எல்லாத்துக்கும் தீர்வு தமிழீழம்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கையில் சுருட்டுடன் அப்பு மரத்தில் சாய்ந்திருந்தார். அவரது கவலை தோய்ந்த விழிகள் வானத்தை வெறித்திருந்தன. முகம் சோர்ந்து சுருக்கங்கள் நிறைந்திருந்தது. அவரது கவலையை உணர்ந்தாற்போல செவிவளைந்தானும் நீட்டிய கால்களில் முகத்தைப் புதைத்தபடி கண்களை மூடியிருந்தது.
நவமும் நண்பர்களும் வழக்கம் போலவே ஆரவாரித்தபடி வந்தனர். ஆனால் மரத்தடியில் நிலவிய அமைதியையும் அப்புவின் கவலை தோய்ந்த முகத்தையும் அவதானித்ததும் ஆரவாரத்தின் இடத்தை மௌனம் கைப்பற்றிக் கொண்டது.
அந்த அமைதியைக் குலைப்பது போல ஒரு சிறுமி ஓடிவந்தாள். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஓடி வந்த வேகத்தில் அப்புவை உலுக்கிச் சொன்னாள். "அப்பு! எங்கடை கரன் அண்ணாவையும் பண்டாரவளையிலை சாக்கொண்டு போட்டாங்களாம்."
அப்பு திடுக்குற்று நிமிர்ந்தார். அவருடைய சுருங்கிய விழிகளில் கண்ணீர் திரண்டது. நவம் "பாழ் படுவாங்கள்” என்று கூறிய படி தன் விழிகளில் துளிர்த்த நீரைச் சுண்டி எறிந்தான். அவனது நண்பர்களின் விழிகளில் கோபம் குடியேறியது.
"நாலு பெட்டையளுக்கு ஒரு பெடியன்... அநியாயப்படுவாற்றை கையிலை சிக்கி.." அப்பு தோளில் கிடந்த துண்டை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டார். சகோதரனைப் பறிகொடுத்த அந்தச் சிறுமியும் சோர்ந்த முகத்தோடு அருகே உட்கார்ந்து கொண்டாள். எண்ணெய் காணாத அவளுடைய பரட்டைத் தலையும் உள்ளடங்கிய கண்களும் அவர்களை வேதனைப்படுத்தின.
"இயக்கத்திற்குப் போன எங்கடை பக்கத்து வீட்டு ரூபன் இவனையும் கேட்டவன். நீயும் வாவனடா இயக்கத்துக்குப் போவம் எண்டு. அதுக்கு கரன் எனக்கு நாலு பொம்பிளைச் சகோதரங்கள் இருக்கு.அதுகளை விட்டிட்டு வரேலாது எண்டிட்டான். வெளி நாட்டுக்குப் போய் உழைச்சாத்தான் சகோதாரங்களைக் கரையேத்தலாம் எண்டு குந்தியிருந்த நிலத்தையும் தாயின்ரை தாலிக் கொடியையும் விற்று பிரான்ஸ்சிற்குப் போறன் எண்டு கொழும்புக்குப் போனவன்தான். அவன் பிடிபட்டு ஆறுமாசத்துக்குப் பிறகுதான் அவன்ரை வீட்டுக்காரருக்குத் தெரியும். அவன் பண்டாரவளை முகாமில் இருக்கிறான் எண்டு கடிதம் எழுதியிருந்தானாம்"
"ஏன் பிடிச்சவங்களாம்?" நவத்தின் நண்பன் குணம் கேட்டான். "உனக்கு விசரடா.. தமிழனைப் பிடிக்க அவங்களுக்கு ஒரு காரணம் வேணுமே? ஆமிக்காரங்கள் பிடிச்சு இவனட்டை இருந்த காசையும் பறிச்சுப் போட்டு கொழும்பிலை குண்டு வைக்க வந்த கரும்புலியெனக் கதைகட்டி உள்ளுக்கை அடைச்சுப் போட்டாங்களாம்” நவம் கோபத்துடன் கூறினான்.
