Saturday 25 April 2015

தீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்

தீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்

mukamalai attack
புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ்நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடசியா புலிகளின் அணிகள் மீதே தாக்குதல் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் டிசெம்பர் 24 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு புலிகளால் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அரசு அதை ஏற்காமல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. புலிகளும் அப்பகுதிகளில் இருந்து இழப்புக்களுடன் பின்வாங்கி விட்டார்கள்.
அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓர் இராணுவநகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம்வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை நீடித்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்தநிலையில் ஆனையிறவு நோக்கி பெரியளவில் ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்தநிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி “அக்கினி கீல” அதாவது ‘தீச்சுவாலை’ என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்தபகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.

புலிகளின் பீரங்கிச்சூட்டு வலிமை அரசபடைக்கும் வெளியுலகுக்கும் – ஏன் தமிழ் மக்களுக்கும்கூட தெரிந்தது அச்சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்தற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. சிறிலங்கா வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில், எந்தநேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்டமிட்டபடி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா மீதான தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீர்ங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல்பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.
இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது.வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்கள்தான்.வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடுகொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டுபோட்டுத் தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப்பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.
இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியாநிலைக்கு வந்துவிட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன்.பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லாவிட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரணும் அதனைச் சூழக்கிடந்த ஏறத்தாழ இருபது இராணுவ உடல்களும். தாம் முற்றுமுழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அப்பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போது களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.
அச்சமர்தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. பின்னாளில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காரணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்  .....
தமிழரின் தாகம் தமிழீழத்  தாயகம் ......

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் – 2000

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் – 2000elephant pass battle day
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.
குடாரப்பு தரையிறக்கச் சமர்
ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.
சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி.
ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.
26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.
தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.
மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.
சிதைக்கப்பட்ட கவசத்தின் மேல் வெற்றி வீரர்களாக……
புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.
வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.
அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.
வரலாற்றுப்புகழ் வாய்ந்த மாமுனைத் தரையிறக்கத்தில் நீருக்குள்ளால் 120 mm கனரகப் பீரங்கியை இழுத்துச்செல்லும் பெண்புலிகள்…..
தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.
முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.
சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.
பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு
26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.
குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.
குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.
சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.
ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.
தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.
பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.
குடாரப்பில் தரங்கி நீரேரியை கடக்கும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் போராளிகள்…..
தாக்குதலின் பின்னணி
குடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.
குடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.
குடாரப்புத் தரையிறக்கத்தின் போது முதல் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் விதைத்த புனிதமாக்கப்பட்ட இடம்….
elephant ltte pass landingelephant pass landing heros
கண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.
தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.
காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.
ஆனையிறவு படைத்தளத்தில் வெற்றியில் தமிழீழ தேசியக்கொடியை தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதி கேணல் பானு அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.
புலிகளின் தாகம்  தமிழீழத்  தாயகம்  ........
தமிழரின் தாகம்  தமிழீழத் தாயகம் .....

Thursday 23 April 2015

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி ,,,,,,,,

சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, ‘புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்’ என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.
1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். ‘ஆனையிறவு’ என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.


தமிழரின் தாகம்'s photo.

ஒயாத அலைகள்
```````````````````````````````````
ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. பூநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.
அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.
ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்குதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.
1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி – ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.
உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது.
ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.
அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி “யாழ்தேவி” என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.
யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.
இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.
ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக ஆனையிறவு மீது புலிகள் கைவைக்கவேயில்லை.
ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு – வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கஞ் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.
பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, ‘முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்’ என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.
வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.
பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘மாமுனைத் தரையிறக்கம்’ புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.
முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
மாமுனையில் தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கிச் செல்கின்றன.
இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்ராஜ் தலைமையிலான அவ்வணியினர்.
இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் வினியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ******22.04.2001**** அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.
மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.
ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.
ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.
வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் ‘ஆனையிறவு’தான். ஆனால் வந்த பதில், ‘ஜெயசிக்குறு எதிர்ச்சமர்’.
ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்
நான்றி - எல்லாளன் ஈழம் பார்வை
.
ஓயாத அலைகள் – 3 தாக்குதல் காணொளிகள்
http://www.youtube.com/p/218E1B226B0FAAA7?hl=en_US&fs=1







Saturday 18 April 2015

அன்னை பூபதி

ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னை பூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.
இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான “பிரிக்கேடியர் சண்டேஸ்” பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.
நிலைமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர்.
இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் “அன்னம்மா டேவிட்” தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.
இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி ‘பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்’ என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.
இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் விரட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள்.
உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாதத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
அன்னை பூபதியின் நினைவுநாளே ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்’ என்றும் நினைவு கூறப்படுகிறது.
