இருநாட்பொழுதுகள்
~~~~~~~~~~~~~~~~~~
அந்த மாலைப்பொழுதில் நடவடிக்கை ஒன்றிற்காக தயாராகிக் கொண்டிருந்த வேளையில், போராளிகளின் முகத்தில் சந்தோசமும் கவலையும் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன.
சிலர் வெற்றிகளை நோக்கிப் புறப்படப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியிலும் சிலருக்கு வெற்றிக்காய்ப் போகின்றவர்கள் வித்துடலாயும் வரமாட்டார்கள் என்ற கவலையும், அலையும் நுரையுமாக அசைந்தாடியது.
அந்திப்பொழுது கணப்பொழுதில் மறைந்தது. எம் கரங்களைப் பற்றியிருந்த கரங்களும் கன்னங்களில் கன்னங்களும் புதைந்த வண்ணம் பகலும் புதைந்து இருளும் எழுந்து நின்றது. குளிர்காற்றில் அந்த கடற்கரை மணலில் இறுதிவிடைகளுக்காய் காத்திருந்த எமை கட்டியணைத்து முத்தங்கள் தந்து வழியனுப்பினார்கள்.
ஆம் நீரில் இறங்கி நீசர்குகை நோக்கி நீந்தத் தொடங்கினோம். பகைதேடி அலையோடு அலையாக உயிர்ப்பூக்கள் நாம் நீந்தினோம். நீரைமட்டும் எதிர் கொண்டு நீந்தவில்லை- எதிரியின் பராலைற் வெளிச்சங்களையும் செல் ரவை முனைகளையும் எதிர்கொண்டு நீந்திக் கொண்டிருந்தோம். எதிரியின் காப்பரண்களின் வெளிச்சங்களும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் எதிரியின் அசைவுகளும் எம் கண்ணில் நிழலாடியது. பின் ஓர் இடத்தை தெரிவுசெய்து கொண்டு எமது நகர்வினை மெதுமெதுவாக ஆரம்பித்தோம். கரையை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அலையடியின் வேகம் கூடிக் கொண்டிருந்தது. தலைக்கு மேலால் அலைகள் போட்டிப்போட்டு மிக வேகமான முறையில் அடித்துக்கொண்டிருந்தது. அப்போது காற்றை மட்டும் சுவாசிக்கவில்லை அந்த உப்புநீரையும் சுவாசித்தோம். மூச்சுத்திணறியும் தும்மவோ அல்லது இருமவோ முடியாது எதிரியின் காப்பரண்களை அண்மித்துவிட்டோம். கண்கள் எரிந்தன கண்ணீர்வழிந்தன. இருந்தும் எம்பணி தொடர்ந்தன.
வழியனுப்ப வந்தவர்கள் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு முகாம் நோக்கி திரும்பிவிட்டனர். இப்போது நானும் சக போராளியும் எதிரியின் காப்பரண்களை அண்மித்துவிட்டோம். கரை தெரிந்தது. இருவரும் அருகருகே நீந்திக் கொண்டிருந்தோம்' கரையை தொடுவதற்கு 50 மீ' தூரம் இருக்கும் போதுதான் எதிரி படகின் திடீர்த் தாக்குதலுக்குள் சிக்குண்டு இருவரும் பிரிந்து செல்கின்றோம்..!
