Friday, 14 August 2026

சிறுவர் பராமரிப்பும், தமிழீழ நிர்வாகமும். 2

சிறுவர் பராமரிப்பும், தமிழீழ நிர்வாகமும். 2
~~~~~~~~~~~~~~~~
பரவலாக வடக்கு கிழக்கில் நிலவும் போஷாக்கின்மை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். கொழும்பு அரசு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு நடத்திய பொருளாதாரத்தடையும் எம் மக்களின் வறுமையும் போஷாக்கின்மையின் கூட்டுக்காரணிகளாக அமைகின்றன. உலகவங்கியின் மனித மேம்பாட்டு ஆய்வலகு (HUMAN DEVELOPMENT UNIT, WB) வெளியிட்ட பெப்ரவரி, 2005 அறிக்கை வட கிழக்கில் நிலவும் போஷாக்கின்மை இலங்கைத்தீவின் பிற பகுதிகளிலும் பார்க்க கூடுதலாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. வட கிழக்குப் போஷாக்கின்மை 46 வீதமாகவும் இலங்கைத்தீவின் பிற பகுதிகளில் அது 29 வீதமாக இருப்பதையும், ஆகக் கூடுதலான போஷாக்கின்மை மட்டக்களப்பிலும் (53%) அதற்கடுத்ததாக
வவுனியாவிலும் (51%) நிலவுவதையும் உலகவங்கி அறிக்கை நிரூபிக்கின்றது. மேற்கூறிய சுட்டு விகிதங்கள் அனைத்தும் சிறுவர் சிறுமியர்கள் பற்றியதாகும். இவ்வறிக்கையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் பின்வரும் மாவட்டங்களின் போஷாக்கின்மை விகிதம் அதிலுள்ளன. திருகோணமலை (45%), மன்னார் (28%), அம்பாறை (44%), யாழ்ப்பாணம் (43%).

எல்.ரி.ரி.ஈ, யுனிசெப், சிறிலங்கா அரசு ஆகிய முத்தரப்பினர் இணைந்து உருவாக்கிய “போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நடவடிக்கைத் திட்டம்” செயலிழப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதால் எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு நன்மையும் அனுகூலமும் வந்தடையும் என்று அது நம்புவதற்கு இடமளிக்கப்படவில்லை. குடும்பத்தினருடன் இணைக்கப்பட்ட சிறுவர்களின் இணைப்பிற்குப் பிந்தியகால ஆலோசனை மற்றும் உதவிகளுக்கான உத்தரவாதம் வழங்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தரப்பினருக்கும் இடையில் திருப்திகரமான ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை, இதனால் நடவடிக்கைத் திட்டத்தை அமுலாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. எதிர்பார்த்த பலனை தரத்தவறியதற்கான மூலகாரணங்களாக இவை இடம் பெறுகின்றன.

மேற்கூறிய நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்கள் ஊடாக 170 வரையிலான சிறுவர்கள் எல்.ரி.ரி.ஈயின் பொறுப்பிலிருந்து யுனிசெப் மூலம் மீளளிக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் சிலர் கவனிப்பாரற்ற நிலையில் மீண்டும் எல்.ரீ.ரீ.ஈயிடம் வந்தடைந்தனர். அதாவது சமுதாய நீரோட்டத்தில் சேர்ப்பிக்கப்பட்டபின் அவர்களுக்குரிய கவனிப்பு திருப்திகரமாக அமையவில்லை. இடைத்தங்கல் முகாமூடாக அனுப்பப்பட்ட சிறுவர்கள் எல்.ரி.ரி.ஈ நேரடியாக அனுப்பிய சிறுவர்களிலும் பார்க்க கூடுதலான நன்மைகளை அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இருபாலாருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. இடைத்தங்கல் முகாமூடாக
சிறுவர்களைத் திருப்பி அனுப்புவதை எல்.ரி. ரி.ஈ நிறுத்தியதற்கு இது காரணமாக அமைகிறது. அத்தோடு எல்.ரி.ரி.ஈ மீதான கண்டன விமர்சனத்தைத் தளர்த்துவதற்கு யுனிசெப் ஒத்துக் கொள்ளவில்லை. இதே கால கட்டத்தில் நெசோர் (NESOHR) எனப்படும் வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம் (NORTH EAST SECRETARIAT ON HUMAN RIGHTS) உருவாக்கப்பட்டதால், அதனூடாகச் சிறுவர்களை குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கும் நடைமுறையை எல்.ரி.ரி.ஈ செயற்படுத்தத் தொடங்கியது.