தமிழ் பெண்கள் கூட்டமைப்பு – ஜெர்மனி

தியாகத்தாய் அன்னை பூபதி

அன்னை பூபதியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள்....


தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.
திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.
தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும் தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.
ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும் தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.
ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.
நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.
இப்படி தன் பலத்தையும் மாற்றான் பலத்தையும் சீர்தூக்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.
சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.
இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும் இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.
இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.
அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது !
அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மரீதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே தூக்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும் இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.
இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.
ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.
இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.
எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.
அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும் அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் து}க்கிப் போட்டது.
அன்னை பூபதி கண்களை மூட தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.
சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !

நன்றி ஈழம் பார்வை

லெப் கேணல் கலையழகன் வீரவணக்க நாள் ...

லெப்.கேணல் கலையழகன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
சிவபாதசுந்தரம் ஞானசீலன்
வீரப்பிறப்பு :02:09:1976
வீரச்சாவு :18.04.2007





கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.
ஆரம்பப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.
நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப் பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் திறவோர் எனும் பட்ட வழங்கிக் கௌரவிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.
கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத் தொடர்பாளனாக செயற்ப்பட்டான். பின்பு சிறிது காலம் மொழி பெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப்பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வரிய சந்தர்ப்பத்தை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது ஆரம்ப கால சம்பவங்களைத் தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் ஆரம்பகாலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், விடுதலைப் பேரொளி என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.
செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப் புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் பிரயத்தனமெடுத்தான். ஏராளமான பேரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டது அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.
எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிட மெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.
கடந்த வருட நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும் , ஆளுமையும், விடையங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.
இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.
அவன் அழகானவன், பண்பானவன்,பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.
தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி வீரச்சாவடைந்த மாவீரன் லெப்.கேணல் கலையழகனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் .

Sunday 12 April 2015

தலைவரின் பார்வை

  • இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.
  • - தேசியத் தலைவர் 
-







Friday 3 April 2015

இராபர்ட் பயஸ்

இராபர்ட் பயஸ் அண்ணாவை பற்றி கவிஞரும் தமிழின விடுதலை உணர்வாளருமான மரியாதைக்குரிய அக்கா " தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் யாத்துத் தந்த கவிதை !
இராபர்ட் பயஸ் !
ழப்பதற்கு வேறொன்றுமில்லை
உன் கைவிலங்கை தவிர ,,,,,,
வேட்டைக் காரர்கள்
சரித்திரம் எழுதுவதை
என்றும்
வேடிக்கைப் பார்த்திருப்பதில்லை
புலிகள் ,,,,
வெறும் எண்களென சில
தேதிகளை எளிதில்
கடந்துவிட முடியாது
சகோதரா !
20-07-1990
10-06-1991
ஆகியவை அப்படித்தான் எமக்கு .
உன் உறவென எம்மை
நம்பி
நீ கால்பதித்த
அந்த இருபதாம் திகதியும் ,
தொப்பூள்கொடியே
கைவிலங்கென மாறிய
அந்த பத்தாம் திகதியும் .
வெறும் எண்கள் மட்டுமா ?
என்ன ?
அடைக்கலம் என வந்த
உறவொன்றை ' அநீதியிடம் ஒப்படைத்த அவமானம் சுமக்கும்
ஆறாப்புண்களல்லவா ?
பிறந்து பதிமூன்று தினங்களேயான உன் மகனை
இந்திய இராணுவம் சிதைத்த பின்
13 - துக்கத்தின் தினமானது
துரதிருஷ்டத்தில் நம்பிக்கையற்ற எமக்கும் தான்.
உன் கைவிலங்கிற்கு
இன்று வயது இருபத்துமூன்றாண்டுகள் .
இற்றுப் போன சருகுகள் எனில் - எம் தமிழர் அகராதியில்
இனி 23 ம் எண் மட்டுமே ---
நீ இழந்த நிலத்தை ,
கடலை, முழுநிலவை ,
முற்றத்தை, சுற்றத்தை இரண்டும் மூன்றும் இனைந்த
வெறும் எண்ணாக -
இந்த நீதிமன்றங்கள் பார்க்கட்டும் .
அடுத்த தலைமுறையோ :
மறுக்கப்பட்ட நீதியின் அவமான சின்னமென வெட்கித் தலை குனியட்டும்
கயமைத் துருவேறிய உன் கைவிலங்கின் சாவியை அரசாங்கமே வைத்துக் கொள்ளட்டும்.
உண்மையின் முத்தம் பொதிந்த உன் உள்ளங்கை - ரேகை
எம் தமிழினத்திற்கானது அல்லவா ?
இனமும் விடுதலையுமென
உயிர்த் தீ மெருகேற்றிய
இரு நிலக்கரி சுரங்கமே
நீதி தேவனின் கட்டப்பட்ட கண்களடியில் கனல்கிறது . என்பதின் சாட்சி நீ சகோதரா !
