"விடுதலைப்புலிகளை நசுக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் இந் நடவடிக்கைகளிலிருந்து மீண்டு போராட்டத்தினை வெற்றிக்கு இட்டுச்செல்வது சாத்தியமா?"
மீண்டும் இப்படியான சந்தேகம் ஒருமுறை தமிழ் மக்களிற் சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஆரம்பித்த போதும் இந்தியாவுடன் மோதி மீளமுடியுமா என்ற சந்தேகம் பலர் மனதிலும் எழுந்தேயிருந்தது.
அன்று தமிழீழத்தின் மீது இந்தியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பினைக் காரசாரமாகக் கண்டித்து எழுதிய இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஓ.வி.விஜயன் (விஜயன் ஒரு தலைசிறந்த மலையாள எழுத்தாளராக வர்ணிக்கப்படுபவர். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பல ஆக்கங்களை எழுதி புகழ்பெற்றவர்.) அவர்கள் கூட விடுதலைப்புலிகள் இந்திய இராணுவ மோதல் ஆரம்பித்தவுடன் எழுதிய கட்டுரை ஒன்றினைப் பின்வருமாறே ஆரம்பித்தார்:
"அநேகமாக இக்கட்டுரை அச்சேறும் போது தமிழீழவிடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருக்கலாம்! ஆனால், அந்த மண்ணின் மைந்தர்கள் 2500 பேர் தமது அடிப்படை உரிமைகளுக்காக, ஒரு பெரிய நாட்டின் படைப்பலம் நடத்திவந்துள்ள அக்கிரமமான,கோழைத்தனமான ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வீரமரணமடையத் தயங்கவில்லை இதுவே வரலாறாக எழுதப்படும்..." (Illustrated weekly - Dec.13th of 1987)
ஆனால், 1990ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி இந்தியா தமிழீழத்திலிருந்து வெளியேறிய போது தமிழீழம் முழுவதிலும் எங்கும் நிறைந்தவர்களாக விடுதலைப்புலிகள் வெளிப்பட்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான 895 நாள் யுத்தத்தில் இந்தியா அரசியல், இராணுவ, இராஜதந்திர, தார்மீக ரீதியில் தோல்வியையே தழுவியிருந்தது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாக இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட நேரடி இராணுவ நடவடிக்கையினாலேயே இந்தியாவினால் விடுதலைப்புலிகளை வெற்றி கொள்ளமுடியவில்லை.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவதன்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவரல், இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பினைப் பேணல், இலங்கையில் தனது நலன்களை உறுதிசெய்துகொள்ளல், இந்தியாவில் முகிழ்த்தெழும் விடுதலைப் போராட்டங்களை அச்சுறுத்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயன்ற இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கிடைத்த தோல்வி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச்செல்லும் விடுதலைப்புலிகளின் மீதான கசப்புணர்வினை வளர்த்திருந்தது.
இவ்விடத்தில் ஒரு வினாவினை எழுப்புதல் முக்கியமானது. இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட கசப்புணர்வு அல்லது முரண்பாடு எப் பின்னணியினைக் கொண்டது என்பதே அவ்வினாவாகும்.
இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் எத்தகைய ஆட்சிமுறை அமையவேண்டும் என்பதனை இந்தியா தீர்மானிக்க முற்பட்டதிலிருந்தே இக் கசப்புணர்வு ஆரம்பமாகியது எனலாம். இன்னொருவகையிற் கூறுவதாயின் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையினை இந்தியா தனது கையில் எடுத்தபோதே விடுதலைப்புலிகள் இந்தியாவுடன் முரண்படத்தொடங்கினர். விடுதலைப்புலிகள் மட்டுமல்ல தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை (அதாவது தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் உரிமை) தமிழீழ மக்களிடமே இருக்கவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கும் எவரும் இந்தியாவுடன் இவ்விடயத்தில் முரண்பட்டே தீருவார்கள்.
விடுதலைப்புலிகளுக்கும் இந்தவகையில் இந்திய ஆளும் வர்க்கத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கசப்புணர்வு தவிர்க்கமுடியாதது. வரலாற்று வளர்ச்சிப்போக்கின்படி இது இயல்பானது.இம்முரண்பாடு அல்லது கசப்புணர்வு தீர்க்கப்படமுடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
இது ஒரு வினாவாக எழுமேயானால் தமிழீழமக்களின் நலன்களின் அடிப்படையில்
சிந்திக்கும் எவரும் எத்தகைய முடிவுகளை எடுக்கமுடியும்?
