Thursday, 2 April 2026

இருள் பிளந்து ஒளி எழுந்த நாளொன்றில்...-தாரணி

இருள் பிளந்து ஒளி எழுந்த நாளொன்றில்.......
~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிளி கிளி கிளி ....
உற்சாகத்துடன் உயரே எழும்பி ஒலித்த அந்தக் குரல்களே கரிப்பட்டமுறிப்புச்சந்தியில் எம்மை வரவேற்றன.

ஓயாத அலைகள் மூன்றின் ஐந்தாம் நாள். நவம்பர் ஏழாம் திகதி எதிரியிடமிருந்து மீட்கப்பட்ட கரிப்பட்டமுறிப்பு மண்மீது எம் பாதம் பதிகின்றது. காலம் காலமாக வலி சுமந்த எம் மனங்களின் மீது, மகிழ்வையும், நிறைவையும், துணிவையும் நிரப்பிய நாட்கள் இவை. இனி என்றும் வீழோம் எனும் உறுதியுடன் என்றும் வெல்வதற்காகவே எம் கரங்கள் எழுந்தன என்பதன் சாட்சியாகி எங்கள் மண் மீண்டும் எங்கள் கரங்களில். அழிந்து போன ஆக்கிரமிப்பின் அடையாளமாக சிதைவடைந்த காவலரண்கள், அறுந்துபோன முட்கம்பி வேலிகள் என போர் ஓய்ந்த களம் ஒன்றின் காட்சி.

ஓரிரு நாட்களின் முன் எறிகணைகளும் துப்பாக்கி ரவைகளும் முழக்கமிட ஓட வழியின்றி எதிரி பிணமாகிக் கிடந்த நிலம் அது. அங்கே மாங்குளம் நோக்கிய வீதியின் சந்தியில் இருந்து இடப்புறமாகத் திரும்பும் வளைவில் பெண் போராளிகள் தாச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

லேசான மழைத் தூறல்களினூடு சூரியன் வானில் புதைந்து கொண்டிருந்த ஒரு மாலைநேரம். சூழல் மனதுள் இறக்கியிருந்த மௌனமான களம் ஒன்றின் இழைகள் இந்த இளசுகளின்  உற்சாகத் தெறிப்பில் மெல்ல அறுந்து போனது.

"வணக்கம் அக்கா" என்னுடன் வந்திருந்த பெண் போராளிக்கும் எனக்குமாக அந்தச் சின்ன வாய்கள் உற்சாகத்துடன் மலர்ந்தன.

உலகமே வியந்து நிற்கும் வெற்றிக்காக தமது வியர்வையையும், உதிரத்தையும் விலையாகக் கொடுத்தவர்கள் இவர்களே.

தமக்குரித்தான அந்த வெற்றி பற்றிய பெருமித எல்லைகளைத் தாண்டி....இயல்பான குழந்தைத் தனத்தோடு புன்னகைக்கும் அந்தத் தேசக் குழந்தைகளின் தழும்பேறிய கைகளை கண்களில் ஒற்றிக் கொள்ள மனம் விரும்பியது.

அவர்கள் வழிகாட்ட அங்கிருந்த அணித் தலைவியின் அனுமதியுடன் சிதறிக் கிடந்த எதிரி முகாமினுள் நடக்கத் தொடங்கினோம். அலையடித்துப் போனதன் அடையாளங்கள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கும் இராணுவ உபகரணங்கள், உடைகள், காலணிகள், குறிப்பேடுகள், சமையற் பொருட்கள் என சில நாட்களின் முன்பு வரை இங்கிருந்தவர்களை நினைவூட்டின. மரங்களிலும், நிலத்திலும்,காற்றிலுங் கூட அந்நியத்துள் புதைந்து மீண்டதன் அடையாளம் தெரிந்தது. மனிதர்களே அங்கு வாழவில்லை என்பதாகக் காற்று கனத்திருந்தது. புதர் மூடிய கட்டடங்கள், புல் மூடி அடையாளமே இல்லாதொழிந்த மக்களின் வாழ்விடங்கள். இரு வருடங்களின் முன்பு வரை உயிர்ப்பும், செழிப்பும் நிறைந்திருந்த அவ்வூரின் ஆன்மா தொலைந்து வெறுமை கொண்ட பேரிருள் மூடிக்கிடந்ததான தோற்றமே கண்களினுள்.அச்சூழலின் பேரமைதியைக் கிழித்து சூழலை இயல்பினுள் நகர்த்தும் போராளிகளின் பேச்சுக்குரல்களும், நடமாட்டமும் மீண்ட அந்த மண்ணின் மீதான எமது இருப்பை உறுதி செய்தன.

