Saturday 16 May 2020

வீரப்பன் மாஸ்டர்

வீரப்பன் மாஸ்டர்
எனது உயிரிலும் மேலான நண்பன். சிவகுமார் எனும் இயற்பெயரைக் கொண்டவன்.
சுழிபுரத்தைப் பிறப்பிடமாகக்கொண்டவன் 
பெண் சகோதரங்கள் நிறைந்த குடும்பத்தில் ஒரேயொரு ஆண்பிள்ளையாகப் பிறந்தவன். 
வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியில் என்னுடன் கூடவே ஒரேவகுப்பில் கல்விபயின்றவன்.

குறிப்பாக, எப்போதும் என்னை நானாக வாழ வழிவகுப்பதற்கு என்னுள்ளே இருந்து என்னை வழிகாட்டிக்கொண்டிருப்பவன்.
என்னை எப்போதும் தூங்கவிடாமல் செய்யும் மாண்புறு மனிதர்களுள் இவன் முதன்மையானவன்.

மனிதர்களில் சிலர்தான் அற்புதமான குணநலன்களைக் கொண்டவர்களாக பிறக்கிறார்கள் அல்லது அவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் அல்லது வளர்க்கிறார்கள் என்கிற எடுகோளை வீரப்பன் மாஸ்ட்டர், எனது உடன்பிறந்த சகோதரன் கேணல் கலையழகன், உடன்பிறவா சகோதரன் இரும்பொறைமாஸ்டர், பாலசுப்பிரமணியன் பொறியாளர் போன்றோரின் வாழ்க்கையை, எண்ணக்கருக்களை, குணநலன்களை அறிந்துகொண்டதிலிருந்தே புரிந்துகொண்டேன்.
நானும் முடிந்தளவு அவர்களாகவே வாழ்ந்திடனும் எனும் கொள்கையை வரிந்துகட்டிக்கொண்டு வாழ்கிறேன்.

வீரப்பன் மாஸ்டர்- அவனை நான் நினைக்காத நாட்கள் இல்லை. 
நான் 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 2 ஆம் ஈழப்போர் தொடக்கத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில், தம்பலகாமத்தில் அமைந்துள்ள எனது சிறிய கிராமம், சிங்கள, முசுலீம் காடையர்களால் முற்றாக சூறையாடப்பட்டு, வீடுகளும், உடமைகளும் கொளுத்தப்பட்டும், பல உறவுகள் படுகொலை செய்யப்பட்டும் சிதைக்கப்பட்டதனால், அங்கிருந்து தப்பியோடிய நான், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், காடுமேடு, கடல் மலைகள் தாண்டி கால்நடையாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். யாழ்ப்பாணம் வந்ததும், எனது இடையில் முறிந்துபோன கல்வியை தொடர்வதற்கு வழிதேடியபோது, 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப்பக்கல்லூரியில் சிவில் பொறியியல் டிப்ளோமா கற்கைநெறியில் சேர்ந்தேன். அது ஒருமாதகாலம் தாமதமாக இருந்தது. எனவே ஒருமாதகால கற்றல் நிகழ்வுகள் நிறைவுபெற்றிருந்தது. 

புதிய மாவட்டம், புதிய முகங்கள், புதிய சூழல், புதிய கல்வி. அனைத்தும் எனக்கு புதிதாகவும், புதிராகவும், மனதில் கிலேசமாகவும் இருந்தது. 
அப்போது என்னை நட்புறவாக அணுகி, என்னை அழைத்துச்சென்று வேண்டிய உதவிகள் புரிந்த ஒருவர் பெயர் சிவகுமார். அவர் புதிதாக சேர்ந்த என்னிடம், முன்வந்து சகஜமாக உரையாடி, வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துதந்ததுடன். என்னென்ன கற்றல் உபகரணங்கள் தேவை என்றும், அவற்றை எவ்வாறு கையாளப்படல்வேண்டும் என்றும், அவற்றை எங்கெங்கு பெற்றுக்கொள்ளலாம் என்றும்,  ஒருமாதம் தாமதமாக சேர்ந்தபடியினால், அதுவரைக்கும் முடிவுற்றிருந்த பாடங்கள், பயிற்சிகள் அத்தனையையும் இடைக்கிடை நேரம்வரும்போது கூட இருந்தே சொல்லித்தந்து அளப்பெரும் உதவிகளை புரிந்தார்.
அதன்பின்னர் அடுத்த மாதத்திலிருந்து சிவகுமார் கல்லூரிவருவதை நிறுத்திக்கொண்டார். அவர் வருகைதராததை எண்ணி மிகவும் கவலையடைத்தேன். 
நானும் பல்வேறு நபர்களிடமும், விசாரித்துப்பார்த்தேன் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக, ஒருசில வருடங்களின்பின்னர் நிலஅளவை விடயமாக எழுதுமட்டுவாள் தென்னந்தோப்புக்கு சென்றவேளை, எனது அணியை, வரிப்புலி உடையணிந்த ஒருவர், அதே உரிமையுடனும் அதே நட்புறவுடனும் வரவேற்று உபசரித்து அங்கும் வேண்டிய உதவிகளை புரிந்த இருவரில் ஒருவர் எனது நண்பன் சிவகுமாரும், இன்னொருவர் திருமாறனும் ஆகும்.

