இந்த இனத்தின் அக முரண்பாடுகள்/ சிக்கல்கள்/ குழுவாத சிந்தனைகள் / சுயநல விழுமியங்களை கிரமமாக உள்வாங்கி ஒரு நேர்கோட்டில் இழுத்து பிடித்து அதன் மீது ஆளுமை செலுத்திய ஒரு அதி மனிதன்தான் தலைவர் பிரபாகரன்.
இவ்வளவு பிறழ்வுகளுடன் இருக்கும் ஒரு இனத்தின் மீது ஆளுமை செலுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல..
அதுதான் நாம் அவரை “தலைவர்” என்கிறோம்.
வரலாற்றில் இனி இப்படி ஒரு தலைமை உருவாக முடியாது என்ற தர்க்கம் இந்த அடிப்படையில்தான் வைக்கப்படுகிறதே ஒழிய அவரது படைத்துறை ஆளுமை/ அரசியல் – போராட்ட பண்புகளின் அடிப்படையில் அல்ல..
இது பலருக்கு இன்னும் புரியவில்லை..
அதுதான் பதினொரு வருடங்களை நெருங்கியும் முரண்பாடுகள் இருந்தாலும் எமது அரசியல் உள்ளடக்கத்தை ஒரு புள்ளியில் எம்மால் குவிக்க முடியவில்லை – ஒரு தலைமையையும் அடையாளம் காண முடியவில்லை..
மாறாக உள்ளக முரண்பாடுகளை வளர்த்து அதை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி உதிரிகளாக பிளவுண்டு கொண்டிருக்கிறோம்.
இப்படித்தான் வரும் காலத்தில் நமது அரசியல் இருக்கப் போகிறது என்பதை நாம் தமிழின அழிப்பு நடந்து முடிந்து ஒரு சில மாதங்களிலேயே கண்டு பிடித்து விட்டோம்.
அதுதான் எல்லோரும் தோல்விக்கு / அழிவுக்குக் காரணம் யார்? என்று மாறி மாறி காறி உமிழ்ந்து கொண்டிருக்க நாம் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் இனத்திற்குமான உளவியல் அலைவரிசையைக் கண்டடைய முயற்சித்துக் கொண்டிருந்தோம்.
முடிவில் நாம் இதை முன்வைத்தோம்.. அதுதான் பின்னாளில் நந்திக்கடல் கோட்பாடுகளாக விரிவாக்கம் பெற்றன.
“தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.
தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை எமது ஆய்வினூடாக துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்தோம். பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பதே எமது ஆய்வின் மிக முக்கியமான முடிவு.
முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.
தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது”
இதை இனியாவது தமிழ் அரசியல்வாதிகள் / அமைப்புக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுவே எமது விடுதலைக்கான/ நீதிக்கான அடிப்படை.
#ElevenYearsGenocide.
No comments:
Post a Comment