Thursday, 12 February 2026

The Politics Of Duplicity -அன்ரன் பாலசிங்கம் - புத்தக விமர்சனம் க வே பாலகுமாரன்

உண்மை உலகை பாதிதூரம் வலம்வர முன்னர் பொய்மை உலகை பலமுறை சுற்றிவந்து விடும் என்பார்கள். இது போலத்தான் 1995 ஏப்பிரலின் பின் நடைபெற்றது. புலிகளுக்கும், சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்திற்குமிடையே நடைபெற்ற பேச்சுக்கள் முறிவ டைந்தபோது, அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியது போலவே புலிகள் தமது பக்க நியாயத்தை உலக அரங்கில் முன்வைக்கும் முன்னரே ஒருதலைப்பட்சமாக உலகம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. 
ஆனால் இப்போது உண்மை உலகை வலம் வரத்தொடங்கிவிட்டது. 1995-2000 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலம் சற்று நீண்டதுதான் ஆயினும் காலம் தாழ்த்தினாலும் மிக காலப் பொருத்தமாக புலிகளின் அர சியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட " நயவஞ்சக அரசியல்" 
(The politics of Duplicity) வெளிவந்துள்ளது.

தனது உடல்நலக்குறைவிற்கு மருத்துவம் பார்க்கச் சென்றவர் அம்மையாருக்கு இப்போது அதிர்ச்சி மருத்துவம்ப பார்த்திருக்கின்றார். 
தங்கள் தரப்பின நியாயங்கள் உலக அரங்கு ஏறவில்லையே என்கிற எம் மக்களின் பெருத்த மனக்குறை நீக்கும் வகையில் இராசதந்திர உலகின் வல்லுநர்களுக்கும் எம் மக்களின் பால் நேயம்கொண்டவர்க்கும் விளக்கும் வகையில் இலகு,இராசதந்திர மொழியில் நூல் ஆக்கப்பட்டுள்ளது. தனக்கேயுரிய இயல்பான அமைதியான ஆனால் அழுத்தம் திருத்தமான ஆணித் தரமான நடையில் பாலசிங்கம் அவர்களால் நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்நூல் வெளிவந்த காலப்பொருத்தம் தான் என்ன? 1995 ஏப்பிரல் பேச்சுக்கள் முறிவடைந்தன; ஆறாண்டுகளாக பெரும் போர் தொடர்கின்றது இப்போதே சர்வதேசத்தின் சார்பில் நோர்வே மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க முயற்சிகளைத் தொடர்கின்றது. ஆகவே அன்று ஏன் பேச்சுக்கள் முறிவடைந்தன? இவை தொடர்பில் புலிகளின் உள்ளப்பாடு என்ன? இவற்றினை உலகிற்கு உரைப்பதற்கு அண்ணை ' என உள்ளன்புடன் தலைவராலும், போராளிகளாலும், மக்களாலும் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கமே மிக்க பொருத்தமானவரல்லவா? அனன்றைய பேச்சுக்களிலும் இன் றைய பேச்சுக்களிலும் நேரடித் தொடர்பு படுகின்றவராகவும் தலைவரின மன நிலையை உணர்ந்தவராகவும் அவரே இருக்கின்றார். இந்நூலின் வெளியீடு பிரதிபலிக்கும் இன்னொரு அரசியல் பெறுமானமொன்றையும் இங்கே பதிவாக்க விரும்புகின்றேன். 1995 ஏப்பிரலின் பின் இடை விட்டு ஆனால் இடைவிடாமல் அம்மையார் என்ன பிரகடனம் செய்து வந்தார்? 
புலிகளை நோக்கி சவால் அல்லவா விடுத்தார்? உலகத்திற்கு உறுதிமொழியல்லவா கொடுத்தார்? புலிகளே பேச்சுக்களை குழப்பினர்; முன்னறிவித்தலின்றி திடீரென போரைத் தொடங்கி னர்; இவற்றினை நிரூபிக்க தக்க சான்றுகளாக எனக்கும் பிரபாகரனுக்குமிடையிலான கடிதங்கள் உள்ளன; இவற்றினை வெளியிட்டால் புலிக ள் மூச்சுப் பேச்சற்று மூலைக்குள் முடங்க வேண்டியதுதான்; மிக விரைவில் கடிதங்களை வெளியிடுவேன் என வீராப்பாக கதைவசனம் பேசி நாடகமாடி வந்தார். இதற்கு அவர் துணை சேர்ந்த புரொன்ட்லைன் 'ராம் எனப் படும் ஒரு பத்திரிகையாளனுக்குரிய நியாய எல்லைகளைக் கடந்து தனது மார்க்சிய அறிவையே ஒரு இனத்தின் விடுதலைக்கெதிராக பயன்படுத்தும் இன்னொரு இரட்டை வேட,மலின அறிவுவாதி ஆவார்."

