Thursday, 13 August 2026

ஆகஸ்ட் 11 , குமரி மண்ணின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த தியாகிகள் நாள்.

1954 ஆகஸ்ட் 11 🔥

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் இருந்து விடுதலை பெற்று, தாய் தமிழகத்துடன் இணைவதற்காக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் முக்கிய மைல்கல் நாளாகும்.

இந்திய விடுதலைக்கு பின், தமிழர் நிலங்களான  தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை பகுதிகள் திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் கீழ் இயங்கி வந்தன. இங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு வரி விதிப்பு, மொழி உரிமை மற்றும் நிர்வாக ரீதியில் பல்வேறு அடக்குமுறைகள் அநீதியாக இழைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து, கன்னியாகுமரி பகுதியைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரி 'மார்ஷல்' ஏ. நேசமணி தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (TTNC) இயக்கம் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தது.

1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று, தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி குமரி மாவட்டம் முழுவதிலும் மிகப்பெரிய அளவிலான அமைதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போதைய திரு-கொச்சி மாநில அரசு, போராட்டத்தை ஒடுக்கக் காவல்துறையை ஏவிவிட்டது. மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஆகிய இடங்களில் அமைதியான முறையில் திரண்டிருந்த மக்கள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இத்துப்பாக்கிச் சூட்டில் 

முத்துசாமி (மார்த்தாண்டம்)
​அருளப்ப நாடார் (மார்த்தாண்டம்)
​செல்லையா (புதுக்கடை)
​குமரன் நாடார் (புதுக்கடை)
​மாடசாமி நாடார் (புதுக்கடை)
​ராமன் (புதுக்கடை)
​பீர் முகமது (புதுக்கடை)
​சுப்பிரமணியன்
​பாலையன்
​வேலாயுதன்
​முத்துசாமி (புதுக்கடை)
​

ஆகிய 11 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த உயிர்த்தியாகங்கள் போராட்டத்திற்குப் பெரும்தீயை மூட்டின. இறுதியில், நீதிபதி ஃபசல் அலி தலைமையிலான மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையின்படி, 1956 நவம்பர் 1 அன்று கன்னியாகுமரி மாவட்டம் அதிகாரப்பூர்வமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 11 , குமரி மண்ணின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த தியாகிகளை நினைவேந்துவோம்.

No comments:

Post a Comment