காலங்கடந்து விட்டாலும் - வெளிப்படுவது
விடுதலையெனும் வைரம் மட்டுமே ! கலங்காதிரு ''''''
உண்மையை உலகிற்கு
உரத்துச் சொல்ல
உன் அழியாப் புன்னகை
ஒன்று போதும் .
பொய்மையின் மலட்டுச் செவிகளில்
விடுதலையின்
தமிழ்த்தேசியக் கீதம்
உரத்துக் கேட்கும் .
வேட்டைக்காரர்கள்
சரித்திரம் எழுதுவதை
என்றும்
வேடிக்கைப் பார்த்திருப்பதில்லை
புலிகள் !
-தமிழச்சி தங்கப்பாண்டியன்

Thursday 2 April 2015

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணை






































தமிழரின் தாகம் ...தமிழீழத் தாயகம் 




தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார்.



அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.

வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர்.

இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார்.

அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரீட்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.


மேஜர் பசீலன் அவர்களுடன்

நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார். இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார்.

முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார்.



1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது.

தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

பசீலன் அண்ணை “எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை” என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார்.


தலைவருடன்



தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார். இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்;டபோது “என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும் பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார்.





வன்னிப்பிராந்திய தளபதியாக

முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் “இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை” எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார்.



பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது.



பால்ராஐ; அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து”. என்று கூறியுள்ளார்.


இந்திய கொமாண்டோக்களின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்

தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடையம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார். எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார்.



அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால்; முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர். எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெடுத்திருந்த இடங்களிலேயே கொன்று மயிர்கூச்செரியும் தாக்குதலை நடாத்தி முடித்தனர்.



இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலை முறியடித்த சண்டையானது பால்ராஜ் அவர்களினது துணிவு, போர் உத்தி, சண்டையிடும் திறனை வெளிப்படுத்திய முக்கியமான சண்டைகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இராணுவத்தை அதிர்ச்சி, வியப்புக்குள்ளாக்கிய சண்டையாகும். ஏனெனில் பதுங்கித்தாக்குதலை மேற்கொள்ளும் போது நகரும் பாதை, எதிராளிகளின் ஆயுதபலம், ஆட்கள் தொகை போன்ற தகவல்களின் அடிப்படையில் பதுங்கித்தாக்குதல் திட்டமிடப்படும். பின்னர் தாக்குதலிற்கான கொலைவலயத்தை உருவாக்கி, பொருத்தமான ஆயுதங்களுடன் உருமறைத்து, நிலையெடுத்து தாக்குதலை மேற்கொள்வதுதான் தாக்குதலிற்கான அடிப்படை உத்தி. அத்துடன் உலகத்தின் நான்காவது வலிமையான இராணுவம் தனது சிறப்புப்படைகளை வைத்து திட்டமிடும் பதுங்கித்தாக்குதலை சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. பல பதுங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக செய்த அனுபவம் மிக்க பால்ராஜ் அவர்கள் அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அப்பாதையைத் தவிர்த்து வேறுபாதையால் சென்று இருக்கக்கூடிய வாய்ப்பிருந்தது.

அப்படியிருந்தும் இந்தசந்தர்ப்பத்தில் பதுங்கித்தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை செய்வோம் என்று (அவருடைய மொழியில் இன்டைக்கு ரென்டில ஒன்டு பாப்பம் அவனா? நானா? எண்டு) தீர்க்கமாகவும் தற்துணிவாகவும் முடிவெடுத்து அப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு, வென்று காட்டி தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்தார். இத்தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீது இந்திய இராணுவத்திற்கு மேலும் அச்சத்தை கொடுத்ததுடன் போராளிகளுக்கு மேலதிக தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. இது போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் பால்ராஜ் அவர்களை சிறந்த தளபதியாக தனித்துவமாக அடையாளம் காட்டின.



இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர், வன்னியின் இராணுவம், அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய இராணுவ காலத்தில் தங்களுக்கு உதவி செய்த வீடுகளுக்கெல்லாம் சென்றதுடன் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இயன்றளவு அவர்களிற்கு உதவிகள் செய்தார். மக்களின் பிரச்சனைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து உதவி செய்தார் அந்தளவிற்கு மக்களை நேசித்த தளபதியவர்.


கொக்காவில் முகாம் வலிந்ததாக்குதல்

இலங்கை இராணுவத்துடனான ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையை தொடர்ந்து நடாத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து உடனடியாக சண்டையிலிருந்து பின்வாங்கினர். பின்னர் கிளிநொச்சி படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல் மக்களும் பாரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அத்துடன் ஏற்கனவே மூன்று முகாம் தாக்குதல்களும் வெற்றியளிக்காத நிலையில் இந்த முகாமை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் கொக்காவில் முகாமைத் கைப்பற்றுவதற்காக தாக்குதலை ஆரம்பித்தார்.



