நவீன வரலாற்றில் நிகழ்ந்த மனிதப் படுகொலைகளில் ஜாலியன்வாலாபாக் படுகொலையும் ஒன்றாகும்.
இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்திருக்கின்ற ஜாலியன்வாலாபாக் என்ற மைதானத்தில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி இப்படுகொலை நடந்தது.
அதனாலேயே அப்படுகொலை ஜாலியன்வாலாபாக் படுகொலை என அழைக்கப்படுகின்றது.
அப்போது இந்திய தேசத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பிரிட்டிஷ் படைகளினால் நடத்தப்பட்ட இக்கொடூர காட்டுமிராண்டித்தனமான படுகொலை நிகழ்ச்சியில் 2000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
முதலாம் உலகப்போர் 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியா சில நன்மைகளைப் பெறும் என இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் நம்பினார்கள்.
அதன் மூலம் படிப்படியாக இந்திய அரசு இயந்திரத்தில் இடம் பிடித்து, தன்னைத்தானே ஆளுகின்ற ஒரு அரசியலமைப்புச் சட்டமொன்றை உருவாக்கி,இந்திய தேசத்திற்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துவிடலாமென எதிர்பார்த்தனர்.
ஆனால். இந்தியர்கள் எதி பார்த்ததற்கு மாறாக. இந்திய மக்களின் அரசியல் விருப்பங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஒரு புதிய சட்ட வரைவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்கள் மீது திணித்தனர்.
ஆனால் அச் சட்ட வரைவை முழுமையாக எதிர்க்க இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் முடிவு செய்தனர்.
நாடு தழுவிய ரீதியில் - அகிம்சை வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய மக்கள் எடுத்தனர். ஆக்கிரமிப்பாளர்களான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும் எதிர்ப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்திய மாகாணங்களுள் ஒன்றான பஞ்சாப்பின் ஆளுநராக இருந்த மைக்கல் ஓ டயர் (Michael O' Dwyer) தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் எதிர்ப்பை ஆயுத பலம் கொண்டு ஒடுக்க முடிவு செய்தான்.
அதன் பொருட்டு பஞ்சாப் மாகாண இராணுவத் தளபதி ஜெனரல் டயரை (General Reginold Edward Harry Dyer) அழைத்து இராணுவ வழியில் மக்களின் எதிர்ப்பை நசுக்குமாறு பணித்தான்.
ஏப். 13ஆம் திகதி மாலை, அமிர்தசரஸ் நகரிலுள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு எதிர்ப்புக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட் டது.
ஆனால் சகல கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மக்கள் மிரட்டல்களுக்குப் பணியவில்லை. ஏற்கெனவே தீர்மானித்தபடி ஜாலியன்வாலாபாக்கில் கூடத் தொடங்கினர்.
கூட்டத்திற்கு சுமார் 5,000பேர் வந்திருந்தனர் தேசபக்திப் பாடல்களுடன் கூட்டம் ஆரம்பமானது.
கூட்டம் நடைபெறுவதைக் கேள் வியுற்ற இராணுவத்தளபதி ஜெனரல் டயர் ஆத்திரம் கொண்டு, தனது போர் வீரர்களுடன் ஜாலியன்வாலாபாக் நோக்கிப் புறப்பட்டான்.
கூட்ட மைதானத்திற்குச் செல்லும் பாதை மிக ஓடுங்கியதாக இருந்ததால் அவன் கொண்டு சென்ற கவச வாகனங்களையும், இயந்திரத்துப்பாக்கிகளையும் வெளியே விட்டுவிட்டு 90 போர் வீரர்களுடன் கூட்ட மைதானத் திற்குள் நுழைந்தான்.
மைதானத்துள் சென்றதும், தனக்கு வலப்புறமாகவும் இடப் புறமாகவும் அணிவகுத்து கூட்டத்தினரை நோக்கி நிலையெடுக்கும் படி போர்வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
கூட்டத்தைக் கலைந்து செல்லும் படி கேட்கவுமில்லை,கூட்டத்தினரை எச்சரிக்கை செய்யவுமில்லை.
திடீரென சுடும்படி கட்டளையிட்டான். படையினர் சுடத் தொடங்கியதும் மக்கள் மிரண்டு ஓடினர். இரத்தம் பீறிட்டுப்பாய்ந்தது.
