Thursday, 12 February 2026

கொக்குளாய் படைத்தளம் மீதான முதல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் இராணுவ முகாம் மீது விடுதலைப்புலி வீரர்கள் நடத்திய உக்கிரமான, வெற்றிகரமான தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தமிழீழ மண்ணில் நிலைகொண்டிருக்கும் சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் மீது முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட பெரிய கெரில்லா தாக்குதல் இதுவாகும்.

இத்தாக்குதல் பிப்ரவரி 13 ஆம் திகதி அதிகாலை நடைபெற்றது. நவீனமான, கனரக ஆயுதங்களுடன் எமது கெரில்லா அதிரடிப் படை அணியொன்று இந்த இராணுவ முகாமை சூழ்ந்து கொண்டு தாக்குதலை ஆரம்பித்தது. இதனையடுத்து இரு தரப்பிலும் கடும் சண்டை  மூண்டது. சுமார் 5 மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்தச் சண்டையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்களை உடைத்துக்கொண்டு எமது வீரர்கள் முகாமிற்குள் புகுந்து நேருக்கு நேர் எதிரியுடன் சமரிட்டனர். இராணுவத்தி யனர் தரப்பில் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலி வீரர்களின் மூர்க்கமான, வீராவேசமான தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாது இறுதியில் இராணுவத்தினர் சிதறி ஒடினர்.

இந்தத் தாக்குதலில் மொத்தம் 106 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 25 பேர் வரை படுகாயமுற்றனர். எமது தரப்பில் 16 இளம் புலிகள் களத்தில் நின்று கடைசிவரை போராடி வீர மரணம் எய்தினர். 9 வீரர்கள் காயமுற்றனர்.

இது இவ்வாறிருக்க முல்லைத் தீவு இராணுவ முகாமிலிருந்து உதவிக்கு அழைக்கப்பட்ட இராணுவப் படை மீதும் எமது கெரில்லா அணியொன்று தாக்குதலை நடத்தியது. நாயாறு என்னுமிடத்தில் கண்ணிவெடி வைத்து நடத்திய தாக்குதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் பலர் படுகாயமடைந்தனர். இராணுவ வாகனங்களும் சேதமடைந்தன.

விடுதலைப் புலி வீரர்களின் இந்த வெற்றிகரமான தாக்குதல்களை அடுத்து முல்லைத்தீவில் கொக்கிளாய், திரியாய் என்னு மிடங்களிலுள்ள இராணுவ முகாம் கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கிரா மங்களிலிருந்து இடம் பெயர்ந்த சிங்கள இராணுவத்தினர் இப் பொழுது பதவியா என்னும் சிங்கள பிரதேசத்தில் நிலைகொண்டுள்ளனர்.

தமிழீழ மண்ணிலிருந்து சிங்கள ஆயுதப் படைகளை விரட்டியடிக்கும் எமது போராட்ட இலட்சியத்திற்காக, முதன்  முதலாக இராணுவ முகாம் ஒன்றை தாக்கி உயிர்த் தியாகம் செய்த இளம் போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வீர வணக்கம் செலுத்திக் கொள்கிறது.
🙏
-விடுதலைப்புலிகள் இதழ் 
ஏப்ரல் 1985

கொக்குளாய் படைமுகாம் மீதான தாக்குதல். -1985

கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் .

சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில விடயங்கள் வெட்டவெளிச்சமாகப் புரிந்துவிடும் என்று நம்புகிறேன்.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் பாதையில் சிலாவத்தை, அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்குளாய், புல்மோட்டை ஊடாக திருகோணமலை என்ற வகையில் தமிழரின் பாரம்பரிய வளங்கள் நிறைந்த நிலப்பரப்புகளை நோக்கலாம். இப் பிரதேசங்களின் ஒரு பக்கம் இந்து சமுத்திரத்தின் ஒரு பகுதியாகவும் மற்றய பக்கம் மணலாற்றின் பெரிய காடுகளைக் கொண்டதாகவும் நடுவிலே மக்கள் வாழ்விடங்களான மேலே குறிப்பிட்ட பிரதேசங்கள் அமைந்திரப்பதாகவும் இருக்கிறது.

இது தவிர நாயாறு மற்றும் கொக்குளாய் நீரேரிகள் அப் பிரதேசங்களின் அழகான அம்சங்களாகவும் விளங்குகின்றன. கடல்வளம், நெற்பயிர்ச் செய்கைக்கான நிலவளம், தென்னை பனை வளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்புகள் முல்லை மாணாலாறு மாவட்டமென தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெயர் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் கொக்குளாய் பற்றி பார்க்குமிடத்து, அது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவே காணப்படுகிறது. காரணம் வடக்கையும் கிழக்கையும் நேரடியாக இணைக்கும் ஒரு இணைப்பு நிலமாக கொக்குளாய் இருப்பதுதான்.
1984ம் ஆண்டுக் காலப்பகுதியில் கொக்குளாய்ப் பாடசாலையில் இலங்கை இராணுவம் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்தது மட்டுமல்லாது, கொக்குளாய் தொடக்கம் அளம்பில் வரையிலும் ஒரு படைநடவடிக்கையை மேற்கொண்டு பலவந்தமாக மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம் புலிகளின் தாக்குதல் வீச்சைக் கட்டுப்படுத்தலாம் எனவும் பகற்கனவு கண்டுகொண்டிருந்தது இலங்கை அரசு. இது இவ்வாறிருக்க இடம்பெயர்ந்த மக்கள் அளம்பில் ஐந்தாம் கட்டை, சிலாவத்தை, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்பாணம் வரைக்கும் அகதிகளாகச் சென்று தங்குவதற்கு இடமின்றி அல்லல்ப்பட்டனர். இருந்தபோதும் முல்லை மணலாறு மாவாட்ட மக்கள் திடமான தேசப்பற்றையும் விடுதலை உணர்வையும் விட்டுவிடவில்லை. மாறாக விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பக்க பலமாக தோளோடு தோள் நின்ற அவர்களது அசாத்தியத் துணிச்சல் என்றென்றும் போற்றத்தக்கது.
கொக்குளாயிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வடக்குக்கிழக்கைத் துண்டாடுவதே கொக்குளாய் முகாம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கமாக இருந்தது. மேலும் விடுதலைப் புலிகளின் கடல்வழி மற்றும் காட்டுவழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் முகாம்மிட்டிருந்த இராணுவத்தினருக்கு பலம் சேர்ப்பதும்கூட காரணங்களாயிருந்தன.
இவ்வேளையில் இறுமாப்போடு முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு தக்கப்பாடத்தைப் புகட்ட வேண்டி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இந்தியாவில் பயிற்சிகளை நிறைவு செய்து தாயகம் திரும்பியிருந்த போராளிகளின் அணியொன்றைத் தயார்ப்படுத்தி கொக்குளாய் முகாம் தக்ர்ப்பிற்காக சிறப்புப் பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்தினார் தலைவர் அவர்கள். அதுநாள் வரையிலும் கெரில்லாப் போர்முறையினைக் கைக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் முதன்முதலாக மரபுவழியிலே கொக்குளாய் முகாமைத் தாக்கியழிக்க முடிவெடுத்த்தார்கள். சரியான முறையில் வேவு பார்க்கப்பட்டு காட்டுவழியாக தாக்குதலுக்கான அணி நகர்த்தப்பட்டது. இன்று மாவீரர்களாகிவிட்ட தளபதிகள், போராளிகள் பலர் அன்றைய அத் தாக்குதலில் களமிறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லெப். கேணல் புலேந்திரன், பிரிகேடியர் சொர்ணம், கப்டன் ஆனந்தன், கப்டன் லோரன்ஸ், லெப். சபா, லெப். ஜீவன் போன்றோர் இவர்களில் சிலராவர்.
கொக்குளாய் முகாம் தாக்குதலுக்கான வழிகாட்டிகளாகவும், உணவு ஒழுங்கமைப்பாளர்களாகவும், முதலுதவிகளை மேற்கொள்பவர்களாகவும் மக்களே
செயற்பட்டனர். 13.02.1985 அன்று கொக்குளாய் இராணுவத்தினர் எதிர்பாராத ஒரு நிகழ்வாக புலிகளின் தாக்குதல் அமைந்தது. துணிச்சல் மிகுந்த போரளிகள் முகாமிற்குள் நகர்ந்து சண்டையிட்டனர். அங்கே நிலைகொண்டிருந்த 200 வரையிலான படையினரில் பலர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்தனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் 16 புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.கொக்குளாய்க் கடல் வழியாக இராணுவத்தினருக்கான உதவிகள் வரத் தொடங்கவே, காயமடைந்த போராளிகளை தோளிலும் கையிலுமாய்த் தாங்கியபடி விடுதலைப் புலிகளின் அணி பின்வாங்கியது. இத் தாக்குதலானது போராளிகளுக்கு மிகப்பெரியதோர் அனுபவப்பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. அதேவேளை இராணுவம் திகிலடைந்து நிலைகுலைய காரணமாகவும் இத்தாக்குதல் அமைந்தது. பிந்நாளில் நடந்த பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு கொக்குளாய் முகாம் தாக்குதலே முன்னுதாரணமாய்த் திகழ்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அன்று தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம்.

லெப்டினன்ட் சைமன்

லெப்டினன்ட் பழசு

வீரவேங்கை கெனடி

வீரவேங்கை காந்தரூபன்

வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)

வீரவேங்கை காந்தி

வீரவேங்கை ரவி

வீரவேங்கை வேதா

வீரவேங்கை ரஞ்சன் மாமா

வீரவேங்கை காத்தான்

வீரவேங்கை மயூரன்

வீரவேங்கை சொனி

வீரவேங்கை தனபாலன்

வீரவேங்கை சங்கரி

வீரவேங்கை மகான்

வீரவேங்கை நிமால்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

13.02.2019
கலைமகள்

EelamHouse

கொக்குளாய் முகாம் மீதான தாக்குதல்

கொக்குளாய் படைமுகாம் மீது தமிழர் சேனை தாக்குதல் தொடுத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் ( 13.02.1985 / 13.02.2026)

தளபதிகள் மாத்தையா, புலேந்தி அம்மான், அருணா வழி நடத்த வரலாற்றில் முதல் தடவை ஒரு படை முகாமை தமிழர் சேனை முற்றுகையிட்டுத் தாக்கியது.

பதினாறு போராளிகள் வீரச்சாவடைந்தது என்பது அப்போது எண்ணிப் பார்க்க முடியாத ஒரு பேரிழப்பாகவே இருந்தது.

ஆனாலும், தாக்குதல் பெரு வெற்றி அளிக்காவிட்டாலும் பிந்திய அனைத்து போர் வெற்றிகளுக்குமான பயிற்சியாகவும், படிப்பினையாகவும், பட்டறிவாகவும் இத்தாக்குதல் அமைந்தது.

இதில் வீரச்சாவடைந்த ஒவ்வொரு மாவீரர்களினது கதையும் போராட்டம் குறித்த ஒவ்வொரு கதையைச் சொல்லும்.

இத் தாக்குதலில் வீரச் சாவடைந்த சைமன் அவரது தந்தையைத் தேசத் துரோகம் காரணமாக கொழும்பில் வைத்து இயக்கம் சுட்ட போதும் கொள்கை மாறாது போராடி வீரச்சாவடைந்தார்.

இத் தாக்குதலில்தான் உடுகமகே கேமசிறீ ( லெப் பழசு) என்ற முதலாவது சிங்கள மாவீரர் தமிழீழ விடுதலைக்காகத் தன்னுயிரை ஈர்ந்தார்.

தேசியத் தலைவர் தனது மகளுக்குத் துவாரகா எனும் பெயர் சூட்டக் காரணமாக இருந்த தலைவரின் மெய்ப்பாதுகாவலர் மயூரன் எனப்படும் துவாரகன் வீரச்சாவடைந்ததும் இந்தக் களத்தில்தான்.

இப்படி ஒவ்வொரு போராளிக்கும் ஒரு கதை இருக்கிறது.

நாம் எண்ணிப் பார்க்கவே முடியாத அர்ப்பணிப்பும், தியாகமும் நிறைந்தவை அவை.

குறிப்பாக புலிப்பண்பாடு முகிழ்ந்த வரலாறு இது.

இவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம். தொடர்ந்து போராட உறுதி எடுப்போம்.

-பரணி கிருஸ்ணரஜனி

The Politics Of Duplicity -அன்ரன் பாலசிங்கம் - புத்தக விமர்சனம் க வே பாலகுமாரன்

உண்மை உலகை பாதிதூரம் வலம்வர முன்னர் பொய்மை உலகை பலமுறை சுற்றிவந்து விடும் என்பார்கள். இது போலத்தான் 1995 ஏப்பிரலின் பின் நடைபெற்றது. புலிகளுக்கும், சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்திற்குமிடையே நடைபெற்ற பேச்சுக்கள் முறிவ டைந்தபோது, அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியது போலவே புலிகள் தமது பக்க நியாயத்தை உலக அரங்கில் முன்வைக்கும் முன்னரே ஒருதலைப்பட்சமாக உலகம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. 
ஆனால் இப்போது உண்மை உலகை வலம் வரத்தொடங்கிவிட்டது. 1995-2000 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலம் சற்று நீண்டதுதான் ஆயினும் காலம் தாழ்த்தினாலும் மிக காலப் பொருத்தமாக புலிகளின் அர சியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட " நயவஞ்சக அரசியல்" 
(The politics of Duplicity) வெளிவந்துள்ளது.

தனது உடல்நலக்குறைவிற்கு மருத்துவம் பார்க்கச் சென்றவர் அம்மையாருக்கு இப்போது அதிர்ச்சி மருத்துவம்ப பார்த்திருக்கின்றார். 
தங்கள் தரப்பின நியாயங்கள் உலக அரங்கு ஏறவில்லையே என்கிற எம் மக்களின் பெருத்த மனக்குறை நீக்கும் வகையில் இராசதந்திர உலகின் வல்லுநர்களுக்கும் எம் மக்களின் பால் நேயம்கொண்டவர்க்கும் விளக்கும் வகையில் இலகு,இராசதந்திர மொழியில் நூல் ஆக்கப்பட்டுள்ளது. தனக்கேயுரிய இயல்பான அமைதியான ஆனால் அழுத்தம் திருத்தமான ஆணித் தரமான நடையில் பாலசிங்கம் அவர்களால் நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்நூல் வெளிவந்த காலப்பொருத்தம் தான் என்ன? 1995 ஏப்பிரல் பேச்சுக்கள் முறிவடைந்தன; ஆறாண்டுகளாக பெரும் போர் தொடர்கின்றது இப்போதே சர்வதேசத்தின் சார்பில் நோர்வே மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க முயற்சிகளைத் தொடர்கின்றது. ஆகவே அன்று ஏன் பேச்சுக்கள் முறிவடைந்தன? இவை தொடர்பில் புலிகளின் உள்ளப்பாடு என்ன? இவற்றினை உலகிற்கு உரைப்பதற்கு அண்ணை ' என உள்ளன்புடன் தலைவராலும், போராளிகளாலும், மக்களாலும் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கமே மிக்க பொருத்தமானவரல்லவா? அனன்றைய பேச்சுக்களிலும் இன் றைய பேச்சுக்களிலும் நேரடித் தொடர்பு படுகின்றவராகவும் தலைவரின மன நிலையை உணர்ந்தவராகவும் அவரே இருக்கின்றார். இந்நூலின் வெளியீடு பிரதிபலிக்கும் இன்னொரு அரசியல் பெறுமானமொன்றையும் இங்கே பதிவாக்க விரும்புகின்றேன். 1995 ஏப்பிரலின் பின் இடை விட்டு ஆனால் இடைவிடாமல் அம்மையார் என்ன பிரகடனம் செய்து வந்தார்? 
புலிகளை நோக்கி சவால் அல்லவா விடுத்தார்? உலகத்திற்கு உறுதிமொழியல்லவா கொடுத்தார்? புலிகளே பேச்சுக்களை குழப்பினர்; முன்னறிவித்தலின்றி திடீரென போரைத் தொடங்கி னர்; இவற்றினை நிரூபிக்க தக்க சான்றுகளாக எனக்கும் பிரபாகரனுக்குமிடையிலான கடிதங்கள் உள்ளன; இவற்றினை வெளியிட்டால் புலிக ள் மூச்சுப் பேச்சற்று மூலைக்குள் முடங்க வேண்டியதுதான்; மிக விரைவில் கடிதங்களை வெளியிடுவேன் என வீராப்பாக கதைவசனம் பேசி நாடகமாடி வந்தார். இதற்கு அவர் துணை சேர்ந்த புரொன்ட்லைன் 'ராம் எனப் படும் ஒரு பத்திரிகையாளனுக்குரிய நியாய எல்லைகளைக் கடந்து தனது மார்க்சிய அறிவையே ஒரு இனத்தின் விடுதலைக்கெதிராக பயன்படுத்தும் இன்னொரு இரட்டை வேட,மலின அறிவுவாதி ஆவார்."