இதனடிப்படையில் 2003ஆம்
ஆண்டு வரை எல்.ரி.ரி.ஈயினால் அவரவர் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்ட வயது குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 800. அதேபோல் 2003ஆம் ஆண்டிற்குப்பின் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 553. 2003ஆம் ஆண்டிற்குப்பின் திருப்பி அனுப்பப்பட்டோர் பற்றிய புள்ளி விபரங்களில் இருந்து பெறப்பட்ட கீழ்க்காணும் தரவை இதில் தருகிறோம்.

(01) திருப்பி அனுப்பப் படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 03 ஆண்டுகள் இருந்தவர் எண்ணிக்கை-23.

(02)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 02 ஆண்டுகள் இருந்தவர் எண்ணிக்-ை 32.

(03)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில்
01 ஆண்டுவரை இருந்தவர் எண்ணிக்கை -215.

(04)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 01 ஆண்டிலும் குறைவாக இருந்தவர் எண்ணிக்கை 283.

இத்தரவிலிருந்து பெறப்படும் முடிவு யாதெனில் திருப்பி அனுப்புதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. வயது குறைந்தோர் எல்.ரி.ரி.ஈயிடம் வந்து இணைவதற்கான காரணங்கள் பல இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வறுமையும், முறையான பராமரிப்பு வசதிகள் இல்லாமையும் முக்கிய காரணமாக இடம்பெறுகின்றது. பராமரிப்பு வசதிகள் சீராகும்போது வயது குறைந்தோரின் எல்.ரி.ரி.ஈ நோக்கிய வரவு மட்டுப்படும் என்பது தெளிவு. உணவு முதற்கொண்டு கல்வி உள்ளடங்கலான தங்குமிட வசதிகளை எல்.ரி.ரி.ஈ தாராளமாக வழங்குகிறது. வயது குறைந்தோர் பெரும்பாலும் பெற்றோர், பாதுகாவலரை இழந்தவர்களாகவும் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சிறிலங்கா ஆயுதப் படையினரின் தமிழ்ச் சிறுவர் களுக்கு எதிரான வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஆயுதப் படையினரும் அவர்களோடு இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களும் வயது வேறுபாடின்றி ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதற்காக இலக்கத் தகடற்ற வெள்ளைநிற மோட்டார் வாகனங்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமிகள் மத்தியில் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் நிலவுகின்றது. ஆட்கடத்தலுக்கு உட்படுவதிலும் பார்க்க எல்.ரி.ரி.ஈ யிடம் தஞ்சமடைவது மேல் என்ற கருத்து சிறுவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

சிறிலங்கா
ஆயுதப் படையினரின் தமிழீழச் சிறுவர்களுக்கு எதிரான அண்மைக்கால வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இங்கு தருகின்றோம்.

பேசாலை, மன்னாரிலுள்ள நூறு வீட்டுத்திட்டத்தினுள் நுழைந்த சிறிலங்கா கடற்படையினர் டிசெம்பர் 23, 2005ஆம் நாள் நடத்திய தாக்குதலில் ஒரு தமிழ்க் குடும்பம் முற்றாக அழிக்கப்பட்டது. இதில் 3 வயதினரான டிலக்சன் என்ற ஆண் சிறுவன் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மன்னார் அரச அதிபர் எரியுண்ட வீட்டிற்குள் ஒரு சிறுவனின் கையை மாத்திரம் கண்டதாகச் சாட்சியம் வழங்கியுள்ளார். ஐந்து நாட்களுக்குப் பின் டிசெம்பர் 28, 2005ஆம் நாளன்று கொடிகாமம், தென்மராட்சியைச் சேர்ந்த 15 வயதினரான தம்பிராஜா அருளானந்தன் என்ற இளைஞர் தனது குடும்பத்தினர் முன்னிலையில் சிறிலங்கா ஆயுதப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலைச் சம்பவத்திற்குமுன் சில வாரங்களாக இக் குடும்பத்தினர் சிறிலங்கா ஆயுதப்படையினராலும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுவினராலும் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டு வந்துள்ளனர். இதுபற்றிய விரிவான அறிக்கையை வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் வெளியிட் டுள்ளது.

ஜனவரி 16, 2006ஆம் நாளன்று அக்கரைப்பற்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாகச் செல்லும் வீதியில் வைத்து 16வயதினரான கோபால கிருஷ்ணன் சுரேஷ் என்ற மேசன் தொழிலாளி ஆயுதப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஒரு எல்.ரி.ரி.ஈ அனுதாபி என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. சிறிலங்கா ஆயுதப்படையினராலும் ஆயுதக் குழுவினராலும் பல சிறுவர்கள் இக்காலப் பகுதியில் சூட்டுக்காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவற்றில் ஒருசில சம்பவ விபரங்களைத் தருகின்றோம்.

