ஆனையிறவுச்சமர் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட BBCயின் கொழும்பு முகவர், இலங்கைத்தீவில் பலம் பொருந்திய இரண்டு இராணுவங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். யுத்தகளத்திற்கு வெளியே வெளியிடப்பட்ட இக்கணிப்பீடு தொடர்பாக ஆனையிறவுச்சமரில் விடுதலைப்புலிகளுக்குத் தலைமை தாங்கிய தளபதி பொட்டு அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ஆள், ஆயுதக்கணக்குகளின் எண்ணிக்கையில் அன்றி, போர்வலு என்ற அடிப்படையில் BBC
நிருபரின் கருத்து இருக்குமானால் அது சரியானதே எனக் குறிப்பிட்டிருந்தார் (விடுதலைப்புலிகள் குரல் 25). விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா அரசின், இராணுவப்போர்த்திறனின் பரிசோதனைக்களமாக அமைந்த ஆனையிறவுச் சமரையொட்டி வெளியிடப்பட்ட இக்கணிப்பீடுகளும், கருத்துகளும் இரு தரப்பினதும் இராணுவ சமநிலைபற்றிய ஆய்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வையாகக் கருதப்படுகின்றன.
⭐இராணுவச்சமநிலை பற்றிய ஆய்வின் முக்கியத்துவம்:
போராட்டத்தின் ஒவ்வொரு காலப் பகுதியிலும் எதிரியின் பலம் பலவீனம் பற்றிய அறிவு போராட்ட வெற்றியின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று. எதிரி தொடர்பான இக்கணிப்பீடுகளுக்கேற்பவே போரிலீடுபட்டுவரும் இராணுவங்கள் தமது பயிற்சிகளையும், ஆயுதத் தளபாடங்களையும், தந்திரோபாயங்களையும் அமைத்துக் கொள்ளும். இவ்வளவீடுகளில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் தமது தரப்பிலும் இதற்கொத்த மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளதால் இச்சமநிலைபற்றிய அளவீடுகள் தொடர்ச்சியாகவும் பல பரிமாணங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் - ஸ்ரீலங்கா அரச முரண்பாட்டைப் பொறுத்தவரை இச்சமநிலை பற்றிய ஆய்வுகள் மேற்சொன்ன வழமையான இவ்விராணுவக் கண்ணோட்டத்திற்கு மேலாக இன்று பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் ஈழப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வுத் திட்டங்களில் ஒவ்வொரு பகுதியினரின் நிலைப்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கும் பெரிதும் உதவும். ஏனெனில் இத்தகைய சமரசத் தீர்வு முயற்சிகளின்போது முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டத்தில் உறுதியாக இருப்பதற்கும், அரைகுறை தீர்வுகள் திணிக்கப்படாமல் தடுப்பதற்கும், இராணுவச்சமநிலையில் மேம்பட்டிருத்தல் அல்லது தற்போதைய சமநிலையைத் தொடர்ந்து பேணல் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும்.
இதே மாதிரியான எதிர்க்காரணங்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசிற்கும் இது முக்கியமான விடயமே. ஆனால் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் நலன்களைக் காக்கும் அமைப்பு என்ற ரீதியில் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இச்சமநிலை முக்கியத்துவம் பெறுகின்றது.
⭐ஆனையிறவு, மணலாற்றுச் சமர்களும் இராணுவ சமநிலையும்:
தமிழீழ ஸ்ரீலங்கா யுத்தம் மீண்டும் வெடித்தபின் அதன் போக்கு யாழ் கோட்டையைத் தவிர பெரும்பாலும் வன்னி மற்றும் எல்லைப் பிரதேசங்களை நோக்கியே இடம்பெற்றுவந்தன. கொக்காவில், மணலாறு, மாங்குளம் என இப்பிரதேசங்களில் இருந்த முக்கிய தளங்களின் வீழ்ச்சியுடன் இப் பிராந்தியத்தில் விடுதலைப்புலிகளின் கையோங்கியிருந்தது. இப்பின்னணியில் ஆனையிறவு விடுதலைப்புலிகளின் அடுத்த இலக்காக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகவே தென்பட்டதுடன் இதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் ஸ்ரீலங்கா அரசால் தீர்மானிக்கப்பட்டே இருந்தன.
