ஜெயசிக்குறு நாளில் எழுதிய கடிதம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று மறுபடியும் அகதியானேன் ! மல்லாவியிலிருக்கிறேன்.
முன்பு நானிருந்த கிராமம்
இப்பொழுது ஆளில்லாத யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பெரிய இடுகாடுபோலாகிவிட்டது.
அது இப்பொழுது அவர்களுக்குமில்லை இவர்களுக்குமில்லை.
இங்கேயும் எனக்கென்றொரு நிரந்த முகவரியில்லை.
இந்த இடத்திலிருந்தும் சில நாட்களின் பின் மாறிவிடவேண்டும்.
எனக்காக யாரும் காத்திருக்காத ஓரிடத்தை வீடு என்று எப்படி அழைப்பது?
ஆட்கொல்லி நோய்களேயெங்கும்.
ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் அல்லது பலரின் சிதை நெருப்பிலிருந்து சூரியன் உதிக்கின்றது.
மாலையில் அது யாரோ ஒருவரின் அல்லது பலரின் சிதை நெருப்பில் வீழ்ந்து மறைகிறது.
ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கவும் மறையவும் என்று இங்கே உயிருயிராய்ப் பலி கொடுக்கிறார்கள்.
அமெரிக்காவின் அஸ்ரெக் நாகரிகவாசிகள் சூரியனை உதிக்கச் செய்யவென்று கைதிகளைப் பலியிட்டது போல !
ஆனால் நண்பனே எல்லாவித நிச்சயமின்மைகளின் பின்னாலும் நான் எரிந்துவிடாமலிருக்கிறேன்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் அசையாத நம்பிக்கையோடிருக்கிறேன்.
நான் அகதியாயிருக்கிறேன் ஆனாலும் இதயம் உடைந்து போகாமலிருக்கிறேன்.
நான் அகதியாயிருக்கிறேன் ஆனாலும் ஒவ்வொரு நாளும் மலரும் சிறு பூவைப்போல புதிதாயும் வாசமாயுமுள்ளேன்.
நான் அகதியாயிருக்கிறேன் ஆனாலும் நட்சத்திரங்கள் உள்ளளவும் சிதறிப்போகாத பொன்னான நம்பிக்கைகளோடிருக்கிறேன்.
சுற்றிலும் விண்மீன்கள் உதிர்ந்து வீழ்ந்தாலும் எனது வானம் மட்டும் அமைதியாயுள்ளது.
எனது வீண்மீன்கள் உற்சாகமாய் ஒளிர்கின்றன எதிர்காலத்தைக் குறித்த எல்லா நன்னிமித்தங்களும் எனது வழியில் தெரிகின்றன.
எனது துக்கத்தை உங்களுக்குத் தரமாட்டேன்.
தனிமையோ, சலிப்போ, விரக்தியோ உங்களையும் தொற்றிக்கொள்ள விடமாட்டேன்.
என்னிடமிருந்து உங்களைச் சோர்வடையச்செய்யும் எதுவும் வராது.
நானுங்களுக்குச் சொல்வேன் இங்கேயுள்ள எல்லா அகதிகளின் பெயராலும் சொல்வேன் .
நாங்கள் இப்பொழுதும் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டோம. !
எப்பொழுதுமே தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டோம் !
-நிலாந்தன்
-1997 மழைக்காலம் மல்லாவி.
-வெளிச்சம் 2001
No comments:
Post a Comment