Wednesday, 17 June 2026

வரலாற்றின் வெளிச்சத்தில் புதிய கோலங்கள் (1)

வரலாற்றின் வெளிச்சத்தில் புதிய கோலங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
வரலாற்றின் வெளிச்சத்தில் விடுதலைப் போராட்டத்தின் புதிய கோணங்களை இனம் காண்பிப்பதில் பெருமையடைகின்றோம். தமிழீழத்தின் தேசிய ஆன்மாவை ஏறி மிதித்து அதன் குருதியை வடியச் செய்து இயல்பாக வாழ்ந்தவர்களை ஏதுமற்ற வர்களாக்கினார்கள். எம்மக்கள் திகைத்து செயலற்று நின்ற பொழுது "கற்பனையில் மட்டும் காலம் கழிக்காது செயல் ரீதியாக எதையாவது செய்யவேண்டும் என எண்ணினேன். எமது தமிழினத்திற்கு செயற்பாட்டுத் தன்மையே தேவையானது என நம்பினேன்" என நம்பியவர் அணிசெயற்படத் தொடங்கியது. சிங்கள அரச வன்முறைக்கெதிரான அவ்வணியின் சார்பான தொடக்க நிலை வன்முறைகள் அன்று காட்டிய கோலங்களை அதன் உடனடிவிளைவுகளை கண்டு விபரீதப்பட்டோர் இன்று தமது பட்டறிவின் வெளிச்சத்தில் தவறுகளை திருத்தி பாதைகளை சரிபார்த்துக் கொள்கின்றனர்.

ஏனெனில் உண்மையிலேயே, ஒரு விடுதலைப் போராட்டம் உண்மையானதாக விருந்தால் அது தான் சார்ந்த இனத்தின் தேசத்தின் விடுதலையோடு மட்டுப்படுவதில்லை. தனது தளைகளை கட்டறுக்கும் வேளையில் இன்னும் பலரது தலைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டறுத்துவிட உதவிடுகின்றது. ஒரு பெரும் வரலாற்று மாயைக்குள், சதிக்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் தமிழீழம் படிப்படியாக விடிவினைக் காணும் போராட்டத்தின் போதே தமது தளைகளையும், கட்டறுக்கும் வாய்ப்பினையும் பெறுவர். தமிழீழ மக்கள் தமது விடிவினை பெற வரலாறு வழங்கும் வாய்ப்பே சிங்களவரும் அழிவு நிலையிலிருந்து ஆக்க நிலைக்கு தம்மை இட்டுச் செல்ல வழி வகுக்கும். முன்னாள் / இன்னாள் மாக்சியசியவாதிகள் ஏன் இன்றைய ஜே. வி. பி காரர்கள் என்ன சொல்கின்றார்கள்? சிங்கள, சர்வதேச முதலாளிமார்களுக்கெதிராக இருவினத்தாரும் சேர்ந்து போரை வெற்றி கண்டாலே விடிவு என்கிற அவர்களது வருக்க சிந்த (?) னைக்கு மாற்றாக இவர்கள் குறிப்பிடும் ஆதிக்க வருக்கசக்திகளை தனித்து போராடி பலவீனமடையச் செய்வதின் மூலம் சிங்களவர்க்கும் ஒரு வாய்ப்பு புலிகளால் வழங்கப்படுகின்றது. சொல்லிச் சொல்லியே செய்யாமல் மயங்குகின்றனர் தத்துவ வாதிகள். சொல்லாமலே சொல்லாமலே செய்கின்றனர் புலிகள்.

ஏனெனில் "எல்லாவற்றிலும் ஒரு பெயர்வு நகர்வு இருக்கின்றது; ஒரு மலர்வு இருக்கின்றது; காலம் என்பதும் இயக்கம்: வாழ்வு என்பதும் இயக்கம்; இருப்பு என்பதும் இயக்கம் ; வரலாறு என்பது இயக்கம்; இந்த இயக்கத்தின் இயக்கத்தில் ஒரு நிலை மாற்றம் நிகழ்கின்றது; ஒரு புத்தாக்கம் பிறக்கின்றது; இயக்கம் எல்லாவற்றையும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி நகர்த்தி உயர் நிலைக்கு இட்டுச்செல்கின்றது" உதாரணம் தமிழீழ விடுதலைப் போராட்டம் இவ்விதிக்கமையவே இன்று முன்னோக்கி நகர்கின்றது. ஆனால் அதே வேளையில் சிங்களத்தின் நிலை எவ்வாறிருக்கின்றது? சிங்களத்தின் பிதாமகரான அனகாரிக தருமபாலரால். ஆரியரின் மைந்தர்கள்" என பெருமையாக அழைக்கப்பட்ட சிங்களவர் கதி எவ்வறிருக்கின்றது? அண்மையில் பொன்விழாவை கொண்டாடிய ஒரு இளைய புதிய தேசம் திடீரென கிழடு தட்டி நோய்ப் படுக்கையில் சரிந்ததேன்? வளங்கள் நிறைந்த ஈரலிப்பான தேசம் மனித நேயம் வற்றி வறட்சி கண்டதேன்? சிறிலங்காவிற்கு நடந்த வரலாற்றுவித்து என்ன? அதன் வரலாறே இப்போது விபத்தாகி விட்டது. இன்றைய சிங்களத்தின் நிலையை எண்ணும் போது,

உழுத்த மாளிகையின் இடுக்குகள் எங்கணும் ஆலம் விதைகள்.....

என்கிற கவிதை வரிகளே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகின்றன. உழுத்த மாளிகைக்குள் சிங்களம் உக்கி இறந்துபடப் போகின் றதா? இன்னொரு புதிய மாளிகை கட்டி குடிபுகுந்து புதிய வாழ்வு காணப்போகின்றதா?  நூற்றாண்டின் இனி வரும் முதன்மை வரலாற்று வினா இதுதான்; விடை எவ்வாறிருக்கப் போகின்றது?....

-தொடரும்..........

க. வே. பாலகுமாரன்.

வெளிச்சம் 2001.

Monday, 15 June 2026

மௌனக்குரல்

"மௌனக்குரல்"
~~~~~~~~~~~~~~
"கடலில் நேற்று சண்டை நடந்ததாம்

சுமையான நினைவுகளற்று சாதாரண மனநிலையில அவர் களோடு கதைத்தபடி இருந்த எனக்குள் கல்லெறிந்து கலைத்தது போல மனம் தளம்பித் தடுமாறியது.

நாலு கரும்புலிப் போராளிகளும். கடற்புலிப் போராளிகள் ஐந்து பேரும் வீரச்சாவாம். பெயர் விபரம் இன்னும் தெரியேல்ல"

அந்தப் போராளி இன்னும் அதுபற்றியே தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.

நெஞ்சுக்குள் ஏதோ பரபரத்து இயங்க அங்கே  தொடர்ந்திருக்க வலுவின்றி மெதுவாக எழுந்தேன்.

வெளியே மழைதூறிக் கொண்டிருந்தது.

'என்னக்கா மழைக்குள்ள போறீங்களோ என்றாள் அவள்.

"ஓமம்மா முகாமில் ஒராள்தான் நிக்கிறா. மற்றாக்கள் எல்லாம் வெளியில போயிட்டினம், மழைவிடும் போல இல்லை நான் போறன்"

பதிலைச் சொல்லியபடி சைக்கிளோடு வெளியே வந் தேன்.

எனக்காகர் காத்திருந்தது போல மழை மெதுவாகப் பெலக்கத்தொடங்கியது

சீரான சந்தத்தில் துளிகள் மண் மீது விழுந்து கொண்டிருந்தன.

மழைநீரோடு கலந்த செம்மண் வீதியின் கரையோடு கலைந்தோடியது.

ஆளரவம் குறைந்து, வீதி தனித்துப்போய்' மழையில் சிலிர்த்தபடி நீண்டு கிடந்தது.

தெருவின் கரையோரப் பெருமரங்கள் மழை நீர் சொட்டச் சொட்ட வீதிக்கு காவலிருந்தன .

பேசுவதற்கு எப்போதும் பொழுதிருக்கின்ற பிரியாத நண்பர்கள் போல அவைகளின் மீது மௌனம் அப்பிக்கிடந்தது.

எப்போதேனும் சடசடத்துப் பாய்கின்ற மோட்டார் சைக்கிள்கள் தவிர எப்போதும் வழித்துணையாக வருகின்ற  ஒனறிரண்டாய் கடந்துபோகும் சைக்கிள் மனிதர்கள்.

மழையில் நனையும்போது மனம் சிறுபிள்ளையினது போலாகுமோ என்னவோ.

நனைவதற்கு தயாராகி விட்ட சாவகாசம் அவர்களின் முகங்களில் புன்னகையாகப் பூத்துக்கிடந்தது.

எந்தத்துயரின் நினைவுகளும் இவர்களில் எவர் மனதிலும் இருக்காதா? 

என்ன அழகாய், மழைத் துளிகளின் மெல் இழையுள் புகுந்து வந்ததான பரவசத்தில் மிதந்து போகிறார்கள்.

இல்லை என்னைப்போலவே தான்.

சுதாக்கா... மறுபடி மறுபடி அந்தப்பெயரை உச்சரித்து அதனொலியில் என் மனதின் சுமையை கரைத்து விடவேண்டும் போலிருந்தது.

என்ரை அக்கா. என் உடன் பிறந்த அக்கா"

என்முகம் மோதிய மழையின் துளிகள் கண்ணீர் போல விழி களைத்தாண்டி கன்னங்களில் பரவியது. 

ஒவ்வொரு கடற்சண்டைகளின் போதும் அதிர்ந்து அதிர்ந்து அடங்குகின்ற மனம் இன்று நிகழ்ந்திருக்கும் என்பதாகவே உணர்ந்தது.

உண்மை என்பதை அறியப் போகின்ற முதல் நாடியை எவ் விதம் கடந்து செல்வது?

எந்த முடிவுமில்லாது இந்தப்பாதை நெடுகிலும் எனக்குள் நானே நினைவுகளில் அமிழ்ந்து நெடுந்தொலைவு போக வேண்டும் போலிருந்தது.

அழலாம். அழவேண்டும் போலவும் தோன்றியது. ஒவ்வொரு சாவின் போதும் வதைபட்டு, வதைபட்டு இறுகிய நெஞ்சுள் கசிவதற்கு கண்ணீரும் இல்லை என்பதாக வரண்டு கிடந்தது.

மழை இருளில் பொழுது புதைந்து இருண்டு கிடந்தது.

வீதியோடு அருகாக இருந்த குளத்தின் மீது மழையிருள் அடர்ந்து பரந்திருந்தது. கரைகளின் மீது கவிந்தபடி நீலக் கருமை.

மழை துளித்துளியாக விழ மேலெழுந்து சிதறும் நீரலைகளுக்குள் தாமரை வெண்மையாகப் பூத்துக்கிடந்தது.

கண்ணாடியாக ஒளிர்ந்து சிதறுகின்ற நீரலைகளின் மேலே வான்வரை ஏதுமற்று வெளி விரிந்து கிடந்தது. இடமும்,காலமும் அழிந்து போக எங்களூரின் தெருவொன்றில் போவதுபோல மனதெணணியது. என்னை, என் நினைவுகளை கண்ணீ ராக்கி அம்மாவின் மடிமீது கரைத்து விடுவதற்கு, காலெடுத்து ஓட வேண்டும் போல எண்ணம் பரபரத்தது.

சிலுவில் குளத்திலும் இப்ப தாமரை பூத்திருக்கும். அது செந்தாமரைப் பூ. வயல் வரப்புகள் மீது சறுக்கி விழுந்து தாமரைப் பூப்பிடுங்க இருவரும் போவோம். எத்தனை பூப் பிடுங்கினாலும் எல்லாமும் எனக்கே தந்துவிட்டு தான் ஒன்று மட்டும் வைத்திருப்பாள்.

மழை காலங்களில் வீட்டுள் இருக்க மனமின்றி வெளியே போய்விடத்துடிப்பாள். 

கோயிலென்றும், கடையென்றும் காரணஞ் சொல்லியபடி வயற்கரைகளின் மீதுதான் சுழன்று கொண்டிருப்பாள். அவவிலிருந்து தவறாது நனும் இழுபட்டுக்கொண்டிருப்பேன். மார்கழிப் பனிக்குளிரில் செல்லப் பிள்ளையார் கோயில் திருவெம்பாவை பூசைக்குப்போவோம்.

பூசை முடிந்து வீடுபோகும் போதுதான் லேசாக விடியத் தொடங்கும்.

பெரிய மனுசத்தனத்தோடு வீட்டில் எல்லோருககும் விபூதி சந்தனம் கொடுப்பாள். அப்போதும் அக்காவின் பின்னே தான் நின்றிருக்கிறேன்.

இருள், வெய்யில், மழை, பனி எல்லாவற்றினூடும் புகுந்து எழுந்து வந்துவிடக் கூடியவள் போன்ற செயல் கொண்டவள். 

இதெல்லாம் எங்களுக்காகத் தானே ஏன் பயந்து ஒதுங்க வேண்டும்" என்பாள்.

எதன் மீதும் துயர்கொள்ளாத மனம் இயற்கையானாலும் மனி தரானாலும் எல்லாவற்றையும் நேராக்கித்தான் பார்க்க முயலுவாள்.

விளையாட்டுத்தனத்திலும், அபாரமான துணிச்சலிலும் வளர்ந்து முதிர்ந்தவள்.

இரண்டு வயதுதான் எங்களுக்குள் வித்தியாசமானாலும் வயது முதிர்ந்த மூத்த சகோதரியைப் போல அனேகமான பொழுதுகளில் அம்மா போலத்தான் அக்காவை உணர்ந்திருக்கிறேன்.

இயக்கத்தில் இணைந்த பின்னும் அவள் என்னுடைய பாதையிலே இருக்கிறாள் என்ற நம்பிக்கைதான் பல பொழுதுகளில் துணிவு தந்திருக்கிறது.

இன்று அந்தப் பற்றுதலின் இழை அறுந்து விட்டதோ? போனவருடம் ஐந்து நாள் விடு முறையில் என்னுடன் நின்ற போது தன் முடிவுபற்றி மிக மெதுவாக ஆனால் அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள்.

"நாங்கள் இரண்டு பேரும் போராளிகள்.

என்னுடைய முடிவின்ர அவசியம் உனக்கு மிக நன்றாக விளங்கும். மன வெறுப்பில்லாமல் இதை நீ ஏற்க வேணும். எத்தினை ஒண்டொண்டா போராளிகள் சாகினம்.

இதை மௌனமாகப் பார்த் கொண்டு என்னுடைய நாளுக்காக என்னால காத்திருக்க இயலாமல் இருக்குது. எனக்கான நாளை நானே தேடப் போறன் என்ர இலக்கு பெரிதாக அமைஞ்சு தாக்குதல் வெற்றியாக நடந்திட்டால் அதுதானடி எனக்கான உண்மையான சந்தோசம். 

அம்மா, அப்பாவை சந்திக்கேக்க நீ உயிரோட இருந்தால் எல்லாம் விபரமாகச் சொல்லு'

வார்த்தைகள் மெதுவாக உடைந்து, உடைந்து ஒற்றைச் சொற்களாக என் காதில் விழுந்தன.

அவளிடம் பதிலாகச் சொல்வதற்கு எந்த வார்த்தைகளும் எனக்கு வரவில்லை.

உன்னைப் புரிந்து கொள் கிறேன் என்பதை மட்டும் சொல்லி முடிக்க எண்ணினாலும் சொல்லும் போது அழுது விடுவேனோ என்பதால் மௌனமாக இருந்தேன். அக்காவின் பின்னே இழுபட்டபடி திரிந்த சினைவயதின் காலத்துள் இருவரும் மறுபடியும் புகுந்துவிட வழிகிடையாதா என மனமேங்கியது. தாமரைப் பூக்களோடும் திருவெம்பாப் பூசையோடும் ஒழுங்கைகள் சுற்றிச் சுற்றி அக்கா சைக்கிள் ஓட்ட, பின்னே இருந்து பாடசாலை போகும் மகிழ்வோடும் மறுபடியும் அந்த இளமைக் காலம் எங்களைக் கரங்களில் எடுத்துச் சென்றுவிடாதா?

கண்கள் பனிக்க அக்காவை நிமிர்ந்து பார்த்தேன். லேசாகப் புன்னகைத்தவள் என்னை இறுக்க கட்டியணைத்தாள்.

அக்கா முதலும் பின் நானுமாக இயக்கத்தில் இருவரும்
ஒருவருட இடைவெளியில் இணைந்தவர்கள். இயக்கத்திற்கு வந்த பின் இருமுறை சந்தித்திருந்தாலும் எப்போதும் போதுமான அவகாசம் கிடைத்ததில்லை. இரண்டொரு சொல் பேசிப்பிரியத்தான் நேரமிருந்திருக்கிறது. "தருகின்ற வேலைகளில் நேர்மையாக இருக்க வேணும். எப்பவும் சின்னப்பிள்ளைபோல உடனே கோபப் படக்கூடாது. பொறுமையாக இருக்கவேணும்'' என்பாள்.

'போட்டுவாறன்' சொல்லி பிரிகின்ற கடைசி நிமிடத்தில் கைகளை இறுகப்பற்றி  கவனமம்மா' என்பாள்.

கண்களுக்குள் பரிதவிக்கின்ற அம்மாவின் முகந்தான் எனக்குத் தெரியும்.

"நீயும் கவனமக்கா என்று சொல்லவும் தோன்றாமல் தலையசைத்து விட்டுவருவேன்.

மெலிந்து வளர்ந்த அந்த உருவமும் பாசம் நிறைந்த விழிகளுந்தான் நெஞ்சுள் நினைவாக இருக்கும். இனி எப்போதுமே அந்த நினவு மட்டுந்தான் துணை என்றாகி விட்டதோ?

வேகம் தணிந்து மழை தூற்றலாக சிதறிக் கொண்டிருந்தது. முகாமினுள் நுழையும் போதே மோட்டார் சைக்கிள் ரயர் அடையாளம் மழை நிலத்தில் பதிந்து கிடப்பது தெரிந்தது.

உள்ளே மெலிந்து அடங்கிய தொனியில் பேச்சுக் குரல்கள் கேட்டது.

எங்கடை பொறுப்பாளர் அக்கா வந்திருக்கிறா. அவவின்ர மோட்டார் சைக்கிள்தான்.

இது வழமையான வருகை இல்லை.

மறுபடியும் மனம் அழுத்திச் சொன்னது.

சைக்கிளை உருட்டியபடி முன்பகுதிக்கு போக அவவோடு இன்னும் நாலைந்து போராளிகள் இருப்பது தெரிந்தது. நான் உள்ளே நுழைய பேச்சு
அறுபட என்னை வரவேற்பது போல் எழுந்தார்கள்.

எந்த முகத்திலும் புண்னகை இல்லை. எப்படித் தொடங்குவது என்பதாக அவர்கள் தயங்குவது புரிந்தது.

தாக்குதல் வெற்றிதானே என்றேன் மெலிந்த குரலில்.

தோள்மீது கைவைத்து தன்னோடு சேர்த்தணைத்த பொறுப்பாளர் மெதுவாகத் தலையசைக்க என்னுள் அறுந்து உயிரிழையின் தவிப்பை உணர்ந்தபடி மெளனமாக இருந்தேன்.

-பிரதீபகுமரன்

-வெளிச்சம் கார்த்திகை_மார்கழி  2001 .

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

ஜெயசிக்குறு நாளில் எழுதிய கடிதம்

ஜெயசிக்குறு நாளில் எழுதிய கடிதம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று மறுபடியும் அகதியானேன் ! மல்லாவியிலிருக்கிறேன்.

முன்பு நானிருந்த கிராமம் 
இப்பொழுது ஆளில்லாத யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பெரிய இடுகாடுபோலாகிவிட்டது.

அது இப்பொழுது அவர்களுக்குமில்லை இவர்களுக்குமில்லை.

இங்கேயும் எனக்கென்றொரு நிரந்த முகவரியில்லை.

இந்த இடத்திலிருந்தும் சில நாட்களின் பின் மாறிவிடவேண்டும்.

எனக்காக யாரும் காத்திருக்காத ஓரிடத்தை வீடு என்று எப்படி அழைப்பது?

ஆட்கொல்லி நோய்களேயெங்கும்.

ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் அல்லது பலரின் சிதை நெருப்பிலிருந்து சூரியன் உதிக்கின்றது.

மாலையில் அது யாரோ ஒருவரின் அல்லது பலரின் சிதை நெருப்பில் வீழ்ந்து மறைகிறது.

ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கவும் மறையவும் என்று இங்கே உயிருயிராய்ப் பலி கொடுக்கிறார்கள்.

அமெரிக்காவின் அஸ்ரெக் நாகரிகவாசிகள் சூரியனை உதிக்கச் செய்யவென்று கைதிகளைப் பலியிட்டது போல !

 ஆனால் நண்பனே எல்லாவித நிச்சயமின்மைகளின் பின்னாலும் நான் எரிந்துவிடாமலிருக்கிறேன்.

 எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் அசையாத நம்பிக்கையோடிருக்கிறேன்.

நான் அகதியாயிருக்கிறேன் ஆனாலும் இதயம் உடைந்து போகாமலிருக்கிறேன்.

நான் அகதியாயிருக்கிறேன் ஆனாலும் ஒவ்வொரு நாளும் மலரும் சிறு பூவைப்போல புதிதாயும் வாசமாயுமுள்ளேன்.

நான் அகதியாயிருக்கிறேன் ஆனாலும் நட்சத்திரங்கள் உள்ளளவும் சிதறிப்போகாத பொன்னான நம்பிக்கைகளோடிருக்கிறேன்.

சுற்றிலும் விண்மீன்கள் உதிர்ந்து வீழ்ந்தாலும் எனது வானம் மட்டும் அமைதியாயுள்ளது.

எனது வீண்மீன்கள் உற்சாகமாய் ஒளிர்கின்றன எதிர்காலத்தைக் குறித்த எல்லா நன்னிமித்தங்களும் எனது வழியில் தெரிகின்றன.

எனது துக்கத்தை உங்களுக்குத் தரமாட்டேன்.
தனிமையோ, சலிப்போ, விரக்தியோ உங்களையும் தொற்றிக்கொள்ள விடமாட்டேன்.

என்னிடமிருந்து உங்களைச் சோர்வடையச்செய்யும் எதுவும் வராது.

நானுங்களுக்குச் சொல்வேன் இங்கேயுள்ள எல்லா அகதிகளின் பெயராலும் சொல்வேன் .

நாங்கள் இப்பொழுதும் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டோம. !

எப்பொழுதுமே தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டோம்  !

-நிலாந்தன்

-1997 மழைக்காலம் மல்லாவி.

-வெளிச்சம் 2001

இருநாட்பொழுதுகள்.

இருநாட்பொழுதுகள்
~~~~~~~~~~~~~~~~~~
அந்த மாலைப்பொழுதில் நடவடிக்கை ஒன்றிற்காக தயாராகிக் கொண்டிருந்த வேளையில், போராளிகளின் முகத்தில் சந்தோசமும் கவலையும் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன.
சிலர் வெற்றிகளை நோக்கிப் புறப்படப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியிலும் சிலருக்கு வெற்றிக்காய்ப் போகின்றவர்கள் வித்துடலாயும் வரமாட்டார்கள் என்ற கவலையும், அலையும் நுரையுமாக அசைந்தாடியது.