போர்க்களங்களே ஒரு இராணுவ அமைப்பின் போர்த்திறனையும், பலத்தையும் பரிசோதிக்கக்கூடிய இடமாகும். வெறுமனே ஒரு இராணுவம் எவ்வளவு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதைவிட, போர்க்கள அளவீடுகளே பலத்தினையும், திறனையும் அளக்கச் சிறப்பானது. உதாரணமாக, வளைகுடாயுத்தத்தின் போது பலநாட்டுப்படைகளுக்கு பெருமளவு இழப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட ஈராக்கிய இராணுவம், பெரிதாக எதையும் சாதிக்காமலேயே சரணடைந்தது. வளைகுடா யுத்தம் நடை பெறாமல் இருந்திருக்குமானால் ஈராக்கிய இராணுவம் பற்றிய, அதன் போர்த்திறன் பற்றிய அளவீடுகள் மிகையானதாவே இருந்திருக்கும்.
இவ்வகையிலேயே ஆனையிறவு. மணலாறு யுத்தக்களங்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா அரசின் இராணுவப் படைத்திறனை பரிசோதிக்கும் களமாக அமைந்தன. ஆனையிறவுச்சமரில் புலிகளின் தளத்தைக் கைப்பற்றும் முயற்சி வெற்றியளிக்காதபோதும், 31 நாட்களும் சிங்களப்படை களுடன் நடத்திய நேரடி யுத்தத்தின் மூலமும், 8000 படைவீரர்களைக்கொண்ட அரச படைகளின் நவீன தளபாடங்களுக்கு மத்தியில் உச்ச எதிர்ப்பை வழங்கியதன் மூலமும் தமது போர்வலுவை, திறமையாகவே வெளிக்காட்டினர்.
ஆனையிறவுச் சமரைப்பற்றி அதிகளவில் விளம்பரப்படுத்திய ஸ்ரீலங்கா அரசு அதற்கு ஈடாகவே இடம் பெற்று முடிந்த மணலாற்றுச்சமரைப்பற்றியும் (Operation Lightning) அதில் புலிகளின் முகாமைச் சென்றடைய முடியாது புலிகளை "பலமிழக்கச் செய்தபின்" பாதியிலேயே தமது படைகளைத் திருப்பி அழைத்ததையும் மூடிமறைத்துக் கொண்டது. 29.08.91 இலிருந்து 26.09.91 வரை 28 நாட்களாக இடம்பெற்று முடிந்த இச்சமரில் ஆனையிறவை விட அதிகளவு பலத்தையும் வெடிமருந்துகளையும் ஸ்ரீலங்கா அரசு பிரயோகித்திருந்தது. பூகோளரீதியிலும் இராணுவரீதியிலும் மணலாற்றுப்பிரதேசம் ஆனையிறவுக்கு ஈடான கேந்திரமுக்கியத்துவம் கொண்டது என்ற ரீதியில் ஸ்ரீலங்கா அரசு பெற்ற இராணுவப் பின்வாங்கலும் இராணுவச் சமநிலை பற்றிய இவ் ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்ததே.
ஆக, கடந்த வருடம் ஒரேமாதிரியாக இடம் பெற்று முடிந்த இவ்விரு சமர்களிலும் ஆனையிறவுத்தளத்தை அரச இராணுவமும், மணலாற்றுப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளும் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இச்சமர்களின் முடிவுகள் இராணுவச் சமநிலையில் எவ்வித மாற்றங்களையும் ஸ்ரீலங்கா அரசின் சார்பில் ஏற்படுத்தவில்லை. மாறாக, விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இக்களங்கள் அவர்களை வெற்றிகொள்ள முடியாத சக்தியாக சர்வதேசத்திற்கும் இனம் காட்டியது.
இவ்விடத்தில் யாழ்ப்பாணத் தீவுப் பகுதிகளையும், குடாநாட்டில் சங்குப்பிட்டிப் பகுதியையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இராணுவச் சமநிலையில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற கேள்வி எழுவது இயல்பானது.
கடல்சூழ்ந்த பெருவெளிப்பிரதேசங்களில் விடுதலைப்புலிகளை வலிந்து சண்டைக்கழைத்து, தனது முழுமையான படைக்கலச் சக்தியைப் பயன்படுத்தி நேரடி மோதல்கள் மூலம் போராளிகளைப் பலமிழக்கச் செய்தல் அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா அரசு கைக்கொண்டுள்ள யுத்ததந்திரோபாயமாகும். ஆனையிறவுச்சமரில் விடுதலைப்புலிகள் தரப்பிலேற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்பிற்கு வெற்றிலைக் கேணியிலிருந்து ஆனையிறவு முகாம் வரை நீண்ட பெருவெளிப் பிரதேசங்களில் சண்டையை எதிர் கொண்டமையும் முக்கியமான காரணம்.