படுகொலை நடைபெற்ற போது ஜெனரல் டயரினது மெய்ப்பாது காவலனாக நின்ற ''சார்ஜன் அண்டர்சன் (Sergent w. j. Anderson) என்ற போர்வீரன் பின்னர் சொன்னான் ....
நாங்கள் சுடத்தொடங்கிய போது கூட்டம் மிரண்டு வீழ்ந்தது. பின்னர் எழுந்து ஓடியது. இடையிடையே துப்பாக்கிச் சூடுகள் நிறுத்தப்பட்ட அந்த ஒரு சில வினாடிகளில், குண்டடிபட்டு வீழ்ந்தவர்களது முனகல்கள் எனக்குக்கேட்டது.
எந்தெந்தத் திசைநோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடாத்த வேண்டுமோ அங்கெல்லாம், ஜெனரல் டயர் தனது கைவிரலால் சுட்டிக் காட்டியபடி கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.
இப்படுகொலையில் பங்குபற்றிய இன்னொரு பிரிட்டிஷ் போர்வீரனான கப்டன் பிறிக்ஸ் (Captain Briggs) பின்வருமாறு சொல்லியிருந்தான்.
"நாங்கள் சுடத்தொடங்கிய போது கூட்டம் இரண்டு பகுதியாகப் பிரிந்து ஓடியது. முதலில் ஒரு பகுதி மீது சுடும் படி எங்களுக்குக் கட்டளை பிறப் பிக்கப்பட்டது. அதன் பின்னர் மறு பகுதி மீது சுடும்படி பணிக்கப்பட்டோம்.
துப்பாக்கிகளின் ரவைகள் தீர்ந்ததும், ரவைகளை மீண்டும் நிரப்பி தொடர்ந்தும் சுடும்படி ஜெனரல் டயர் கட்டளையிட்டான்.
அம்மைதானத்தில் எங்கெங்கு மக்கள் அடர்த்தியாக நெருக்கமாக நின்றார்களோ அங்கெல்லாம் சுட்டிக்காட்டி, சுடும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்".
ஜெனரல் டயரினது நேரடி உத்தரவின் பேரில் அவனது காட்டு மிராண்டிப்படைகள் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் சுட்டுத்தள்ளின.
ஜாலியன் வாலாபாக் மைதானம் மனித இரத்தத்தால் நிறைந்தது.
இப்படுகொலைச் சம்பவம் நடந்து சுமார் எட்டு மாதங்கள் வரை உலகின் கண்களுக்கு மூடி மறைக்கப்பட்டது.
இறுதியில் படுகொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தபோது நீதி விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது:
(Lord Hunter) என்பவரது தலைமையில் பிரிட்டிஷ் தரப்பு, இந்தியத் தரப்பையும் கொண்ட விசாரணைக் குழுவொன்று உருவாக்கப்பட்டு விசாரணை நடந்தது.
விசாரணைக் குழு முன் ஜெனரல் டயர் திமிராகப் பதிலளித்தான்.
மைதானத்திற்குச் செல்லும் நுழைவாயில் அகலமானதாக இருந்திருப்பின் இயந்திரத்துப்பாக்கிகளையும் உள்ளே கொண்டு சென்று பயன்படுத்தியிருப்பீர்களா? என ஒரு விசாரணைக் குழு உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, "ஆம்! என ஜெனரல் டயர் பதிலளித்தான்.
யாராவது ஒருவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றி ஜெனரல் டயரிடம் கேள்வி கேட்டால் அதற்கு அவன் எப்பொழுதும் அளித்த பதில்...
''ஆம். நான் அதேமாதிரி ஒரு படுகொலைச் சம்பவத்தை இனியும் செய்யத் தயார்." இத்தகைய கொலை வெறியனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்னவெனில், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குத் திருப்பி அழைக்கப்பட்டது மட்டும் தான்.
பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தியது போல இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் தலைமையில் இயங்கிய இந்திய தேசிய காங்கிரசும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது.
படுகொலையை அந்தக்குழு நேரில் நின்று நடத்தி முடித்த இராணுவத் தளபதி ஜெனரல் டயர் மட்டுமல்ல இவற்றுக்கெல்லாம் சூத்திரதாரியான பஞ்சாப் ஆளுநர் மைக்கல் ஓ டயரும் காரணமெனப் பிரகடனப் படுத்தியது.