அந்திப்பொழுது கணப்பொழுதில் மறைந்தது. எம் கரங்களைப் பற்றியிருந்த கரங்களும் கன்னங்களில் கன்னங்களும் புதைந்த வண்ணம் பகலும் புதைந்து இருளும் எழுந்து நின்றது. குளிர்காற்றில் அந்த கடற்கரை மணலில் இறுதிவிடைகளுக்காய் காத்திருந்த எமை கட்டியணைத்து முத்தங்கள் தந்து வழியனுப்பினார்கள்.

ஆம் நீரில் இறங்கி நீசர்குகை நோக்கி நீந்தத் தொடங்கினோம். பகைதேடி அலையோடு அலையாக உயிர்ப்பூக்கள் நாம் நீந்தினோம். நீரைமட்டும் எதிர் கொண்டு நீந்தவில்லை- எதிரியின் பராலைற் வெளிச்சங்களையும் செல் ரவை முனைகளையும் எதிர்கொண்டு நீந்திக் கொண்டிருந்தோம். எதிரியின் காப்பரண்களின் வெளிச்சங்களும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் எதிரியின் அசைவுகளும் எம் கண்ணில் நிழலாடியது. பின் ஓர் இடத்தை தெரிவுசெய்து கொண்டு எமது நகர்வினை மெதுமெதுவாக ஆரம்பித்தோம். கரையை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அலையடியின் வேகம் கூடிக் கொண்டிருந்தது. தலைக்கு மேலால் அலைகள் போட்டிப்போட்டு மிக வேகமான முறையில் அடித்துக்கொண்டிருந்தது. அப்போது காற்றை மட்டும் சுவாசிக்கவில்லை அந்த உப்புநீரையும் சுவாசித்தோம். மூச்சுத்திணறியும் தும்மவோ அல்லது இருமவோ முடியாது எதிரியின் காப்பரண்களை அண்மித்துவிட்டோம். கண்கள் எரிந்தன கண்ணீர்வழிந்தன. இருந்தும் எம்பணி தொடர்ந்தன. 
வழியனுப்ப வந்தவர்கள் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு முகாம் நோக்கி திரும்பிவிட்டனர். இப்போது நானும் சக போராளியும் எதிரியின் காப்பரண்களை அண்மித்துவிட்டோம். கரை தெரிந்தது. இருவரும் அருகருகே நீந்திக் கொண்டிருந்தோம்' கரையை தொடுவதற்கு 50 மீ' தூரம் இருக்கும் போதுதான் எதிரி படகின் திடீர்த் தாக்குதலுக்குள் சிக்குண்டு இருவரும் பிரிந்து செல்கின்றோம்..!

எதிரி தொடர்ந்தும் தாக்குதலை மேற்கொண்டிருக்கும் வேளையில் ஊடறுப்புச் செய்து கொண்டு உள்நுழைய முடியவில்லை. முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு அன்றிரவு உட்செல்ல முடியவில்லை. துப்பாக்கி
வேட்டொலிகள் தொடர் செல்தாக்குதலுக்கு அப்பால் பாரா வெளிச்சங்கள் வானில் தொடர்ந்தும் தீ மூட்டியவண்ணம் இருந்தது. அந்த இரவைக்கிழித்த வெளிச்சத்துக்குள் நுழையமுடியாமல் போய்விட்டது. நேரமும் அதிகாலைப் பொழுதுக்குள் இறங்கிவிட்டது. இனி நீந்தி எமது பிரதேசத்துக்குள் வரமுடியாது என நன்றாகத் தெரியும். என்கால்களில் ஒன்று உணர்விழந்த நிலையில் செயலிழந்தது. அவை முன்பு காயப்பட்டகால் எனினும் ஒருகாலை பயன்படுத்தி நீந்திக்கொண்டிருந்தேன். அதுவும் எதிர் நீச்சல், அடுத்த காலும் செயலிழந்து விட்டது, இப்போது நேரம் 5.40 எனக்கும் எதிரிக்குமான தூரம் 100மீற்றர். என்ன செய்வது என்று முடிவுகள் எடுப்பதற்கு சிந்திக்கக் கூடநேரம் காணாது எனினும் மேல்நோக்கி பிறநீச்சலில் இருகைகளையும பயன்படுத்தி நீந்தினேன் நன்றாக களைத்துவிட்டேன். ஆனால் சிறுஓய்வும் எடுக்க முடியாது என் இறுதி மூச்சுவரை கஸ்ரப்பட்டு நீந்தினேன். நேரம் 6.10 நிமிடம் அண்ணளவாக 400 மீ தூரத்தில் எதிரின் காப்பரண்கள் அமைந்திருந்தன. நடமாட்டங்கள் அதிகரித்தன. சிறுபடகுகளும் தேடலில் இறங்கி நீரைக்கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. நானும் தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தேன். நீந்த முடியாமல் போய்கிட்டது தூரத்தில் டோராப்படகின் சத்தம்கேட்டுக் கொண்டிருந்தது. அந்த சத்தத்தினூடே வேறு ஓர்படகின் சத்தம் மிக அண்மையில் இரைந்து கேட்டது. தலையுயர்த்திப் பார்த்தேன். வெண்நுரை தள்ளியவாறு வோட்டர் ஜெற் படகொன்று எனை நோக்கி வந்துகொணடிருந்தது. என் முடிவுகளும் வேகமாகவே ஓடிக்கொண்டிருந்தது. எதிரியெண்டால் என்ன செய்யவேண்டும் என எனை தயார்படுத்தியபோது 400 மீ தூரம்வரை வந்த படகு திருப்பிக்கொண்டு சற்றுநேரம் நின்று கொண்டது. அப்போது எனை எவ்வளவுக்கு உருமறைத்துக் கொள்ள முடியுமோ அந்தளவுக்கு உருமறைத்துக் கொண்டேன். அலைகள் என்பதால் அலைகள் உயர எழுந்து விழும் நானும் அலையோடு அடிபட்டு விழுவேன். எதிரிப்படகு சென்று சற்று நேரத்தின் பின் தூரத்திற்கு விட்டது.

எதிரியின் நடமாட்டம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கையில் என் உடல் நிலை மறுபக்கத்தை காட்டிக்கொண்டிருந்தது.

இருகால்களும் உணர்விழுந்தது போல் உறைந்து விட்டது. இருகைகளும் நீரினை கிழித்தது பிறநீச்சலில் நீந்தினேன். நீரின் வேகத்தால் தோற்றுவிட்டேன். நீரினை எதிர்க்க முடியவில்லை; தவித்தேன்; தத்தளித்தேன். எனைப்பார்த்த சூரியன் உச்சியில்நின்று சிரித்துக் கொண்டிருக்கையில் என் உடலின் ஒவ்வொரு அணுக்களும் சிலிர்த்துக் கொண்டிருந்தது. வெயிலின் கொடுமையினாலும் எதிர்நீச்சலின் களைப்பினாலும் என் உடல் களைத்துப்போய் நாவறண்டது.அந்த அலைகடலின் உப்புநீரைக் குடித்தேன். தொண்டை எரிந்தது. தாகம் தீரவில்லை. என்னசெய்வது என நினைத்தபோது நான் உணவுக்காய் வைத்திருந்த கண்டோஸ் ஒன்றை எடுத்து அதனுள் உவர்நீரினைவிட்டு கலந்து குடித்தேன். ஓரளவு தாகம் தீர்ந்தது. கண்கள் எரிந்தன. இரண்டு நாட்கள் முழுமையான நித்திரை இல்லை. இன்றுடன் மூன்றாவது நாளென நினைத்தேன். நித்திரைத் தூக்கத்தினால் நீரினுள் மூழ்கி எழுவேன் கைகால்கள் எல்லாம் சோர்ந்து போய்விட்டது. என்னால் தாங்கமுடியாத அளவுக்கு உடல்வலியேற்பட்டது. என்னையறியாமல் என்விழிகளில் நீர்வர ஆரம்பித்தது. அவை என் உதட்டில் விழவும் நாவினில் தடவினேன் அந்த தண்ணீர் உப்புநீரைவிட சுவையாக இருந்தது. தாகத்தினால் கண்ணீரை விட்டு வைக்கவில்லை. அப்போது கான் தெரியும் "சுமைகளையும் கவலைகளையும் மட்டுமல்ல தாகத்தையும் தீர்ப்பது கண்ணீர் என்று'' அந்த ஊறிய என கைகளினால் கண்களைத் துடைத்தேன். மேலும் மேலும் கண்கள் எரிந்தன வேதனைகளுக்கு மத்தியிலும் சிந்தனைகள் நிழலாடியது. பகலோ இரவோ எப்படியும் எதிரியின் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து விட வேண்டும். உள் நுழைந்தால் தான் எனது கடமையை சரிவரச் செய்யலாம். இவ்வளவுக்கு கஸ்ரப்பட்டதற்கு பலன் நிச்சயமாக கிடைக்கும் என்ற முழுநம்பிக்கை என்மனதில் உறுதிபூண்டது. இவ்வேளையில் என்கால்கள் அசைவுகளுக்கு ஏற்றவாறு போய்வந்ததும் என்மனம் மிக்க மகிழ்ச்சியில் மூழ்கியது. இனி எப்படியும் நான் நீந்திச் சென்று எதிரியின் காப்பரண்களை தாண்டிச்செல்வேன் என்று.இப்படியாக நினைவுகளும் விடாது ஓடிக்கொண்டிருந்தது. நீரோடு நானும் சேர்ந்துபோய்க் கொண்டிருந்தேன். சூரியனும் மேற்குத்திசை நோக்கி போய்க்கொண்டிருந்தது. நான் நீரோடு இனியும் சேர்ந்து போனால் என் இலக்கை எட்டமுடியாமல் போய்விடும் என நினைத்து நீரை எதிர்க்காமல் குறுக்கறுத்து நீந்த ஆரம்பித்தேன். மாலை 5.00 மணி . கடற்கரையில் எதிரி நிற்பதைக்கண்டு சற்று விலத்தி நீந்தினேன். அப்பொழுது பெரும் நீரோட்டம் ஒன்றுக்குள் அகப்பட்டுவிட்டேன். கடலின் நீரோட்டம் இந்த வேகத்திலும் இருக்கும் என்பதை அறிந்துகொண்டேன். எதுவுமே செய்யமுடியாத நிலையில் நீரோடு 300 மீ தூரம் சென்றேன். அதன்பின் முடிவை மாற்றியமைத்து இரு கை, கால்களையும் பயன்படுத்தி குறுக்கறுத்து நீந்தினேன். வென்றுவிட்டேன். நீரோட்டம் குறைந்து விட்டது. கரை இன்னும் 20 மீ தூரத்தில் தான் உள்ளது. இனி வெற்றிதான் என மகிழ்வுடன் நேரத்தைப் பார்த்தேன் 7.00 மணி இரு காப்பரண்களுக்கு இடையில் உள்நுழைந்து கொண்டேன்.

மீண்டும் என் பயணம் தொடர்கின்றது. தரைமீதில் நடக்கின்றேன். அதை நடையென்று கூறமுடியாது. ஆமை என்னுடன் போட்டி போட்டால் வென்றுவிடும் எனலாம்; இருந்திருந்து மெது மெதுவாக என்பயணம் தொடர்ந்தது. பசி ஒருபுறமும் தண்ணீர் தாகம் ஒருபுறமும் தொடர என் நினைவுகள் கடமைகளை நிறைவேற்ற துடிதுடித்தது. தண்ணீரைத் தேடும் இடமெல்லாம் எதிரிதான் நிற்கின்றான். என்னால் தொடர்ந்தும் நகர முடியவில்லை. ஓர் புதரினுள் அமர்ந்து விட்டேன். இருள் விலகிக்கொண்டு போக சூரியன் எழுந்து கொண்டு வந்தான். நான் எழுந்திருக்க முடியாத நிலைக்கு வந்து விட்டேன். காரணம் இரண்டு. அதில் ஒன்று உடல்நிலை சோர்ந்து விட்டது. அடுத்தது எழுந்திருந்தால் எதிரி கண்டு விடுவான் என்ற பிரச்சனை இப்போது நான் படுத்திருக்கும் இடம் எதிரியின் பிரதான முகாமின் நடுப்பகுதியில்தான். இரவு என் கண்ணில் அவை முகாமாக தெரியவில்லை. இப்போது என்ன செய்வது தலையுயர்த்த முடியாத நிலைக்கு சிக்குப்பட்டு விட்டேன். எதிரியின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. என்னையும் எதிரியையும் என்னுடன் சிதைக்கத் தயாராகவே என் வெடிமருந்துகள் கண்விழித்திருந்தன.

ஆனால், என் கண்கள் மூடவே துடித்துக் கொண்டிருந்தன. நித்திரை இல்லாமல் உணவில்லாமல் குடிக்கக்கூட ஒரு துளி நீரில்லாமல் எப்படித்தான் இருக்கமுடியும் என நினைத்த போது கண்கள் நீரை ஆறாய் பரப்பின. கைகளினால் ஒத்தி என் நாவை தடவிப் பார்த்தேன். நாவும் எரிவைத்தான் தந்தது நாவில் பருக்கள் வேதனையைத் தந்தன. இன்றைய பகல் மறைந்து போனால் நிச்சயமாக இரவைக்கு நீர் தேடி எடுப்பேன் என்ற நம்பிக்கையுடன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு எதிரியின் அசைவுகளை அவதானித்தவாறு புற்களோடு புதிராக கிடந்தேன். கொடூர வெயில் என்னை பதம் பார்த்தது. முன்னைய இருநாட்களும் நீரில் ஊறி இளகிய தோல்கள் இன்று சூட்டை தாங்கமுடியாமல் தோல்கள் பட்டை பட்டையாக கிளம்பியது.

மழை வராதோ என ஏங்கிக் கொண்டிருந்தேன் அப்போது எதிரியின். MI 24 உலங்கு வானூர்திதான் வந்தது என் மனதில் தலைவரின் நினைவுகள் தொடர்ந்து கொண்டிருந்ததால் தாகம் என்னைத் தட்டியெழுப்பவில்லை. மனதில் தளர்வும் ஏற்படவில்லை. நினைவுகள் ஒடிக்கொண்டிருக்கும் போது 3.00 மணியிருக்கும். மேகம் கறுத்து மழைத் தூறல்கள் மண்ணை முத்தமிட்டன. நான் நாக்கை வெளியில் நீட்டினேன். என் நாவிலும் ஓரிரு துளிகள் மட்டும் விழுந்து சிதறின. அந்த மழைத்தூறல் நின்றுவிட்டது மீண்டும் சூரியன் விழித்துக் கொண்டான். புற்களில் படிந்திருந்த நீர்த்துளிகளை கையில் நனைத்துக் கொண்டு என் நாக்கின் நுனிகளினால் சுவைத்து தாகத்தை தீர்க்க முற்பட்டேன். மாலை மறைந்து இருளவன் எனை சூழ்ந்த போதுதான் எழுந்து எதிரிகளின் கண்ணில் படாமல் நீண்டதூர நடையின்பின் ஓர் இடத்தில் சவர் நீரைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன் பின் எனது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டதுடன் எதிரிக்கு பெரும் அழிவை ஏற்படுத்திக்கொண்டேன். அதை வரலாறு பாடும்நேரம் வந்துதிக்கும்; அப்போது தப்பாது கதைகூறும் வரலாறு

இருநாட்களின் கதைகளை கூறியநான் இன்னும் 24 நாட்களின் துயர்களை சுமந்து குமுறுகின்றேன். அந்த நாட்களையும் மனதில் ஏற்றுக்கொண்டு மீண்டும் கட்டியணைத்து வழியனுப்பியவர்களை கட்டியணைக்கின்றேன் வெற்றிகளின் பூரிப்பில் .