அம்மையாரின் இமாலயப் புளுகுகளுக்கு உண்மைப்பூச்சு பூசும் வேலை இவருக்கு. இப்போது கடிதங்கள் வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் எவராலும் தக்க நேரத்தில் தவிர்க்க முடியாத, முகத்திலறையும் உண்மையாக இந்நூல் வெளியாகி உலகில் உலவுகின்றது. மீண்டும் தனது பழைய உளுத்து போன வாதத்தினை முன்வைக்கும் வாய்ப்பினை, பாலா அண்ணை இப்போது அம்மையாரிடம் இல்லாது செய்துவிட்டார். இதனால் பெருத்த மனநிம்மதியை எம்மக்கள் அடைகின்றார்கள்.

முன்னுரையாக வரும் அறிமுகவுரை, முடிவுரையாக வரும் பேச்சுக்கள் தோல்வியடைந்தமை தொடர்பான பிரதிபலிப்புக்கள் தவிர ஐந்து அத்தியாயங்களாக நூல் வகுக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு செப்டெம்பர் தொட்டு 1995 ஏப்பிரல் வரையான காலப்பகுதி இவ்வைந்து அத்தியாயத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. முழுநூலின் உள்ளடக்கமுமே மிகச் சுருக்கமாக அறிமுகவுரையில் அமைகின்றமை குறிப்பிடத் தக்கது. 
பாலா அண்ணையின் அனுபவ முதிர்ச்சியின் ஆற்றல்மிகு சொற்றொடர்களை அரசியல் வரைவிலக்கணங்களின் பல கீற்றுக்களை இப்பகுதியில் மட்டுமல்ல நூலெங்கும் நாம் காணமுடியும். தமிழ்மக்கள் தொடர்பில் மட்டுமல்ல சிங்களதேசத்தை, சருவ தேசத்தை அணுகிய முறையாலும் அம்மையாரின் இரட்டைவேடப் போக்கினை வெகு பொருத்தமாக  நயவஞ்சக அரசியல்' எனும் தொடருக்குள் பொதித்தவர், எம்மக்கள் தொடர்பான அவரது நயவஞ்சக அரசியலை. "Peace trap for a Longierm war" காலப் போருக்கான அமைதிப்பொதி என வருணிக்கின்றார். அறிமுகவுரை யதார்த்தமான கணிப்போடு ஆரம்பமாகின்றது. ." ஏப்பிரல் 1995ம் ஆண்டில் பேச்சுக்கள் முறிவடைந்த போது சருவதேச சமூகம் எவ்வித தயக்கமு மின்றி புலிகளே பேச்சுக்கள் முறிவடைந்தமைக்கு காரணம் என கண்டனம் தெரிவித்தது. புலிகள் தமது தரப்பு வாதத்தினை முன்வைக்க முன்னரே உலகம் தீர்ப்பை வழங்கிவிட்டது. சருவதேச தொடர்பு சாதன ஊடகங்களோடு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு தனிமைப்பட் டிருந்த புலிகளால் தமது தரப்பு நியாயத்தை உடன் முன்வைக்க  முடியவில்லை. எனவே சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட பாரிய சருவதேச பொய்மைப் பரப்புரையால் வெற்றியீட்டி உலகை தன்பக்கமாக்கிக் கொண்டது.''