ஆளணி, ஆயுதக் கணக்கில் ஸ்ரீலங்கா அரசைப்போல் பெரும் எண்ணிக்கையினைக் கொண்டிராத விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை எதிரியின் யுத்த தந்திரோ பாயத்தைப் புரிந்து கொள்ளலும் அவ்விராணுவ வலைக்குள் சிக்காது தவிர்ப்பதும் முக்கியமானது. சங்குப்பிட்டி, தீவுப்பகுதிகள் இராணுவரீதியில் சாதகமான புவியியல் நிலைமைகளைக் கொண்டிராத பிரதேசங்கள். இங்கு புலிகளால் பின்பற்றப்பட்ட நேரடி மோதலைத் தவிர்க்கும் அணுகுமுறை இராணுவரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றுத் தந்திரோபாயம் என்றே கொள்ள வேண்டும். எனினும் நீண்டகால அடிப்படையில் இப்பிரதேசங்களை எதிரி கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் இலகுவானதல்ல.
⭐புலிகளின் பலமும் தொண்டமானின் சமாதான முயற்சியும்:
ஆனையிறவுச் சமருக்குப் பின்னரே தொண்டமானின் சமாதான முயற்சி முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. ஈழப்பிரச் சினைக்கு சமாதானத்தீர்வைக் காணும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக தொண்டமானின் சமாதான முன்னெடுப்பை நோக்கிய புலிகள் அதில் காட்டிய ஆர்வம், ஸ்ரீலங்கா அரச இராணுவ மட்டத்தில் பரவலாகவே ஆனையிறவுச் சமருக்குப் பின்னர் புலிகள் பலமிழந்துவிட்டனர் என்ற மாயையை உருவாக்கியது. இக்காலப்பகுதியில் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளும் விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களும் ஸ்ரீலங்கா அரசின் எண்ணத்தைத் தீவிரமாக்கியது.
விடுதலைப்புலிகளின் பலமென்பது உண்மையில் தனித்து ஆயுதங்களின் எண்ணிக்கையால் கட்டப்பட்டதல்ல. தளபதி பொட்டு அவர்கள் குறிப்பிட்டதைப்போல விடுதலைப்புலிகள் அமைப்பானது களத்தில் போராடும் வேளையில் எமது போராளிகளின் ஒப்பற்ற வீரத்தாலும், தியாகத்தாலும் வெளியாட்களால் நம்புவதற்கரிய போர்த்திறனுடன் செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா அரசபடைகளுடன் ஒப்பிடுகையில் ஆள் ஆயுதக் கணக்கின் அடிப்படையில் பெருமளவு இடைவெளி உள்ளபோதும், மேற்சொன்ன போர்த்திறனாலேயே அரசபடைகளுடன் யுத்தத்தில் பெருமளவில் சாதனைகளைப் புரிந்துவரமுடிகின்றது.
இக்கருத்தை இந்தியப்படைகளுடன் விடுதலைப்புலிகள் நடத்திய யுத்தத்தை ஒப்பிடுவதன் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். ஆளணி, ஆயுதத்தளபாட, நிதி. பிரச்சாரத் தொடர்பு வசதிகளைப் பொறுத்த வரை பலநூறு மடங்கு பலம் வாய்ந்த இந்தியப் படைகளுடன் விடுதலைப்புலிகள் ஏறக் குறைய ஈடான இராணுவச் சமநிலையைப் பேணினார்கள். இவ் யுத்தம் ஒரு கட்டத்தின் பின் கெரில்லாப்பாணி யுத்த தந்திரோபாயத்தை வரித்துக் கொண்டது உண்மை யேயெனினும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணச்சமர், மணலாற்றுச்சமர் (operation checkmate) என்பவற்றில் இந்தியப்படைகளுடன் புலிகளின் யுத்தம் நேருக்கு நேராகவே இருந்தது. இச்சமர்களில் பங்களாதேஷ் யுத்தத்தில் பயன்படுத்திய சகலவகையான ஆயுதங்களையும் (போர்விமானங்கள் தவிர்த்து) இந்தியப்படைகள் பயன்படுத்தியிருந்ததாக அண்மையில் இந்திய இராணுவ ஆய்வாளரொருவர் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆகவே தனித்து ஆளணி, ஆயுதத் தளபாட எண்ணிக்கையில் தனது படைத் திறனைக் கட்டியெழுப்பாத தன்மையில் மற்றைய மரபுவழி இராணுவங்களிலிருந்து தன்னை வேறுபடுத்தி இனங்காட்டும். விடுதலைப்புலிகளது போர் வலுவானது தனித்த ஒரு சமருடன் ஸ்ரீலங்கா கருதுவது போல் "முடிந்து" விடாது. ஆனையிறவுச்சமர் முடிந்து ஏறக்குறைய 7 மாதங்களாகியும் அன்றிருந்த அதே சமநிலையைத் தொடர்ந்தும் புலிகள் பேணிவருகின்றனர் என்பதே உண்மையாகும்.
