1974ம் ஆண்டிலிருந்து புதிய முறையில் தமிழினத்தை அடக்கிவிடச் சிங்கள ஆட்சியாளர்கள் முன்வந்தனர். தமிழ் மக்களை சுட்டுத்தள்ளும் பொலீசாருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர் சிங்கள ஆட்சியாளர்கள்.
இதன் விளைவு 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டில் தமிழின் சுவை கேட்டுக் கொண்டிருந்த ஒன்பது தமிழர்கள் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வெறியாட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த சந்திரசேகா என்னும் சிங்கள உதவிப் பொலீஸ் அதிகாரிக்கு உடனடியாகப் பதவியுயர்வு வழங்கி அவனைப் பொலீஸ் அதிபராக்கியது சிங்கள அரசு.
1976 பெப்ரவரி 2ம் நாள் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் தொழுகை
நடத்திய ஏழு இஸ்லாமியத் தமிழர்கள், நல்லூர்க் கந்தனை வழிபட்டுவிட்டுத் திரும்பிய பரராசா, மலையகத் தமிழன் (இந்திய வம்சா வழி) சிவனு இலட்சுமணன், யாழ் வீதியில் இரண்டு தமிழர்கள், ரெயில்வண்டியில் பயணம் செய்த தமிழன், தமது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு தமிழிளைஞர்கள், கடற்கரையில் காற்று வாங்க வந்த தமிழன், கொழும்பு வேகந்தை பள்ளி வாசலில் தொழுகை நடத்திய மூவர் என ஏராளமான தமிழர்களை சிங்கள இராணுவத்தினரும், பொலிசாரும் சுட்டுக் கொன்று சிங்கள அரசின் பாராட்டையும் பதவியுயர்வையும் பெற்றதோடு தமக்குப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தமிழர்களைக் காரணமின்றிச் சுட்டுக் கொல்லும் பொலீசாரையும், இராணுவத் தினரையும் தட்டிக் கேட்க வேண்டிய ஆட்சியாளர் தட்டிக் கொடுத்துப் பதவியுயர்வு வழங்கி உற்சாகப்படுத்தினர். கடலில் வாழும் ஆமைகளைக் கொல்பவனை நீதிமன்றத்தில் நிறுத்தி ஆறு மாதம் சிறையில் தள்ளும் சிங்கள அரசு காட்டில் வாழும் விலங்குகளைச் சுடுபவனைச் சிறைக்கூடம் அனுப்பும் இலங்கை அரசு தமிழனைச் சுடுபவனைப் பாராட்டியது; பதவியுயர்வு தந்தது. ஈழத்தமிழன் உயிரை கடலாமையையும், காட்டு விலங்கையும் விடக் கீழாக மதிக்கின்றனர் இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள்.
ஆட்சியாளரின் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை கடந்த கால் நூற்றாண்டு காலமாக, சிங்கள மக்களுடன் சம உரிமையுடன் சமஷ்டி அமைப்பின் கீழ் சேர்ந்து வாழலாம் என எண்ணியிருந்த தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்த்து விட்டது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கையாண்ட ஒடுக்கு முறை இனவாதக் கொள்கைகளால் தமிழர்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார வாழ்வில் ஏற்பட்ட பாரதூரமான பாதிப்புகளே தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. படித்த தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கத் துறையில் வேலைவாய்ப்புகள் பூரணமாக நிராகரிக்கப்பட்டபோது அவர்களுக்கு இருள்மயமான எதிர்காலம் மாத்திரமே மிஞ்சிக் கிடந்தது. சிங்கள அரசாங்கத்தின் பாரபட்சமான தமிழர்களுக்கு எதிரான தரப்படுத்தல்' கல்விக் கொள்கையும், 'சிங்களம் மட்டும்' என்ற மொழிக் கொள்கையும்: தமிழ் மக்களின் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினையும், வேலைவாய்ப்பினையும் இல்லாமற் செய்துவிட்டது. மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் மோசமாகிக் கொண்டிருந்தது. பொலீசாரும்,இராணுவத்தினரும் தமிழ் இளைஞர்களைக் காரணம் இல்லாமலே கைது செய்தும், மோசமாகச் சித்திரவதைகள் செய்தும், கொன்றும் அட்டூழியங்கள் இழைத்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தமிழிளைஞர்களே அரச பயங்கரவாதத்துக்கு நேரடியாக இலக்காகி கொடூரமான, மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அனுபவித்தனர்.