முதல் நாள் கடுமையான சண்டை, சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது அதேவேளை துணைத்தளபதியாகவிருந்த தளபதி தீபன் அவர்களும் வேறு சில தளபதிகளும் காயமடைந்திருந்தனர். கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. நிலைமையினை உணர்ந்த பால்ராஜ் அவர்கள் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முகாம்களை கைப்பற்றமுடியவில்லை, இதிலும் தோல்விகண்டால் போராளிகளின் உளவுரண் பாதிப்படையலாம். அதுமட்டுமன்றி இராணுவத்தின் உளவுரண் அதிகரிக்கலாம். அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற உத்வேகத்துடன் போராடினார். கொக்காவில் முகாமை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானமான முடிவிலிருந்தார். தளபதி தீபன் அவர்கள் காயமடைந்ததுடன் களமுனைக்கே சென்று அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, கட்டளைகளை வழங்கிக் கொண்டு தானும் ஒரு பக்கமாக இறங்கி சண்டையில் ஈடுபட்டார். பால்ராஜ் அவர்களும் இறங்கி சண்டையிடுகின்றார் என்றவுடன் போராளிகள் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ள, சில மணிகளில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றி அழிக்கப்பட்ட முகாம் தாக்குதலாக அது பதிவாகின்றது.


மாங்குளம் முகாம் வலிந்ததாக்குதல்

இதனைத் தொடர்ந்து மாங்குளம் முகாமை மீள தாக்கியழிக்க வேண்டும் என்று நோக்குடன் களப்பணிகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே தாக்குதலை மேற்கொண்டு பின்வாங்கிய முகாம் என்பதால் அடுத்த முயற்சி தோல்வியடையக்கூடாது என்ற முடிவுடன் தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அம்முகாமின் இரு முனைகளில் தாக்குதலை நடாத்தி எதிரியை பலவீனப்படுத்தி கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு முகாமை கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. பசீலன் ஷெல் தாக்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் முதலில் வீழ்ச்சியடைந்தன. அதன் பின்னர் கரும்புலித் தாக்குதலை கரும்புலி லெப்.கேணல் போர்க் மேற்கொள்ள, காவலரண்களையும் மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய அணிகள் பிரதான முகாமிற்கு அருகிலிருந்த ‘வானூர்தி’ இறங்குதளத்திற்கு அருகில் பலமான எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. ஏனெனில் வானூர்தி தளத்தை தாம் இழந்தால் மேலதிக உதவியை எடுக்க முடியாமல் அழிந்துவிடுவோம் என்ற நிலைப்பாட்டில் இராணுவம் மூர்க்கத்தனமாக மோதியது.



அதேவேளை முகாமின் தென்பகுதி வயல் வெளியால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இழப்பின் காரணமாக பின்வாங்கப்படுகின்றது. அகோர விமானத்தாக்குதல்களிற்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இழப்புகளின் அளவும் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்தது. நிலைமைகளை அறித்த தலைவர் விரைவாக முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். சண்டையின் வியூகத்தை மாற்ற நினைத்த தளபதி, துணைத்தளபதி தீபன் அவர்களை கட்டளைமையத்தில் சண்டையை ஒழுங்குபடுத்தும்படி விட்டு விட்டு, வானூர்தித் தளத்தில் சண்டையிடும் எதிரியை சுற்றி வளைத்து தாக்கியழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். லெப்.கேணல் நவநீதன் தலைமையில் சிறப்பு அணியொன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு சென்றார். பகல் வேளையாக இருந்த போதிலும் பொருத்தமான இடத்தில் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தித் தளத்தை கைப்பற்றினார். வானூர்தி தளம் கைப்பற்றப்பட்டவுடன் தமது தோல்வியை உணர்ந்த எஞ்சியிருந்த இராணுவத்தினர் பின்வாங்கி வவுனியாவில் அமைந்திருந்த இராணுவ முகாம் நோக்கி தற்பாதுகாப்புத் தாக்குதலை மேற்கொண்டு கொண்டு ஓடத்தொடங்கினர். அவர்களும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். இச்சமரில் பெருந் தொகையான இராணுவத்தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது.


சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத்தளபதியாக

இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார். சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார்.



மரபுவழிப்படையணியாக உருவாக்கிய அப்படையணியிடம் இருந்த இலகு மற்றும் கனரக ஆயுதங்களை மட்டும் வைத்தே பல வெற்றிகரமான தாக்குதல்களையும் புதிய உத்திகளுடன் கூடிய மூலோபாயத் தாக்குதல்களையும் செய்து காட்டினார். குறிப்பாக வன்னி விக்கிரம எதிர்தாக்குதலில் 50 கலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினால் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல் நடவடிக்கையான ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கையில் கிளிநொச்சி உப்பளப்பக்கத்தால் தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்தை தாக்கி பின்வாங்க வைத்ததுமல்லாமல் முதன்முதலில் ஆர்.சி.எல் கைப்பற்றிய சமர் போன்ற பல சமர்களை வெற்றிகரமாக நடாத்தினார்.


