போர்க்களங்களில் காப்பாற்றக்கூடிய சில போராளிகள் இறப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய அங்க இழப்புகள் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்பவையே அதற்காக இதனை ஏற்க முடியாது. களமுனைத் தளபதிகளுக்கு வோக்கியில் அறிவித்தல்கள் பறந்த வண்ணம்
உள்ளது.............👇 13.
காயக்காரரை பின் நகர்த்துவதற்கு துரித கதியில் செயல்பட வேண்டும். இன்னும் குறைந்தது 3 மணித்தியலாத்தில் வானம் வெளிக்கத் தொடங்கிவிடும். அதன் பிறகு இவர்களை ஆபத்து சூழ்வது சர்வ நிச்சயம் வாகனங்களைக் காட்டுப் பாதையூடாகவும் ஒழுங்கைகள் ஊடாகவும் "லைற்" போட்டபடி வேகமாக ஓட்ட முடியாது. விமானத்தாக்குதல்களின் அபாயம் இந்த நேரத்தில்தான் அதிகமாக உள்ளது. இங்குதான் ஒவ்வொரு சாரதியும் பார்த்தசாரதி ஆகின்றார்கள். இவர்களின் திறமையைப்பாராட்டாமல் இருக்க முடியாது.
அப்பொழுது அந்த ஆச்சரியமான சம்பவம் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் போராளிக்குரிய துணிவுடன் அவ்விடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வந்திருந்தனர். காயக்காரர்கள் வேகமாக முன்னுரிமை அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
முதலிரண்டு வாகனங்களும் அனுப்பப்பட்டுவிட்டன.
அடுத்த வாகனம் வரும் வரை ஏனைய போராளிகளைக் கவனித்து கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது அந்தச்சம்பவம் நிகழ்ந்தது. கல் றோட்டில் வெறும் றம் உருட்டியமாதிரி MI 24 உலங்கு வானூர்திக்காரன் சரார், சரார் என றொக்கட் மோட்டர் தாக்குதல்களை மேற்கொண்டான். அச்சத்தம் இங்கு கேட்க எல்லோரும் ஒரு கணம் உறைந்து போனார்கள். அவர்களுக்கு அடிவிழுந்திட்டுதோ! உடனேயே அவ்விடத்திற்கு உதவி அனுப்பவேண்டும். ஆனால் ஆட்களும் இல்லை பொறுப்பாளர் திகைத்து நிற்க வோக்கியில் செய்தி வருகின்றது. பிரச்சனையில்லை மயிரிழையில் சிறு சேதங்களுடன் தப்பிவிட்டோம். அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடியே தங்கள் பணியைத் தொடங்கினார்கள்.
வானம் வெளுத்துவிட்டது. நிலம் தெரிகிறது. இவர்கள் இன்னும் அபாயக்கட்டத்தை தாண்டவில்லை கணிசமான காயக்காரர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். அப்போது மனோச் கூறுகின்றார். நீங்க உடனே ஜீப்பில் புளியங்குளம் போங்கோ. அங்க மெயினில இங்கிருந்து போன காயக்காரர்கள் தேங்கிக் கிடக்கின்றார்கள். அதற்கு அங்கால கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை. இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முட்டாள்தனமான வேலை. இதற்கு முதல் நாளும் கிபிர் வந்து சாத்தினவன். செல்றேஞ் உள்ள இடம். நூற்றுக்கணக்கான காயக்காரர்கள் மரங்களின் கீழ் கிடத்தப்பட்டுள்ளனர். சில பேராவது உயிரைவிட வேண்டிவரும். எண்ணவோட்டத்தை அலட்சியம் செய்தவன் ஓடிப்போய் ஜீப்பில் தாவி ஏறுகின்றான். அதிலும் இரண்டு காயக்காறர்கள் கிடக்கின்றார்கள் ஜீப் மின்னலெனப்பாய்கின்றது.
