Friday, 14 August 2026

சிறுவர் பராமரிப்பும், தமிழீழ நிர்வாகமும். 2

சிறுவர் பராமரிப்பும், தமிழீழ நிர்வாகமும். 2
~~~~~~~~~~~~~~~~
பரவலாக வடக்கு கிழக்கில் நிலவும் போஷாக்கின்மை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். கொழும்பு அரசு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு நடத்திய பொருளாதாரத்தடையும் எம் மக்களின் வறுமையும் போஷாக்கின்மையின் கூட்டுக்காரணிகளாக அமைகின்றன. உலகவங்கியின் மனித மேம்பாட்டு ஆய்வலகு (HUMAN DEVELOPMENT UNIT, WB) வெளியிட்ட பெப்ரவரி, 2005 அறிக்கை வட கிழக்கில் நிலவும் போஷாக்கின்மை இலங்கைத்தீவின் பிற பகுதிகளிலும் பார்க்க கூடுதலாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. வட கிழக்குப் போஷாக்கின்மை 46 வீதமாகவும் இலங்கைத்தீவின் பிற பகுதிகளில் அது 29 வீதமாக இருப்பதையும், ஆகக் கூடுதலான போஷாக்கின்மை மட்டக்களப்பிலும் (53%) அதற்கடுத்ததாக
வவுனியாவிலும் (51%) நிலவுவதையும் உலகவங்கி அறிக்கை நிரூபிக்கின்றது. மேற்கூறிய சுட்டு விகிதங்கள் அனைத்தும் சிறுவர் சிறுமியர்கள் பற்றியதாகும். இவ்வறிக்கையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் பின்வரும் மாவட்டங்களின் போஷாக்கின்மை விகிதம் அதிலுள்ளன. திருகோணமலை (45%), மன்னார் (28%), அம்பாறை (44%), யாழ்ப்பாணம் (43%).

எல்.ரி.ரி.ஈ, யுனிசெப், சிறிலங்கா அரசு ஆகிய முத்தரப்பினர் இணைந்து உருவாக்கிய “போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நடவடிக்கைத் திட்டம்” செயலிழப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதால் எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு நன்மையும் அனுகூலமும் வந்தடையும் என்று அது நம்புவதற்கு இடமளிக்கப்படவில்லை. குடும்பத்தினருடன் இணைக்கப்பட்ட சிறுவர்களின் இணைப்பிற்குப் பிந்தியகால ஆலோசனை மற்றும் உதவிகளுக்கான உத்தரவாதம் வழங்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தரப்பினருக்கும் இடையில் திருப்திகரமான ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை, இதனால் நடவடிக்கைத் திட்டத்தை அமுலாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. எதிர்பார்த்த பலனை தரத்தவறியதற்கான மூலகாரணங்களாக இவை இடம் பெறுகின்றன.

மேற்கூறிய நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்கள் ஊடாக 170 வரையிலான சிறுவர்கள் எல்.ரி.ரி.ஈயின் பொறுப்பிலிருந்து யுனிசெப் மூலம் மீளளிக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் சிலர் கவனிப்பாரற்ற நிலையில் மீண்டும் எல்.ரீ.ரீ.ஈயிடம் வந்தடைந்தனர். அதாவது சமுதாய நீரோட்டத்தில் சேர்ப்பிக்கப்பட்டபின் அவர்களுக்குரிய கவனிப்பு திருப்திகரமாக அமையவில்லை. இடைத்தங்கல் முகாமூடாக அனுப்பப்பட்ட சிறுவர்கள் எல்.ரி.ரி.ஈ நேரடியாக அனுப்பிய சிறுவர்களிலும் பார்க்க கூடுதலான நன்மைகளை அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இருபாலாருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. இடைத்தங்கல் முகாமூடாக
சிறுவர்களைத் திருப்பி அனுப்புவதை எல்.ரி. ரி.ஈ நிறுத்தியதற்கு இது காரணமாக அமைகிறது. அத்தோடு எல்.ரி.ரி.ஈ மீதான கண்டன விமர்சனத்தைத் தளர்த்துவதற்கு யுனிசெப் ஒத்துக் கொள்ளவில்லை. இதே கால கட்டத்தில் நெசோர் (NESOHR) எனப்படும் வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம் (NORTH EAST SECRETARIAT ON HUMAN RIGHTS) உருவாக்கப்பட்டதால், அதனூடாகச் சிறுவர்களை குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கும் நடைமுறையை எல்.ரி.ரி.ஈ செயற்படுத்தத் தொடங்கியது.

இதனடிப்படையில் 2003ஆம்
ஆண்டு வரை எல்.ரி.ரி.ஈயினால் அவரவர் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்ட வயது குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 800. அதேபோல் 2003ஆம் ஆண்டிற்குப்பின் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 553. 2003ஆம் ஆண்டிற்குப்பின் திருப்பி அனுப்பப்பட்டோர் பற்றிய புள்ளி விபரங்களில் இருந்து பெறப்பட்ட கீழ்க்காணும் தரவை இதில் தருகிறோம்.

(01) திருப்பி அனுப்பப் படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 03 ஆண்டுகள் இருந்தவர் எண்ணிக்கை-23.

(02)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 02 ஆண்டுகள் இருந்தவர் எண்ணிக்-ை 32.

(03)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில்
01 ஆண்டுவரை இருந்தவர் எண்ணிக்கை -215.

(04)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 01 ஆண்டிலும் குறைவாக இருந்தவர் எண்ணிக்கை 283.

இத்தரவிலிருந்து பெறப்படும் முடிவு யாதெனில் திருப்பி அனுப்புதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. வயது குறைந்தோர் எல்.ரி.ரி.ஈயிடம் வந்து இணைவதற்கான காரணங்கள் பல இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வறுமையும், முறையான பராமரிப்பு வசதிகள் இல்லாமையும் முக்கிய காரணமாக இடம்பெறுகின்றது. பராமரிப்பு வசதிகள் சீராகும்போது வயது குறைந்தோரின் எல்.ரி.ரி.ஈ நோக்கிய வரவு மட்டுப்படும் என்பது தெளிவு. உணவு முதற்கொண்டு கல்வி உள்ளடங்கலான தங்குமிட வசதிகளை எல்.ரி.ரி.ஈ தாராளமாக வழங்குகிறது. வயது குறைந்தோர் பெரும்பாலும் பெற்றோர், பாதுகாவலரை இழந்தவர்களாகவும் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சிறிலங்கா ஆயுதப் படையினரின் தமிழ்ச் சிறுவர் களுக்கு எதிரான வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஆயுதப் படையினரும் அவர்களோடு இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களும் வயது வேறுபாடின்றி ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதற்காக இலக்கத் தகடற்ற வெள்ளைநிற மோட்டார் வாகனங்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமிகள் மத்தியில் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் நிலவுகின்றது. ஆட்கடத்தலுக்கு உட்படுவதிலும் பார்க்க எல்.ரி.ரி.ஈ யிடம் தஞ்சமடைவது மேல் என்ற கருத்து சிறுவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

சிறிலங்கா
ஆயுதப் படையினரின் தமிழீழச் சிறுவர்களுக்கு எதிரான அண்மைக்கால வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இங்கு தருகின்றோம்.

