Thursday, 12 February 2026

சுயதரிசனம் - கவிஞர் மு. மேத்தா

சுயதரிசனம்
~~~~~~~~~~~~~

நான் சுதந்திரமானவன் என்னைக் கட்டுப்படுத்த முடியாது.

கட்டிப்போட முயன்றவர்கள் தங்கள் காயங்களுக்குக் கட்டுப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

நான் நித்தியமானவன் -என்னை அழித்துவிட முடியாது. 
அழிக்க நினைத்தவர்களின் கல்லறைப் பெட்டிகளைக் கரையான் அரித்து விட்டது.

நான் மண்ணில்தான் நிற்கிறேன்.
ஆனாலும்-வானத்தின் தோலைக் கிழித்துக் காலுக்குச் செருப்பாகப் போட்டுக் கொள்ளும் வல்லமை எனக்குண்டு!

புயல் - என் விசிறி,
பூமியை நடுநடுங்க வைக்கும் பூகம்பம் எனக்கு ஊஞ்சல் விளையாட்டு.

இடியோசை என்னைத் துயில் நீங்க வைக்கும் திருப்பள்ளி எழுச்சியின் இன்னிசை!

தோன்றிய நாள் தொட்டே பூமி அனைத்தையும் தன் தலையில் தாங்கி வருவதாகச் சொல்லப்படும் ஆதிசேடனுக்கு என் கால்நடை ஒன்றே கழுத்து வலியை உண்டாக்கிவிடும்.

என் பெருமூச்சுப் புறப்படும்போது எட்டுத் திசைகளும் இடம் மாறிப் போகின்றன.

ஒன்று திரண்ட உழைக்கும் இனத்தின் ஆற்றலுக்கு அடையாளம் நான்!

- கவிஞர் மு. மேத்தா -

No comments:

Post a Comment