"பூமாலை நடவடிக்கை"
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
1987-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையிலான அரசியல் மற்றும் இராணுவ வரலாற்றில் மிக முக்கியமான, அதே நேரத்தில் பெரும் விவாதத்திற்குள்ளான ஒரு நிகழ்வுதான் பூமாலை நடவடிக்கை (Operation Poomalai) இது ஈகிள் மிஷன் 4' (Eagle Mission 4) என்றும் அழைக்கப்படுகிறது.
1987-ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆபரேஷன் லிபரேஷன்' (Operation Liberation) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்ற நினைத்த இலங்கை இராணுவம், அப்பகுதிக்குச் செல்லும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை முழுமையாகத் தடைசெய்தது.
இதனால் யாழ் குடாநாட்டில் இருந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் கடுமையான பசி, பட்டினி மற்றும் மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்த விவகாரத்தில் தலையிட முடிவு செய்தார்.
இந்தியா முதலில் கடல் வழியாக உதவ முயன்றது. ஜூன் 2, 1987
அன்று இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் 19 படகுகளில் உணவுப் பொருட்களை ஏற்றி அனுப்பியது. ஆனால், இலங்கை கடற்படை அந்தப் படகுகளை வழிமறித்து இந்திய எல்லைக்கே திருப்பி அனுப்பியது.
இந்தத் தடையால் அதிருப்தியடைந்த இந்திய அரசு, இலங்கைக்குத் தனது இராணுவ பலத்தைக் காட்ட வான்வழியாக உணவுப் பொருட்களை விநியோகிக்கத் திட்டமிட்டது. இதுவே 'ஆபரேஷன் பூமாலை'
1987 ஜூன் 4 அன்று மதியம் 3:55 மணிக்கு பெங்களூரில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐந்து An-32 (ஆண்டனோவ்-32) போக்குவரத்து விமானங்கள் புறப்பட்டன.
இந்த போக்குவரத்து விமானங்களுக்குப் பாதுகாப்பாக இந்தியாவின் அதிநவீன ஐந்து மிராஜ் 2000 (Mirage 2000) போர் விமானங்கள் ஆயுதங்களுடன் கூடவே சென்றன.
விமானங்கள் புறப்பட்ட சில நிமிடங்களில், இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் மூலமாக இலங்கை அரசுக்கு "நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உணவுகளைப் போட வருகிறோம், தடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மாலை 5:00 மணியளவில் யாழ்ப்பாண வான்பரப்பிற்குள் நுழைந்த இந்திய விமானங்கள், சுமார் 1,500 அடி உயரத்தில் பறந்து 25 டன் எடையுள்ள அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் பவுடர் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பாராசூட்டுகள் மூலம் யாழ் நகரில் இறக்கின. இலங்கை இராணுவம் இதைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாலை 6:13 மணிக்கு அனைத்து இந்திய விமானங்களும் பாதுகாப்பாகத் திரும்பின.
ஆபரேஷன் பூமாலை ஒரு குறுகிய நேர வான்வழி நடவடிக்கை என்றாலும், அதன் அரசியல் மற்றும் இராணுவ பின்விளைவுகள் மிக ஆழமானவை.
இந்தியாவின் இந்த அதிரடி வான்வழி அத்துமீறல் மற்றும் இராணுவ பலத்தைக் கண்டு இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அதிர்ச்சியடைந்தார். இந்தியா நேரடியாகப் போரில் குதித்துவிடும் என்று அஞ்சிய இலங்கை அரசு, யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்த 'ஆபரேஷன் லிபரேஷன்' தாக்குதலை உடனடியாக நிறுத்தியது; முற்றுகையையும் தளர்த்தியது.
பூமாலை நடவடிக்கையின் நேரடி விளைவாக, இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. இதன் விளைவாக, அடுத்த சில வாரங்களிலேயே (ஜூலை 29, 1987) இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இலங்கையில் மாகாண ஆட்சி முறை (13-வது சட்டத்திருத்தம்) கொண்டுவர வழிவகை செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, வடகிழக்கு இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் ஆயுதங்களை மௌனிக்கச் செய்யவும் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
ஆரம்பத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற வந்த இரட்சகனாகப் பார்க்கப்பட்ட இந்தியா, காலப்போக்கில் விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளால் அவர்களுடனேயே போரிட வேண்டிய சூழல் உருவானது. அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களும், 1,200-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களும் கொல்லப்பட்டனர். இது தமிழ் மக்களிடையே இந்தியா மீதான பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பூமாலை நடவடிக்கையில் தொடங்கி, அமைதிப்படை அனுப்பியது வரை இந்தியா எடுத்த அரசியல் மற்றும் இராணுவ முடிவுகளின் இறுதிப் புள்ளி, 1991-ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய முட்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சாவுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைந்தது.
ஆபரேஷன் பூமாலை என்பது இந்தியாவின் அண்டை நாட்டு விவகாரத்திலான மிகத் துணிச்சலான இராணுவ ராஜதந்திர நடவடிக்கை என்று பார்க்கப்பட்டாலும் . எந்த ஈழத்தமிழர்களை பாதுகாக்க என்று புறப்பட்டார்களோ அதே ஈழத்தமிழர்கள் ஒன்றே முக்கால் இலட்சம் மக்களை இனப்படுகொலைச் செய்ய இந்திய அரசு துணை நின்றது,என்பது வரையான கறுப்பு பக்கங்களையே வரலாறு பதிவு செய்துள்ளது .
No comments:
Post a Comment