யாழ்ப்பாணப் பேச்சுக்கள் ஒரு மீளாய்விற்குட்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கே தெளிவாக்கப்படுகின்றது. "சருவதேச சமூகம் மீண்டும் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் பேச்சுக்களை தொடங்க முயலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் யாழ் பேச்சுக்கள் தொடர்பில் ஒரு நுணுகிய பார்வை இப்போது அவசியமாகின்றது. இதன்மூலம் புலிகளின் மன நிலை, அவர்கள் உள்ளார்ந்த நிலைப்பாடு என்பனவற்றை அறியமுடியும். ஏனெனில் சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் தொடர்பில் புலிகள் காட்டும் மிக ஆழமான அவநம்பிக்கை, பேச்சில் ஈடுபட அவர்கள் காட்டும் பெரும் தயக்கம், இவையெல்லாவற்றினதும் வேர்கள் யாழ் பேச்சுக்களின் போது புலிகளின் தலைமை பெற்ற கசப்பான அனுபவங்களி லேயே உள்ளன" என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

எதனை ஆதாரமாகக் கொண்டு எவ்விதம் நூல் ஆக்கப்பட்டுள்ளது? இதனையும் அறிமுகவுரையில் ஆசிரியரே விளக்கிவிடுகின்றார் "முரண்பாடுகளின் தீர்வு தொடர்பில் இதுவரை அறியப்படாத ஒரு தனித்துவமான முறையில் யாழ் பேச்சுக்கள் நடைபெற்றன (‘Adopting a peculiar modality hitherto unknown in the discurse of conflict resolution") இரண்டு மட்டத்தில் நடைபெற்றன. ஒரு மட்டத்தில் இரு தாப்பினதும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நேரடிப் பேச்சுவார்த்தை; மறு மட்டத்தில் அரசினதும் புலிகளினதும் தலைமைகள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் மூலமான மறைமுக பேச்சுவார்த்தை; ஆறுமாத காலத்தினுள் ஆக நான்கு சுற்றுக்கள்; அவையும் ஒவ் வொன்றும் ஓரிரு நாட்களே நீடித்த மிகக்குறுகிய காலவளவைக் கொண்டவை; எனவே மிகப் பரந்துபட்ட ஒரு அரசியல் சிக்கலை அதுவும் முடிவுகள் எடுப்பதற்கு அகிகாரமற்ற ஒரு தாழ்நிலைக் குழுவோடு (Low key team) பேசி எவ்வித நேரடிப்பயன் எதுவுமே கிட்டாத நிலையில் இருதரப்பு தலைமைகளுக்கிடையில் நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகளே முக்கியமானதும் தீர்க்கமானதுமாகின்றன " இவற்றில் பல தலைவர் பிரபாகரனுக்கும் சிறிலங்கா அரசின் தலைவி என்கிற வகை யில் சந்திரிகா அம்மையாருக்கும், பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் என்கிற வகையில் ரத்வத்தவிற்குமிடையிலாவை.
ஏனையவை திரு தமிழ்ச்செல்வனுக்கும் திரு. பாலபத்த பெந்திக்கும் இடையிலானவை.

ரத்வத்தவிற்கும், தமிழ்ச்செல்வனுக்குமிடையிலான சில கடிதங்களும் நூலில் உள்ளன. இவ்வாறாக கடிதங்களுக்கூடாக ஒரு காலகட்ட அமைதிப்பேச்சு வரலாறு நகர்த்தப்படுகின்றமை இந்நூலின் புதுமை (மொத்தமாக 49 கடிதங்கள்).