எனது ஆருயிர் நண்பன் சிவகுமார், அவர்தான் பின்னாட்களில் தன்னை ஒரு விடுதலைப்புலி வீரனாக இணைத்துக்கொண்டு, வீரப்பன் மாஸ்டராக வளர்ந்து அங்கே பல்லாயிரம் புலிவீரர்களுக்கு பயிற்சி வழங்கி, பல்வேறு வெற்றிகரமான தாக்குதல்களிலும் பங்குபற்றியிருந்ததுடன், தேசியத்தலைவர் அவர்களின் அன்பையும் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தார். 
வீரப்பன்மாஸ்டர், மேன்மைமிகு விடுதலைப் போராட்டத்திற்கு, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரைக்கும் தண்கடன்பணியை இம்மியும் பிசகாது சிரமேற்கொண்டு தொடர்ந்துவந்துள்ளார்.

சிவகுமார் நினைக்கும் போதெல்லாம்,
எனக்கு இன்றுவரைக்கும் உள்ள விடைகிடையாத கேள்வி என்னவென்றால்,,,
இவ்வளவு இளகிய மனமும், மென்மையான அணுகுமுறையும், அமைதியான சுபாவமும், எல்லோரையும் நேசிக்கும் உள்ளமும் கொண்டவர்களால் எப்படித்தான் போர் ஆயுதங்களை கையிலேந்த முடிந்தது என்பதே,,, 
ஒருவேளை புத்தன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், வரிப்புலி உடைதரித்து முதுகிலே போராயுதம் ஏந்தியவாறுதான் இருந்திருப்பானோ என்கிற எண்ணம் என்னுள்ளே வந்துவந்து போவதுண்டு,,,

நன்றி-நடேசன் திரு

Friday 15 May 2020

முள்ளிவாய்க்காலின் பிரதிபலிப்புகள்(2)

முள்ளிவாய்க்காலின்  பிரதிபலிப்புகள்:

இழந்ததை நினைவில் கொள்வது .(2)

எனக்கு 22 வயதாகிறது. 2009 இல் வலைஞர்மடத்தில் நடந்த யுத்தத்தின்போது எனது வலதுகை முழங்கைக்கு மேல் துண்டிக்கப்பட்டது. காயப்படும் போது எனக்குப் பத்து வயது. எனக்கு வலதுகைப்பழக்கம். கை துண்டிக்கப்பட்ட பின்பு இடதுகையால் எழுதப் பழகுவது மிகவும் கடினமாக இருந்தது. எவ்வளவு முயற்சித்தாலும் எனது எழுத்து அழகாக வரவில்லை. இருந்தாலும், இப்போது எனது தேவைகளை பூர்த்தி செய்யுமளவுக்கு என்னால் இடக்கையைப் பாவிக்க முடிகிறது. நான் சாதாரண தரக் கற்கையை இரண்டு தடவைகள் எழுதி இப்போது உயர்தரப் பரீட்சையும் எழுதி முடித்திருக்கிறேன்.

கைதுண்டிக்கப்பட்டபின் எனக்கு சரியான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. நாங்கள் கப்பல் மூலமாக இடத்தை விட்டு வெளியேறவிருந்தோம். நான் காயப்பட்டவுடன் உடனே மருத்துவ உதவி கிடைத்திருந்தால், கை துண்டிக்கப்பட வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால், மருத்துவ உதவி கிடைத்த வேளையில் எனது கையைத் துண்டித்திருக்காவிட்டால், நான் உயிரோடு இருந்திருப்பேனா என்பது கேள்விக்குறியே.

போர் முடிந்து மறுபடியும் பாடசாலை சென்ற போது என்னால் நேரே வகுப்பறைப் பாடங்களைப் படிக்க முடியவில்லை, முதலாம் தரச் சிறுவர்கள் போன்று முதலிலிருந்து எழுதப் பழ வேண்டிய தேவை இருந்தது. இடது கையால் ஒரு வருடம் எழுதிப் பழகிய பின்னர் தான் பாடங்களைப் படிக்க முடிந்தது. போருக்குள் சிக்கியதால் கையை இழந்தது மட்டுமன்றி, மனதளவிலும் வலுவிழந்து போனதால் படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை.

நான் ஒரு கையை இழந்தவனாக இருந்தாலும், படிக்கும் போது நான் இரண்டு கைகள் உள்ளவன் போலதான் நடத்தப்பட்டேன். வலக்கைப்பழக்கம் இருந்து இடக்கப்பழக்கத்துக்கு மாறியவன் என்ற அடிப்படையில் எனக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. போட்டிகளின் போது கூட நான் இரண்டு கைகளுடையோருடந்தான் போட்டியிடவேண்டியிருந்தது. கைப்பழக்கம் மாற்றுவதென்பது ஒரு இலகுவான விடயமல்ல, அத்துடன் தனியே ஒரு கையுடன் கற்பது என்பது மிகவும் சவாலானது. பரீட்சைகளில் கூட அதிக நேரம் தருவது போன்ற எந்த சலுகையும் எனக்குத் தரப்படவில்லை, அப்படி இருந்தும் நான் இன்று எனது கல்வியை முழுதாக முடித்திருக்கிறேன். உயர்தரத்தில் நான் இப்போது கிடைத்ததை விடவும் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்த்திருந்தேன். ஒருவேளை, அவர்கள் எனது நிலையைக் கருத்தில் கொண்டு ஏதாவதொரு ஏற்பாட்டைச் செய்திருந்தால் ஒருவேளை எனது பெறுபேறுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும். அல்லது நான் என் வலக்கையை இழக்காமல் இருந்திருந்தால் நான் நல்ல பெறுபேறுகளுடன் பல்கலைக்கழகம் சென்றிருப்பேன்.