பேசாலை, மன்னாரிலுள்ள நூறு வீட்டுத்திட்டத்தினுள் நுழைந்த சிறிலங்கா கடற்படையினர் டிசெம்பர் 23, 2005ஆம் நாள் நடத்திய தாக்குதலில் ஒரு தமிழ்க் குடும்பம் முற்றாக அழிக்கப்பட்டது. இதில் 3 வயதினரான டிலக்சன் என்ற ஆண் சிறுவன் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மன்னார் அரச அதிபர் எரியுண்ட வீட்டிற்குள் ஒரு சிறுவனின் கையை மாத்திரம் கண்டதாகச் சாட்சியம் வழங்கியுள்ளார். ஐந்து நாட்களுக்குப் பின் டிசெம்பர் 28, 2005ஆம் நாளன்று கொடிகாமம், தென்மராட்சியைச் சேர்ந்த 15 வயதினரான தம்பிராஜா அருளானந்தன் என்ற இளைஞர் தனது குடும்பத்தினர் முன்னிலையில் சிறிலங்கா ஆயுதப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலைச் சம்பவத்திற்குமுன் சில வாரங்களாக இக் குடும்பத்தினர் சிறிலங்கா ஆயுதப்படையினராலும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுவினராலும் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டு வந்துள்ளனர். இதுபற்றிய விரிவான அறிக்கையை வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் வெளியிட் டுள்ளது.

ஜனவரி 16, 2006ஆம் நாளன்று அக்கரைப்பற்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாகச் செல்லும் வீதியில் வைத்து 16வயதினரான கோபால கிருஷ்ணன் சுரேஷ் என்ற மேசன் தொழிலாளி ஆயுதப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஒரு எல்.ரி.ரி.ஈ அனுதாபி என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. சிறிலங்கா ஆயுதப்படையினராலும் ஆயுதக் குழுவினராலும் பல சிறுவர்கள் இக்காலப் பகுதியில் சூட்டுக்காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவற்றில் ஒருசில சம்பவ விபரங்களைத் தருகின்றோம்.

டிசெம்பர் 07,2005ஆம் நாள் யோகராசா யோகேஸ்வரி (24), துரைராசா வதனி(18) என்ற இரு சகோதரிகள் ஆயுததாரிகளால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்டனர். யோகராசா யோகேஸ்வரியின் இரண்டுவயதுக் குழந்தை படுகாயம் அடைந்தது.

வவுனியாவில் செயற்படும் இராணுவத்திற்கு உதவும் துணைப்படையினரின் கிரனேற் வீச்சுத் தாக்குதலில் சகோதரர்களான தமிழ்ச்செல்வன் (13), சுரேஜா (14) ஆகியோர் படுகாயமடைந்தனர். படையினர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்  நடத்தும்போது அப்பாவிகள் மீது துவக்குச் தாக்குதல் சூடு நடத்தும் நடைமுறையை ஆயுதப்படையினரும் ஆயுதக்குழுக்களும் செயற்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் தெருக்களிலும் பொது இடங்களிலும் நடமாட அஞ்சுகின்றனர். இவ்வாறு சூட்டுக்கு இலக்காகியவர்களால் சுட்டவர்களை அடையாளம் காண இயலவில்லை. தாக்குதல் நடத்துவோர் கறுப்புத்துணிகளால் முகத்தைச் சுற்றிக் கட்டியிருப்பது அடையாளம் காண்பதைத் தடுக்கின்றது. யாழ் நீதிமன்றம் கறுப்புத் துணியால் முகத்தை மூடியபடி உலாவ வேண்டாம் என்று கட்டளையிட்ட பின்பும் படையினர் இந்த வழமையை இதுவரை கைவிடவில்லை.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைச்சட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான சட்டம், சிறுவர்கள் உரிமைச்சட்டம் என்பனவற்றை சிறிலங்கா அரசு அங்கீகரித்துள்ளது. (INTERNATIONAL COVENANTON CIVIL AND POLITICAL RIGHTS, CONVENTION ON THE ELIMINATION OF DISCRIMINATION AGAINST WOMEN, CONVENTION OF THE CHILD) இம்மூன்று சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சிறிலங்காவின் குற்றவியல் சட்டம் 1995ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்குக் குறைந்தவர்களை சிறுவர்கள் என்று இத்திருத்தம் வரையறை செய்கின்றது. இவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் அல்லது துன்புறுத்துபவர்களுக்கு சிறைத் தண்டணை வழங்குவதற்கு மேற்கூறிய சட்டத்திருத்தம் வகை செய்கின்றது. சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றஞ் சுமத்தும் சிறிலங்கா அரசு தான் இயற்றிய சட்டத்தைச் சரிவர நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

அண்மைக்காலமாக புத்த விகாரைகளில் 'அபித்தயாக்கள்' என்று அழைக்கப்படும் மிகவும் வயது குறைந்த ஆண் சிறுவர்கள் மதக் கல்விக்காகச் சேர்க்கப்படும் முறைமை பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இவர்கள் ஆண்கள் மாத்திரம் வாழும் விகாரைகளில் பாதுகாப்பாக வாழ்கின்றார்களா, சட்டத்தின் முன்னிலையில் இச்சிறுவர்களின் அந்தஸ்து என்ன? போன்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. பாலியலுறவுக்குச் சம்மதிக்க மறுத்தவொரு அபித்தயா சிறுவனை ஒரு பிக்கு தாக்கிப் படுகாயம் விளைவித்த செய்தி சென்றவாரம் கொழும்புத் தினசரிகளில் பிரசுரமாகியது. இச்சிறுவர்களை புத்தமதபீடம் தத்து எடுப்பதாக வாதிடுவோர் திருமணமாகாத ஆண்கள் சிறிலங்கா சட்டத்தின் கீழ் தத்து எடுப்பதற்குத் தகுதி அற்றவர்கள் என்பதை மறுத்துவிடுகிறார்கள். அத்தோடு புத்த விகாரை ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லமும் அல்ல. எல்.ரி.ரி.ஈ மீது தாக்குதல் தொடுக்கும் அரசு தனது உள் வீட்டு விவகாரத்தை முதற்கண் சீராக்க வேண்டும்.

-
கலாநிதி க. சோமாஸ்கந்தன்
விபு இதழ் : மாசி-பங்குனி 2006

தொகுப்பு :தமிழரசன்அப்துல்காதர்

சிறுவர் பராமரிப்பும்,தமிழீழ நிர்வாகமும்.

சிறுவர் பராமரிப்பும்,தமிழீழ நிர்வாகமும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனது பகுதியில் வாழும் சிறியோர், முதியோர் நலனில் தமிழீழ நிர்வாகம் அதியுயர் கவனஞ்செலுத்துகிறது. தெருச் சிறுவர்களையும், போக்கிடமற்ற முதியோர்களையும் தமிழீழ மண்ணில் காண முடியாது. இவர்களுடைய பராமரிப்புக்கென பெரும் பொருட்செலவில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சிறியோருக்கும், முதியோருக்கும் தனித்தனி இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்குக் கல்வி வசதி செய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக பயனுள்ள தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. மாதாந்த ஊதியம் பெறும் பராமரிப்பு ஊழியர்கள் சிறியோர், முதியோர் இல்லங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உளவியல் தாக்கம் அல்லது அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதில் கவனம் எடுக்கப்படுகிறது. சிறிலங்கா நாட்டில் ஈழத்திற்கு நிகரான கவனம் எடுக்கப்படுவதைக் காண்பது அரிது. அங்கு சிறுவர்நலன் சார்ந்த செயற்பாடுகள் வளர்ச்சிகுன்றிய நிலையில் உள்ளன.

வடக்கு கிழக்கிலுள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் சிறுவர் நலனில் தாம் தீவிர அக்கறை எடுப்பதாக சிறிலங்கா அரசு கூறிவந்தாலும் உண்மை வித்தியாசமாக இருக்கிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளின் சிறுவர் நலன்காக்கும் மாவட்ட அலுவலகங்களின் எண்ணிக்கை எழுபத்தி யெட்டு (78). ஆனால் இவ்வலுவலகங்களில் பணியாற்றும் சிறுவர் நலன்பேணும் பயிற்றப்பட்ட அதிகாரிகள் எண்ணிக்கை பதினாறு (16) மாத்திரமே. அத்தோடு இப் பணிமனைகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதாமையை ஈடுசெய்வதற்காக சிறுவர் பாதுகாப்பு நிதியம், யுனிசெப் போன்ற நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. தேசிய சிறுவர் ஆண்டாக 2006ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரகடனம் சர்வதேசத்திற்கும் செல்லுபடியானது. புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் இப்பிரகடனம் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருகோணமலை நகரில் நடந்த சிறுவர் நலன் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட சிறிலங்கா சிறுவர் பாதுகாப்பு நிதியப் பிரதிநிதி றிச்சார்ட் (RICHARD MAWER, COUNTRY PROGRAMME DIRECTOR, SAVE THE CHILDREN FUND) அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிலவும் சிறுவர் நலன்பேணும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