நூலின் முதலாவது அத்தியாயம் மட்டுமே

அபைதிப்பேச்சுக்களின் முதலாவது சுற்று (1994
ஒக்ரோபர் 13, 14) அமைதியாக நடந்ததை பதிவு செய்கின்றது.

 1994 ஆகஸ்டில் அம்மையார் பிரதம மந்திரியாக பதவியேற்ற பின் காட்டிய நல்லெண்ணத்தைப் பாராட்டியும் தலைவர் தனது நிலைப்பாட்டினை மிகத் தெளி
வாகவும் (1. பூரணமாக பொருண்மியத் தடைநீக்கப்படல், 
2 இயல்புநிலை உருவக்கல்,
3 நிபந்தனையற்ற பேச்சுக்கும், போர்நிறுத்
தத்திற்கும் தான் தயாராகவிருக்கின்றமை )
விளக்கி எழுதிய 02. 09. 1994 திகதிய முதலாவது கடிதம் இடப்பெறுகின்றது. 

எனினும்அம்மையார் முதலாவது சுற்றுக்கு அனுப்பிய தாழ்நிலை அரசாங்க குழு தொடர்பில அவர் ஐயம் கொள்ளத் தொடங்கியமையும் இங்கே
குறிப்பிடப்படுகின்றது.

தலைவர் எழுதிய முதலாவது கடிதத்திற்கும் அவர் இறுதியாக அனுப்பிய 18.04.1995 திகதியிட்ட கடிதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடந்தவை மிக விரிவாக காலவொழுங்கு முறைப்படி வரிக்குவரி
கடித ஆதாரங்களோடு அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 

முரண்பாடுகள் எவ்வாறு முற்றின என்பது சம்பவங்கள்
வழி வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் (சனவரி 2,1995), 
மூன்றாம் சுற்றுப்பேச்சுக்கள் (சனவரி 14.1995) வெளித்தோற்றத்திற்கு மோதல் தவிர்ப்பு உடன்பாடு, சில பொருட்களின் தடை நீக்கம் போன்றவற்றிற்கு வழிவகுத்த போதும் உண்மையிலே ஆழமான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவே வழி வகுத்தன. 

இப்பேச்சுக்கும் இவற்றின் பின்னரும், முன்னரும் ரத்வத்தவும், அம்மையாரும் அனுப்பிய கடிதங்களும் தலைவர் மனதிலே எத்தகைய எண்ணவோடடங்களை கிளப்பின என்பதை பாலா அண்ணை வெகுபக்குவமாக பதிவு செய்துள்ளார். 
இச்சிந்தனை வரலாற்று வழிவந்த சிங்கள பேரின வாதத்தின் கருத்தியல் தோற்றம் பற்றியது. மக்கள் அன்றாடம் படும் இன்னல்களை முதலில் நீக்குங்கள் என மோதல் காலத்தில் ஒவ்வொரு தடவையும் புலிகள் வற்புறுத்தியபோது இழுத் தடித்து இறுதியில் இவை பாதுகாப்பு தொடர்பானவை,

 இராணுவத்தின் நலன்களுக்கு தீங்குபயப்பவை (பக்கம் 108. அம்மையாரின்
 09 03.1995 ம் திகதி மடல்) என காரணம் காட்டப்பட்டதன் ஆழமான உள்ளர்த்தம் என்ன?

இதுவே இந்நூல் மூலம் பாலா அண்ணை எழுப்பும் பெரும் கேள்வியாகும். நூலின் இறுதியில் இதற்கான விடை விரிவாகத் தரப்பட்டுள்ளது. முடிச்சவிழ்க்கப்படாத புதிர் ஒன்று இந்நூல் மூலம் முடிச்சவிழ்க்கப்படுகின்றது. எம்மக்கள் தாம் எதிர்நோக்கிய அரசியல் சிக்கலை தீர்க்க முயன்றபோது அதைத் தடுக்கவே இராணுவ அடக்குமுறை உள்ளிட்ட தடைக்கு மேல் தடை அவர்களால் விதிக்கப்பட்டது. இப்போது அவர்களே அரசியல் சிக்கலை தீர்க்க முன் வருவதாக கூறும்போது எம்மக்களின் அன்றாடவாழ்வைச் சிதைக்க அவர்களே இட்ட தடை, நீக்கவேண்டியது அவர்களின் பொறுப்பு அல்லவா? இத் தடை நீக்கம் எவ்வாறு இராணுவ நலன்களைப் பாதிக்கும்?