அம்மையாரின் இமாலயப் புளுகுகளுக்கு உண்மைப்பூச்சு பூசும் வேலை இவருக்கு. இப்போது கடிதங்கள் வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் எவராலும் தக்க நேரத்தில் தவிர்க்க முடியாத, முகத்திலறையும் உண்மையாக இந்நூல் வெளியாகி உலகில் உலவுகின்றது. மீண்டும் தனது பழைய உளுத்து போன வாதத்தினை முன்வைக்கும் வாய்ப்பினை, பாலா அண்ணை இப்போது அம்மையாரிடம் இல்லாது செய்துவிட்டார். இதனால் பெருத்த மனநிம்மதியை எம்மக்கள் அடைகின்றார்கள்.

முன்னுரையாக வரும் அறிமுகவுரை, முடிவுரையாக வரும் பேச்சுக்கள் தோல்வியடைந்தமை தொடர்பான பிரதிபலிப்புக்கள் தவிர ஐந்து அத்தியாயங்களாக நூல் வகுக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு செப்டெம்பர் தொட்டு 1995 ஏப்பிரல் வரையான காலப்பகுதி இவ்வைந்து அத்தியாயத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. முழுநூலின் உள்ளடக்கமுமே மிகச் சுருக்கமாக அறிமுகவுரையில் அமைகின்றமை குறிப்பிடத் தக்கது. 
பாலா அண்ணையின் அனுபவ முதிர்ச்சியின் ஆற்றல்மிகு சொற்றொடர்களை அரசியல் வரைவிலக்கணங்களின் பல கீற்றுக்களை இப்பகுதியில் மட்டுமல்ல நூலெங்கும் நாம் காணமுடியும். தமிழ்மக்கள் தொடர்பில் மட்டுமல்ல சிங்களதேசத்தை, சருவ தேசத்தை அணுகிய முறையாலும் அம்மையாரின் இரட்டைவேடப் போக்கினை வெகு பொருத்தமாக  நயவஞ்சக அரசியல்' எனும் தொடருக்குள் பொதித்தவர், எம்மக்கள் தொடர்பான அவரது நயவஞ்சக அரசியலை. "Peace trap for a Longierm war" காலப் போருக்கான அமைதிப்பொதி என வருணிக்கின்றார். அறிமுகவுரை யதார்த்தமான கணிப்போடு ஆரம்பமாகின்றது. ." ஏப்பிரல் 1995ம் ஆண்டில் பேச்சுக்கள் முறிவடைந்த போது சருவதேச சமூகம் எவ்வித தயக்கமு மின்றி புலிகளே பேச்சுக்கள் முறிவடைந்தமைக்கு காரணம் என கண்டனம் தெரிவித்தது. புலிகள் தமது தரப்பு வாதத்தினை முன்வைக்க முன்னரே உலகம் தீர்ப்பை வழங்கிவிட்டது. சருவதேச தொடர்பு சாதன ஊடகங்களோடு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு தனிமைப்பட் டிருந்த புலிகளால் தமது தரப்பு நியாயத்தை உடன் முன்வைக்க  முடியவில்லை. எனவே சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட பாரிய சருவதேச பொய்மைப் பரப்புரையால் வெற்றியீட்டி உலகை தன்பக்கமாக்கிக் கொண்டது.''

யாழ்ப்பாணப் பேச்சுக்கள் ஒரு மீளாய்விற்குட்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கே தெளிவாக்கப்படுகின்றது. "சருவதேச சமூகம் மீண்டும் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் பேச்சுக்களை தொடங்க முயலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் யாழ் பேச்சுக்கள் தொடர்பில் ஒரு நுணுகிய பார்வை இப்போது அவசியமாகின்றது. இதன்மூலம் புலிகளின் மன நிலை, அவர்கள் உள்ளார்ந்த நிலைப்பாடு என்பனவற்றை அறியமுடியும். ஏனெனில் சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் தொடர்பில் புலிகள் காட்டும் மிக ஆழமான அவநம்பிக்கை, பேச்சில் ஈடுபட அவர்கள் காட்டும் பெரும் தயக்கம், இவையெல்லாவற்றினதும் வேர்கள் யாழ் பேச்சுக்களின் போது புலிகளின் தலைமை பெற்ற கசப்பான அனுபவங்களி லேயே உள்ளன" என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

எதனை ஆதாரமாகக் கொண்டு எவ்விதம் நூல் ஆக்கப்பட்டுள்ளது? இதனையும் அறிமுகவுரையில் ஆசிரியரே விளக்கிவிடுகின்றார் "முரண்பாடுகளின் தீர்வு தொடர்பில் இதுவரை அறியப்படாத ஒரு தனித்துவமான முறையில் யாழ் பேச்சுக்கள் நடைபெற்றன (‘Adopting a peculiar modality hitherto unknown in the discurse of conflict resolution") இரண்டு மட்டத்தில் நடைபெற்றன. ஒரு மட்டத்தில் இரு தாப்பினதும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நேரடிப் பேச்சுவார்த்தை; மறு மட்டத்தில் அரசினதும் புலிகளினதும் தலைமைகள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் மூலமான மறைமுக பேச்சுவார்த்தை; ஆறுமாத காலத்தினுள் ஆக நான்கு சுற்றுக்கள்; அவையும் ஒவ் வொன்றும் ஓரிரு நாட்களே நீடித்த மிகக்குறுகிய காலவளவைக் கொண்டவை; எனவே மிகப் பரந்துபட்ட ஒரு அரசியல் சிக்கலை அதுவும் முடிவுகள் எடுப்பதற்கு அகிகாரமற்ற ஒரு தாழ்நிலைக் குழுவோடு (Low key team) பேசி எவ்வித நேரடிப்பயன் எதுவுமே கிட்டாத நிலையில் இருதரப்பு தலைமைகளுக்கிடையில் நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகளே முக்கியமானதும் தீர்க்கமானதுமாகின்றன " இவற்றில் பல தலைவர் பிரபாகரனுக்கும் சிறிலங்கா அரசின் தலைவி என்கிற வகை யில் சந்திரிகா அம்மையாருக்கும், பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் என்கிற வகையில் ரத்வத்தவிற்குமிடையிலாவை.
ஏனையவை திரு தமிழ்ச்செல்வனுக்கும் திரு. பாலபத்த பெந்திக்கும் இடையிலானவை.

ரத்வத்தவிற்கும், தமிழ்ச்செல்வனுக்குமிடையிலான சில கடிதங்களும் நூலில் உள்ளன. இவ்வாறாக கடிதங்களுக்கூடாக ஒரு காலகட்ட அமைதிப்பேச்சு வரலாறு நகர்த்தப்படுகின்றமை இந்நூலின் புதுமை (மொத்தமாக 49 கடிதங்கள்).

நூலின் முதலாவது அத்தியாயம் மட்டுமே

அபைதிப்பேச்சுக்களின் முதலாவது சுற்று (1994
ஒக்ரோபர் 13, 14) அமைதியாக நடந்ததை பதிவு செய்கின்றது.

 1994 ஆகஸ்டில் அம்மையார் பிரதம மந்திரியாக பதவியேற்ற பின் காட்டிய நல்லெண்ணத்தைப் பாராட்டியும் தலைவர் தனது நிலைப்பாட்டினை மிகத் தெளி
வாகவும் (1. பூரணமாக பொருண்மியத் தடைநீக்கப்படல், 
2 இயல்புநிலை உருவக்கல்,
3 நிபந்தனையற்ற பேச்சுக்கும், போர்நிறுத்
தத்திற்கும் தான் தயாராகவிருக்கின்றமை )
விளக்கி எழுதிய 02. 09. 1994 திகதிய முதலாவது கடிதம் இடப்பெறுகின்றது. 

எனினும்அம்மையார் முதலாவது சுற்றுக்கு அனுப்பிய தாழ்நிலை அரசாங்க குழு தொடர்பில அவர் ஐயம் கொள்ளத் தொடங்கியமையும் இங்கே
குறிப்பிடப்படுகின்றது.

தலைவர் எழுதிய முதலாவது கடிதத்திற்கும் அவர் இறுதியாக அனுப்பிய 18.04.1995 திகதியிட்ட கடிதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடந்தவை மிக விரிவாக காலவொழுங்கு முறைப்படி வரிக்குவரி
கடித ஆதாரங்களோடு அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 

முரண்பாடுகள் எவ்வாறு முற்றின என்பது சம்பவங்கள்
வழி வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் (சனவரி 2,1995), 
மூன்றாம் சுற்றுப்பேச்சுக்கள் (சனவரி 14.1995) வெளித்தோற்றத்திற்கு மோதல் தவிர்ப்பு உடன்பாடு, சில பொருட்களின் தடை நீக்கம் போன்றவற்றிற்கு வழிவகுத்த போதும் உண்மையிலே ஆழமான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவே வழி வகுத்தன. 

இப்பேச்சுக்கும் இவற்றின் பின்னரும், முன்னரும் ரத்வத்தவும், அம்மையாரும் அனுப்பிய கடிதங்களும் தலைவர் மனதிலே எத்தகைய எண்ணவோடடங்களை கிளப்பின என்பதை பாலா அண்ணை வெகுபக்குவமாக பதிவு செய்துள்ளார். 
இச்சிந்தனை வரலாற்று வழிவந்த சிங்கள பேரின வாதத்தின் கருத்தியல் தோற்றம் பற்றியது. மக்கள் அன்றாடம் படும் இன்னல்களை முதலில் நீக்குங்கள் என மோதல் காலத்தில் ஒவ்வொரு தடவையும் புலிகள் வற்புறுத்தியபோது இழுத் தடித்து இறுதியில் இவை பாதுகாப்பு தொடர்பானவை,

 இராணுவத்தின் நலன்களுக்கு தீங்குபயப்பவை (பக்கம் 108. அம்மையாரின்
 09 03.1995 ம் திகதி மடல்) என காரணம் காட்டப்பட்டதன் ஆழமான உள்ளர்த்தம் என்ன?

இதுவே இந்நூல் மூலம் பாலா அண்ணை எழுப்பும் பெரும் கேள்வியாகும். நூலின் இறுதியில் இதற்கான விடை விரிவாகத் தரப்பட்டுள்ளது. முடிச்சவிழ்க்கப்படாத புதிர் ஒன்று இந்நூல் மூலம் முடிச்சவிழ்க்கப்படுகின்றது. எம்மக்கள் தாம் எதிர்நோக்கிய அரசியல் சிக்கலை தீர்க்க முயன்றபோது அதைத் தடுக்கவே இராணுவ அடக்குமுறை உள்ளிட்ட தடைக்கு மேல் தடை அவர்களால் விதிக்கப்பட்டது. இப்போது அவர்களே அரசியல் சிக்கலை தீர்க்க முன் வருவதாக கூறும்போது எம்மக்களின் அன்றாடவாழ்வைச் சிதைக்க அவர்களே இட்ட தடை, நீக்கவேண்டியது அவர்களின் பொறுப்பு அல்லவா? இத் தடை நீக்கம் எவ்வாறு இராணுவ நலன்களைப் பாதிக்கும்?

இதுவே பேச்சுவார்த்தைகள் தோற்றமைக்கான பிரதான காரணங்களில் ஒன்று. இத னையே நூலாசிரியர் பக்கம் 110 இல் தொகுத்துத் தருகின்றார்.

(அ) பொருண்மியத்தடை பூரணமாக நீக்கப்படாமை, அவ்வாறு நீக்கப்பட்ட பொருட்க ளும் எம்மக்களை சென்றடையாமை.

ஆ) அரசாங்கம் ஒரு நீடித்த நிலையான போர் நிறுத்தத்திற்கு தயாராக இல்லாமை.

(இ) கரையோர மேலாதிக்கத்தைப்பேண மீன் பிடித்தடையை நீக்காமை.

(ஈ) கிழக்கில் போராளிகளின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாக்கப்பட்டமை.

(உ) தரைவழிப்பாதை திறக்க உடன்படாமை அதாவது பூநகரி இராணுவ முகாமை மூட விரும்பாமை. 
இவற்றினை விட இன்னொரு பிரதான காரணமும் பேச்சுக்கள் தோற்றமைக்கு வழிவகுத்தது. அது புலிகள் தொடர்பான அல்லது தமிழ் மக்களின் தேசிய இனச்சிக்கல் தொடர்பான சிங்களத்தின் மேலாதிக்க அணுகு முறை. இதனை கண்டித்து தலைவர் அவர்கள் அம்மையாருக்கு அனுப்பிய 28. 03. 1995 திகதிய கடிதத்தில் கூறுகின்றார் (பக்கம் 128) " உங்களுடைய கடிதத்தில் உங்களது அரசாங் கத்தால் புலிகளுக்கு பல சலுகைகள் அல்லது விசேடித்த உரிமைகள் என்பன நம்பிக்கையை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டதாக எழுதியுள் வீர்கள். உங்களது கருத்துப்படி ஆயுதங்களை கீழே வைக்க கோராமல் பேச்சுக்கள் தொடர்கிறமை, மோதல் தவிர்ப்பு உடன்பாடு, யாழ்ப்பாணத்திற்கு பேச்சுவார்த்தைக் குழு அனுப்பப்பட்டமை எல்லாம் இத்தகைய சலுகைகள். இது தவறான பார்வை. இவை புலிகளுக்கு நீங்கள் வழங்கிய சலுகைகளோ அல்லது விசேட உரிமைகளோ அல்ல. இவை ஒரு அமைதி முயற்சியினை முன்னெடுப்பதற்கு தேவையான முன்னவசிய சூழலை உருவாக்க அவசியமானவையாக கருதப்படவேண்டும். 

புலிகள் ஒரு ஆயுதக்குழு என்கிற உங்கள் பார்வை தவறான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் :தமிழ் மக்களின் உள்ளத்துணர்வுகளை, அபிலாசைகளை பிரதிபலிக்கின்ற, அவர்களோடு ஒன்றித்த இயக்கம். இவ்வடிப்படையி லான எமது முதன்மைத் தானத்தினை ஏற்றே நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு முன்வந்தபின் அமைதி முயற்சிகளின் முன்னெடுப்பிற்கு அவசியமானவற்றை பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஒரு குழுவிற்கு வழங்கப்படும் சலுகைகளாக கருதல் தவறானதாகும்." 

இப்பதில் அம்மையாருக்கு மட்டுமல்ல பயங்கரவாதப் பட்டம் சூட்டும் அகில உலகத்திற்கும் பொருத்தமானதே. இதன் தொடர்பில் தன்னையொரு முற்போக்குவாதி,தாராண்மைவாதியாக தொடக்கத்தில் காட்டிக்கொண்ட அம்மையார் 1986 இன் முற் பகுதியில் சென்னையில் ஆசிரியரைச் சந்தித்த போது தமிழ்மக்களின் தேசிய இனச்சிக்கலை எவ்வாறு மிகத்தவறாக வேண்டுமென்றே புரிந்து கொண்டிருந்தார் என்பதை முதல் அத்தியாயத்தின் தொடக்கத்திலே ஆசிரியர் எழுதியிருப்பதையும் வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இவ்வாறாக மூன்று சுற்றுப் பேச்சுக்களின் பின் நிலமைகள் வேகமாக மோசமடைவதை பாலா அண்ணை வெகு கவனமாக பதிவு செய்கின்றார்.

 தலைவரின் பொறுமையிழப்பு, தனது வேண்டுகைகளை நிறைவேற்ற ஒரு கால எல்லையாக 28. 03. 1995ம் திகதியை தனது 16.03.1995 திகதிய கடிதம் மூலம் அறிவித்தமை. பின் அதனை 19. 04. 1995ம் திகதி வரை தனது 06.04.1995 திகதிய மடல் மூலம் நீட்டித்தமை . இவை எல்லாமே ஒரு காலக்கெடு என்றில்லாமல் அம்மையார் தனது நயவஞ்சக இரட்டை வேடப்போக்கினை மாற்ற கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முன்னறிவித்தலுமாகவே வரலாறு கருதும் என்பதே நூலின் முழுமை உணர்த்தும் செய்தி. 

