Thursday, 12 February 2026

மௌனப்புதைக்குழிக்குள் புல்லுமலைப் படுகொலை.

பாலென்றால் பாலும், தேனென்றால் தேனும், நெல்லென்றால் நெல்லும் விரும்பியநேரம் விரும்பிய அளவினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வளம்மிகு கிராமம் புல்லுமலை. பலா, மா, வாழையென முக்கனியும் சொரிந்துகிடக்கும் தமிழ்ப்பூமி மலைநாட்டின் சாயலை ஒத்த இப்பிரதேசம் பார்ப்பவர் மனதை சுண்டியிழுத்துவிடும் அழகுடையது.

பல நூற்றாண்டுகளாய் தமிழர் வாழ்ந்த இப்பூமி இன்று புதர்மண்டிக்கிடக்கிறது. மண்ணைக்கிளறக்கிளற செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் இப்பிரதேசத்தை சிங்களக் குடியேற்றத்தினால் அபகரித்துவிட சிங்களதேசம் அவ்வப்போது முயன்றது. 1983ம் ஆண்டு தொடங்கி 1990ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு ஐந்துக்கு மேற்பட்ட தடவைகள் சிங்கள இராணுவத்தினரும் சிங்களக் காடையர் கும்பலும் இணைந்து இக்கிராமத்தை அழித்துவிடும் படுகொலைகளில் இறங்கினர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொடூரக்கொலைகள் நடந்தன. வாய்திறந்து சொல்லமுடியாத பாலியல் கொடுமைகள் கொலையுடன் நிகழ்ந்தன. நாநூறுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் புதையுண்டுபோனது.

ஒவ்வொரு தடவையும் ஓடி ஒழிந்து தப்பிக்கொண்ட ஒருசிலர் மட்டுமே இன்று உறுகாமம், கித்துள், மரப்பாலம், சின்னப்புல்லுமனை ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வின் முழுமையை தொட்டு நிற்கும் இவர்களும் இறந்துவிட்டால் புல்லுமலைப் படுகொலைகளின் உண்மைகளும் மறைந்து புதைந்துவிடும். அந்த முதுமைகளின் உள்ளத்தில் உறைந்துகிடந்த ஒரு பகுதியை கிளறியபோது உள்ளங்கொதிக்கும் உண்மைகள் வெளிவந்தன.

உறுகாமத்தில் இடம்பெயர்ந்து வாழும் சூசைமுத்து தம்பிமுத்து(அந்தோனி) என்பவரைச் சந்தித்தேன். அவரது தம்பியான செல்லத்தம்பி
பேரின்பராசாவையும் அவரது மனைவியையும் இழந்துபோன நாளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்.