மூலோபாயத் தாக்குதல்கள்




தலைவர், தளபதியிடம் சண்டைகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது “இப்படியே ஒவ்வொரு காவலரணாக மட்டும் தாக்கியழித்துக் கொண்டிருந்தால் எப்படி நாம் இராணுவத்தை அப்புறப்படுத்த முடியும். பாரியளவில் இராணுவத்தை தாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்” இதனை புரிந்து கொண்ட தளபதி கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இருந்த இராணுவ காவலரண்களை வேவு பார்த்தார். இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை விரைவாக தாக்குவதற்கான புதிய மூலோபாயத்தை வகுத்து அதனடிப்படையில், இருபத்துநான்கு காவலரண்களைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை வகுத்து பயிற்சிகளை வழங்கினார்.



இத்தாக்குதலுக்கு செல்வதற்கு முன் போராளிகளை சந்தித்த தலைவர் அவர்கள் “புதிய மூலோபாயத்திட்டத்தில் தாக்குதலை ஒன்றை செய்யப் போகின்றீர்கள் இத்தாக்குதல் வெற்றி எதிர்காலத் தாக்குதல்களிற்கு அடிப்படையாக அமையும்” என்று கூறி வாழ்த்தியனுப்பினார். தாக்குதல் திட்டத்தின்படி இரகசிய நகர்வை மேற்கொண்டு நகர்ந்த அணிகள், எதிரியின் காவலரணுக்கு மிக அண்மையாகச் சென்று தாக்குதலை தொடங்கின. தாக்குதல் ஆரம்பித்த வேகத்திலேயே வேகமாக காவலரண்களை ஊடறுத்து பின்பக்கமாகச் சென்று இராணுவத்தை அழித்து ஆயுதங்களையும் கைப்பற்றினர். அத்தாக்குதல் உத்தியானது, குறைந்த இழப்புடன் விரைவாக எதிரியைத் தாக்கியழிப்பதற்கான மூலோபாய வெற்றியையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் நடந்த பல தாக்குதல் வெற்றிகளுக்கு அந்த உத்தி அடிப்படையாக அமைந்தது.



1991ம் ஆண்டு கரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த காவலரண்களை தாக்கியழித்த சமர் இன்னுமொருவகையான புதிய தாக்குதல் உத்தியாகும். ஏனெனில் காவலரண் வீதியில் அமைந்திருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் கடல். தாக்குதலை மேற்கொள்ள எந்த விதமான காப்பும் மறைப்பும் இல்லாத குறைந்த தண்ணீர் உள்ள கடற்பிரதேசம், அக்காவலரணை தாக்கி அழிக்க வேண்டும் என முடிவெடுத்து மேஜர் கிண்ணியின் தலைமையில் வேவு பார்த்து, தண்ணீருக்குள்ளால் காவலரணின் பின்பக்கமாக அணிகளை நகர்த்தி வெற்றிகரமாகத் தாக்குதலை செய்து முடித்தார். எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று.

அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது “சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்” இதுவே பலாலி – வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்;களையும் கைப்பற்றி அடிப்படையானது.



காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல் கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார்.

1990 ஆண்டு ஈழப்போர் – 02 ஆரம்பித்திலிருந்து 1992 ம் ஆண்டு வளலாய் தாக்குதலை வரை தலைவரின் இராணுவ சிந்தனைக்கு உரியவடிவமும் அதற்கு பொருத்தமான மூலோபாயங்களையும் உத்திகளையும் வகுத்து பல பாதுகாப்பு, வலிந்த தாக்குதல்களை செய்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை மேன்மைப்படுத்தினார். இதுவே இவரை விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் துணைத்தளபதியாக 1992 ம் ஆண்டு தலைவர் நியமிக்க காரணமாகியது.


யாழ்தேவி முறியடிப்புத் தாக்குதல்

பின்னர் 1993 ல் பூநகரி முகாம் வேவு நடவடிக்கைகளை விசேட வேவு அணியை வைத்து செய்து முடித்தார். தொடர்ந்து அதை கைப்பற்றுவதற்கான தாக்குதல் திட்டத்தை வகுத்து, அணிகளை ஒன்றிணைத்து பயிற்சிகளையும் அதற்கான ஏனைய ஒழுங்குபடுத்தல்களை தயார்ப்படுத்துவதில் தீவிரமாக செயற்படடுக்கொண்டிருந்தார்;. இச்சமயத்தில் யாழ் குடாநாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்குடன், ஒரேயொரு போக்குவரத்து பாதையாக இருந்த கிளாலி கடற்கரை பாதையை மூடுவதை இலக்கு வைத்து ஆனையிறவிலிருந்து இராணுவம், ‘யாழ்தேவி’ என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்போகின்றது என்ற செய்தி கிடைக்கின்றது.