இதன் பின்னரும் அம்மையார் தனது போக்கினை மாற்றாமல் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் ஒரு ஆயர் உட்பட பல தரப்பினரையும் இணைத்து அரசாங்க தூதுக்குழுவை நான்காம் சுற்றுக்கு 10.04.1995 அன்று அனுப்பியமை, அதன் பின்னான 12.04.1995 திகதிய அவரது கடிதம் எதுவுமே தலைவர் மனதினை மாற்றப் போதுமானவையாக அமையவில்லை.

ஒரு விடுதலை இயக்கத்தோடு பழைய காலம் கடந்த புளித்துப்போன அணுகுமுறையான, அரசு என்கிற ஆணவ நிலையிலிருந்து அணுகுதல். கூடவே பௌத்த பேரினவாதத் திமிரும் சேர்ந்தால் என்ன பயன் விளையும் என்பதனை அமமையாருக்கு மட்டுமல்ல உலகத்திற்கும் உணர்த்திய தலைவரின் வரலாற்றுப் பதி வாகிவிட்ட 18. 04. 1995 திகதியிட்ட இறுதி மடல் இவ்வாறுதான் முடிகின்றது.

 "நாங்கள் உங்களுக்கு ஏற்கெனவே அறிவித்தது போன்று பேச்சு வார்த்தையிலிருந்தும் மோதல் தவிர்ப்பு உடன் பாட்டிலிருந்தும் விலகிக்கொள்வது என்கிற வேதனை தரும் முடிவினை எடுப்பதைத் தவிர வேறுவழி எமக்கு முன்னில்லை." இவ்வாறாக வேறுவழி எதனையும் அம்மையார் முன்வைக்கவில்லை என்கிற நிலைப்பாட்டோடு பக்கத்துடன் இந்நூல் முடிவடைந்திருக்கவேண்டும்.

ஆனால் இத்தோடு நூல் முடிவடையவில்லை. 1995 ஏப்பிரலில் இருந்து புலிகளுக்கெதிராக மிகப் பாரியளவில் வெற்றிரமாக மேற் கொள்ளப்பட்ட அமைதிக்கான போர் என்கிற நயவஞ்சக பரப்புரைக்கு அடிப்படையாக அமைவது இரண்டே இரண்டு விடயங்கள். ஒன்று புலிகள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சடுதியாக தாக்குதலை தொடங்கினர் என்பது. 

மோதல் தவிர்ப்பு உடன் பாட்டின்படி 72 மணித்தியாலங்கள் முன்னறிவித்தல் கொடுத்தால் போதுமானது என்றிருந்த போது அரசியல் நிலைமைகளை கணக்கிலெடுத்தே தலைவர் அவர்கள் தனது மூன்று மடல்கள் மூலம் மூன்று வாரத்திற்கு மேற்பட்ட கால அவகாசத்தினை வழங்கினார் என்பது நூலின் வழி மிகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதும் வலுவான காரணமாக அம்மையரால் முன்வைக்கப்பட்டது. 

புலிகளுக்கு அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களில் ஈடுபட துளியளவும் விருப்பமில்லை; நாங்கள் தயாராகவிருந்த போதும் அவர்கள் தட்டிக்
கழித்தனர் என்பதே.

இதற்கான பதிலே 145ம்
பக்கத்திலிருந்து ஆரம்பமகின்றது. 
பேச்சுக்கள்முறிவடைந்தமைக்கான காரணங்கள் நேர்மை
யாக புலிகளின் யதார்த்த நிர்ப்பந்த நிலைமை உட்பட - முன்வைக்கப்படுவதோடு இற்றை வரை வெளிச்சத்தைக் காணாத அரசியல்
தீர்வு எங்கே? ஏன் அது நடை முறைச் சாத்தியமாகவில்லை? என்பதும் தெளிவாக்கப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்விதம் ஆழ அகலமாக வேரோடி தாபனமயப்படுத்தப்பட்டு நிற்பதனையும் அதனைச் சார்ந்தேஇயங்கும் (சாராமல் இயங்கமுடியாது ) அம்மையார் போடும் இரட்டைவேடம், நயவஞ்சகம்என்பது எத்தகையது என்பது தெளிவாக்கப்படுகின்றது. இப்போது அம்மையாரின் எல்லா வேடமும் அம்பலமாகி, சகல குட்டுக்களும் உடைந்து அமைதிக்கான போர், புலிகளுக்கு இராணுவத்தீர்வு, மக்களுக்கு அரசியல் தீர்வு.
எனபனவெல்லம் மிக மோசமான கொடூரமான நகைச்சுவை துணுக்குகளாகிவிட்டன. 

புலிகளின ஆறாண்டுகால விடுதலைப்போர்,களத்தில் அம்மையாரின் அரசியல், இராணுவ இலக்குகளைச் சிதறடிக்க, இராசதந்திரக்களத்தில் திரு. அன்ரன் பாலசிங்கத்தின் நூல் இதே பணியைச் செய்கின்றது.

உண்மையை உலகம் உணருமா? இனி மேலாவது ஒரு புதிய விழிப்பைப் பெறுமா?

பாலா அண்ணை இவ்வாறுதான் நூலை நிறைவு செய்கின்றார். "தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போர் சிங்கள பௌத்த இனவாதத்தின் நேரடி வெளிப்பாடு என்பதை எப்போது சருவதேச சமூகம் உணர்கின்றதோ. அப்போதுதான் இனப்படுகொலை அழிவுகளை தமிழ்த்தேசத்தில் ஏற்படுத்தும் இப்போருக்கு உதவுவதிலிருந்து, சருவதேச சமூகம் தன்னை விடுவித்துக் கொள்ளும்.'' இப்படியாக உணர வைக்கப்படும் முயற்சியே இந்நூல்.

-நூல்விமர்சனம்
-க.வே.பாலகுமாரன் அண்ணை.
புலிகளின் மூத்த உறுப்பினர்.

விடுதலைப்புலிகள் இதழ்.
ஐப்பசி,கார்த்திகை.2000.

தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர் த

மௌனப்புதைக்குழிக்குள் புல்லுமலைப் படுகொலை.

பாலென்றால் பாலும், தேனென்றால் தேனும், நெல்லென்றால் நெல்லும் விரும்பியநேரம் விரும்பிய அளவினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வளம்மிகு கிராமம் புல்லுமலை. பலா, மா, வாழையென முக்கனியும் சொரிந்துகிடக்கும் தமிழ்ப்பூமி மலைநாட்டின் சாயலை ஒத்த இப்பிரதேசம் பார்ப்பவர் மனதை சுண்டியிழுத்துவிடும் அழகுடையது.

பல நூற்றாண்டுகளாய் தமிழர் வாழ்ந்த இப்பூமி இன்று புதர்மண்டிக்கிடக்கிறது. மண்ணைக்கிளறக்கிளற செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் இப்பிரதேசத்தை சிங்களக் குடியேற்றத்தினால் அபகரித்துவிட சிங்களதேசம் அவ்வப்போது முயன்றது. 1983ம் ஆண்டு தொடங்கி 1990ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு ஐந்துக்கு மேற்பட்ட தடவைகள் சிங்கள இராணுவத்தினரும் சிங்களக் காடையர் கும்பலும் இணைந்து இக்கிராமத்தை அழித்துவிடும் படுகொலைகளில் இறங்கினர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொடூரக்கொலைகள் நடந்தன. வாய்திறந்து சொல்லமுடியாத பாலியல் கொடுமைகள் கொலையுடன் நிகழ்ந்தன. நாநூறுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் புதையுண்டுபோனது.

ஒவ்வொரு தடவையும் ஓடி ஒழிந்து தப்பிக்கொண்ட ஒருசிலர் மட்டுமே இன்று உறுகாமம், கித்துள், மரப்பாலம், சின்னப்புல்லுமனை ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வின் முழுமையை தொட்டு நிற்கும் இவர்களும் இறந்துவிட்டால் புல்லுமலைப் படுகொலைகளின் உண்மைகளும் மறைந்து புதைந்துவிடும். அந்த முதுமைகளின் உள்ளத்தில் உறைந்துகிடந்த ஒரு பகுதியை கிளறியபோது உள்ளங்கொதிக்கும் உண்மைகள் வெளிவந்தன.

உறுகாமத்தில் இடம்பெயர்ந்து வாழும் சூசைமுத்து தம்பிமுத்து(அந்தோனி) என்பவரைச் சந்தித்தேன். அவரது தம்பியான செல்லத்தம்பி
பேரின்பராசாவையும் அவரது மனைவியையும் இழந்துபோன நாளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்.

1983ம் ஆண்டு சிங்கள ஆமியும், சிங்களக் காடையனுகளும் சேந்துவந்து நம்மட தமிழாக்களின்ற வீடுகள் எல்லாத்தையும் கொழுத்தினாங்கள். வீடுகளுக்க இருந்த நம்மட சொத்துக்கள் எல்லாத்தையும் வாகனங்களைக் கொண்டுவந்து ஏத்திக்கொண்டு போயித்தாங்கள். நாப்பது நாப்பத்தைந்து வீடுகளைக் கொழுத்தினாங்கள். எல்லோரும் பயத்தில் ஓடி சேனைப்பக்கம் போயிருந்திட்டாங்கள். நாங்களும் மூங்கில் மலையில இருக்கிற நம்மட சேனையில ஓடிப்போயிருந்தம் மறுகா மூங்கில் மலைக்கு வந்த சிங்கள ஆமி சேனையில இருந்த எல்லாரையும் சுத்திவளைச்சுப் பிடிச்சுட்டுப் போனான். அதில நம்மட தம்பியும் பெஞ்சாதியும் பட்டிட்டாங்கள். தம்பிட பொஞ்சாதி கர்ப்பிணியா இருந்தாங்கள் அவங்கள் தம்பிக்கு முன்னால வச்சே மாறிமாறி கற்பழிச்சாங்கள். தம்பிய கையும் காலும் கட்டிப்போட்டு பொஞ்சாதியை வயித்த கத்தியால கிழிச்சு குழந்தையை வெளியில எடுத்துப்போட்டு சப்பாத்துக்காலால மிரிச்சுக்கொண்டிருந்தாங்க. கடைசியா தம்பிய காதுக்குள்ள வச்சு சுட்டுப் போட்டு நிர்வாணமாய்க்கிடந்த அவங்கட பொஞ்சாதியோட உடலுறவுவச்சுக் கொள்ளுற மாதிரி தம்பிடகால அவங்களின்ர உடம்பில தூக்கிப் போட்டு அவங்ககையால தம்பிய கட்டிப்பிடிக்கிறமாதிரி முகத்தோட முகம்சேரவச்சிட்டுப் போயிருந்தானுவ. அவங்களுக்குப் பக்கத்தில கொஞ்சம்தள்ளி யோகநாதன், அவங்கட அப்பா ஆறுமுகத்தோட, ஜெகநாதன், ராமையா என ஆறுபேரை ஒண்டாக சுட்டுப் போட்டிருந்தாங்கள். ஒராளின்ர நெஞ்சை கத்தியால கிழிச்சு ஈரலெல்லாத்தையும் இழுத்து வெளீல போட்டிருந்தார்கள். பிடிச்சிட்டுப்போன மற்றாக்களுக்கு என்ன நடந்த தெண்டு இண்டைக்குவரையும் யாருக்கும் தெரியாது எனத் தன் தம்பி குடும்பத்துக்கு நடந்த துயரத்தை சொல்லும்போது அவரது கண்கள் கலங்கிக் குளமாகிறது.

பிள்ளைகளையும் தனது கணவனையும் சிங்கள இராணுவத்திடம் பறிகொடுத்த கதிர்வேலு இராசம்மா என்ற மூதாட்டி தன் மனச்சுமைகளை கொட்டினாள். 83, 84ம் ஆண்டுகளிலும் மறுகா 90ம் ஆண்டிலும் மாறி மாறி ஒவ் வொரு பிள்ளையளாய் கொண்டுபோய் சுட்டுட்டாங்கள். பாவியள் பிள்ளையப் பிடிச்சிட்டு போறானுகள் எண்டுசொன்னதும், பின்னால ஓடினன். ஓடிவராத சுட்டிடுவம் என்று மிரட்டினாங்கள். வீட்டுக்குப் போ

விசாரிச்சிட்டு விட்டிடுவம் எனச் சொல்லிவிட்டு மறுபடியும துவக்கநீட்டி சுடுவம் என மிரட்டினான். கொஞ்சநேரம் நிண்டப்புறம் காம்புக்குப்போனம். போனதும் சொன்னான் இண்டைக்கு போட்டு நாளைக்கு வாருங்க என்றான். மறுநாளைக்குப் போனம் விடல்ல அடுத்தநாள் போனம். போனப்போ சொன்னாங்க உங்கட பிள்ளையள காட்டில கொண்டுபோய் விட்டிட்டம் அங்கபோய்ப் பாருங்க எண்டு சொன்னதும் பயத்தில உடன நாங்கள் போகல்ல. ரெண்டொரு நாள் கழிச்சி தேடிப்போனா காட்டில நிறைய சவங்கள் கிடக்குது. அங்கால திரும்பினா தலையை வெட்டினால் போல கிடக்குது, இங்கால திரும்பினா காலைக் கையை வெட்டினால்போல கிடக்குது. பாக்கிற இடத்திலயெல்லாம் கிடக்குது. எண்ட பிள்ளையா உன்ர பிள்ளையா என்று ஒண்டையும் அடையாளம் தெரியல்ல. எல்லாம் ஊதி உருமாறிப்போச்சு. புதைக்கவும் முடியாம அங்க நிக்கப் பயந்திட்டு அப்படியே விட்டிட்டு வந்திட்டம். அதுக்கப்புறமாயும் ஆமி விடல்ல ஓடிட்டு திரும்பவும் ஊருக்கு வந்தபோது மற்ற மகனும் குளத்துக்கு மீன்பிடிக்கப்போன மகன் ஆறுமுகநாதனையும் அங்கே பிடிச்சு வெட்டிப்போட்டிட்டான். மீன் பிடிக்கப்போனவனக் காணேல்லயெண்டு தேடிப்போனபோது அங்கேயும் கழுத்து வெட்டினபடியும் கைவெட்டினபடியும் வெட்டிப் போட்டிட்டு போயிருந்தான். இனி இங்க இருந்த எல்லாச்சவத்தையும் அடக்கம் பண்ணீட்டு வந்தம். என தனது இரு பிள்ளைகளையும் இருவேறு காலங்களில் பறிகொடுத்த இராசம்மா என்ற மூதாட்டி அழுதழுதே வேதனையைக் கொட்டித்தீர்க்க முயன்றாள்.

மாரிமுத்து கணபதிபிள்ளை என்ற வயோதிபர் (வயது 72) தன்கண் முன்னால் நடந்தமுடிந்துபோன கொடுமைகளை ஆவேசம் பொங்க எடுத்துச்சொன்னார். "என்ர மகள், மருமகன், பிள்ளைகளெல்லாரையும் ஈவிரக்கம் இல்லாமல் வெட்டிப்போட்டுப் போனாங்கள். மருமகன் ராஜரட்ணம், மகள் கிருஸ்ணவேணியும், மூண்டு ஆம்பிளப் பிள்ளையளும், ஒரு மகளுமாய் எல்லாரையுமே கொண்டிட்டானுங்கள். சின்னப் பிள்ளைகளை காலைக்கிழித்துப் போட்டிருந்தான். நாம என்ன செய்யமுடியும் எல்லாத்தையும் அள்ளிப்போட்டுக் கொழுத்திப்போட்டு ஊரைவிட்டு வெளிக்கிட்டுப்போட்டம். ஒருக்கா இரண்டு தரமெண்டாப் பறவாயில்லை, ஒவ்வொருதடவையும் வந்து ஆம்பிளைங்களில ஓரளவான
பொம்பிளையளப் பிடிச்சு கற்பழிச்சே கொல்லுவாங்க, மாறிமாறிக் கெடுகிறப்போ பெரியசத்தமா கதறுவாங்க. கொஞ்சநேரத்தில சூட்டுச்சத்தம் கேக்கும். அப்புறம் போய்ப்பாத்தா சவமாய்க்கிடப்பாங்க. 86ம் ஆண்டு ஊருக்குள்ள கொண்டுவந்து காம்பொண்டு போட்டாங்கள் போட்டாப்புறம் வீட்டில ஆம்பிள்ளையள் நிக்காம காட்டில ஓடி ஒழிச்சு வாழ்ந்து வந்தனாங்கள். அந்தநேரம் பகல்ல வராம விடியப்புறச்சாமத்தில வந்து கதவைதட்டி எழுப்புவான். ஆம்பிள ஆக்கள ஒதுக்கி ஒரு பக்கமாய் எடுப்பாங்கள், குமர்பிள்ளையள கதறக்கதற அநியாயம் பண்ணுவாங்கள். கொஞ்சப்பேர் துவக்க நீட்டிப் பிடிச்சிட்டு நிப்பாங்கள் நாங்கள் கடவுள மண்டாட வேண்டியதுதான். அவன் எல்லாம் முடிய சுட்டுப்போட்டிட்டுப்போவான். சில வேளையில விட்டிட்டுப்போவான்.

