ஏன் புலிகள் நோர்வே தலைமையிலான பேச்சுவார்த்தைளில் விட்டுக்கொடுக்காமல் போருக்கு சென்றனர், அது நல்ல முடிவுதானா, போரில் தோல்வியுற்றால் எல்லாம் இழந்துவிடுவோமே என்று பல கேள்விகள் உள்ளன.
இதனைப் புரிந்துகொள்ள ஒரு சிந்தனையோட்டம் செய்தேன்.
1. குறிக்கோள் என்பது இறையாண்மையுள்ள நாடு
2. பேச்சுவார்த்தைகளின் முடிவில் இறையாண்மையுள்ள நாடு இப்பொழுது கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் கிடைக்கும்படியான ஒரு இடைப்பட்ட தீர்வு வேண்டும்.
3. அதுபோன்று இல்லாத தீர்வை ஏற்றுக்கொண்டால், ஈழம் என்பது நிரந்தரமாகக் கிடைக்காமல் போகும்.
அதற்கு முக்கிய காரணம் அவர்கள் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி இருப்பார்கள். பிரபாகரனே விட்டுக் கொடுத்துவிட்டார், இனி நாம் எம்மாத்திரம் என்று ஒவ்வொரு தலைமையும் எதிர்காலத்தில் விட்டுக்கொடுக்கும். அதையும் மீறி ஈழம் கிடைக்கவேண்டுமானால், பிரபாகரனையும் மீறிய சிறந்த தலைமை வேண்டும். அது கிடைக்கப்போவதில்லை.
4. விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து போரிட்டால், வெற்றியடைய வாய்ப்புள்ளது. தோல்வியடைந்தாலும் சிறந்த முன்னுதாரணம் அமையும். பின்வரும் தலைமைகள் விட்டுக்கொடுப்பது கடினம். அப்படி விட்டுக்கொடுத்தாலும், அது நிரந்தரமாகாது. பிரபாகரனின் முன்னுதாரணம் ஒவ்வொரு தலைமையையும் விடாது துரத்தும். மீண்டும் போராட்டம் தொடரும். இது ஈழம் வெற்றி பெரும்வரை ஒரு முடிவிலா போராட்டமாகும். இன்று பிராபகரனின் முடிவுதான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களையும் பாடாய் படுத்துகிறது. இது நிற்கப்போவதில்லை.
5. பிரபாகரன் பார்வையில் இதில் முடிவெடுப்பதில் சிக்கலே இல்லை. வெற்றியோ தோல்வியோ, போர்தான் முடிவு. வெற்றியென்றால் எல்லாம் நன்றாக முடிந்தது. தோல்வி என்றால், மிச்சிறந்த முன்னுதாரணத்தை வைத்துவிட்டு போகவேண்டும். இவ்வழியில்தான் ஈழம் வெற்றிபெற முடியும். விட்டுக் கொடுத்தால் நிரந்தர தோல்வி ஏற்படும்.
6. அண்ணா திராவிட நாட்டை விட்டுக்கொடுத்தார், கருணாநிதியின் கீழ் மேலும் விட்டுக்கொடுப்புகள்தான் ஏற்பட்டது. இன்று திராவிடம் பெற்ற வெற்றிகளெல்லாம் ஒவ்வொன்றாக இழந்துவருகிறது. திராவிடம் வெற்றி பெற வேண்டுமென்றால், அண்ணாவைவிட சிறந்த தலைமைவேண்டும். ஆனால் இப்பொழுது உள்ளவர்களுக்கு கருணாநிதிதான் சிறந்த தலைவர். அவருக்கடுத்து உதயநிதிதான் சிறந்த தலைவர். இவ்வாறு கழுதை தேய்ந்து கட்டெறும்பு போலத்தான் ஆகும்.
2009-இன் பின்விளைவுகளைப் பார்க்கும்பொழுது அதைத் தோல்வி என்று கூறுவது சரியானது அல்ல. இதைத் தற்காலிக பின்னடைவு என்பதிலும் சிக்கல் உள்ளது. புலிகள் இதைத்தெரிவு செய்து உருவாக்கியது. 2009-இழப்பு என்பது ஒரு முடிவிலா ஆட்டத்தின் துவக்கம். 2009-ற்கு முன் முடிவிலா ஆட்டம் என்று ஒன்று இல்லை. இது ஈழப்போராட்டத்தின் ஒரு புதிய முன்னேற்ற பரிணாமம். இதன் தாக்கம் என்பது கிரேக்கர்களின் தெர்மாப்பிளைப் போர், யூதர்களின் மசாதாப் போர் போன்றது. அவை முடிவிலா ஆட்டத்தின் துவக்கம். அவைபோன்று நந்திக்கடல் என்பது நமக்கு முடிவிலா ஆட்டத்தின் துவக்கம். இந்த முடிவிலா ஆட்டம் என்பது ஈழத்தை அடைந்து விடுவதுடன் நிற்பதல்ல. கிரேக்கர்களின் வெற்றி அவர்களை உலகின் தலைசிறந்த நாகரீகத்தை படைக்க வைத்தது. . மசாதா இசுரேலை உருவாக்கியதுடன் நின்றுவிடவில்லை, இன்றும் அது இசுரேலின் அடையாளமாகத் தொடர்கிறது. நந்திக்கடல் எக்காலத்திலும் நிற்காத முடிவிலா ஆட்டம்.
கலாநிதி சு. சேதுராமலிங்கம்.
(நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் வெளியீடாக வரவிருக்கும் 'பிரபாகரன் சட்டகம்' நூலிலிருந்து)
No comments:
Post a Comment