இதுவே பேச்சுவார்த்தைகள் தோற்றமைக்கான பிரதான காரணங்களில் ஒன்று. இத னையே நூலாசிரியர் பக்கம் 110 இல் தொகுத்துத் தருகின்றார்.

(அ) பொருண்மியத்தடை பூரணமாக நீக்கப்படாமை, அவ்வாறு நீக்கப்பட்ட பொருட்க ளும் எம்மக்களை சென்றடையாமை.

ஆ) அரசாங்கம் ஒரு நீடித்த நிலையான போர் நிறுத்தத்திற்கு தயாராக இல்லாமை.

(இ) கரையோர மேலாதிக்கத்தைப்பேண மீன் பிடித்தடையை நீக்காமை.

(ஈ) கிழக்கில் போராளிகளின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாக்கப்பட்டமை.

(உ) தரைவழிப்பாதை திறக்க உடன்படாமை அதாவது பூநகரி இராணுவ முகாமை மூட விரும்பாமை. 
இவற்றினை விட இன்னொரு பிரதான காரணமும் பேச்சுக்கள் தோற்றமைக்கு வழிவகுத்தது. அது புலிகள் தொடர்பான அல்லது தமிழ் மக்களின் தேசிய இனச்சிக்கல் தொடர்பான சிங்களத்தின் மேலாதிக்க அணுகு முறை. இதனை கண்டித்து தலைவர் அவர்கள் அம்மையாருக்கு அனுப்பிய 28. 03. 1995 திகதிய கடிதத்தில் கூறுகின்றார் (பக்கம் 128) " உங்களுடைய கடிதத்தில் உங்களது அரசாங் கத்தால் புலிகளுக்கு பல சலுகைகள் அல்லது விசேடித்த உரிமைகள் என்பன நம்பிக்கையை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டதாக எழுதியுள் வீர்கள். உங்களது கருத்துப்படி ஆயுதங்களை கீழே வைக்க கோராமல் பேச்சுக்கள் தொடர்கிறமை, மோதல் தவிர்ப்பு உடன்பாடு, யாழ்ப்பாணத்திற்கு பேச்சுவார்த்தைக் குழு அனுப்பப்பட்டமை எல்லாம் இத்தகைய சலுகைகள். இது தவறான பார்வை. இவை புலிகளுக்கு நீங்கள் வழங்கிய சலுகைகளோ அல்லது விசேட உரிமைகளோ அல்ல. இவை ஒரு அமைதி முயற்சியினை முன்னெடுப்பதற்கு தேவையான முன்னவசிய சூழலை உருவாக்க அவசியமானவையாக கருதப்படவேண்டும். 

புலிகள் ஒரு ஆயுதக்குழு என்கிற உங்கள் பார்வை தவறான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் :தமிழ் மக்களின் உள்ளத்துணர்வுகளை, அபிலாசைகளை பிரதிபலிக்கின்ற, அவர்களோடு ஒன்றித்த இயக்கம். இவ்வடிப்படையி லான எமது முதன்மைத் தானத்தினை ஏற்றே நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு முன்வந்தபின் அமைதி முயற்சிகளின் முன்னெடுப்பிற்கு அவசியமானவற்றை பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஒரு குழுவிற்கு வழங்கப்படும் சலுகைகளாக கருதல் தவறானதாகும்." 