தலைவரின் ஆலோசனைக்கமைவாக, தயார்ப்படுத்துவதற்கு கிடைத்த குறுகிய நேரத்தில் தந்திரோபாயத் தாக்குதல் திட்டத்தை வகுத்து, இராணுவத்தின் நகர்வை தடுப்பதற்கான தாக்குதலை மேற்கொண்டார். இராணுவத்திற்கெதிரான தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது களமுனையிலிருந்து தொடர்களில் சிக்கலடைந்தது. இச்சமயத்தில் நேரடியாக களமுனைக்குச் சென்று தாக்குதலை வெற்றி நோக்கி வழிநடத்தியபோது காலில் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் படுதோல்வியுடன் இராணுவம் பின்வாங்கியது.

காயத்திலிருந்து மீண்டாலும் காலில் பாதிப்பிருந்தது. அப்படியிருந்தும் மீண்டும் தனது இராணுவப் பணிகளைத் தொடர்ந்தார். மண்டைதீவு தாக்குதலுக்கான வேவு, கொக்குத்தொடுவாய் 05 முகாம்களின் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான களத்தலைமை, முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதல், சூரியகதிர் ஒன்று தாக்குதல் நடவடிக்கை என பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.


முல்லைத்தீவு முகாம் வலிந்ததாக்குதல்

1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கி வன்னி பெருநிலப்பரப்பிற்குள் புலிகள் வந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை தொடர்பான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்களப்படைகள் விடுதலைப்புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை மீளநிரூபித்து இராணுவ வெற்றியினூடாக சிங்களத்திற்கு பதில் சொல்ல தீர்மானித்த தலைவர், முல்லைத்தீவு முகாமை அழிக்க முடிவெடுத்தார். இத்தாக்குதல் நடவடிக்கையை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து தாக்குதலுக்கான மூலோபாயத்தையும் வகுத்துக்கொடுத்தார். தலைவரின் சிந்தனைக்கமைவாக அத்தாக்குதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக கடற்கரைப்பகுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பிரதான திட்டங்களில் ஒன்று. அதன்படி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் 122 கனரகப் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன, இருப்பினும் கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.



கடற்கரையில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தம்மால் உதவியை பெற முடியும் என்பதால் தேவாலயம் அமைந்திருந்த கடற்கரைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் கடுமையாகப் போரிட்டது. அப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல் நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அளம்பிலில் இராணுவத்தை தரையிறக்கி, முகாமிற்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் படையினருக்கு உதவ இராணுவம் முயன்றது. இச்சந்தர்ப்பத்தில் களத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்ட பால்ராஜ் அவர்கள் தலைவரிடம் நிலைமையும் உடனடித்திட்டத்தையும் தெரிவித்தார்.

தலைவர் அவர்கள் தளபதி பிரிகேடியர் பானு அவர்கள் தலைமையில் மேலதிக அணியை அனுப்பி வைத்தார். அத்திட்டத்தின்படி தேவாலயத்தின் முன்பக்கமாக நிலையெடுத்திருந்த படையினர் மீது விடுதலைப்புலிகளிடம் இருந்த டாங்கியால் தாக்குதலை ஆரம்பிக்க எதிரி நிலைகுலைந்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய படையணி எதிரியின் பகுதியில் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு, கடற்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் அளம்பிலில் தரையிறங்கிய இராணுவமும் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாரிய இழப்புகளுடன் கடல்வழி தப்பி ஓடியது.


சத்ஜெய முறியடிப்புப் தாக்குதல்

முல்லைத்தீவு படைமுகாம் வீழ்ச்சியை தொடர்ந்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் சத்ஜெய ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் பகுதியை கைப்பற்றியது. முன்னேறிய சிங்களப்படையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கான தலைமையை தலைவர் பால்ராஜ் அவர்களிடம் கொடுத்தார். உடனடியாகப் படையணிகளை வேகமாக நிலைப்படுத்தினார். அத்துடன் இராணுவம் எமது நிலைகளை உடைத்து நகர்ந்தால் உடையும் பகுதியில் உள்ள படையணிகளை மட்டும் மீள் ஒழுங்குபடுத்தி, காவலரண்களை மீளக் கைப்பற்றினால் உடைத்த பாதையால் உள்வரும் இராணுவம் எமது பிடிக்குள் அகப்படும் இதனால் எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்தை வகுத்து, படையணிகளுக்கு விளக்கி, பயிற்சி கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தார்.