"தாய் போய் என்ரை பிள்ளையை விடுங்கோ எண்டு அழுது மண்டாடியிருக்கு. அதுக்கு அவங்கள் அஞ்சு லட்சம் காசு தந்தாத்தான் விடுவம் எண்டு சொல்லியிருக்கிறாங்கள். மனுசி பாவம் அவ்வளவு காசிற்கு ஆரட்டை போறது? இருந்த நிலத்தையும் நகையையும் வித்துத்தானே மகன் வெளிநாடு போகக் காசு குடுத்தது... என்ன செய்யிறதெண்டு தெரியாமல் ஆராரிட்டையோ எல்லாம் கையேந்திப் பாத்தது... ஆர் அவ்வளவு காசு குடுப்பினம்.. கடைசியா ஏலாமக் கையைவிட்டிட்டுது. பாவம் ! இப்ப பார்த்தா.. இந்த நிலைமை! கொண்டு திண்டிட்டாங்கள்" குமுறினான் ரவி.
அப்பு தன் நீண்ட மௌனத்தைக் கலைத்து வாயைத் திறந்தார்.
"இவங்களிட்டை ஏதோ பெடியள் வந்து சரணடைஞ்சதாகவும், அவையை வைச்சுக் காப்பாத்தி புனர்வாழ்வு குடுக்க வேணுமெண்டும் அதுக்குக் காசு பெருவாரியாத் தேவை எண்டு வெளிநாடுகளிட்டைச் சொல்லி கடன் வாங்கிறதுக்காக இவங்கள் செய்த வேலை இது. சும்மா வயித்துப் பிழைப்புக்காக கொழும்புக்கு வாற பொடியளையும், வெளிநாட்டுக்குப் போக எண்டு கொழும்பிலை வந்து தங்கியிருக்கிற பொடியள் பெட்டையளையும் பிடிச்சு புனர்வாழ்வு எண்ட பெயரிலை அமைச்சு வைச்சிருக்கிற வதை முகாம்களிலை அடைச்சு வைச்சுக் கொடுமைப்படுத்தினாங்கள். அதுகின்ரை உச்சக் கட்டந்தான் இந்தப் படுகொலையள்! இப்பிடிப் பிடிச்சு வைச்சிருக்கிற பெடிபெட்டையளின்ரை சகோதரங்கள் ஆராவது வெளி நாட்டிலை இருந்தா அல்லது பிடிபட்டதுகள் காசுக்காரரா இருந்தா அவங்கள் கேக்கிற காசைக் குடுத்து வெளியிலை எடுத்திடலாம். ஆனா, ஏழை எளியதுகள் என்ன செய்யுங்கள்? சாப்பாட்டிற்கே திண்டாடுகிற அந்தச் சனம் லட்சத்தைக் கண்ணாலையும் கண்டிருக்காதுகள். அதுகளின்ரை பிள்ளையள் பாவம்! வதைபட்டு வதைபட்டு கடைசியா உயிரையும் விட்டுதுகள்”
"கொழும்புக்கு வாற எல்லாப் பொடியளும் கரும்புலியெண்டா இவங்களெல்லாம் இருக்கிற இடங்களிலை இப்ப சாம்பல் மேடுதான் இருந்திருக்கும். சொல்லிறதெல்லாம் பச்சைப்பொய்... மலையகத்திலை பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 வயதுப் பொடியனையும் புலி எண்டு பிடிச்சுக் கொண்டு போய் அந்த முகாமிலை வைச்சிருந்தவங்களாம். இப்ப அந்தப் பொடியனும் மரணக் காயத்தோடை ஆஸ்பத்திரியிலை இருக்கிறானாம்" நவம் ஆற்றாமையோடு கூறினான்.
"இப்படி பிச்சை எடுக்கிறதுகளையும், ஏழைகளையும் பிடிச்சுக் கொண்டு வந்து ரீவியிலை காட்டி 'இஞ்சபாருங்கோ இப்படித்தான் சின்னப்பிள்ளையளை புலிகள் யுத்தத்தில் ஈடுபடுத்துகினம்' எண்டு வெளிநாடுகளுக்குக் காட்டிப் பிரச்சாரம் செய்யிறவை. இப்ப கிட்டடியிலை அமைச்சர் கதிர்காமர் கனடாவுக்குப் போன இடத்திலை, புலியள் வயசு குறைஞ்ச பிள்ளையளை யுத்தத்திலை ஈடுபடுத்துகினம். அவையளிட்டையிருந்து தப்பி வந்தவைக்கு புனர்வாழ்வு குடுக்க வேணும். அதுக்கு காசு தாங்கோ எண்டு நிதியுதவி கேட்டவர். பார் என்னென்ன காரணமெல்லாஞ் சொல்லிக் கையேந்திறாங்களெண்டு” அப்பு ஒரு கோபச் சிரிப்புடன் சொன்னார்.
