மண்ணில் ஊறிய உணர்வுகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அந்த அன்னையர்கள், கல்லூரியில் மட்டும் எனக்கு ஆசிரியர்கள் அல்ல. நான் பங்காற்றும் இந்த விடுதலைப் போராட்டத்தில் கூட இவர்கள் எனக்கு ஆசான்களாகத் திகழ்கிறார்கள் என்பதை எண்ணும் போது, என் கற்பனா சக்திக்கும் மேலான ஒன்று என்னுள் குடிபுகுந்து, என் உணர்வுகட்கு மேலும் வலுவூட்டுகின்றதென்றால் அத்தாய்மார்கள் அப்படி வித்தியாசமாக என்னதான் செய்திருப்பார்கள் என்ற கேள்வி எமக்குள் எழலாம்.
ஆம்! கஷ்டத்தில்தான் உண்மையானவர்கள் இனங் காணப்படுவார்கள். அதற்கேற்ப எம்மண்ணின் ஒரு பகுதி எதிரியின் ஆக்கிரமிப்பு வலைக்குள் சிக்குண்டிருக்கையில், தமது உயிர் உடமைகளைத் துச்சமென மதித்து எமது விடுதலைப் போருக்கு பூரண பங்காற்றிய அந்த அன்னையரை நாம் எல்லோரும் அறிந்து கொண்டால், எமது உள்ளத்து உணர்வுகளில் சிறிதேனும் உந்துதல் உண்டாகும் என்ற நம் பிக்கையில் இப்பக்கங்களை எனதாக்குகிறேன்.
அதிரும் அந்த அதி காலைப்பொழுது, எமது செவிப் பறைகளை மட்டுமல்ல எமது மண்ணே பிளந்து போகும் அளவிற்கு குண்டு வீச்சு விமானங்களின் தாக்குதலோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் "வடமராட்சி விடுவிப்புத் தாக்குதல்". எம் மக்களைக் கதிகலங்க வைத்த மாபெரும் இன அழிப்பு இராணுவ நடவடிக்கை அது. இது தொடங்கியது 87 இல்
தொழிலாளர் தினத்தைக் கடந்து 25 நாட்களின் பின் ஓர் அதிகாலை. அப்போது நாமோர் "கொரில்லா" அணி என்ற நிலையிலிருந்து சற்று முன்னேறி முகாம் வாசலில் வைத்தே இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறாது, தடுத்து திருப்பியனுப்பும் புதிய யுக்தியைக் கைக்கொண்டிருந்த காலம். ஆனால் எமக்கு விடப்பட்ட சவாலோ பெரியது. எமது சக்திக்கு மிகமிக அப்பாற்பட்ட ஒரு சக்தியோடு மோத வேண்டிய, அதாவது நூற்றுக்கணக்கான போராளிகள், நூற்றுக்கும் குறைவான ஆயுதங்கள், இவற்றோடு ஒரு நாட்டின் அரைப் பங்கு இராணுவ பலத்தை (முழு அளவிலான விமானப்படைப் பலம், 75% ஆன கடற்படைப் பலம், 8,000 தரைப்படை இரா ணுவம்) எதிர்த்து மோத வேண்டிய இக்கட்டான நிலை. ஒரு கெரில்லா அணியின் நேரடியான மரபுவழி யுத்தம். பொருத்தமற்ற, யுத்த மரபுகளுக்கு முரணானதோர் யுத்தப் பிரகடனத்தை ஸ்ரீலங்கா அரசு எம்மீது பிரகடனம் செய்தது. ஒரு மரபுவழி யுத்தத்தை எதிர் கொள்ள வேண்டிய ஆயுதச் சமபலம் எம்மிடம் இல்லாத நிலையில் தற்பாதுகாப்பிற்காக சில நாட்கள் நேரடியாகப் போரிட்ட நாம் மீண்டும் ஓர் "கெரில்லா" அணியாக மாறி போர் புரிய வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஏனெனில் அப் பிரதேசம் முழுவதும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு சதுரங்கத் தந்திரோபாய முறைப்படி (இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில்
கையாளும் போராளிகளின் நடமாட்டங்களை, செயற்பாடுகளை
கட்டுப்படுத்தும் தந்திரோபாயம்)
முழத்துக்கு முழம் முகாமிடப்பட்டிருந்தது. வீதியால் ஓர் ஆள் உருவம் அசைகின்றதென்றால் நெற்றி வெடி விழும் சூழ்நிலையில் தான், இவ் இராணுவ யுக்தி வியூகத்தை உடைத்தெறிய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. அதாவது போராளிகள் நகரவோ, அன்றி வேவு பார்க்கவோ முடியாத சூழ்நிலை. ஆனாலும் இராணுவத்தினரின் சதுரங்க வியூகத்தை உடைத்தேயாக வேண்டிய தேவை. அப்போதுதான் நான் படித்த பாடசாலையில் அமைந்திருந்த அந்த முகாமின் அருகே அமைந்திருந்த எனது ஆசிரியர்களின் வீடுகள் எம் நினைவுக்கு வந்தன. அப்பாடசாலையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் அருகே உள்ள பெண்கள் பகுதிக்கு இப்பாடசாலையின் வகுப்பறைகள் இடமாற்றப்பட்டிருந்தும், பாடசாலையின் உபகரணங்கள் எதுவும் புதிய இடத்திற்கு மாற்றப்படாமையும் எங்கள் சிந்தையில் எழுந்தன. ஆகையால் இவ் உபகரணங்கள் இடம் மாற்றுவதைக் காரணங்காட்டி முகாமிற்குள் சென்று முகாமை வேவு பார்க்க என் பள்ளி ஆசிரியர்களை நான் அணுகினேன். அன்றைய ஆபத்தான சூழ்நிலையில் எமது விடுதலைப் போராட்டம் ஓர் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரு ஆசிரியர்கள் உதவ முன்வந்தபோது அவர்கள் எமது பாதையையும், இந்த மண்ணையும் எவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எமது ஆலோசனைகளின்படி உளவு