போருக்கு முன்னர் வன்னிப் பிரதேசத்திலிருந்து பல மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்வார்கள். இப்போது வன்னியிலிருந்து முழுமையாகக் கல்வியை முடிக்கும் மாணவர்களோ அல்லது பல்கலைக்குச் செல்லும் மாணவர்களோ மிகக் குறைவு. இது போரினால் நிகழ்ந்த மாற்றம். போரினால் அங்கவீனமுற்ற மாணவர்கள் அதிகம் பேர் இருந்தாலும், அவர்களுக்குரிய எந்த ஒரு முறையான உதவிகளோ அவர்களது கல்விக்கு உதவும் கட்டமைப்புகளோ இன்னும் இல்லை. கிடைத்த ஒரு சில உதவிகளும் தொண்டு நிறுவனங்களாலோ அல்லது புலம் பெயர்ந்தவர்களின் உதவியாலே கிடைத்தன. ஒரு முறையான திட்டம் இருந்தால் நாங்கள் எமது கல்வியை நிவர்த்தி செய்து கொள்ளவோ ஒரு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவோ முடியும்.

முள்ளிவாய்க்கால் நினைவுகள்

நாம் நல்ல விதைகளை விதைத்துள்ளோம்!  

நாளை நல்ல விளைச்சலை
மட்டுமே தரும்.

நெல்லை விதைத்தால் எள்ளா வரும்?  

நெல்தான் வரும் 

தமிழீழம் வெல்லும்!

தமிழரசன்அப்துல்காதர்

முள்ளிவாய்க்கால் நினைவுகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு.

இன்னும் நீதியை தேடுகிறோம்

இன்னும் காணாமல் போனவர்களைத் தேடுகிறோம்.

இன்னும் பதில்களைத் தேடுகிறோம்.

இன்றுவரை இழந்த உயிர்,உடமை,நிலம்,அதிகாரம் ஆகியவற்றுக்காக துக்கப்படுகிறோம், ஆனால் நாங்கள் இன்னும் நீதி கோருகிறோம்,

கடந்த காலத்திற்கும் ,நடந்துக்கொண்டிருக்கும்  இனப்படுகொலைக்கும்.

தமிழரின் தாகம்!
தமிழீழத் தாயகம்! 

பிரிகேடியர் சொர்ணம் அண்ணை

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:766) 

வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.  என்கிற குறளுக்கொப்ப இறுதி வரை தாம் சிறந்ததொரு படைத்தளபதியாக செயற்பட்டு இந்தநாளில் வீரமரணமெய்திய 

பிரிகேடியர் சொர்ணம் அண்ணைக்கு வீரவணக்கம், வீரவணக்கம்.
தமிழரின் தாகம்!
தமிழீழத்தாயகம்! 

பிரிகேடியர் சசி மாஸ்டர்

எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரம் போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி!

தாங்கள் கொண்ட இலட்சியத்தில் பற்றுக் கொண்டவர்களாக அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது உன்னதமானது !

தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் தளர்ச்சியற்ற பிணைப்பு

அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் அரண்களுக்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.

தமிழீழத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரணுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது.

அப்படிபட்ட ஆபத்தான வழிதடத்தில் களமாடி, வழிநடத்திய மாஸ்டர் சசிக்குமார் அவர்கள் மக்களிடம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமலேயே தாயகத்திற்காக இன்னுயிரை ஈந்தார்.

பன்னாட்டு சக்திகளும் ,சிங்கள அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் இதே நாளில் வீரச்சாவடைந்தார். 

படைத்துறை வரைப்பட தளபதி பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டருக்கு வீரவணக்கம்!
தமிழரின் தாகம்!
தமிழீழத் தாயகம்! 

குமுதினிப்படுகொலைகள்

குமுதினிப்படுகொலை நினைவு நாள் இன்று. 15.05.1985

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற தமிழ்ப்பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
( பத்திரிகை செய்தியின் பின்னர் படுகாயம் அடைந்த மூன்று பேர் இறந்தனர்)

குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானைவரை இப்படுகொலையில் பலியாகினர்.

முள்ளிவாய்க்கால்

தமிழர் எழுந்த நிலம்,
தமிழராய் உணர்ந்த கணம்.

முள்ளிவாய்க்கால்.
முடிவல்ல! 

இனத்தின் வரலாற்றில்
அடுத்த அத்தியாயத்தின் துவக்கம்!


  MULLIVAIKKAL

In the history of the race '

The beginning of the next chapter !

நக்பா வெளியேற்றம் (பாலஸ்தீனம்)

15/5/1948 ல் இதே நாள், 

பாலஸ்தீனியர்கள் நக்பா பகுதியில் இருந்து சியோனிச ஆக்கிரமிப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டதன் 72 ஆம் ஆண்டு நினைவுநாள்,  சர்வதேச நக்பா" நாளாக நினைவு கூறப்படுகிறது,

சியோனிசவாதிகளால்  700000 பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்,

கொலை, கற்பழிப்பு மற்றும்  தொடர்ச்சியான அச்சுறுத்தல் மூலமாக  அதை உள்ளடக்கிய ஒரு பிரச்சாரத்தின் மூலமாக ஒரு பெருவாரியான மனிதக்கூட்டம் தங்கள் வாழ்விடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்ட நாள் இன்று!

  Nakba2020. Palesthine 

Friday 8 May 2020

நந்திக்கடல் தரும் செய்தி

நந்திக்கடல்  தமிழர்களின் எதிர்கால அரசியல் வரைபடத்தை இரு முக்கிய எண்ணக் கருக்களை மையப்படுத்தி எச்சரிக்கையுடன் பதிவு செய்கிறது.

01. புவிசார் அரசியல்
02. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு.