போர்நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்ட பின்பு (2002) ஈழத்தமிழர்களின் போர்வடுக்கள் மறையவில்லை. உளவியல் தாக்கங்கள் தொடர்கின்றன. சிறுவர்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். சிறுவர் பாடசாலைகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கள் இளம் பராயத்தினரின் எதிர்காலத்தினை முற்றாகப் பாதித்துள்ளது. பெற்றார் இருவரையும் இழந்த சிறுவர்கள் கணிசமானளவில் காணப்படுகின்றனர். அதேபோல் தாய் அல்லது தந்தையைப் பலிகொடுத்த சிறுவர்களும் உள்ளனர். திரு கோணமலை மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் வாழும் 8500 சிறுவர்களில் 60 வீதமானோர் கடும் வறுமை காரணமாக அங்கு புகலிடம் தேடியுள்ளனர். 741 பிள்ளைகள் பெற்றார் இருவரையும் இழந்துள்ளனர். 2580 பிள்ளைகள் பெற்றாரில் ஒருவரை இழந்துள்ளனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக மேலதிக எண்ணிக்கையில் சிறுவர்களை அனுமதிக்கமுடியாத நிலை பரவலாக வடக்கு கிழக்கில் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது.

வறுமை காரணமாக போஷாக்கின்மையும், கர்ப்பிணித் தாய்மாரின் உடல்நலக் குறைவும் தமிழர் பகுதிகளில் இருப்பதை தொண்டு நிறுவனங்கள் அவதானித்துள்ளன. பிறக்கும் குழந்தைகள் எடை குறைந்தவையாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. சிசு மரணவீதம் சராசரிக்கும் கூடுதலாக இருப்பதால் எமது இனம் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. உயிர் பிழைக்கும் சிறுவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் பல்வேறு உடல் நோய்களுக்கு உட்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு நிலையங்களை உருவாக்கி பெரும் பொருட் செலவில் நற்பணியாற்றி வருகின்றனர். சிறுவர் நலனில் எமது விடுதலை அமைப்புக் காட்டிவரும் அக்கறையும், கரிசனையும் அளப்பரியது. எமது எதிர் காலம் சிறுவர்களின் வளர்ச்சியில் தங்கியுள்ளது.

சிறுவர் விவகாரம் அரசியலாகிவிட்டது. தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் போரில் அது முக்கிய அங்கம் வகிக்கிறது. சிங்கள அரசின் பிரச்சார உத்தியின் அடித்தளமாக இரு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று தமிழர்களுடைய விடுதலைப்போர் ஒரு பயங்கரவாதம், அடுத்தது விடுதலைப் புலிகள் தமது படையில் சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கிறார்கள். இப்பிரச்சாரப் பாரம்பரியத்தைத் தொடங்கியவர் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமராவார். எமது சிறுவர்கள் மீது கரிசனை காட்டுவதாகப் பாசாங்கு செய்யும் சிங்களத் தலைவர்கள் தமது பகுதிச் சிறுவர்களின் கேவலநிலை குறித்துக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடலோரப் பகுதிகளிலும் உல்லாசப் பயணிகள் விடுதிகளிலும் சிறுவர்கள் விபச்சாரம் அமோகமாக நடைபெறுகிறது. இதில் பிரபல கொழும்பு அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு. அதேபோல் பெருமளவு மூவினச் சிறுவர்கள் தெற்கில் உயிராபத்தை விளைவிக்கும் தொழில்களில் ஈடுபடுகின்றனர். மலையகச் சிறுவர்களும் மிகக் குறைந்த ஊதியத்திற்குத் தொழிலாற்றுகின்றனர். இவர்களுடைய கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக மலையகச் சிறுவர்கள் நடத்தப்படுவதை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுள்ளனர்.

யுத்தநிறுத்த உடன்படிக்கைகைச் சாத்திடப்பட்ட பின் யுனிசெப் நிறுவனம் 2003இல் வெளியிட்ட வட கிழக்கு சிறுவர் உரிமைகள் பற்றிய அறிக்கையில் ஈழத் தமிழ்ச் சிறுவர்களின் கவலைக்குரிய
நிலவரம் விவரிக்கப்பட்டுள்ளது. 50,000 சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என்றும், 100 சிறுவர்களில் ஒருவர் வீதம் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வாழ்வதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது. 300 சிறுவர்களில் ஒருவர் வீதம் பெற்றாரில் ஒருவரையாவது இழந்துள்ள தாகவும் 100% சிறுவர்கள் போஷாக்கின்மையால் உடல்நலம் பாதிப்புற்று இருப்பதாகவும் அறிக்கைகள் அறியத்தருகின்றன. வட கிழக்கிலுள்ள பள்ளிக்கூடங்களில் 30% போரினால் சேதமடைந்துள்ளன என்றும் சிறுவர்களுக்குரிய மருத்துவ சேவைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் யுனிசெப் கண்டறிந்துள்ளது. வட கிழக்கில் சிறுவர்நலன் படு மோசமாகப் பாதிப்படைந்திருப்பதற்கு, ஒன்றோடொன்று தொடர்புடைய இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. போரின் பாதிப்பு முதற்காரணம், கொழும்பு அரசின் அசிரத்தையும் இனப் பாகுபாடும்

இரண்டாவது காரணம்.
2002க்குப் பின் நிலைமை சீரடையலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.
ஆறுகட்டப் பேச்சுவார்த்தைகள் செப்ரம்பர் 2002க்கும் மார்ச்சு 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் பல பாகங்களில் நடத்தப்பட்டாலும் வட கிழக்கில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கடும் தோல்வியடைந்தன. 

சிரான்(SIHRN) கட்டமைப்பு உருவாகும் தறுவாயில் இருந்தபோது கொழும்பு அரசு கொடுத்த வாக்குறுதியை மீளப்பெற்று சீரானைத்
தோல்விகாணச் செய்தது. இதன்போது
வயது குறைந்த சிறுவர்களை எல்.ரி.ரி.ஈயினர் தமது படையில் சேர்க்கின்றார்கள் என்ற
குற்றச்சாட்டு எழுந்தது. சிறுவர்களுடைய
நலன் இதன்மூலம் பாதிப்படைவதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு வலியுறுத்தியது.

"போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான
நடவடிக்கைத் திட்டம்” (ACTION PLAN
FOR WAR AFFECTED CHILDREN)
இதற்காக உருவாக்கப்பட்டது. வட கிழக்குச்சிறுவர்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த நடவடிக்கைத் திட்டத்தின் பங்காளிகளாக
எல்.ரி.ரி.ஈ, சிறிலங்கா அரசு, யுனிசெப் என்ற முத்தரப்பினர் இடம் பெற்றனர்.

யுத்த நிறுத்தம் ஈழத்தமிழர்களுக்கு இயல்பு வாழ்க்கையை தரத் தவறியுள்ளது. இதில் சிறுவர்களும் பயன் பெறாதுள்ளனர்.
சிறுவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