இப்படுகொலை நடைபெற்ற போது கூட்டத்திற்கு வருகை தந்தவர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த "உத்தம் சிங்' என்ற சிறுவனும் கையில் காயமடைந்து நிலத்தில் வீழ்ந்தான். அவனுக்குமேல் அடுக்கடுக்காக வீழ்ந்த மனித உடல்கள் அச்சிறுவனைச் சூழ கவசமாக வீழ்ந்து கிடந்தன அதனால் அச் சிறுவன் உயிர்பிழைத்தான்.
படுகொலை முடிந்து ஜெனரல் டயரினது படைகள் வெளியேறிய பின்னர், பிணங்களை விலக்கிக் கொண்டு அவன் எழுந்து பார்த்தான். மைதானம் முழுவதும் மனிதப் பிணங்கள் மலைபோலக் கிடந்தன.
இப்படுகொலை
நிகழ்ச்சிக்குக் காரணமாயிருந்தவனை பழிவாங்குவதென, அன்றே அச்சிறுவன் சபதமெடுத்தான்.
இப்படுகொலையின் சூத்திரதாரியாக, அரசியற் போர்வைக்குள் நின்று செயற்பட்ட பஞ்சாப் ஆளுநர் மைக்கல் ஓ டயரையே உத்தம் சிங் கருதினான்.
நேரடியாக நின்று படுகொலையைப் புரிந்த ஜெனரல் டயரை ஒரு அம்பாகவே கருதினான்.
எனவே எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை என நினைத்து மைக்கல் ஓ டயரைக் கொன்று பழிதீர்க்க முடிவெடுத்தான்.
படுகொலை முடிந்தபின். அதற்காக ஜெனரல் டயருக்கு உடனடியாகப் பதவி உயர்வு வழங்க வேண்டுமென, பிரிட்டிஷ் அரசுக்கு ஆளுநர் மைக்கல் டயர் சிபாரிசு செய்தமை இங்கு குறிப் பிடத்தக்கது.
ஆளுநர் மைக்கல் ஓ டயரை, தண்டிப்பதற்கென சரியான தருணத்தை எதிர்பார்த்து உத்தம் சிங் காத்துக்கிடந்தான்.
தனது சொந்த நாட்டில் வைத்துத் தண்டனை வழங்கச் சந்தர்ப்பம் கிடைக்காததால் கப்பலேறி ஆளுநரின் தேசமாகிய இங்கிலாந்து சென்றடைந்தான்,
அங்கே ஆளுநர் மைக்கல் ஒ டயரைத் தேடி வருடக்கணக்காக அலைந்தான்.
பின் சுமார் 20 வருடங்களின் பின்னர் அவனுக்கு அச்சந்தர்ப்பம் கிடைத்தது.
1940ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதி லண்டனில் நடைபெறும் கூட்டமொன்றில் கலந்து கொள்ள வரும் மைக்கல் ஒ டயருக்கு அங்கு வைத்து தண்டனை வழங்க முடிவுசெய்தான்.
உத்தம் சிங் எதிர்பார்த்தது போல ஜாலியன்வாலாபாக் படுகொலையின் சூத்திரதாரி மைக்கல் ஒ டயர் கூட்டத்திற்கு வந்திருந்தான்.
தனது கைத்துப்பாக்கியை எடுத்த உத்தம் சிங் 2000 இந்தியக் குடிமக்களின் படுகொலைக்குக் கார ணமாகவிருந்த மைக்கல் ஓ டயரை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்து தண்டனையை வழங்கினான்.
அவ்விந்தியத் தேசபக்தன் உட னடியாகவே பிரிட்டிஷ் போலிசாரினால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார்.
. 1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று பென்டோன்வில் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஆனாலும் 2000 இந்தியக் குடிமக்களின் இரத்தத்தால் தோய்க்கப்பட்ட ஜாலியன்வாலாபாக் மண், அத் துயரத்திற்குக் காரணமான ஆக்கிரமிப்பு ஆட்சியாளனைக் கொன்று, தார்மீகக் கடமையை நிறைவேற்றியது.
உத்தம் சிங் என்ற அந்த மாவீரன் - தேசபக்தன் இன்றும் மக்களின் மனதில் வாழ்கின்றான்.
-தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
படம் : AI
No comments:
Post a Comment