இப்பதில் அம்மையாருக்கு மட்டுமல்ல பயங்கரவாதப் பட்டம் சூட்டும் அகில உலகத்திற்கும் பொருத்தமானதே. இதன் தொடர்பில் தன்னையொரு முற்போக்குவாதி,தாராண்மைவாதியாக தொடக்கத்தில் காட்டிக்கொண்ட அம்மையார் 1986 இன் முற் பகுதியில் சென்னையில் ஆசிரியரைச் சந்தித்த போது தமிழ்மக்களின் தேசிய இனச்சிக்கலை எவ்வாறு மிகத்தவறாக வேண்டுமென்றே புரிந்து கொண்டிருந்தார் என்பதை முதல் அத்தியாயத்தின் தொடக்கத்திலே ஆசிரியர் எழுதியிருப்பதையும் வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இவ்வாறாக மூன்று சுற்றுப் பேச்சுக்களின் பின் நிலமைகள் வேகமாக மோசமடைவதை பாலா அண்ணை வெகு கவனமாக பதிவு செய்கின்றார்.

 தலைவரின் பொறுமையிழப்பு, தனது வேண்டுகைகளை நிறைவேற்ற ஒரு கால எல்லையாக 28. 03. 1995ம் திகதியை தனது 16.03.1995 திகதிய கடிதம் மூலம் அறிவித்தமை. பின் அதனை 19. 04. 1995ம் திகதி வரை தனது 06.04.1995 திகதிய மடல் மூலம் நீட்டித்தமை . இவை எல்லாமே ஒரு காலக்கெடு என்றில்லாமல் அம்மையார் தனது நயவஞ்சக இரட்டை வேடப்போக்கினை மாற்ற கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முன்னறிவித்தலுமாகவே வரலாறு கருதும் என்பதே நூலின் முழுமை உணர்த்தும் செய்தி. 

இதன் பின்னரும் அம்மையார் தனது போக்கினை மாற்றாமல் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் ஒரு ஆயர் உட்பட பல தரப்பினரையும் இணைத்து அரசாங்க தூதுக்குழுவை நான்காம் சுற்றுக்கு 10.04.1995 அன்று அனுப்பியமை, அதன் பின்னான 12.04.1995 திகதிய அவரது கடிதம் எதுவுமே தலைவர் மனதினை மாற்றப் போதுமானவையாக அமையவில்லை.

ஒரு விடுதலை இயக்கத்தோடு பழைய காலம் கடந்த புளித்துப்போன அணுகுமுறையான, அரசு என்கிற ஆணவ நிலையிலிருந்து அணுகுதல். கூடவே பௌத்த பேரினவாதத் திமிரும் சேர்ந்தால் என்ன பயன் விளையும் என்பதனை அமமையாருக்கு மட்டுமல்ல உலகத்திற்கும் உணர்த்திய தலைவரின் வரலாற்றுப் பதி வாகிவிட்ட 18. 04. 1995 திகதியிட்ட இறுதி மடல் இவ்வாறுதான் முடிகின்றது.

 "நாங்கள் உங்களுக்கு ஏற்கெனவே அறிவித்தது போன்று பேச்சு வார்த்தையிலிருந்தும் மோதல் தவிர்ப்பு உடன் பாட்டிலிருந்தும் விலகிக்கொள்வது என்கிற வேதனை தரும் முடிவினை எடுப்பதைத் தவிர வேறுவழி எமக்கு முன்னில்லை." இவ்வாறாக வேறுவழி எதனையும் அம்மையார் முன்வைக்கவில்லை என்கிற நிலைப்பாட்டோடு பக்கத்துடன் இந்நூல் முடிவடைந்திருக்கவேண்டும்.

ஆனால் இத்தோடு நூல் முடிவடையவில்லை. 1995 ஏப்பிரலில் இருந்து புலிகளுக்கெதிராக மிகப் பாரியளவில் வெற்றிரமாக மேற் கொள்ளப்பட்ட அமைதிக்கான போர் என்கிற நயவஞ்சக பரப்புரைக்கு அடிப்படையாக அமைவது இரண்டே இரண்டு விடயங்கள். ஒன்று புலிகள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சடுதியாக தாக்குதலை தொடங்கினர் என்பது. 