-க.புயலவன்

-வெளிச்சம்

தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

வலிமடி

வலிமடி
~~~~~~~~
பெத்தாச்சியைக் காணேல. !!! வெளியில் போய் கனநேரமாப் போச்சு. வெளியில் போனால் இப்பிடிக் கனநேரமாக நிக்கமாட்டா. இரவில போவில வசந்தியைக் கூட்டிக் கொண்டு போகோணுமெண்டு, நான் பெத்தாச்சிக்கு அடிக்கடி சொல்லுறனான்.

எனக்கு லாம்பை வெளியில் கொண்டுபோகப் பயமா இருக்கு. பொழுதுபட்டால் வெளிச்சங்கள் வெளியில தெரியக்கூடாது. தெருவால போகேக்கை அவங்கள் வெளிச்சங்களைக் கண்டால் பெரிய ஆய்க்கினை.

பெத்தாச்சி காலமை முகம் கழுவக் கிணத்தடிக்குப் போகேக்கை மயங்கி விழுந்தவா. இண்டு முழுவதும் மாறாட்டக் கதையளோடதானிருந்தவா. எனக்குப் பெத்தாச்சியை நினைக்கக் கவலையா இருக்கு.

பெத்தாச்சி... பெத்தாச்சி ..''

முற்றத்திலயும், முருங்கை மரத்தடியிலயும், கோடியிக்கையும் நிண்டு பெரிசாக் கூப்பிட்டன் பெத்தாச்சியின்ர குரலோ அசுகையோ எதையும் காணேல.

மாறாட்டக் குணத்தில் பெத்தாச்சி எங்கையோ வெளிக்கிட்டுப் போயிருக்கிறா. பெத்தாச்சி போவில் அம்மாவீட்டை தான் போயிருப்பா. மற்றப் பிள்ளையள் எல்லாம் வன்னியில். அம்மாவீடு எங்கட வீட்டில் இருந்து ரண்டு கட்டை றோட்டால போவில் சந்தியில அவங்கள் உள்ளொழுங்கையளுக்கையும் இரவில படுக்கிறவங்களாம்.

பெத்தாச்சியைத் தேட எனக்குப் பயமா இருக்கு. தேடாமலிருக்கவும் மனம் வரதாம். சின்னனில இருந்து பெத்தாச்சி என்னில நல்ல கவனம். அம்மா கூப்பிட்டாலும் நான் போக மாட்டனாம்.

பெத்தாச்சி நல்ல வளத்தி ஊரில அவாவை மாதிரி வளந்தாக்கள் ஒருதருமில்லை. சீலை கட்டினால் கெண்டங் காலளவுக்குத்தானிருக்கும். ஊரில எல்லாரும் பெரியாச்சி எண்டுதான் கூப்பிடுறவை. நான் சின்னனில நாக்குப்புரளமாட்டாமல் பெத்தாச்சி எண்டு கூப்பிட்டுத்தானாம் பெத்தாச்சி எண்ட பேர் வளந்ததாம்.

என்னால பெத்தாச்சியைக் காணாமல் இருக்கேலாதாம். பெத்தாச்சியை நினைக்க எனக்கு முந்திய ஞாபகங்கள் வருகுது. பொழுது பட்டால் பெத்தாச்சி முத்தத்தில இருக்கிற மணலுக்கு வந்திடுவா. வல்லிபுரக்கோயில் வெள்ளை மணல் அப்ப கும்பியா இருந்தது. காலுகளை நீட்டிக்கொண்டு இருப்பா. சீலையை முழங்காலுக்கை சிரைச்சுப் போட்டு குனிஞ்சு காலுகளை உருவிக் கொண்டிருப்பா. பக்கத்தில வெத்தில உரல் இருக்கும். வெத்திலை,பாக்குச் சுண்ணாம்பு எல்லாதையும் சேத்து இடிச்சுப் போட்டு "குஞ்சு " எண்டு கூப்பிடுவா.

அப்ப நான் மாலுக்கை விளையாடிக் கொண்டிருப்பன். மாலுக்கு நடுவில் பாணி போட்ட பொயிலையை ஐயா பெரிசாப் பாடம் போட்டு வைச்சிருப்பார். வளைகளில வெங்காயப்பிடியள் தூங்கும் காத்தடிச்ச மால் உலாஞ்சும். வெங்காயப் புடிகளில் ஒட்டியிருக்கிற மண்கட்டியன் கொட்டுப்படும். பூரான் பூச்சியளும் விழும்

"உதுக்கிள இருந்து பொரியப்போறியே மோணை, இஞ்சால வாவன்."

கூப்பிடுவா. நான் ஓடிப்போய் மடியிக்கை விழுந்திடுவன். இடிச்ச வெத்திலைத்தூளை எனக்கும் தருவா. எனக்கு நல்லா நிறக்கும். லிப்ரிக்ஸ் அடிச்சமாதிரி சொண்டு சிவப்பாயிருக்கும். சின்னனில பீதிண்டனானாம் அதுதான் நிறக்குதெண்டு சொல்லுவா.

பெத்தாச்சி நல்ல நல்ல கதையள் சொல்லுவா. நான் காலுகளால தெண்டித்தெண்டி பெத்தாச்சியின்ர மடியில தலையால தலை இடிச்சிடிச்சுக் கேப்பன். தலையைத் தள்ளித்தள்ளிச் சொல்லுவா.

காரைக்கால் அம்மையார். மனுநீதிச்சோழன். பாரதப்போர்  ராமாயணக்கதையள் எல்லாம் பெத்தாச்சி சொல்லித்தான் தெரியும்.

நான் பெருத்தாப்பிறகு எங்கையாலும் போகேக்கை பெத்தாச்சிக்குச் சொல்லிப் போட்டுத்தான் போறனான். நான் வரும் வரைக்கும் நித்திரை கொள்ளமாட்டா. கையில அடவியன் வைச்சிருப்பா. முன்னால கைவிளக்கு எரிஞ்சுகொண்டிருக்கும். ஊருற எறும்புகள் எல்லாத்தையும் அடவியனால அடிச்சடிச்சு சுவர்க்கரேல ஒதுக்கிக் கொண்டிருப்பா.

அப்ப சிலோன் ஆமியள் றோட்டுவழிய திரியிறகாலம் வாகனங்களில் போகேக்கை ஒழுங்கையளுக்கு பலர் கூடின லைற்றுக்களால அடிச்சுக் கொண்டு போறவங்கள், அப்பதான் கண்ணி வெடியளும் கூடுதலா வெடிக்கிறது. கண்ணி வெடியெண்டா அவங்களுக்குச் சரியான பயம்.

நான் வந்ததும் எரிஞ்சு தள்ளுவா. அவாவுக்கு ஆமியள் எண்டா சரியா பயம். அப்ப அலன் தம்பதியளை ஆரோ கடத்திக்கொண்டு போக வீட்டை வந்த ஆமியள் பெத்தாச்சிக்கு அடிக்கக் கால் ஓங்கினவங்கள்.

பேந்து பெத்தாச்சி அச்சுவேலியிக்கை பெரியமாமா வீட்டை நிக்கேக்கை கப்டன் பண்டிதர் இருந்த காம்பைச்சுத்தி வளைச்சுச் சுட்டவங்கல். விடியக்காத்தாலை ஆச்சி கெடுதிப்பட்டுக் கிடக்க அமுதனும் கொஞ்சப் பெடியளும் சேந்து சுட்டுச்சுட்டு ஆமியளின்ர வளைப்பை பிச்சுல் கொண்டு போனவங்கள், 
அந்த ஆத்திரங்களில் பெரியமாமாவுக்கு குழறச்குழற அடிச்சுப் போட்டுப்போனவங்கள். மாமாவுக்கு சலமும் சாறத்தோட போட்டுது.

அந்த ஊட்டுக்கைதான் வல்வெட்டி வாசியசாலை ஒண்டுக்கை வைச்சு இருபத்தைஞ்சு முப்பது பெடியளைப் பிடிச்சுப் பம்பண்ணிப்போட்டும் போனவங்கள். ஊருக்கை அவங்கள் செய்த கொடுமையள் தான் முதல் தடவை: வெறும் தசையளையும், எலும்புகணை யும் வண்டிலில அள்ளிக் கொண்டு போய் எள்ளங்குளச் சுடலையில் எரிச்சதுகள்; அதுகளுக்கும் பயந்து தான் நான் இரவில வர எல்லாத்தையும் சொல்லீச் சொல்லிப் பேசுவா ..... அம்மாவுக்கு ஒண்டும் கேளாதபடிதான் பேசுவா......

பெத்தாச்சிக்குப் பக்கத்தில் தான் அம்மா சோறை வைச்சு மூடுறவா, பேசிப்பேசித்தான் சோத்தையும் எடுத்துத் தருவா. 

எல்லாத்தையும் நினைக்க எனக்கு கண்ணீர் வருகுது. வசந்தி வெளியில போகவேண்டாமெண்டு கையில பிடிச்சாள் பெத்தாச்சி என்னில வைச்சிருக்கிற அன்புபாசங்களும் நான் வைச்சிருக்கிற அன்புபாசங்களும் வசந்திக்குத் தெரியுமா? அவள் இடையில வந்த உறவு. எனக்கு உயிர்.

மெதுவாக அவளின்ர கையளை நீக்கிப்போட்டு நிண்டன். என்னில பெத்தாச்சி பெருத்துக்கொண்டு வந்தா. லாம்பைத்தூக்கிகொண்டு வெளியில போனன். வசந்தி ஓடிவந்து லாம்பை தணித்து விட்டாள். எனக்கும் பயமாத் தானிருந்தது. அந்தப்பயத்தை விட பெத்தாச்சியின்ர நினைப்பு பெரிசாத்தெரிஞ்சிது.

மெல்ல நடந்து நடந்து வீட்டுக்குப் பின்னுக்குப் போனன். பின்னுக்கு வாழைத்தோட்டம். இரவில் பெத்தாச்சி அந்தப் பக்கம்தான் எழும்பி போறவா. வெட்டி விழுத்தின ஒரு வாழைக்குத்திக்கு மேல பெத்தாச்சி குப்புறக்கிடந்தா. வாழையின்ர அடிப்பக்கம் பெத்தாச்சியின்ர நெஞ்சுக்கை கிடந்தது.

நான் பயந்து போனன் மூச்சு அடைச்சுக் கொண்டு வந்தது. லாம்பை அப்பிடியே வைச்சிட்டு பதறிக்கொண்டு மண்ணுக்கை குத்திக் கொண்டிருந்த தலையை தூக்கினன். கடவாயில ரத்தம் காய்ஞ்சிருந்தது. "பெத்தாச்சி..'' எண்டு கத்திக்கொண்டு முகத்தை நெஞ்சோட அணைச்சன். கண்கள் முழிச்சபடியிருந்தன. மூக்கில கையை வைச்சுப்பாத்தன். மூச்சு கையில உதைக்கலே. எனக்கு கவலையள் நெஞ்சுக்கை வெடிச்சிது.

முந்தி அம்மய்யாவும் இப்பிடித்தான். கிறிதி தூக்கி எறிஞ்சுதான் செத்தவா. திடீர்ச்சா நல்லதெண்டு பெத்தாச்சி நொந்து சொல்லுவா. நான் கண்களைத் துடைச்சுப் போட்டு விளக்கைப்பாத்தன் வசந்தி விளக்குக்கு முன்னால நிண்டாள். சொண்டுகள் வெம்பிக்கொண்டிருந்தன நான் பெத்தாச்சியை தூக்கிக் கட்டிலில கொண்டு போய் வளர்த்தினன்.

அம்மா வந்தால் விடிய விடிய ஒப்பாரி வைச்சுக் கொண்டிருப்பா. அம்மாவுக்கு இழவு அறிவிக்க எனக்குப் பயமா இருக்கு. பெத்தாச்சி அனாதையாக் கிடக்கவும் மனம் வராதாம். வசந்தியைப் பககத்தில நிக்கச் சொல்லிப்போட்டு பூரணமாச்சியிட்டப்போனன் . வசந்தியும் வந்தாள். அவளுக்குச் சவமெண்டால் சரியான பயம்.

எங்கட வீட்டில இருந்து மூண்டு வீடு தள்ளித்தான் பூரணமாச்சியின்ர வீடு. பின் கடவையால போனன் பக்கத்துச் சனங்கள் எல்லாம் எங்கட வீட்டிலதான் தண்ணியள்ள வாறதுகள்.

முந்திகேற்றாலைதான் எல்லாரும் வந்து அள்ளுறதுகள். அவங்களுக்குப் பயந்துதான் பின்னுக்கு கடவையை வைச்சனான். பின்னுக்குக் கடவை வைச்சாப் பிறகுதான் பயமில்லாமல் இரவிலயும் தண்ணியள்ளிக்கொண்டு போகுங்கள் .

நான் விசயத்தைச் சொன்னாப் பிறகு பூரணமாச்சி துடிச்சுப் போனா. எங்களுக்கு முதல் தலேலை அடிச்சுக்கொண்டு ஓடினா. பூரணமாச்சி பெத்தாச்சியின்ர சகோதரம்.

பூரணமாச்சி பெத்தாச்சியில நல்ல கவனம். ஆசைத்தீனா ஏதும் கூழ் எண்டு காச்சினால் பெத்தாச்சிக்குக்கொண்டு வருவா. பூரணமாச்சி கூழ் காச்சினால் நல்லா இருக்கும் தூள் மீனுகள் அலைஞ்சு திரிஞ்ச வாங்கியருவா. கொவ்வை இலையும் பிலாக்காச் கொட்டையுமில்லாட்டி காச்சவே மாட்டா . சூடை மீனைச் சுட்டு அதை ஒடியல் மாச்சட்டியிக்கை மசிச்சுப்போட்டு பெரிய வளந்துப் பானேக்கை போட்டுக் கலப்பா.

பூரணமாச்சி கூழ் காச்சினால் எல்லாருக்கும் குடுத்துத்தான் . குடிப்பா.
வளந்துப் பானைக்கு வந்தால் தெரியும் பூரண மாச்சி கூழ் காச்சப்போரர்வெண்டு. வெந்நீர் வைக்கிறதுக்கும் பெத்தாச்சியிட்டத்தான் ஊரில பானைக்கு வாறதுகள். மறுக்காமல் குடுத்திட்டுப் போனாப் பிறகுதான், பெத்தாச்சி பேசுவா.உடைச்சுப் போடுங்கள் எண்டு அவாவுக்குப் பயம்.

நான் பூரணமாச்சிக்குப் பிறத்தால போனன். பூரணமாச்சி கூழைப்பற்றியெல்லாம் ஒப்பாரி வைப்பா. அதை எப்ப கேப்பன் எண்ட அவாவில் பெத்தாச்சிக்குப் பக்கத்தில இருந்தன். வந்த வரத்துக்குப் பெத்தாச்சிக்கு மேல விழுந்தபூரணமாச்சி.....

"ஓலையொண்டு அனுப்பவில்லை

என்ரை அம்மா நானுனக்கு தெளிவு ரம்ப விட்டிருப்பன்......

"தந்தியொண்டு அடிக்கவில்லை,

என்ரை அம்மா முந்தி வந்துனக்கு முத்தம்பல தந்திருப்பன்.........

"என்ர குஞ்சு போனதைப் போல...
நீயும் படுத்திரமால் போனனியோ.......

மடியில எனக்காரும் இல்லையம்மா - ஊரார்
மலடி எண்டு நகைக்கிறார்கள்..."

பூரணமாச்சி ஒப்பாரியளில் கூழைப்பற்றியோ பெத்தாச்சியைப் பற்றியோ எதுவும் சொல்லேல. தன்ர கவலையள அடுக்கிக் கொண்டு போறா. ஏமாந்த என்ர மனதில கவலையள் புகைச்சிது,

பூரணமாச்சியின்ர குரலக் கேட்டு அயல் ஒவண்டாக் கூடியது சத்தம் பெரிசாக் கேக்குதெண்டு வந்தாக்கள் எல்லாம் பயந்து கொண்டு நிண்டார்கள் வந்த பொம்பிளையளும் பெத்தாச்சியைப் பற்றி ஒப்பாரியள் வைக்கேல.

பெத்தாச்சி எத்தின பேருக்கு ஊரில பிரசவம் பாத்தவா. பெத்தாச்சிக்கு ஏலாத வரைக்கும் ஊரில அனேகப் பொம்பிளையள ஆசுப்பத்திரிக்குப் போறேல. இதுகளை ஒருத்தரும் ஒரு வரியிலயும் சொல்லாததை நினைக்கப் பெரிய கவலையா இருக்கு.

தங்கட தங்கட கவலையள சொல்லியழுறதுக்கு செத்த
வீடுகள் தான் ஒரு களம் எண்டதை எனக்கு இப்பத்தான் தெரிஞ்சது.

எனக்கு அம்மாவைப் போய்க் கூட்டி வரவேணும் போலையிருக்கு. அம்மா வந்தால் பெத்ததில இருந்து வளத்து ஆளாக்கினது வரைக்கும் இரவிரவா ஒப்பாரிவைப்பா. அம்மாவிட்டை போகப் பயமா இருக்கு.

சனங்கள் கூடியிட்டுது பெற்றோல் மாக்ஸ் கொழுத்தவும் பயமா இருக்கு.

பந்தலும் போடேலை மரந்தடியளுக்கு வீடுவீடாகப் போககோணும். நாயளும் அமளியாக் குலைக்க எல்லாரும்நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள.

எல்லாருக்கும். வாழறதுக்கு ஆசையள் தானே? உயிருகளை பலூனுகளுக்கை அடைச்சுக் கொண்டு முள்ளுகளுக்கை நடக்கிறம்.

நாயளின்ர சத்தங்கள் நீண்டு கொண்டிருக்குது. செல்வத்துரையண்ணை எல்லாரையும் அழவிடாமல் நிறுத்திப் போட்டார். வழிந்து தூங்கிய தொங்கல் சீலையை எக்குக்கை செருகிக் கொண்டு பூரணமாச்சி - பெத்தாச்சிக்குப் பக்கத்தில போயிருந்தா. பெத்தாச்சிக்கு வாய் திறபட்டுக் கிடந்தது. பூரணமாச்சி வாயை மூடுறதுக்கு சொண்டுகளை அமத்திக் கொண்டிருந்தா.

பெத்தாச்சிக்குப் பக்கத்தில எல்லாரும் அழாமலிருக்கிறதைப் பாக்க நெஞ்சு கொதிச்சுக் கொண்டு வந்திது

முந்தியெண்டா இவளவுக்கு பறை முழங்கிக் கொண்டிருக்கும். சணபதியற்றை தண்டிகை படலேக்கை நிக்கும். தலைமாட்டில நிண்டு ராமப்பா தேவாரம் பாடிக்கொண்டிருப்பார். கால்மாட்டில் சாம்பிராணி புகைச்சுச் கொண்டிருக்கும். சுருட்டு வெத்திலையளும் தட்டுகளில முடிஞ்சு கொண்டிருக்கும்.

மனம் புகையப் புகைய நினைவில தீப்பிடிக்குது.

இப்ப எங்கட வீட்டு நாயும் கேற்றுக்ககை நிண்டு குரைக்குது வாகனச் சத்தங்களும் தூரத்தில் கேக்குது. வீட்டுக் கூரையள்,முத்தங்கள், மரங்களில் எல்லாம் வெளிச்சங்கள் துலாவிக் கரையுது. ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால்தான் இப்பிடி இருக்கிறது.

எனக்கு உயிர் ஒடுங்கி மூச்சு நிக்கிற மாதிரி இருக்கு. இரவில சனங்கள் கூட்டமா வீடுகளில் நிக்கக் கூடாது. எல்லாரும் பதறிக் கொண்டு நிக்குதுகள்,

வீடுகளுக்குப் போய் அவங்கள் ஆக்களை விசாரிக்கேக்கை சிலர் குறைஞ்சால் எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போவாங்கள். பொம்பிளைப் பிள்ளையளை கனநாளாக வைச்சிருப்பாங்கள் சிலவேளைகளில் தாங்கள் பிடிக்கேலை எண்டும் சொல்லுவங்கள்.

தவிப்புகள் வீட்டுக்கை கனத்துக் கனத்து சீறலுகளாக வெளியில வருகுது. சப்பாத்துக் காலுகளின்ர சத்தங்கள் சுவர்களில் தெறிக்க மனதில வலிக்குது. அந்தவலிப்புக்களில் பெத்தாச்சி மிதக்கிறா.

அவங்கள் இரவுகளில் இப்பிடியான நடவடிச்கையளில் ஈடுபட்டால் எல்லாரையும் விடிய அள்ளிக்கொண்டு போவாங்கள். கலியாண வீடுகளா இருந்தாலும், செத்தவீடுகளா இருந்தாலும் அவங்களுக்கென்ன? எங்கட சந்தோஷசங்களப் புடுங்கிறதுதானே அவங்கட வேலை.

பெத்தாச்சி தனியாக்கிடந்து நாறப்போறா பந்தல் போட்டு, பாடைகட்டி, சுடலைக்கு விறகுகள் கொண்டுபோய், அடுக்கி சந்தைக்குப் போறதெப்ப? 
பெத்தாச்சிய தூக்கிக் குளிக்கவாக்கிறதுகளும் பாடை காவிறதுகளும் நவதானியங்கள விதைச்சுக் கொண்டு போறதுகளும், தேவாரம் பாடுறதுகளும் நாத்தங்களில முகங்களைச் சுழிக்கப் போகுதுகள் ;

பெத்தாச்சிக்கு இப்பிடியொரு நிலையும், எங்களுக்கு இப்பிடியொரூ நெருக்கடியளும் வந்ததை நினைக்க மனம் வெடிச்சுக் கொண்டு வருகுது.

நிலம் வெளிக்குது.தெருவில அவங்கள் நிக்கிறாங்கள். ஒருத்தன் கேற்றில அடிச்சுக்கொண்டு நிண்டான். கேற்றைத் திறக்கிறதுக்குத்தான் அடிக்கிறான். பதறிப்பதறி ஓடிப்போய் கேற்றைத் திறந்தன். 

"மல்லி" எள்ளாறும் பத்து மணிக்கிடலை ஊறை விட்டுப் போவிடணும் நாம காய்ம் பண்ணப் பொறம்.''

கொச்சைத் தமிழில சொல்லிப் போட்டு போனான். எனக்குத் தலை சுத்திக்கொண்டு வந்தது. என்ன செய்யிற தெண்டு தெரியேல.

முந்தி ஆனையிறவில் சண்டையள் நடக்கேக்கையும் இப்பிடித்தான் எங்கள வெளிக்கிடுத்திப் போட்டு ஊரில ஆட்லறியளைப் பூட்டிப் போட்டு பளைக்கும் சாவகச்சேரிக்கும் அடிச்சவங்கள். சரியா ஒரு மாதத்துக்குப் பிறகுதான் போனவங்கள்.

வீட்டை வந்து பாக்க வீட்டில ஓடுகள் இல்லை கூரையளில்லை, நிண்ட தென்னையளுமில்லை. எல்லாம் எட்டங்களில பங்கறாக் கிடந்தது; மரத்தடியள் எடுக்கேக்கை சண்டையளும் வந்தது.

பெத்தாச்சியையும் வீட்டுச் சாமனுகளையும் என்னெண்டு கொண்டு போறதெண்டு தெரியேலை. வாகனங்களும் பிடிக்கேலாது, எல்லாரும் தங்கட சாமானுகளை கொண்டுபோய்ச் சேர்க்கத்தானே நிக்குங்கள்.

முந்தி எல்லாரும் வன்னிக்கு ஓடேக்கை பெரியமாமா காறைக் கொண்டு வந்திட்டு ஏறு எண்டு பெத்தாச்சியை எத்தினை தடவையள் கேட்டவர்.

"நான் செத்ததும் என்னை இந்தச் சுடலேலதான் எரிக்கோணும்" எண்டு நிண்டவா.

ஒவ்வரு பிள்ளையளும் வன்னிக்கு ஓடேக்கை பெத்தாச்சியிட்டையும் வந்துதான் போனதுகள். கடசியா ஆய்க்கினையள் தாங்காமல் என்னோட வாறனெண்டு எல்லாரையும் கலைச்சு விட்டவா.

நானும் வன்னிக்குப் போயிருந்தால் இவளவுக்கு கடமையள் எல்லாத்தையும் வடிவாச் செய்திருக்கலாம்.

 எல்லா? பிள்ளையளும் வாய்க்கரிசியள் போட்டு தண்டிகை பறையளோட போய்ச் சேந்திருப்பா....

நான் செல்லையரால தான் வன்னிக்கும் போகாமல் விட்டனான். நான் மூடை முடிச்சுகளைக் கட்டி வெளிக்கிட ஒடி வருவர்.

"அங்கை ஒரே ஷெல்லடி கடலிக்கையும் பொடி மிதக்குமாம். கிழவியைக் கொண்டு போய் என்ன செய்யப்போறாய்? என்னட்ட வாகனம் நிக்குது தானே பாத்து எல்லாரும் ஒண்டாப் போகலாம்" எண்டு மறிப்பர்.

இப்பதான் தெரியுது அவர் ஏன் எங்களை மறிச்சார் எண்டு. அவருக்கு எக்கச்சக்கமான சொத்துகள். காணியளும் நிறைய.அவருக்கு அதுகளை விட்டிட்டு வெளிக்கிட மனம்மில்லை நாங்களும் வெளிக்கிட்டா அயலில துணைக்கொருத்தருமில்லை. தன்ரை பாதுகாப்புக்குத்தான் எங்களை மறிச்சவர். இனி, அவரில் கோபப்பட்டு என்ன எங்கட முடிவுகளை நாங்கள் தானே எடுக்கோணும்.....

நான் போய் விசயத்தைச் சொன்னதும் எல்லாரும் தலையளில் கையளை வைச்சுச் கொண்டு தங்கட வீடுகளுக்கு. ஓடினார்கள் பெத்தாச்சிக்குப் பக்கத்தில் பூரணமாச்சியைத் தவிர வேறை ஒருத்தருமில்லை. பூரணமாச்சிக்கும் பிள்ளையள் எண்டா அவாவும் ஓடியிருப்பா....

நான் உறவுகள் எவரிலயும் கோவிக்கேலை, இந்தநிலமேலை எல்லாரும் தஙகட உயிர்களை தங்கட பொருள் பண்டங்களைத்தானே காப்பாத்த நினைக்குங்கள்.

'விழுவாராலை மனிசர் நிம்மதியா இருக்கேலாதாம் நீயேன்ரா உதில நிண்டு அழுகிறாய் ? 
செல்லையற்ரை மிசினைக் கேட்டுப்பார். கிழவியை எண்டாலும் கொண்டு போய்ச் சேப்போம்.

பூரணமாச்சி என்னைக் கலைச்சு விட்டா: கண்களைத் துடைச்சுக் கொண்டு செல்லையர் வீட்டை போனன்:

மிசின் சாமானுகளால் பின்னுக்கு நிறைஞ்சிருந்தது. கொஞ்ச இடம் வெளிப்பா இருந்தது. நான் தயங்கிக் தயங்கிக் கேட்டன்.

"இதுக்கிளை என்னெண்டு ஏத்திறது அந்த இடத்தில கிழவியை ஏத்தினா என்னெண்டு மனிசி பிள்ளையளை ஏத்திறது? சவம் எண்டா அதுகளுக்குச் சரியான பயம்தம்பி''

சொல்லிப் போட்டு மிசினை எடுத்தார். நான் பேந்தொண்டும் கதைக்கேல . அவர் நினைச்சால் மனிசி பிள்ளையள் நடந்து வரலாம்.

நான் பூரணமாச்சிக்குக் கிட்டப் போய் அழுதன்.

''உந்த மனிசத்தன்மையள் இல்லாததுகள் இஞ்சை இருக்கிறதாலைதான் நாங்கள் இப்பிடிக் கசங்கிறம். கெதியா மண் வெட்டியை எடுத்து தேசிக்காய்க் கண்டுக்குக் கீழை கிடங்கை வெட்டு. இது பெத்தாச்சியின்ர நிலம்.

தெருக்களெல்லாம் சனங்கள் மூடை முடிச்சுகளோடை நடப்பதும் சைக்கிளுகளோடயும் வண்டிலில வாகனங்களிலயும் இடிபட்டும் குழந்தையள் கதறவும் போய்க்கொண்டிருக்கிதுகள்.

நான் மண்வெட்டியைத் தூக்கினன்.

-கருணைரவி

-வெளிச்சம் 2001

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

Sunday, 7 June 2026

மீட்பு

மீட்பு
~~~~~~~~~
காற்றை எதிர்த்துக் கொண்டு சைக்கிளை மிதிப்பது பெரும் சங்கடமாக இருந்தது. "என்ன செய்வது எங்கடை காலம் இப்பிடி இருக்கு" என மனம் சலித்துக் கொண்டான் கந்தசாமி.