தமிழின அழிப்புடன் தமிழர்களின் இராணுவ – அரசியல் பிரதிநிதிகளை அகற்றுவதன் மூலம் வெளித்தரப்பு இந்து சமுத்திர அரசியலை கையாள ( எண்ணெய்க்கு அடுத்து தண்ணீர்தான் – கடல்தான் உலக அரசியல் – நந்திக்கடல் கோட்பாடுகளின் வடிவமே இதுதான் ) இலங்கைத் தீவில் உள் நுழைவதனூடாக உருவாகும் புவிசார் அரசியலை தமிழர்கள் கையாளும் தந்திரங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பது முதல் எச்சரிக்கை.

அடுத்து நேரடி இன அழிப்பை முடித்த சிங்களம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினூடாக மீதி தமிழர் இருப்பையம் நிர்மூலம் செய்யும் என்பது இரண்டாவது எச்சரிக்கை.

எனவே இவ்விரு தளங்களிலும் காத்திரமான எதிர்வினையை புரியும் சூட்சுமங்களுடன் தமிழர் அரசியல் வரைபடம் வரையப்பட வேண்டும் என்பதே நந்திக்கடலின் எச்சரிக்கையுடன் கூடிய காத்திரமான செய்தி.

தோல்வி மனநிலையிலிருந்து இதை வகுக்க முடியாது. அதுதான் நந்திக்கடல் தன்னை தோல்வி மனநிலைக்குள் உட்புகுத்திக் கொள்ளவில்லை.

அதுதான் தெளிவான கோட்பாட்டை அதனால் வகுக்க முடிந்தது.

புவிசார் அரசியலின் தாக்கத்தை உணர்ந்து அதைப் பேசுபொருளாக்கிச் சிலர் அதை ஒரு அரசியல் வரைபடமாக்க முயன்றார்கள்.
இதற்கு கஜேந்திரகுமார் தரப்பை உதாரணமாகச் சொல்லலாம்.

வேறு சிலர் மேற்படி புரிதலுடன் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தார்ப்பரியங்களையும் சேர்த்து ஒரு அரசியல் வரைபடத்தை வரைய முயன்றார்கள்.
இதற்கு தமிழ்நெற் ஊடக வலையமைப்பை உதாரணமாகச் சொல்லலாம்.
 
ஆனால் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தோல்வி மன நிலைக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் இரு தரப்பையும் காலி செய்தது – இன்னும் அதற்கு முயன்று கொண்டேயிருக்கிறார்கள்.

கேலியும், கிண்டலும், நையாண்டியும் தனி மனித அவதூறுகளுமாக ஒரு இனத்தின் அரசியல் இருப்பு நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது.

இதில் எதிரிகளின் உளவுத்துறை ஒரு புறம் நமது தரப்புத் தற்குறிகள் மறுபுறம் என்று விபரீதமான ஒரு புறச்சூழல்.

இதற்காக யாரை நோவது என்பது கூடத் தெரியவில்லை.

ஆனாலும் விரைவில் தோல்வி மனநிலையிலிருந்து மீண்டெழுந்து – இணக்க அரசியலைத் தாண்டி நந்திக்கடலின் மேற்படி அரசியல் வரைபடத்தின் வழி நாம் போராட்டத்தை மீளக் கட்டியெழுப்புவது அவசியம்.

இல்லையேல் அழிவது உறுதி.

#ElevenYearsGenocide.

பரணி கிருஸ்ணரஜனி

Wednesday 6 May 2020

பிரபாகரம்" சிந்தனைகள்

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல,புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர் தமிழ் இனத்திற்கு எதிரான போர் தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர் மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

- மேதகு தேசியத்தலைவர்
                 பிரபாகரன்

பிரபாகரனியம்" ஒரு பார்வை.

இந்த இனத்தின் அக முரண்பாடுகள்/ சிக்கல்கள்/ குழுவாத சிந்தனைகள் / சுயநல விழுமியங்களை கிரமமாக உள்வாங்கி ஒரு நேர்கோட்டில் இழுத்து பிடித்து அதன் மீது ஆளுமை செலுத்திய ஒரு அதி மனிதன்தான் தலைவர் பிரபாகரன்.

இவ்வளவு பிறழ்வுகளுடன் இருக்கும் ஒரு இனத்தின் மீது ஆளுமை செலுத்துவதென்பது அவ்வளவு  இலகுவான காரியமல்ல..

அதுதான் நாம்  அவரை “தலைவர்” என்கிறோம்.

வரலாற்றில் இனி இப்படி ஒரு தலைமை உருவாக முடியாது என்ற தர்க்கம் இந்த அடிப்படையில்தான் வைக்கப்படுகிறதே ஒழிய அவரது படைத்துறை ஆளுமை/ அரசியல் – போராட்ட பண்புகளின் அடிப்படையில் அல்ல..

இது பலருக்கு இன்னும் புரியவில்லை..

அதுதான் பதினொரு வருடங்களை நெருங்கியும் முரண்பாடுகள் இருந்தாலும் எமது அரசியல் உள்ளடக்கத்தை ஒரு புள்ளியில் எம்மால் குவிக்க முடியவில்லை – ஒரு தலைமையையும் அடையாளம் காண முடியவில்லை..

மாறாக உள்ளக முரண்பாடுகளை வளர்த்து அதை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி உதிரிகளாக பிளவுண்டு கொண்டிருக்கிறோம்.

இப்படித்தான் வரும் காலத்தில் நமது அரசியல் இருக்கப் போகிறது என்பதை நாம் தமிழின அழிப்பு நடந்து முடிந்து ஒரு சில மாதங்களிலேயே கண்டு பிடித்து விட்டோம்.