எதிரி தொடர்ந்தும் தாக்குதலை மேற்கொண்டிருக்கும் வேளையில் ஊடறுப்புச் செய்து கொண்டு உள்நுழைய முடியவில்லை. முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு அன்றிரவு உட்செல்ல முடியவில்லை. துப்பாக்கி
வேட்டொலிகள் தொடர் செல்தாக்குதலுக்கு அப்பால் பாரா வெளிச்சங்கள் வானில் தொடர்ந்தும் தீ மூட்டியவண்ணம் இருந்தது. அந்த இரவைக்கிழித்த வெளிச்சத்துக்குள் நுழையமுடியாமல் போய்விட்டது. நேரமும் அதிகாலைப் பொழுதுக்குள் இறங்கிவிட்டது. இனி நீந்தி எமது பிரதேசத்துக்குள் வரமுடியாது என நன்றாகத் தெரியும். என்கால்களில் ஒன்று உணர்விழந்த நிலையில் செயலிழந்தது. அவை முன்பு காயப்பட்டகால் எனினும் ஒருகாலை பயன்படுத்தி நீந்திக்கொண்டிருந்தேன். அதுவும் எதிர் நீச்சல், அடுத்த காலும் செயலிழந்து விட்டது, இப்போது நேரம் 5.40 எனக்கும் எதிரிக்குமான தூரம் 100மீற்றர். என்ன செய்வது என்று முடிவுகள் எடுப்பதற்கு சிந்திக்கக் கூடநேரம் காணாது எனினும் மேல்நோக்கி பிறநீச்சலில் இருகைகளையும பயன்படுத்தி நீந்தினேன் நன்றாக களைத்துவிட்டேன். ஆனால் சிறுஓய்வும் எடுக்க முடியாது என் இறுதி மூச்சுவரை கஸ்ரப்பட்டு நீந்தினேன். நேரம் 6.10 நிமிடம் அண்ணளவாக 400 மீ தூரத்தில் எதிரின் காப்பரண்கள் அமைந்திருந்தன. நடமாட்டங்கள் அதிகரித்தன. சிறுபடகுகளும் தேடலில் இறங்கி நீரைக்கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. நானும் தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தேன். நீந்த முடியாமல் போய்கிட்டது தூரத்தில் டோராப்படகின் சத்தம்கேட்டுக் கொண்டிருந்தது. அந்த சத்தத்தினூடே வேறு ஓர்படகின் சத்தம் மிக அண்மையில் இரைந்து கேட்டது. தலையுயர்த்திப் பார்த்தேன். வெண்நுரை தள்ளியவாறு வோட்டர் ஜெற் படகொன்று எனை நோக்கி வந்துகொணடிருந்தது. என் முடிவுகளும் வேகமாகவே ஓடிக்கொண்டிருந்தது. எதிரியெண்டால் என்ன செய்யவேண்டும் என எனை தயார்படுத்தியபோது 400 மீ தூரம்வரை வந்த படகு திருப்பிக்கொண்டு சற்றுநேரம் நின்று கொண்டது. அப்போது எனை எவ்வளவுக்கு உருமறைத்துக் கொள்ள முடியுமோ அந்தளவுக்கு உருமறைத்துக் கொண்டேன். அலைகள் என்பதால் அலைகள் உயர எழுந்து விழும் நானும் அலையோடு அடிபட்டு விழுவேன். எதிரிப்படகு சென்று சற்று நேரத்தின் பின் தூரத்திற்கு விட்டது.
எதிரியின் நடமாட்டம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கையில் என் உடல் நிலை மறுபக்கத்தை காட்டிக்கொண்டிருந்தது.
