Saturday, 16 May 2020

வீரப்பன் மாஸ்டர்

வீரப்பன் மாஸ்டர்
எனது உயிரிலும் மேலான நண்பன். சிவகுமார் எனும் இயற்பெயரைக் கொண்டவன்.
சுழிபுரத்தைப் பிறப்பிடமாகக்கொண்டவன் 
பெண் சகோதரங்கள் நிறைந்த குடும்பத்தில் ஒரேயொரு ஆண்பிள்ளையாகப் பிறந்தவன். 
வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியில் என்னுடன் கூடவே ஒரேவகுப்பில் கல்விபயின்றவன்.

குறிப்பாக, எப்போதும் என்னை நானாக வாழ வழிவகுப்பதற்கு என்னுள்ளே இருந்து என்னை வழிகாட்டிக்கொண்டிருப்பவன்.
என்னை எப்போதும் தூங்கவிடாமல் செய்யும் மாண்புறு மனிதர்களுள் இவன் முதன்மையானவன்.

மனிதர்களில் சிலர்தான் அற்புதமான குணநலன்களைக் கொண்டவர்களாக பிறக்கிறார்கள் அல்லது அவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் அல்லது வளர்க்கிறார்கள் என்கிற எடுகோளை வீரப்பன் மாஸ்ட்டர், எனது உடன்பிறந்த சகோதரன் கேணல் கலையழகன், உடன்பிறவா சகோதரன் இரும்பொறைமாஸ்டர், பாலசுப்பிரமணியன் பொறியாளர் போன்றோரின் வாழ்க்கையை, எண்ணக்கருக்களை, குணநலன்களை அறிந்துகொண்டதிலிருந்தே புரிந்துகொண்டேன்.
நானும் முடிந்தளவு அவர்களாகவே வாழ்ந்திடனும் எனும் கொள்கையை வரிந்துகட்டிக்கொண்டு வாழ்கிறேன்.

வீரப்பன் மாஸ்டர்- அவனை நான் நினைக்காத நாட்கள் இல்லை. 
நான் 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 2 ஆம் ஈழப்போர் தொடக்கத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில், தம்பலகாமத்தில் அமைந்துள்ள எனது சிறிய கிராமம், சிங்கள, முசுலீம் காடையர்களால் முற்றாக சூறையாடப்பட்டு, வீடுகளும், உடமைகளும் கொளுத்தப்பட்டும், பல உறவுகள் படுகொலை செய்யப்பட்டும் சிதைக்கப்பட்டதனால், அங்கிருந்து தப்பியோடிய நான், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், காடுமேடு, கடல் மலைகள் தாண்டி கால்நடையாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். யாழ்ப்பாணம் வந்ததும், எனது இடையில் முறிந்துபோன கல்வியை தொடர்வதற்கு வழிதேடியபோது, 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப்பக்கல்லூரியில் சிவில் பொறியியல் டிப்ளோமா கற்கைநெறியில் சேர்ந்தேன். அது ஒருமாதகாலம் தாமதமாக இருந்தது. எனவே ஒருமாதகால கற்றல் நிகழ்வுகள் நிறைவுபெற்றிருந்தது. 

புதிய மாவட்டம், புதிய முகங்கள், புதிய சூழல், புதிய கல்வி. அனைத்தும் எனக்கு புதிதாகவும், புதிராகவும், மனதில் கிலேசமாகவும் இருந்தது. 
அப்போது என்னை நட்புறவாக அணுகி, என்னை அழைத்துச்சென்று வேண்டிய உதவிகள் புரிந்த ஒருவர் பெயர் சிவகுமார். அவர் புதிதாக சேர்ந்த என்னிடம், முன்வந்து சகஜமாக உரையாடி, வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துதந்ததுடன். என்னென்ன கற்றல் உபகரணங்கள் தேவை என்றும், அவற்றை எவ்வாறு கையாளப்படல்வேண்டும் என்றும், அவற்றை எங்கெங்கு பெற்றுக்கொள்ளலாம் என்றும்,  ஒருமாதம் தாமதமாக சேர்ந்தபடியினால், அதுவரைக்கும் முடிவுற்றிருந்த பாடங்கள், பயிற்சிகள் அத்தனையையும் இடைக்கிடை நேரம்வரும்போது கூட இருந்தே சொல்லித்தந்து அளப்பெரும் உதவிகளை புரிந்தார்.
அதன்பின்னர் அடுத்த மாதத்திலிருந்து சிவகுமார் கல்லூரிவருவதை நிறுத்திக்கொண்டார். அவர் வருகைதராததை எண்ணி மிகவும் கவலையடைத்தேன். 
நானும் பல்வேறு நபர்களிடமும், விசாரித்துப்பார்த்தேன் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக, ஒருசில வருடங்களின்பின்னர் நிலஅளவை விடயமாக எழுதுமட்டுவாள் தென்னந்தோப்புக்கு சென்றவேளை, எனது அணியை, வரிப்புலி உடையணிந்த ஒருவர், அதே உரிமையுடனும் அதே நட்புறவுடனும் வரவேற்று உபசரித்து அங்கும் வேண்டிய உதவிகளை புரிந்த இருவரில் ஒருவர் எனது நண்பன் சிவகுமாரும், இன்னொருவர் திருமாறனும் ஆகும்.

எனது ஆருயிர் நண்பன் சிவகுமார், அவர்தான் பின்னாட்களில் தன்னை ஒரு விடுதலைப்புலி வீரனாக இணைத்துக்கொண்டு, வீரப்பன் மாஸ்டராக வளர்ந்து அங்கே பல்லாயிரம் புலிவீரர்களுக்கு பயிற்சி வழங்கி, பல்வேறு வெற்றிகரமான தாக்குதல்களிலும் பங்குபற்றியிருந்ததுடன், தேசியத்தலைவர் அவர்களின் அன்பையும் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தார். 
வீரப்பன்மாஸ்டர், மேன்மைமிகு விடுதலைப் போராட்டத்திற்கு, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரைக்கும் தண்கடன்பணியை இம்மியும் பிசகாது சிரமேற்கொண்டு தொடர்ந்துவந்துள்ளார்.

சிவகுமார் நினைக்கும் போதெல்லாம்,
எனக்கு இன்றுவரைக்கும் உள்ள விடைகிடையாத கேள்வி என்னவென்றால்,,,
இவ்வளவு இளகிய மனமும், மென்மையான அணுகுமுறையும், அமைதியான சுபாவமும், எல்லோரையும் நேசிக்கும் உள்ளமும் கொண்டவர்களால் எப்படித்தான் போர் ஆயுதங்களை கையிலேந்த முடிந்தது என்பதே,,, 
ஒருவேளை புத்தன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், வரிப்புலி உடைதரித்து முதுகிலே போராயுதம் ஏந்தியவாறுதான் இருந்திருப்பானோ என்கிற எண்ணம் என்னுள்ளே வந்துவந்து போவதுண்டு,,,

நன்றி-நடேசன் திரு

No comments:

Post a Comment