ஆம்பிள்ளையள காம்புக்கு கொண்டுபோய் அடிச்சு சித்திரவதை பண்ணுவான். பீப்பாவுக்க தண்ணி நிரப்பி அதுக்குள்ள அமுக்கிப் பிடிச்சுவச்சிருப்பான். போய் கெஞ்சி மண்டாடிக் கேட்டா நாளைக்கு வாருங்க விடுறம் எண்டு சொல்லுவாங்கள். மறுகாப் போய்க் கேட்டா நாங்கள் பிடிச்சிட்டு வரல்ல எண்டு சொல்லுவாங்கள். இனி என்ன செய்யிறது, என்ன நடந்ததெண்டு தெரியாமலே காணாமல் போயிடுவாங்க, இப்படியா புல்லுமலைக் கிராமத்தையே அழிச்சிட்டான். காட்டில ஓடி ஒழிச்சவங்கள் ஒண்டு ரெண்டு பேர் தப்பினது தான் இப்ப இருக்கிறாங்கள், என அந்த முதியவர் சொல்லி அழுதார்.

சூசைமுத்து யோசெப்
(பாக்கியராசா) என்ற முதியவரைச் சந்தித்தேன். 90ம் ஆண்டு நடந்த மிகப்பெரும் படுகொலை அவரது உள்ளத்தை பெரிதும் பாதித்திருந்தது. நடுக்கத்தோடும் பதட்டத்தோடும் அந்த நாள் நினைவுகளை சொல்லத் தொடங்கினார்.

திடீரென றக்வண்டியள், லொறியள், மெசினுகள் எல்லாத்திலேயும் வந்து ஊரை சுத்திவளைச்சாங்கள். நாங்க எல்லாரும் எல்லாப் பக்கத்தாலேயும் குழம்பி ஓடினாங்கள். படபடவெண்டு சூடு விழுந்து கொண்டிருக்கிறது. நம்மட வீட்டுக்கு மேல்பக்கத்தால முப்பத்தைஞ்சு நாப்பதுபேரை ஒண்டாய் கொண்டுபோறான். பொம்பிளையைப் பிடிச்சு கற்பழிச்சான். கண்ணால
காணமுடியாவிட்டாலும் அவங்கள் கத்திக் குழறுற சத்தம் அவங்களால தாங்கமுடியாத அவலச் சத்தமாய்த்தான் இருந்தது. காப்பாற்றவோ நிண்டு பார்க்கவோ யாரும் நிக்கல்ல. எல்லாரும் சிதறி ஓடினாங்கள். நம்மட வீட்டுக்க வந்து கோழிக்கூட்டுக்க வந்து கோழியைப் பிடிச்சாங்கள். கோழியள் வெளிக்கிட்டு ஓட, அதைத் துரத்திப் பிடிக்கிறதில நிண்டாங்கள். அந்தநேரம் பாத்து நம்மட மனிசி பிள்ளைகளையும் கூட்டிட்டு ஓடினாள், நாம ஓடினபக்கமாய் நாப்பது ஐம்பதுபேர் நம்மளோட ஓடிவந்தாங்கள். குளவெட்டை ஒண்டைத்தாண்டி காட்டுக்குள்ள போயிருந்தம். இனி ஓடமுடியவில்ல செத்தா இதுக்குள்ளேயே சாகவேண்டியதுதான் எண்டு யோசித்துக்கொண்டிருந்தோம். நம்மட பிள்ளைக்கு நல்ல இருமல் இருமிறசத்தம் ஆமிக்கு கேட்டால் வந்து எல்லாரையும் சுட்டிடுவான். யோசிச்சுக் கொண்டிருக்க ஆமி வெட்டையால வாறன். நாம இருக்கிற பக்கமாய் நேராய் வாறான்.
முன்னுக்குவாற ஆமி துவக்கை நீட்டிக்கொண்டு வந்ததைப்பாத்தா நம்மளக் கண்டிட்டு வாறமாதிரியிருந்தது. அந்த நேரம் பாத்து பிள்ளையும் இருமத்தொடங்கீட்டுது. நம்மட ஒரு பிள்ளையால எல்லாரும் சாகவேண்டிவரப்போகுது. நம்மட பிள்ளையை கழுத்தை நசுக்கிக் கொண்டிட்டா நாப்பது ஐம்பதுபேரின்ர உயிரைக்காப்பாத்திடலாம். யோசிக்க நேரமிருக்கல்ல பிள்ளேட கழுத்தப்பிடிச்சன். நம்மட மனிசி பதறிப்போய் கையைப் பிடுங்கி எடுத்திட்டு வீவாப் போத்தலுக்க கிடந்த மாவில அள்ளிப் பிள்ளேட வாய்க்குள் போட்டாள். மா வாய்க்குள்ளபோய் உதடுகள் ஒட்டிக் கொண்டதால இரும முடியாம பிள்ள அத்துளிப்பட்டது. ஆமி நாம இருக்கிற இடத்திலயிருந்து இருபது முப்பது மீற்றர் தூரத்தால போய்க்கொண்டிருந்தானுகள். நல்லவேளை அவன் காணல்ல. பொழுதுபடும்வரை இருந்தோம். வெடிச்சத்தம் எல்லாம் நிண்டாப்பிறகு ஊருக்கபோனம். ஊருக்க போனால் என்னத்தப் பாக்கிறது. பீற்றர் குடும்பமும் அவங்களோட ஓடின நாப்பது ஐம்பது பேரையும் சுட்டுப் போட்டிருந்தானுகள். பொம்பிளையள கற்பழிச்சு நிர்வாணமாய் சுட்டுப்போட்டிருந்தாங்கள். பால்குடி குழந்தைகளையெல்லாம் சுட்டு தூக்கி வீசியிருந்தாங்கள். பாக்கியநாதன் குடும்பத்து குழந்தைகள் மூண்டுபேரை கால்ரெண்டையும் இழுத்துக் கிழிச்சுப் போட்டகொடுமையைப் பாத்தா ரத்தம் கொதிக்கும் என்று சொல்லும்போது வேதனையால் அவர் தொண்டை அடைத்துக்கொண்டது.

புல்லுமலைக் கிராமத்தை முற்றாக அழித்துவிடவேண்டுமென சிங்கள இராணுவத்தினர் முடிவெடுத்திருந்தனர். இதனால் வழிபாட்டு தலங்களில் வைத்தே பலர் கைதுசெய்யப்பட்டு சுடப்பட்டனர். 1984ம் ஆண்டு புல்லுமலைப் பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாப்பூசை நடந்துகொண்டிருந்தபோது திடீரென அங்கு நுழைந்த இராணுவத்தினர் அங்கு வழிபட்டுக்கொண்டிருந்த ஆண்கள் ஒன்பது பேரை பிடித்துச்சென்று சுட்டனர். அதே ஆண்டில் மீண்டும் கோயிற் பூசகர், சுற்றியிருந்த வியாபாரிகள் எல்லோரையும் பிடித்துச்சென்றனர். இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்ததெண்டு யாருக்கும் தெரியாது. 1986ல் புல்லுமலைக் கிராமத்தில் கைதுசெய்த ஆண்கள் ஏழுபேரை சுட்டபின்னர் ஆலயத்துக்கு முன்னால ரயர் போட்டுக் கொழுத்தினார்கள். ஆண்டவன் சந்நிதியில் அநாதைகளாய் சுடப்பட்ட, எரிக்கப்பட்ட தமிழரின் மரண ஓலம் யாருடைய மனச்சாட்சிகளையும் உறுத்தாமலே மறைந்து போனது. நானூறுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு என்ன நடந்ததென்பதை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட தட்டிக்கேட்கவோ வெளியுலகத்துக்கு கொண்டு வரவோ முற்படவில்லை. சிங்கள இனத்தில் ஒரு உயிர் கொல்லப்பட்டால் உரக்கக் கத்தும் மனித உரிமையமைப்புக்கள் தமிழர் உயிர்கள் வகைதொகையின்றி பறிக்கப்பட்டபோது ஊமையாகிப்போனது ஏன்? புல்லுமலைக் கிராமத்தை கிளறிப்பார்த்தால் மனிதப்புதைகுழிகள் நிச்சயம் மலிந்துகிடக்கும். மனித உரிமையமைப்புக்கள் இதற்குத் தயாராகுமா? தயாராகினால் தமிழர் படுகொலைப்பட்டியல் பலநூற்றாண்டுகள் மறைந்து போனாலும் மட்டக்களப்பு மக்கள் மனங்களில் மாறாத வடுவாய் பதிந்திருக்கும். புல்லுமலைப் படுகொலையின் கொடிய பக்கங்களாய் இவை விரியும். 1983ம் ஆண்டு ஆடித்திங்கள் புல்லுமலைக் கிராமங்களின் பசு நிரைகள் கவர்ந்துகொல்லப்பட்டன. வியர்த்துழைத்த சொத்துக்கள் கொள்ளயிடப்பட்டன. பல நாள் உடலுழைப்பில கட்டிய வீடுகள் அனைத்தும் தீயிடப்பட்டன. சொத்துக்களை இழந்தாலும் மண்ணை இழக்கக்கூடாதென்ற உறுதியோடு எரிந்து போன சாம்பல்மேட்டில் எழுப்பிய வீடுகளை மீண்டும் 1984ம் ஆண்டு தீயிட்டுக் கொழுத்தினார்கள். 300 வீடுகள் எரிந்தபோது மக்கள் மனங்களில் எழுந்த துயரத்தீயை யாரும் அணைக்க
முற்படவில்லை.

1985ம் ஆண்டு, தைத்திங்கள், 4ம் நாள் மூன்றாவதுமுறை கிராமத்துள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த நில அளவையாளர் உட்பட ஏழுபேரைச் சுட்டுக்கொன்றதோடு மீண்டும் வீடுகள் கொழுத்தப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. சொத்துக்களை அள்ளியெடுத்து வீடுகளைக் கொழுத்தியும், எழும்பி ஓடாத எமது மக்களை கொலைசெய்து மிரட்டும் படலம் தொடங்கியது. ஒரு வாரம் கழித்து தைத்திங்கள், 10ம் நாள் கோயிற் பூசகர் உட்பட ஒன்பதுபேரை சுட்டுக்கொன்றனர்.

1986ம் ஆண்டு, கார்த்திகைத் திங்கள், 10ம் நாள் கொலை கொள்ளை, கற்பழிப்பு, தீவைப்பு என அகோர இனவெறியாட்டம் அரங்கேறியது. 103 தமிழர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டார்கள். 1987ல் குளத்தில மீன்பிடித்துக்கொண்டிருந்த 14பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பெற்றுவளர்த்த பிள்ளைகளை இழந்து கட்டிக்காத்து வளர்த்த இளம்பெண் பிள்ளைகளை கண்ணுக்கு முன்னாலேயே பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொன்ற கொடுமை சுமந்து நொந்திருந்த எமது மக்கள் 1990ம் ஆண்டு, ஆடித்திங்கள் 9ம்நாள் மீண்டும் நடந்த கொடுமையை தாங்கமுடியாது கிராமத்தைவிட்டு வெளியேறினார்கள். பால்மணம் மாறாத குழந்தைகள் கிழித்தெறியப்பட்டு குடும்பம் குடும்பமாக நாப்பதுக்கு மேற்பட்டோர் சுடப்பட்டு பாலியல் வல்லுறவின் கொடூரம் தாங்கமுடியாது இறுதிமூச்சுவரை வாய்விட்டு அழுதுமடிந்துபோன பெண்களின் உடல்கள் கீறிக்கிழிக்கப்பட்டுக் கிடந்த காட்சியைக் கண்டு திசைமாறி ஓடிய எமது மக்கள். அந்த அழகிய பூமிக்கு இன்றுவரை திரும்பவில்லை,

வெளிக்காகண்டிக்குளம், புல்லுமலைக்குளம், பனிச்சையடிக்குளம் கல்பொத்தானைக்குளம், தும்பாலஞ்சேனைக்குளம், 40 ஏக்கர்குளம் என்றெல்லாம் நீர்வளம் குன்றாத குளங்கள் நிறைந்த இப்பிரதேசத்தில் சிங்கள இராணுவத்தினரும் சிங்களக் காடையர்களும் விரட்டியடிக்கப்பட்டாலும் எமது மக்கள் வாழ்வை இழந்து புதர்மண்டிக்கிடக்கின்றது. அழிவின் சின்னங்களாய் இந்து ஆலயமும், கிறீஸ்தவ தேவாலயமும், பாடசாலையும் புதர் மூடிக்கிடக்கின்றன. 139 விதவைப் பெண்கள் வாழும் வகையின்றி ஏதிலிகளாக வாழ்கின்றனர்.

-மணலாறு விஜயன்
எரிமலை-ஆகஸ்ட் 2005

தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

சுயதரிசனம் - கவிஞர் மு. மேத்தா

சுயதரிசனம்
~~~~~~~~~~~~~

நான் சுதந்திரமானவன் என்னைக் கட்டுப்படுத்த முடியாது.

கட்டிப்போட முயன்றவர்கள் தங்கள் காயங்களுக்குக் கட்டுப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

நான் நித்தியமானவன் -என்னை அழித்துவிட முடியாது. 
அழிக்க நினைத்தவர்களின் கல்லறைப் பெட்டிகளைக் கரையான் அரித்து விட்டது.

நான் மண்ணில்தான் நிற்கிறேன்.
ஆனாலும்-வானத்தின் தோலைக் கிழித்துக் காலுக்குச் செருப்பாகப் போட்டுக் கொள்ளும் வல்லமை எனக்குண்டு!

புயல் - என் விசிறி,
பூமியை நடுநடுங்க வைக்கும் பூகம்பம் எனக்கு ஊஞ்சல் விளையாட்டு.

இடியோசை என்னைத் துயில் நீங்க வைக்கும் திருப்பள்ளி எழுச்சியின் இன்னிசை!

தோன்றிய நாள் தொட்டே பூமி அனைத்தையும் தன் தலையில் தாங்கி வருவதாகச் சொல்லப்படும் ஆதிசேடனுக்கு என் கால்நடை ஒன்றே கழுத்து வலியை உண்டாக்கிவிடும்.

என் பெருமூச்சுப் புறப்படும்போது எட்டுத் திசைகளும் இடம் மாறிப் போகின்றன.

ஒன்று திரண்ட உழைக்கும் இனத்தின் ஆற்றலுக்கு அடையாளம் நான்!

- கவிஞர் மு. மேத்தா -

சத்தியசோதனை - எரிமலை

சத்திய சோதனை
~~~~~~~~~~~~~~
போராட்டம், அதுவும் விடுதலைப் போராட்டம் எப்போதும் எளிதாக   நடந்து முடிந்ததாக  வரலாறு இல்லை. கொந்தளிப்புகள், சோதனைகள், சாதனைகள், ஏற்ற இறக்கங்களின் முடிவிலேயே விடிவின் ரேகைகள், சுதந்திர வானில் படர ஆரம்பிக் கின்றன. கொடூர அடக்குமுறை எனும் பூகம்பக்கடலை எதிர்த்தே விடுதலைப் படகு வீரத்துடனும், தாங்கொணா வேதனையின் விம்மல் வெடிப்புகளுடனும் முன்னேறுகின்றது. காலைப் போதில், ஒளிவீசும் மணிபல்லவத்தைக் கண்ணாலே காண்பதற்கும், சுதந்திரமாய் அமைந்த அப்பசுந்திடல்த் தீவில் எமது கால்களை உறுதியாகப் பதிப்பதற்கும் நாம் கடக்கவே ண்டியது அக்னிக் கடல்; உலோக ஆர்ப்பரிப்போடு, உடல்கள் வேகும் பேராழி. சொர்க்கத்தின் மீட்பு, போராளிகளின் இரத்தம் சிந்தும் போராட்டத்தினூடே நிர்ணயம் ஆகின்றது.