சிங்கள நாட்டுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை விகிதம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் நிலவும் விகிதத்திலும் பார்க்க அதிகமாக இருக்கிறது. பலமுறை சுட்டிக்
காட்டியும் புதிய தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்ப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள் தரம்
குறைந்தவையாகவும் குழறுபடிகள் நிறைந்தவையாகவும் உள்ளன. அவை பெரும்பாலும் சிங்கள மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நூல்களின் மொழிபெயர்ப்புக்களாகவே இருக்கின்றன. இவற்றிலுள்ள
எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, வரலாற்றுத் திரிபு போன்றவற்றை தமிழாசிரியர் சங்கம் கடந்த சில வருடங்களாகச் சுட்டிக்காட்டிய போதும் முன்னேற்றம்ஏற்படவில்லை.

இப்படியான விபரங்கள் நெசோர் (NESOHR) அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.

தமிழ்மொழி மூலமான கற்பித்தல் நடக்கும் பள்ளிக்கூடங்களில் கடந்த 10 வருடங்களாக 40% ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவருகிறது. 2005இல் புதிய ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். இவர்கள் தேவைக்கு எண்ணிக்கையில் உள்ளனர் என்பதோடு திறமையாகச் செயற்படுவதற்கு இரண்டிற்கும் மேற்பட்ட வருடகாலம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாத சுனாமியில் 24 கல்வி வலயங்களில் 09 கல்வி வலயங்கள் வடக்கு கிழக்கில் பாதிப்படைந்துள்ளன. 2005 ஜனவரியில் தொகுக்கப் பட்ட புள்ளி விபரங்களின்படி 2400 பள்ளிச் சிறுவர்கள் வட கிழக்கில் உயிரிழந்துள்ளனர். கல்முனை கல்விவலயத்தில் 1502, முல்லைத் தீவு கல்விவலயத்தில் 130, மட்டக்களப்பு கல்விவலயத்தில் 235, மூதூர் கல்விவலயத் தில் 217, அக்கரைப்பற்று கல்விவலயத்தில் 141.

54 பள்ளிக் கட்டடங்கள் முற்றாக அழிந்துள்ளன. அழிவுகளின் மொத்தப் பெறுமதி ரூபா 436மில்லியன். தளபாட இழப்பின் பெறுமதி ரூபா 72.8மில்லியன். கொம்பியூட்டர் கருவிகளின் இழப்புப் பெறுமதி ரூபா 49.1 மில்லியன். பகுதியாக இடிந்த பள்ளிக் கட்டடங்களின் இழப்புப் பெறுமதி 107.9 மில்லியன். வட கிழக்கு கல்விக்கந்தோர் கட்டடங்கள் இடிந்துள்ளன. அவற்றின் பெறுமதி ரூபா 21.4மில்லியன். மாணவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலதிக விபரங்கள் கிடைக்கும்போது இன்னும்
உயரலாம் என்று வட கிழக்கு மாகாண கல்வி நிர்வாக அலுவலகம் தெரிவிக்கின்றது. அதன் பிரசாரம் பிந்திக் கிடைத்த கணக்கின் படி முல்லைத்தீவில் 800 பள்ளிச் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 16 பள்ளிக் கட்டடங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 1938 பொதுமக்கள் முல்லைத்தீவில் இறந்திருப்பதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக் கின்றது.

படையினர் அமைதி உடன்படிக்கைக்குப் பின்பும் வட கிழக்குச் சிறுவர்களின் கல்விக்கு ஊறுவிளைவித்து வருகின்றனர். வலிகாமம் வடக்கில் முன்பு 46 பள்ளிக்கூடங்கள் இருந்தன. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 29 பள்ளிக்கூடங்களில் 16 மூடப்பட்டுவிட்டன. மிகுதி 13 பள்ளிக் கூடங்களும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே தற்காலிக இடங்களில் செயற்படுகின்றன. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சுன்னாகம் கந்தரோடையில் தனியார் வீடுகளில் இயங்குகின்றது. பள்ளிச்சிறுவர்களின் வருகை மிகக் குறைவாகக் காணப்படுவதால் அது மிக விரைவில் மூடப்படலாம் என்று கல்வித் தலைமை தெரிவிக்கின்றது. இராணுவத்தின் தலையீடு ஆரோக்கியமான கற்கைக்கு இடையூறாக இருப்பது கண்கூடு. பள்ளிக் கூடங்களின் வாசல்களில் இராணுவத்தினர் கூட்டம் கூட்டமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்த முடியாது. அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே உள்ள பாடசாலைகளும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. காலையில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லும் அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையான துருப்புக்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வாகனங்கள் தெருக்களில் அதி வேகமாக ரோந்து செல்கின்றன. இது சிறுவர்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும் செயற்பாடாகும்.

வட கிழக்குச் சிறுவர்களின் கற்கையில் படையினரின் தலையீடு நன்கு திட்டமிட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. யாழ். குடாவின் பிரதான பள்ளிக் கூடங்களையும் யாழ்.பல்கலைக் கழகத்தையும் நலிவுறச் செய்வதே சிங்களப் படையினரின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. பருத்தித்துறை ஹாட்லி ஆண்கள் கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் கல்லூரி என்பன படையினரின் பிடியில் இருக்கின்றன. இப்பள்ளிக்கூடங்களின் விளையாட்டுத்திடல் இராணுவத்தினரின் தேவைக்காகச் சுவீகரிக் கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் உடற்பரிசோதனைக்குப் பின்பு பள்ளிக்கூடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் இந்த நடைமுறை காணப்படுகிறது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒரு பகுதி இராணுவத்தினரின் பாவனைக்கு
எடுக்கப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள பள்ளிக்கூடங்கள் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

ஏறத்தாழ 52 யாழ்.குடாநாட்டுப் பள்ளிக்கூடங்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ளன. சென்றவருடம் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தைத் திருத்தி புதிய கட்டடம் அமைப்பதற்காக கட்டிடப் பொருள்களை பெப்பிரவரி 03, 2005ஆம் நாள் கொண்டு சென்றபோது படையினர் நுழைவு அனுமதியை மறுத்தனர். எழுதுமட்டுவாள் வடக்கில் ஐந்து கிராமங் களைச் சேர்ந்த சிறுவர்கள் கல்விகற்கும் எழுதுமட்டுவாள் வடக்கு சாவகச்சேரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நிலைகொண்டுள்ள படையினர் அதைவிட்டு விலக மறுக்கின்றனர். மட்டக்களப்பு கொம்மாந்துறை விநாயகர் வித்தியாலய வளாகத்தை படையினர் தமது தேவைக்குப் பயன்படுத்துகின்றனர். கடும் உடற்பரிசோதனைக்குப் பின்பு மாணவர்களும் ஆசிரியர்களும் இப்பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பது பள்ளிவாழ்வை உள்ளடக்கியதாக இருப்பதால், வட கிழக்கு மாணவர்களின் இயல்புவாழ்க்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

-தொடரும்
கலாநிதி க. சோமாஸ்கந்தன்
விபு இதழ் : மாசி-பங்குனி 2006

தொகுப்பு :தமிழரசன்அப்துல்காதர்

Thursday, 13 August 2026

புரியாத புதிர்.

புரியாத புதிர்
~~~~~~~~~~~~
முல்லைத்தீவு நகரம் இந்திய இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம். நகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன.

அவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன. தொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில நாட்களிலேயே அந்தச் சூழலோடு அவன் ஒன்றித்துப்போனான்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவான். அவனுடைய பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. ஊரிலுள்ள மாணவர்களும் சாரி சாரியாக வந்துகொண்டிருப்பார்கள். கிரவல் வீதியை முதன் முதலில் அவன் தரிசித்தான். அந்த வீதியின் நிறம் அவனுக்குப் புதுமையானதாகவே இருந்தது. எப்போதாவது ஒரு ஊர்தி புழுதியைக் கிளப்பி விரைந்தது.

காட்டையும், பனங்கூடல்களையும், குடிமனைகளையும் இரசித்தபடி பள்ளிக்கூடத்திற்குப் பயணிப்பான். சின்னாற்றுப் பாலத்தை நெருங்க அவனது சிந்தனைகள் சிறகடிக்கத் தொடங்கும். நாள்தோறும் சின்னாற்றைத் தரிசித்தபோதும் தெவிட்டாத காட்சியாய் அது அவனது மனதில் விரிந்துகிடக்கும்.

பள்ளிக்கூடம் விட்டுப் பசியோடு வந்துகொண்டிருந்தாலும் சின்னாற்றுப் பாலத்தில் பசி பஞ்சாய் பறந்துபோகும். ஒருபக்கம் தொடுவாயைத் தாண்டி பெருங்கடல் பரந்திருக்கும்.

இன்னொரு பக்கம் தொடுவாய் நீர் வளைந்து மறைந்திருக்கும். அதற்கப்பால் நந்திக்கடலோரப் பனங்கூடல்களின் தலைகள் தெரியும். கோடைகாலத்தில் சின்னாற்றில் மிதந்திருக்கும் பாறையில் முதலைகள் வாயைத்திறந்தபடி படுத்திருக்கும்.

மாரிகாலம் முற்றிய நாட்களில் சின்னாற்றுப் பாலத்துக்கு மேலால் தண்ணீர் பாயும். அந்தத் தண்ணீரோடு மீன்களும் பாய்ந்து பாலத்தில் விழும். அதனைப் பிடிப்பதற்கு ஊரவர்கள் குழுமியிருப்பார்கள். இந்த நாட்களில் சில வேளைகளில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அவனுள் கவலை குடிகொள்ளும். சின்னாற்றுப்பாலம் சின்ன மனதில் சிறகடிக்கும்.

இந்தியச் சிப்பாய்கள் சின்னாற்றுப்பால முடிவில் முகாம் அமைத்த நாளிலிருந்து அவனது சின்னாற்றுப்பால இரசனை குறைந்துபோயிற்று. பாலம் நெருங்கப் பயமே அவனைப் பீடித்தது.

தொடும். உப்புக்காற்றில் அவர்களின் முகாமின் அடையாளநெடி காற்றில் கலந்து மூக்கைத் தொடும்.

இந்தியச் சிப்பாய்கள் நேரகாலமின்றித் தேங்காய்களை உடைத்துச் சப்பிக் கொண்டிருந்தார்கள். சில சிப்பாய்களின் கண்கள் பள்ளி மாணவிகளை விழுங்கிக் கொண்டிருந்தன. அந்த முகாமுக்குப் புதிதாக இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவன் வந்திருந்தான். அவனின் தோற்றம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மையாய் இருந்தது. சரளமாகத் தமிழ் கதைத்தான். அந்த அதிகாரி பல இடங்களில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்திருந்தான். இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் இறுமாப்பாய் நடப்பான். அவர்களின் காவலரணிலிருந்து சிறிது தூரத்தில் போராளியால் ஒருநாள் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். ஊரவர்கள் உளமார மகிழ்ந்தார்கள்.

இந்திய ஜவான்களின் சுற்றிவளைப்பும், தேடுதல்களும், கைதுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தன. சில நாட்களில் இரவு வேளைகளில் தாறுமாறாகச் சுட்டபடி வருவார்கள். அவனும் ஊரவர்களோடு ஓடி காட்டுக்குள் பதுங்கியிருந்திருக்கிறான்.

அமைதிப்படையாக வந்தவர்களின் கொடுமைகளால் ஊரவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டபோது ஒரு இந்தியச் சிப்பாயின் செயற்பாடு சற்று மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது. சுற்றிவளைப்புக்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி உதவியிருக்கிறான். அவன் ஒரு தமிழ்நாட்டுக்காரன்.

அவன் பள்ளிக்கூடம் போகும்போது அந்தச் சிப்பாய் அவனோடு கதைப்பான். அவனுக்குப் பயமாக இருந்தபோதும் அந்தச் சிப்பாயின் செயற்பாடு பிடித்திருந்தது.

ஒருநாள் பள்ளிக்கூட நேரத்தில் சிலாவத்தைப் பக்கம் சூட்டுச் சத்தங்கள் அகோரமாய்க் கேட்டன. போராளிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையே மோதல் வெடித்திருந்தது. சில மணிநேரத்தில் சத்தம் ஓய்ந்துபோனது.

அவன் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான். காவலரணிலிருந்த சிப்பாய்கள் முழுசிக் கொண்டிருந்தார்கள். வேர்த்துக் களைத்திருந்த தமிழ்நாட்டுச் சிப்பாய் அவனைக் கூப்பிட்டான்.

என்ன உங்கடை ஆக்கள் வண்டியில (ஊர்தி) பூட்டி அடிக்கிற ஆயுதத்தை எல்லாம் கையிலைவைச்சு அடிக்கிறாங்கள். எங்களிலை நாலுபேரு லொஸ்ற்” - அவனுக்கு அன்று அந்தச் சிப்பாயின் பேச்சுப் புரியாத புதிராக இருந்தது. ஆனால் இன்று அவனும் ஒரு போராளியென்பதால் அது புரியாத புதிராக இருக்கவில்லை.

-ஆ.ந.பொற்கோ
விபு இதழ் :மாசி-பங்குனி 2006.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

மேதகு

பிரபாகரன் 🐅

மாநில சுயாட்சிக்காகப் பிறப்பெடுக்கவில்லை.

காலம் நம்மிடம் தலைவனைத் தந்தது,

ஒழுக்குநீரில் தாகம் தணிக்கவல்ல.

கனகாலம் அழுதபடி கிடக்கிறாய் !

உனக்கொருவனைத் தருகிறேனென

இடியுண்டு கிடந்த எமக்குள்ளே

காலம் இறக்கிய பிள்ளையல்லவா கரிகாலன்.

கையிற்சுடரும் கற்பூர விளக்கொளியை

கனம்பண்ணத் தெரியாமல்

கரைந்துபோகும் திசையிற்தானே

நாங்கள் கணக்கெழுதுகிறோம்.

இனியும் வேண்டாம் இந்த இழிநிலை.

குனிந்து குனிந்து முதுகே கூனாகி

அழிவதற்கல்ல உன் அவதாரம்.

போராட்டமும்

அதன்மூலம் எட்டும் விடுதலை எல்லைகளும்

உனக்கானதல்ல

உன் தலைமுறைக்கானது.

-புதுவை இரத்தினதுரை

தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்.