மோதல் தவிர்ப்பு உடன் பாட்டின்படி 72 மணித்தியாலங்கள் முன்னறிவித்தல் கொடுத்தால் போதுமானது என்றிருந்த போது அரசியல் நிலைமைகளை கணக்கிலெடுத்தே தலைவர் அவர்கள் தனது மூன்று மடல்கள் மூலம் மூன்று வாரத்திற்கு மேற்பட்ட கால அவகாசத்தினை வழங்கினார் என்பது நூலின் வழி மிகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதும் வலுவான காரணமாக அம்மையரால் முன்வைக்கப்பட்டது. 

புலிகளுக்கு அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களில் ஈடுபட துளியளவும் விருப்பமில்லை; நாங்கள் தயாராகவிருந்த போதும் அவர்கள் தட்டிக்
கழித்தனர் என்பதே.

இதற்கான பதிலே 145ம்
பக்கத்திலிருந்து ஆரம்பமகின்றது. 
பேச்சுக்கள்முறிவடைந்தமைக்கான காரணங்கள் நேர்மை
யாக புலிகளின் யதார்த்த நிர்ப்பந்த நிலைமை உட்பட - முன்வைக்கப்படுவதோடு இற்றை வரை வெளிச்சத்தைக் காணாத அரசியல்
தீர்வு எங்கே? ஏன் அது நடை முறைச் சாத்தியமாகவில்லை? என்பதும் தெளிவாக்கப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்விதம் ஆழ அகலமாக வேரோடி தாபனமயப்படுத்தப்பட்டு நிற்பதனையும் அதனைச் சார்ந்தேஇயங்கும் (சாராமல் இயங்கமுடியாது ) அம்மையார் போடும் இரட்டைவேடம், நயவஞ்சகம்என்பது எத்தகையது என்பது தெளிவாக்கப்படுகின்றது. இப்போது அம்மையாரின் எல்லா வேடமும் அம்பலமாகி, சகல குட்டுக்களும் உடைந்து அமைதிக்கான போர், புலிகளுக்கு இராணுவத்தீர்வு, மக்களுக்கு அரசியல் தீர்வு.
எனபனவெல்லம் மிக மோசமான கொடூரமான நகைச்சுவை துணுக்குகளாகிவிட்டன. 

புலிகளின ஆறாண்டுகால விடுதலைப்போர்,களத்தில் அம்மையாரின் அரசியல், இராணுவ இலக்குகளைச் சிதறடிக்க, இராசதந்திரக்களத்தில் திரு. அன்ரன் பாலசிங்கத்தின் நூல் இதே பணியைச் செய்கின்றது.

உண்மையை உலகம் உணருமா? இனி மேலாவது ஒரு புதிய விழிப்பைப் பெறுமா?

பாலா அண்ணை இவ்வாறுதான் நூலை நிறைவு செய்கின்றார். "தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போர் சிங்கள பௌத்த இனவாதத்தின் நேரடி வெளிப்பாடு என்பதை எப்போது சருவதேச சமூகம் உணர்கின்றதோ. அப்போதுதான் இனப்படுகொலை அழிவுகளை தமிழ்த்தேசத்தில் ஏற்படுத்தும் இப்போருக்கு உதவுவதிலிருந்து, சருவதேச சமூகம் தன்னை விடுவித்துக் கொள்ளும்.'' இப்படியாக உணர வைக்கப்படும் முயற்சியே இந்நூல்.

-நூல்விமர்சனம்
-க.வே.பாலகுமாரன் அண்ணை.
புலிகளின் மூத்த உறுப்பினர்.

விடுதலைப்புலிகள் இதழ்.
ஐப்பசி,கார்த்திகை.2000.

தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர் த

No comments:

Post a Comment