அதுதான் எல்லோரும் தோல்விக்கு / அழிவுக்குக் காரணம் யார்? என்று மாறி மாறி காறி உமிழ்ந்து கொண்டிருக்க நாம் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் இனத்திற்குமான உளவியல் அலைவரிசையைக் கண்டடைய முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

முடிவில் நாம்  இதை முன்வைத்தோம்.. அதுதான் பின்னாளில் நந்திக்கடல் கோட்பாடுகளாக விரிவாக்கம் பெற்றன.

“தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.

தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை எமது ஆய்வினூடாக துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்தோம். பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பதே எமது ஆய்வின் மிக முக்கியமான முடிவு.

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது”

இதை இனியாவது தமிழ் அரசியல்வாதிகள் / அமைப்புக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுவே எமது விடுதலைக்கான/ நீதிக்கான அடிப்படை.

பரணி கிருஸ்ணரஜனி

#ElevenYearsGenocide.

பிரபாகரனியம்

'பிரபாகரனியம்’ என்றால் என்ன? இது பலரின் கேள்வி. பதில் மிக எளிமையானது – பிரபாகரனைப் போல் – பிரபாகரனியத்தைப் போல்.

எனது சிந்தனை, உங்களது சிந்தனை மட்டுமல்ல போராடும் ஒவ்வொரு தேசிய இனங்களினதும் கூட்டு சிந்தனையின் வடிவமே ‘பிரபாகரனியம்’.

பெயரின் பின்னால் ஒரு இய(ச)ம் ஒட்டியுள்ளதால் அது தனித்த அவரது கோட்பாடு என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

அது பிரபாகரனியத்திற்கு முரணானது மட்டுமல்ல ‘நந்திக்கடல்’ அதை அடியோடு நிராகரிக்கவும் செய்கிறது.

அது லெலினிசம், மார்க்சிசம், மாவோயிசம் ஏன் பெரியாரியத்திற்குக் கூட பொருந்தலாம். ஆனால் பிரபாகரனியத்திற்கு அது பொருந்தாது. அதுவே அதன் சிறப்பு.

மௌனம்தான் பிரபாகரனியத்தின் மொழி. சிந்தனையுடன் கூடிய செயல் வடிவம்தான் அதன் அசைவியக்கம்.

தனது கண்ணசைவிலும் கையசைவிலும் ஒரு இயக்கத்தையும் இனத்தையும் வழி நடத்தியது மட்டுமல்ல ஒரு நடைமுறை அரசையும் கட்டியெழுப்பியவர் பிரபாகரன்.

அவர் நடந்தால் அது ஒரு அரசியல். அமர்ந்தால் அது வேறு ஒரு அரசியல். அதுதான் அவர் முள்ளிவாய்க்காலில் நின்ற போது அது ஒரு அரசியலாக இருந்தது. அவர் நந்திக்கடலை நோக்கி நடந்தபோது அது வேறு ஒரு அரசியலாகப் பரிணமித்தது.

இந்த இரு நிலங்களுக்கும் இடையிலான அவரது நடையின் பின்னுள்ள அரசியல் பிரளயத்தை கணிக்க சாதாரண மனித அறிவால் முடியாது.

அதுதான் ‘நந்திக்கடல்’ அதைக் கணித்து அந்த வரலாற்று பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

எனவே பிரபாகரனுக்காக, பிரபாகரனியத்திற்காக யாரும்  காத்திருக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களிடம்தான் இருக்கிறது.

அதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கூட்டாக அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கும்போது நாம் விடுதலையை எமதாக்கிக் கொள்வதாடு ‘பிரபாகரனியம்’ என்பது நம் ஒவ்வொருவரினதும் தனித்துவ கோட்பாட்டுருவாக்கம் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

தனக்கோ தனது குடும்பத்திற்கோ என்று ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்து செல்லாத ஒரு அதி மனிதன் தனது ‘சிந்தனையை’க் கூட நம் ஒவ்வொருவருக்கானதாக மாற்றி விட்டு ‘வெறும்’ மனிதனாக சென்ற வரலாற்றுக் கதை இது.

பரணி கிருஸ்ணரஜனி

#ElevenYearsGenocide.

Tuesday 5 May 2020

பிரபாகரம்

ஏன் புலிகள் நோர்வே தலைமையிலான பேச்சுவார்த்தைளில் விட்டுக்கொடுக்காமல் போருக்கு சென்றனர், அது நல்ல முடிவுதானா, போரில் தோல்வியுற்றால் எல்லாம் இழந்துவிடுவோமே என்று பல கேள்விகள் உள்ளன. 

இதனைப் புரிந்துகொள்ள ஒரு சிந்தனையோட்டம் செய்தேன்.

1. குறிக்கோள் என்பது இறையாண்மையுள்ள நாடு

2. பேச்சுவார்த்தைகளின் முடிவில் இறையாண்மையுள்ள நாடு இப்பொழுது கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் கிடைக்கும்படியான ஒரு இடைப்பட்ட தீர்வு வேண்டும்.

3. அதுபோன்று இல்லாத தீர்வை ஏற்றுக்கொண்டால், ஈழம் என்பது நிரந்தரமாகக் கிடைக்காமல் போகும். 
அதற்கு முக்கிய காரணம் அவர்கள் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி இருப்பார்கள். பிரபாகரனே விட்டுக் கொடுத்துவிட்டார், இனி நாம் எம்மாத்திரம் என்று ஒவ்வொரு தலைமையும் எதிர்காலத்தில் விட்டுக்கொடுக்கும். அதையும் மீறி ஈழம் கிடைக்கவேண்டுமானால், பிரபாகரனையும் மீறிய சிறந்த தலைமை வேண்டும். அது கிடைக்கப்போவதில்லை.

4. விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து போரிட்டால், வெற்றியடைய வாய்ப்புள்ளது. தோல்வியடைந்தாலும் சிறந்த முன்னுதாரணம் அமையும். பின்வரும் தலைமைகள் விட்டுக்கொடுப்பது கடினம். அப்படி விட்டுக்கொடுத்தாலும், அது நிரந்தரமாகாது. பிரபாகரனின் முன்னுதாரணம் ஒவ்வொரு தலைமையையும் விடாது துரத்தும். மீண்டும் போராட்டம் தொடரும். இது ஈழம் வெற்றி பெரும்வரை ஒரு முடிவிலா போராட்டமாகும். இன்று பிராபகரனின் முடிவுதான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களையும் பாடாய் படுத்துகிறது. இது நிற்கப்போவதில்லை.

5. பிரபாகரன் பார்வையில் இதில் முடிவெடுப்பதில் சிக்கலே இல்லை. வெற்றியோ தோல்வியோ, போர்தான் முடிவு. வெற்றியென்றால் எல்லாம் நன்றாக முடிந்தது. தோல்வி என்றால், மிச்சிறந்த முன்னுதாரணத்தை வைத்துவிட்டு போகவேண்டும். இவ்வழியில்தான் ஈழம் வெற்றிபெற முடியும். விட்டுக் கொடுத்தால் நிரந்தர தோல்வி ஏற்படும்.

6. அண்ணா திராவிட நாட்டை விட்டுக்கொடுத்தார், கருணாநிதியின் கீழ் மேலும் விட்டுக்கொடுப்புகள்தான் ஏற்பட்டது. இன்று திராவிடம் பெற்ற வெற்றிகளெல்லாம் ஒவ்வொன்றாக இழந்துவருகிறது. திராவிடம் வெற்றி பெற வேண்டுமென்றால், அண்ணாவைவிட சிறந்த தலைமைவேண்டும். ஆனால் இப்பொழுது உள்ளவர்களுக்கு கருணாநிதிதான் சிறந்த தலைவர். அவருக்கடுத்து உதயநிதிதான் சிறந்த தலைவர். இவ்வாறு கழுதை தேய்ந்து கட்டெறும்பு போலத்தான் ஆகும்.

2009-இன் பின்விளைவுகளைப் பார்க்கும்பொழுது அதைத் தோல்வி என்று கூறுவது சரியானது அல்ல. இதைத் தற்காலிக பின்னடைவு என்பதிலும் சிக்கல் உள்ளது. புலிகள் இதைத்தெரிவு செய்து உருவாக்கியது. 2009-இழப்பு என்பது ஒரு முடிவிலா ஆட்டத்தின் துவக்கம். 2009-ற்கு முன் முடிவிலா ஆட்டம் என்று ஒன்று இல்லை. இது ஈழப்போராட்டத்தின் ஒரு புதிய முன்னேற்ற பரிணாமம். இதன் தாக்கம் என்பது கிரேக்கர்களின் தெர்மாப்பிளைப் போர், யூதர்களின் மசாதாப் போர் போன்றது. அவை முடிவிலா ஆட்டத்தின் துவக்கம். அவைபோன்று நந்திக்கடல் என்பது நமக்கு முடிவிலா ஆட்டத்தின் துவக்கம். இந்த முடிவிலா ஆட்டம் என்பது ஈழத்தை அடைந்து விடுவதுடன் நிற்பதல்ல. கிரேக்கர்களின் வெற்றி அவர்களை உலகின் தலைசிறந்த நாகரீகத்தை படைக்க வைத்தது. . மசாதா இசுரேலை உருவாக்கியதுடன் நின்றுவிடவில்லை, இன்றும் அது இசுரேலின் அடையாளமாகத் தொடர்கிறது. நந்திக்கடல் எக்காலத்திலும் நிற்காத முடிவிலா ஆட்டம்.

கலாநிதி சு. சேதுராமலிங்கம்.
(நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் வெளியீடாக வரவிருக்கும் 'பிரபாகரன் சட்டகம்' நூலிலிருந்து)

பரணி கிருஸ்ணரஜனி

மேதகு பிரபாகரன் செவ்வி

கேள்வி : தமிழர் தாயகத்தில் முஸ்லிம்கள் சேர விரும்பவில்லையே?  

பதில் :   அச்செய்தி முழுக்க முழுக்க தவறானது.
முஸ்லிம்கள் எங்களோடு தான் உள்ளனர்.
இலங்கை அரசின் ஆதரவிலுள்ள ஒரு சில முஸ்லிம்களே இப்படி மக்களைக் குழப்புகின்றனர்.  
மற்றப் போராளிக் குழுக்களிலும், எங்களுடனும் பல்வேறு முஸ்லிம் இளைஞர்கள் உள்ளனர். 
முஸ்லிம்களும் தமிழர்களே ......
அவர்கள் சிங்களம் பேசுபவர்கள் அல்ல.
அவர்கள் மற்ற தமிழர்களுடன் ஒற்றுமையாக இல்லையெனில் எளிதாகத் தாக்கப்படுவர்.
நாங்கள் இந்துக்களாகவும்,முஸ்லிம்களாகவும் இருப்பதில் ஏதும் பிரச்சினையில்லை.
முக்கியமானது எதுவெனில், நாம் அனைவரும் தமிழர்கள்.
நமக்கு எதிரான அடக்குமுறைக்கு ஒரு வரலாறு உள்ளது!

இந்த பெரும் முக்கியத்துவமற்ற மதவேறுபாடுகளுக்காக நாம் இந்த அடக்குமுறையை ஒதுக்கவே முடியாது.  
முஸ்லிம் தமிழர்கள் எங்களுடன் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்,அது அவர்களுக்கே தெரியும்.