"இப்ப வெளிநாடுகளுக்கு எல்லாம் விளங்கியிருக்கும். அது புனர்வாழ்வு முகாமா? வதை முகாமா? எண்டு” குமரன் கூறினான்.
"அந்த வதைமுகாமிலை இருந்த அப்பாவியளைக் கொன்றது மட்டுமில்லாமை அதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு மக்கள் துக்கம் அனுட்டிக்கவும் விடுறாங்களே... சிரிப் பைத்தான் பிடுங்கினாங்கள் எண்டு பார்த்தா அழுறதுக்குக்கூட சுதந்திரம் இல்லாமப் போச்சு இந்த நாட்டிலை. மலையகத்திலை துக்கம் அனுஸ்டித்த சனங்களுக்கும் ஆமிக்கும் பிரச்சனை ஏற்பட்டுது. அதைச் சாட்டா வைச்சு தமிழ்ச் சனத்தின்ரை 20 கடையளை எரிச்சுச் சாம்பலாக்கிப் போட்டாங்களாம். அங்கை என்ன சித்திரவதையோ.. அந்தச் சுவர்களே அறியும்” நவத்தின் குரல் கம்மியது.
அப்பு கொஞ்சம் உரக்கவே சொன்னார்.
"நிப்பாட்டு கதையை! உந்தக் கதவடைப்பு சத்தியாக்கிரகம், அகிம்சை எண்டது எல்லாம் உவங்களிட்டை எடுபடாது எண்டு தெரிஞ்சுதானே எங்கடை தலைவர் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினவர். அகிம்சை எண்டா கிலோ என்ன விலை எண்டு கேக்கிற சிங்களத்திட்டைப் போய் மயிலே மயிலே இறகு போடு எண்டு கேட்க முடியுமோ. அவங்களுக்கு அகிம்சைப் பாசை விளங்காது. ஆயுதம் கதைக்கிறது மட்டுந்தான் விளங்கும்."
"படுகொலையள் ஒரு பக்கம் எங்களின்ரை பாரம்பரியப் பிரதேசங்களின்ரை பிரதிநிதித்துவங்கள் கண்ணுக்கு முன்னாலை பறிபோகிற கொடுமைகள் மறுபக்கம் எண்டு எல்லா இடியும் எங்களுக்குத்தான்" நவத்தின் நண்பன் குணம் சலித்துக் கொண்டான்.
"பொறு பொறு பொடியா! சலிக்காதை. இதைப்போல எத்தனை துக்கங்களை, சவால்களை, படுகொலைகளை இந்தக் கண்ணாலை கண்டிருக்கிறம். இந்தக் காதுகளாலை கேட்டிருக்கிறம். கடைசி வெற்றி எங்களுக்குத்தான். இப்ப திருகோணமலையிலை தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போச்சே எண்டு நொந்து போகாதை. இதே திருகோணமலையிலை புலிக்கொடி பறக்க தமிழன் ஆட்சி நடக்கும் தம்பி"
நவமும் நண்பர்களும் அந்தக் கனவு விழிகளில் மிதக்க சில கணங்கள் மௌனமாக இருந்தனர். செவிவளைந்தான் அந்த திடீர் மௌனத்தின் காரணத்தை அறிவதற்கோ என்னவோ விழிகளை உயர்த்திப் பார்த்தது. அப்பு தொடர்ந்தார்.
"மலையகத்தில இருந்து தெரிவான சந்திரசேகரனை, பிந்துநுவேவப் படுகொலைகளைக் கண்டிச்சு ஹர்த்தால், கதவடைப்புச் செய்ததற்காக பிடிச்சு அடைச்சுப் போட்டு, விட்டிட்டாங்கள். வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவான அடைக்கலநாதன், பிசாசில் நல்ல பிசாசு எண்டு சொல்லுற மாதிரி துரோகக் கும்பலுக்குள் நல்ல துரோகியா இருப்பம் எண்டு ஒண்டிரண்டு அறிக்கையள் ஒரு மாதிரியா விட்டார் அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிச்சார். அடுத்தநாள் அந்தக் கும்பலின்ரை ஆயுதங்கள் களையப்பட்டன. அதோடை அடைக்கலநாதன் அடைக்கலமானார். இந்தளவும் இந்த அரசாங்கம் பதவியேற்ற ஒரு மாதங்களினுள்ளே நடந்தேறிய விடயங்கள். அப்படித் தொடர்ந்து பாராளுமன்றத்திற்குப் போகவேணுமென்றால் சிங்களம் சொல்லிறதைக் கைகட்டிச் செய்யிற சேவகனாக இருக்க வேண்டும்."