சிங்களப்படை சத்ஜெய இரண்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. ஏ-09 பாதைக்கு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் தாக்குதலை தொடங்கிய இராணுவத்தின் தாக்குதல் முனையாக ஏ-09 பாதைக்கு வலதுபக்கம் பிரதானப்பட்டிருந்தது. டாங்கிகளுடன், துருப்புக்காவிகளில் இராணுவத்தை நகர்த்தி முன்னேறிய இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து உள்நகர்ந்தது. நிலைமையை உணர்ந்த தளபதி, லெப்.கேணல் தனம், லெப்.கேணல் ராகவன் தலைமையில் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி இரண்டு பக்கத்தாலும் எமது காவலரண் பகுதியால் தாக்குதலை தொடுத்து மீண்டும் பாதுகாப்பு நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இராணுவம் பாரிய இழப்பை சந்தித்துப் பின்வாங்கியது. விடுதலைப்புலிகளின் காவலரண்களுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டாங்கிகள் அழிக்கப்பட்டு இருந்தது இந்த தாக்குதல் தந்திரோபாய, மனோதிட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.


கிளிநொச்சி நகர் வலிந்த தாக்குதல்

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை இராணுவம் மாங்குளத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அதேவேளை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்துடன் இணைந்து கொள்ள குறிப்பிட்ட தூரமே இருந்தது. இந்த நேரத்தில் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்ற தலைவர் முடிவெடுத்தார். இத்தாக்குதல் திட்டத்தில், கிளிநொச்சி நகரப்பகுதியை கைப்பற்ற வேண்டுமாயின் இராணுவத்திற்கு உதவி வருவதையும் இராணுவத்தின் பின்வாங்கி செல்வதையும் தடுக்க வேண்டும் என்பது பிரதான திட்டமான இருந்தது. எனவே பரந்தனுக்கும் கிளிநொச்சி நகரத்திற்க்குமிடையில் ஊடறுத்து மறிப்பு நடவடிக்கையை செய்யும் பொறுப்பை பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்த தலைவர் “உனது நடவடிக்கை தாக்குதலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது. அத்துடன் இது உனக்கு ஒரு பரீட்சார்த்த தாக்குதல் நடவடிக்கையும் கூட” என தெரிவித்தார்.



தாக்குதல் நடவடிக்கையை பொறுப்பொடுத்த தளபதி மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு கடுமையாக பயிற்சிகளைக் கொடுத்து படையணிகளைத் தயார்ப்படுத்தினார் ஏனெனில் காவலரண்களை ஊடறுக்கின்ற சமநேரத்தில் கிளிநொச்சியிலிருந்து எதிரி ஓடாமலும் பரந்தனிலிருந்து எதிரியின் ஆதரவு கிடைக்கமாலும் இருக்கக்கூடிய வகையில் அணிகளை நிலைப்படுத்தி தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, அணிகளை நிலைப்படுத்தும் பகுதிக்கிடையில் இருக்கும் மினிமுகாம்கள், சிக்குப்படும் படையினரை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தயார்நிலையில் நிற்க வேண்டும். மற்றும் கிளிநொச்சி வெற்றியின் பிரதான பங்கு இவரது நடவடிக்கையில் தங்கியிருந்தது.

தாக்குதல் தொடங்கியவுடனேயே ஏ-09 வீதிக்கு அருகில் அதாவது களத்தில் மையத்திற்கு சென்ற பால்ராஜ் அவர்கள் அங்கிருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார். ஆனையிறவு பரந்தன் பகுதியிலிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிக்குண்ட படையினருக்கு உதவ பல புதிய படையணிகள் டாங்கிகள் சகிதம் கடும் முயற்சியை மேற்கொண்டனர். முயற்சிகள் எதுவும் பலனளிக்காது போனது. மற்றும் தளபதி பால்ராஜ் தங்களிற்கு பின்னால் வந்து மறித்து நிற்கின்றார் அதனால் உதவி கிடைக்கவில்லை. இச் செய்தி கிளிநொச்சி நகரப்பகுதியில் சண்டையிட்ட சிங்களத்தளபதிகளுக்கு கிடைக்கின்றது. திகைத்த தளபதிகள் தப்பியோடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர். இராணுவம் எந்த வித ஒழுங்குபடுத்தலுமின்றி தப்பியோட தொடங்கியது. அங்கு ஓடும் இராணுவத்தை தடுக்கும் நோக்குடன் நிலைப்படுத்தப்பட்ட அணிகளின் உக்கிர தாக்குதலை எதிர்கொண்டது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவம் முன்செல்பவர்கள் சாகச்சாக தப்பியோடும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர்.

குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல்

வத்திராயன் பெட்டிச் சண்டையைப்பற்றி தளபதி கூறும் போது “ஆனையிறவுக்கான சண்டையை நீதான் நடத்தப்போகிறாய், நீ சண்டியன், எத்தனையோ சோதனைகளை உனக்குத் தந்திருக்கிறேன் இது நான் உனக்கு வைக்கின்ற பெரிய சோதனை இதற்கான பரீட்சார்த்தத்தை ஏற்கனவே கிளிநொச்சியில செய்து பாத்திட்டேன். எனவே நீ இதையும் வென்று தருவாய் என நம்பிறேன் 1500 பேருடன் தரையிறங்கி கண்டி வீதியை மறிச்சு விநியோகத்தை தடுத்து நிறுத்து, ஆனையிறவு தானாக விழும். சூசை உன்னை கடலால் இறக்கி விடுவான் நீ தரையால் தான் திரும்பி வரவேண்டும்” என்ற தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி ஆனையிறவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.



வத்திராயன் பெட்டிச் சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு உலக வரலாற்றில் முதன்மைத் தரையிறக்கச் சண்டையாக பதிவு செய்யுமளவிற்கு, உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் போன்றவற்றைக் கொண்ட பலம் வாய்ந்த 40,000 சிங்களப்படைகளின் நடுவே 1500 போராளிகளுடன் 34 நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர். சிங்களத்தின் முக்கிய இராணுவத்தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவுச்சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, தமிழ்மக்களின் போரிடும் ஆற்றலின், துணிச்சலின், வீரத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார். இது தமிழ்மக்களின் வீரத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மகுடமாகும்.

சுனாமி ஆழிப்பேரலையின்

2004 ம் ஆண்டு வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார். திடீரென கடல் உள்வாங்கப்பட்டு அலைகள் உயர்ந்து வேகமான வருவதை பார்த்த பால்ராஜ் அவர்கள், ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து, உடனடியாக வானத்தை நோக்கிச் சுடுமாறு போராளிகளிடம் சொன்னார். திடீரென துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதை கண்டு ஓடித்தப்பினர் இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை கடற்கரையில் உள்ள முகாமில் நின்ற அவர் கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார். அத்துடன் உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை செய்தார்.


பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கு

பால்ராஜ் அவர்கள் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளிற்கு சண்டையிடும் முறையை சொல்லிக்கொடுப்பார், அடிக்கடி அவர்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைத்து போராளிகளை எப்போதும் உச்ச மனோதிடத்துடன் வைத்திருப்பார். இதனால் பால்ராஜ் அவர்கள் சண்டையை பொறுப்பெடுக்கின்றார் என்றால் போராளிகளிற்கிடையே தனித் தெம்பு ஏற்படுமளவிற்கு நம்பிக்கையான தளபதியாக விளங்கினார். திட்டமிட்ட சண்டைக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த முன் வேவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தே தலைவரிடம் சண்டைத்திட்டத்தை கொடுப்பார். குறிப்பாக அவரது கால் சீராக இயங்காத போதும் கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று இந்த இடம் சண்டைக்கு பொருத்தமானதா? என முடிவெடுப்பது அவரது வழக்கம். சிலர் அவரிடம் ஏன் நீங்கள் போய் பார்க்கிறீர்கள் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றால் அதற்கு அவர் “சண்டையை தலைமைதாங்கும் போது தாக்குதலிடங்களும் தாக்குதல் பிரதேசம் தொடர்பான பூரண விளக்கம் மற்றும் நிலவரம் தெரிந்தாலே சண்டைக்கான கட்டளையை துல்லியமாக வழங்கலாம், அடுத்தது நான் நினைப்பதைப்போல ஒவ்வொரு தாக்குதல் இடமும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றதா! என எனக்கு தெரியவேண்டும். பாரிய படையை கொண்டு செல்லும் பாதையில் என்னை கொண்டு செல்ல முடியாது என்றால் எப்படி படையணிகளை சரியாக கொண்டு செல்வீர்கள்? அத்துடன் நான் உறுதிப்படுத்தி முடிவுகளை தலைவருக்கு சொல்லவேண்டும் எனவே நானும் பார்க்கவேண்டும்” என்பதே போர் அனுபவமும், போரியலில் மாற்றத்தையும் ஏற்படுத்திய தளபதியின் பதிலாக இருக்கும்.


தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றி அவருடைய பல தாக்குதல்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தேசியத்தலைவர் அவர்களால் என்னையும் விஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதி, உலக இராணுவ வல்லுனர்களின் தந்திரோபாயங்களை எல்லாம் வத்திராயன் பெட்டிச்சண்டையில் நிர்மூலமாக்கியவர் மற்றும் பால்ராஜ் ஒரு இடத்தில் வந்து இருந்திட்டால் அவரை வீழ்த்துவது அல்லது அப்புறப்படுத்துவது கடினம் என சிங்களப்படைகளின் மனோதிடத்தையே பலவீனப்படுத்திய தளபதி, போர்க்கலை வல்லுனர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

இந்நினைவு நாளில் தமிழ்மக்களின் கவனத்திற்காக….

தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை. அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல.



தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும்! எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி.

அபிஷேகா
நன்றி விடுதலைப்புலிகளின் குரல்