டிசெம்பர் 07,2005ஆம் நாள் யோகராசா யோகேஸ்வரி (24), துரைராசா வதனி(18) என்ற இரு சகோதரிகள் ஆயுததாரிகளால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்டனர். யோகராசா யோகேஸ்வரியின் இரண்டுவயதுக் குழந்தை படுகாயம் அடைந்தது.

வவுனியாவில் செயற்படும் இராணுவத்திற்கு உதவும் துணைப்படையினரின் கிரனேற் வீச்சுத் தாக்குதலில் சகோதரர்களான தமிழ்ச்செல்வன் (13), சுரேஜா (14) ஆகியோர் படுகாயமடைந்தனர். படையினர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்  நடத்தும்போது அப்பாவிகள் மீது துவக்குச் தாக்குதல் சூடு நடத்தும் நடைமுறையை ஆயுதப்படையினரும் ஆயுதக்குழுக்களும் செயற்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் தெருக்களிலும் பொது இடங்களிலும் நடமாட அஞ்சுகின்றனர். இவ்வாறு சூட்டுக்கு இலக்காகியவர்களால் சுட்டவர்களை அடையாளம் காண இயலவில்லை. தாக்குதல் நடத்துவோர் கறுப்புத்துணிகளால் முகத்தைச் சுற்றிக் கட்டியிருப்பது அடையாளம் காண்பதைத் தடுக்கின்றது. யாழ் நீதிமன்றம் கறுப்புத் துணியால் முகத்தை மூடியபடி உலாவ வேண்டாம் என்று கட்டளையிட்ட பின்பும் படையினர் இந்த வழமையை இதுவரை கைவிடவில்லை.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைச்சட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான சட்டம், சிறுவர்கள் உரிமைச்சட்டம் என்பனவற்றை சிறிலங்கா அரசு அங்கீகரித்துள்ளது. (INTERNATIONAL COVENANTON CIVIL AND POLITICAL RIGHTS, CONVENTION ON THE ELIMINATION OF DISCRIMINATION AGAINST WOMEN, CONVENTION OF THE CHILD) இம்மூன்று சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சிறிலங்காவின் குற்றவியல் சட்டம் 1995ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்குக் குறைந்தவர்களை சிறுவர்கள் என்று இத்திருத்தம் வரையறை செய்கின்றது. இவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் அல்லது துன்புறுத்துபவர்களுக்கு சிறைத் தண்டணை வழங்குவதற்கு மேற்கூறிய சட்டத்திருத்தம் வகை செய்கின்றது. சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றஞ் சுமத்தும் சிறிலங்கா அரசு தான் இயற்றிய சட்டத்தைச் சரிவர நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

அண்மைக்காலமாக புத்த விகாரைகளில் 'அபித்தயாக்கள்' என்று அழைக்கப்படும் மிகவும் வயது குறைந்த ஆண் சிறுவர்கள் மதக் கல்விக்காகச் சேர்க்கப்படும் முறைமை பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இவர்கள் ஆண்கள் மாத்திரம் வாழும் விகாரைகளில் பாதுகாப்பாக வாழ்கின்றார்களா, சட்டத்தின் முன்னிலையில் இச்சிறுவர்களின் அந்தஸ்து என்ன? போன்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. பாலியலுறவுக்குச் சம்மதிக்க மறுத்தவொரு அபித்தயா சிறுவனை ஒரு பிக்கு தாக்கிப் படுகாயம் விளைவித்த செய்தி சென்றவாரம் கொழும்புத் தினசரிகளில் பிரசுரமாகியது. இச்சிறுவர்களை புத்தமதபீடம் தத்து எடுப்பதாக வாதிடுவோர் திருமணமாகாத ஆண்கள் சிறிலங்கா சட்டத்தின் கீழ் தத்து எடுப்பதற்குத் தகுதி அற்றவர்கள் என்பதை மறுத்துவிடுகிறார்கள். அத்தோடு புத்த விகாரை ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லமும் அல்ல. எல்.ரி.ரி.ஈ மீது தாக்குதல் தொடுக்கும் அரசு தனது உள் வீட்டு விவகாரத்தை முதற்கண் சீராக்க வேண்டும்.

-
கலாநிதி க. சோமாஸ்கந்தன்
விபு இதழ் : மாசி-பங்குனி 2006

தொகுப்பு :தமிழரசன்அப்துல்காதர்

No comments:

Post a Comment