விடுதலைப்போராட்டத்தில் குதித்துள்ள தமிழீழமக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை இந்திய ஆளும் வர்க்கத்திடம் தாரைவார்த்துக் கொடுத்தால் இம்முரண்பாடு நீங்கமுடியும். அல்லது இந்திய ஆளும்வர்க்கம் தமிழீழமக் களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க முன்வரும்போது இம்முரண்பாடு நீங்கமுடியும்.
மிகச் சுலபமாக எழுத்தில் எழுதிவிட்ட இவ் விடயம் நடைமுறைச் சாத்தியமானதா?
இந்திய ஆளும் வர்க்கத்துடன் சுமுக நிலை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையினை விடுதலைப்புலிகள் இந்தியாவிடம் தாரை வார்க்க முடியாது. அதேவேளை இந்திய ஆளும்வர்க்கம் தமிழீழமக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க உடனடியாக முன்வருமெனவும் எதிர்பார்க்கமுடியாது.
இந்தியாவின் நடவடிக்கைகளும் காரணங்களும்:
இன்றையநிலையில் இந்திய ஆளும் வர்க்கத்தினால் விடுதலைப் புலிகளுக்கெதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுவருகின்றன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தமுடியும்:
1). ஏனைய தமிழகத்திலும் இந்தியாவின் பகுதிகளிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளமை.
2). விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், மூத்த உறுப்பினர் பொட்டம்மான் ஆகியோர் ராஜீவ்காந்தியின் கொலையுடன் இணைக்கப்பட்டுள்ளமை.
3). விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை பலவீனமாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகின்றமை
விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்களுக்கு ஏற்படக் கூடிய சர்வதேச அங்கீகாரத்தினைத் தடுத்து நிறுத்தும் நோக்கமும் இச்செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆனால், ஆழமாகப் பிரச்சனைகளை நோக்கும் எவரும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான உண்மைக்காரணங்களை நன்கு அறிந்துகொள்ள முடியும்.
1). இலங்கைத்தீவில் தமிழீழம் எனும் நாடோ அல்லது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களைவிடக் கூடுதலான அதிகாரம் கொண்ட அரசியல் அமைப்புமுறை வடகிழக்கில் உருவாகுவதை விரும்பாமை. (இது நிகழுமாக இருப்பின் இந்தியாவில் உள்ள மாநிலங் களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.)
2). இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சர்வதேச மத்தியஸ்தம் ஏற்படுவதை விரும்பாமை.
3). இந்திய -இலங்கை ஒப்பந்தத்திற்குக் கிடைத்த தோல்வியும் அதன்மூலம் விடுதலைப்புலிகள் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வும்.
4). இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளை வென்று நிமிர்ந்த விடுதலைப்புலிகளின் வளர்ச்சி தனது நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் எனும் அச்சம். (இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறை யினையும் வெற்றிகொண்டு விடுதலைப் புலிகள் பலம்மிக்க அமைப்பாக வளர்ந்துள்ளமை இந்தியாவில் போராட்டம் நடத்தும் அமைப்புகளுக்கு புதிய உத்வேகத்தினை அளித்துள்ளது.)
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மேற்கண்ட காரணங்கள் பின்னணியில் இருக்கின்றமையினை நாம் விளங்கிக கொள்ளும்போது இந்தியாவின் நடவடிக்கைகளின் நோக்கத்தினையும் புரிந்துகொள்ளமுடியும்.
சாதகமான நிலைமைகள்
இந்தியாவின் எதிர்நடவடிக்கைகளிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்குப் போராட்டத்தினை இட்டுச்செல்வதற்கான
சாதகமான சூழ்நிலைகள் எமக்கு உள்ளன. அவற்றினைத் தொடர்ந்து நோக்குவோம்.
1). எந்த இராணுவத்தினாலும் நசுக்கப்படமுடியாத அளவுக்கு பலமிக்க தேசியப்படையாக விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சிகண்டுள்ளமை.
2) சர்வதேசரீதியாக இன அடிப் படையிலான புதிய நாடுகள் உருவாகுவதும் அதற்கு சர்வதேச ரீதியில் கிடைத்துவரும் அங்கீகாரமும்.