⭐ஸ்ரீலங்காவின் இராணுவமயமாக்கலும் இன்றைய நிலையும்:
ஸ்ரீலங்கா அரசு தனது இராணுவத்தை நவீன ஆயுதத்தளபாடங்கள் மூலம் பலப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றது. தற்போதைய இராணுவ சமநிலையை உடைத்து புலிகளை வெற்றி கொள்வதற்கு தனது முழு நிதிப்பலத்தையும்
பாவித்து சீனாவிடமிருந்து T-81 ரக 'டாங்கி' களையும், F7 ரக நவீன குண்டுவீச்சு விமானங்களையும், கடற்படைக்கென நவீன டோரா படகுகளையும், செக்கோசிலவாக்கி யாவிடமிருந்து T-55 ரக 'டாங்கி'களையும், வாங்கிக் குவித்துவருகிறது. போர்த் தயாரிப்புகளுடன் தான் இந்தப் போராட்டத்தின் இன்று தளப்பிராந்தியமான குடாநாட்டில் பெரியதொரு படையெடுப்பை மேற்கொள்ளவும், 1987 ம் ஆண்டு வடமராட்சியைக் கைப்பற்றிய பாணியில் (operation liberation) முக்கியமான சிலபகுதி களையாவது கைப்பற்றுவதுமே ஸ்ரீலங்கா அரசின் தற்போதைய திட்டம்.
குடாநாட்டில் படைகளைக்குவிக்கத் தொடங்கிய கணமே அரசின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட விடுதலைப்புலிகள் தமது தரப்பிலும் பாரிய யுத்தத்தயாரிப்புகளை மேற்கொண்டதுடன் மக்களையும் இவ்யுத்தத்திற்குத் தயார்ப்படுத்தினர்.
இந்நிலையில் வடபகுதி
மீதான படையெடுப்பின் ஆபத்தைப் புரிந்து கொண்டு அதனைப் பிற்போட்டுள்ள ஸ்ரீலங்காஅரசு இன்று, தாக்குதல் என்றும் தொடங்கலாம் என்ற ரீதியில் வெறும் உளவியல் யுத்தத்தை (psychological war) குடாநாட்டில் நடாத்தி வருகின்றது.
கிழக்கிலும் என்றுமில்லாதளவு அரச படைகள் பலமிழந்து வருகின்றன. தினமும் தொடரும் புலிகளின் தாக்குதல்களில் பெரும் இழப்புக்களைச்சந்தித்துவரும் ஸ்ரீலங்காப் படைகள் தமது ரோந்து நடவடிக்கைகளையும் பெருமளவில் குறுக்கி வருகின்றனர். அண்மையில் கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்திய வட கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எஸ். கணேசநாதன் நிருபரின் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் அம்பாறையில் உள்ள 10 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் நான்கும், திருமலையில் உள்ள 11 பிரிவுகளில் மூன்றும், மட்டக்களப்பிலுள்ள 10 பிரிவுகளில் ஆறும் மட்டுமே அரச கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறியது (ஆதாரம்/ வீரகேசரி 4-3-92) வடக்கில் புலிகளைப் பலவீனப்படுத்த புறப்பட்ட படைகள் கிழக்கில் எவ்வாறு பலமிழந்துள்ளன என்பதை தெளிவாக இனங்காட்டும். இவரின் கருத்துப்படி கிழக்கின் மொத்த நிலப்பரப்பில் ஏறக்குறைய 58 வீதமான பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது தெளிவாகின்றது.
-அர்ச்சுனா
சுதந்திரதாகம்.
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
No comments:
Post a Comment