கால்கள் இரண்டும் பயங்கரமாக வலித்தன. நெஞ்சில்கூட விபரிக்க முடியாத ஒரு வகை வேதனை பரவியது. வியர்வையில் குளித்திருந்த உடம்பு படபடத்தது.

கூதல் காற்று சில்லென்று வீசியது. அடிவானத்தில் சூரியன் சரிந்துகொண்டிருக்க மெல்லிருட்டின் ஊடே பனி இறங்க ஆரம்பித்திருந்தது.

நேரம் ஆறு மணி அல்லது ஆறரையாக இருக்கலாம். மாரி காலத்து சூழல் இருளை விழுங்கிக் கொண்டு வந்துவிட்டது. பெரும் மலையென சைக்கிளின் பின்புறம் கனக்கும் சுமை, அவன் களைத்துப் போனதால் முன்பை விட அதிகமாக வருத்தியது.

எத்தனை நாட்களாக இந்த ஓட்டம் நடக்கிறது. பொழுது புலரும் பொழுதில் வெறும் வயிறு கர்புர் எனச் சத்தமிட புறப்பட்டுப் போவதும் பின்னர் சுமையோடு திரும்புவதும், வழக்கமாகிவிட்டது.

சாவகச்சேரி, கொடிகாமம், பளை என்று எத்தனை இடங்களுக்கு மாறி மாறி ஓடி வீதிகள், ஒழுங்கைகள் என்று தடவித் தடவி.விறகாக, தென்னை, பனை மட்டைகளாக பொச்சு மட்டைகளாக, தேங்காய்களாக சுமையேற்றி ஓடாத ஓட்டம் ஓடி கோப்பாய் வெளி தாண்டி மருதனாமடச்சந்தி, சுண்ணாகம், மல்லாகம் வரை வரவேண்டும்.

மத்தியான வெய்யில் உடம்பைப் பொசுக்கும் நேரத்தில், சுமைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டால் பருத்தித்துறை துறைமுகத்திற்கு உணவுக் கப்பல்கள் வருவது போல எப்போதாவதுதான் வரும் வழியில் வியாபாரம் நடக்கும். மற்றப்படி மருதனாமடம் சந்திவரை வியாபாரம் நடக்காது.

ஒருநாள் முழுக்க சைக்கிள் அடிப்பதன் பலன் அன்றைய விற்பனையில்தான் தங்கியிருக்கும். அதன் பின்னர் ஏதாவது வயிற்றுக்குக் கிடைக்கும்.

ஒரு வடையும் கடித்து தேனீரும் குடித்து பீடியும் வாங்கி புகைத்துக் கொண்டு வீதியோரத்து மரநிழலில் ஆறி இருக்கும் போது சற்று ஆறுதலாக இருக்கும். பிறகு மீண்டும் பயணம் தொடங்க திரும்ப கால்கள் வலிக்கும்.

இப்போது போலத்தான் இருக்கின்றது; என்றாலும் ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. நெடுநாள் குடியிருந்த சொந்த இடத்தைவிட்டு வெளியேறி மல்லாகத்தில் விரிந்து பரந்த அந்த வளவுக்குள் மொட்டையாகிப் போய்விட்ட தென்னை மரங்களின் மத்தியில் சின்னப்பிள்ளைகள் விளையாட்டுக் கட்டும் சின்னஞ்சிறு குடிசைகளில் குடியிருந்தார்கள். தலையைத் தட்டும் கூரை, சிறுமழைக்கே பயப்படும் ஓலைத்தட்டிகள் கொண்ட நெருக்கமான குடிசைகள். மிக மிக அதிகமான மனிதர்களும் நெருங்கிய மனங்களும்.

அவன் குடும்பத்தைப் போல எத்தனையோ குடும்பங்கள். எல்லை வேலி சரிந்ததுக்கு வாள்வெட்டுக்கு போனவர்களின் பரம்பரையினர் எல்லாம் ஒரே வளவுக்குள் எப்போதாவது சிறு சிறு சண்டை பிடித்தாலும் குடியிருந்தார்கள்.

அந்த வளவில் முந்தி இந்திய இராணுவம் குடியிருந்தது. ஒரு பெரிய வீடும் இருந்தது. ஆனால் கூரையும், சில பக்கத்துச் சுவர்களும் இந்திய இராணுவம் திரும்பிப் போனபோது போய்விட்டன.

அவர்கள் சூறையாடிய அமைதியோடு வளவின் பசுமையும் போயிருக்க வேண்டும். எத்தனையோ பெரிய மரங்கள் அடியோடு தறிக்கப்பட்ட அடையாளங்கள் மாத்திரம் இருந்தன .

சொந்த இடத்தைவிட்டு ஓடி வந்து முதலில் இங்கேதான் குடிசைகள் போட்டு குடியேறினார்கள்.

எல்லாக் குடும்பங்களும் இப்படியே நிவாரணத்திலும், சைக்கிளில் மூட்டைகட்டி, வியாபாரம் செய்து கிடைக்கும் வருமானத்திலும்தான் சீவியம் நடத்தின.

கந்தசாமியின் சிறுவீடு ஆலமரத்திற்கு முன்னால் இருந்தது. ஆலமரத்திற்குப் பக்கத்தில் தான் ஒரு வாசிகசாலை. எந்த நேரமும் அந்த இடத்தில் ஊர் ஆட்களின் அமளி இருக்கும். மாலை நேரங்களில் இன்னும் மும்முரமாய் இருக்கும்.

ஓலைக் கூரையும், சீமெந்துக் கற்சுவருமாக சோலையான வளவுமாக அமைந்ததுமான சூழல். பொழுது மங்கும் நேரம் வேலையை முடித்துக் கொண்டு வந்து களைப்புத் தீரக் குளித்துவிட்டு திண்ணையில் சரிந்திருக்கும் போது எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே குழம்பிப் போய்விட்டன. வீடு, சோலையான வளவு, ஆலமரத்தடி, அந்த சந்தோஷம் எல்லாமே அந்நியமாகிப் போய்விட்டன. நாளாந்தம் பார்த்து வந்த தொழிலும் போய், போட்ட உடுப்புக்கூட கனவாகிவிட்டது.

இன்றைய கெடுகாலம். எதுவுமே நேர காலத்துக்கு சரிவரவில்லை. கொள்வனவு முடியவே நேரமாகிவிட்டது. புறப்படவே மூன்று மணியாகி, வழியில் பிரச்சனை.

இரண்டு தடவை சைக்கிள் காற்றுப் போய்விட்டது. ரயர் ஒட்டுக்கு இருபது ரூபாய் சுலபமாய் செலவழிந்தது. கையில் ஒரு சதமும் இல்லாத நிலையில் புறப்பட்டு, கோப்பாய் வெளி தாண்டவே இருள ஆரம்பித்து விட்டது.

இன்றைய வியாபாரம் அதோகதிதான் என்பது அப்போதே தெரியும். பொழுதுபடத் தொடங்கிவிட்டால் வியாபாரம் நடக்காது.

நான்கு நாட்களுக்கு முதல் எடுத்த நிவாரணப் பொருட்கள் நேற்றைக்கே முடிந்துவிட்டன. மத்தியானச் சாப்பாடு ஏதோ ஒரு விதத்தில் முடிந்திருக்கும். இரவுச் சாப்பாட்டு விடயம் அவன் வீடு போன பின்னர் தான் முடிவாகும்.

நினைத்துப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அன்று முழுவதற்குமாக குடித்த தேனீர் எந்த மூலைக்கு காணும். என்ன செய்வது? கொண்டு வந்தவற்றை அநியாய விலைக்கு விற்க முடியாது. இரவுப் பொழுதை எப்படியும் சமாளிக்கத்தான் வேணும் என நினைத்தான்.

ஊர்வலம் போனமாதிரி சைக்கிள்கள் போய்க் கொண்டிருந்தன. மருதனாமடச் சந்திக்கு வந்தபோது இருள் கனத்திருந்தது.

சந்தியில் பெற்றோல்மாக்ஸ் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஆட்கள் பலபேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இளைஞர்கள், வயதானவர்கள் என்று. சிலபேர் கிடங்கு கிண்டிக்கொண்டிருக்க, வேறுசிலர் மாட்டு வண்டிகளில் இருந்து மரங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

பள்ளிக்கூடச் சுவரில் மாவீரர்கள் ஆகிவிட்ட சில போராளிகளின் பெரிய படங்கள் சாத்திவைக்கப் பட்டிருந்தன.

வரும் வழிகளில் எல்லாம் இவ்வாறு சந்திக்குச் சந்தியும், இடை இடையேயும் சனங்கள் வேலை செய்து கொண்டிருப்பதையும், பந்தல்கள், வளைவுகள் அமைத்துக் கொண்டிருப்பதையும் கண்டாலும் கந்தசாமியின் மனநிலை காரணமாக அவற்றில் அதிக அக்கறை காட்டவில்லை.

ஓலைக் குடிசைகளால் நிரம்பி வழிந்த அந்த வளவுக்கு முன்னால் சைக்கிளை நிறுத்தினான் கந்தசாமி. அந்த இருளிலும் பொழுது போகாத சிறுவர், சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் இருந்த அச்சகத்தில் இயந்திரம் இயங்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாவிடினும் அங்கு சைக்கிளை மிதித்து இயந்திரம் இயங்குவது அவனுக்குத் தெரியும். மண்ணெண்ணையில் மோட்டார் சைக்கிள் இயங்குவது போலத்தான் இதுவும்.

போராட்டக் காலச்சூழல் எத்தனை புதியவழி முறைகளையெல்லாம்  கண்டுபிடிக்கவைத்துவிட்டது
என நினைத்தான்.

வேலிக்கரையோரம் பலபேர் குந்தியிருந்து பீடி பிடித்துக்கொண்டிருக்க சற்றுத் தூரத்தில் அரச மரத்தடியில் அமளியான வேலை நடந்துகொண்டிருந்தது. மாவீரர் வளைவொன்று தயாராகிறது போலும்.
சுமையோடு சைக்கிளை உருட்ட சிரமமாக இருந்தது. என்றாலும் தன் குடிசைக்கு முன்னால் போய் சைக்கிளை நிறுத்தினான்.

அந்தச் சின்னக் குடிசையின் வாசல் ஓரமாக மினுக் மினுக்கென்று சுட்டி விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது.

எதிரே சாக்கொன்றில் மூத்தபிள்ளையும், அதற்கடுத்த பிள்ளையும் படுத்திருந்தனர்.

"இஞ்சரப்பா" என்று குரல் கொடுக்க இடுப்பில் கடைசிப் பிள்ளையைச் சுமந்து கொண்டு அவன் மனைவி வெளிப்பட்டாள். வெற்றுடம்புடன் காணப்பட்ட குழந்தையின் மூக்கு ஒழுகிக் கொண்டிருந்தது.

இருளிலும் அவனை அடையாளம் கண்டு "யப்பா" என்று மழலை மொழி பேசியபடி அவனிடம் பாய முற்பட்டது. கந்தசாமி சைக்கிளை ஸ்ராண்டில் நிறுத்தினான்.

சைக்கிளில் உள்ள சுமை, அவன் வந்த நேரம், போன்றவற்றை வைத்துக்கொண்டு அவனது நிலைமையை உணர்ந்துகொண்ட அவன் மனைவி,

நல்லாய் களைச்சுப் போனியள். அடுப்பில சுடுதண்ணி இருக்குது. தேத்தண்ணி கொண்டு வாறன் இருங்கோ." என்று சொல்லி பிள்ளையை அவனிடம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.

அவன் படுத்திருந்த பிள்ளைகளுக்குப் பக்கத்தில் இருந்தான். சற்று ஆறுதலாக இருந்தது ஆனாலும் மனம் ஒரு நிலையில் இல்லை.

தேநீருடன் மனைவி வந்தாள்.
முகத்தைக் கழுவிக்கோண்டு வாங்கோ, கஞ்சி காச்சி வைச்சிருக்கு" என்றாள் ஆதரவாக. தன் நிலையை உணர்ந்துகொண்டு கேள்விக் கணைகள் தொடுக்காமலே செயற்படும் அவளை அன்புடன் அவன் நோக்கினான். உடலில் தெம்பு பிறந்திருந்தது.

அவன் கையில் சீனி வாங்கித் தந்து தேனீர் குடிக்கும் போது,

இஞ்சரப்பா, உங்கை ஒரு மாவீரர் வளைவு கட்டினம், எல்லா ஆம்பிளையளும் அங்கைதான் போட்டினம். வேலை செய்ய நீங்களும் போட்டு வாங்கோவன். உடம்பு அலுப்பெண்டாலும் நாங்களும் செய்யத்தானே வேணும்." என்றாள் அவள்.

அவன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான்.

"உடல் களைத்தாலும் மனம் களைக்கக் கூடாது" என்று நினைத்தபடி எழும்பினான்.

என் "சிவப்புச்சாறி ஒண்டும் கேட்டவை. எனட்டை எங்கைகிடக்கு. மலரக்கா தாறனெண்டவ. அதோடை என்ர மஞ்சள் சாறியையும் சேர்த்துக் கொடுங்கோ" என்றாள் அவள்....

-இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்.

-எரிமலை இதழ் ஆடி 1992.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

எல்லாத்துக்கும் தீர்வு தமிழீழம்தான்!