தொழில் வாய்ப்புகளும் உயர்கல்வி வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட விரக்தியும் தொடர்ச்சியான பொலீஸ், இராணுவ அட்டூழியங்களால் சினமும் கொண்ட தமிழ் இளைஞர்கள் தங்களது மோச மான இந்த வாழ்க்கை நிலைமைகளைப் பூரணமாக மாற்றியமைக்க ஒரு புரட்சிகர சோஷலிசப் போராட்டத்தின் மூலமே முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டதைப் போல மோசமாகிக் கொண்டிருந்த தேசிய ஒடுக்குமுறையின் மத்தியில் தமிழ் மக்களுக்கு புரட்சிகர ஆயுதப்போராட்டம் மாத்திரமே ஒரே ஒரு தீர்வாக எஞ்சி நின்றது.
தமிழ் மாணவர் பேரவை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனவெறி பிடித்த சிங்கள அரசின் அடக்குமுறையை அகிம்சைப் போராட்டத் தினால் உடைக்க முடியாது என்பதை நன்குணர்ந்த தமிழிளைஞர்கள் 1970 'தமிழ் மாணவர் பேரவை' என்ற அமைப்பின் கீழ் சிங்கள ஆட்சியாளரை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கினர். அரசுக்கெதிராக ஊர்வலம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு என்று ஆரம்பமானது தமிழ் இளைஞர் கிளர்ச்சி.
இந்நிலையில் 1972ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட, தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிய புதிய குடியரசு அரசியலமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு எதிராக தமிழ்ப் பகுதிகளில் பெரும் எதிர்ப்புக்கிளம்பியது. தமிழினத்தின் அடிமைச்சாசனம் போன்ற அந்த அரசியலமைப்புக்கு-தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில்-ஆதரவாக அரசியல் நிர்ணய சபையில் கையொப்பமிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழினத் துரோகிகளாகக் கணிக்கப்பட்டனர்.
தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளை அழிப்பதுதான் தமிழீழத்தை அடைவதற்கான போராட்டத்தின் முதற்படி என பல்வேறு ஊர்களிலும் தனித்தனிக் குழுக்களாகத் தமிழ் மாணவர் பேரவையினர் இயங்கினர். இவ்வாறு இயங்கியவர்களில் தீவிரமாக இயங்கிய சிவகுமாரன், சத்திய சீலன், தங்கத்துரை, திசவீரசிங்கம், பிரபாகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
புதிய தமிழ்ப் புலிகள் (T.N.T)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வாறு துரோகிகளை அழிப்பதில் ஈடுபட்ட பல இளைஞர்களின் முயற்சிகள் ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை. தமிழ் மாணவர் பேரவையில் முக்கிய பொறுப்பேற்றுச் செயற்பட்ட சத்தியசீலன் கைதானதைத் தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை இயக்க அமைப்பு சீர்குலைந்தது. பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் தலைமறைவாகினர். நாட்டில் தமிழ் மக்களின் நிலை மோசமாகிக் கொண்டு போனது. தலைமறைவானவர்களில் பலர் மீண்டும் இயங்குவதற்குத் தயங்கி நின்றனர். அந்த நிலையில் அவர்களில் வயதில் குறைவானவராக இருந்த பிரபாகரன் ஒரு சிலருடன் மீண்டும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். புதிய தமிழ்ப்புலிகள் (டி.என்.டி) என்ற பெயரில் இயக்கத்தை ஏற்படுத்திச் செயற்பட்டார். இயக்கத்துக்கு ஆதாரமாகப் பெறப்பட்ட பொதுப்பணத்தை, பொறுப்பிலிருந்த ஒரு சிலர் தவறான வழிகளில் பயன் படுத்தியதைக் கண்டு அவர்களை விலக்கி வைத்துவிட்டு தேர்ந்தெடுத்த ஒரு சில இளைஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு பிரபாகரன் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு.
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
No comments:
Post a Comment