ஒன்றுமட்டும் உறுதி,
இனியுமெம் தேசம் படுக்காது. குனிந்தெவருக்கும் குற்றேவல் செய்யாது.
தேவநிலை வந்தெய்தினும் தாயகக் காதல் மட்டும் தணியாது.
சாவரினும் தளரோம் இதுசத்தியம். யார்வரினும் பணியோம் இதுசத்தியம். போரெடுத்தோம் வெல்வோம் இதுசத்தியம் .
வெந்துதணியாது
இந்த வீரநிலம்.
பகையுழுது போகலாம் உங்கள் படுக்கைகளை தகையழிந்து போகுமோ சந்தனக்காடுகள்?
வேரறுந்து வீழுமோ விடுதலை?
ஊரெரிந்தும், உயிர்பிரிந்தும் போகலாம் பிரியும் நொடியிலும் உம்மையே பேசுமெம்வாய்.
விரியும் மலரிலும் தெரியுமும் முகம். உமக்கருகில் எமக்கும் வேண்டும் ஓர்குழி.
உறவுகள் வந்து விளக்கேற்ற உள்ளேயிருந்து நாமும் சிரிப்போம் ஓர்நாள்.
அதுவரை ஓயாதெம் அலைகள்.
எத்தனை புயல்களும் எழுந்து வீசட்டும் சித்தம் கலங்கிச் சிதறோம்.
எத்தனை துயரெனினும் அழுத்தட்டும் அத்தனை வரிப்புகளையும் ஆனந்தமாக்குவோம்.
விடுதலை எங்களின் பேச்சு.
விடுதலை எங்களின் மூச்சு.
விடுதலை நெஞ்சிற் பதியம்போட்ட நாற்று.
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.
No comments:
Post a Comment