3 )விடுதலைப்புலிகளைத் தவிர்த்து விட்டு இலங்கையின் இனப் பிரச்சனை குறித்துப் பேசமுடியாத யதார்த்தநிலை.
4) இந்தியாவில் மக்களிடையே விடுதலைப்புலிகளுக்கு வளர்ந்துவரும் ஆதரவு.
5) ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாகவுள்ள பிரேமதாசா இந்திய எதிர்ப்பாளராக இனங்காணப்படுவது.
மேற் கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் எமக்கான வாய்ப்புகளை நோக்குவோம்.
விடுதலைப்புலிகள் தமிழீழ மக்களின் முன்னணிப்படையாக தமிழீழத்தில் பெரும் பான்மையான பிரதேசங்களை க் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அப்பிரதேசங்களில் சர்வதேசச் சட்டங்களுக்கு ஏற்றவகையில் அரசநிர்வாக அமைப்பினையும் உருவாக் கிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா எத்தகைய எதிர் நடவடிக்கையினை மேற் கொண்டாலும் அதை முறியடித்து சொந்த மண்ணிலும் மக்களிலும் நம்பிக்கைவைத்துப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நிலைமைகள் உள்ளன.
மேலும், சர்வதேசரீதியாக தேசிய இனங்களின் புதியநாடுகள் தோற்றம்பெற்று வருவது விடுதலைப்புலிகளின் போராட்டம் சர்வதேசரீதியான போராட்டத்தின் ஒரு அங்கம்தான் எனும் உண்மையினை உலகுக்கு வெளிப்படுத்துகிறது. இதனால் எமது போராட் டத்தினை வெறும் பிரிவினைப்போராட்டமாகக் குறுக்கிவிடமுடியாத நிலைமைகள் தோன்றி யுள்ளன.
நேரடி இராணுவநடவடிக்கை மூலமே இந்தியாவினால் தோற்கடிக்கமுடியாத விடுதலைப்புலிகளை அழுத்தங்களினால் அடிபணியவைக்கலாம் என இந்தியா முயற்சிப்பது எவ்விதத்திலும் வெற்றியினைக் கொடுக்கப்போவதில்லை. மேலும், விடுத லைப்புலிகளின் தலைவர்மீது இந்தியாவினால் சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் இருப்பது. விசாரணையில் அரசியல் தலையீடு இருப்பதாக தற்போது வெளிவரும தகவல்கள் மூலம் தெளிவாகிறது.
தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போருக்கு தமிழகத்திலும் பெருகிவரும் ஆதரவு இந்திய ஆளும்வர்க்கத்தின் பலத்த கெடுபிடியையும் மீறி வளருகின்றமையையும் நாம் இங்கு கவனத்திற்கொள்ளமுடியும்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி பிரேமதாசா இந்திய எதிர்ப்பாளராகக் கணிக்கப்படுவதும் இந்தியா ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயற்படுவதற்கு வரையறைகளை இட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையினை நிராகரித்து, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இந்தியா விரும்பும் விளைவுகளைக் கொடுக்கப்போவதில்லை. இந்தியாவினால் அதி உச்ச பட்சம் செய்யக்கூடியது ஒரு குறுங்கால நெருக்கடியினை ஏற்படுத்துவது மட்டுமேயாகும்.
இதற்கு இந்தியா தனது பொருளாதாரத்தைத் திறந்த பொருளாதாரமாக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதும் இந்தி யாவின் சந்தையில் மேற்குலகத்திற்கு இருக்கும் ஈடுபாடும் இந்தியாவிற்குச் சாதகமாக அமையலாம்.
இருந்த போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரலாற்றின் இயல்பான வளர்ச்சிப்போக்கின்படி தோல்வியினையே தழுவிக் கொள்ளும். இதனால் நீண்டகால நோக்கில சிந்தித்து தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது இந்தியாவின் நலன்களுக்கும் நன்மை பயக்கக்கூடியது என்பதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து செயற் பட வேண்டும்.
தமிழீழ மக்களின் உறுதியான போராட்டமும் எந்தவிதமான நியாயமான தீர்வுக்கும் வரமறுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதமும், மாற்றமுற்றுவரும் சாதகமான சர்வதேச சூழ்நிலைகளும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தினை வெற்றிக்கு இட்டுச்செல்லும் நிலைமைகளை உருவாக்கிக் கொண்டே உள்ளன.
-திலீபன்
-சுதந்திரதாகம் 1992.
No comments:
Post a Comment