எல்லாத்துக்கும் தீர்வு தமிழீழம்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கையில் சுருட்டுடன் அப்பு மரத்தில் சாய்ந்திருந்தார். அவரது கவலை தோய்ந்த விழிகள் வானத்தை வெறித்திருந்தன. முகம் சோர்ந்து சுருக்கங்கள் நிறைந்திருந்தது. அவரது கவலையை உணர்ந்தாற்போல செவிவளைந்தானும் நீட்டிய கால்களில் முகத்தைப் புதைத்தபடி கண்களை மூடியிருந்தது.

நவமும் நண்பர்களும் வழக்கம் போலவே ஆரவாரித்தபடி வந்தனர். ஆனால் மரத்தடியில் நிலவிய அமைதியையும் அப்புவின் கவலை தோய்ந்த முகத்தையும் அவதானித்ததும் ஆரவாரத்தின் இடத்தை மௌனம் கைப்பற்றிக் கொண்டது.

அந்த அமைதியைக் குலைப்பது போல ஒரு சிறுமி ஓடிவந்தாள். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஓடி வந்த வேகத்தில் அப்புவை உலுக்கிச் சொன்னாள். "அப்பு! எங்கடை கரன் அண்ணாவையும் பண்டாரவளையிலை சாக்கொண்டு போட்டாங்களாம்."

அப்பு திடுக்குற்று நிமிர்ந்தார். அவருடைய சுருங்கிய விழிகளில் கண்ணீர் திரண்டது. நவம் "பாழ் படுவாங்கள்” என்று கூறிய படி தன் விழிகளில் துளிர்த்த நீரைச் சுண்டி எறிந்தான். அவனது நண்பர்களின் விழிகளில் கோபம் குடியேறியது.

"நாலு பெட்டையளுக்கு ஒரு பெடியன்... அநியாயப்படுவாற்றை கையிலை சிக்கி.." அப்பு தோளில் கிடந்த துண்டை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டார். சகோதரனைப் பறிகொடுத்த அந்தச் சிறுமியும் சோர்ந்த முகத்தோடு அருகே உட்கார்ந்து கொண்டாள். எண்ணெய் காணாத அவளுடைய பரட்டைத் தலையும் உள்ளடங்கிய கண்களும் அவர்களை வேதனைப்படுத்தின.

"இயக்கத்திற்குப் போன எங்கடை பக்கத்து வீட்டு ரூபன் இவனையும் கேட்டவன். நீயும் வாவனடா இயக்கத்துக்குப் போவம் எண்டு. அதுக்கு கரன் எனக்கு நாலு பொம்பிளைச் சகோதரங்கள் இருக்கு.அதுகளை விட்டிட்டு வரேலாது எண்டிட்டான். வெளி நாட்டுக்குப் போய் உழைச்சாத்தான் சகோதாரங்களைக் கரையேத்தலாம் எண்டு குந்தியிருந்த நிலத்தையும் தாயின்ரை தாலிக் கொடியையும் விற்று பிரான்ஸ்சிற்குப் போறன் எண்டு கொழும்புக்குப் போனவன்தான். அவன் பிடிபட்டு ஆறுமாசத்துக்குப் பிறகுதான் அவன்ரை வீட்டுக்காரருக்குத் தெரியும். அவன் பண்டாரவளை முகாமில் இருக்கிறான் எண்டு கடிதம் எழுதியிருந்தானாம்"

"ஏன் பிடிச்சவங்களாம்?" நவத்தின் நண்பன் குணம் கேட்டான். "உனக்கு விசரடா.. தமிழனைப் பிடிக்க அவங்களுக்கு ஒரு காரணம் வேணுமே? ஆமிக்காரங்கள் பிடிச்சு இவனட்டை இருந்த காசையும் பறிச்சுப் போட்டு கொழும்பிலை குண்டு வைக்க வந்த கரும்புலியெனக் கதைகட்டி உள்ளுக்கை அடைச்சுப் போட்டாங்களாம்” நவம் கோபத்துடன் கூறினான்.

"தாய் போய் என்ரை பிள்ளையை விடுங்கோ எண்டு அழுது மண்டாடியிருக்கு. அதுக்கு அவங்கள் அஞ்சு லட்சம் காசு தந்தாத்தான் விடுவம் எண்டு சொல்லியிருக்கிறாங்கள். மனுசி பாவம் அவ்வளவு காசிற்கு ஆரட்டை போறது? இருந்த நிலத்தையும் நகையையும் வித்துத்தானே மகன் வெளிநாடு போகக் காசு குடுத்தது... என்ன செய்யிறதெண்டு தெரியாமல் ஆராரிட்டையோ எல்லாம் கையேந்திப் பாத்தது... ஆர் அவ்வளவு காசு குடுப்பினம்.. கடைசியா ஏலாமக் கையைவிட்டிட்டுது. பாவம் ! இப்ப பார்த்தா.. இந்த நிலைமை! கொண்டு திண்டிட்டாங்கள்" குமுறினான் ரவி.

அப்பு தன் நீண்ட மௌனத்தைக் கலைத்து வாயைத் திறந்தார்.

"இவங்களிட்டை ஏதோ பெடியள் வந்து சரணடைஞ்சதாகவும், அவையை வைச்சுக் காப்பாத்தி புனர்வாழ்வு குடுக்க வேணுமெண்டும் அதுக்குக் காசு பெருவாரியாத் தேவை எண்டு வெளிநாடுகளிட்டைச் சொல்லி கடன் வாங்கிறதுக்காக இவங்கள் செய்த வேலை இது. சும்மா வயித்துப் பிழைப்புக்காக கொழும்புக்கு வாற பொடியளையும், வெளிநாட்டுக்குப் போக எண்டு கொழும்பிலை வந்து தங்கியிருக்கிற பொடியள் பெட்டையளையும் பிடிச்சு புனர்வாழ்வு எண்ட பெயரிலை அமைச்சு வைச்சிருக்கிற வதை முகாம்களிலை அடைச்சு வைச்சுக் கொடுமைப்படுத்தினாங்கள். அதுகின்ரை உச்சக் கட்டந்தான் இந்தப் படுகொலையள்! இப்பிடிப் பிடிச்சு வைச்சிருக்கிற பெடிபெட்டையளின்ரை சகோதரங்கள் ஆராவது வெளி நாட்டிலை இருந்தா அல்லது பிடிபட்டதுகள் காசுக்காரரா இருந்தா அவங்கள் கேக்கிற காசைக் குடுத்து வெளியிலை எடுத்திடலாம். ஆனா, ஏழை எளியதுகள் என்ன செய்யுங்கள்? சாப்பாட்டிற்கே திண்டாடுகிற அந்தச் சனம் லட்சத்தைக் கண்ணாலையும் கண்டிருக்காதுகள். அதுகளின்ரை பிள்ளையள் பாவம்! வதைபட்டு வதைபட்டு கடைசியா உயிரையும் விட்டுதுகள்”

"கொழும்புக்கு வாற எல்லாப் பொடியளும் கரும்புலியெண்டா இவங்களெல்லாம் இருக்கிற இடங்களிலை இப்ப சாம்பல் மேடுதான் இருந்திருக்கும். சொல்லிறதெல்லாம் பச்சைப்பொய்... மலையகத்திலை பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 வயதுப் பொடியனையும் புலி எண்டு பிடிச்சுக் கொண்டு போய் அந்த முகாமிலை வைச்சிருந்தவங்களாம். இப்ப அந்தப் பொடியனும் மரணக் காயத்தோடை ஆஸ்பத்திரியிலை இருக்கிறானாம்" நவம் ஆற்றாமையோடு கூறினான்.

"இப்படி பிச்சை எடுக்கிறதுகளையும், ஏழைகளையும் பிடிச்சுக் கொண்டு வந்து ரீவியிலை காட்டி 'இஞ்சபாருங்கோ இப்படித்தான் சின்னப்பிள்ளையளை புலிகள் யுத்தத்தில் ஈடுபடுத்துகினம்' எண்டு வெளிநாடுகளுக்குக் காட்டிப் பிரச்சாரம் செய்யிறவை. இப்ப கிட்டடியிலை அமைச்சர் கதிர்காமர் கனடாவுக்குப் போன இடத்திலை, புலியள் வயசு குறைஞ்ச பிள்ளையளை யுத்தத்திலை ஈடுபடுத்துகினம். அவையளிட்டையிருந்து தப்பி வந்தவைக்கு புனர்வாழ்வு குடுக்க வேணும். அதுக்கு காசு தாங்கோ எண்டு நிதியுதவி கேட்டவர். பார் என்னென்ன காரணமெல்லாஞ் சொல்லிக் கையேந்திறாங்களெண்டு” அப்பு ஒரு கோபச் சிரிப்புடன் சொன்னார்.

"இப்ப வெளிநாடுகளுக்கு எல்லாம் விளங்கியிருக்கும். அது புனர்வாழ்வு முகாமா? வதை முகாமா? எண்டு” குமரன் கூறினான்.

"அந்த வதைமுகாமிலை இருந்த அப்பாவியளைக் கொன்றது மட்டுமில்லாமை அதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு மக்கள் துக்கம் அனுட்டிக்கவும் விடுறாங்களே... சிரிப் பைத்தான் பிடுங்கினாங்கள் எண்டு பார்த்தா அழுறதுக்குக்கூட சுதந்திரம் இல்லாமப் போச்சு இந்த நாட்டிலை. மலையகத்திலை துக்கம் அனுஸ்டித்த சனங்களுக்கும் ஆமிக்கும் பிரச்சனை ஏற்பட்டுது. அதைச் சாட்டா வைச்சு தமிழ்ச் சனத்தின்ரை 20 கடையளை எரிச்சுச் சாம்பலாக்கிப் போட்டாங்களாம். அங்கை என்ன சித்திரவதையோ.. அந்தச் சுவர்களே அறியும்” நவத்தின் குரல் கம்மியது.

அப்பு கொஞ்சம் உரக்கவே சொன்னார்.

"நிப்பாட்டு கதையை! உந்தக் கதவடைப்பு சத்தியாக்கிரகம், அகிம்சை எண்டது எல்லாம் உவங்களிட்டை எடுபடாது எண்டு தெரிஞ்சுதானே எங்கடை தலைவர் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினவர். அகிம்சை எண்டா கிலோ என்ன விலை எண்டு கேக்கிற சிங்களத்திட்டைப் போய் மயிலே மயிலே இறகு போடு எண்டு கேட்க முடியுமோ. அவங்களுக்கு அகிம்சைப் பாசை விளங்காது. ஆயுதம் கதைக்கிறது மட்டுந்தான் விளங்கும்."

"படுகொலையள் ஒரு பக்கம் எங்களின்ரை பாரம்பரியப் பிரதேசங்களின்ரை பிரதிநிதித்துவங்கள் கண்ணுக்கு முன்னாலை பறிபோகிற கொடுமைகள் மறுபக்கம் எண்டு எல்லா இடியும் எங்களுக்குத்தான்" நவத்தின் நண்பன் குணம் சலித்துக் கொண்டான்.

"பொறு பொறு பொடியா! சலிக்காதை. இதைப்போல எத்தனை துக்கங்களை, சவால்களை, படுகொலைகளை இந்தக் கண்ணாலை கண்டிருக்கிறம். இந்தக் காதுகளாலை கேட்டிருக்கிறம். கடைசி வெற்றி எங்களுக்குத்தான். இப்ப திருகோணமலையிலை தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போச்சே எண்டு நொந்து போகாதை. இதே திருகோணமலையிலை புலிக்கொடி பறக்க தமிழன் ஆட்சி நடக்கும் தம்பி"

நவமும் நண்பர்களும் அந்தக் கனவு விழிகளில் மிதக்க சில கணங்கள் மௌனமாக இருந்தனர். செவிவளைந்தான் அந்த திடீர் மௌனத்தின் காரணத்தை அறிவதற்கோ என்னவோ விழிகளை உயர்த்திப் பார்த்தது. அப்பு தொடர்ந்தார்.

"மலையகத்தில இருந்து தெரிவான சந்திரசேகரனை, பிந்துநுவேவப் படுகொலைகளைக் கண்டிச்சு ஹர்த்தால், கதவடைப்புச் செய்ததற்காக பிடிச்சு அடைச்சுப் போட்டு, விட்டிட்டாங்கள். வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவான அடைக்கலநாதன், பிசாசில் நல்ல பிசாசு எண்டு சொல்லுற மாதிரி துரோகக் கும்பலுக்குள் நல்ல துரோகியா இருப்பம் எண்டு ஒண்டிரண்டு அறிக்கையள் ஒரு மாதிரியா விட்டார் அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிச்சார். அடுத்தநாள் அந்தக் கும்பலின்ரை ஆயுதங்கள் களையப்பட்டன. அதோடை அடைக்கலநாதன் அடைக்கலமானார். இந்தளவும் இந்த அரசாங்கம் பதவியேற்ற ஒரு மாதங்களினுள்ளே நடந்தேறிய விடயங்கள். அப்படித் தொடர்ந்து பாராளுமன்றத்திற்குப் போகவேணுமென்றால் சிங்களம் சொல்லிறதைக் கைகட்டிச் செய்யிற சேவகனாக இருக்க வேண்டும்."

"அதாவது ஈ.பி.டி.பி மாதிரி இருக்க வேணும்” என்று இடைமறித்தான் நவம்.

"சரியாய்ச் சொன்னாய். 1948 இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிப் போனவை என்னத்தைச் செய்தினம்? ஏதாவது ஒண்டு பிரயோசனமாகத் தமிழ்ச் சனத்திற்கு வாங்கிக் கொடுத்தாங்களா? அல்லது இந்தச் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கத்தான் ஏதாவது செய்ய முடிஞ்சுதா? சும்மா போய் கதிரைக்குப் பாரமா இருந்திட்டு வந்ததுதான் மிச்சம். இந்தச் சந்தர்ப்பத்திலை ஒண்டு சொல்லவேணும். 1975லை தந்தை செல்வா பாராளுமன்றத்திலை சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னா 'எங்களின்ரை அனுபவங்களின்ரை அடிப்படையிலை இருந்து சொல்லுறன். சிங்கள அரசியலமைப்பிலிருந்து தமிழர் எந்த உரிமையையும் பெறமுடியாது. இதாலை தமிழர்கள் இனி தங்கடை சுயநிர்ணய உரிமையைக் குறித்த பேச்சுவார்த்தை ஒண்டையே சிறீலங்காவோடை நடத்த முடியும்' எண்டு சொன்னார் அதுதான் சரி. சும்மா நானும் பாராளுமன்றம் போய் வாறன் எண்டு வேலைக்குப் போன மாதிரிப் போய் வந்தாச் சரியே" அப்பு மூச்சிரைக்க நிறுத்தினார்.

"இதே காலப்பகுதியிலைதானே எங் கடை தேசியத் தலைவர் ஆயுதப் போராட்டம் மூலந்தான் எங்களுக்கெண்டொரு நாட்டை உரிமையளை வெண்டெடுக்க ஏலும் எண்டு இயக்கத்தை உருவாக்கினார்" நவம் நினைவுபடுத்தினான்.

“ஓமடாம்பி, பதினையாயிரத்திற்கு மேலை போராளியள் வீரச்சாவு அடைஞ்சாப்பிறகும், அறுபதாயிரத்திற்கும் மேலை சனங்கள் சிங்களத்தாலை கொண்டு குவிக்கப்பட்டாப் பிறகும், எத்தனையோ லட்சக்கணக்கான சனங்கள் வேரறுக்கப்பட்டு வேற்று நாடுகளிலை அலையிற நிலைமை வந்தாப் பிறகும்.... இத்தினைக்கும் பிறகும் இந்தப் பாராளுமன்றத்திற்குப் போய் வெட்டிக்கதையள் கதைச்சுக் கொண்டிருக்கிறதிலை என்ன நன்மை?” அப்பு ஆவேசத்தோடு கேட்டார்.

"தமிழர்க்கு ஒரு நன்மையுமில்லை. சந்திரிகா போடுற எலும்புத் துண்டைக் கவ்விற கூட்டத்துக்கு மட்டுந்தான் நன்மை” குமரன் கேலியாகக் கூறினான்.

 "கொஞ்சப்பேர் இப்பிடிக் கதிரைக்கு ஆசைப்பட்டு அலையிறபடியாத்தான், தமிழர் பிரதேசங்களை நாங்கள் சனநாயகத்தைக் கடைப்பிடிக்கிறோம். மேலும் தமிழர்களுக்கு அமைச்சர் பதவிகள். கொடுத்திருக்கிறம் அதுதான் எலும்புத்துண்டுகள் எண்டு சிங்கள அரசாங்கம் தண்டோரா போட, அதைக் கண்டு சில வெளிநாடுகள் அட! அவங்கள் தமிழரையும், சிங்களவரையும் ஒண்டாத்தானே பாக்கிறாங்கள் எண்டு நினைக்கிறதோடை நில்லாம, இப்படியிருக்க இவங்களுக்கேனாம் தனிநாடு எண்டும் கேக்க வைக்கிற நிலைமை வந்திருக்கு. அவங்கடை அந்த நிலைப்பாட்டிற்கு இந்தக் கதிரை அடிபாடும் ஒரு முக்கியமான காரணம்" அப்புவின் குரல் சூடு பறந்தது.

"அப்படியெண்டா அப்பு நாங்களெல்லாரும் சேர்ந்து தேர்தலை பகிஸ்கரிச்சா என்ன?” அதுவரை மௌனமாக இருந்த ரவி கேட்டான்.

"நாங்கள் எல்லோரும்... ஒரு தமிழன் விடாம பகிஸ்கரிக்க வேணும். தமிழன் எண்டேக்குள்ள இந்தக் கதிரைக்கு அலையிற தமிழர்களும் அடக்கம். அப்பிடிப் பகிஸ்கரிக்கிறதின் மூலந்தான் இவங்கடை சிங்கள தேசத்தின்ரை சனநாயகத்தின்ரை சாயம் வெளுக்கும். அப்பதான் உலகமும் அடடா! இவங்கடை ஆயுதப் போராட்டமும் நியாயமானதுதான் போல கிடக்கு எண்டு கண்ணைத் திறந்து பாக்கும். அப்பிடிச் செய்யாட்டி எங்கடை போராளியள் ஒரு பக்கம் கட்டியெழுப்ப இவங்கள் மற்றப் பக்கத்தாலை இடிக்க முயற்சி செய்யிற நிலைமைதான் தொடரும். அதாலை எல்லாரும் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேணும்"

"பகிஸ்கரிக்கிறதுக்கு என்ன? சும்மா கதிரைக்குப் பாரமாத்தானே இருக்கிறாங்கள்?" நவம் கோபத்தோடு கேட்டான்.

"ஏன்ரா நவம், இப்ப நோர்வே விசேட துாதுக்குழு தமிழ்ப் பிரதேசத்தைப் பிரதி நிதித்துவம் செய்வதாகச் சொல்லும் இந்தப் பாராளுமன்ற ஒட்டுண்ணிகளையா சந்திச்சவை? தமிழீழத் தேசியத் தலைவரைத்தானே சந்திச்சிருக்கிறார்கள். எதற்கும் நாம் ஒட்டுண்ணிகளாக இல்லாது பெலமாக இருக்கோணுமடா."

"முடிஞ்ச முடிவு ஒண்டுதான். அதாவது ஆயுதப் போராட்டத்தின் மூலம் எங்கடை தேசத்தை நாங்கள் வென்றெடுக்கிறதுதான் அந்த முடிவு” அப்பு உறுதியோடு சொன்னார்.

போயிருந்து பிராக்குப் பார்த்தவைக்கு ஒண்டு விளங்கேல்லை. "பாராளுமன்றத்திலை அவையள் செய்யாததை ஓயாத அலைகள் மூலம் புலிகள் செய்திருக்கினம். அதாவது 'வெலிஓயா' எண்டு அவங்களாலை பெயர்மாற்றம் செய்யப்பட்ட எங்கடை 'மணலாறு' எண்ட இதயபூமியின்ரை பெரும்பகுதியை மீட்டெடுத்திருக்கினம் எங்கடை ஆக்கள்” குமரனின் குரலில் பெருமிதம் தொனித்தது.