1983ம் ஆண்டு சிங்கள ஆமியும், சிங்களக் காடையனுகளும் சேந்துவந்து நம்மட தமிழாக்களின்ற வீடுகள் எல்லாத்தையும் கொழுத்தினாங்கள். வீடுகளுக்க இருந்த நம்மட சொத்துக்கள் எல்லாத்தையும் வாகனங்களைக் கொண்டுவந்து ஏத்திக்கொண்டு போயித்தாங்கள். நாப்பது நாப்பத்தைந்து வீடுகளைக் கொழுத்தினாங்கள். எல்லோரும் பயத்தில் ஓடி சேனைப்பக்கம் போயிருந்திட்டாங்கள். நாங்களும் மூங்கில் மலையில இருக்கிற நம்மட சேனையில ஓடிப்போயிருந்தம் மறுகா மூங்கில் மலைக்கு வந்த சிங்கள ஆமி சேனையில இருந்த எல்லாரையும் சுத்திவளைச்சுப் பிடிச்சுட்டுப் போனான். அதில நம்மட தம்பியும் பெஞ்சாதியும் பட்டிட்டாங்கள். தம்பிட பொஞ்சாதி கர்ப்பிணியா இருந்தாங்கள் அவங்கள் தம்பிக்கு முன்னால வச்சே மாறிமாறி கற்பழிச்சாங்கள். தம்பிய கையும் காலும் கட்டிப்போட்டு பொஞ்சாதியை வயித்த கத்தியால கிழிச்சு குழந்தையை வெளியில எடுத்துப்போட்டு சப்பாத்துக்காலால மிரிச்சுக்கொண்டிருந்தாங்க. கடைசியா தம்பிய காதுக்குள்ள வச்சு சுட்டுப் போட்டு நிர்வாணமாய்க்கிடந்த அவங்கட பொஞ்சாதியோட உடலுறவுவச்சுக் கொள்ளுற மாதிரி தம்பிடகால அவங்களின்ர உடம்பில தூக்கிப் போட்டு அவங்ககையால தம்பிய கட்டிப்பிடிக்கிறமாதிரி முகத்தோட முகம்சேரவச்சிட்டுப் போயிருந்தானுவ. அவங்களுக்குப் பக்கத்தில கொஞ்சம்தள்ளி யோகநாதன், அவங்கட அப்பா ஆறுமுகத்தோட, ஜெகநாதன், ராமையா என ஆறுபேரை ஒண்டாக சுட்டுப் போட்டிருந்தாங்கள். ஒராளின்ர நெஞ்சை கத்தியால கிழிச்சு ஈரலெல்லாத்தையும் இழுத்து வெளீல போட்டிருந்தார்கள். பிடிச்சிட்டுப்போன மற்றாக்களுக்கு என்ன நடந்த தெண்டு இண்டைக்குவரையும் யாருக்கும் தெரியாது எனத் தன் தம்பி குடும்பத்துக்கு நடந்த துயரத்தை சொல்லும்போது அவரது கண்கள் கலங்கிக் குளமாகிறது.

பிள்ளைகளையும் தனது கணவனையும் சிங்கள இராணுவத்திடம் பறிகொடுத்த கதிர்வேலு இராசம்மா என்ற மூதாட்டி தன் மனச்சுமைகளை கொட்டினாள். 83, 84ம் ஆண்டுகளிலும் மறுகா 90ம் ஆண்டிலும் மாறி மாறி ஒவ் வொரு பிள்ளையளாய் கொண்டுபோய் சுட்டுட்டாங்கள். பாவியள் பிள்ளையப் பிடிச்சிட்டு போறானுகள் எண்டுசொன்னதும், பின்னால ஓடினன். ஓடிவராத சுட்டிடுவம் என்று மிரட்டினாங்கள். வீட்டுக்குப் போ

விசாரிச்சிட்டு விட்டிடுவம் எனச் சொல்லிவிட்டு மறுபடியும துவக்கநீட்டி சுடுவம் என மிரட்டினான். கொஞ்சநேரம் நிண்டப்புறம் காம்புக்குப்போனம். போனதும் சொன்னான் இண்டைக்கு போட்டு நாளைக்கு வாருங்க என்றான். மறுநாளைக்குப் போனம் விடல்ல அடுத்தநாள் போனம். போனப்போ சொன்னாங்க உங்கட பிள்ளையள காட்டில கொண்டுபோய் விட்டிட்டம் அங்கபோய்ப் பாருங்க எண்டு சொன்னதும் பயத்தில உடன நாங்கள் போகல்ல. ரெண்டொரு நாள் கழிச்சி தேடிப்போனா காட்டில நிறைய சவங்கள் கிடக்குது. அங்கால திரும்பினா தலையை வெட்டினால் போல கிடக்குது, இங்கால திரும்பினா காலைக் கையை வெட்டினால்போல கிடக்குது. பாக்கிற இடத்திலயெல்லாம் கிடக்குது. எண்ட பிள்ளையா உன்ர பிள்ளையா என்று ஒண்டையும் அடையாளம் தெரியல்ல. எல்லாம் ஊதி உருமாறிப்போச்சு. புதைக்கவும் முடியாம அங்க நிக்கப் பயந்திட்டு அப்படியே விட்டிட்டு வந்திட்டம். அதுக்கப்புறமாயும் ஆமி விடல்ல ஓடிட்டு திரும்பவும் ஊருக்கு வந்தபோது மற்ற மகனும் குளத்துக்கு மீன்பிடிக்கப்போன மகன் ஆறுமுகநாதனையும் அங்கே பிடிச்சு வெட்டிப்போட்டிட்டான். மீன் பிடிக்கப்போனவனக் காணேல்லயெண்டு தேடிப்போனபோது அங்கேயும் கழுத்து வெட்டினபடியும் கைவெட்டினபடியும் வெட்டிப் போட்டிட்டு போயிருந்தான். இனி இங்க இருந்த எல்லாச்சவத்தையும் அடக்கம் பண்ணீட்டு வந்தம். என தனது இரு பிள்ளைகளையும் இருவேறு காலங்களில் பறிகொடுத்த இராசம்மா என்ற மூதாட்டி அழுதழுதே வேதனையைக் கொட்டித்தீர்க்க முயன்றாள்.