ஆனையிறவுப் போரில் நானுாறு போராளிகள் வரை வீரமரணத்தை வரித்துக் கொண்டார்கள் என்பது தமிழ்த் தேசத்தை உலுக்கும் சோக நிகழ்ச்சிதான். ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும், இறந்த வீரர்களுக்காக நெக்குருகி, எஃகின் உறுதி பெற வேண்டியது அவசியம். அழகிய விடுதலைக் கனவைச் சுமந்து திரிந்த எமது இளம் வீரர்களின், வீராங்கனைகளின் தியாகம் வீண்போகாது. அவர்கள் தம் தோளில் தாங்கி நடந்த இலட்சியச் சுமையானது, தேசம் முழுமையாலும் சுமக்கப்படவேண்டும். ஆனையிறவுக் கடலேரியில், கொட்டப்பட்ட எமது போராளிகளின் குருதி, நீரில் கரையாது, திரண்டு, கிழக்குக் கரையில், செஞ்சூரிய னாக உதயமாகும்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள், நிச்சயமாக தமிழீழத் தேச பக்தர்களுக்கு மனக்கிலேசத்தை அளிப்பதாக இருக்கும். இந்தியா, எமது பூரண விடுதலைக்கு தடையாக உயர்ந்து நிற்கும் இமயம் என்பது அறிவு பூர்வமாக நிறுவப்பட்டு நிதர்சனமாக வெளிப்படும் போது, அது குறித்து அகவயப்பட்ட நிலையில், சோர்ந்து போதல் ஆகாது. புறநிலை உண்மைகளை, ஆன்மீக பலத்துடன், மக்கள் எழுச்சியுடன், தார்மீக உணர்வுடன், விடுதலைச் சக்தியின் ஆளுமையுடன் எதிர்கொள்ளலே, சுதந்திர வீரர்களினதும், தேசபக்தர்களினதும் கடனாகும். தமிழ்நாட்டு மக்கள் வெள்ளம், இமயத்தை மூழ்கடிக்கும் குமரிக் கடலாக மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும். சர்வதேச அரங்கில், நடைபெற்றுவரும் தன்னாட்சிப் போராட்டங்கள், தமிழீழ விடுதலைத் தீயை மூட்டிவிடும், எங்கள் ஏக்கங்களை விரட்டி, இதயத்தைத் தடவிவிடும் தென்றலாக வீசுகின்றன. விடுதலைப் போராட்டம் வேகமாக முன்னேறி வருகின்றது. அவ்வேளையில், சோதனை களும், தடைகளும், சிக்கல்களும் தலைக்கு மேலே எழுகின்றன. விடுதலை வீரர்கள் தலையை நிமிர்த்தி அவற்றை வென்று முன்னேறும்போது, அத்தடைகள், பாலமாக அமைந்து விடுகின்றன; போராட்டம் வேகம் பெறுகின்றது; விடுதலையும் அண்மித்து விடுகின்றது. இச் சத்திய சோதனையினூடே விடுதலைப் போராட்டம் நடந்து நிறைவுறும் என்பது தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும்.

-எரிமலை இதழ்
ஆகஸ்ட் 1991 (தலையங்கம்)

Wednesday, 11 February 2026

வீரவணக்கம்! -கவிஞர் இன்குலாப்

வாழ்க்கையை 
விடுதலைப் போரினாலும், மரணத்தை 
அஞ்சாத தியாகத்தாலும் .
கடைசி வரைக்கும் 
கனப்படுத்தி, 
பூமி கனக்கப் 
புதைந்த புலிகளே!

காலத்தின் 
செவிகளில் 
உமது கர்ச்சனை.. 
யுகங்களின் நெற்றியில் 
உமது திருப்பெயர்..

நாளைய மானுடப் 
பிஞ்சு முகங்கள் -
முகர்ந்து பார்க்கும் 
ஒவ்வொரு பூவிலும் 
உங்கள் உயிரின் 
வாசம் கமழும்...

நாளைய விடியலை 
ஈழத்தில் எழுத ,
நீளும் கதிர்களில் 
நிச்சயம் உமது
உயிரின் சூடும் 
ஒன்றித்திருக்கும்.

துரோகத் 
தூசுப் படலத்தை. 
உயிரின் சுவாலையால் 
பொசுக்கிய புலிகளே! 
காலியான சயனைட் குப்பிகளும், கழன்று கிடக்கும் தோள் துப்பாக்கிகளும் ,
இன்னும் உலராத 
இளைய ரத்தமும்...

அனைத்திலும் மேலாய் 
உம் வாழ்வும், 
மரணமும், 
விடுதலை வரித்த அடையாளங்களாய் -வரலாற்று வரிகளில் 
கனத்துக் கிடக்கும்! 
ரத்த சாட்சிகளே! 
வீரவணக்கம்.🙏

கவிஞர் இன்குலாப் -

நாம் அணிவகுத்துள்ளோம் - மேதகு தேசியத்தலைவரின் கவிதை.

நாம் அணிவகுத்துள்ளோம்... -நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.
நாம் அணிவகுத்துள்ளோம் -இழந்த நமது நாட்டை மீட்க.

எதிரி எமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! 
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை. புயலெனச்சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம்.... -நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்.

அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு.

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது. -எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது. எதிரியின் குண்டுகள் வெடிக்கும்..
ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்.

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள் -எமது அணிவகுப்பு எமது தமிழ்ஈழ மக்களிடையே அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்.. -எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள். மக்களிடம் உள்ள பிரதேசம் சாதி மதமெனும் பேய்களும் அலறி ஓடுகின்றன... -எமது படையணி விரைகிறது.....
எமது தேசத்தை மீட்க.

நாம் செல்லும் இடமெல்லாம் காடுகள் கழனிகள் ஆகின்றன ,வெட்டிப் பேச்சு வீரர்கள் மிரண்டோடுகின்றனர்...

உழைப்போர் முகங்களில் உவகை தெரிகிறது, ஏழைகளின் முகங்களில் புன்னகை உதயமாகிறது.

-மேதகு தேசியத்தலைவரால் 1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அக்காலக்கட்டத்தில் புதிய தமிழ்ப்புலிகள் (டி.என்.டி) என்ற அமைப்பில் செயற்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் கட்டுப்பாடு மிக்க இராணுவ அமைப்பு ஒன்றினால் மட்டுமே தமிழீழ விடுதலை சாத்தியம் என்பதை உணர்ந்து புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பைப் புனரமைத்து, அக்காலத்தில் சிறு சிறு குழுக்களாக இயங்கி வந்த இளைஞர்களையும் சேர்த்து 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். பிரபாகரன் இயக்க உறுப்பினர்கள் பலரையும் இயக்க இலட்சியத் தின் பேரிலும், இயக்க கட்டுப்பாடுகளின் பேரிலும் உறுதி எடுக்க வைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஏற்படுத்தினார். தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கம் வர்க்க பேதமற்ற தமிழீழ சமதர்மக் குடியரசை நிறுவுதல் என்பது. அமைப்பு ரீதியாக முதன் முதல் தோற்றுவிக்கப்பட்டதும், மிகவும் கட்டுப்பாடானதும் ஆக்க பூர்வமாகச் செயல்பட்டு வருவதும் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே.
'பல நூறு ஆண்டுகளாக அந்நியரிடம் அடிமைப்பட்டு வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் மத்தியில் ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டி வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்தான். முதலில் இனத்தின் மத்தியில் இருக்கும் காட்டிக் கொடுக்கும் நிலையை ஒழித்தாக வேண்டும். அதற்கு ஆரம்பத்தில் காட்டிக் கொடுப்பவர்களை ஒழித்தாற்தான் முடியும். விடுதலை இயக்கத்தை அரும்பும் போதே சிதைத்து விட வேட்டை நாய்கள் போல செயற்பட்ட பொலீஸ் உளவுப்படை அமைப்பைச் சீர்குலைத்தாக வேண்டும். அடுத்து மிகப்பெரிய ஆயுதப்படையைக் கொண்ட எதிரியை (அரசை) ஆயுதமற்ற எண்ணிக்கையில் குறைந்த ஒரு இனம் மோதுதற்கு கெரில்லாப் போர்முறை ஒன்றினால்தான் சாத்தியம் என்பதை அண்மைக்கால உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. எதிரி மீது பரந்த அளவில் மேற்கொள்ளப்படும் திடீர் தாக்குதல்களினால் எதிரியின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு பலவீனப்படுத்தப்படும்' என்பதை எல்லாம் நன்கு சிந்தித்த பிரபாகரன் அதற்கு ஏற்றவாறு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேலைத்திட்டங் களை வகுத்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள உறுதியுமே தேவை என்று அதற்கு ஏற்றவாறு சொற்ப உறுப்பினர்களையே வைத்து இயக்கத்தைத் தொடங்கிய பிரபாகரன் தனித்தனிக் குழுக்களாக இயங்கி வந்தவர்களையும், இயக்கத்திற்கு ஆதரவாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்களையும் தானே நேரிற் சென்று சந்தித்துப் பேசி தகுதியானவர்களை இயக்கத்திற் சேர்த்துக் கொண்டார். அத்துடன் இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டு விதிகளைக் கடுமையாக்கினார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும், அர்ப்பணிப்பும், பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக் கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டு தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்தில் தோய்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெகு விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக் கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாகத் தன்னை விரைவிலேயே அமைத்துக் கொண்டது. 

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றமானது தமிழ் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கமானது இதுகாலம் வரை நடைபெற்று வந்த தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தினைப் பரந்து பட்ட மக்களின் ஆயுதப் போராட்டம் என்ற நிலைக்கு விரிவடைய வைத்தது.

கடந்த 10 ஆண்டுகளாக விட்டுக் கொடுக்காது, தொடர்ச்சியாக, தீர்க்கமாக விடுதலைப் புலிகள் நடத்திய கெரில்லாத்தாக்குதல்கள் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கணிசமான அளவு ஈழத்தமிழ் மக்களது போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றது. அரச ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மனோவுறுதியையும் கட்டுப் பாட்டையும் குலைத்து விட்ட விடுதலைப்புலி களது கெரில்லாப் போர்முறையானது சிறீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங் காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்சினையை . சர்வதேசமயப் படுத்தவும் உதவியுள்ளது

இயக்கத்தையும், இனத்தையும் காட்டிக் கொடுக்க முனைந்த இனத் துரோகிகளையும், வேட்டையாட முனைந்த பொலீஸ் உளவுப் படையையும் சின்னாபின்னமாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அடுத்த கட்டமாக சிங்கள் இராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற் கொண்டனர். ஆங்காங்கே சிங்கள இராணுவப் படைகள் மீது விடுதலைப்புலிகளின் கெரில்லாப் போராளிகள் மறைந்திருந்து தாக்கியும் நேர் நின்று போரிட்டும் பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். அந்தப் படையின் மத்தியில் பீதியும், மரணபயமும், ஒழுங்கீனமும் கட்டுப்பாடின்மையும் உருவாகின. கூலிப் பட்டாளத்துக்கே உரிய கோழைத்தனமும் தப்பியோடும் மனோபாவமும் வேரூன்றின ; பலர் இராணுவ சேவையைவிட்டே விலகியோடினர். தமிழ்ப் பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இராணுவத்தினருக்கு மேலதிக ஊதியத்தையும் விசேட வசதிகளையும் அரசு வழங்கியது. அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் இயக்கத்தைக் கட்டி எழுப்பும் பணியும், மக்களை அரசியல் மயப்படுத்தும் பணியும் தீவிர முற்றன. தமிழீழ விடுதலைப்புலிகளது அரசியல் அணியின் தொடர்ச்சியான கடின உழைப்பால் தமிழீழமெங்கும் தலை மறைவு கெரில்லாத்தளங்களை அமைப்பது விரைவிலேயே சாத்தியமானது. மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பேரறிஞர்கள் எல்லாம் இணைந்து செயற்படத் தொடங்கினர்.

மக்களுடன் வாழ்ந்து, நாளாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தாமும் முகம் கொடுத்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, தேசியப் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து உழைப்பதில் தமிழீழ விடுதலைப்புலிகள் பெரும் அக்கறை கொண்டு செயற்பட்டனர்.

காலத்துக்கும், சூழ்நிலைக்குமேற்ப தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டமானது சிங்களப் பேரினவாத அரசின் மீதும், இலங்கையின் பொருளாதாரத் தின் மீதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. தமிழீழ மண்ணில் சிங்கள ஆட்சியாளரின் நிர்வாகம் பூரணமாக நிலை குலைந்தது; அரசுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்தன; வங்கிகள் மூடப்பட்டன; பொலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன. அரச அமைப்பே முழுமையாகச் சீர்குலைந்தது. சிறீலங்கா மிக மோசமான அரசியல், சமூக நெருக்கடிகளை எதிர்நோக்கியது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சிறீலங்காவின் பொருளாதாரம் சீரழிந்தது.

சிறீலங்கா அரசுக்கு பொருளாதார உதவிகளைச் செய்து வந்த பல நாடுகள் நாட்டில் உள்ள அமைதியின்மையைச் சுட்டிக்காட்டித் தமது பொருளாதார உதவிகளை நிறுத்தின . இதனால் சிங்கள அரசு தன் பற்றாக்குறை பட்ஜெட்டுக்களை ஈடுகட்ட முடியாமலும், பொருளாதாரத் திட்டங்களை மேற்கொள்ள முடியாமலும் திண்டாடியது. 1976ம் ஆண்டு தனது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு வெறும் 36 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கிய சிறீலங்கா அரசு 1985ம் ஆண்டு 560 கோடி ரூபா ஒதுக்கியும் போதவில்லை என்று தேசிய
பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி அலறுகிறார். பொருளாதார நிலையில் சீர் கெட்டிருக்கும் சிறீலங்கா அரசு, பாதுகாப்புத் துறைக்கென 200 கோடி என்றும், 84 கோடி என்றும் பல இடைக்கால குறை நிரப்புத் தொகை பட்ஜெட்டுக்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகியது. சிறீலங்காவின் நிதி அமைச்சர் ரொனி டி மெல் கஜானா காலியாகி விட்டது என்று கைவிரிக்கின்றார்; பிச்சை கேட்டு உலக வலம் வருகிறார்.
எல்லாற்றிற்கும் மேலாக விடுதலைப்புலிகளின் இடைவிடாதத் தாக்குதல்களினால் கிலியுற்ற சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்ல மறுக்கின்றனர். இராணுவத் தினரின் பெற்றோர்கள், "தங்கள் பிள்ளைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பாதீர்கள்" என்று அத்துலத் முதலியின் அலுவலகத்தை முற்றுகையிடுகின்னர். ஆக விடுதலைப்புலிகளின் விடுதலைப்போர் சிங்கள ஆளும் வர்க்கத்தையும், சர்வாதிகார அரசினையும் ஆட்டங்காணச் செய்தது. இந்த விடுதலைப்போரை உலகுக்கு 'பயங்கரவாதம்' என்று காட்ட சிறீலங்கா அரசின் போலி நாடகம் அரங்கேறவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டம் யதார்த்த நிலையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது. 

ஆரம்பத்தில் நான்கைந்து இளைஞர்களுடன்  ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் தலைவரும் தளபதியுமான வே. பிரபாகரனின் வழி நடத்தலின் கீழ் படிப்படியாக வளர்ந்து இன்று உலக அரங்கிலே குறிப்பிடத்தக்க முக்கியமான விடுதலை இயக்கமாக வளர்ந்துள்ளது. முதலில் துரோகிகளை ஒழிப்பது, அடுத்து இயக்க வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொலீஸ் உளவுப் படையைச் சிதைப்பது. பின் பரந்த அளவில் தாக்குதலை நடத்தி சிங்கள ஆட்சியாளரின் ஆயுதப் படையையும், பொருளாதார நிலையையும் நிலைகுலைய வைப்பது என்று திட்டமிட்ட செயற்பாட்டினால்  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்தில் சிங்கள ஒடுக்குமுறை ஆட்சியாளருக் கெதிராக மாபெரும் வெற்றியை ஈட்டி வருகிறது.

