Wednesday, 11 February 2026

வீரவணக்கம்! -கவிஞர் இன்குலாப்

வாழ்க்கையை 
விடுதலைப் போரினாலும், மரணத்தை 
அஞ்சாத தியாகத்தாலும் .
கடைசி வரைக்கும் 
கனப்படுத்தி, 
பூமி கனக்கப் 
புதைந்த புலிகளே!

காலத்தின் 
செவிகளில் 
உமது கர்ச்சனை.. 
யுகங்களின் நெற்றியில் 
உமது திருப்பெயர்..

நாளைய மானுடப் 
பிஞ்சு முகங்கள் -
முகர்ந்து பார்க்கும் 
ஒவ்வொரு பூவிலும் 
உங்கள் உயிரின் 
வாசம் கமழும்...

நாளைய விடியலை 
ஈழத்தில் எழுத ,
நீளும் கதிர்களில் 
நிச்சயம் உமது
உயிரின் சூடும் 
ஒன்றித்திருக்கும்.

துரோகத் 
தூசுப் படலத்தை. 
உயிரின் சுவாலையால் 
பொசுக்கிய புலிகளே! 
காலியான சயனைட் குப்பிகளும், கழன்று கிடக்கும் தோள் துப்பாக்கிகளும் ,
இன்னும் உலராத 
இளைய ரத்தமும்...

அனைத்திலும் மேலாய் 
உம் வாழ்வும், 
மரணமும், 
விடுதலை வரித்த அடையாளங்களாய் -வரலாற்று வரிகளில் 
கனத்துக் கிடக்கும்! 
ரத்த சாட்சிகளே! 
வீரவணக்கம்.🙏

கவிஞர் இன்குலாப் -

No comments:

Post a Comment