சிறுவர் பராமரிப்பும்,தமிழீழ நிர்வாகமும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனது பகுதியில் வாழும் சிறியோர், முதியோர் நலனில் தமிழீழ நிர்வாகம் அதியுயர் கவனஞ்செலுத்துகிறது. தெருச் சிறுவர்களையும், போக்கிடமற்ற முதியோர்களையும் தமிழீழ மண்ணில் காண முடியாது. இவர்களுடைய பராமரிப்புக்கென பெரும் பொருட்செலவில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சிறியோருக்கும், முதியோருக்கும் தனித்தனி இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்குக் கல்வி வசதி செய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக பயனுள்ள தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. மாதாந்த ஊதியம் பெறும் பராமரிப்பு ஊழியர்கள் சிறியோர், முதியோர் இல்லங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உளவியல் தாக்கம் அல்லது அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதில் கவனம் எடுக்கப்படுகிறது. சிறிலங்கா நாட்டில் ஈழத்திற்கு நிகரான கவனம் எடுக்கப்படுவதைக் காண்பது அரிது. அங்கு சிறுவர்நலன் சார்ந்த செயற்பாடுகள் வளர்ச்சிகுன்றிய நிலையில் உள்ளன.
வடக்கு கிழக்கிலுள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் சிறுவர் நலனில் தாம் தீவிர அக்கறை எடுப்பதாக சிறிலங்கா அரசு கூறிவந்தாலும் உண்மை வித்தியாசமாக இருக்கிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளின் சிறுவர் நலன்காக்கும் மாவட்ட அலுவலகங்களின் எண்ணிக்கை எழுபத்தி யெட்டு (78). ஆனால் இவ்வலுவலகங்களில் பணியாற்றும் சிறுவர் நலன்பேணும் பயிற்றப்பட்ட அதிகாரிகள் எண்ணிக்கை பதினாறு (16) மாத்திரமே. அத்தோடு இப் பணிமனைகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதாமையை ஈடுசெய்வதற்காக சிறுவர் பாதுகாப்பு நிதியம், யுனிசெப் போன்ற நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. தேசிய சிறுவர் ஆண்டாக 2006ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரகடனம் சர்வதேசத்திற்கும் செல்லுபடியானது. புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் இப்பிரகடனம் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருகோணமலை நகரில் நடந்த சிறுவர் நலன் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட சிறிலங்கா சிறுவர் பாதுகாப்பு நிதியப் பிரதிநிதி றிச்சார்ட் (RICHARD MAWER, COUNTRY PROGRAMME DIRECTOR, SAVE THE CHILDREN FUND) அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிலவும் சிறுவர் நலன்பேணும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
போர்நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்ட பின்பு (2002) ஈழத்தமிழர்களின் போர்வடுக்கள் மறையவில்லை. உளவியல் தாக்கங்கள் தொடர்கின்றன. சிறுவர்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். சிறுவர் பாடசாலைகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கள் இளம் பராயத்தினரின் எதிர்காலத்தினை முற்றாகப் பாதித்துள்ளது. பெற்றார் இருவரையும் இழந்த சிறுவர்கள் கணிசமானளவில் காணப்படுகின்றனர். அதேபோல் தாய் அல்லது தந்தையைப் பலிகொடுத்த சிறுவர்களும் உள்ளனர். திரு கோணமலை மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் வாழும் 8500 சிறுவர்களில் 60 வீதமானோர் கடும் வறுமை காரணமாக அங்கு புகலிடம் தேடியுள்ளனர். 741 பிள்ளைகள் பெற்றார் இருவரையும் இழந்துள்ளனர். 2580 பிள்ளைகள் பெற்றாரில் ஒருவரை இழந்துள்ளனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக மேலதிக எண்ணிக்கையில் சிறுவர்களை அனுமதிக்கமுடியாத நிலை பரவலாக வடக்கு கிழக்கில் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது.