ஆதாரம் :

மேதகு தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் நேர்காணல் , தி இந்து ஆங்கில நாளேடு ,04.09.1986.

படம் மற்றும் அதன் செய்தி :: அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் கூட்டமைப்பின் செயலாளர் திரு ஐ.எம்.இப்ராஹிம் அவர்களுடன் அண்ணன் தமிழ்ச்செல்வன்.

(முதலில் அவர்கள் எங்களைப் பிரித்தார்கள். பின்னர் அவர்கள் உங்களைப் பிரித்தனர். சிங்கள தலைவர்கள் எப்போதும் எங்கள் உரிமைகளை மறுப்பார்கள். தமிழ் முஸ்லீம் ஒற்றுமை உங்கள் விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் ” :  அம்பாறை மாவட்ட மசூதி கூட்டமைப்புகளின் செயலாளர் திரு. ஐ.எம். இப்ராஹிம்)

“First they divided us. Then they divided you. Sinhala leaders will always deny our rights. Tamil Muslim unity should be the foundation of your liberation struggle”, said Mr. I.M Ibrahim, secretary of the Mosque Federations of Amparai District, addressing senior Liberation Tiger leaders at a meeting between LTTE Muslim community leaders of Batticaloa and Amparai districts Monday in Kokkaddicholai, 15 kilometres southwest of Batticaloa town. “There are still problems, fears and doubts between us. We cannot gloss over them. We should grapple with them and build our unity at the grass roots level”, Mr. Thamilchelvan told the Muslims in his address. 

தகவல் : 
Tigers meet Muslim leaders in Batticaloa
[TamilNet, Monday, 14 February 2005, 14:24 GMT]

தமிழரசன் அப்துல்காதர்

தனித்தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலமில்லை தமிழ்நாடு  ஒரு தேசம். அந்த புரிதல் நம் எளிய மக்களிடம் தற்போது கால்கொண்டு வளர்ந்து வருகிறது. தமிழ்நாடு ஒரு தேசம் எனும் புரிதல் நம்மிடையே மென்மேலும் வளரத்தொடங்கினால் பகலவனைக் கண்ட பனிபோல நம் துயரங்கள் தொலைந்து போகும் என்பது உண்மை. நாம் தமிழ்த்தேசியச் சமூகத்தின் விழிப்புணர்வடைந்த இளைஞர்களையும்,மாணவர்களையும்,பொதுமக்களையும் இந்த விழிப்புணர்வை நோக்கி அன்போடு அழைத்துச்செல்ல விழைகிறோம்.

-தோழர் பொழில்வாய்ச்சி செ.இளங்கோவன்

விடுதலைப்புலிகள் நாள்

தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய இயக்கம்,
1972 ல் இருந்து , “புதிய தமிழ்ப்புலிகள்” என்கிற பெயரில் செயற்பட்டு வந்தாலும்  இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து தலைவர் “தமிழீழவிடுதலைப்புலிகள்"  அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.

இன்றுதான் தமிழர்சேனை உருவானநாள்.

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்,
தமிழரின் தாகம் தமிழர் தாயகங்கள்.

சோசலிசத் தமிழ்த்தேசியம்

கேள்வி : உங்கள் அரசியல் கோட்பாடு என்ன?

பதில் : புரட்சிகர சோசலிசமே எனது அரசியல் கோட்பாடு.
சோசலிசம் என்பதாக நான் விளங்கிக் கொள்வது வர்க்க வேறுபாடற்ற, மனிதனை மனிதன் சுரண்டாத, மானுட விடுதலையும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, வளர்ச்சி விரைவுப்படுத்தப்பட்ட, ஒரு சுதந்திரமான,பகுத்தறிவு பெற்ற சமூகமே.

ஆதாரம் :
தேசியத்தலைவரின் செவ்வி
நியூஸ்வீக் ஆங்கில ஏடு 23.03.1986

இன்று தோழர் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்.5/5/1818.
விடுதலை புலிகள் பிறந்தநாள்.5/5/1976.

தோழர் கார்ல்மார்க்ஸ் பிறந்தநாள்

Segui il tuo corso, 
e lascia dir le genti !

உன் சொந்த வழியில் நீ போய்க்கொண்டே இரு.
பிறர் நாவுகள் எவ்வாறு வேண்டு வேண்டுமானாலும் உலையட்டும்! 

தாந்தேயின் இந்த பொன்மொழிதான் தோழர் மார்க்ஸ் அடிக்கடி விரும்பிக்கூறுவது, மூலதனத்தின் முகவுரையின் இறுதியிலும் இதை குறிப்பிடுவார்.

தோழர் மார்க்ஸ்' ன் பிறந்தநாள் இன்று!  

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் பிதமாகனுக்கு செவ்வணக்கம்.

அயோத்திதாச பண்டிதர் நினைவுநாள்

செந்தமிழ்க் குடியில் வந்தவ னெவனோ ! 
இளமையிற் கற்றார் உளம்வழி நின்று நூல்பல கற்ற சால்பின னெவனோ! 

ஈங்குளோர் புகழ் ஓங்கி நாடோறும் வல்லவர் போற்றுங் கல்விமா னெவனோ!

 இல்லற மென்று நல்லற மேற்றே மக்கட் பேறோடு மிக்க அன்பின் விருந்தினை யோம்பியிருந்தவ னெவனோ!

 - செந்தமிழ் பூண்ட அந்தண னெவனோ !
 பொறுமைக் கேயொரு உறைவிட மாக அண்டினர்ப் புரக்கும் அயோத்தி தாச
பண்டிதப் பெயரைக் கொண்டவ னெவனோ !