மாரிமுத்து கணபதிபிள்ளை என்ற வயோதிபர் (வயது 72) தன்கண் முன்னால் நடந்தமுடிந்துபோன கொடுமைகளை ஆவேசம் பொங்க எடுத்துச்சொன்னார். "என்ர மகள், மருமகன், பிள்ளைகளெல்லாரையும் ஈவிரக்கம் இல்லாமல் வெட்டிப்போட்டுப் போனாங்கள். மருமகன் ராஜரட்ணம், மகள் கிருஸ்ணவேணியும், மூண்டு ஆம்பிளப் பிள்ளையளும், ஒரு மகளுமாய் எல்லாரையுமே கொண்டிட்டானுங்கள். சின்னப் பிள்ளைகளை காலைக்கிழித்துப் போட்டிருந்தான். நாம என்ன செய்யமுடியும் எல்லாத்தையும் அள்ளிப்போட்டுக் கொழுத்திப்போட்டு ஊரைவிட்டு வெளிக்கிட்டுப்போட்டம். ஒருக்கா இரண்டு தரமெண்டாப் பறவாயில்லை, ஒவ்வொருதடவையும் வந்து ஆம்பிளைங்களில ஓரளவான
பொம்பிளையளப் பிடிச்சு கற்பழிச்சே கொல்லுவாங்க, மாறிமாறிக் கெடுகிறப்போ பெரியசத்தமா கதறுவாங்க. கொஞ்சநேரத்தில சூட்டுச்சத்தம் கேக்கும். அப்புறம் போய்ப்பாத்தா சவமாய்க்கிடப்பாங்க. 86ம் ஆண்டு ஊருக்குள்ள கொண்டுவந்து காம்பொண்டு போட்டாங்கள் போட்டாப்புறம் வீட்டில ஆம்பிள்ளையள் நிக்காம காட்டில ஓடி ஒழிச்சு வாழ்ந்து வந்தனாங்கள். அந்தநேரம் பகல்ல வராம விடியப்புறச்சாமத்தில வந்து கதவைதட்டி எழுப்புவான். ஆம்பிள ஆக்கள ஒதுக்கி ஒரு பக்கமாய் எடுப்பாங்கள், குமர்பிள்ளையள கதறக்கதற அநியாயம் பண்ணுவாங்கள். கொஞ்சப்பேர் துவக்க நீட்டிப் பிடிச்சிட்டு நிப்பாங்கள் நாங்கள் கடவுள மண்டாட வேண்டியதுதான். அவன் எல்லாம் முடிய சுட்டுப்போட்டிட்டுப்போவான். சில வேளையில விட்டிட்டுப்போவான்.

ஆம்பிள்ளையள காம்புக்கு கொண்டுபோய் அடிச்சு சித்திரவதை பண்ணுவான். பீப்பாவுக்க தண்ணி நிரப்பி அதுக்குள்ள அமுக்கிப் பிடிச்சுவச்சிருப்பான். போய் கெஞ்சி மண்டாடிக் கேட்டா நாளைக்கு வாருங்க விடுறம் எண்டு சொல்லுவாங்கள். மறுகாப் போய்க் கேட்டா நாங்கள் பிடிச்சிட்டு வரல்ல எண்டு சொல்லுவாங்கள். இனி என்ன செய்யிறது, என்ன நடந்ததெண்டு தெரியாமலே காணாமல் போயிடுவாங்க, இப்படியா புல்லுமலைக் கிராமத்தையே அழிச்சிட்டான். காட்டில ஓடி ஒழிச்சவங்கள் ஒண்டு ரெண்டு பேர் தப்பினது தான் இப்ப இருக்கிறாங்கள், என அந்த முதியவர் சொல்லி அழுதார்.

