Thursday, 13 August 2026

நீங்களே வரலாற்றின் பிள்ளைகள். -செகத் கஸ்பார்

வெளிச்சம் பொருத்தமான பெயர். தமிழீழ விடுதலை முயற்சிக்கு சரியான குறியீடு. சூரியனுக்கும் ஆதவனுக்குமான சிறியதோர் வேறுபாடும் அதற்குள் உண்டு. சூரியன் சுடும். வெம்மையும், வெக்கையுமாக நிர்மலமும் நிம்மதியும் இல்லாத ஒன்று. அதிகாலை வெளிச்சமே பிரபஞ்ச உயிரின் உன்னதப்பாட்டு. அது கவிந்த இருளை கவனமாக அகற்றும், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போரை அரவமின்றித் தட்டியெழுப்பும், பூக்களைத் தழுவிப் புன்சிரிக்க வைக்கும், பறவைகளின் சிறகுகளை உசுப்பிவிடும், பள்ளியெழுச்சி பாடவைக்கும், இருள் போர்த்துக் களையிழந்திருக்கும் இயற்கை மகனுக்கு முகங்கழுவிவிடும். இன்னும் என்ன வெல்லாமோ செய்யும். வெளிச்சமென இங்கு நான் குறிப்பிடுவது வெயிலை
அல்ல, ஒளியை. பைபிளின் கடவுள் ஆதியில் உலகைப்படைத்த போது முதலில் உரைத்த சொற்கள் 'ஒளியுண்டாகுக.

பல நூறு ஆண்டுகளாய் இருளில் மூழ்கி பாதையையும் பயணத்தையும் இழந்து நின்ற தமிழ் வரலாற்றுக்கு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் ஒளியும் வழியும் தந்திருக்கிறது. வன்முறையும் வலியும். துயரங்களும் இந்த வழியில் அதிகம் தான்.அது தவிர்க்க முடியாதது. காரணம் இது பொம்மை செய்கிற அலுவலல்ல, இது பிரசவம். புதிய பிறப்பு, இலட்சியம் என்கிற தவவனத்தில், இரத்தத்தில் காவியுடை தரித்து தலைமுறைகளின் மீட்புக்காகத் தம்மையே ஆகுதியாகிற பிள்ளைகளே நீவிர் எம் செல்வங்கள். எமக்கேனும் பரலோகமும் வைகுண்டமும் பரிசாக உண்டு. உமக்கு என்ன உண்டு? உங்களது தலைமுறைகளேனும் நலமாக
வாழும் என்ற கனவுமட்டும் தானே உங்களுக்கான பரிசு. நீவிர், எம்மை விடவும் பெரியவர்கள். பரலோகத்தையும் வைகுண்டத்தையும் விட மேலான ஒரு இடத்தை உங்களுக்கு ஏற்பாடு செய்ய பரமபிதாவை மன்றாடுவேன்.