வறுமை காரணமாக போஷாக்கின்மையும், கர்ப்பிணித் தாய்மாரின் உடல்நலக் குறைவும் தமிழர் பகுதிகளில் இருப்பதை தொண்டு நிறுவனங்கள் அவதானித்துள்ளன. பிறக்கும் குழந்தைகள் எடை குறைந்தவையாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. சிசு மரணவீதம் சராசரிக்கும் கூடுதலாக இருப்பதால் எமது இனம் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. உயிர் பிழைக்கும் சிறுவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் பல்வேறு உடல் நோய்களுக்கு உட்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு நிலையங்களை உருவாக்கி பெரும் பொருட் செலவில் நற்பணியாற்றி வருகின்றனர். சிறுவர் நலனில் எமது விடுதலை அமைப்புக் காட்டிவரும் அக்கறையும், கரிசனையும் அளப்பரியது. எமது எதிர் காலம் சிறுவர்களின் வளர்ச்சியில் தங்கியுள்ளது.
சிறுவர் விவகாரம் அரசியலாகிவிட்டது. தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் போரில் அது முக்கிய அங்கம் வகிக்கிறது. சிங்கள அரசின் பிரச்சார உத்தியின் அடித்தளமாக இரு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று தமிழர்களுடைய விடுதலைப்போர் ஒரு பயங்கரவாதம், அடுத்தது விடுதலைப் புலிகள் தமது படையில் சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கிறார்கள். இப்பிரச்சாரப் பாரம்பரியத்தைத் தொடங்கியவர் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமராவார். எமது சிறுவர்கள் மீது கரிசனை காட்டுவதாகப் பாசாங்கு செய்யும் சிங்களத் தலைவர்கள் தமது பகுதிச் சிறுவர்களின் கேவலநிலை குறித்துக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடலோரப் பகுதிகளிலும் உல்லாசப் பயணிகள் விடுதிகளிலும் சிறுவர்கள் விபச்சாரம் அமோகமாக நடைபெறுகிறது. இதில் பிரபல கொழும்பு அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு. அதேபோல் பெருமளவு மூவினச் சிறுவர்கள் தெற்கில் உயிராபத்தை விளைவிக்கும் தொழில்களில் ஈடுபடுகின்றனர். மலையகச் சிறுவர்களும் மிகக் குறைந்த ஊதியத்திற்குத் தொழிலாற்றுகின்றனர். இவர்களுடைய கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக மலையகச் சிறுவர்கள் நடத்தப்படுவதை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுள்ளனர்.
யுத்தநிறுத்த உடன்படிக்கைகைச் சாத்திடப்பட்ட பின் யுனிசெப் நிறுவனம் 2003இல் வெளியிட்ட வட கிழக்கு சிறுவர் உரிமைகள் பற்றிய அறிக்கையில் ஈழத் தமிழ்ச் சிறுவர்களின் கவலைக்குரிய
நிலவரம் விவரிக்கப்பட்டுள்ளது. 50,000 சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என்றும், 100 சிறுவர்களில் ஒருவர் வீதம் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வாழ்வதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது. 300 சிறுவர்களில் ஒருவர் வீதம் பெற்றாரில் ஒருவரையாவது இழந்துள்ள தாகவும் 100% சிறுவர்கள் போஷாக்கின்மையால் உடல்நலம் பாதிப்புற்று இருப்பதாகவும் அறிக்கைகள் அறியத்தருகின்றன. வட கிழக்கிலுள்ள பள்ளிக்கூடங்களில் 30% போரினால் சேதமடைந்துள்ளன என்றும் சிறுவர்களுக்குரிய மருத்துவ சேவைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் யுனிசெப் கண்டறிந்துள்ளது. வட கிழக்கில் சிறுவர்நலன் படு மோசமாகப் பாதிப்படைந்திருப்பதற்கு, ஒன்றோடொன்று தொடர்புடைய இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. போரின் பாதிப்பு முதற்காரணம், கொழும்பு அரசின் அசிரத்தையும் இனப் பாகுபாடும்
இரண்டாவது காரணம்.
2002க்குப் பின் நிலைமை சீரடையலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.
ஆறுகட்டப் பேச்சுவார்த்தைகள் செப்ரம்பர் 2002க்கும் மார்ச்சு 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் பல பாகங்களில் நடத்தப்பட்டாலும் வட கிழக்கில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கடும் தோல்வியடைந்தன.