சூசைமுத்து யோசெப்
(பாக்கியராசா) என்ற முதியவரைச் சந்தித்தேன். 90ம் ஆண்டு நடந்த மிகப்பெரும் படுகொலை அவரது உள்ளத்தை பெரிதும் பாதித்திருந்தது. நடுக்கத்தோடும் பதட்டத்தோடும் அந்த நாள் நினைவுகளை சொல்லத் தொடங்கினார்.

திடீரென றக்வண்டியள், லொறியள், மெசினுகள் எல்லாத்திலேயும் வந்து ஊரை சுத்திவளைச்சாங்கள். நாங்க எல்லாரும் எல்லாப் பக்கத்தாலேயும் குழம்பி ஓடினாங்கள். படபடவெண்டு சூடு விழுந்து கொண்டிருக்கிறது. நம்மட வீட்டுக்கு மேல்பக்கத்தால முப்பத்தைஞ்சு நாப்பதுபேரை ஒண்டாய் கொண்டுபோறான். பொம்பிளையைப் பிடிச்சு கற்பழிச்சான். கண்ணால
காணமுடியாவிட்டாலும் அவங்கள் கத்திக் குழறுற சத்தம் அவங்களால தாங்கமுடியாத அவலச் சத்தமாய்த்தான் இருந்தது. காப்பாற்றவோ நிண்டு பார்க்கவோ யாரும் நிக்கல்ல. எல்லாரும் சிதறி ஓடினாங்கள். நம்மட வீட்டுக்க வந்து கோழிக்கூட்டுக்க வந்து கோழியைப் பிடிச்சாங்கள். கோழியள் வெளிக்கிட்டு ஓட, அதைத் துரத்திப் பிடிக்கிறதில நிண்டாங்கள். அந்தநேரம் பாத்து நம்மட மனிசி பிள்ளைகளையும் கூட்டிட்டு ஓடினாள், நாம ஓடினபக்கமாய் நாப்பது ஐம்பதுபேர் நம்மளோட ஓடிவந்தாங்கள். குளவெட்டை ஒண்டைத்தாண்டி காட்டுக்குள்ள போயிருந்தம். இனி ஓடமுடியவில்ல செத்தா இதுக்குள்ளேயே சாகவேண்டியதுதான் எண்டு யோசித்துக்கொண்டிருந்தோம். நம்மட பிள்ளைக்கு நல்ல இருமல் இருமிறசத்தம் ஆமிக்கு கேட்டால் வந்து எல்லாரையும் சுட்டிடுவான். யோசிச்சுக் கொண்டிருக்க ஆமி வெட்டையால வாறன். நாம இருக்கிற பக்கமாய் நேராய் வாறான்.
முன்னுக்குவாற ஆமி துவக்கை நீட்டிக்கொண்டு வந்ததைப்பாத்தா நம்மளக் கண்டிட்டு வாறமாதிரியிருந்தது. அந்த நேரம் பாத்து பிள்ளையும் இருமத்தொடங்கீட்டுது. நம்மட ஒரு பிள்ளையால எல்லாரும் சாகவேண்டிவரப்போகுது. நம்மட பிள்ளையை கழுத்தை நசுக்கிக் கொண்டிட்டா நாப்பது ஐம்பதுபேரின்ர உயிரைக்காப்பாத்திடலாம். யோசிக்க நேரமிருக்கல்ல பிள்ளேட கழுத்தப்பிடிச்சன். நம்மட மனிசி பதறிப்போய் கையைப் பிடுங்கி எடுத்திட்டு வீவாப் போத்தலுக்க கிடந்த மாவில அள்ளிப் பிள்ளேட வாய்க்குள் போட்டாள். மா வாய்க்குள்ளபோய் உதடுகள் ஒட்டிக் கொண்டதால இரும முடியாம பிள்ள அத்துளிப்பட்டது. ஆமி நாம இருக்கிற இடத்திலயிருந்து இருபது முப்பது மீற்றர் தூரத்தால போய்க்கொண்டிருந்தானுகள். நல்லவேளை அவன் காணல்ல. பொழுதுபடும்வரை இருந்தோம். வெடிச்சத்தம் எல்லாம் நிண்டாப்பிறகு ஊருக்கபோனம். ஊருக்க போனால் என்னத்தப் பாக்கிறது. பீற்றர் குடும்பமும் அவங்களோட ஓடின நாப்பது ஐம்பது பேரையும் சுட்டுப் போட்டிருந்தானுகள். பொம்பிளையள கற்பழிச்சு நிர்வாணமாய் சுட்டுப்போட்டிருந்தாங்கள். பால்குடி குழந்தைகளையெல்லாம் சுட்டு தூக்கி வீசியிருந்தாங்கள். பாக்கியநாதன் குடும்பத்து குழந்தைகள் மூண்டுபேரை கால்ரெண்டையும் இழுத்துக் கிழிச்சுப் போட்டகொடுமையைப் பாத்தா ரத்தம் கொதிக்கும் என்று சொல்லும்போது வேதனையால் அவர் தொண்டை அடைத்துக்கொண்டது.