மலைமகள் என்ற தங்கை புதுக்குடியிருப்பிலிருந்து 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ற் 15 ஆம் நாள் தேதியிட்டு எழுதிய கடிதமொன்று என் நெஞ்சில் நிரந்தரமாய்ப் பதிந்துவிட்ட ஒன்று. "தந்தை வீரச்சாவு அடைய தன் மகனை களத்துக்கு அனுப்பினாள் தாய்" என்று படித்திருக்கிறேன். ஆனால், களத்திலே வீரச்சாவடைந்கு தன் மகனுக்கு போராளித் தந்தை மண் போட்டதை நான் கண்டிருக்கிறேன். திருமண நாள் நிச்சயிக்கப்பட்ட தன் போராளித்துணைவியின் உடல் களத்தில் சிதறிட அவளுக்காக நினைவுக்கல் நாட்டிய போராளிக்காதலனை நான் கண்டிருக்கிறேன். பிறந்து 45 நாட்கள் மட்டுமே ஆன தன் பெண் குழந்தையைப் பின்னால் ஒரு போராளி சுமந்து வர முன்னே தன் போராளிக் கணவனின் வித்துடலை தன் தோளிலே சுமந்து நடந்து விதைகுழியில் வைத்து மண்போட்டு மூடிய போராளி மனைவியின் அருகில் நின்றிருக்கிறேன். ஒருவருக்கு மற்றவர் சொல்லாமல் சண்டைக்களத்துக்குப் போய் நின்று தொலைத்தொடர்பு கருவியில் குரல்கேட்ட பின்னரே தான் மட்டுமல்லாமல், தன் துணையும் களத்தில் நிற்பதை அறிந்து கொண்ட போராளித் தம்பதியரை நான் அறிந்திருக்கிறேன். அடுத்த வேளை சமைக்க அரிசியில்லை என்று தெரிந்தும் களைத்துப் போய் வந்து தன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருக்கும் புலிப்பிள்ளைகளுக்கு உணவு சமைக்கிற ஏழைத் தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன்" இதையெல்லாம் எழுதி விட்டு தங்கை மலைமகள் ஆதங்கத்தோடு கேட்டிருந்தார், "இவையெல்லாம் உலகத்துக்குத் தெரியுமா ?

மலைமகள் தங்காய், யாரது அங்கீகாரம் எவருக்கு வேண்டும்? அங்கீகரிப்பவர்களுக்கும்
சொன்னாயே ஒரு தகுதி வேண்டாமோ? நீ அடுத்த வேளைக்கு அரிசியில்லையென்று தெரிந்தும் களைத்துப்போய் வந்து நிற்கும் எங்கோ பிறந்த பிள்ளைகளுக்கு உணவு சமைக்கிற ஏழைத்தாய்மார்கள்... இவர்களது புனிதம் போப்பாண்டவர்களினதும் சங்கராச்சாரிகளினதும் புனிதத்தை விட மேலானது. இவர்கள் தான் நமது உலகின் வெளிச்சம் ஒளி. இருளின் அங்கீகாரம் இவர்களுக்கு அவசியமில்லை.

ஆயினும், நீங்களே அறியாமல் உங்களுக்காய் அழுகிறவர்கள், உங்களை நேசிக்கிறவர்கள் -நீங்களே எம் செல்வங்கள் எனப் பெருமிதத்துடன் ஓங்காரமாக முழங்குகிறவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்? 1996 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் இருந்துகொண்டு சகோதரி சிவசங்கரி எழுதிய கடிதம் 'வேரித்தாஸ்' வானலையில் வந்ததே நினைவிருக்கிறதா? “ எம்மைப்பொறுத்தவரை மடிந்து போன எம் உறவுகளின் உயிர்களைவிடவும், முடமாக்கப்பட்ட எமது சகோதரர்களின் கால்களை விடவும், பழிக்கப்பட்ட எம் மக்களின் சந்தோசங்களை விடவும், தெருவோர வீடுகளில் தொலைக்கப்பட்ட சிரிப்புகளை விடவும், அழிக்கப்பட்ட எமது தாய்மாரின் வாரிசுகளை விடவும், எல்லாவற்றிற்கும் மேலாக விடுதலை வேள்விக்கு தம்மையே ஆகுதியாக்கிக்கொள்ளும் அந்த அத்தனை -போராளிகளின் உயிர்களை விடவும் பெறுமதியானது இந்த உலகில் எதுவும் கிடையாது"

தமிழகம், மலேசியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா என லட்சக்கணக்கான தமிழ்மக்கள் சகோதரி சிவசங்கரியின் இதய உணர்வுகளோடு உங்களுடன் நிற்கிறார்கள்; நான் உட்பட. நீங்கள் வரலாற்றின் பிள்ளைகள்; எங்களின் செல்வங்கள்.

-ஜெகத்கஸ்பார்

வேரித்தாஸ் தமிழ்ப்பணி

மனிலா.

வெளிச்சம் : கார்த்திகை 2001.

No comments:

Post a Comment