"நல்லாச் சொன்னாயடாம்பி! எங்கடை தாய்நிலத்தின்ரை இழந்த பிரதேசங்களை நிரந்தரமா முற்று முழுதா மீட்கிறதெண்டா, எங்கடை பிள்ளையளை இந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளிலிருந்து காப்பாத்திறதெண்டா, எங்கடை பெண் பிரசுகளை அவங்கள் மானபங்கப்படுத்திறதை நிப்பாட்ட வேணுமெண்டா, கனக்க ஏன் வெளிநாட்டிலை வாழுற எங்கடை சனங்கள் நெஞ்சை நிமித்தி எங்களுக்கெண்டொரு நாடு இருக்கெண்டு சொல்ல வேணுமெண்டா அது எங்கடை தேசியத் தலைவரை எல்லாரும் பின்தொடர வேணும். எல்லாத்துக்கும் ஒரே தீர்வு தமிழீழம் ஒண்டுதான்ராப்பா. கிழக்கு வெளிச்சு விடிய நாங்களெல்லாம் தம்பிக்கு கைகொடுக்க வேணும். அப்பிடிக் கைகுடுத்தா ஓயாத அலைகள் ஓங்கியடிக்கும்" என்று கூறிக் கொண்டு அப்பு எழுந்தார். நம்பிக்கை மிளிரும் விழிகளுடன் நண்பர்களும் அந்தச் சிறுமியும் எழுந்திருந்தனர். அப்பு சால்வையை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடயைக் கட்டினார்.

செவிவளைந்தான் புது உற்சாகத்தோடு எழுந்து அவர் பின்னே விரைந்தது.....
......
-எரிமலை நவம்பர் 2000

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

Friday, 5 June 2026

உயிர் துடிக்கும் கணங்கள் -தூயவன்

உயிர் துடிக்கும் கணங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாழ் குடாநாடு பகைவனால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
திறந்தவெளிச் சிறைச்சாலையாக சில நூறாயிரம் மக்கள் பலவாயிரம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் தடுப்புச் சுவர்கள்போல் உருவாக்கப்பட்டுள்ள தொடர் காவலரண்களினாலும் மண் அணைகளினாலும் அப்பிரதேசம் துண்டாடப்பட்டுள்ளது. பொட்டல் வெளிகளில் காணப்படும் சிறு பற்றைக்காடுகளையும், சதுப்பு நிலங்களில் வளரும் கண்டல் தாவரங்களையும் வெட்டைவெளி முடிவில் அடர்ந்திருக்கும் பனை வடலிகளையும், மறைவிடங்களாக்கி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் புலிவீரர்கள். தமிழர் தலைநிமிர்விற்கு ஏதுவாக இருந்த பூமி, ஏளனத் திமிருடன் பகை உலாவரும் இடமானது. பகைவன் நித்திரையைக் குலைக்கவும் நிம்மதியைச் சிதைக்கவும் வல்ல தாக்குதல்களைப் புலிகள் நடத்துகின்றனர்.

1996ஆம் ஆண்டு

மாவீரர் தினம் அண்மித்துக்கொண்டிருந்தது. பகைசூழ்ந்த பிரதேசமொன்றினுள் போராளிகள் அணியொன்று தங்கியுள்ளது. அதனால் அது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்திற்கு வரவேண்டும். அவ்வேளை சில காவலரண்களை தாக்கியழிக்கத் திட்டமிடப்படுகின்றது. அவர்கள் தாக்குதல் திறனை அதிகரிக்க இன்னோர் அணியினர் உள்நுழைந்து இணையவேண்டியுள்ளது. வெளியிருந்து போலித்தாக்குதல் நடாத்தப்பட்டு பகைவன் திசை திருப்பப்படுவான். அவ்வேளை உட்புறமிருந்து காவலரண்களின் பின்புறமாக அதிரடித்தாக்குதல் நடாத்தப்படும். பகை கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி, காவலரண்களை அழித்து வெளியேறி வெளிநிற்கும் அணியுடன் இணைந்து பின்வாங்குதல் வேண்டும். பல மைல் தொலைவில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் உள்நிற்கும் அணிக்கும் உரியமுறையில் தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது உள்நுழையும் அணியுடன் போராளி மருத்துவன் மலரவன் இணைந்துகொள்கின்றான். இரவிரவாக நகர்ந்தவர்கள் பகற்பொழுதில் வெட்டையொன்றின் சிறு பற்றைக்குள் உருமறைத்துக் கொள்கிறார்கள். ஏதேட்சையாக அங்குவந்த இராணுவத்தினரால் அப்பகுதி மேலெழுந்தவாரியான தேடுதலுக்கு உட்படுத்தப்படுகின்றது.

உருமறைந்திருந்தவர்கள் நீரும் உணவும் தவிர்த்து சிறு அசைவும் காட்டாமல் தற்காத்துக் கொள்கின்றார்கள். தகுந்த நேரம் வந்தவுடன் வெளிவந்து முட்கம்பி வேலியும் மண் அரணும் கடந்து குறித்த அணியினருடன் இணைந்துகொள்கின்றார்கள்.

திட்டமிட்டவாறு தாக்குதல் நடத்தி மீண்டும் வெளியேறவேண்டும்.

மீண்டும் பகைவன் காவலரண்கள் நோக்கி பின்புறமாக நகர்கின்றார்கள். மருத்துவர் மலரவன் முட்கம்பி வேலியொட்டி நிற்கும் மரமொன்றில் நிலையெடுத்துக் கொள்கின்றான். முற்குறித்தவாறு சக அணியினர் முன்பக்கமாக
தாக்குதல் தொடங்கவேண்டும். துரதிஸ்டவசமாக அவர்கள் வந்துசேர முன்னரே தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது மலரவனின் இடது தோள்பட்டையை ரவையொன்று பதம் பார்க்கின்றது. சில அடிகள் பின்னால் தூக்கி எறியப்பட்டான். எழுந்து மறுகையால் தடவிப்பார்க்கின்றான். குபுகுபுவென இரத்தம் பாய்கிறது. வலதுகையால் இடதுகை நாடித்துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறான். கையின் இருப்பை அச்சுறுத்தும் காயம் இல்லை என்பதால் திருத்திப்பட்டுக் கொள்கிறான். இவனால் இரத்தப் பெருக்கை நிறுத்த கட்டுப்போட முடியாது. தளபதிக்கு நிலமையை அறிவிக்கின்றான். பின்னர் மருத்துவப் பையையும் தூக்கிக்கொண்டு நகர்கின்றான். தணலாய் பாயும் ரவைகளையும் சிறு பீரங்கித் துண்டுகளையும் அலட்சியம் செய்தவண்ணம், முட்கம்பியூடு புகுந்து மண் அரண் ஏறி மறுபக்கம் இறங்குகிறான். தலை சுற்றுவதுபோல் இருக்கின்றது. காவலரண்களுக்கு இடைப்பட்ட மண் அரணின்கீழ் இருக்க முயற்சிக்கின்றான். காலில் ஏதோ தட்டுப்பட தடவிப் பார்க்கின்றான். அது RPG எறிகணை செலுத்தியென
அடையாளம் காண்கின்றான். இவ்விடத்தில் இருப்பதோ, மயங்குவதோ உசிதமானதல்ல என முடிவெடுக்கின்றான். மெல்ல RPGயையும் எடுத்துக்கொண்டு, உள்ள பலமெல்லாம் திரட்டி முன்னோக்கி நகர்கின்றான்.

முதலில் தாக்குதல் நடாத்தவேண்டிய அணியினருடன் தொடர்பெடுத்து இணைந்துகொள்கிறான். அவ்வணியில் வந்த போராளி மருத்துவன் அமுதனால் முதலுதவி செய்யப்படுகின்றது. தாக்குதல் முடிவிற்கு வருகையில் இருவர் வீரச்சாவடைந்துவிட்டனர். பதினெட்டுப் போராளிகள் பாரிய, சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். பொழுது விடிந்தால் சுற்றிவளைக்கும்
பகைவனால் பலர் அழிக்கப்படுவர். அதனால் இரவோடு இரவாகவே பலமைல்கள் பின்வாங்குகின்றார்கள்.

காயமடைந்தவர்களை வன்னித்தளம் அனுப்பவேண்டும். சில நாட்களிற்கு அது சாத்தியமற்றது. உள்ளே வைத்து சிகிச்சையளிப்பது என முடிவெடுக்கப்படுகின்றது. அவசர தேவைக்கென சதுப்புநில கண்டல் மரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட பரண்களில் ஒளிந்துகொள்கின்றார்கள். கீழே சதுப்புநிலம் மேலே சில அடிகள் உயரத்திற்கு கண்டல் பற்றைமரங்கள். ஆள் நிமிர்ந்து நிற்கமுடியாத அளவு பதிவான கொட்டில், துருப்பிடித்த தகரத்திலே தளம் அமைக்கப்பட்டுள்ளது. முதலுதவிச் சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்ட காயக்காரர்கள்
சூழ்ந்திருக்கின்றார்கள்.

காயமடைந்த மலரவனுடன் அமுதனும் முரளியும் என்ன செய்வதென ஆலோசனை கலக்கின்றனர். ஒரு போராளிக்கு வயிற்றில் ஊடுருவல் காயம். உள்ளே குருதி பெருகுவதற்கான அறிகுறி தென்படுகின்றது. அவனுக்கு  வயிற்றை திறந்து(laprotomy) சத்திரசிகிச்சை செய்யவேண்டும். அது இவ்விடத்தில் சாத்தியமற்றது. எனவே மரபுரீதியான சிகிச்சையை (concervative mangment) வன்னிக்கு அனுப்பும்வரை செய்யவேண்டியதுதான். இன்னொருவனுக்கு முழங்கால் சிதைந்துவிட்டது. அவனுக்கு தொடையுடன் காலை வெட்டியகற்றினால்தான் உயிர் தக்கவைக்கலாம். ஆனால் குருதிப்பிரிவு சோதிக்கும் கருவிகள் குருதி அமுக்கம் அளக்கும் கருவிகள் எதுவும்
கைவசம் இல்லை. சத்திரசிகிச்சைக்கான ஏனைய உபகரணங்கள் வெளியில் பதுக்கிவைத்திருந்த இடங்களிலிருந்து எடுத்துவர ஆட்கள் சென்றிருந்தனர். மலரவனுக்கு மயக்கமருந்து கொடுத்து சிகிச்சை செய்தால் அவனது பணி தடைப்பட்டுப் போய்விடும். ஆகவே அதனைக் கைவிட்டு மூவரும் இணைந்து ஏனையவர்களுக்கு சிகிச்சையைத் தொடர முடிவெடுக்கின்றனர்.

சிதைந்த காலை வெட்டியகற்றும் சத்திரசிகிச்சையைத்தான் முதலில் செய்யவேண்டும். மிகமிகக் குறைந்த இரத்த இழப்புடன் சத்திரசிகிச்சையினை முடிக்கவேண்டும். அப்பொழுதுதான் அப்போராளி உயிர் தப்புவதற்குச்
சாத்தியங்கள் அதிகமாகும். மலரவன் ஒருகையால் மயக்கமருந்து கொடுக்கிறான். ஏனைய இருவரும் சிதைந்த காலை அகற்றத் தொடங்குகின்றனர். அப்பொழுது வயிற்றுக்காயப் போராளி மூச்சுவிடமுடியாமல் திணறிக் கத்துகின்றான். நிலைமையை அவதானித்த முரளி அவனருகில் சென்று பரிசோதிக்கின்றான். பிறகு 50ml 'சிரிஞ்சை' எடுத்து அவன் வயிற்றில் குத்தி உட்பெருகியிருந்த குருதியை எடுத்து வெளியில் விடுகின்றான். அவ்வாறு சிலமுறை செய்ய அவனுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் குறைகின்றது. மீண்டும் வந்து கால் சத்திரசிகிச்சையை அமுதனுடன் சேர்ந்து தொடர்கின்றான். குருதியிழப்புக்கு திரவ ஊடகம் மட்டுமே மாற்றீடாக ஏற்றப்பட்டு சிகிச்சை தொடர்கின்றது. வெட்டுக்காயத்தில் இருந்து வெளியேறும் குருதி தனது பாகுநிலைத் தன்மையை இழந்து திரவத்தன்மையை அதிகம் வெளிக்காட்டுகின்றது. இதுவொரு ஆபத்தான நிலை. குருதி அமுக்கம் அளக்க வசதியில்லை. நாடித்துடிப்பையும்
உணர முயவில்லையென மலரவன் குறிப்பிடுகின்றான். அமுதனும் முரளியும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.

யோசிப்பதற்கு எதுவும் இல்லை. ஒருங்கூட்டல் பரிசோதனை செய்யாமலே குருதி மாற்றீட்டை ஒருமுறை செய்வது என முடிவெடுக்கின்றனர். அமுதனிடம் இருந்து குருதி பெறப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்டவனுக்கு ஏற்றப்படுகின்றது. அவனது உடல் நிலையில் முன்னேற்றம் தென்படுகின்றது. அப்பொழுது வயிற்றுக்காயப் போராளி முரளியை அழைத்து தனது வயிற்றினுள் நிரம்பும் குருதியை மீண்டும் குத்தி வெளியில் விடச்சொல்கின்றான். இவனும் மீண்டும் அவ்வாறே செய்ய அவனுக்கு சுகமாக இருக்கின்றது. காலிற்கான சத்திரசிகிச்சையை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அப்பொழுது தலையில் காயப்பட்ட போராளி ஒருவனின் மனநிலை குழம்பிவிட்டது. அவன் அங்கும் இங்கும் ஓடித்திரிய ஆரம்பித்துவிட்டான். ஏனையவர்களுக்கு ஏறிக்கொண்டிருந்த திரவ ஊடக 'ரியூப்களை' இழுத்து தொல்லை கொடுக்கின்றான். தொங்குபறியில் சதுப்பு நிலத்தில் நிற்கும் அவர்களின் கொட்டிலும் ஆடத்தொடங்கிவிட்டது. உடனடியாக அவனுக்கு தளர்விக்கும் ஊசிமருந்து ஏற்றப்படுகின்றது. பின்பு மற்றையவனுக்கு கால் துண்டிக்கப்படும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்படுகின்றது. இரண்டாம் நாள் அனைத்துக் காயக்காரர்களும் கட்டுமரங்களின் உதவியுடன் வன்னிக்கு நகர்த்தப்படுகின்றார்கள். மருத்துவப் பலம் குறையாது இருப்பதற்காக மலரவன் தொடர்ந்தும் உள்ளே நின்று பணி தொடர்வதென முடிவெடுக்கப்படுகின்றது.

நெருக்கடியான அந்த களமருத்துவப்பணி முடிந்த திருப்தியுடன் ஏனைய மருத்துவப் போராளிகள் அணியினருடன் தளம் திரும்புகின்றனர்.

-தூயவன்

-விபு இதழ் 126.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர் 

Thursday, 4 June 2026

பூமாலை நடவடிக்கை"

"பூமாலை நடவடிக்கை"
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

1987-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையிலான அரசியல் மற்றும் இராணுவ வரலாற்றில் மிக முக்கியமான, அதே நேரத்தில் பெரும் விவாதத்திற்குள்ளான ஒரு நிகழ்வுதான் பூமாலை நடவடிக்கை (Operation Poomalai) இது ஈகிள் மிஷன் 4' (Eagle Mission 4) என்றும் அழைக்கப்படுகிறது.

1987-ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆபரேஷன் லிபரேஷன்' (Operation Liberation) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.

யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்ற நினைத்த இலங்கை இராணுவம், அப்பகுதிக்குச் செல்லும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை முழுமையாகத் தடைசெய்தது.

இதனால் யாழ் குடாநாட்டில் இருந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் கடுமையான பசி, பட்டினி மற்றும் மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்த விவகாரத்தில் தலையிட முடிவு செய்தார்.

இந்தியா முதலில் கடல் வழியாக உதவ முயன்றது. ஜூன் 2, 1987
 அன்று இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் 19 படகுகளில் உணவுப் பொருட்களை ஏற்றி அனுப்பியது. ஆனால், இலங்கை கடற்படை அந்தப் படகுகளை வழிமறித்து இந்திய எல்லைக்கே திருப்பி அனுப்பியது.
இந்தத் தடையால் அதிருப்தியடைந்த இந்திய அரசு, இலங்கைக்குத் தனது இராணுவ பலத்தைக் காட்ட  வான்வழியாக உணவுப் பொருட்களை விநியோகிக்கத் திட்டமிட்டது. இதுவே 'ஆபரேஷன் பூமாலை'

1987 ஜூன் 4 அன்று மதியம் 3:55 மணிக்கு பெங்களூரில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐந்து An-32 (ஆண்டனோவ்-32) போக்குவரத்து விமானங்கள் புறப்பட்டன.
இந்த போக்குவரத்து விமானங்களுக்குப் பாதுகாப்பாக இந்தியாவின் அதிநவீன ஐந்து மிராஜ் 2000 (Mirage 2000) போர் விமானங்கள் ஆயுதங்களுடன் கூடவே சென்றன.

விமானங்கள் புறப்பட்ட சில நிமிடங்களில், இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் மூலமாக இலங்கை அரசுக்கு "நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உணவுகளைப் போட வருகிறோம், தடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாலை 5:00 மணியளவில் யாழ்ப்பாண வான்பரப்பிற்குள் நுழைந்த இந்திய விமானங்கள், சுமார் 1,500 அடி உயரத்தில் பறந்து 25 டன் எடையுள்ள அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் பவுடர் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பாராசூட்டுகள் மூலம் யாழ் நகரில் இறக்கின. இலங்கை இராணுவம் இதைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாலை 6:13 மணிக்கு அனைத்து இந்திய விமானங்களும் பாதுகாப்பாகத் திரும்பின.

ஆபரேஷன் பூமாலை ஒரு குறுகிய நேர வான்வழி நடவடிக்கை என்றாலும், அதன் அரசியல் மற்றும் இராணுவ பின்விளைவுகள் மிக ஆழமானவை.

இந்தியாவின் இந்த அதிரடி வான்வழி அத்துமீறல் மற்றும் இராணுவ பலத்தைக் கண்டு இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அதிர்ச்சியடைந்தார். இந்தியா நேரடியாகப் போரில் குதித்துவிடும் என்று அஞ்சிய இலங்கை அரசு, யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்த 'ஆபரேஷன் லிபரேஷன்' தாக்குதலை உடனடியாக நிறுத்தியது; முற்றுகையையும் தளர்த்தியது.

பூமாலை நடவடிக்கையின் நேரடி விளைவாக, இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. இதன் விளைவாக, அடுத்த சில வாரங்களிலேயே (ஜூலை 29, 1987) இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இலங்கையில் மாகாண ஆட்சி முறை (13-வது சட்டத்திருத்தம்) கொண்டுவர வழிவகை செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வடகிழக்கு இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் ஆயுதங்களை மௌனிக்கச் செய்யவும் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

ஆரம்பத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற வந்த இரட்சகனாகப் பார்க்கப்பட்ட இந்தியா, காலப்போக்கில் விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளால் அவர்களுடனேயே போரிட வேண்டிய சூழல் உருவானது. அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களும், 1,200-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களும் கொல்லப்பட்டனர். இது தமிழ் மக்களிடையே இந்தியா மீதான பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பூமாலை நடவடிக்கையில் தொடங்கி, அமைதிப்படை அனுப்பியது வரை இந்தியா எடுத்த அரசியல் மற்றும் இராணுவ முடிவுகளின் இறுதிப் புள்ளி, 1991-ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய முட்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சாவுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைந்தது.

ஆபரேஷன் பூமாலை என்பது இந்தியாவின் அண்டை நாட்டு விவகாரத்திலான மிகத் துணிச்சலான இராணுவ ராஜதந்திர நடவடிக்கை என்று பார்க்கப்பட்டாலும் . எந்த ஈழத்தமிழர்களை பாதுகாக்க என்று புறப்பட்டார்களோ அதே ஈழத்தமிழர்கள் ஒன்றே முக்கால் இலட்சம் மக்களை இனப்படுகொலைச் செய்ய இந்திய அரசு துணை நின்றது,என்பது வரையான கறுப்பு பக்கங்களையே வரலாறு பதிவு செய்துள்ளது .