புல்லுமலைக் கிராமத்தை முற்றாக அழித்துவிடவேண்டுமென சிங்கள இராணுவத்தினர் முடிவெடுத்திருந்தனர். இதனால் வழிபாட்டு தலங்களில் வைத்தே பலர் கைதுசெய்யப்பட்டு சுடப்பட்டனர். 1984ம் ஆண்டு புல்லுமலைப் பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாப்பூசை நடந்துகொண்டிருந்தபோது திடீரென அங்கு நுழைந்த இராணுவத்தினர் அங்கு வழிபட்டுக்கொண்டிருந்த ஆண்கள் ஒன்பது பேரை பிடித்துச்சென்று சுட்டனர். அதே ஆண்டில் மீண்டும் கோயிற் பூசகர், சுற்றியிருந்த வியாபாரிகள் எல்லோரையும் பிடித்துச்சென்றனர். இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்ததெண்டு யாருக்கும் தெரியாது. 1986ல் புல்லுமலைக் கிராமத்தில் கைதுசெய்த ஆண்கள் ஏழுபேரை சுட்டபின்னர் ஆலயத்துக்கு முன்னால ரயர் போட்டுக் கொழுத்தினார்கள். ஆண்டவன் சந்நிதியில் அநாதைகளாய் சுடப்பட்ட, எரிக்கப்பட்ட தமிழரின் மரண ஓலம் யாருடைய மனச்சாட்சிகளையும் உறுத்தாமலே மறைந்து போனது. நானூறுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு என்ன நடந்ததென்பதை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட தட்டிக்கேட்கவோ வெளியுலகத்துக்கு கொண்டு வரவோ முற்படவில்லை. சிங்கள இனத்தில் ஒரு உயிர் கொல்லப்பட்டால் உரக்கக் கத்தும் மனித உரிமையமைப்புக்கள் தமிழர் உயிர்கள் வகைதொகையின்றி பறிக்கப்பட்டபோது ஊமையாகிப்போனது ஏன்? புல்லுமலைக் கிராமத்தை கிளறிப்பார்த்தால் மனிதப்புதைகுழிகள் நிச்சயம் மலிந்துகிடக்கும். மனித உரிமையமைப்புக்கள் இதற்குத் தயாராகுமா? தயாராகினால் தமிழர் படுகொலைப்பட்டியல் பலநூற்றாண்டுகள் மறைந்து போனாலும் மட்டக்களப்பு மக்கள் மனங்களில் மாறாத வடுவாய் பதிந்திருக்கும். புல்லுமலைப் படுகொலையின் கொடிய பக்கங்களாய் இவை விரியும். 1983ம் ஆண்டு ஆடித்திங்கள் புல்லுமலைக் கிராமங்களின் பசு நிரைகள் கவர்ந்துகொல்லப்பட்டன. வியர்த்துழைத்த சொத்துக்கள் கொள்ளயிடப்பட்டன. பல நாள் உடலுழைப்பில கட்டிய வீடுகள் அனைத்தும் தீயிடப்பட்டன. சொத்துக்களை இழந்தாலும் மண்ணை இழக்கக்கூடாதென்ற உறுதியோடு எரிந்து போன சாம்பல்மேட்டில் எழுப்பிய வீடுகளை மீண்டும் 1984ம் ஆண்டு தீயிட்டுக் கொழுத்தினார்கள். 300 வீடுகள் எரிந்தபோது மக்கள் மனங்களில் எழுந்த துயரத்தீயை யாரும் அணைக்க
முற்படவில்லை.