ஜீப்பில் விரைந்து கொண்டிருப்பவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் செல்லும் பாதை முழுவதும் பலநூறு போராளிகள் "கட் அவுட்" போட்டு பாதுகாப்பு வழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இராணுவத்தின் பதுங்கித்தாக்கும் தொல்லை கொடுக்கும் தாக்குதல்களைத் தடுப்பதற்காக. எண்பத்தி ஏழாம் எட்டாம் ஆண்டுகளில் இப்படித்தான் பலாலியில் இருந்து வரும் இந்திய இராணுவத்தின் தொடர் வாகன அணிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ்ப்பாணம் வரை வீதியின் இருமருங்கிலும் நிற்பார்கள் அன்று, சில நூறு வீரர்களுடன் இருந்த இயக்கம் இன்று....... நினைக்க பெருமையாக இருக்கிறது.
நன்றாக விடிந்துவிட்டது. என்ன சங்கதி இங்கு நடக்கின்றது? என
எட்டிப்பார்க்க ஆதவனும் அவசரப்படுகின்றான். எதிரிகளினதும் இரத்தத்தால் இம்மண் மட்டுமல்ல போராளிகளினதும் வானம் சிவந்தே காணப்படுகின்றது. போர் வேள்வியின் விளைவுகளை கண்ணுற்ற கதிரவன்,
மற்றுமோர் குருசேத்திரத்தைக் காண்கின்றான். அதுசரி ஏன் சோழர்களை சூரிய வம்சம் என்கிறவர்கள். சோழர்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் அவர்களின் வழித்தோன்றல்களா? இம்மண்ணின் பூர்வகுடிகளல்லவோ! அவன் மனம் சூரியனில் இருந்து சோழவம்சத்துக்கும் ஈழத்தமிழருமென எட்டி எட்டிப்பாய்கிறது. இது ஆராச்சியாளர்களின் வேலை. இங்கு நாங்கள் உயிரோடு வாழவேண்டுமென்றால் போரிட வேண்டும். உயிரியல் பார்வையில் நாங்களும் சாதாரண உயிர்தான் வாழ்வதற்காகப் போராடுகின்றோம். அவ்வளவுதான் என முடிவுக்கு வருகின்றான்.
இப்ப அந்தப்பிள்ளை உயிரோட இருப்பாளா அல்லது இறந்திருப்பாளா?
மனம் கடமையை எண்ணுகின்றது.
முதல் முறையாக களமுனையில் இருந்து 300மீ தூரத்தில் இரத்தம் ஏற்றி அனுப்பிய காயம். காப்பாற்றப்படுமாயின் அதுவொரு சாதனையாகவே அமையும். இராணுவ வெற்றிகளும் தோல்விகளும் வேறுபட்டவை. விளைவுகள் வெளிப்படையாகத் தெரிபவை. போர் மருத்துவத்தைப் பொறுத்தவரை அப்படியில்லை மருத்துவத்துடன் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களுக்குத்தான் தார்பரியம் விளங்கும். காப்பாற்ற முடியாத காயத்தை உடையவர்கள் உயிர் பிழைத்திருப்பதும் உயிர் பிழைத்திருக்க வேண்டியவர்கள் இறந்திருப்பதும் இது சாதனையில் அடங்குமா? அல்லது வேதனையில் அடங்குமா? இவன் மனம் ஏங்குகின்றது.
தியட்டருக்கு போனவுடன் ஆளைப்பற்றி விசாரிக்க வேண்டும். தன்னுள் கூறிக்கொள்கின்றான்.
ஜீப் சிறு வீதியின் வயல் வரம்புகள் எல்லாம் ஏறி, ஏறி பாய்கின்றது. காயக்காரர்கள் ஐயோ! அம்மா! என்று கத்துகின்றார்கள். வயல் வெளிகளினூடு அவர்கள் விரைகின்றார்கள். தூரத்தில் உலங்கு வானூர்தி தாக்குதல் நடத்துவது தெளிவாகத் தெரிகின்றது. அது இவர்கள் பக்கம் வருமாயின் றொக்கட் மோட்டரினால் கலைத்துக் கலைத்து அடிக்கப்படுவார்கள்.