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 300 இலங்கை பௌத்த பிக்குகள் மீது குழந்தை துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 300 இலங்கை பௌத்த பிக்குகள் மீது குழந்தை துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையில் ஏராளமான பௌத்த பிக்குகள் குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற தகவல், OCCRP விடுத்த தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக மூத்த பௌத்த மதகுருமார்களில் ஒருவருக்கு எதிரான குழந்தை பாலியல் குற்றச்சாட்டுகளுடன் நாடு போராடி வரும் வேளையில் இது வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 300 இலங்கை பிக்குகள் குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், இதன் விளைவாக அவர்களில் கிட்டத்தட்ட 30 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு முகமை வெளிப்படுத்தியுள்ளது.

OCCRP விடுத்த தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கையின் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையால் (NCPA) வெளியிடப்பட்ட இந்தத் தகவல், பௌத்த பெரும்பான்மை கொண்ட நாடு, அதன் மிக மூத்த மதகுருமார்களில் ஒருவர் மீது கூறப்படும் குழந்தை பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்கொண்டு வரும் வேளையில் வெளியாகியுள்ளது.

 நாட்டின் மிகவும் புனிதமான எட்டு பௌத்தத் தலங்களைப் பொறுப்பேற்று நடத்தும் 71 வயதான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரோ, பல ஆண்டுகளாக 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மே 9 அன்று கைது செய்யப்பட்டார்.

அந்த மதகுரு மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை, மேலும் அவர் கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான மகேஷ் கொட்டுவெல்ல, ஹேமரத்ன தற்போது சட்டரீதியான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டின் பேரில் விசாரணையில் இருப்பதாகக் கூறினார்.

"என் கட்சிக்காரர் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உறுதியாக மறுக்கிறார்," என்று ஹேமரத்னவின் வழக்கறிஞர் OCCRP-யிடம் தெரிவித்தார்.

ஹேமரத்னவின் கைது இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு துறவிகள் ஆழ்ந்து போற்றப்பட்டு மதிக்கப்படுகிறார்கள், மேலும் மதகுருமார்கள் மீதான விமர்சனம், நாட்டின் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் அடையாளத்தின் மீதான தாக்குதலாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதால், ஹேமரத்னவின் வழக்கு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்த போதிலும், பல இலங்கை ஊடகங்கள் அவரது கைது குறித்து செய்தி வெளியிடவில்லை.

 2023 மே 1 முதல் 2026 மே 1 வரை, 285 வெவ்வேறு பௌத்த பிக்குகளுக்கு எதிராக பொதுமக்களும் மதகுருக்களும் புகார்களை அளித்திருந்ததாக NCPA, OCCRP-யிடம் தெரிவித்தது. NCPA-யின் பரிந்துரைகளின் விளைவாக, குற்றம் சாட்டப்பட்ட பிக்குகள் 27 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்று அந்த அமைப்பு கூறியது, ஆனால் அவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர் என்பது குறித்த தரவுகள் தங்களிடம் இல்லை என்றும் அது மேலும் குறிப்பிட்டது.

NCPA-யின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான பிரீத்தி இனோகா ரணசிங்க, OCCRP-யிடம், 70 சதவீதத்திற்கும் அதிகமான புகார்கள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை என்று கூறினார். நாட்டில் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், மதத் தலைவர்கள் உட்பட பலரால் செய்யப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்து புகாரளிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மூத்த பிக்குவான ஹேமரத்னா மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் அளித்த பதிலையும் NCPA விமர்சித்துள்ளது. அவரைக் கைது செய்வதற்காக, "தடியை எடுத்துக்கொண்டு காவல்துறையைத் துரத்த வேண்டியிருந்தது" என்று அந்த அமைப்பின் சட்ட அதிகாரி சஜீவனி அபேய்கூன் சமீபத்தில் ஒரு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 இலங்கையின் பழமைவாத சமூகத்தில் பௌத்த பிக்குகளின் உயர்ந்த அந்தஸ்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதைக் கடினமாக்குகிறது என்று NCPA-வின் ஸ்தாபகத் தலைவரான பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா OCCRP-யிடம் கூறினார்.

"ஒரு மதகுரு, குறிப்பாக ஒரு முன்னணித் தலைவர் என்றால், அவர் மிகுந்த பணபலம் கொண்ட ஒரு சக்திவாய்ந்த நபர் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

ஹேமரத்னாவின் வழக்கில் விசாரணை தொடரும் நிலையில், "சட்டரீதியான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுமா என்பதை இலங்கையின் சட்டமா அதிபரே தீர்மானிப்பார்" என்று அவரது வழக்கறிஞர் கொட்டுவெல்ல OCCRP-யிடம் தெரிவித்தார்.

-SNAP Report
தமிழில் -தமிழரசன்அப்துல்காதர்

தமிழீழ நடைமுறை அரசில்,சந்ததி காணாத நிம்மதி.

தமிழீழ நடைமுறை அரசில், சந்ததி காணாத நிம்மதி.
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

A5 என்று குறியீட்டுப் பெயரையுடைய செங்கலடி - பதுளை பிரதான வீதியில் இலுப்படிச் சேனை சந்தியிலிருந்து நண்பகலை அண்மித்த பொழுதொன்றில் எங்கள் பயணம் தொடங்கியது.

முடிவின்றி காடுகளில் முடிவடையும் வயல்வெளிகளினூடும், வீதியை மூடும் காட்டு மரங்களினூடும், சிறு ஆறுகளைத் தாண்டி நீண்டு கொண்டிருந்தது அந்த வீதி. இடையிடையே வயல்களில் தெரியும் காவற்குடில்களும், திடல்களில் தெரியும் கிராமங்களையும் கடந்து, ஐந்தாம் கட்டைச் சந்தியின் ஊடாக நாங்கள் கூழாவடியினுள் பிரவேசித்தோம்.

சூழ்ந்த காட்டினுள் பரவிய வயல் வெளிகளைக் கொண்டிருந்தது கூழாவடிக் கிராமம். அந்தப் பிரதேசத்தில் எல்லாக் கிராமங்களையும் போல,நகரத்திலிருந்து வெகு தொலைவில் தனித்திருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கே, மட்டக்களப்பு வாவியில் பிரிக்கப்பட்டிருந்த படுவான்கரையில் அநேக கிராமங்களில் ஒன்றாக, அன்றாடம் தன் கிராம மக்களை மாத்திரம் தன் முற்றத்தில் கண்ட கிராமம் இன்று அந்தப் பிரதேசத்தில் எல்லோராலும் பேசப்படும், நாடிச்செல்லப்படும் கிராமமாகிவிட்டது.
கோறளை தெற்கு பிரதேச செயலர் பிரிவின் ஒரேயொரு முழுநேர வைத்தியசாலையாக, மட்டக்களப்பு வாவியின் கீழே அப்பிரதேசத்தில் சுற்றியிருக்கும் ஈரளைக்குளம், பெரிய கொட்டு, நடுக்காட்டுக் கிராமம், திகிலிவெட்டை, கோராவெளி, பள்ளத்துச்சேனை, சந்திவெளித்திடல், தரவை, குடும்பிமலை என முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் இரண்டாயிரம் வரையிலான குடும்பங்களுக்குமான ஒரேயொரு மருத்துவமனையாக விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவமனை அங்கே நிமிர்ந்து நின்றது.

புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிதி உதவியுடன் கடந்த 26.09.2005 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் பகுதி, மகப்பேற்று விடுதி, ஆண் - பெண் நோயாளர் விடுதி, மருத்துவ விடுதி என எல்லாம் தனித்தனியே அமையப் பெற்றிருந்தது.

அந்தப் பகற்பொழுதில் அங்கே திரண்டிருந்த பலபத்து மக்களுடன் ஒருவராய் நானும் இணைந்துகொண்டேன். மருத்துவமனையின் வெளிநோயாளர் விடுதி இருக்கையில் இருந்தவாறே அருகிலிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்தேன்.

“இஞ்ச முந்தி பூச்சி கடிச்சா (பாம்பு) சாவுதான் தம்பி”

"வயல் வெட்டையுக்க, காடுகளுக்க, வேட்டைக்குப் போகேக்க ஏதாவது நடந்தா ஆறு தாண்டி மெயினில வாழைச்சேனைக்குத் தான் போகோணும்."

"இடையில கிரான் பாலத்தில் ஆமிக்காரன் இரிக்கான்.'"

"ஐஞ்சு மணியான, பிறகு அங்கால போகேலாது."

“அவன் வந்து பாதையை திறக்க ஒரு மணித்தியாலமாவது செல்லும்”

“உப்பிடித்தான் தம்பி. ஒருக்கா வடமுனையில ஒராளுக்கு பூச்சி கடிச்சதெண்டு கொண்டுபோனாங்க"

“அங்கையிருந்து கிரான்பாலம் ஒரு முப்பது முப்பத்தைந்து கிலோமீற்றர் வரும்"

"ஒருமாதிரியா ஆளைக் கொண்டந்திட்டம். ஆமி பொயின்ர திறக்க ஒரு மணித்தியாலமாச்சு”

"அங்கால கிரானுக்கு போகவே ஆள் முடிஞ்சிச்சு தம்பி”

பழைய நினைவுகளுடன். ஏதோ விச ஜந்து தீண்டி வீங்கிப்போயிருந்த தனது மருந்திட்ட காலொன்றைத் தடவியவாறு அந்த நடுத்தர வயது உழைப்பாளி எனக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.

எந்த மருந்துவ வசதியுமற்று நீண்ட தூரம் பயணித்த பின்னும் இராணுவத்தினரின் அலட்சியங்களினால் மருத்துவமனை செல்லமுடியாமல் இப்படி எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

நீண்டதூரம் நடந்த களைப்புடன் கர்ப்பிணிப் பெண்னொருவரை தாயொருவர் கூட்டி வந்திருந்தார். அவர்கள் இருக்கைக்கு அருகில் சென்று அவர்களுடன் கதைக்கத் தொடங்கினேன்.

தூரத்தே மியான்குளத்திலிருந்து அவர்கள் 'கிளினிக் வந்ததாகச் சொன்னார்கள்.

"முந்தியெல்லாம் நாம இப்படி ஓரிடமும் போறதில்லை தம்பி”

"எங்களுக்கு போக றோட்டுமில்லை, வருந்தங்காட்ட ஆஸ்பத்திரியுமில்லை”

"மியாங்குளத்தில் இருந்து வெட்டைக்கு, வாழைச் சேனை போறதெண்டா முடியாத காரியம்"

“இப்படித்தான் தம்பி என்ர மூத்த மகளுக்கு பிரசவம் கஸ்டமாப் போச்சு"

"அப்ப சரியான மழைக்காலம், ஆறுகள் எல்லாம் றோட்டை குறுக்கறுத்து ஓடிச்சு. ஒரே வெள்ளக் காடு. ஒருமாதிரியா புலிபாய்ஞ்சகல் கொண்டத்திட்டம்.
பெருவெள்ளம் தம்பி தோணியள் ஒண்டும் கரையில இல்லை. பிரசவ வலி எடுத்திட்டுது”

“பிறகு ஆம்பிளையள் கொஞ்சப்பேர் காட்டுக்க போய் பட்டமரம் கொண்டுவந்து தோணிகட்டித்தான் அங்கால போனனாங்கள்"

“அதுக்கிடையில் பிரசவமாயிற்று. அனா தாயை காப்பாற்றேலாமப் போச்சு”

தனது மகளை நினைத்து கண்ணீர் விட்ட அந்தத் தாயின் முகத்தில் கவலை ரேகையுடன் தாங்கள் இதுவரை அனுபவித்த துன்பத்தின் வடுவும் முகத்தில் தெரிந்தது.

காடுகளின் நடுவே ஆங்காங்கே காணப்பட்ட ஊர்களிலெல்லாம் அவர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏதுமே அப்போது இருக்கவில்லை. வேட்டைக்குப் போகும்போது வயல்களில் வேலை செய்யும்போதும் விலங்குகளால் தாக்கப்பட்டவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் மருத்துவத்திற்குச் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எனச் சொல்லி கைதுசெய்யப்பட்டும் இருந்தனர்.

"இப்படித்தான் ஒருநாள் தம்பி. முறுத்தானையில வயல் வெட்டைக்க வேலைசெய்யேக்க ஒராளுக்கு நெஞ்சுக்குத்து வந்திட்டிது,

''கொண்டுபோக என்ன இரிக்கி, ஒண்டில் சைக்கிள் எடுக்கணும் அல்லாட்டி வண்டில் கட்டணும்.

ஒருமாதிரி கிரானுக்கு கொண்டுபோக முன்ன ஆள் முடிஞ்சிது”.

"இஞ்ச இவ்வளவு நாளும் இரிக்கம், அநேகமா சின்னதா ஒரு வருத்தமோ, நெஞ்சுக் குத்தோ வந்தா, பூச்சி குத்தினா, காட்டில ஆனையடிச்சு, பண்டிவெட்டி காயப்பட்டால் பொடிதான் கிரானுக்கு வரும். ஆள் தப்பியிராது.”
அவர்களது பிரதேசத்தில் எங்கேயுமே. எப்போதுமே ஒரு முழுநேர வைத்தியசாலை இருந்ததில்லை.

"சந்திவெளிக்கு போகவேணும் தம்பி, பத்து பதினைஞ்சு கட்டை தாண்டி, அங்கதான் மருந்து கொடுக்கிற ஒர் இடம் இரிக்கி”

கொடுப்பார்கள்" “அதுகும் இடைக்கிடை தான் மருந்து

“வருத்தம் இடைக்கிடையா வரும் தம்பி?” கூழாவடி வாசியொருவர் கூறினார்

இப்பொழுதுதான் அவர்களின் பிரதேசத்தில் அவர்களுக்கென ஒரு மருத்துவமனை ஆரம்பித்திருக்கின்றது. யாருக்கும் அஞ்சாமல் எந்த இராணுவத்தினரிடமும் வைத்தியசாலை செல்ல அனுமதி கேட்காமல் எங்கேயிருந்தாலும் சைக்கிளிலே வந்து விடக்கூடிய தூரத்தில் அவர்களுக்கெனவோர் வைத்தியசாலை உருவாகியிருக்கின்றது.

ஒரு வைத்தியருடனும் ஐந்து மருத்துவ தாதிகளுடனும் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாக தீபம் திலீபன் வைத்தியசாலையைப் பார்த்தபொழுது பெருமையாக இருந்தது. அங்கிருந்து நான் புறப்படும்போது இறுதியாக பெண்டுகள்சேனையில் இருந்து வந்திருந்த முதியவர் ஒருவர் என்னுடன் வாசல்வரை கதைத்துவந்தார்.

“எனக்கு என்ர அப்பற்ற அப்பருக்கு அறிந்த காலம் முதல் எங்களுக்கு வைத்தியசாலை ஒண்டுமே இல்ல தம்பி.”

"மருந்தெடுக்க ஏலாமலே, இஞ்ச எத்தனை பேர் சேத்துப்போச்சின”

“இப்ப இந்த திலீபன் வைத்தியசாலை தான் முதலா எங்களுக்கு வந்திரிக்கி”

“இப்பதான் தம்பி என்ர சந்ததியிலேயே முதலா நான் ஒரு வைத்தியசாலையை எங்கட சுற்று வட்டாரத்தில காணுகிறன்”

“எவ்வளவு நிம்மதியா இரிக்கி”

நீண்ட அவர்களின் நெருக்கடி வாழ்வின் சுமைகளை நினைத்து நடந்துகொண்டிருந்தேன் “எவ்வளவு நிம்மதியா இரிக்கி” அவர்களுடைய வார்த்தை என்னுள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அன்புமாறன்