முகாமின் களஞ்சிய அறையை ஒட்டியபகுதி ஒன்றில் போராளிகள் இரவுச் சமையலில் ஈடுபட்டிருந்தனர். எங்களிற்கு இனிப் பிரச்சனையில்லை. ஸ்ரோர் கிளியர் பண்ணும் வரை ஒரே சமையல்தான் எனக் கூறிச் சிரித்தார்கள்.

வெள்ளைச்சம்பா அரிசியும், கருவாடும் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. எம்மை உட்கார வைத்து மகிழ்வுடன் உபசரித்தார்கள். இடம் எதுவானாலும் மாறிவிடாத உபசரிக்கும் அந்தப் பண்பு என் எண்ணத்துள் அவர்களை இன்னும் உயரவைத்தது.

ஓயாத அலைகள் மூன்றின் பிரமிப்பான வெற்றி பற்றிய தமது மகிழ்வை விட மக்களின் மனநிறைவையும், மனநிலையையும்
அறிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வம் தெரிந்தது. தமது மக்கள் முகங்களில் புன்னகை மிளிர வீதிகளில் இறங்கி போர்க்களத்தின் திசைவரை உணர்வுகளால் இணைந்து கால்களில் சிறகு முளைத்த சந்தோஷத்துடன் தமது நேற்றைய வாழ்வின் சுமைகளை மறந்து மகிழ்வுறுகிறார்கள் என்பதில் அந்த மனங்கள் நிறைவு கொண்டன.

இந்தச் சண்டைக்கான சூழலைத் தமக்குத் தந்த தலைவர் பற்றிப் பெருமை பொங்கப் பேசினார்கள். எங்கள் மனங்களில் எரிகின்ற தீயுடன் அவனுக்கு எங்கள் பலத்தின் முழுமையைச் சொல்கின்ற நாளுக்காக நாங்கள் காத்திருந்தோம். எங்கள் அண்ணா மிக அருமையான களத்தையும் காலமொன்றையும் எங்கள் கரங்களில் தந்துவிட்டார். அம்பகாமத்தில் அன்று நாங்கள் இழந்த எங்கள் பிள்ளைகளின் பெயர் சொல்லி இன்று நாம் சாதித்துவிட்டோம். அசைக்க முடியாதென்ற ஆணவத்தோடு அவன் பரவி நின்ற காவலரண்கள் கடந்து நாம் முன்னேறும் போது மனதுள் எழுந்தடங்கிய உணர்வின் நிறைவை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை என ஒரு அணியின் தலைவி உணர்வு பொங்கச் சொன்னார்.

காவலரண் வேலியிட்டு கண்விழிக்கத் தொடங்கிய நாளிலிருந்து எதிரியை ஓட ஓட விரட்டியே கால்கள் சோர்ந்துவிட்ட நேற்றைய சண்டைவரை ஓயாத வேலையில் அலுத்துக் களைத்திருந்த தனது உடலின் சோர்வையும் வேதனையையும் தாங்கியபடி அவள் பேசப்பேச சில
நிமிடமேனும் நீட்டி நிமிர்ந்து கைகளை வீசித் தூங்க அவள் உடல் கெஞ்சும் என்பதையும் இந்த வேதனைகளை எல்லாம் தாங்கியபடியேதான் இவர்கள் எமக்காக வருடங்கள் பல தாண்டியும் உறுதி சரியாது போராடுகிறார்கள் என்பதும் என் நினைவை வருத்தியது. ஒட்டுசுட்டான் முகாம் ஒன்றிற்கான தாக்குதலிற்கான தமது நகர்வுபற்றி இன்னுமொரு போராளி சொன்னாள்.

