Friday 3 April 2015

இராபர்ட் பயஸ்

இராபர்ட் பயஸ் அண்ணாவை பற்றி கவிஞரும் தமிழின விடுதலை உணர்வாளருமான மரியாதைக்குரிய அக்கா " தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் யாத்துத் தந்த கவிதை !
இராபர்ட் பயஸ் !
ழப்பதற்கு வேறொன்றுமில்லை
உன் கைவிலங்கை தவிர ,,,,,,
வேட்டைக் காரர்கள்
சரித்திரம் எழுதுவதை
என்றும்
வேடிக்கைப் பார்த்திருப்பதில்லை
புலிகள் ,,,,
வெறும் எண்களென சில
தேதிகளை எளிதில்
கடந்துவிட முடியாது
சகோதரா !
20-07-1990
10-06-1991
ஆகியவை அப்படித்தான் எமக்கு .
உன் உறவென எம்மை
நம்பி
நீ கால்பதித்த
அந்த இருபதாம் திகதியும் ,
தொப்பூள்கொடியே
கைவிலங்கென மாறிய
அந்த பத்தாம் திகதியும் .
வெறும் எண்கள் மட்டுமா ?
என்ன ?
அடைக்கலம் என வந்த
உறவொன்றை ' அநீதியிடம் ஒப்படைத்த அவமானம் சுமக்கும்
ஆறாப்புண்களல்லவா ?
பிறந்து பதிமூன்று தினங்களேயான உன் மகனை
இந்திய இராணுவம் சிதைத்த பின்
13 - துக்கத்தின் தினமானது
துரதிருஷ்டத்தில் நம்பிக்கையற்ற எமக்கும் தான்.
உன் கைவிலங்கிற்கு
இன்று வயது இருபத்துமூன்றாண்டுகள் .
இற்றுப் போன சருகுகள் எனில் - எம் தமிழர் அகராதியில்
இனி 23 ம் எண் மட்டுமே ---
நீ இழந்த நிலத்தை ,
கடலை, முழுநிலவை ,
முற்றத்தை, சுற்றத்தை இரண்டும் மூன்றும் இனைந்த
வெறும் எண்ணாக -
இந்த நீதிமன்றங்கள் பார்க்கட்டும் .
அடுத்த தலைமுறையோ :
மறுக்கப்பட்ட நீதியின் அவமான சின்னமென வெட்கித் தலை குனியட்டும்
கயமைத் துருவேறிய உன் கைவிலங்கின் சாவியை அரசாங்கமே வைத்துக் கொள்ளட்டும்.
உண்மையின் முத்தம் பொதிந்த உன் உள்ளங்கை - ரேகை
எம் தமிழினத்திற்கானது அல்லவா ?
இனமும் விடுதலையுமென
உயிர்த் தீ மெருகேற்றிய
இரு நிலக்கரி சுரங்கமே
நீதி தேவனின் கட்டப்பட்ட கண்களடியில் கனல்கிறது . என்பதின் சாட்சி நீ சகோதரா !
காலங்கடந்து விட்டாலும் - வெளிப்படுவது
விடுதலையெனும் வைரம் மட்டுமே ! கலங்காதிரு ''''''
உண்மையை உலகிற்கு
உரத்துச் சொல்ல
உன் அழியாப் புன்னகை
ஒன்று போதும் .
பொய்மையின் மலட்டுச் செவிகளில்
விடுதலையின்
தமிழ்த்தேசியக் கீதம்
உரத்துக் கேட்கும் .
வேட்டைக்காரர்கள்
சரித்திரம் எழுதுவதை
என்றும்
வேடிக்கைப் பார்த்திருப்பதில்லை
புலிகள் !
-தமிழச்சி தங்கப்பாண்டியன்

No comments:

Post a Comment