இருகால்களும் உணர்விழுந்தது போல் உறைந்து விட்டது. இருகைகளும் நீரினை கிழித்தது பிறநீச்சலில் நீந்தினேன். நீரின் வேகத்தால் தோற்றுவிட்டேன். நீரினை எதிர்க்க முடியவில்லை; தவித்தேன்; தத்தளித்தேன். எனைப்பார்த்த சூரியன் உச்சியில்நின்று சிரித்துக் கொண்டிருக்கையில் என் உடலின் ஒவ்வொரு அணுக்களும் சிலிர்த்துக் கொண்டிருந்தது. வெயிலின் கொடுமையினாலும் எதிர்நீச்சலின் களைப்பினாலும் என் உடல் களைத்துப்போய் நாவறண்டது.அந்த அலைகடலின் உப்புநீரைக் குடித்தேன். தொண்டை எரிந்தது. தாகம் தீரவில்லை. என்னசெய்வது என நினைத்தபோது நான் உணவுக்காய் வைத்திருந்த கண்டோஸ் ஒன்றை எடுத்து அதனுள் உவர்நீரினைவிட்டு கலந்து குடித்தேன். ஓரளவு தாகம் தீர்ந்தது. கண்கள் எரிந்தன. இரண்டு நாட்கள் முழுமையான நித்திரை இல்லை. இன்றுடன் மூன்றாவது நாளென நினைத்தேன். நித்திரைத் தூக்கத்தினால் நீரினுள் மூழ்கி எழுவேன் கைகால்கள் எல்லாம் சோர்ந்து போய்விட்டது. என்னால் தாங்கமுடியாத அளவுக்கு உடல்வலியேற்பட்டது. என்னையறியாமல் என்விழிகளில் நீர்வர ஆரம்பித்தது. அவை என் உதட்டில் விழவும் நாவினில் தடவினேன் அந்த தண்ணீர் உப்புநீரைவிட சுவையாக இருந்தது. தாகத்தினால் கண்ணீரை விட்டு வைக்கவில்லை. அப்போது கான் தெரியும் "சுமைகளையும் கவலைகளையும் மட்டுமல்ல தாகத்தையும் தீர்ப்பது கண்ணீர் என்று'' அந்த ஊறிய என கைகளினால் கண்களைத் துடைத்தேன். மேலும் மேலும் கண்கள் எரிந்தன வேதனைகளுக்கு மத்தியிலும் சிந்தனைகள் நிழலாடியது. பகலோ இரவோ எப்படியும் எதிரியின் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து விட வேண்டும். உள் நுழைந்தால் தான் எனது கடமையை சரிவரச் செய்யலாம். இவ்வளவுக்கு கஸ்ரப்பட்டதற்கு பலன் நிச்சயமாக கிடைக்கும் என்ற முழுநம்பிக்கை என்மனதில் உறுதிபூண்டது. இவ்வேளையில் என்கால்கள் அசைவுகளுக்கு ஏற்றவாறு போய்வந்ததும் என்மனம் மிக்க மகிழ்ச்சியில் மூழ்கியது. இனி எப்படியும் நான் நீந்திச் சென்று எதிரியின் காப்பரண்களை தாண்டிச்செல்வேன் என்று.இப்படியாக நினைவுகளும் விடாது ஓடிக்கொண்டிருந்தது. நீரோடு நானும் சேர்ந்துபோய்க் கொண்டிருந்தேன். சூரியனும் மேற்குத்திசை நோக்கி போய்க்கொண்டிருந்தது. நான் நீரோடு இனியும் சேர்ந்து போனால் என் இலக்கை எட்டமுடியாமல் போய்விடும் என நினைத்து நீரை எதிர்க்காமல் குறுக்கறுத்து நீந்த ஆரம்பித்தேன். மாலை 5.00 மணி . கடற்கரையில் எதிரி நிற்பதைக்கண்டு சற்று விலத்தி நீந்தினேன். அப்பொழுது பெரும் நீரோட்டம் ஒன்றுக்குள் அகப்பட்டுவிட்டேன். கடலின் நீரோட்டம் இந்த வேகத்திலும் இருக்கும் என்பதை அறிந்துகொண்டேன். எதுவுமே செய்யமுடியாத நிலையில் நீரோடு 300 மீ தூரம் சென்றேன். அதன்பின் முடிவை மாற்றியமைத்து இரு கை, கால்களையும் பயன்படுத்தி குறுக்கறுத்து நீந்தினேன். வென்றுவிட்டேன். நீரோட்டம் குறைந்து விட்டது. கரை இன்னும் 20 மீ தூரத்தில் தான் உள்ளது. இனி வெற்றிதான் என மகிழ்வுடன் நேரத்தைப் பார்த்தேன் 7.00 மணி இரு காப்பரண்களுக்கு இடையில் உள்நுழைந்து கொண்டேன்.