சிரான்(SIHRN) கட்டமைப்பு உருவாகும் தறுவாயில் இருந்தபோது கொழும்பு அரசு கொடுத்த வாக்குறுதியை மீளப்பெற்று சீரானைத்
தோல்விகாணச் செய்தது. இதன்போது
வயது குறைந்த சிறுவர்களை எல்.ரி.ரி.ஈயினர் தமது படையில் சேர்க்கின்றார்கள் என்ற
குற்றச்சாட்டு எழுந்தது. சிறுவர்களுடைய
நலன் இதன்மூலம் பாதிப்படைவதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு வலியுறுத்தியது.
"போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான
நடவடிக்கைத் திட்டம்” (ACTION PLAN
FOR WAR AFFECTED CHILDREN)
இதற்காக உருவாக்கப்பட்டது. வட கிழக்குச்சிறுவர்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த நடவடிக்கைத் திட்டத்தின் பங்காளிகளாக
எல்.ரி.ரி.ஈ, சிறிலங்கா அரசு, யுனிசெப் என்ற முத்தரப்பினர் இடம் பெற்றனர்.
யுத்த நிறுத்தம் ஈழத்தமிழர்களுக்கு இயல்பு வாழ்க்கையை தரத் தவறியுள்ளது. இதில் சிறுவர்களும் பயன் பெறாதுள்ளனர்.
சிறுவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
சிங்கள நாட்டுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை விகிதம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் நிலவும் விகிதத்திலும் பார்க்க அதிகமாக இருக்கிறது. பலமுறை சுட்டிக்
காட்டியும் புதிய தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்ப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள் தரம்
குறைந்தவையாகவும் குழறுபடிகள் நிறைந்தவையாகவும் உள்ளன. அவை பெரும்பாலும் சிங்கள மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நூல்களின் மொழிபெயர்ப்புக்களாகவே இருக்கின்றன. இவற்றிலுள்ள
எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, வரலாற்றுத் திரிபு போன்றவற்றை தமிழாசிரியர் சங்கம் கடந்த சில வருடங்களாகச் சுட்டிக்காட்டிய போதும் முன்னேற்றம்ஏற்படவில்லை.
இப்படியான விபரங்கள் நெசோர் (NESOHR) அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.
தமிழ்மொழி மூலமான கற்பித்தல் நடக்கும் பள்ளிக்கூடங்களில் கடந்த 10 வருடங்களாக 40% ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவருகிறது. 2005இல் புதிய ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். இவர்கள் தேவைக்கு எண்ணிக்கையில் உள்ளனர் என்பதோடு திறமையாகச் செயற்படுவதற்கு இரண்டிற்கும் மேற்பட்ட வருடகாலம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாத சுனாமியில் 24 கல்வி வலயங்களில் 09 கல்வி வலயங்கள் வடக்கு கிழக்கில் பாதிப்படைந்துள்ளன. 2005 ஜனவரியில் தொகுக்கப் பட்ட புள்ளி விபரங்களின்படி 2400 பள்ளிச் சிறுவர்கள் வட கிழக்கில் உயிரிழந்துள்ளனர். கல்முனை கல்விவலயத்தில் 1502, முல்லைத் தீவு கல்விவலயத்தில் 130, மட்டக்களப்பு கல்விவலயத்தில் 235, மூதூர் கல்விவலயத் தில் 217, அக்கரைப்பற்று கல்விவலயத்தில் 141.
54 பள்ளிக் கட்டடங்கள் முற்றாக அழிந்துள்ளன. அழிவுகளின் மொத்தப் பெறுமதி ரூபா 436மில்லியன். தளபாட இழப்பின் பெறுமதி ரூபா 72.8மில்லியன். கொம்பியூட்டர் கருவிகளின் இழப்புப் பெறுமதி ரூபா 49.1 மில்லியன். பகுதியாக இடிந்த பள்ளிக் கட்டடங்களின் இழப்புப் பெறுமதி 107.9 மில்லியன். வட கிழக்கு கல்விக்கந்தோர் கட்டடங்கள் இடிந்துள்ளன. அவற்றின் பெறுமதி ரூபா 21.4மில்லியன். மாணவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலதிக விபரங்கள் கிடைக்கும்போது இன்னும்
உயரலாம் என்று வட கிழக்கு மாகாண கல்வி நிர்வாக அலுவலகம் தெரிவிக்கின்றது. அதன் பிரசாரம் பிந்திக் கிடைத்த கணக்கின் படி முல்லைத்தீவில் 800 பள்ளிச் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 16 பள்ளிக் கட்டடங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 1938 பொதுமக்கள் முல்லைத்தீவில் இறந்திருப்பதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக் கின்றது.