தவளைத் தாக்குதலில் துணைப்படையினர். 
~~~~~~~~~~~~~~~~~~~
1993 ஆம் ஆண்டு, கார்த்திகைத் திங்கள் 1 ஆம் நாள். மணலாற்றுத் துணைப்படை முகாமிற்கு முல்லை மாவட்டத் துணைப்படையில் பெரும் பகுதியினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

 2 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணிக்கு தளபதி முகாமிற்கு வருகை தந்திருந்தார். சில நிமிட கலந்துரையாடலின் பின்னர் அணிகள் தனித்தனி பிரிக்கப்பட்டன. 

சண்டை ஒன்றுக்குச் செல்லப்போகின்றோமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது ஆனால் எங்கே,எப்போது என்பது மட்டும் எவருக்கும் தெரியாது.

 "எங்களுக்குள் என்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை இங்கு வந்து கதைத்துக் கொள்வோம்; அதுவரை பொறுமையாக இருந்து, தரப்படும் பணிகளைச் செய்து, முல்லை மாவட்டத்தின் பெருமையை, துணைப்படையின் பெயரினைக் காப்பாற்றிப்போடுங்கோ" என்ற வார்த்தைகளை மட்டும் எமது மாவட்டத்தின் தளபதி, மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டார். 

மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. வீட்டு நினைவுகளிலிருந்து அனைவரும் விடுபட விரும்பினோம். சமையல் கொட்டிலில் இருந்த குடமொன்று எமது அணியினர் இருந்த பகுதிக்கு வந்துசேர்ந்தது.அதுதான் மிருதங்க இசைக்கருவி. பாடத் தொடங்கினார்கள். பாடத் தெரியாது என்று எவரும் இருக்கவில்லை. அனைவருமே பாடகராய் மாறினர். புரட்சிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், பக்திப்பாடல்கள் எல்லாம் மாறிமாறி வந்தன. இனம்புரியாத இன்பமும் துன்பமும் கலந்த இரவாக அது நகர்ந்துகொண்டிருந்தது. பசியும் இல்லை; தூக்கமும் இல்லை. இரவு 11.30 மணியிருக்கும். வெளியே சென்றிருந்த தளபதி மீண்டும் வந்திருந்தார். தூறலாகத் தொடங்கிய மழை வேகமாகக் கொட்டியதை, தளபதி நன்றாக நனைந்து வந்ததிலிருந்து அறிந்து கொண்டோம்.

" எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா?" என்று தளபதி கேட்ட கேள்விக்கு, "ஆம் என்று எல்லாரும் ஏககாலத்தில் பதில் கொடுத்தார்கள் ஆனால் பலர் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். சண்டையென்று புறப்பட்டு விட்டால் சாவு வருவதும் தவிர்க்கமுடியாததென்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் வீணாக நாங்கள் மரணிப்பதற்கு எமது வீரர்கள் சந்தர்ப்பம் கொடுக்கமாட்டார்களென்பதும் தெளிவாகத் தெரியும். இருந்தாலும் சாப்பிடுவதில் எவருக்கும் புலன் செல்லவில்லை. ஒழுக்கவிதிகள் பற்றி சில நிமிடங்கள் கலந்துரையாடிய பின்னர், ''எல்லோரும் ஓடிச்சென்று வாகனங்களில் ஏறுங்கோ" என்ற பணிப்பு விடுக்கப்பட்டது. ஓடிச்சென்று ஏறினோம். ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து வாகனங்களும் புறப்படத் தொடங்கின. இருளைக் கிழித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது.எமது மாவட்டத்தை விட்டு வெளியே செல்கின்றோமென்ற உண்மையை, சற்று நேரத்தின் பின் அனைவரும் தெரிந்துகொண்டனர்.

மனித நடமாட்டமற்ற காட்டுவழியில் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன .

எல்லோரும் ஒருவரை ஒருவர் கேள்விக்குறியுடன் நோக்கியவண்ணம் இருந்தனர். 

பலருக்கு ஏற்கெனவே அந்தப் பாதை தெரிந்திருந்ததால் எங்கே செல்கின்றோமென்பதைத் தெரிந்துகொண்டனர்; இருப்பினும் மௌனமாக இருந்தனர்.அன்றிரவு அமைதி யாகவே விடிந்தது.

மறுநாட் காலை 9.00 மணியளவில் அனைவரும் ஒன்றுகூடினோம். மன்னார் மாவட்டத் தளபதி எம்முடன் கலந்துரையாடினார். “நீங்கள் என்ன பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளீர் களென்பது எனக்குத் தெரியும். உங்களுடைய பணிக்குரிய நாள் வரும்வரை எங்களுக்கு இன்னுமொரு பணி செய்து தரவேண்டும். அதுவும் ஒரு பொறுப்புமிக்க பணிதான். சமையற் பணிதான் அந்தப்பணி. 

இது உங்களுக்குப் புதிய இடம். கண்டபடி வெளியே செல்லாதீர் கள். எங்களுடைய வெற்றிக்கு உங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இன்று மாலையிலேயே சமையல் பணியைத் தொடங்கலாம்" என்று அவர் சொல்லிக்கொண்டார். 

பூநகரி இராணுவ முகாம் தாக்குதலுக்கு உதவிப்பணிக்காக நாம் வந்துள்ளோமென்ற உண்மை, அனைவருக்கும் தெளிவாயிற்று. எமது மாவட்டத்தை விட்டு ஏன் இங்கு எங்களை அழைத்துவந்தார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஒருமுறை தோன்றினாலும், அடுத்த கணம் அது மறைந்து போயிற்று. மணலாற்றுத் துணைப்படை (முல்லை மாவட்டம்) மன்னார் சண்டையில் பங்கெடுத்தார்களென்ற பெருமை மட்டுமல்ல, தமிழீழ மக்களை இது விழிப்படையவும் செய்யும் என நினைத்துக்கொண்டோம். இதனை விட எங்களை வளர்த்துப் பெருமை சேர்த்த அன்பண்ணனின் பிறந்த மண்ணை விடுவிக்கும் சண்டைக்கு வந்துள்ளோம் என்ற மகிழ்வு புதிய உற்சாகத்தினைக் கொடுத்தது.

எங்கள் பணி அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைத்தபோது, அனைத்துத் துயரங்களும் பறந்துபோயிற்று.

சண்டை உடனே தொடங்கும். ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என நினைத்தோம். சமையல் அடுக்குகளைப் பார்த்த போது,நாலைந்து நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரிந்தது. ஒவ்வொரு நாள் இரவும் புதிய அணிகள் வந்து கொண்டிருந்தன . அதற்கேற்ப சமையல் அளவும் அதிகரித்தது. 8 ஆம் திகதி காலையிலிருந்து சமையலைத் திட்டமிட்டு நடாத்த வேண்டியிருந்ததால், நான்கு அணிகளாகப் பிரிந்து சமைக்கத் தொடங்கினோம். தொடர்ச்சியான சமையல் சற்றுக் களைப்படைய வைத்திருந்தது. ஆனால் எமது போராளிகள் இரண்டு மூன்று மாதங்கள். இரவு பகல் பாராது எடுத்த கடுமையான பயிற்சியை நினைத்த போதெல்லாம் களைப்பு தெரியாதுபோயிற்று. 

ஒரு வாரத்துக்கு
மேலாகிவிட்டதாலும், புதிய பழகிய போராளிகள் பலர் வந்து உரையாடத் தொடங்கியதாலும் வீட்டு நினைவுகள் மறந்துபோயின.

மகிழ்வடையச் 1993/11/9ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலையில், மூத்த தளபதி சொர்ணமும் எமது மாவட்டத்தின் தளபதியும் வந்தனர். சலிக்காத எங்களின் பணி அவர்களை மகிழ்வடைய செய்தது.
 உற்சாகம் தரும்வகையில் எம்முடன் கலந்துரையாடிவிட்டு, நாளைக்காலையில் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தனர். சண்டை, நாளை தொடங்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்தோம். ஏனெனில் அதற்கான இறுதி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

தொடர்ச்சியாக நெருப்பு
வெக்கையில் நின்றதாலும், குளிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமையினாலும் எம்மில் பலருக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. அருகே இருந்த மந்துக் காட்டில் மழைக்குத் தேங்கிய தண்ணீரை குளமென்று சொல்லி, பலர் குளிக்கச் சென்றார்கள். அதைக் குளம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதன் பக்கத்தில் நாலைந்து நாவல் மரங்கள் நன்கு பழுத்து நின்றன. நாவலும் எம் வீரர்களும் பட்டதேபாடு. இரண்டு நாட்களில் மரத்தை வெட்டைகண்டார்கள்.

1993/11/10 ஆம் நாள் புதன்கிழமை காலையிலிருந்து, சமையல் பணியிலிருந்து எமக்கு ஓய்வு தரப்பட்டது. நோயாளிகள் அணிகள் சீர் செய்யப்பட்டன. 9ஆம். திகதி இரவு வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களிலி ருந்தும் துணைப்படை அணிகள் பல வந்தன. காலை உணவுக்குப் பின் சொர்ணமண்ணனும் எமது மாவட்டத் தளபதியும் வந்திருந்தனர். அனைவரும் அணிவகுத்து ஓரிடப்படுத்தப்பட்டோம்; சொர்ணமண்ணன் எங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்:

"இன்று இரவு நாம் பூநகரி இராணுவத் தளத்தைத் தாக்கி அழிக்கப் போகின்றோம். இத் தாக்குதலில் வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படைமுகாமில் ஒரு கேணல் உட்பட இரண்டாயிரம் இராணுவத்தினர் வரை இருக்கின்றனர். ஒருநாள் அல்லது இரண்டுநாள் அல்லது மூன்றுநாட்கள்கூட இந்தச்
சண்டை நீடிக்கலாம்;ஆனால் வெற்றி எங்களுக்குத் தான். நாம் அடித்து முன்னேறிக் கொண்டிருப்போம்.
காயமடைந்த வீரர்களையும், இராணுவத்தின் படைக்கலன்களையும் உடனுக்குடன் நீங்கள் தான் எடுத்துச்செல்லவேண்டும். நீங்கள் சண்டைக்கு இறங்கத் தேவையில்லை. தேவையான வீரர்கள் அதற்காக இருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இராணுவ உபகரணங்களையும் எமது காயமுற்ற வீரர்களையும் வேகமாக வெளியே எடுத்துவருவதுதான். நீண்டதூரம் இவற்றை எல்லாம் நீங்கள் தூக்கத் தேவையில்லை. உள்ளே நூற்றுக்கணக்கான 