-திரு.வி.க.

தாத்தா அயோத்திதாச பண்டிதருக்கு புகழ்வணக்கம்!

விடுதலைப்புலிகள் நாள் (05.05.1976)

விண்ணதிர, மண்ணதிர, விரிந்தகடலதிர
கண் திறந்து வருக நம் கருப்பை உயிர்கள்.
கொற்றவை பெற்ற குழந்தைகளென
நெற்றிக்கண் திறந்து நிமிருக நம் பரம்பரை.
என் பிள்ளை களத்தில்…..
என் பிள்ளை களத்தில்…..
என் பிள்ளையும் களத்திலென்று
எல்லோரும் சொல்லுகின்ற எழுச்சி நிலை கைவந்தால்...
மண்வந்த பகையன்றே மடிந்து விழ மாட்டாதோ?

பொங்கியெங்கள் ஊர் புகவே போர்க்கருவி தூக்குவோம்.
போரில் பகை தொலையுமட்டும் ஊரினுள்ளே தாக்குவோம்.
தம்பி பிரபாகரனின் தானையிலே சேருவோம்.
தங்கத் தமிழீழம் வரும் நேரம் வரை சீறுவோம்.

-தமிழீழத்தேசியக்கவி புதுவை இரத்தினதுரை அண்ணை.

ஐரீசின் திலீபன் பொபி சான்ட்ஸ் (Bobby Sands)1954-1981.

பொபி சான்ட்ஸ்,  அயர்லாந்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த. ஒரு ஐரிஸ் குடிமகன்.

பிரித்தானியர்களின் அதிகாரத்திற்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ஆயுதரீதியாகவும் போராடிக்கொண்டிருந்த ஐரிஸ் குடியரசு இராணுவத்தில் (IRA) தன்னை இணைத்துக் கொண்ட போது அவருக்கு வயது 18.

விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தவுடனேயே ஏகாதிபத்திய அரசு சிறைப்படுத்தியது.சட்ட விரோதமாக  துப்பாக்கி பயன்படுத்தியது,பெருவாரியான ஆயுதங்களை பதுக்கிவைத்தது,வெடிகுண்டு வழக்கு என தொடர்ச்சியாக சிறையிலடைத்தது.

சிறையில் அரசியல் கைதிகள் குற்றவாளிகளை போல நடத்தப்பட்டனர், அவர்களது தார்மீக உரிமைகள் மறுக்கப்பட்டது, மனித உரிமை மீறால்களுக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டனர்.

தங்களை அரசியல் கைதிகளாக நடத்தவேண்டும் ,சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பொபிசான்டும் அவரது தோழர்கள் 10 பேருமாக சாகும் வரை உண்ணாநோன்பை 1981 வருடம் மார்ச் 1 ஆம் திகதி தொடங்கினர்.

அவரது உண்ணாவிரத போராட்டம் நாளுக்கு நாள் நாடு தழுவிய எழுச்சியை ஏற்படுத்தியது,  உலக நாடுகள் மத்தியில் பேச்சு பொருளானது, இந்த நேரத்தில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே ஐரீஸ் குடியரசு இயக்கம்  (Irish Republican Movement ) சார்பில் நின்று தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

1987 செப்டம்பர் 15 ஆம் திகதி இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து
நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த லெப் கேணல் திலீபன் இந்தியத்தினால் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு எவ்வாறு  1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம்  திகதி வீரச்சாவடைந்தானோ !

அதே போன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான பொபிசான்டின் போராட்டம் 66 நாட்களில் முடிவுக்கு வந்தது ஆம் 1981 ஆம் ஆண்டு  மே மாதம் 5 ஆம்திகதி சுயநினைவற்ற நிலையிலேயே அப்போராளியின் உயிர் பிரிந்தது.அப்போது அவரது வயது 27.(பிறந்ததேதி 1954 ஆம் வருடம் மார்ச் 9 ஆம் திகதி) பின்வந்த நாட்களில் அவரின் தோழர்கள் பத்து பேருமே வீரச்சாவடைந்தனர்.

தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் அம்மக்களின் அகிம்சா வழி போராட்டங்களை எப்போதுமே கண்டு கொள்ளாது என்பது தான் உலக விதியும் வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

They won't break me because the desire for freedom, and the freedom of the Irish people, is in my heart. The day will dawn when all the people of Ireland will have the desire for freedom to show. It is then that we will see the rising of the moon.

அவர்கள் என்னை உடைக்க மாட்டார்கள் ,என் இதயத்தை (மனவலிமையை) தான் உடைக்க முயல்வார்கள் 

ஏனெனில் சுதந்திரத்திற்கான ஆசை,

 மற்றும் ஐரிஷ் மக்களின் சுதந்திரம்,

என் இதயத்தில் உள்ளது.

அயர்லாந்து மக்கள் அனைவருக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது தங்களுக்கு விருப்பமான சுதந்திரத்தை காண்பார்கள், எழுந்து வரும் சந்திரனை போல! 

என்கிற பொபிசான்டின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிரித்தானிய வல்லாதிக்கம் அவரது இதயத்தை உடைக்க முடியாமல் தோல்வியடைந்தது.

இறுதியாக பொபிசான்டின் கூற்று விடுதலைக்காக உலகமெங்கும் போராடி வரும் போராளிகளின் மனநிலையை பிரதிபலிக்கும்.

"Our revenge will be the laughter of our children."

எங்கள் பழிவாங்கல் எங்கள் குழந்தைகளின் சிரிப்பாக இருக்கும்.

வீரவணக்கம் தோழனே!  

தமிழரசன் அப்துல்காதர்