படையினர் அமைதி உடன்படிக்கைக்குப் பின்பும் வட கிழக்குச் சிறுவர்களின் கல்விக்கு ஊறுவிளைவித்து வருகின்றனர். வலிகாமம் வடக்கில் முன்பு 46 பள்ளிக்கூடங்கள் இருந்தன. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 29 பள்ளிக்கூடங்களில் 16 மூடப்பட்டுவிட்டன. மிகுதி 13 பள்ளிக் கூடங்களும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே தற்காலிக இடங்களில் செயற்படுகின்றன. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சுன்னாகம் கந்தரோடையில் தனியார் வீடுகளில் இயங்குகின்றது. பள்ளிச்சிறுவர்களின் வருகை மிகக் குறைவாகக் காணப்படுவதால் அது மிக விரைவில் மூடப்படலாம் என்று கல்வித் தலைமை தெரிவிக்கின்றது. இராணுவத்தின் தலையீடு ஆரோக்கியமான கற்கைக்கு இடையூறாக இருப்பது கண்கூடு. பள்ளிக் கூடங்களின் வாசல்களில் இராணுவத்தினர் கூட்டம் கூட்டமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்த முடியாது. அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே உள்ள பாடசாலைகளும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. காலையில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லும் அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையான துருப்புக்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வாகனங்கள் தெருக்களில் அதி வேகமாக ரோந்து செல்கின்றன. இது சிறுவர்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும் செயற்பாடாகும்.
வட கிழக்குச் சிறுவர்களின் கற்கையில் படையினரின் தலையீடு நன்கு திட்டமிட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. யாழ். குடாவின் பிரதான பள்ளிக் கூடங்களையும் யாழ்.பல்கலைக் கழகத்தையும் நலிவுறச் செய்வதே சிங்களப் படையினரின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. பருத்தித்துறை ஹாட்லி ஆண்கள் கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் கல்லூரி என்பன படையினரின் பிடியில் இருக்கின்றன. இப்பள்ளிக்கூடங்களின் விளையாட்டுத்திடல் இராணுவத்தினரின் தேவைக்காகச் சுவீகரிக் கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் உடற்பரிசோதனைக்குப் பின்பு பள்ளிக்கூடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் இந்த நடைமுறை காணப்படுகிறது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒரு பகுதி இராணுவத்தினரின் பாவனைக்கு
எடுக்கப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள பள்ளிக்கூடங்கள் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
ஏறத்தாழ 52 யாழ்.குடாநாட்டுப் பள்ளிக்கூடங்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ளன. சென்றவருடம் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தைத் திருத்தி புதிய கட்டடம் அமைப்பதற்காக கட்டிடப் பொருள்களை பெப்பிரவரி 03, 2005ஆம் நாள் கொண்டு சென்றபோது படையினர் நுழைவு அனுமதியை மறுத்தனர். எழுதுமட்டுவாள் வடக்கில் ஐந்து கிராமங் களைச் சேர்ந்த சிறுவர்கள் கல்விகற்கும் எழுதுமட்டுவாள் வடக்கு சாவகச்சேரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நிலைகொண்டுள்ள படையினர் அதைவிட்டு விலக மறுக்கின்றனர். மட்டக்களப்பு கொம்மாந்துறை விநாயகர் வித்தியாலய வளாகத்தை படையினர் தமது தேவைக்குப் பயன்படுத்துகின்றனர். கடும் உடற்பரிசோதனைக்குப் பின்பு மாணவர்களும் ஆசிரியர்களும் இப்பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பது பள்ளிவாழ்வை உள்ளடக்கியதாக இருப்பதால், வட கிழக்கு மாணவர்களின் இயல்புவாழ்க்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
-தொடரும்
கலாநிதி க. சோமாஸ்கந்தன்
விபு இதழ் : மாசி-பங்குனி 2006
No comments:
Post a Comment