தமிழீழத்தின் நேதாஜி
~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாடு சென்று விடுதலைப்படையை அமைத்துப் போராடி வீர மரணமடைந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள். அதுபோலவே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக இலங்கையிலிருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழீழ விடுதலைக்குப் போராட ஒரு ஆயுதப்படையை அமைக்க வேண்டும் என்ற ஆவலில் செயற்பட்டு தமிழ்நாட்டிலேயே தன்னுயிரையீந்தவர் அமரர்
"ஆ. இராசரத்தினம்" அவர்கள். அதனால் "தமிழீழத்தின் நேதாஜி" என்று ஈழத்தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்.
1956ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட தமிழர் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் சிங்கள அரசின் ஊழியனாக இருந்து கொண்டே ஈடுபாடு காட்டியவர் "இராசரத்தினம்" அவர்கள். "சிங்களம் மட்டும்" சட்டம் வந்ததைத் தொடர்ந்து தமிழ் அரசு ஊழியர்களுக்குத் தனியான மொழி வழித் தொழிற்சங்கம் அவசியம் எனக் கருதி "தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை" உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர் அவர். இலங்கை அரசியலமைப்பின் 29வது விதியின்படி சிங்களம் மட்டும் சட்டம் சட்டவலுவற்றது என்று முன்னாள் நீதியரசர் திரு. கிறெற்சர் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்ட 'கோடீஸ்வரன்' வழக்கில் தீவிர அக்கறை காட்டி உழைத்தார்.
1961ம் ஆண்டு தமிழீழமெங்கிலும் நடை பெற்ற அகிம்சை வழிப் போராட்டமான சத்தியாக்கிரகம், மறியல் போன்ற மக்கள் போராட்டங்கள் சிங்கள இனவாத அரசின் இராணுவ அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது கண்டு உள்ளம் கொதித்து, அந்தக் கசப்பான அனுபவங்களினால் அகிம்சை வழியிலேயே நம்பிக்கை இழந்தார். தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து சிங்களம் படிக்க மறுத்து அரசாங்க வேலையிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்ட திரு. இராசரத்தினம், அதன் பின்பு தமிழீழ புரட்சியாளர்களில் ஒருவராக மாறினார். எழுபதின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்து தமிழ்நாட்டுத் தலைவர்களோடும் கட்சிகளோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இராசரத்தினம் அவர்கள், 1972ல் தமிழர் கூட்டணித் தலைவர் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம்(தந்தை செல்வா) அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்க வைத்து தமிழ் நாட்டுக்கு தமிழீழப் பிரச்னையை அறிமுகம் செய்து வைப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கினார்.
1973ல் யாழ் பண்ணைப் பாலத்தில் வைத்து அன்றைய சிங்கள அரசின் கைக்கூலி அமைச்சரான குமாரசூரியர் சென்ற காரை குண்டு வைத்துத் தகர்க்க முயற்சித்தார் என்று கூறி சிங்களப் பொலீசார் இராசரத்தினத்துக்கு வலை விரித்தபோது, அந்த வலைக்குள் சிக்காமல் எப்படியோ தப்பி தமிழ்நாட்டுக்கு வந்த இராசரத்தினம் அவர்கள், தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கு ஆயுதமேந்திப் போராடக் கூடிய கட்டுப்பாடான ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டி எழுப்பும் அவாவில் தீவிரமாகச் செயற்பட்டார்.
அந்த நாட்களில் அமைப்பாளர்களில் ஒருவரான சத்தியசீலன் கைதானதைத் தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு சீர்குலைந்து உறுப்பினர்கள் பெரும் பாலானவர்கள் தலைமறைவாகி விட்ட நிலையில் தமிழகம் வந்திருந்த தலைவர் பிரபாகரனும், இராசரத்தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ் மாணவர் பேரவை சீர்குலைவிற்குப் பின் தலைமறைவானவர்கள் மீண்டும் இயங்குவதற்குத் தயங்கி நின்ற வேளையில் தமிழீழ விடுதலைக்காக ஒரு கட்டுப்பாடான விடுதலை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்த தலைவர் பிரபாகரனுக்கு இராசரத்தினம் அவர்களின் தொடர்பு புதிய நம்பிக்கையை
அளித்தது. ஆங்கிலத்திலிருந்த பல உலக விடுதலை வரலாறுகளையும் இராணுவ அமைப்புக்குத் தேவையான பல செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தார் இராசரத்தினம் அவர்கள். அத்துடன் விடு தலைப்புலிகள் இயக்கத்தின் முன்னோடி இயக்கமான
"புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம்" என்ற பெயர் வைக்கப்படுவதற்கும் அவரது ஆலோசனை மூல காரணமாக அமைந்தது.
-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு.
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
No comments:
Post a Comment