இவர்களிடம் இருப்பதுவோ சாதாரண இயந்திரத்துப்பாக்கிகளே. அதனால் உலங்கு வானூர்தியைத் தாக்குவதென்பது "கைவிளக்குமாத்தால் யானையை அடிப்பது" போன்றது. சற்று எட்ட வயல் வெளியில் விழுந்து வெடித்து தூசு மண்டலத்தையும் புகையையும் கிளப்பும் எறிகணைகள் ஆங்கிலப்படங்களை நினைவூட்டுகின்றது. உயிர் தப்ப இவர்களுக்கு இருக்கும் ஆயுதம் வேகம் மட்டுமே.
இவன் தன்னிடம் இருக்கும் பெதடீன் ஊசிமருந்து இரண்டையும் காயக்காறருக்கு ஏற்றுகின்றான். வலி சற்று குறைவாக இருக்கட்டும். இப்பொழுது வயல் வெளியில் இருந்து காட்டுத்துண்டு ஒன்றினுள் ஜீப் துளைந்துவிட்டது. இனி கெலிக்கு பயப்படத்தேவையில்லை. மனம் எண்ணுகையில் காட்டு மரமொன்றில் படார் படீர் என வந்து அடித்து வெடித்த எறிகணையால் வீதிக்குக் குறுக்கே பாரிய மரக்கொப்பு இலை குழைகளுடன் விழுகிறது. அதையும் ஏறி மிதித்துக்கொண்டு இவர்களின் வாகனம் விரைகின்றது.
காட்டு வீதியின் ஓரத்தில் மினி பஸ்சின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் கரியல் அப்படியே கழன்று விழுந்து கிடக்கின்றது. எப்படி இதுவென்று கேட்க சாரதி சொல்கிறான். முதல் காயத்தைக் கொண்டுவந்த மினி பஸ்சை கெலி கலைக்க தலைகால் தெரியாமல் ஓடிவர பாலை மரக்கொப்பு கரியலில் ஒரு அடி அப்படியே விழுந்து விட்டது. ஆள் புளியங்குளத்தில் போய்நிண்டுதான் திரும்பிப்பார்த்தவராம். ஒரு சிரிப்புடன் கூறும் அவனின் குரலில் தான் அந்த மினிபஸ் சாரதியும் திறமையானவன் எனும் தொனி தென்படுவதுபோல் இருக்கின்றது.
இவன் கூறுகிறான் மினி பஸ்சிலும் பார்க்க ஜீப் சின்னன்தானே! இவன் கூறுவதன் காரணம் அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும். அவன் தனது கடமையில் கண்ணாகின்றான்.
காலை 7 மணியளவில் புளியங்குளம் பிரதான மருத்துவ முகாம் வந்தடைகின்றார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. இவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அங்கிருந்த காயமடைந்த போராளிகள்
அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அப்பாடா! என்றிருக்கின்றது.
ஆபத்தான கொலைவலயத்தினுள் இருந்து வெளி வந்தாச்சு இவர்கள் வந்த சில நிமிடங்களில் இராணுவ முகாமில் இருந்து கைப்பற்றப்பட்ட கனரக ஆயுதங்கள் புதிய உளவியந்திரம், பீல்ட் மோட்டபைக் என்பவற்றுடன் ஏனைய போராளிகளும் வந்து சேர்ந்தனர். ஜெயசிக்குறு எதிரியின் கழுத்தில் பிடித்து பிடரியில் பலமான அடி ஒன்றைக்கொடுத்து கைப்பற்றப்பட்டவை. இவ்வாயுதங்களுக்கு மட்டும் கண்கள் இருக்குமாயின்! அவை கண்ணீர் சிந்துவது தவிர்க்க முடியாதது. எதிரியிடம் இருந்து கைப்பற்றப்படும் ஒவ்வொரு ரவை முதல் ஆட்லறிவரையும் பல கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கும்.