"அதாவது ஈ.பி.டி.பி மாதிரி இருக்க வேணும்” என்று இடைமறித்தான் நவம்.
"சரியாய்ச் சொன்னாய். 1948 இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிப் போனவை என்னத்தைச் செய்தினம்? ஏதாவது ஒண்டு பிரயோசனமாகத் தமிழ்ச் சனத்திற்கு வாங்கிக் கொடுத்தாங்களா? அல்லது இந்தச் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கத்தான் ஏதாவது செய்ய முடிஞ்சுதா? சும்மா போய் கதிரைக்குப் பாரமா இருந்திட்டு வந்ததுதான் மிச்சம். இந்தச் சந்தர்ப்பத்திலை ஒண்டு சொல்லவேணும். 1975லை தந்தை செல்வா பாராளுமன்றத்திலை சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னா 'எங்களின்ரை அனுபவங்களின்ரை அடிப்படையிலை இருந்து சொல்லுறன். சிங்கள அரசியலமைப்பிலிருந்து தமிழர் எந்த உரிமையையும் பெறமுடியாது. இதாலை தமிழர்கள் இனி தங்கடை சுயநிர்ணய உரிமையைக் குறித்த பேச்சுவார்த்தை ஒண்டையே சிறீலங்காவோடை நடத்த முடியும்' எண்டு சொன்னார் அதுதான் சரி. சும்மா நானும் பாராளுமன்றம் போய் வாறன் எண்டு வேலைக்குப் போன மாதிரிப் போய் வந்தாச் சரியே" அப்பு மூச்சிரைக்க நிறுத்தினார்.
"இதே காலப்பகுதியிலைதானே எங் கடை தேசியத் தலைவர் ஆயுதப் போராட்டம் மூலந்தான் எங்களுக்கெண்டொரு நாட்டை உரிமையளை வெண்டெடுக்க ஏலும் எண்டு இயக்கத்தை உருவாக்கினார்" நவம் நினைவுபடுத்தினான்.
“ஓமடாம்பி, பதினையாயிரத்திற்கு மேலை போராளியள் வீரச்சாவு அடைஞ்சாப்பிறகும், அறுபதாயிரத்திற்கும் மேலை சனங்கள் சிங்களத்தாலை கொண்டு குவிக்கப்பட்டாப் பிறகும், எத்தனையோ லட்சக்கணக்கான சனங்கள் வேரறுக்கப்பட்டு வேற்று நாடுகளிலை அலையிற நிலைமை வந்தாப் பிறகும்.... இத்தினைக்கும் பிறகும் இந்தப் பாராளுமன்றத்திற்குப் போய் வெட்டிக்கதையள் கதைச்சுக் கொண்டிருக்கிறதிலை என்ன நன்மை?” அப்பு ஆவேசத்தோடு கேட்டார்.
"தமிழர்க்கு ஒரு நன்மையுமில்லை. சந்திரிகா போடுற எலும்புத் துண்டைக் கவ்விற கூட்டத்துக்கு மட்டுந்தான் நன்மை” குமரன் கேலியாகக் கூறினான்.
"கொஞ்சப்பேர் இப்பிடிக் கதிரைக்கு ஆசைப்பட்டு அலையிறபடியாத்தான், தமிழர் பிரதேசங்களை நாங்கள் சனநாயகத்தைக் கடைப்பிடிக்கிறோம். மேலும் தமிழர்களுக்கு அமைச்சர் பதவிகள். கொடுத்திருக்கிறம் அதுதான் எலும்புத்துண்டுகள் எண்டு சிங்கள அரசாங்கம் தண்டோரா போட, அதைக் கண்டு சில வெளிநாடுகள் அட! அவங்கள் தமிழரையும், சிங்களவரையும் ஒண்டாத்தானே பாக்கிறாங்கள் எண்டு நினைக்கிறதோடை நில்லாம, இப்படியிருக்க இவங்களுக்கேனாம் தனிநாடு எண்டும் கேக்க வைக்கிற நிலைமை வந்திருக்கு. அவங்கடை அந்த நிலைப்பாட்டிற்கு இந்தக் கதிரை அடிபாடும் ஒரு முக்கியமான காரணம்" அப்புவின் குரல் சூடு பறந்தது.
"அப்படியெண்டா அப்பு நாங்களெல்லாரும் சேர்ந்து தேர்தலை பகிஸ்கரிச்சா என்ன?” அதுவரை மௌனமாக இருந்த ரவி கேட்டான்.