-விபு இதழ் 126.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

லெப் கேணல் சுட்டா

அவனொரு புதுமையான மனிதன். 
~~~~~~~~~~~~~~~~~~~~
24.09.2005 நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம். யாருக்கு என்ன நடந்தது? போராளிகளின் முகங்கள் இருண்டு கிடந்தன. சுட்டா அப்பா வீரச்சாவாம். அந்த வார்த்தைகள் உள்நுழையும் முன்னரே அடுத்து எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்பாவைப் பிரிந்த பிள்ளைகளைப்போல எல்லோரும் தவித்துப்போனோம். ஏனென்றால் எங்களுக்கெல்லாம் அப்பாவாகவே அவன் இருந்தான். அந்த நினைவுகளைத்தான் இந்தக் குறிப்பு சொல்ல முனைகின்றது.

சுட்டாவின் ஆரம்பகால வாழ்க்கையே சோகமானது. திருகோணமலை சாம்பல்தீவிலே அவனது குடும்பம் வாழ்ந்துவந்தது. அது சிங்களம் எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமித்த காலம். இராணுவத்தால் தமிழ் உயிர்கள் காரணமில்லாமல் சித்திரவதை செய்து பறிக்கப்பட்ட காலம். இந்த கொடூரத்திற்குள் சுட்டாவின் மூத்த சகோதரனும் பலியாக நேர்ந்தது. சுட்டாவிற்கு மூன்று பெண் சகோதரிகளும் ஒரு தம்பியும் இருந்தனர். தந்தையின் உழைப்பில் இயங்கியது குடும்பம். கொஞ்ச நாளில் தந்தையும் வாகன விபத்தொன்றில் காயமடைந்து வேலைசெய்ய முடியாமற்போக குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு சுட்டாவிற்கு. சின்ன வயதிலேயே தச்சுத்தொழில் பழகி குடும்பத்தை பராமரித்தான் சுட்டா.
இந்த நாட்களில்தான் சுட்டா திருகோணமலையிலிருந்து வேலையின் நிமிர்த்தம் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தான். அவனுக்கு தையல் வேலையிலும் நாட்டமிருந்தது. இதனால் இம்ரான் பாண்டியன் படையணியின் தையல் பகுதியில் அவனுக்கு வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்க அதை ஏற்றுக்கொண்டு ஒரு தையலாளனாகச் செயற்பட்டான். இந்த வேலையின் போது சுட்டாவிற்கு பல போராளிகளின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இந்தத் தேசவிடுதலைப்
போராட்டத்தில் தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு 1992இல் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டான் சுட்டா.

சரத்பாபு-7 என்ற பயிற்சி அணியில் பயிற்சி பெற்ற சுட்டா ஒரு விடுதலைப்போராளி ஆகியபோது தையல்பணியில் அவனிற்கிருந்த திறமையின் நிமிர்த்தம் இம்ரான் பாண்டியன் தையல்கூடப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். இயக்கத்தின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சுட்டா, பயிற்சிபெற்ற பின்பும் ஏனைய போராளிகளைப்போல் சண்டைக்களம் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு படையணியில் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் சண்டைக் களங்களுக்கு புறப்பட்டான்.

1993இல் தவளை நடவடிக்கை, 1995இல் புலிப்பாய்ச்சல், 1996இல் ஓயாத அலைகள் 01 நடவடிக்கை, அளம்பிலில் தரையிறங்கிய இராணுவத்துக்கெதிரான நடவடிக்கை, சத்ஜெய இராணுவ நடவடிக்கைக்கெதிரான தாக்குதல் என படிப்படியாக பல களங்களையும் கண்டு சண்டைகளிலும் ஒரு தேர்ச்சியாளனாக சுட்டா மாறியிருந்தான். இதற்குச் சாட்சிகளாக பல விழுப்புண்களை தன் உடலில் தாங்கியிருந்தான். அதன் தளும்புகள் அவன் உடலெங் கும் இருந்தன.

இந்த காலகட்டத்தில்தான் சிங்களதேசம் எங்கள் பிரதேசத்தின் மீது பாரிய படை நகர்வுக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தப் படைநகர்விற்கு கவசப் படைக்கலங்களையே பெரிதும் நம்பி திட்டம் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சம காலத்தில் சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகரமான திட்டங்களை முறியடிக்க எமது தலைவரும் போராளிகளைத் தயார்ப்படுத்தினார். சிங்களம் பெரிதும் நம்பிய கவசங்களை தகர்த்தழிக்கவென புதிய படையணி ஒன்றை உருவாக்கி அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பயிற்சிகள் மிகக் கடுமையானவையாக இருந்தன. ஆயுதங்களுடன் நீண்டதூர ஓட்டம், தடை தாண்டும் பயிற்சிகள், மதியவேளையில் கொழுத்தும் வெயிலில் உடற்பயிற்சி என எல்லா கடின பயிற்சிகளையும் சுட்டா மேற்கொண்டான். ஏற்கனவே சண்டைக் களங்களில் விழும்புண் தாங்கிய உடல். இதனால் பயிற்சிகளைச் செய்ய சிரமமாக இருந்த போதும் இனிவரும் சமர்களில் தானும் ஆயுதமேந்தி சமர்புரியவேண்டும் என்ற உந்துதல் அவன் இந்தப் பயிற்சிகளில் சித்தியடையக் காரணமாய் இருந்தது.

எல்லாப் பயிற்சிகளும் முடிந்து லெப்.கேணல் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணி என்ற பெயரில் எதிரியின் கவசப்படையை எதிர்கொள்ளும் அணி தயாராகவிருந்தது. வவுனியா, ஓமந்தைப் பகுதிகளில் அமைந்திருந்த எங்களின் தடுப்பரண் பகுதிகளுக்குச் சென்று அணிகள் நிலை கொண்டன. இவற்றில் ஒரு அணிக்குப் பொறுப்பாக சுட்டாவும் களமிறங்கினான். எதிரியின் வருகைக்காகக் காத்திருந்ததோடு எதிரியின் முன்னரங்க நிலைகள் அவதானிக்கப்பட்டு எதிரியின் காவலரண் ஒன்றை R.P.G எறிகணைமூலம் தாக்கி அழிப்பதென முடிவு செய்யப்பட்டது.

08.03.1997 அன்றைய நாளின் பகற் பொழுதில், சுட்டாவின் தலைமையிலான அணி வேவு வீரரின் வழிகாட்டலுடன் எதிரியின் காவலரணை அண்மித்து நிலைகொள்கிறது. R.P.G எறிகணைகள் அனலைக் கக்கியபடி எதிரியின் காப்பரணை நோக்கிச்சென்று மோதி வெடிக்கிறது. அடுத்தடுத்த இரு எறிகணைகள் வெடித்துச்சிதறி அடங்க, அந்தக் காப்பரண் முற்றாக அழிந்துபோய்க் கிடந்தது. போராளிகள் அவ்விடத்திலிருந்து பின்வாங்கினர். ஏழு இராணுவத்தினர் பலியாகியும் சில இராணுவத்தினர் காயமடைந்ததுமான இத்தாக்குதலில் எமது தரப்பில் சேதம் எதுவுமிருக்கவில்லை. புதிய அணியின் உருவாக்கத்தின் முதலாவது தாக்குதல் சுட்டாவின் தலை மையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

13.05.1997 அன்று எதிர்பார்த்தபடி “ஜெயசிக்குறு” என்ற பெயரில் பாரிய படைநகர்வை ஆரம்பித்தது சிங்கள இராணுவம். பெரும் மோதல் வெடித்தது. அந்த ஊரெங்கும் போர்ச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இராணுவம் முன்னேற முன்னேற போராளிகள் புதிய புதிய வியூகங்களில் எதிரியை எதிர்கொண்டு சண்டையிட்டனர். முன்னேறிவந்த கவசவாகனங்கள் விசேட அணியால் தாக்கி அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் இருந்தன. சண்டை நீண்ட நாட்களாகத் தொடர்ந்தது. ஓமந்தை, தாண்டிக்குளம், இறம்பைக்குளம், பெரியமடு, புளியங்குளம் என சமர்க்களம் விரிந்துகொண்டு சென்றது. இந்த நீண்ட சமர்களுக்குள் போராளிகளுக்கு ஓய்வு கிடைப்பதென்பது மிகக் குறைவாகவே இருந்தது. கிடைக்கும் ஓய்விலும் எதைச்செய்வது? சுட்டாவைப் பொறுத்தவரை போராளிகள் எப்போதும் சந்தோசமாகவே இருக்கவேண்டும். அவர்களின் மகிழ்ச்சிக்காக எதைச் செய்யவும் அவன் தயாராகவே இருப்பான். கிடைக்கும் நேரங்களில் தனது அணியிலுள்ள போராளிகளுக்குக் கதை சொல்லுவான். பழைய சண்டைகளை எடுத்துச்சொல்லி போராளிகளுக்கு அறிவூட்டுவான். போராளிகளுக்கு கிடைப்பவற்றைக் கொண்டு ஏதாவது சாப்பிடச் செய்துகொடுக்க முடியுமானால் அதையும் தானே நின்று செய்துகொடுப்பான். அவன் எதைக் கதைத்தாலும் அதில் நகைச்சுவை இருக்கும், நல்ல அறிவுரையிருக்கும். அதுமட்டுமல்ல போராளிகளுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க வேண்டியிருந்தால் யாருடனாவது கதைத்து அவற்றை பெற்றுக்கொடுப்பான். சுட்டாவுடன் இருந்தால் தாங்கள் சண்டைக்களத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு கொஞ்சநேரம் மறந்துபோகும். அவன் வார்த்தைகள் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகமூட்டுபவையாக இருக்கும். இதனால் சுட்டா இருக்கும் காப்பரண் தேடி போராளிகள் ஒன்றுகூடுவார்கள்.

அவன் முகாமில் நிற்கும் நாட்களில் கூட அப்படித்தான். சுட்டாவின் விடுதி எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பக்கத்து விடுதியில் உள்ள போராளிகள் கூட அவனுடன் இருப்பார்கள். சுட்டாவின் இந்தத் திறமையை யாராலும் மிஞ்சிவிட முடியாது. அது அவனுக்கே உரியது. இனி போராளிகளுக்கு சுவையான சாப்பாடு செய்து கொடுப்பதில் சுட்டா முன்னணியில் நிற்பான். இவற்றோடு மற்றப் போராளிகள் எடுக்கும் அத்தனை பயிற்சிக்கும் தானும் செல்வான். இரவு பயிற்சிகள் முடிந்து போராளிகள் படுக்கைக்குப் போவார்கள். சுட்டாவின் விடுதியில் மட்டும் வெளிச்சம் தெரியும். சுட்டாவிற்கு நன்றாக தைக்கத் தெரியும் என்பதால் போராளிகள் சுட்டாவை சூழ்ந்துகொள்வார்கள். அந்தவேளையில் அவர்கள் சுட்டாவை பொறுப்பாளனாகப் பார்ப்பதில்லை. சுட்டாவும் அப்படித்தான். தனக்கேன் இந்தவேலை என ஒதுங்கிக்கொள்வதுமில்லை. முழு மனதோடு ஆசையாக கண் தூங்கத்தூங்க விழித்திருந்து ஆயுதங்களுக்கான ‘கோல்சர்கள்' தைத்துக் கொடுப்பான். போராளிகளுக்கு இதற்கென தனியிடமிருந்தாலும் சுட்டாவின் தையலில் அவர்களுக்கு விருப்பம்.

சண்டைக் களத்திலிருந்து சுட்டா முகாம் திரும்பிவிட்டால் அங்கு நிற்கும் பொறுப்பாளரை போராளிகள் கரைச்சல் படுத்துவார்கள். சுட்டா அண்ணை எப்ப வருவார்? சுட்டாண்ண வந்திட்டாராம் என்றால் போராளிகள் மீண்டும் கூடிவிடுவர்கள்.

சுட்டாவின் இந்த அற்புதமான இயல்புதான் சமர்க்களத்தில் நின்ற அவனை ஆரம்ப இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்ப வழிவகுத்தது. அது புதிதாக போராட்டத்தில் தங்களை இணைத்தவர்கள் பயிற்சிபெறும் இடம். அவர்கள் இந்தத் தேசத்தின் தேவையை உணர்ந்து போராளியானாலும் நீண்டகாலம் குடும்பச் சூழலுக்குள் வாழ்ந்ததால்
அந்தப் பிரிவும் புதிய வாழ்க்கை முறையும் ஆரம்பத்தில் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். இது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நாட்களில் இவர்களை வழிநடத்தும் போராளிகள்தான் இதை சரிவரப் புரிந்து செயற்படவேண்டும். சுட்டா இதற்கு மிகவும் பொருத்தமானவன். அவனிற்கு இதைப்பற்றி சொல்லிக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. அவன் இயல்பே அப்படித்தான். போராளிகளுக்குத் தாய் தந்தையரைப் பிரிந்திருந்த இடைவெளி சுட்டாவினால் இல்லாமல் போனது. சுட்டா போராளிகள் தங்கும் ஒவ்வொரு விடுதியாகச் சென்று போராளிகளுடன் கதைத்து அவர்களின் தேவையைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வான். புதிய போராளிகளுக்கு இயக்கம் பற்றிய பழைய வரலாற்றுச் சம்பவங்களை சொல்லிக் கொடுப்பான். எங்காவது ஒரு விடுதியில் கலகலப்புச் சத்தம் கேட்டால் சுட்டா அங்கேதான் நிற்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நாட்களில்தான் சுட்டாவிற்கு திருமணம் நடந்தது. ஆனால் சுட்டா வீட்டில் நிற்பது குறைவு. சுட்டாவிடம் குடும்பம் என்ற பாச உணர்வு நிறையவே இருந்தபோதும், அவன் தன் குடும்பமான போராளிகளுடனேயே அதிக நேரத்தை செலவிடுவான். எப்போதும் தனக்குக் கீழ் இருக்கும் போராளிகளுக்காக, இந்தத் தேசத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் அவனிடம் மேலோங்கியிருந்தது. இதனால் சுட்டாவிற்கும் போராளிகளிற்குமான உறவு மிக நெருக்கமானதாக இருந்தது.

ஆரம்பத்தில் ஒரு பயிற்சி முகாமின் பொறுப்பாளனாக இருந்து செயற்பட்ட சுட்டா பின்னர் ஆரம்ப இராணுவப் பயிற்சி முகாம்கள் அனைத்திற்கும் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான்.

இந்தக்காலம் வன்னியின் சமர்களமெங்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். சுட்டாவிற்கு வாகனம்கூட இருக்கவில்லை. அவன் எதையும் எதிர்பார்க்கவுமில்லை. அப்போது அவனிற்கு கொடுக்கக்கூடியவாறு இயக்கத்திடம் ஒரு பச்சைநிற துவிச்சக்கர வண்டியே இருந்தது. அவன் சந்தோசமாகவே அந்த துவிச்சக்கர வண்டியில் வன்னியில் வெவ்வேறு இடங்களில் இருந்த முகாம்களுக்கெல்லாம் சென்று வருவான். சிலவேளை துவிச்சக்கர வண்டி பழுதென்றால் நடையில்கூட போய்விடுவான். எப்போதும் சாதாரணமாகவே இருக்க விரும்புபவன். இயக்கத்திடம் இருந்து தனக்காக எதிர்பார்ப்பதை விட எங்கள் தலைவர் எதிர்பார்ப்பதைச் செய்ய வேண்டும் என்பதே அவனது கொள்கையாக இருந்தது. அதனால்
மிகுந்த ஆர்வத்தோடு சண்டைக் களங்களில் நின்று ஈடுபட்ட அவன் இயக்கத்தின் வேண்டுதலை ஏற்று மனப்பூர்வமாகவே இந்தப் பணியை மேற்கொண்டான்.

சுட்டாவின் இந்த அரவணைப்பான வளர்ப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் உருவாகினார்கள். சுட்டா நின்ற பயிற்சி முகாம்களில் போராளிகள் விலகுவதென்பது மிகவும் குறைவாகவே இருந்தது. ஏனென்றால் போராளிகள் அவனுடன் ஒன்றித்துப் போனார்கள்.

இப்போது சண்டை நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. இந்த நாட்களில்தான் சுட்டாவிற்கு புதிய பணிக்கான அழைப்பு வந்தது. அது லெப்.கேணல் நவம் அறிவுக் கூடம். சமராடி விழுப்புண்பட்ட போராளிகளுக்கான கல்விக்கூடம். அவர்களிற்கு முக்கியம் தேவையானது அன்பும் அரவணைப்பும்தான். சுட்டா இதில் நன்கு கைதேர்ந்தவன். ஏற்கனவே சமர்க்களத்தில் விழுப்புண் பட்டவன். அதைவிட தனக்கு மிச்சமாயிருந்த ஒரு ஆண் சகோதரனையும் சண்டைக் களத்திலே பிரிந்தவன். தன் சகோதரனான கப்டன் இனியவனின் நினைவுகளும், அந்த இழப்பின் வேதனையும் அவனிடம் இருந்தது. அவனால் இவர்களின் மனதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுக்கும் இந்தப் பணி விருப்பமானதாக இருந்தது.

லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத்தின் நிர்வாகப் பொறுப்பாளனாக சுட்டா நியமிக்கப்பட்டான். இங்கு சுட்டாவிற்கு நிறையப்பணிகள் இருந்தன. ஒவ்வொரு விழுப்புண்பட்ட போராளியும் ஒவ்வொரு விதமான தாக்கங்களுக்கு உள்ளானவர்கள். அவர் களுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவம், உணவு என எந்த விடயத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படவேண்டும். சுட்டாவிற்கு இது புதுமையான விடயமல்ல. தன் நீண்டகால அனுபவ வாழ்வினை வைத்துக்கொண்டு இந்த விழுப்புண் பட்ட போராளிகளுக்காக கடினப்பட்டு உழைத்தான். எல்லா வேலைகளிலும் அவனும் ஒருவனாகவே நின்று செயற்படுவான். போராளிகளின் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து அவர்களுக்கு நல்ல உணவு வழங்குவது, அவர்களுடன் சென்றிருந்து கதைப்பது என அவன் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருப்பான். முகாமில் சுட்டாவிற்கென்று ஒரு இடமே இருக்காது. ஒன்றில் சமயற்கூடத்தில் நிற்பான் அல்லது போராளிகளுடன் நிற்பான் அல்லது போராளிகளின் உணவுத் தேவைக்காக போடப்பட்டிருந்த பண்ணையில் நிற்பான். இப்படி எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பான்.

அவனது முகம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். அவனது முகத்தில் கடுமையைக் காணமுடியாது. அதனால் போராளிகள் அவனுடன் ஒன்றித்துப் போனார்கள். ஆண், பெண் என்ற பேதமின்றி எல்லோரும் அவனை செல்லமாக 'சுட்டா அப்பா' என்றே அழைப்பார்கள். சுட்டா போராளிகள் யாராவது தவறிழைத்து பேசினால் கூட அவனது பேச்சைக்கேட்டு திருந்துவார்களே தவிர, அவனில் யாருக்குமே கோபம் வராது. அவனது அன்பான அரவணைப்பில் அவனது தண்டிப்பு மறந்துபோகும். எந்தப் போராளிகளும் மனம் தயங்காது சுட்டாவிடம் எதுவானாலும் கேட்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவன் அப்பாதானே.

இப்படி எதையும் பார்க்காது செயற்படும் அவன், கொஞ்ச நாளாய் சுகயீனமுற்றிருந்தான். மருத்துவமனையில் அவனை பரிசோதித்ததில் அவனது சிறு நீரகங்கள் செயலற்றுக் கொண்டிருந்தன. எல்லோர் மனதிலும் ஏக்கம். சுட்டா அண்ணை எப்ப சுகப்பட்டு வருவார்? அவரின் சிறுநீரகங்கள் மாற்றப்பட வேண்டும். அவரின் மூத்த சகோதரி முன்வந்தார். தன் ஒரு சிறுநீரகத்தை தன் சகோதரனுக்கு கொடுத்தார்.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

சுட்டாவிற்கு ஓய்வு தேவைப்பட்டது. சுட்டா இனி முன்னர் போல் வேலைசெய்ய முடியாது. அவன் ஓய்வாக இருக்கவேண்டும். அவனுக்கென்று குடும்பம் இருந்தது. பிள்ளை இருந்தது. அவன் முன்னர்கூட வீட்டில் நிற்பது மிகவும் அரிது. அப்படி அரிதாக அங்கு நிற்கும் நாட்களில் கூட சும்மா இருந்ததில்லை. தனது வீட்டு வளவைப் பண்படுத்தி பயன்தரும் கன்றுகள் வைப்பான், நிலத்திற்கு சீமெந்து போடுவான், கதிரை பின்னுவான். எஞ்சிய நேரத்தில் பிள்ளையையும் பார்த்துக்கொள்வான். சுட்டா வீட்டில் நிற்கும் நாட்களில் குழந்தைக்கு சோறு
தீத்துவது சுட்டாதான். ஏனென்றால் அவனுக்கு அவ்வளவு பொறுமையிருந்தது.

அயலவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கூட நிற்கும் நேரங்களில் தன்னால் தீர்க்கக் கூடியவற்றை தீர்த்து வைப்பான். தனது வீட்டிற்கு அயலில் இருந்த பாலர் பாடசாலை நிலம் சீமெந்து போடப்படாமல் உள்ளதை அறிந்து அங்கு கற்கும் சிறுசுகளுக்காக, ஒருநாள் அந்த சிறுசுகளின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு அதைப்பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை நிதி சேர்க்கவைத்து தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து அந்தப் பாலர்பாடசாலை நிலத்திற்கு சீமெந்து போட்டுக் கொடுக்கவும் சுட்டா காரணமாய் இருந்தான்.

கொஞ்சநாள் ஓய்வில் இருந்த சுட்டா தன்னால் இயங்கக்கூடிய நிலை வந்ததும் மீண்டும் நவம் அறிவுக்கூடம் வந்துவிட்டான். போராளிகள் எல்லோருடைய மனதிலும் மகிழ்ச்சி. ஆனால் சுட்டா முன்புபோல் இயங்கமுடியாது. அவன் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவனை கடினவேலைகள் செய்யவேண்டாமென பொறுப்பாளர் சொல்லியிருந்தார்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகவே சுட்டா முன்புபோல இயங்கத் தொடங்கினான். எப்போதுமே போராளிகளுள் ஒருவனாக நின்று தன்னை மறந்து வேலைகள் செய்தவன், அவனால் ஏனைய விழுப்புண்பட்ட போராளிகள் வேலை செய்யும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. போராளிகள் அவனைத் தடுப்பார்கள். ஆனால் “எனக்குப் பிரச்சினையில்லை என்னால செய்யமுடியும்” என்ற வார்த்தைதான் அவன் வாயிலிருந்து வரும். அவன் மீண்டும் பழைய சுட்டாவாகவே மாறியிருந்தான். அவன் எப்போதுமே தன் உடலின் வேதனையை மற்றவர் களுக்குக் காட்டியதில்லை. தான் இந்தத் தேசத்திற்காக நிறையச் செய்யவேண்டும் என்றே சொல்லிக்கொண்டிருப்பான்.

24.09.2005 அன்றய நாளின் காலைப்பொழுதில் லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத்தின் அப்பா எங்களை விட்டுப் பிரிந்த நாள். எல்லோரும் துடி துடித்துப் போனோம். சுட்டா அப்பா இனி வரமாட்டாரா என்று எல்லாப் போராளிகளும் அழுதார்கள். அவனது வித்துடல் நவம் அறிவுக்கூடத்தில் வைக்கப்பட்டது. சுட்டா அப்பா, சுட்டா அப்பா என்று எல்லோர் வாய்களும் அவன் பெயரை உச்சரித்தபடி அழுதது. அவன் இல்லாதபோதுதான் அவனின் பெருமை புரிந்தது.

அதனால்தான் அவன் பத்து வருட காலமாகப் பணிபுரிந்த இம்ரான் பாண்டியன் படையணியின் அன்றைய நாள் சிறப்புத் தளபதியாக இருந்த கேணல் ஆதவன் அவரது நினைவுகளைச் சொல்லும்போது “இக்கட்டான சூழ்நிலைகளில் கடும் கஸ்ரங்களை எதிர்நோக்கி திறமையாக உழைத்த நல்லதொரு அணித்தலைவன்” என்று குறிப்பிட்டார்.

உண்மையும் அதுவே. அவன் நல்லதொரு வழிநடத்துனன், போராளிகளை மகிழ்விக்கும் திறன் வாய்ந்த கலைஞன், வீரம்மிக்க போர்வீரன், நல்ல தையலாளன், சிறந்த சமையலாளன், பாசம் செலுத்துவதில் வல்லவன். நிச்சயமாக அவன் ஒரு புதுமையான மனிதன். சாவு அவனது உயிரைப்பறித்தது உண்மைதான். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் அவன் உணர்வாய் என்றைக்குமே வாழ்ந்துகொண்டிருப்பான்.

-ச.புரட்சிமாறன்.

-விபு இதழ் 126.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்