ஜெனரல் ரத்வத்தை சொன்னார் ஜெயசிக்குறு விரைவில் முடிந்துவிடும். புலிகள் படுத்துவிடுவார்கள் என நிலமையோ! இப்பொழுதுதான் தாய்ச்சமரின் மூன்றாம் கட்டம் முடிந்திருக்கின்றது. என அறிவிக்கின்றது.
எண்ணவலைகளால் பின்னப்பட்டவன் தனது அடுத்த பணிக்காக பொறுப்பாளரின் பணிப்பை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றான்.
மனோச் வந்து சொல்லுகிறார். டொக்டர் வாங்கோ போவம் நளன்ர பக்கத்தில் காயம் குவியுதாம். உடனேயே புறப்பட ஆயத்தமானார்கள். வேறு சிலமருத்துவப்போராளிகளும் இவர்களுடன் இணைந்து கொள்கின்றனர். குறைந்தது இரண்டரை மணித்தியாலம் வாகன ஓட்டத்திற்கு பின்புதான். வன்னிமேற்கில் அமைக்கப்பட்டிருக்கும். அப்பிரதான மருத்துவமுகாமைச் சென்றடையலாம். A,9 வீதியை ஊடறுத்து ஜெயசிக்குறு இராணுவத் தொடரை உடைத்து மறுபக்கம் தாக்குதல் தொடுக்கும் அணியுடன் இணைந்துதான் சென்றிருக்கவேண்டும். அது சாத்தியமில்லாமல் போக
இவ்வாறு செல்கின்றார்கள். பிக்கப் வாகனம் வேகமெடுக்கின்றது. உடற்சோர்வால் நித்திரை தூக்கியடிக்கின்றது. இவனும் ஏனையவர்களும் நித்திரை கொள்வதும் வாகனம் பள்ளங்களில் விழுந்து குலுங்கும்போது கண்விழிப்பதுமாக இருக்கின்றார்கள். அப்பொழுது இவன் தன்னுள் எண்ணுகின்றான். எங்களை மாதிரித்தானே றைவரும் நித்திரை முழித்து இரவு பகல் ஓடினவன். ஆள் இப்ப நித்திரை தூங்கினால் எப்படி இருக்கும்? மனம் ஒருமுறை எண்ணிப்பார்த்ததில் சாரதியின் முக்கியத்துவம் விளங்கியது. என்ன இருந்தாலும் நித்திரை கொள்வது நல்லது இனி எப்ப நித்திரைக்கு சந்தர்ப்பம் கிடைக்குதோ தெரியாது.
கள தள மருத்துவர்களின் சமரானது திட்டமிட்ட சமர்கள் ஆரம்பித்து சில மணித்தியாலங்கள் பின்னர் ஆரம்பிக்கும், பின்னர் தொடரும் நாட்களில் வேகம் எடுக்கும். பிறகும் மந்தகதியில் தொடரும் சிலவேளை கிழமைகளாக இழுபடும் போராக மாறுவதும் உண்டு. சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நித்திரை கொள்ளுவதை வழமையாக்கியிருந்தார்கள்.
இவர்கள் வீதிக்கு மேற்காக நெடுந்தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சத்திர சிகிச்சைகளுக்கான வசதிகளுடன் கூடிய மருத்துவ முகாமைச் சென்றடைகின்றார்கள். இது ஒரு பொதுமகனின் வீடு அதனை இவர்கள் என்ன தேவைக்கு எனக்கேட்டவுடன் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர். அதனைச் சில மணித்தியாலங்களினுள் போர்ச் சிகிச்சைக்கான நவீன வசதிகளைக்கொண்ட மருத்துவமனையாக மாற்றியிருந்தார்கள்.
-தொடரும்......
-யுத்தகாண்டம்.
-தூயவன்.
No comments:
Post a Comment