"நாங்கள் எல்லோரும்... ஒரு தமிழன் விடாம பகிஸ்கரிக்க வேணும். தமிழன் எண்டேக்குள்ள இந்தக் கதிரைக்கு அலையிற தமிழர்களும் அடக்கம். அப்பிடிப் பகிஸ்கரிக்கிறதின் மூலந்தான் இவங்கடை சிங்கள தேசத்தின்ரை சனநாயகத்தின்ரை சாயம் வெளுக்கும். அப்பதான் உலகமும் அடடா! இவங்கடை ஆயுதப் போராட்டமும் நியாயமானதுதான் போல கிடக்கு எண்டு கண்ணைத் திறந்து பாக்கும். அப்பிடிச் செய்யாட்டி எங்கடை போராளியள் ஒரு பக்கம் கட்டியெழுப்ப இவங்கள் மற்றப் பக்கத்தாலை இடிக்க முயற்சி செய்யிற நிலைமைதான் தொடரும். அதாலை எல்லாரும் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேணும்"
"பகிஸ்கரிக்கிறதுக்கு என்ன? சும்மா கதிரைக்குப் பாரமாத்தானே இருக்கிறாங்கள்?" நவம் கோபத்தோடு கேட்டான்.
"ஏன்ரா நவம், இப்ப நோர்வே விசேட துாதுக்குழு தமிழ்ப் பிரதேசத்தைப் பிரதி நிதித்துவம் செய்வதாகச் சொல்லும் இந்தப் பாராளுமன்ற ஒட்டுண்ணிகளையா சந்திச்சவை? தமிழீழத் தேசியத் தலைவரைத்தானே சந்திச்சிருக்கிறார்கள். எதற்கும் நாம் ஒட்டுண்ணிகளாக இல்லாது பெலமாக இருக்கோணுமடா."
"முடிஞ்ச முடிவு ஒண்டுதான். அதாவது ஆயுதப் போராட்டத்தின் மூலம் எங்கடை தேசத்தை நாங்கள் வென்றெடுக்கிறதுதான் அந்த முடிவு” அப்பு உறுதியோடு சொன்னார்.
போயிருந்து பிராக்குப் பார்த்தவைக்கு ஒண்டு விளங்கேல்லை. "பாராளுமன்றத்திலை அவையள் செய்யாததை ஓயாத அலைகள் மூலம் புலிகள் செய்திருக்கினம். அதாவது 'வெலிஓயா' எண்டு அவங்களாலை பெயர்மாற்றம் செய்யப்பட்ட எங்கடை 'மணலாறு' எண்ட இதயபூமியின்ரை பெரும்பகுதியை மீட்டெடுத்திருக்கினம் எங்கடை ஆக்கள்” குமரனின் குரலில் பெருமிதம் தொனித்தது.
"நல்லாச் சொன்னாயடாம்பி! எங்கடை தாய்நிலத்தின்ரை இழந்த பிரதேசங்களை நிரந்தரமா முற்று முழுதா மீட்கிறதெண்டா, எங்கடை பிள்ளையளை இந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளிலிருந்து காப்பாத்திறதெண்டா, எங்கடை பெண் பிரசுகளை அவங்கள் மானபங்கப்படுத்திறதை நிப்பாட்ட வேணுமெண்டா, கனக்க ஏன் வெளிநாட்டிலை வாழுற எங்கடை சனங்கள் நெஞ்சை நிமித்தி எங்களுக்கெண்டொரு நாடு இருக்கெண்டு சொல்ல வேணுமெண்டா அது எங்கடை தேசியத் தலைவரை எல்லாரும் பின்தொடர வேணும். எல்லாத்துக்கும் ஒரே தீர்வு தமிழீழம் ஒண்டுதான்ராப்பா. கிழக்கு வெளிச்சு விடிய நாங்களெல்லாம் தம்பிக்கு கைகொடுக்க வேணும். அப்பிடிக் கைகுடுத்தா ஓயாத அலைகள் ஓங்கியடிக்கும்" என்று கூறிக் கொண்டு அப்பு எழுந்தார். நம்பிக்கை மிளிரும் விழிகளுடன் நண்பர்களும் அந்தச் சிறுமியும் எழுந்திருந்தனர். அப்பு சால்வையை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடயைக் கட்டினார்.
செவிவளைந்தான் புது உற்சாகத்தோடு எழுந்து அவர் பின்னே விரைந்தது.....
......
-எரிமலை நவம்பர் 2000
தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்
No comments:
Post a Comment