1985ம் ஆண்டு, தைத்திங்கள், 4ம் நாள் மூன்றாவதுமுறை கிராமத்துள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த நில அளவையாளர் உட்பட ஏழுபேரைச் சுட்டுக்கொன்றதோடு மீண்டும் வீடுகள் கொழுத்தப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. சொத்துக்களை அள்ளியெடுத்து வீடுகளைக் கொழுத்தியும், எழும்பி ஓடாத எமது மக்களை கொலைசெய்து மிரட்டும் படலம் தொடங்கியது. ஒரு வாரம் கழித்து தைத்திங்கள், 10ம் நாள் கோயிற் பூசகர் உட்பட ஒன்பதுபேரை சுட்டுக்கொன்றனர்.

1986ம் ஆண்டு, கார்த்திகைத் திங்கள், 10ம் நாள் கொலை கொள்ளை, கற்பழிப்பு, தீவைப்பு என அகோர இனவெறியாட்டம் அரங்கேறியது. 103 தமிழர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டார்கள். 1987ல் குளத்தில மீன்பிடித்துக்கொண்டிருந்த 14பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பெற்றுவளர்த்த பிள்ளைகளை இழந்து கட்டிக்காத்து வளர்த்த இளம்பெண் பிள்ளைகளை கண்ணுக்கு முன்னாலேயே பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொன்ற கொடுமை சுமந்து நொந்திருந்த எமது மக்கள் 1990ம் ஆண்டு, ஆடித்திங்கள் 9ம்நாள் மீண்டும் நடந்த கொடுமையை தாங்கமுடியாது கிராமத்தைவிட்டு வெளியேறினார்கள். பால்மணம் மாறாத குழந்தைகள் கிழித்தெறியப்பட்டு குடும்பம் குடும்பமாக நாப்பதுக்கு மேற்பட்டோர் சுடப்பட்டு பாலியல் வல்லுறவின் கொடூரம் தாங்கமுடியாது இறுதிமூச்சுவரை வாய்விட்டு அழுதுமடிந்துபோன பெண்களின் உடல்கள் கீறிக்கிழிக்கப்பட்டுக் கிடந்த காட்சியைக் கண்டு திசைமாறி ஓடிய எமது மக்கள். அந்த அழகிய பூமிக்கு இன்றுவரை திரும்பவில்லை,

வெளிக்காகண்டிக்குளம், புல்லுமலைக்குளம், பனிச்சையடிக்குளம் கல்பொத்தானைக்குளம், தும்பாலஞ்சேனைக்குளம், 40 ஏக்கர்குளம் என்றெல்லாம் நீர்வளம் குன்றாத குளங்கள் நிறைந்த இப்பிரதேசத்தில் சிங்கள இராணுவத்தினரும் சிங்களக் காடையர்களும் விரட்டியடிக்கப்பட்டாலும் எமது மக்கள் வாழ்வை இழந்து புதர்மண்டிக்கிடக்கின்றது. அழிவின் சின்னங்களாய் இந்து ஆலயமும், கிறீஸ்தவ தேவாலயமும், பாடசாலையும் புதர் மூடிக்கிடக்கின்றன. 139 விதவைப் பெண்கள் வாழும் வகையின்றி ஏதிலிகளாக வாழ்கின்றனர்.

-மணலாறு விஜயன்
எரிமலை-ஆகஸ்ட் 2005

தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

No comments:

Post a Comment