இருள் மூடிப் போயிருந்த நள்ளிரவில் எதிரி கண்ணில் மண்தூவிய நகர்வு, கால்களை முன்வைக்கவோ, எமக்கான திசையை அனுமானிக்கவோ முடியாத கரும் இருள், நிலமும், மரங்களும், வானும் கூட இருளில் குளித்து கருமையை தம் மேல் அள்ளிப் பூசியிருந்தன. நகர்வின் திசைமாறாதிருக்க முன் செல்பவரின் இடுப்புப் பட்டிகளையே இறுகப் பற்றி நடந்தோம் என எத்தனை நாள் தூக்கமோ விழிகளை அழுத்த கண்களை மூடியபடி சண்டையின் ஆரம்பத்திலிருந்து தன் நினைவில் இருந்தவைகளை மூச்சுவிடாது கூறி முடித்தாள். சண்டை அணியொன்றின் பிரதான போராளியாக நல்ல வளர்த்தியுடன் அழகும், உறுதியும் கொண்ட அவளுடைய பேச்சில் மட்டும் இன்னும் மாறாத மழலை தெரிந்தது. இருட்டு என்பதை இரிசல் என அவள் உச்சரித்த விதம் எம்மை ரசிக்க வைத்தது. இந்தச் சண்டையில் தனது கனரக ஆயுதத்தைக் காப்பாற்றுவதற்காக அதன்மேல் குப்புறப்படுத்து தன் உயிரைப் பலிகொடுத்த பெண் போராளி ஒருத்தி பற்றி அவர்களின் தளபதி ஒருவர் வேதளையும் பெருமையுமாகக் கூறினார்.

வாழ்வு என்பதையே நாலு கோட்டினுள் வரையறுத்து சமூக நிர்ப்பந்தங்களையே ஆபரணங்களாக்கி அழகு பார்க்கும் எங்களின் வாழ்விலிருந்து வந்த இவர்களாலேயே தம்மைப் புறந்தள்ளி தேசத்தின் நாளைக்காக எம் உள்ளம் கசியும் வகையில் உயிர்விட முடிகிறது.

நாம் அர்த்தப்படுத்தியுள்ள எம் நடைமுறை வாழ்வு மனங்களில் இருந்து முற்றாக விலகி உயர்ந்து மலர்ந்துள்ள இந்த அற்புதமானவர்களின் உள்ளத்தையும் உணர்வுகளையும் காலம் எழுதித் தீர்க்குமா?

இவர்கள் உணர்வு சொல்லும் வார்த்தைகள் என்றேனும் காலத்தின் கரங்களினுள் வசப்படுமா?

வெற்றி என்பது விண்ணிலிருந்து விடிகாலை ஒன்றின் பரிசாக எமக்காக வந்து சேர்வதல்ல, அதன் பின்னே வலியினதும் கண்ணீரினதும் இரத்தத்தினதும் நீண்ட வரலாறு உள்ளது. காவலரண்களில் தம் உடலின் உணர்வுகளையே மறந்து மழையிலும், பனியிலும், வெய்யிலிலும் வாடிய போராளிகளினதும் இயல்பான மனங்களின் அச்சங்களை வென்று சாவிடம் தம்மைக் கையளித்து நகரும் வேவுப்புலிகளினதும், இன்னும் சண்டை ஒன்றுக்காகத் தம்மை உடல் வருத்திப் பயிற்சி பெறும் புலி வீரர்களது உடலும் மனமும் சுமந்திருக்கக்கூடிய துயர்மிகு கணங்களிலிருந்தே எமது வெற்றிகளிற்கான காலம் உருவாகிறது. அவர்களின் வலி சுமந்த நாட்களைக் கடந்தே இன்றைய வெற்றியின் மகிழ்விற்கான நாட்கள் எழுந்து வந்துள்ளன.

விடுதலைப் போர் என்னும் நெருப்பு நதியில் மாறா உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பயணம் செய்யும் இவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள இன்னும் இன்னும் தோள்கள் உயருமா எனும் கேள்விக்கு வரும்போது நடந்தும் வாகனங்களிலும் வெறிச்சிட்ட மீட்கப்பட்ட நகரங்களை உயிர்ப்பித்தவாறு உலவிக் கொண்டிருந்த எல்லைப் படைவீரர்களினதும். தங்கள் மனம் நிறைவடையக் கூடியதாக இப்போருக்கான தமது பணிபற்றிய தேடலுடன் வீதிகளில் உலவும் மக்களினதும் முகங்களே மனதுள் வந்துபோயின.

சத்தியத்தைச் சுமப்பவர்களின் துயரினை மறந்து சரித்திரம் ஒருபோதும் தீர்ப்பினை எழுதுவதில்லை எனும் நினைவினை சுமந்து இருளும், குளிரும் பொழுதைப் போர்த்தியிருந்த அந்த முன்னிரவில் அவர்களிடமிருந்து விடைபெற்றோம்......

-தாரணி

-எரிமலை நவம்பர் 2000

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

No comments:

Post a Comment