தகுதி வாய்ந்த தலைவனின் (வே. பிரபாகரனின்) வழி நடத்தலாலும், இயக்க வீரர் களின் வீரமிக்க தியாக உணர்வினாலும் வெகு விரைவில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது இலட்சிய தாகமான தமிழீழத்தை மலர வைப்பார்கள் என்பது உறுதி.

-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு 

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

இலட்சிய நாயகன் செல்லக்கிளி அம்மான்.

"அம்மான்" இலட்சிய நாயகன்🔥
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செல்லக்கிளி :

அம்மான்:

சந்திரன் :
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினண்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூட தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத்தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்திலிருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக்கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான். காட்டுப் பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி, தனது வாழ்க்கையை, தான் வாழ்ந்த சூழ்நிலையை ஒரு கெரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக் கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டு குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றை கோடரியால் வெட்டிக் கொன்றான். மற்றக் கரடி கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.

ஓய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்குக் கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். ஆரம்ப காலங்களில் காடுகளில் இயக்கத்துக்கான முகாம்களை அமைக்கும் வேலை நடை பெறும்போதெல்லாம் தேவையான அமைப்புக்களைக் கொண்ட மரங்களை முகாம்களுக்குத்
தேடிக் கண்டு பிடித்து வெட்டுவது, கொட்டில் போடுவது. கூரை வேய்வது போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில்தான் நடைபெறுவது வழக்கம்.

சிறுவயதிலிருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும், பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு கொதித்த செல்லக்கிளி அவனை அண்ணனென்றும் பாராது, "அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்" என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்த வில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்துக்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக -முழுமையாக தன் உயிரையே தருகிற அளவுக்குச் செயலாற்றினான் செல்லக் கிளி. "செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்துக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரிது" இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த வார்த்தைகள்.

இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவனது பணி இயக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன் செல்லக்கிளி. முதல் முதலில் இயக்கம் உளவுப்படை போலீஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி, போலீஸ் உளவுப்படை தலைமையகத்தைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான தாக்குதல், உமையாள் புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல். பருத்தித்துறை போலீஸ் நிலையப் பொறுப் பதிகாரி மீதான தாக்குதல். கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன் தனிமுத்திரையைப் பதித்தான் செல்லக்கிளி.

பருத்தித்துறைப் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் சுட்டு விட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குண்டும் குழியுமாயிருந்த வீதிகளினூடாக 15 மைல் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்கவீரர்களை இராணுவ முற்றுகைகுட்படாது வெளிக் கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத் துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் போலீஸ் அதிகாரி பஸ்தியாம் பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.

7.4.78 அன்று அதிகாலை 5.30 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட உளவுப்படை போலீஸ் அதிகாரி பஸ்தியாம் பிள்ளை குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர். இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வேட்டைத் துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்த போலீசாரிடம் பேச்சுக் கொடுத்து தன் புத்தி சாதுரியத்தால் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகிறான் செல்லக்கிளி. போலீசார் சற்று ஏமாந்திருந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அனைவரும் ஒன்றாகப் பாய்கிறார்கள் போலீஸாரின் மேல். அடுத்த கணம் போலீஸாரிடமிருந்த சில ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைகளுக்கு மாறுகின்றன. முதன்முதலாக அன்றுதான் கையிலெடுத்த எஸ்.எம்.ஜி. செல்லக்கிளியின் கைகளில் வேகமாக இயங்குகிறது. சில நிமிடங்கள் வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன. புலிகளை வேட்டையாடவென வந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சப் இன்ஸ் பெக்டர் பேரம்பலம், சார்ஜன்ட் பால சிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்த்தனா என ஒவ் வொருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இறுதியாக போலீஸார் கொண்டு வந்த ஆயுதங்களாலேயே அவர்கள் சுடப்பட்டதுடன் அவர்கள் வந்த காரையே எடுத்துக் கொண்டு விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின்னர்தான் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினரின் முடிவு பற்றிய செய்தி வெளியே தெரிய வந்தது. செல்லக்கிளி தலைமையிலான இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியானது தமிழ்ப் போராளிகள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆபத்து வரும் வேளைகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்குக் கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக் கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை சென்றபோது செல்லக்கிளியின் வீட்டுக்கு அண்மையில் செல்லக்கிளியிடமே செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது "வாங்கோ ஐயா செல்லக் கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது, கூட்டிக் கொண்டு போய்க் காட்டுறன்" என்று தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்டரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்து விட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்டர், செல்லக்கிளி தன்னை ஏமாற்றி விட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.

தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்குக் கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி "ஆறு ஆண்டுகளாக நாம் காடுமேடு என்று அலைகிறோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?" என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந் தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்துக்குச் சென்று தேர்தலை புறக்கணிக்குமாறு வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் புறக்கணித்ததன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர்.

1983ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் நாள் வடமாகாணத்தின் மிகப்பெரிய இராணுவ முகாமான பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் வீதியில் திருநெல்வேலி என்ற இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இரண்டின்மீது செல்லக்கிளி தலைமையிலான பதினான்கு விடுதலைப் புலிகளை கொண்ட கெரில்லா அணுகி தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றது. வேகமாக முன்னால் வந்த ஜீப்வண்டி, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணி வெடி சரியான நேரத்தில் வெடித்ததால் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே வந்து விழுகிறது. அதில் வந்த சிங்கள இராணுவத்தினர் கீழே குதித்து தாம் வைத்திருந்த துப்பாக்கிகளைத் தூக்கியபடி ஓட முயல்கின்றனர். பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினர் பீதியினால் ட்ரக் வண்டிக்குள்ளேயே பதுங்குகின்றனர். விடுதலைப் புலிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் ட்ரக்கை விட்டு எழமுயன்ற இராணுவத்தினரின் உடல்களைச் சல்லடையாக்குகின்றன. தமிழீழத்தில் முதல் தடவையாக அதிக அளவு சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதைக் கண்டு உற்சாக மிகுதியினால் வெற்றிக் களிப்புடன் மறைவிடத்திலிருந்து தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியை இராணுவ வண்டியை நோக்கி இயக்கியபடியே எழுந்து நின்று சுடத் தொடங்குகிறான் செல்லக்கிளி. அதே நேரம் ஜீப் வண்டிக்குள் இருந்து சிங்களச் சிப்பாய் ஒருவன் சுட்ட குண்டு நேராகச் செல்லக்கிளியின் இதயத்தை ஊடுருவிச் செல்கிறது. சப்தமெதுவுமின்றிக் கீழே விழுகிறான் செல்லக்கிளி.

13 இராணுவத்தினரை வீழ்த்தி ஏராளமான ஆயுதங்களை எடுத்த உற்சாகத்தில் திளைத்த விடுதலைப்புலிகள் செல்லக்கிளியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்கின்றனர். முதல் வாரத்தில் இரண்டு முன்னோடி வீரர்களை இழந்த விடுதலைப்புலிகள் களத்தில் செல்லக்கிளியையும் இழந்ததால் வெற்றிக்கான எக்களிப்பு சிறிதுமின்றி சோகமே உருவாகத் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். இயக்கம் வளர்ந்து வரும் நிலையில் இயக்க முன்னோடி வீரர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவப் பயிற்சியைக் கொடுக்கும் வகையில் அந்தத் தாக்குதலுக் கான தலைமையைச் செல்லக்கிளியிடம் ஒப்படைத்துவிட்டுத் தானும் ஒரு வீரனாகத் தாக்குதலில் கலந்து கொண்ட இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு செல்லக் கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம் ! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும், அவனின் ஆற்றலைப் பற்றியும் பிரபாகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.

இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி ரவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன் பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது, இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்க முடியாத சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சுட்டுப்பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக் கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.

படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள் அவனை 'அம்மான்' என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல, விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். அவனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை. ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டமானது ஆணி வேரோடு பிடுங்கி எறியப்பட்டு ஆயுதப் போராட்ட சகாப்தம் உருவான நாள்.
23/6/1983.

-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு. 

தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

பொழில்வாய்ச்சி தோழர் செ.இளங்கோவன்.

என்னை நீ தோற்கடிக்க முடியாது !
நான் உன் போர்க்களத்திற்குள் நுழைபவனில்லை. 
உன்னை வலிந்து 
என் களத்திற்குள் இழுப்பவன் நான்.

எனைப் பார்வையாளனாகக் கருதி     நீ-பரிகசிக்கலாம்.
என் சிந்தனைகளை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பமும் உன்னிடமிருக்கலாம்.
 என் நெற்றிப்பொட்டில் 
ஒளிவீசுகிறது உன்மீதான என் வன்மம்.
என் தேசத்தின் இருப்பே உனக்கு
செரிப்பதில்லை.
என் சொற்களைச் சுமக்கும் மொழியைக் கண்டால்
நரகலைப்போல முகம் சுளிக்கிறாய் நீ!

40 சுடுகாட்டுப் பொம்மைகளை நம்பி நானில்லை என்பதில்
நீ இன்னும் எரிச்சல் கொள்கிறாய்.
என் இனிய இந்தியாவே!
எவனையும் சார்ந்திராத என் சினத்தின் உட்கூட்டில்
உனக்கு ஒரு அழகிய நிலவறை தோண்டியிருக்கிறேன்.
உனை நல்ல நேரம் பார்த்துப் புதைப்பேன்.
அப்போது 
அனிச்சையாய் நீ அலறுவாய்!
என் ஆகச்சிறந்த மொழியின் அழகான ஒரு சொல்லில்
அம்மா என்று....

தோழர் செ. இளங்கோவன்

தமிழீழத்தின் நேதாஜி

தமிழீழத்தின் நேதாஜி
~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாடு சென்று விடுதலைப்படையை அமைத்துப் போராடி வீர மரணமடைந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள். அதுபோலவே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக இலங்கையிலிருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழீழ விடுதலைக்குப் போராட ஒரு ஆயுதப்படையை அமைக்க வேண்டும் என்ற ஆவலில் செயற்பட்டு தமிழ்நாட்டிலேயே தன்னுயிரையீந்தவர் அமரர் 
"ஆ. இராசரத்தினம்" அவர்கள். அதனால் "தமிழீழத்தின் நேதாஜி" என்று ஈழத்தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்.

1956ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட தமிழர் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் சிங்கள அரசின் ஊழியனாக இருந்து கொண்டே ஈடுபாடு காட்டியவர் "இராசரத்தினம்" அவர்கள். "சிங்களம் மட்டும்" சட்டம் வந்ததைத் தொடர்ந்து தமிழ் அரசு ஊழியர்களுக்குத் தனியான மொழி வழித் தொழிற்சங்கம் அவசியம் எனக் கருதி "தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை" உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர் அவர். இலங்கை அரசியலமைப்பின் 29வது விதியின்படி சிங்களம் மட்டும் சட்டம் சட்டவலுவற்றது என்று முன்னாள் நீதியரசர் திரு. கிறெற்சர் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்ட 'கோடீஸ்வரன்' வழக்கில் தீவிர அக்கறை காட்டி உழைத்தார்.

1961ம் ஆண்டு தமிழீழமெங்கிலும் நடை பெற்ற அகிம்சை வழிப் போராட்டமான சத்தியாக்கிரகம், மறியல் போன்ற மக்கள் போராட்டங்கள் சிங்கள இனவாத அரசின் இராணுவ அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது கண்டு உள்ளம் கொதித்து, அந்தக் கசப்பான அனுபவங்களினால் அகிம்சை வழியிலேயே நம்பிக்கை இழந்தார். தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து சிங்களம் படிக்க மறுத்து அரசாங்க வேலையிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்ட திரு. இராசரத்தினம், அதன் பின்பு தமிழீழ புரட்சியாளர்களில் ஒருவராக மாறினார். எழுபதின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்து தமிழ்நாட்டுத் தலைவர்களோடும் கட்சிகளோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இராசரத்தினம் அவர்கள், 1972ல் தமிழர் கூட்டணித் தலைவர் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம்(தந்தை செல்வா) அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்க வைத்து தமிழ் நாட்டுக்கு தமிழீழப் பிரச்னையை அறிமுகம் செய்து வைப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கினார்.

1973ல் யாழ் பண்ணைப் பாலத்தில் வைத்து அன்றைய சிங்கள அரசின் கைக்கூலி அமைச்சரான குமாரசூரியர் சென்ற காரை குண்டு வைத்துத் தகர்க்க முயற்சித்தார் என்று கூறி சிங்களப் பொலீசார் இராசரத்தினத்துக்கு வலை விரித்தபோது, அந்த வலைக்குள் சிக்காமல் எப்படியோ தப்பி தமிழ்நாட்டுக்கு வந்த இராசரத்தினம் அவர்கள், தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கு ஆயுதமேந்திப் போராடக் கூடிய கட்டுப்பாடான ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டி எழுப்பும் அவாவில் தீவிரமாகச் செயற்பட்டார்.

அந்த நாட்களில் அமைப்பாளர்களில் ஒருவரான சத்தியசீலன் கைதானதைத் தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு சீர்குலைந்து உறுப்பினர்கள் பெரும் பாலானவர்கள் தலைமறைவாகி விட்ட நிலையில் தமிழகம் வந்திருந்த தலைவர் பிரபாகரனும், இராசரத்தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ் மாணவர் பேரவை சீர்குலைவிற்குப் பின் தலைமறைவானவர்கள் மீண்டும் இயங்குவதற்குத் தயங்கி நின்ற வேளையில் தமிழீழ விடுதலைக்காக ஒரு கட்டுப்பாடான விடுதலை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்த தலைவர்  பிரபாகரனுக்கு இராசரத்தினம் அவர்களின் தொடர்பு புதிய நம்பிக்கையை
அளித்தது. ஆங்கிலத்திலிருந்த பல உலக விடுதலை வரலாறுகளையும் இராணுவ அமைப்புக்குத் தேவையான பல செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தார் இராசரத்தினம் அவர்கள். அத்துடன் விடு தலைப்புலிகள் இயக்கத்தின் முன்னோடி இயக்கமான 
"புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம்" என்ற பெயர் வைக்கப்படுவதற்கும் அவரது ஆலோசனை மூல காரணமாக அமைந்தது.

-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு.
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

விடுதலைப்புலிகளின் வீரவரலாறு

1974ம் ஆண்டிலிருந்து புதிய முறையில் தமிழினத்தை அடக்கிவிடச் சிங்கள ஆட்சியாளர்கள் முன்வந்தனர். தமிழ் மக்களை சுட்டுத்தள்ளும் பொலீசாருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர் சிங்கள ஆட்சியாளர்கள். 

இதன் விளைவு 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டில் தமிழின் சுவை கேட்டுக் கொண்டிருந்த ஒன்பது தமிழர்கள் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வெறியாட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த சந்திரசேகா என்னும் சிங்கள உதவிப் பொலீஸ் அதிகாரிக்கு உடனடியாகப் பதவியுயர்வு வழங்கி அவனைப் பொலீஸ் அதிபராக்கியது சிங்கள அரசு.

1976 பெப்ரவரி 2ம் நாள் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் தொழுகை
நடத்திய ஏழு இஸ்லாமியத் தமிழர்கள், நல்லூர்க் கந்தனை வழிபட்டுவிட்டுத் திரும்பிய பரராசா, மலையகத் தமிழன் (இந்திய வம்சா வழி) சிவனு இலட்சுமணன், யாழ் வீதியில் இரண்டு தமிழர்கள், ரெயில்வண்டியில் பயணம் செய்த தமிழன், தமது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு தமிழிளைஞர்கள், கடற்கரையில் காற்று வாங்க வந்த தமிழன், கொழும்பு வேகந்தை பள்ளி வாசலில் தொழுகை நடத்திய மூவர் என ஏராளமான தமிழர்களை சிங்கள இராணுவத்தினரும், பொலிசாரும் சுட்டுக் கொன்று சிங்கள அரசின் பாராட்டையும் பதவியுயர்வையும் பெற்றதோடு தமக்குப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தமிழர்களைக் காரணமின்றிச் சுட்டுக் கொல்லும் பொலீசாரையும், இராணுவத் தினரையும் தட்டிக் கேட்க வேண்டிய ஆட்சியாளர் தட்டிக் கொடுத்துப் பதவியுயர்வு வழங்கி உற்சாகப்படுத்தினர். கடலில் வாழும் ஆமைகளைக் கொல்பவனை நீதிமன்றத்தில் நிறுத்தி ஆறு மாதம் சிறையில் தள்ளும் சிங்கள அரசு காட்டில் வாழும் விலங்குகளைச் சுடுபவனைச் சிறைக்கூடம் அனுப்பும் இலங்கை அரசு தமிழனைச் சுடுபவனைப் பாராட்டியது; பதவியுயர்வு தந்தது. ஈழத்தமிழன் உயிரை கடலாமையையும், காட்டு விலங்கையும் விடக் கீழாக மதிக்கின்றனர் இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள்.

