விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அக்காலக்கட்டத்தில் புதிய தமிழ்ப்புலிகள் (டி.என்.டி) என்ற அமைப்பில் செயற்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் கட்டுப்பாடு மிக்க இராணுவ அமைப்பு ஒன்றினால் மட்டுமே தமிழீழ விடுதலை சாத்தியம் என்பதை உணர்ந்து புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பைப் புனரமைத்து, அக்காலத்தில் சிறு சிறு குழுக்களாக இயங்கி வந்த இளைஞர்களையும் சேர்த்து 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். பிரபாகரன் இயக்க உறுப்பினர்கள் பலரையும் இயக்க இலட்சியத் தின் பேரிலும், இயக்க கட்டுப்பாடுகளின் பேரிலும் உறுதி எடுக்க வைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஏற்படுத்தினார். தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கம் வர்க்க பேதமற்ற தமிழீழ சமதர்மக் குடியரசை நிறுவுதல் என்பது. அமைப்பு ரீதியாக முதன் முதல் தோற்றுவிக்கப்பட்டதும், மிகவும் கட்டுப்பாடானதும் ஆக்க பூர்வமாகச் செயல்பட்டு வருவதும் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே.
'பல நூறு ஆண்டுகளாக அந்நியரிடம் அடிமைப்பட்டு வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் மத்தியில் ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டி வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்தான். முதலில் இனத்தின் மத்தியில் இருக்கும் காட்டிக் கொடுக்கும் நிலையை ஒழித்தாக வேண்டும். அதற்கு ஆரம்பத்தில் காட்டிக் கொடுப்பவர்களை ஒழித்தாற்தான் முடியும். விடுதலை இயக்கத்தை அரும்பும் போதே சிதைத்து விட வேட்டை நாய்கள் போல செயற்பட்ட பொலீஸ் உளவுப்படை அமைப்பைச் சீர்குலைத்தாக வேண்டும். அடுத்து மிகப்பெரிய ஆயுதப்படையைக் கொண்ட எதிரியை (அரசை) ஆயுதமற்ற எண்ணிக்கையில் குறைந்த ஒரு இனம் மோதுதற்கு கெரில்லாப் போர்முறை ஒன்றினால்தான் சாத்தியம் என்பதை அண்மைக்கால உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. எதிரி மீது பரந்த அளவில் மேற்கொள்ளப்படும் திடீர் தாக்குதல்களினால் எதிரியின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு பலவீனப்படுத்தப்படும்' என்பதை எல்லாம் நன்கு சிந்தித்த பிரபாகரன் அதற்கு ஏற்றவாறு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேலைத்திட்டங் களை வகுத்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள உறுதியுமே தேவை என்று அதற்கு ஏற்றவாறு சொற்ப உறுப்பினர்களையே வைத்து இயக்கத்தைத் தொடங்கிய பிரபாகரன் தனித்தனிக் குழுக்களாக இயங்கி வந்தவர்களையும், இயக்கத்திற்கு ஆதரவாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்களையும் தானே நேரிற் சென்று சந்தித்துப் பேசி தகுதியானவர்களை இயக்கத்திற் சேர்த்துக் கொண்டார். அத்துடன் இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டு விதிகளைக் கடுமையாக்கினார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும், அர்ப்பணிப்பும், பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக் கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டு தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்தில் தோய்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெகு விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக் கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாகத் தன்னை விரைவிலேயே அமைத்துக் கொண்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றமானது தமிழ் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கமானது இதுகாலம் வரை நடைபெற்று வந்த தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தினைப் பரந்து பட்ட மக்களின் ஆயுதப் போராட்டம் என்ற நிலைக்கு விரிவடைய வைத்தது.
கடந்த 10 ஆண்டுகளாக விட்டுக் கொடுக்காது, தொடர்ச்சியாக, தீர்க்கமாக விடுதலைப் புலிகள் நடத்திய கெரில்லாத்தாக்குதல்கள் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கணிசமான அளவு ஈழத்தமிழ் மக்களது போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றது. அரச ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மனோவுறுதியையும் கட்டுப் பாட்டையும் குலைத்து விட்ட விடுதலைப்புலி களது கெரில்லாப் போர்முறையானது சிறீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங் காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்சினையை . சர்வதேசமயப் படுத்தவும் உதவியுள்ளது
இயக்கத்தையும், இனத்தையும் காட்டிக் கொடுக்க முனைந்த இனத் துரோகிகளையும், வேட்டையாட முனைந்த பொலீஸ் உளவுப் படையையும் சின்னாபின்னமாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அடுத்த கட்டமாக சிங்கள் இராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற் கொண்டனர். ஆங்காங்கே சிங்கள இராணுவப் படைகள் மீது விடுதலைப்புலிகளின் கெரில்லாப் போராளிகள் மறைந்திருந்து தாக்கியும் நேர் நின்று போரிட்டும் பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். அந்தப் படையின் மத்தியில் பீதியும், மரணபயமும், ஒழுங்கீனமும் கட்டுப்பாடின்மையும் உருவாகின. கூலிப் பட்டாளத்துக்கே உரிய கோழைத்தனமும் தப்பியோடும் மனோபாவமும் வேரூன்றின ; பலர் இராணுவ சேவையைவிட்டே விலகியோடினர். தமிழ்ப் பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இராணுவத்தினருக்கு மேலதிக ஊதியத்தையும் விசேட வசதிகளையும் அரசு வழங்கியது. அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் இயக்கத்தைக் கட்டி எழுப்பும் பணியும், மக்களை அரசியல் மயப்படுத்தும் பணியும் தீவிர முற்றன. தமிழீழ விடுதலைப்புலிகளது அரசியல் அணியின் தொடர்ச்சியான கடின உழைப்பால் தமிழீழமெங்கும் தலை மறைவு கெரில்லாத்தளங்களை அமைப்பது விரைவிலேயே சாத்தியமானது. மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பேரறிஞர்கள் எல்லாம் இணைந்து செயற்படத் தொடங்கினர்.
