முள்ளிவாய்க்காலின் பிரதிபலிப்புகள்:
இழந்ததை நினைவில் கொள்வது .(2)
எனக்கு 22 வயதாகிறது. 2009 இல் வலைஞர்மடத்தில் நடந்த யுத்தத்தின்போது எனது வலதுகை முழங்கைக்கு மேல் துண்டிக்கப்பட்டது. காயப்படும் போது எனக்குப் பத்து வயது. எனக்கு வலதுகைப்பழக்கம். கை துண்டிக்கப்பட்ட பின்பு இடதுகையால் எழுதப் பழகுவது மிகவும் கடினமாக இருந்தது. எவ்வளவு முயற்சித்தாலும் எனது எழுத்து அழகாக வரவில்லை. இருந்தாலும், இப்போது எனது தேவைகளை பூர்த்தி செய்யுமளவுக்கு என்னால் இடக்கையைப் பாவிக்க முடிகிறது. நான் சாதாரண தரக் கற்கையை இரண்டு தடவைகள் எழுதி இப்போது உயர்தரப் பரீட்சையும் எழுதி முடித்திருக்கிறேன்.
கைதுண்டிக்கப்பட்டபின் எனக்கு சரியான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. நாங்கள் கப்பல் மூலமாக இடத்தை விட்டு வெளியேறவிருந்தோம். நான் காயப்பட்டவுடன் உடனே மருத்துவ உதவி கிடைத்திருந்தால், கை துண்டிக்கப்பட வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால், மருத்துவ உதவி கிடைத்த வேளையில் எனது கையைத் துண்டித்திருக்காவிட்டால், நான் உயிரோடு இருந்திருப்பேனா என்பது கேள்விக்குறியே.
போர் முடிந்து மறுபடியும் பாடசாலை சென்ற போது என்னால் நேரே வகுப்பறைப் பாடங்களைப் படிக்க முடியவில்லை, முதலாம் தரச் சிறுவர்கள் போன்று முதலிலிருந்து எழுதப் பழ வேண்டிய தேவை இருந்தது. இடது கையால் ஒரு வருடம் எழுதிப் பழகிய பின்னர் தான் பாடங்களைப் படிக்க முடிந்தது. போருக்குள் சிக்கியதால் கையை இழந்தது மட்டுமன்றி, மனதளவிலும் வலுவிழந்து போனதால் படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை.
நான் ஒரு கையை இழந்தவனாக இருந்தாலும், படிக்கும் போது நான் இரண்டு கைகள் உள்ளவன் போலதான் நடத்தப்பட்டேன். வலக்கைப்பழக்கம் இருந்து இடக்கப்பழக்கத்துக்கு மாறியவன் என்ற அடிப்படையில் எனக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. போட்டிகளின் போது கூட நான் இரண்டு கைகளுடையோருடந்தான் போட்டியிடவேண்டியிருந்தது. கைப்பழக்கம் மாற்றுவதென்பது ஒரு இலகுவான விடயமல்ல, அத்துடன் தனியே ஒரு கையுடன் கற்பது என்பது மிகவும் சவாலானது. பரீட்சைகளில் கூட அதிக நேரம் தருவது போன்ற எந்த சலுகையும் எனக்குத் தரப்படவில்லை, அப்படி இருந்தும் நான் இன்று எனது கல்வியை முழுதாக முடித்திருக்கிறேன். உயர்தரத்தில் நான் இப்போது கிடைத்ததை விடவும் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்த்திருந்தேன். ஒருவேளை, அவர்கள் எனது நிலையைக் கருத்தில் கொண்டு ஏதாவதொரு ஏற்பாட்டைச் செய்திருந்தால் ஒருவேளை எனது பெறுபேறுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும். அல்லது நான் என் வலக்கையை இழக்காமல் இருந்திருந்தால் நான் நல்ல பெறுபேறுகளுடன் பல்கலைக்கழகம் சென்றிருப்பேன்.
போருக்கு முன்னர் வன்னிப் பிரதேசத்திலிருந்து பல மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்வார்கள். இப்போது வன்னியிலிருந்து முழுமையாகக் கல்வியை முடிக்கும் மாணவர்களோ அல்லது பல்கலைக்குச் செல்லும் மாணவர்களோ மிகக் குறைவு. இது போரினால் நிகழ்ந்த மாற்றம். போரினால் அங்கவீனமுற்ற மாணவர்கள் அதிகம் பேர் இருந்தாலும், அவர்களுக்குரிய எந்த ஒரு முறையான உதவிகளோ அவர்களது கல்விக்கு உதவும் கட்டமைப்புகளோ இன்னும் இல்லை. கிடைத்த ஒரு சில உதவிகளும் தொண்டு நிறுவனங்களாலோ அல்லது புலம் பெயர்ந்தவர்களின் உதவியாலே கிடைத்தன. ஒரு முறையான திட்டம் இருந்தால் நாங்கள் எமது கல்வியை நிவர்த்தி செய்து கொள்ளவோ ஒரு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவோ முடியும்.
No comments:
Post a Comment