ஆட்சியாளரின் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை கடந்த கால் நூற்றாண்டு காலமாக, சிங்கள மக்களுடன் சம உரிமையுடன் சமஷ்டி அமைப்பின் கீழ் சேர்ந்து வாழலாம் என எண்ணியிருந்த தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்த்து விட்டது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கையாண்ட ஒடுக்கு முறை இனவாதக் கொள்கைகளால் தமிழர்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார வாழ்வில் ஏற்பட்ட பாரதூரமான பாதிப்புகளே தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. படித்த தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கத் துறையில் வேலைவாய்ப்புகள் பூரணமாக நிராகரிக்கப்பட்டபோது அவர்களுக்கு இருள்மயமான எதிர்காலம் மாத்திரமே மிஞ்சிக் கிடந்தது. சிங்கள அரசாங்கத்தின் பாரபட்சமான தமிழர்களுக்கு எதிரான தரப்படுத்தல்' கல்விக் கொள்கையும், 'சிங்களம் மட்டும்' என்ற மொழிக் கொள்கையும்: தமிழ் மக்களின் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினையும், வேலைவாய்ப்பினையும் இல்லாமற் செய்துவிட்டது. மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் மோசமாகிக் கொண்டிருந்தது. பொலீசாரும்,இராணுவத்தினரும் தமிழ் இளைஞர்களைக் காரணம் இல்லாமலே கைது செய்தும், மோசமாகச் சித்திரவதைகள் செய்தும், கொன்றும் அட்டூழியங்கள் இழைத்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தமிழிளைஞர்களே அரச பயங்கரவாதத்துக்கு நேரடியாக இலக்காகி கொடூரமான, மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அனுபவித்தனர்.

தொழில் வாய்ப்புகளும் உயர்கல்வி வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட விரக்தியும் தொடர்ச்சியான பொலீஸ், இராணுவ அட்டூழியங்களால் சினமும் கொண்ட தமிழ் இளைஞர்கள் தங்களது மோச மான இந்த வாழ்க்கை நிலைமைகளைப் பூரணமாக மாற்றியமைக்க ஒரு புரட்சிகர சோஷலிசப் போராட்டத்தின் மூலமே முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டதைப் போல மோசமாகிக் கொண்டிருந்த தேசிய ஒடுக்குமுறையின் மத்தியில் தமிழ் மக்களுக்கு புரட்சிகர ஆயுதப்போராட்டம் மாத்திரமே ஒரே ஒரு தீர்வாக எஞ்சி நின்றது.

தமிழ் மாணவர் பேரவை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனவெறி பிடித்த சிங்கள அரசின் அடக்குமுறையை அகிம்சைப் போராட்டத் தினால் உடைக்க முடியாது என்பதை நன்குணர்ந்த தமிழிளைஞர்கள் 1970 'தமிழ் மாணவர் பேரவை' என்ற அமைப்பின் கீழ் சிங்கள ஆட்சியாளரை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கினர். அரசுக்கெதிராக ஊர்வலம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு என்று ஆரம்பமானது தமிழ் இளைஞர் கிளர்ச்சி. 

இந்நிலையில் 1972ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட, தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிய புதிய குடியரசு அரசியலமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு எதிராக தமிழ்ப் பகுதிகளில் பெரும் எதிர்ப்புக்கிளம்பியது. தமிழினத்தின் அடிமைச்சாசனம் போன்ற அந்த அரசியலமைப்புக்கு-தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில்-ஆதரவாக அரசியல் நிர்ணய சபையில் கையொப்பமிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழினத் துரோகிகளாகக் கணிக்கப்பட்டனர்.

தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளை அழிப்பதுதான் தமிழீழத்தை அடைவதற்கான போராட்டத்தின் முதற்படி என பல்வேறு ஊர்களிலும் தனித்தனிக் குழுக்களாகத் தமிழ் மாணவர் பேரவையினர் இயங்கினர். இவ்வாறு இயங்கியவர்களில் தீவிரமாக இயங்கிய சிவகுமாரன், சத்திய சீலன், தங்கத்துரை, திசவீரசிங்கம், பிரபாகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
புதிய தமிழ்ப் புலிகள் (T.N.T)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வாறு துரோகிகளை அழிப்பதில் ஈடுபட்ட பல இளைஞர்களின் முயற்சிகள் ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை. தமிழ் மாணவர் பேரவையில் முக்கிய பொறுப்பேற்றுச் செயற்பட்ட சத்தியசீலன் கைதானதைத் தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை இயக்க அமைப்பு சீர்குலைந்தது. பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் தலைமறைவாகினர். நாட்டில் தமிழ் மக்களின் நிலை மோசமாகிக் கொண்டு போனது. தலைமறைவானவர்களில் பலர் மீண்டும் இயங்குவதற்குத் தயங்கி நின்றனர். அந்த நிலையில் அவர்களில் வயதில் குறைவானவராக இருந்த பிரபாகரன் ஒரு சிலருடன் மீண்டும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். புதிய தமிழ்ப்புலிகள் (டி.என்.டி) என்ற பெயரில் இயக்கத்தை ஏற்படுத்திச் செயற்பட்டார். இயக்கத்துக்கு ஆதாரமாகப் பெறப்பட்ட பொதுப்பணத்தை, பொறுப்பிலிருந்த ஒரு சிலர் தவறான வழிகளில் பயன் படுத்தியதைக் கண்டு அவர்களை விலக்கி வைத்துவிட்டு தேர்ந்தெடுத்த ஒரு சில இளைஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு பிரபாகரன் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு.
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

மாவீரர் பொன் சிவகுமாரன்

மாவீரன் சிவகுமாரன்🔥
~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான உரும்பராயைச் சேர்ந்த பொன்னுத்துரை சிவகுமாரன் ஒரு சில இளைஞர்களைச் சேர்த்து சிங்கள அரசையும், தமிழ்த் துரோகிகளையும் எதிர்த்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கினார். 1971ம் ஆண்டு தமிழினத்தின் உரிமைக்குரலை நசுக்க வட பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசின் தலைமைத் தரகராக இருந்து செயற்பட்ட யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவைக் கொல்லும் முயற்சியில் இறங்கினான். அவன் வைத்த குறி தவறவில்லை. யாழ் பிரதான வீதியில் வைத்து துரையப்பாவின் காருக்குள் நேரக்கணிய வெடிகுண்டு (டைம் பாம்) வைத்தான். சக்தி வாய்ந்த அந்தக் குண்டு வெடித்த வேளையில் துரையப்பா காரில் இல்லாத காரணத்தினால் உயிர் தப்பினான். கார் சிதறிச் சின்னாபின்னமானது. அதுபோன்று சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் துணை அமைச்சராகச் செயலாற்றிய
சோமவீர சந்திர சிறியின் காருக்கும் வெடிகுண்டு வைத்தான். இந்த இரு நட வடிக்கைகளின் பேரில் பொலீசாரால் கைது செய்யப்பட்ட சிவகுமாரன் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டான். அவனது  நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் கருவிகள் எவ்வாறு அவனுக்குக் கிடைத்தது என்று பதில் சொல்லுமாறு பொலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டான். இருந்தும் அவன் தனக்கு உதவியவர்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. ஆட்சியாளரால் அவன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட முடியாத நிலையில் சிவகுமாரன் விடுதலையானான்.

விடுதலையாகி வெளியே வந்த சிவகுமாரன் தன்னை மீண்டும் விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக அர்ப்பணித்தான். தமிழினத்தை பற்றிக் கொண்டிருந்த தீண்டாமை நோயை அகற்ற அதற்கான பிரச்சாரங்களிலும் சமபந்தி போசனம் போன்ற நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டான். அவன் ஊரான உரும்பராய் என்ற இடத்திலே சாதிவெறி பிடித்த நாகலிங்கம் நடராசா என்ற பெற்றோல் நிலைய உரிமையாளன் சிறிமாவோ கட்சிக்காரன். பொலீசாருக்குத் தகவல் தருபவன். சிவகுமாரன் தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போசனம் போன்ற நடவடிக்கைகளினால் வெறி கொண்டு சிவகுமாரனும் அவனது தோழர்களும் அரசுக்கு எதிராகச் செயற்படுவது குறித்து பொலீசுக்குத் தகவல் கொடுக்கிறான்.
இது சிவகுமாரனுக்குத் தெரிய வருகிறது. போராட்டம் இடையூறின்றி நடைபெற வேண்டுமானால் துரோகி ஒழிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்து அவன் மீது குறி வைத்தான் சிவகுமாரன். சிவகுமாரனும் அவனது தோழர்களும் அந்தத் துரோகியை ஒழிப்பதற்கு எடுத்த இரண்டு முயற்சிகளிலிருந்து துரோகி நடராசா தப்பி விடுகிறான்.

அதே காலத்தில்தான் (1974 ஜனவரியில்) யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியின் போது மாநாடு பார்க்க வந்த ஒன்பது தமிழர்கள் பொலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாகக் கொல்லப்பட்டனர். இதை நேரில் பார்த்த சிவகுமாரன் அந்தப் படு கொலைக்குக் காரணமான சிங்கள பொலீஸ் அதிகாரி சந்திரசேகரவைப் பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதமேற்று இரண்டு தடவைகள் முயற்சியில் இறங்குகிறான். சிவகுமாரனுடன் கூடச்சென்ற தோழர்களின் குறைபாடுகளினால் இரண்டு தடவைகள் எடுக்கப்பட்ட முயற்சியின் போதும் சந்திரசேகரா தப்பி விட்டான். இந்நிலையில் 1974ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் நாள் கோப்பாய் என்ற இடத்தில் வைத்து பொலீசாரினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சிவகுமாரன் கையிலிருந்த துப்பாக்கியின் இறுதிக்குண்டு தீரும்வரை போராடி பொலீசாரிடம் கைதாகும் நிலை ஏற்பட்டதும் தன்னிடம் தயாராக வைத்திருந்த 'சயனைட்' விடத்தினை அருந்தி வீர மரணடைந்தான்.

சிவகுமாரன் அமைப்பு ரீதியாகச் செயற்படாமல் தன் தோழர்களின் உதவியோடு செயற்பட்டான். சிங்கள ஆட்சியாளருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி முதற்களப் பலியானான் சிவகுமாரன். அவன் எண்ணியவற்றை அவன் வாழ்நாளில் நிறைவேற்ற முடியாமற் போயிருக்கலாம். ஆனால் தனது 24 வயதிற்குள் 3 ஆண்டுகளைச் சிறைக்கூடத்தில் கழித்த அவன் தன் இலட்சியத்துக்காக இறுதிவரை போராடி மாண்டான். ஈழத் தமிழருக்காக முதன் முதலில் ஆயுதப் போரில் தன்னுயிரை அர்ப்பணித்து ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தி மறைந்தான் மாவீரன் சிவகுமாரன். அவனது போராட்ட அனுபவங்கள் பிற்கால இளைஞர்களுக்கும், இயக்கங்களுக்கும் பாடங்களாக அமைந்தன. அரசியல் தலைவர்களுக்கே அதுவரை நடைபெறாத அளவிற்கு மக்கள்  பெருந்திரளாகக்கூடி அவ்வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தமிழ்ப்பெண்களும் மாணவிகளும் நடைமுறை மரபை எல்லாம் மீறிச் சுடுகாடு வரை சென்று அவ்வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பு :
2.7.76 அன்று, விடுதலை வீரன் சிவ குமாரன் சாதி ஒழிப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்டு பொறுக்க முடியாது சாதி வெறி பிடித்து - அவனை வன்முறையாள னென சிங்கள அரசுக்குக் காட்டிக் கொடுத்ததுடன், தொடர்ந்தும் விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த தமிழ் இளைஞர்களைப் போலீ சாருக்குக் காட்டிக் கொடுத்து வந்த உரும்பராயைச் சேர்ந்த பெற்றோல் நிலைய அதிபர் நாகலிங்கம் நடராசாவை விடுதலைப் புலிகள் குண்டு வீசிக் கொன்றனர்.

-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு.

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

தமிழீழ இணக்க மன்று

தமிழீழப் பகுதியில் பல வருடங்களாக நடந்த போரினால் சட்டம், ஒழுங்கு முறையாகப் பேணப்படவில்லை. சட்டம், ஒழுங்கு ஓரளவு முறையாகப் பேண அமைக்கப்பட்டவைகளே தமிழீழ இணக்கமன்றுகள் ஆகும். 
இந்த இணக்க மன்றுகள் மூலம் மக்கள் பெருமளவில் பயனடைந்தார்கள்.

1. அந்தந்த ஊரில் வாழ்ந்து வருபவர்களும், நிலைமையை முழுமையாக நன்கறிந்தவர்களும். மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களுமே மன்றில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

அதனால் பிணக்குகளை அவர்கள் எளிதில் விளங்கி,குறுகிய காலத்தில் நீதி வழங்கினார்கள்.

2. பெருமளவில் பணத்தைச் செலவழித்து,நேரத்தைச் செலவழித்து, அரச நீதிமன்றம் சென்று  பிணக்குகளுக்குத் தீர்வு காணவேண்டிய தேவைகள் இருக்கவில்லை."

3. பணமுள்ளவர்களால் தமக்கேற்ற முறையில் வழக்குகளின் தீர்ப்புகளை மாற்றமுடியாதிருந்தது.

4. சாதாரண ஏழைகள், ஒருகாலத்தில் பணமின்றி நீதிமன்றம் செல்லமுடியா  திருந்தவர்கள், பணப் பலம் கொண்டோரால் ஒடுக்கப்பட்டவர்கள். எல்லோரும் இவ் இணக்க மன்றுகள் மூலம் பெரும் பயனடைந்தார்கள்.

5. ஒவ்வொரு ஊர்மக்களும் பிணக்குகளைத் தமக்குள்ளே பேசித் தீர்த்துக் கொள்ளும் அளவிற்குப் பக்குவம் பெற்றுள்ளார்கள்.

எனவே, இம் மன்றுகள் மக்களுக்குப் பணச்செலவு அதிக 'மின்றி காலதாமதமின்றி, குறுகிய காலத்தில் எந்தச் சிக்கல்களையும், தீர்த்துவைத்து நீதித்துறையில் பெரும்பங்காற்றி வருகின்றன.

இம்மன்றுகள் அனைத்துமே நேர்மையாக, ஒழுங்காக நடப்பதை மேற்பார்வை செய்ய வேண்டியது அவ்வூர் மக்களின் கடமையாகும்.

இது உங்கள் இணக்க மன்று. இதனைச் சிறப்பாகச் செயற்படச் செய்வது உங்கள் பொறுப்பு. 

இம் மன்றுகள் சிறப்பாகச் செயற்படுவதற்குத் தமிழீழ
விடுதலைப் புலிகள் முழு ஒத் துழைப்பையும் ஆதரவையும் வழங்குவார்கள்.

1. சிற்றூர் இணக்க மன்று
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமைப்பும் அதிகாரமும்

1. வசதிக்கேற்றபடி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றூர் அவைப்பிரிவுகள் தோறும் ஒவ்வொரு சிற்றூர் இணக்க மன்று அமைக்கப்பட்டு இயங்கும்.

2. தமிழீழ மக்களின் தேசவழமைச்சட்டம், உரோமன் டச் சட்டம், முஸ்லீம் மக்கள் தொடர்பான சட்டங்கள், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், மனிதாபிமான அடிப்படையிலும், சமுதாய நீதிகளை அடிப்படையாகக் கொண்டும் பிணக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்வு காணப்படல் வேண்டும்.