உழவியந்திரங்கள் வருவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன; அவற்றையும் நீங்கள்தான் ஓட்டிச் செல்லப்போகின்றீர்கள். இந்த வெற்றி எமது விடுதலைப் போரினை புதியபாதைக்கு இட்டுச் செல்லும். புலிகளின் கழுத்து நெரிக்கப்பட்டுவிட்டது; அவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கருதும் சிங்கள அரசுக்கும், இராணுவத்துக்கும் எமது பலம் எத்துணை வலிமையானதென்பதைச் செயல்மூலம் எடுத்துக்காட்டப் போகின்றோம். எமது இந்தத் தாக்குதலின் வெற்றிக்கு, மண்கிண்டி இராணுவ முகாம் தகர்ப்புக்கு எவ்வாறு ஒத்துணையாகவிருந்து செயற்பட்டீர்களோ, அதேபோன்று செயற்பட வேண்டும்; செயற்படுவீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு.'" ஆம்" என்று அனைவரும் ஒருமித்துப் பதில் கூறினர். "உங்களை நம்பி ஏணிப்படிகளில் நாங்கள் ஏறலாமா? ஏணியை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வீர்களா?" என்றபோதெல்லாம்
உற்சாகமாக, " ஆம் " என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

மாலை 4.45 மணியளவில் சத்தியப்பிரமாணத்துடன் படை நகர்வுகள் ஆரம்பமாகின. மாலை 6 மணிக்கெல்லாம் மழை கொட்டத் தொடங்கியது என்றுமில்லாதவாறு அன்று வானம் இடிந்துவிழுவது போன்று ஊற்றியது. நனைந்தபடியே முகாம்நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்; மழைக்காகக் காத்திருந்தால் இலக்கைத் தவறவிடவேண்டி ஏற்படும். எதிர்நீச்சல் போட்டே வெற்றிகண்டு பழகிப்போன போராளிகள் அல்லவா!

பாழடைந்த பிரதான வீதி எங்கும் வெள்ளம் தேங்கி நின்றது. கொட்டும் மழையிலும் இலக்கினை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெண் போராளிகளைப் பார்த்தபோது, எங்களுக்கெல்லாம் புதியவேகம் பிறந்தது: எறிகணைகள், கனரக ஆயுதங்கள் என்பவற்றைச் சுமந்து கொண்டு எவ்வளவு வீராவேசத்துடன் ஓடிக் கொண்டிருந்தார்கள்! உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்துணை பலம்வாய்ந்த பெண்கள் படையணி இருந்திருக்கமுடியாது.

இரவு 10.00 மணிக்கெல்லாம் இராணுவ முகாமை அண்மித்துள்ள இடங்களில் நின்றிருந்தோம். எம்மைத்தாண்டி எம் தியாகக் குழந்தைகள் முன்னேறினர். வயல்வெளிகள் எங்கும் வெள்ளம் தேங்கி நின்றது. மழைவிட்டிருந்தது. இராணுவ முகாம்களைத் தாக்கும் எல்லைக்குள் செல்வதற்கு அன்றைய இயற்கையின் செயல் பெரிதும் சிரமத்தைக் கொடுத்தது. இருப்பினும் பல மாதங்கள் அவர்களெடுத்த பயிற்சியின் முன்னே, அது தூசாகிவிட்டது. இராணுவ முகாமில் சுழன்று கொண்டிருந்த தொலைதூர ஒளிபாய்ச்சும் மின்குமிழ் தன்வேலையைச் செய்து கொண்டேயிருந்தது. இடையிடையே இராணுவத்தினர் தாம் விழிப்புடன் இருப்பதை துப்பாக்கி வேட்டுக்களால் காட்டினர். இது எங்களுக்குப் புதுமையாக இருந்தாலும் எமது வீரர்களுக்குப் பழகிப்போனதொன்று.

நடு இரவு தாண்டிவிட்டது. திடீரென துப்பாக்கிகள் பல வேகமாக இயங்கத் தொடங்கின. கடிகாரத்தைப் பார்க்கின்றேன். 1.35 காட்டியது. அனைத்துத் திசைகளிலும் வெளிச்சக் குண்டுகளை படையினர் வீசினர். திரும்பும் திசையெங்கும் எறிகணைகளும், துப்பாக்கிக் குண்டுகளும் வீரமுழக்கம் செய்தன. உடலிலுள்ள ரோமங்கள் குத்தி நின்றன. சில மணித்தியாலங்களில் எங்களின் பணி ஆரம்பமாகியது. காயமுற்ற எமது வீரர்களை, உயிர் கொடுத்த உத்தமர்களைச் சுமக்கத் தொடங்கினோம். எங்களின் வேகத்தைவிட எமது வீரர்கள் பலநூறு மடங்கு வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். வேதனை ஒருபுறமும் மகிழ்வு ஒரு புறமுமாக ஓடிஓடிச் சுமந்தோம். எமது வாகனச் சாரதிகள் வேகமாகவும், சாதுரியமாகவும் இயங்கிக் கொண்டிருந்தனர். சிங்கள தேசத்தின் வான் படை விமானங்கள் அனைத்தும் முழுவேகத்தில் செயற்பட்டன. அவற்றின் தாக்குதலைக் கருத்தில் கொள்ளும் மனோநிலை எவரிடமும் இருக்கவில்லை.

தூக்கம், துயர்களை மறந்து தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எம் வீரர்களைப் பார்த்தபோது தலை சுற்றியது; கண்ணீர் பொங்கியது. சிரித்துச்சிரித்தே எதிரியின் காப்பரணை நோக்கி ஓடினார்கள். வீர விளையாட்டொன்று, வெற்றியும் சோகமும் நிறைந்த வீர சாகசமொன்று நடந்துகொண்டிருந்தது. மக்களின் துயர்துடைக்க ரத்த வேள்வி ஒன்று நடந்து கொண்டிருந்தது. துப்பாக்கிக் குண்டுகளின் நடுவே புயலாய்ப் பாய்ந்து கொண்டிருந்த பெண் புலிகளைப் பார்க்கின்றேன். என்ன வீரம், என்ன தியாகம், இவர்களின் வீரத்துக்கு மலையை ஒப்பிடுவதா வானத்தை ஒப்பிடுவதா கடலை ஒப்பிடுவதா......? விளங்காத விந்தையான வீரத்தைக் கண்டு கொண்டிருந்தேன். நான்கு திசைகளிலிருந்தும் வந்த வெற்றிச் செய்திகளை ‘வோக்கி ரோக்கிகள் முழங்கிக் கொண்டிருந்தன. அன்று பகல் வந்ததும், பின் இரவு வந்ததும் பிரமை போலிருந்தது.

நாகதேவன் துறை கடற்படைத் தளமும் ஏனைய மூன்று படை முகாம்களும் அன்று முழுமையாக அழிக்கப்பட்டிருந்தன. எஞ்சியிருந்த ஒரு படை முகாமைத் தாக்கி அழிப்பதற்கான புதிய சண்டைகள், அன்று இரவே ஆரம்பமாகின. அன்றைய இரவுதான் எம்மையெல்லாம் வளர்த்தெடுத்த அன்பண்ணனின் வீரம் அவர் பிறந்த மண்ணில் விதையாகின்றது. நடு இரவு தாண்டி விடிகின்ற காலையில் அவர் முடிவு எம்மை எட்டுகின்றது. பசிமறந்து, களைமறந்து, தூக்கம் மறந்து அழுதோம்; அழுதால்தான் மனம் ஆறும். துணைப்படையை உருவாக்கி, எல்லையில் எம்மைத் துணிவோடு நிறுத்தி வேண்டிய போதெல்லாம் விரும்பிய துப்பாக்கிகளைத் தந்து, திசை மாறி நின்றவர்க்கு நேர்வழிகாட்டி, பூநகரிவரை வரும் துணிவைத் தந்து வளர்த்த 'அன்பு' அண்ணன், பிறந்த மண்ணில் மரணிக்கும் பாக்கியம் பெற்றுவிட்டார். கண்முன் மறையாது நிற்கும் அந்தக் களநினைவுகளில், கடல் நின்று களம் வென்ற கடற்புலிகளின் வீரத்தை எழுதுவதா...? எதிரியின் உடல்மீது ஏறி நின்று புறம் பாடிய பெண்புலிகளைப்பற்றி எழுதுவதா......? வான்படை வட்டமிட வைத்த அடி நகராமல் சிங்களத்தைச் சிதறடித்த வீரப்புதல்வர்களின் விந்தைகள் எழுதுவதா......? எதிரியின் டாங்கியை எடுத்து ஓடி வந்த எங்கள் மறக்குலத்தின் வேகத்தை எழுதுவதா......? நாமென்ன எழுதுவது; உலகவரலாறே தன் சாதனைப் புத்தகத்தில் எழுதிவிட்டது!

வெற்றிமேல் வெற்றியை, துயரத்தின் சுமை களை, இழக்கக்கூடாத எங்கள் 'அன்பைச்' சுமந்தவர்களாய் நீங்காத நினைவுகளோடு- 14ஆம் திகதி அதிகாலை மணலாறு நோக்கி எம் பயணம் தொடர்ந்தது.

-மணலாறு விஜயன்

-விடுதலைப்புலிகள் இதழ் : மாசி 1994.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

வெந்துதணியாது இந்த வீரநிலம். -புதுவை இரத்தினதுரை

ஒன்றுமட்டும் உறுதி, 
இனியுமெம் தேசம் படுக்காது. குனிந்தெவருக்கும் குற்றேவல் செய்யாது. 
தேவநிலை வந்தெய்தினும் தாயகக் காதல் மட்டும் தணியாது. 
சாவரினும் தளரோம் இதுசத்தியம். யார்வரினும் பணியோம் இதுசத்தியம். போரெடுத்தோம் வெல்வோம் இதுசத்தியம் .
வெந்துதணியாது 
இந்த வீரநிலம்.

பகையுழுது போகலாம் உங்கள் படுக்கைகளை தகையழிந்து போகுமோ சந்தனக்காடுகள்? 

வேரறுந்து வீழுமோ விடுதலை?

ஊரெரிந்தும், உயிர்பிரிந்தும் போகலாம் பிரியும் நொடியிலும் உம்மையே பேசுமெம்வாய். 
விரியும் மலரிலும் தெரியுமும் முகம். உமக்கருகில் எமக்கும் வேண்டும் ஓர்குழி. 
உறவுகள் வந்து விளக்கேற்ற உள்ளேயிருந்து நாமும் சிரிப்போம் ஓர்நாள். 
அதுவரை ஓயாதெம் அலைகள்.

எத்தனை புயல்களும் எழுந்து வீசட்டும் சித்தம் கலங்கிச் சிதறோம். 
எத்தனை துயரெனினும் அழுத்தட்டும் அத்தனை வரிப்புகளையும் ஆனந்தமாக்குவோம். 
விடுதலை எங்களின் பேச்சு. 
விடுதலை எங்களின் மூச்சு. 
விடுதலை நெஞ்சிற் பதியம்போட்ட நாற்று.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி.

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி.

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி.

இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.

-புதுவை இரத்தினதுரை.

லெப்.சங்கர். ஈகத்தின் முதல் வித்து.

"லெப் சங்கர் 
~~~~~~~~~~~~~
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக்கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.

சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப்.சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு.., வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய புலிகளின் பாசறையை அடைந்தார். தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். 

இளைஞன்... தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறி வைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரியவேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கமுடியாது. நேரத்திற்கு உணவு கிடைக்காது. அல்லது பலநாட்கள் உணவின்றியே இருக்கவேண்டும். இவற்றை யெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா...?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.

“ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர்.

ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில்
போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்திய நாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைபெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்... சங்கராக மாறினான்.

சங்கரின் உள்ளத்தைப்போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடிக் கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக... சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறிபார்ப்பதிலும் ஆங்கில சினிமாப்படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.

சங்கருக்கு குறிபார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு. தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.

1979 வைகாசியிலே இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.

1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.

1982 ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத்துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை .

முதலில்... எதிரியின் வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்டகாலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.

இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித்தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றை யெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாளராக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்... 

இதை மோப்பம் பிடித்துவிடுகின்றது கூலிப் படை... 

வீடு முற்றுகையிடப்படுகிறது...

முற்றுகை முற்றுமுழு தான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஒடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள். 

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப் பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார்
படகு தயார் செய்யப்பட்டது.

பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27.11.1982 அன்று...  புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான்...

தலைவர் தம்பி பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.

தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற் புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான பேராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களை யெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த நாள் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

-எரிமலை,நவம்பர் 2000.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர் 

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை இரந்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு

குறள் :780