மீண்டும் என் பயணம் தொடர்கின்றது. தரைமீதில் நடக்கின்றேன். அதை நடையென்று கூறமுடியாது. ஆமை என்னுடன் போட்டி போட்டால் வென்றுவிடும் எனலாம்; இருந்திருந்து மெது மெதுவாக என்பயணம் தொடர்ந்தது. பசி ஒருபுறமும் தண்ணீர் தாகம் ஒருபுறமும் தொடர என் நினைவுகள் கடமைகளை நிறைவேற்ற துடிதுடித்தது. தண்ணீரைத் தேடும் இடமெல்லாம் எதிரிதான் நிற்கின்றான். என்னால் தொடர்ந்தும் நகர முடியவில்லை. ஓர் புதரினுள் அமர்ந்து விட்டேன். இருள் விலகிக்கொண்டு போக சூரியன் எழுந்து கொண்டு வந்தான். நான் எழுந்திருக்க முடியாத நிலைக்கு வந்து விட்டேன். காரணம் இரண்டு. அதில் ஒன்று உடல்நிலை சோர்ந்து விட்டது. அடுத்தது எழுந்திருந்தால் எதிரி கண்டு விடுவான் என்ற பிரச்சனை இப்போது நான் படுத்திருக்கும் இடம் எதிரியின் பிரதான முகாமின் நடுப்பகுதியில்தான். இரவு என் கண்ணில் அவை முகாமாக தெரியவில்லை. இப்போது என்ன செய்வது தலையுயர்த்த முடியாத நிலைக்கு சிக்குப்பட்டு விட்டேன். எதிரியின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. என்னையும் எதிரியையும் என்னுடன் சிதைக்கத் தயாராகவே என் வெடிமருந்துகள் கண்விழித்திருந்தன.
ஆனால், என் கண்கள் மூடவே துடித்துக் கொண்டிருந்தன. நித்திரை இல்லாமல் உணவில்லாமல் குடிக்கக்கூட ஒரு துளி நீரில்லாமல் எப்படித்தான் இருக்கமுடியும் என நினைத்த போது கண்கள் நீரை ஆறாய் பரப்பின. கைகளினால் ஒத்தி என் நாவை தடவிப் பார்த்தேன். நாவும் எரிவைத்தான் தந்தது நாவில் பருக்கள் வேதனையைத் தந்தன. இன்றைய பகல் மறைந்து போனால் நிச்சயமாக இரவைக்கு நீர் தேடி எடுப்பேன் என்ற நம்பிக்கையுடன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு எதிரியின் அசைவுகளை அவதானித்தவாறு புற்களோடு புதிராக கிடந்தேன். கொடூர வெயில் என்னை பதம் பார்த்தது. முன்னைய இருநாட்களும் நீரில் ஊறி இளகிய தோல்கள் இன்று சூட்டை தாங்கமுடியாமல் தோல்கள் பட்டை பட்டையாக கிளம்பியது.
மழை வராதோ என ஏங்கிக் கொண்டிருந்தேன் அப்போது எதிரியின். MI 24 உலங்கு வானூர்திதான் வந்தது என் மனதில் தலைவரின் நினைவுகள் தொடர்ந்து கொண்டிருந்ததால் தாகம் என்னைத் தட்டியெழுப்பவில்லை. மனதில் தளர்வும் ஏற்படவில்லை. நினைவுகள் ஒடிக்கொண்டிருக்கும் போது 3.00 மணியிருக்கும். மேகம் கறுத்து மழைத் தூறல்கள் மண்ணை முத்தமிட்டன. நான் நாக்கை வெளியில் நீட்டினேன். என் நாவிலும் ஓரிரு துளிகள் மட்டும் விழுந்து சிதறின. அந்த மழைத்தூறல் நின்றுவிட்டது மீண்டும் சூரியன் விழித்துக் கொண்டான். புற்களில் படிந்திருந்த நீர்த்துளிகளை கையில் நனைத்துக் கொண்டு என் நாக்கின் நுனிகளினால் சுவைத்து தாகத்தை தீர்க்க முற்பட்டேன். மாலை மறைந்து இருளவன் எனை சூழ்ந்த போதுதான் எழுந்து எதிரிகளின் கண்ணில் படாமல் நீண்டதூர நடையின்பின் ஓர் இடத்தில் சவர் நீரைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன் பின் எனது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டதுடன் எதிரிக்கு பெரும் அழிவை ஏற்படுத்திக்கொண்டேன். அதை வரலாறு பாடும்நேரம் வந்துதிக்கும்; அப்போது தப்பாது கதைகூறும் வரலாறு
இருநாட்களின் கதைகளை கூறியநான் இன்னும் 24 நாட்களின் துயர்களை சுமந்து குமுறுகின்றேன். அந்த நாட்களையும் மனதில் ஏற்றுக்கொண்டு மீண்டும் கட்டியணைத்து வழியனுப்பியவர்களை கட்டியணைக்கின்றேன் வெற்றிகளின் பூரிப்பில் .
-க.புயலவன்
-வெளிச்சம்
No comments:
Post a Comment