பார்க்கும் பணியை செவ்வனே நிறைவேற்றிய இவர்கள், சுற்றத்தார் மத்தியில் தாக்குதல் பற்றிய வீண் சலசலப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக அவரவர் வீடுகளில் இருந்தவாறே எதிரியின் முகாமை தினசரி நன்கு நோட்டமிட்டு இராணுவத்தினரின் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருந்தார்கள். எங்களிடம் அவர்கள் தந்த தகவல்களின் பிரகாரம் இரவு 7.30 மணி, இராணுவத்தினர் உணவு அருந்தும் நேரம் எனவும் பின்னர் இரவு 8 மணிக்கு சிங்கள தொலைக்காட்சிச் செய்தியை பார்ப்பதில் பெருமளவு இராணுவத்தினர் கவனம் செலுத்துவார்கள் எனவும் இரவு 9 மணிக்குப் பின் அதிகளவு இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறி மறுநாள் காலை வரை முகாமைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு தங்கச் சென்று விடுவார்கள் என்றும் கூறினர். ஆகவே இரவு 9 மணிக்கு முன் முகாமைத் தாக்கியாக வேண்டும் என்ற கட்டாயம் எமக்கு ஏற்பட்டது. இராணுவத்தினர் எல்லோரும் விழிப்பாக இருக்கும் போது நாம் நடாத்தத் திட்டமிட்ட முதலாவது இராணுவ முகாம் மீதான தாக்குதல். பொருத்தமற்ற நேரம்தான். ஆனாலும், அவர்களின் பலவீனம் சிங்கள செய்தி கேட்பதில் இருந்ததால் அதை நாங்கள் சாதகமாக்கி "கரும்புலி" கப்டன் மில்லரின் தன்னலமற்ற தியாகத் தாக்குதலால், அம்முகாமை நிர் மூலமாக்கினோம்.
என் தளச் சகா மில்லரின் நினைவு நாள் ஆடித் திங்களில் என்பதால், இவ்விதழில் நான் அவனோடு வாழ்ந்த காலத்து நினைவுகளை மீட்டல், காலத்தின் அவசியமாகின்றது. சாவுக்கே சவால் விட்ட அந்த வீரனின் விந்தையை இன்றும் பலர் பின்பற்றும் மனோபலம் பெற்றிருக்கிறார்கள். இவன் தந்தை ஓர் வங்கி முகாமையாளர். வசதியான குடும்பத்தில் வசதியான வாழ்க்கை வாழ்ந்த இவன் விடுதலைப் போராட்டத்தில் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையும், மற்றவர் மனம் நோகாமல் பழகும் பண்புகளும், தான் சிரிக்காமலே
பாசறையில் தன்னைச் சுற்றியுள்ளோரை சிரிக்க வைக்கும் இலாவகமும், இராணுவத்தினருடனான மோதல்களின் போது துப்பாக்கியோடு ஒரு பம்பரம் போல் சுழன்று அநாயாசமாகச் சண்டையிடும் இவன் வேகமும், துப்பாக்கி வேட்டுகளுக்கு மத்தியில் மட்டுமல்ல, ஆகாய அரக்கர்களின் வானத் தாக்குதல்களுக்கு நடுவேயும் சிறிதும் கலங்காமல் வழி பிசகாமல் வாகனம் ஓட்டும் சாதுரியமும், இன்றும் எங்கள். கண்களுக்குள்ளே நிழலாடுகின்றதென்றால் கொண்டிருக்கும் ஓர் தோற்றத்தை கொடுக்கிறதென்றால் அவன் திறமையை சிறிது சிந்தித்துப் பாருங்களேன். அவனது வாகனம் கடைசியாக ஊர்ந்து கொண்டிருக்கும் தோற்றம் என்றும் எமது நினைவை விட்டு நீங்காது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சாவைக் கண்டு அஞ்சியோடும் மனிதருக்கு மத்தியில், தன் சாவிற்கு தானே போட்டி போட்டு தேர்வின்றிச் சாவைத் சந்திக்கும் மனோவலிமை அவனுக்கு உள்ளேயே வளர்ந்த ஒன்று. அது தலைவர் பிரபாகரனின் பாசறையில் பயின்றோரால் மட்டுமே சாதிக்கக் கூடியதுமாகும். இவன் வகுத்திட்ட இவ் வழிப்பாதையைத் தொடரும் பல போராளிகள் எமக்குள் இருக்கும் வரை எம்மை, எமது விடுதலையை யாரால் என்ன செய்துவிட முடியும்?
