வேலையை தானே முழுமையாகச் செய்வதாக ஏற்றுக்கொண்டார்.
பயித்தம்பணியாரமும் பனங்காய்க்காயும் பருத்தித்துறை வடையும் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
பரமசிவம் அளவற்ற மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தார். தேவையான பயறு முழுவதையும் தானே தருவதாக வாக்களித்திருந்தார். இதற்காகவே தனக்கு பயறு அமோக விளைச்சல் கொடுத்ததாக அவர் கருதினார்.
அவர் திரும்பி வரும் போது வழியில் வேலம்மாளைக் கண்டார். அவளும் முத்தம்மாவும் தோட்டத்திற்குப் போயிருப்பார்கள் என்றே அவர் நினைத்திருந்தார்.
“என்ன.. நீ மிளகாய் பிடுங்கப் போகேல்லயோ?.. எனக் கேட்டார் அவர்.
“இல்லையையா.. இவருக்கு கடுமையா இழுக்குது. ஆஸ்பத்திரிக்கு கூட்டுக் கொண்டு போகப்போறன்.
“என்னத்தில கூட்டிக்கொண்டு போகப் போறாய்?”
“நடந்து தான்”
“ஏலாத மனுஷன் நடக்குமே! நான் சைக்கிளை குடுத்து சுந்தரத்தை அனுப்பிறன். அவனோட அனுப்பிவிடு” என்றுவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமலே நடக்கத் தொடங்கினார் பரமசிவம்.
(தொடரும்)
 அரவிந்தகுமாரன்

Friday 4 April 2014

வீர வணக்கம் பிரிகேடியர் தீபன் அண்ணை

பிரிகேடியர் தீபன் - 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா (துரோகி கருணா ) ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

-சாணக்கியன்-