மக்களுடன் வாழ்ந்து, நாளாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தாமும் முகம் கொடுத்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, தேசியப் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து உழைப்பதில் தமிழீழ விடுதலைப்புலிகள் பெரும் அக்கறை கொண்டு செயற்பட்டனர்.
காலத்துக்கும், சூழ்நிலைக்குமேற்ப தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டமானது சிங்களப் பேரினவாத அரசின் மீதும், இலங்கையின் பொருளாதாரத் தின் மீதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. தமிழீழ மண்ணில் சிங்கள ஆட்சியாளரின் நிர்வாகம் பூரணமாக நிலை குலைந்தது; அரசுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்தன; வங்கிகள் மூடப்பட்டன; பொலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன. அரச அமைப்பே முழுமையாகச் சீர்குலைந்தது. சிறீலங்கா மிக மோசமான அரசியல், சமூக நெருக்கடிகளை எதிர்நோக்கியது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சிறீலங்காவின் பொருளாதாரம் சீரழிந்தது.
சிறீலங்கா அரசுக்கு பொருளாதார உதவிகளைச் செய்து வந்த பல நாடுகள் நாட்டில் உள்ள அமைதியின்மையைச் சுட்டிக்காட்டித் தமது பொருளாதார உதவிகளை நிறுத்தின . இதனால் சிங்கள அரசு தன் பற்றாக்குறை பட்ஜெட்டுக்களை ஈடுகட்ட முடியாமலும், பொருளாதாரத் திட்டங்களை மேற்கொள்ள முடியாமலும் திண்டாடியது. 1976ம் ஆண்டு தனது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு வெறும் 36 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கிய சிறீலங்கா அரசு 1985ம் ஆண்டு 560 கோடி ரூபா ஒதுக்கியும் போதவில்லை என்று தேசிய
பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி அலறுகிறார். பொருளாதார நிலையில் சீர் கெட்டிருக்கும் சிறீலங்கா அரசு, பாதுகாப்புத் துறைக்கென 200 கோடி என்றும், 84 கோடி என்றும் பல இடைக்கால குறை நிரப்புத் தொகை பட்ஜெட்டுக்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகியது. சிறீலங்காவின் நிதி அமைச்சர் ரொனி டி மெல் கஜானா காலியாகி விட்டது என்று கைவிரிக்கின்றார்; பிச்சை கேட்டு உலக வலம் வருகிறார்.
எல்லாற்றிற்கும் மேலாக விடுதலைப்புலிகளின் இடைவிடாதத் தாக்குதல்களினால் கிலியுற்ற சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்ல மறுக்கின்றனர். இராணுவத் தினரின் பெற்றோர்கள், "தங்கள் பிள்ளைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பாதீர்கள்" என்று அத்துலத் முதலியின் அலுவலகத்தை முற்றுகையிடுகின்னர். ஆக விடுதலைப்புலிகளின் விடுதலைப்போர் சிங்கள ஆளும் வர்க்கத்தையும், சர்வாதிகார அரசினையும் ஆட்டங்காணச் செய்தது. இந்த விடுதலைப்போரை உலகுக்கு 'பயங்கரவாதம்' என்று காட்ட சிறீலங்கா அரசின் போலி நாடகம் அரங்கேறவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டம் யதார்த்த நிலையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது.
ஆரம்பத்தில் நான்கைந்து இளைஞர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் தலைவரும் தளபதியுமான வே. பிரபாகரனின் வழி நடத்தலின் கீழ் படிப்படியாக வளர்ந்து இன்று உலக அரங்கிலே குறிப்பிடத்தக்க முக்கியமான விடுதலை இயக்கமாக வளர்ந்துள்ளது. முதலில் துரோகிகளை ஒழிப்பது, அடுத்து இயக்க வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொலீஸ் உளவுப் படையைச் சிதைப்பது. பின் பரந்த அளவில் தாக்குதலை நடத்தி சிங்கள ஆட்சியாளரின் ஆயுதப் படையையும், பொருளாதார நிலையையும் நிலைகுலைய வைப்பது என்று திட்டமிட்ட செயற்பாட்டினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்தில் சிங்கள ஒடுக்குமுறை ஆட்சியாளருக் கெதிராக மாபெரும் வெற்றியை ஈட்டி வருகிறது.
தகுதி வாய்ந்த தலைவனின் (வே. பிரபாகரனின்) வழி நடத்தலாலும், இயக்க வீரர் களின் வீரமிக்க தியாக உணர்வினாலும் வெகு விரைவில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது இலட்சிய தாகமான தமிழீழத்தை மலர வைப்பார்கள் என்பது உறுதி.
-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
No comments:
Post a Comment