3. முறைப்பாடு தாக்கல் செய்யப்படுவதற்குக் கட் டணமாக ரூபா 25/-அறவிடப்படும். முறைப் பாட்டாளர் வறுமைக் கோட்டுக்குட்பட்ட நபரென இணக்க மன்று தீர்மானிக்கின்ற போது, இக்கட்டணம் ரூபா 10/- ஆகக் குறைக்கப்படும். முறைப் பாட்டுப் படிவத்தில் பிணக்கைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் எழுதி, செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்.

4.குறித்த சிற்றூர் அவை எல்லைக்குள் நிரந்தரமாய் வசிக்கும் 18 வயதுக்குமேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டமொன்றில் இணக்கமன்று உறுப்பினர் களாக, பொது மக்களால் (5)ஐந்து பேரும், தமிழீழ விடுதலைப்புலிகளால் (5) ஐந்துபேருமாக மொத்தம் (10) பத்துப்பேர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இவர்களுக்கு எதிராக யாரும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், இரகசியமான முறையில் தெரிவிக்கலாம். ஆட்சேபனை உண்மையானதெனக் காணப்படின், வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார், இதன்பின் கூட்டப்படும் கூட்டத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல்(7) ஏழுபேர் இணக்கமன்று உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர். மிகுதி (3) மூவர் மேலதிக உறுப்பினர்களாக இருப் பார்கள். வாக்கெடுப்பின் பின்னர் எழுப்பப்படும் ஆட்சேபனைகள் நிராகரிக்கப் படும். இணக்கமன்று உறுப்பினர்களில் யாராவது, வராமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது விலகும்போது, மேலதிக உறுப்பினர்களில் இருந்து அவ் வெற்றிடத்துக்கு இணக்க மன்றுப் பொறுப்பாளரின் உதவியுடன் உறுப்பினர் நிய மிக்கப்படுவார்.

5.உறுப்பினர்கள் அனைவரும் சமமான அதிகாரத்தைக் கொண்டிருப்பர். இவர்கள் தமக்குள் ஒரு செயலாளரையும் துணைச் செயலாளரையும், பொருளாளரையும் தெரிவு செய்து கொள்ளவேண்டும்.

இணக்க மன்றுகளுக்கு வட்டரீதியாக பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுவார். இவர் இணக்கமன்றுகளை மேற்பார்வை செய்வார். ஆயினும் விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கமாட்டார்.

6.கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற புலன் விசாரணைக்குரிய பிணக் குகளை இணக்கமன்றின் விசாரணைக்கு எடுத்தல், தவிர்க்கப்படல் வேண்டும். ஆனால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சண்டை போன்ற நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு உறுப்பினர்கள் உடன் சென்று, பார்வையிட்டு, தமது அறிக்கையை இணக்க மன்றுப் பொறுப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவ்விடத்தில்விசாரணை செய்யமுடியாது.

7. பிணக்குகளுக்கு இணக்கம் அல்லது தீர்ப்பு வழங்கும் போது அபராதமோ, நட்ட ஈடோ, தண்டனையோ வழங்க இணக்க மன்றுக்கு அதிகாரமுண்டு.

8. விசாரணைக்குத் தொடர்ந்து அறிவித்தல் தராமலும், தகுந்த காரணமின்றியும், (2) இரண்டு தவணைக்கு வரத் தவறும் முறையீட்டாளரின் முறைப்பாடு தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அதேபோல குற்றம் சாட்டப்பட்ட வரும், சாட்சிக்காரரும், தொடர்ந்து (3) மூன்று தவணைக்குத் தகுந்தகாரணமின்றி வரத் தவறும் பட்சத்தில் அது பற்றி இணக்கமன்றுப் பொறுப்பாளருக்கு அறிவித்தல் வேண்டும்.

9. இணக்க மன்றில், இரு பகுதியினரும்  ஒருமித்து இணக்கம் செய்து கொண்ட சமாதானத்தீர்வை உதாசீனம் செய்ய முடியாது.

10.ஓர் இணக்க மன்றின் எல்லைக்குள் வசிக்கும் மக்கள் அப்பகுதி இணக்க மன்றில் மட்டுமே முறைப் பாட்டைத் தாக்கல் செய்ய முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது இணக்க மன்றின் எல்லைக்கு அப்பால் வசிப்பவராயின், அவர் வதியும் பகுதியிலுள்ள இணக்க மன்றுக்கு முறைப்பாடு செய்ய முடியும். பெண்களுக்கு எதிரான குடும்பப் பிணக்குகள் சம்பந்தமான முறைப்பாடுகள் குறித்த பெண் வசிக்கும் எல்லைக்குள் உள்ள இணக்க மன்றிலேயே தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்துடன் காணி தொடர்பான பிணக்குகளும், குறித்த பிணக்கில் சம்பந்தப்பட்ட காணி அமைந்துள்ள சிற்றூர் இணக்கமன்றிலேயே தாக்கல் செய்யப்பட வேண்டும். 

11. இணக்க மன்றின் எல்லைக்கு வெளியே வசிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கான அல்லது சாட்சிக்காரருக்கான அழைப்பாணையை அப்பகுதி இணக்க மன்றுக்கு ஊடாக அனுப்பலாம்.

12. இணக்க மன்று மண்டபத்தில் அமரும் எவரும் மது அருந்திய நிலையில் வருவதோ, அல்லது புகைத்தலோ, அல்லது தேவையற்ற வார்த்தைகள் பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது.

13. எந்த விதத்திலும்
இணக்கம் காண இயலாத பிணக்குகளை இணக்க மன்றுனர் நன்கு அலசி ஆராய்ந்தபின் தமது அறிக்கையை மன்றப் பொறுப்பாளருக்கு வழங்கமுடியும். ஆனால், எவ்விதத்திலும் தமது முடிவைக் குறித்த பகுதியினர் ஏற்கும்படி வற்புறுத்த முடியாது.

2. மேன் முறையீட்டு இணக்க மன்று
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமைப்பும் அதிகாரமும்

1. வசதிக்கேற்றபடி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வட்ட அவைப்பிரிவுகள் தோறும் ஒவ்வொரு மேல் முறையீட்டு இணக்கமன்று அமைக்கப்பட்டு இயங்கும்.

2. முறையீட்டு இணக்க மன்று விசாரணைக் குழுவில் ( 5 ) ஐந்து பேர் அங்கம் வகிப்பர். இவர்களில் (2) இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுவர். (3) மூன்று பேர் சிற்றூர் இணக்கமன்று உறுப்பினர்களிடையே தேர்தல் மூலம் நியமிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் சமமான அதிகாரத்தைக் கொண்டிருப்பர். அத்துடன் ஒரு செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தெரிவு செய்து கொள்வர். வெற்றிடமான உறுப்பினர் ஒருவரின் இடத்துக்கு ஒருவர் இணக்க மன்றுப் பொறுப்பாளரின் உதவியுடன் நியமிக்கப்படுவார்.

3. அவ்வப்பகுதி வட்ட அவைப் பிரிவுக்குட்பட்ட சிற்றூர் இணக்கமன்றுகளின் தீர்ப்புகளுக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்படும். பிணக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க மேன் முறையீட்டு இணக்கமன்றுக்கு அதிகாரமுண்டு.

4. சிற்றூர் இணக்க மன்றுகளின் தீர்ப்புக்கெதிராக மேன் முறையீடு செய்ய விரும்புபவர்கள் தீர்ப்பு வழங்கி, 14 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்தல் வேண்டும்.

5. மேன் முறையீடு தாக்கல் செய்வதற்குக் கட்டணமாக ரூபா, 100/- (நூறு) அறவிடப்படும். ஆனால், மேன் முறையீடு செய்பவர் வறுமைக்கோட்டுக்குட்பட்ட நபரென விசாரணை மன்று தீர்மானித்தால்  இக் கட்டணம் ரூபா, 50/-(ஐம்பது) ஆகக் குறைக்கப்பட வேண்டும்.

6. இணக்க மன்றுத் தீர்ப்புக் கெதிராக மேன்முறையீடு செய்ய விரும்புபவர், குறித்த பிணக்கை விசாரித்த சிற்றூர் இணக்க மன்றுச் செயலாளரிடம் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தைபெறலாம்.அப் படிவத்தில் பிணக்கு விபரத்தையும், மேன் முறை யீடு செய்வதற்கான காரணத்தையும் சுருக்கமாகக் குறிப்பிட்டு அதற்குரிய கட்டணத்தையும் மேன் முறையீட்டு விண்ணப்பப் படிவத்தையும், மேன் முறையீட்டு இணக்க மன்றுச் செயலாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும். அவர் குறித்த பிணக்குத் தொடர்பான கோவைகளையும், ஆவணங்களையும் சிற்றூர் அவை இணக்கமன்றுச் செயலாளரிடம் பெற்று விசாரணைக்கான ஒழுங்கு களைச் செய்ய வேண்டும்.

3. விசாரணை முறைகளும் நடைமுறைகளும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. விசாரணை மண்டபத்தில் ஒழுங்கும் அமைதியும் பேணப்படல் வேண்டும்.

2. ஒவ்வொரு பிணக்கும்' இணக்க மன்றில் (5) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவாலும், மேன் முறையீட்டுமன்றில் (3) உறுப்பினர்களைக் கொண்ட குழுவாலும் விசாரிக்கப்படல் வேண்டும்.

3. குறித்த பிணக்குக்கும் விசாரணைக்குழு உறுப்பி னருக்கும் தொடர்பு இருப்பின் குறித்த உறுப்பினர் அவ்விசாரணையிலிருந்து பூரணமாக ஒதுங்கி இருக்கவேண்டும்.

4. விசாரணையின் போது கடும் வார்த்தைப் பிரயோகமோ, துன்புறுத்தலோ, மிரட்டலோ மேற்கொள்ளப்படலாகாது.

5.விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மன்று உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகக் கலந்தாலோசித்துக் குறித்த இருபகுதியினரும் இணங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

6. உணர்வுடன் கூடிய குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை செய்யும்போது அவதானமாக இருந்து, இரு தரப்பினரையும் இணங்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

7. குடும்பம் தொடர்பான பிணக்குகளை விசாரிக்கும் போது முறையீட்டாளர் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்கும் சந்தர்ப்பத்தில், பார்வையாளர் அனைவரும் விசாரணை மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்படவேண்டும். ஒரு பெண்ணை விசாரிக்கும் போது இன்னுமொரு பெண் அவருக்குப் பக்கத்தில் அல்லது பார்க்கக்கூடிய தூரத்தில் இருக்க வேண்டும்.

8. அரச நீதிமன்றுகளில் ஏற் கனவே தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்குகளைக் குறித்த இரு பகுதியினரது எழுத்து மூலமான ஒப்புதலின்றி விசாரணை செய்தல் தடை செய்யப் பட்டுள்ளது.

9. விசாரணைக்கு வரமுடியாத உறுப்பினர்கள் அது பற்றி விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னறிவித்தல் கொடுத்தல் வேண்டும்.

10. இணக்கமன்று உறுப்பினர் ஒருவர் குறித்த விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டுமென கருதும் எவரும் அதுபற்றி விசாரணை தொடங்கு முன்பு இணக்கமன்றுப் பொறுப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வேண்டும்.

4. விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. விசாரணையின் போது புகைத்தல், மதுபானம் அருந்திய நிலையில் இருத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

2.விசாரணைமன்று உறுப்பினர் எவரும் தனிப்பட்ட முறையில் எந்தவொரு சாட்சியையும் விசாரிப்பதோ, அல்லது வேறு இடங்களில் விசாரிப்பதோ,கூடாது.

3. விசாரணை சம்பந்தமாக உறுப்பினர்கள் அன்பளிப்போ நன்கொடையோ பெற்றுக் கொள்வது கூடாது.

4. எந்தவொரு பிணக்கிலும் சொந்தம், பந்தம் ஆகிய தொடர்புகளை களைத்து நடுநிலைநின்று, குறித்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கை தீர்த்து இணக்கம் காணவேண்டும்.

5. இரு பகுதியினருக்கு மிடையே ஏற்பட்டுள்ள பிணக்கைத் தீர்த்து இணக்கம் காண வேண்டும். இரு பகுதியினருக்கிடை யே இணக்கம் காணப்பட்ட தீர்வை நிறைவேற்றுவதில் இடையூறு ஏற்படின் அது பற்றி இணக்கமன்று பொறுப்பாளருக்கு அறிவித்தல் வேண்டும்.

6. இணக்கமன்று உறுப்பினர்கள் மாதம் ஒரு தடவை ஒன்றுகூடி இணக்கமன்றுக் கூட்ட அறிக்கைகளையும், கணக்கு அறிக்கைகளையும், இணக்க மன்றுப்பொறுப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

7. இணக்க மன்றில் உள்ள உறுப்பினர்கள் எவரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அல்லது உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகளை மீறியதாகக் காணப்படின். அவர் உடனடியாக இணக்கமன்றிலிருந்து வெளியேற்றப்படுவார்.

5. இணக்கமன்றுகளுக்கு பொதுமக்களிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்குரிய தகைமைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. குறித்த சிற்றூர் அவைப் பிரிவுகளில் நிரந்தரமாக வசிப்பவராயும், (30) முப்பது வயதுக்கு மேற்பட்டவராயும், நன்நடத்தையும் ஒழுக்கமும், சமூகத்தில் நன்மதிப்புப்பெற்ற வராயும், அனுபவம் வாய்ந்தவராயும் இருத்தல் வேண்டும்.

2. மோசடி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து வியாபாரம் போன்ற சமூக விரோதச்செயல்களில் ஈடுபடாதவராக இருத்தல் வேண்டும். 
அத்துடன் கடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF), 
ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF),
 தமிழீழ விடுதலை இயக்கம் (TELO),
 தமிழீழமக்கள் விடுதலைக் கழகம் (PLOT),
போன்ற துரோக இயக்கங்களில் உறுப்பினராக இருந்த துரோகிகளுக்கும், தமிழீழ மக்களின் புனிதப் போருக்கு விரோதியாகச் செயற்பட்ட சமூக விரோதக் கும்பல்களுக்கும், காட்டிக்கொடுத்த கயவர் களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தந்த அடி வருடிகளுக்கும். இவ் இணக்கமன்றுகளில் உறுப் பினராக இருக்க அருகதை இல்லை.

6. செயலாளர் கடமைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. முறைப்பாட்டுப் படிவத்தை வழங்குதலும், பதிவுகளைப் பேணலும்.

2. பிணக்குகளுடன் தொடர் பானவர்களுக்கு, அழைப் பாணைகளை விசாரணை தினத்துக்கு (7) ஏழுநாட்களுக்கு முன்பு  அனுப்பிவைத்தல். 

3. விசாரணைக் குழுக் கூட்டத்தை ஒழுங்கு செய்தல்.

4. மன்றின் அறிக்கைகளை யும்,தீர்வுகளையும், மறு உறுப்பினர்களுடன் இணைந்து தயாரித்தல்.

5. இணக்கமன்றுப் பொறுப்பாளருடன் இணக்கமன்று விடயம் தொடர்பாக தொடர்பு கொள்ளல்.

6.விசாரணை நடைபெறும் தினத்தின் நிகழ்வு, அறிக்கையை தயாரித்து இணக்க மன்றின்பொறுப்பாளர் ஊடாக வட்ட அவைப்பிரிவுப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைத்தல்.

7. பொருளாளரின் கடமைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. வரவு செலவுப் பதிவேடு களைப் பேணுதலும், பற்றுச் சீட்டு வழங்குதலும்.

2. வரவு செலவுக் கணக்கு தயாரித்தல்

3. மாதாந்த வரவு செலவுக் கணக்கு அறிக்கைகளை இணக்கமன்றின் பொறுப்பாளர் ஊடாக வட்ட அவைப்பிரிவுப் பொறுப்பாளருக்கு அனுப்பி வைத்தல் என்பன.

தமிழீழ தனி அரசு மக்கள்நலன் சார்ந்து மக்களுக்கான தீர்வுகளை அவர்களைக் கொண்டே நீதி பரிபாலனமுறையை  வழங்கிய, உலகத்திலேயே அதை நடைமுறையில் நடத்திக்காட்டிய பெருமை கொண்ட ஒரே நாடு என்பதில் என்ன வேற்று கருத்து இருக்க முடியும்.

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்