எமது திட்டத்தின் பிரகாரம் மில்லரின் வெடிகுண்டு வாகனம் இராணுவ முகாமின் மிகப் பொருத்தமான இடத்தில் வெடித்துச் சிதறிய பின் ஒரு குழு சண்டையிட, மறு குழுவோ இடிந்த கட்டிடங்களுக்குள் மில்லரை சல்லடைபோட்டுத் தேடியது. நிஜமாக அப்போது அவன் சரித்திரம் படைத்துச் சங்கமமாகிவிட்டான் என ஊர்ஜிதப் படுத்த முடியாமல், எங்காவது ஒரு மூலையில் அவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில், நப்பாசையில் சத்தமிட்டு, அவன் பெயரைக் காற்றிலே கலக்கவிட்டுத் தேடினோம், தேடுகிறோம். இன்றுவரை அவன் எமக்கு
கிடைக்கவேயில்லை.
அவன் உடலோ, அன்றி அவனின் உடலின் பாகங்களோ கிடைக்காத நிலையில் அவன் இடித்துச்
சாய்த்த கட்டிடச் சிதறல்களுக்குள் சிக்குண்டிருந்த எதிரியிடமிருந்து மீட்ட ஞாபகச் சின்னங்களை ஏந்திச் சோகமாக எமது தாக்குதல் நிலைகளை நோக்கி திரும்பினோம். அப்போதும் அருகிலுள்ள எதிரி முகாம்களிலிருந்து வீசப்பட்ட சரமாரியான குண்டு வீச்சு ஒரு புறமும், ஆகாயப் படையினரின் தாக்குதல்கள் மறு புறமும் நடந்து கொண்டேயிருந்தன .
இவற்றுக்கு மத்தியில் தமக்கு ஏற்படவிருக்கும் உயிராபத்தைக்கூட பொருட்படுத்தாது யுத்த களத்தில் நின்றுகொண்டே எமக்கெல்லாம் எலுமிச்சை நீர் கரைத்துப் பரிமாறி எம்மை உற்சாகப்படுத்திய அவ் ஆசிரியர்களைப் போன்ற உள்ளங்களின் உணர்வு தான் இன்றும் எம்மை உறுதியாக இயங்க வைக்கிறது. எமது இத்தாக்குதல் முடிவடைந்து வெடிச் சத்தங்கள் ஓய்ந்த பின்னர் தத்தமது வீடுகளைப் பார்க்கச்சென்ற ஆசியர்களுக்கோ அங்கு காத்திருந்தது பேரதிர்ச்சிதான். முகாமிற்கு வெறும் இருபதே யார் தொலைவிலே இருந்த இருவர் வீடுகளும் இத்தாக்குதலின் போது முற்றாகச் சேதமடைந்திருந்தன. இவர்களும் இவர்தம் குடும்பங்களும் எம்மோடு எமது முகாம் திரும்ப வேண்டியிருந்த பரிதாப நிலையின் பின்பும், இவர்கள் இன்றும் விடுதலைப் போராளிகளோடுதான் வாழ்கிறார்கள் என்றால், இவர்கள் உள்ளங்களில் சங்கமித்திருக்கும் விடுதலை வேட்கை எத்தகையது என எண்ணிப் பார்க்கிறோம். உண்மை தான்; இவ்வளவிற்குப் பின்பும் எனது ஆசிரியர்தான் எமது இராணுவப் படைத்துறை வாத்தியக் குழுவின் அஸ்திவாரமாக திகழ்கிறார் என்றால் என்னுள் எழுகின்ற கேள்வி, புறநானூற்றுத் தாய்மாரால் தமிழீழ அன்னையருக்கு நிகராக நிற்க முடியுமா என்பதுதான்.
-யதார்த்தன்
No comments:
Post a Comment