"எமது காலத்தில் ஈழத்தமிழினம் விடுதலை பெறுமென விசுவாசிக்கின்றோம்!
அஃது பொய்ப்பினும் எமக்குப் பின்னால் எம்மிலும் வீரர்கள் ஈழத்தில் தோன்றி ஈழத்தின் மீட்சிக்குப் போராடுவார்கள்...."
மேற்படி வார்த்தைகள் தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனம்! தமிழரசு இயக்கத் துவக்க விழாவில் நாற்பதாண்டு முன் நவின்ற மொழிகள்...!
"சிங்களருடனே சேர்ந்தினி வாழ்ந்திடின் ஈழத்தில் தமிழினம் வேரொடு சாயும்! வீழ்ந்திட்ட தமிழினம் எழுந்திட வேண்டின் சுதந்திர ஈழம் மலர்ந்திட வேண்டும்! இதுவே எனது இறுதிப் பேரவா!
புனித சுதந்திரம் மலர்ந்திட ஒரேவழி போராடுவதே போராடுவதே" எழுபத்தி ஐந்தில் இவ்விதம் கூறி இயற்கையடைந்தார் அரசியல் ஞானி!
செல்வாவின் கனவை நனவாக்கிடவே"
வல்வையின் வார்ப்படம், வலிமையின் இருப்பிடம், உறுதியின் உறைவிடம், உண்மையின் உருவமாய் ஈழமண்ணின் விடுதலைப்போரை நிலைகுலையாமல் நிலைத்து நடத்திட.
நேர்மை நெஞ்சினனாய் புலிப்படைத் தலைவன் புல்லரின் எதிரி-புகழுக்கு மயங்கான்-இகழ்ச்சிக்கு கலங்கான்! பிரபாகரன் எனும்
பெயருடைத் 'தம்பி'
தலையெடுத்தான் தமிழ் ஈழம் மகிழ்ந்திட! செல்வாவின் வார்த்தைகள் பொய்யாக வில்லை! செல்வாவின் அறவழி, சிவகுமரன் மறவழி சேர்ந்தொன்றாய் வல்வையிலே சீறும் புலியாய் எழுந்தான், சீலம் நிறை எம் தம்பி பிரபா !
ஒரேயொரு துவக்குடன் ஒன்னாரை வீழ்த்திட, தர்மப்போர் துவங்கி, தமிழரைப் புலிகளாக்கி, இயக்கம் அமைத்து இறுமாந்திருந்த சிங்களப் படைகளைச் சிதற அடித்தே செங்களம் கண்டான் செந்தமிழ்ப் பிரபா!
ஐந்தாண்டுகட்கு முன் ஐயம் தவிர்த்து பிரபாகரனெனும் புலிகள் தலைவனே நொந்து கிடக்கும் தமிழீழ மக்களின் நம்பிக்கைச் சொத்து! மக்களை இணைத்து ஈழப்போரை வெற்றிப்பாதையில்
விடுதலை நோக்கி வீரப்பயணம் மேற்கொள்ளும் தகுதியும், திறமும் வீரமும் கொண்டவன்
என்று நான் உறுதி கொண்டு- எழுதிய போது, பேசிய போது என்னை இகழ்ந்து தூற்றியோர், இழிவுரை பகன்றோர், பழியுரை செப்பியோர், பயமுறுத்தியோர் ,விரட்டியோர், மிரட்டியோர், எண்ணிலடங்கார்!
ஆயினும் நானோ கலங்கிடவில்லை! எடுத்த பேனாவை எறிந்திடவில்லை! என் மனச்சாட்சி ஏற்றுக் கொண்டதை எழுதிட என்றும் நான் அஞ்சியோனல்லன்! எதிரியின் காலில் கெஞ்சியோனல்லன்!
"கொலை வெறி கொண்டோன், கொள்ளைக்காரன் பட்டம் பெறாதான், பாமரன், அரசியலறியான், ஆத்திரக்காரன் இவ்வாறெல்லாம் எம் தம்பி மீது கல்லை விட்டெறிந்தோர் கணக்கிலடங்கார்!
பணமுதலைகளும், தமிழீழத்தின் மேல் பற்றுப்போல் நடித்த பற்றிலா நாய்களும், இனமானமிழந்த 'சோ' தாக் கும்பலும் தம்பியை, எங்கள் தமிழீழத் தலைவனை, திட்டிய போதெல்லாம் எரிமலையொன்று வெடித்தது எனக்குள்!
வழக்குமன்றில் பொய்யுரைபேசி உண்மைக் கொலைஞனை விடுவிப்போரும், ஈழச் சிக்கலை வணிகமாக்கி உலகத் தமிழரின் நிதி பறித்தோரும், தானைத் தலைவனை ஏளனம் செய்தனர்!
பழைமைவாதிகளும், பரம்பரைத் தலைமையும், மேல்தட்டு வர்க்கமும் ஏற்குமா தம்பியை?
என் நெஞ்சு கொதித்தது!
வெள்ளை வேட்டியில் கறைபடியாமல், கறுப்புக்கோட்டை கழற்றாமல் விடுதலை பேசிய விந்தை மனிதரை, அரசியல்வாதியின் அயோக்கியத்தினை, வாளினும் வலிய என் பேனா கொண்டு சாட்டையடி தந்து சந்தியில் நிறுத்தினேன்!
குடத்து விளக்காய் இருந்த நம் 'தம்பி'யை குவலயமறிந்திட கொள்கை முரசமாய் வேங்கை எழுந்தது வீரத்துடனே!
'தம்பி'யின் ஆற்றலை, தனிப் பெரும் பண்பை, தன்னையழித்து தமிழினம் வாழ்ந்திட அன்னவன் செய்த அரும்பெருஞ் செயல்களை எழுதினேன் ஏட்டில் எல்லோரு மறிந்திட!
எங்கள் தம்பி பிரபாகரன், ஈழத்தலைவன் பிரபாகரன், அவனே எமது வழிகாட்டி!
என்றே எழுந்த எழுச்சிப் பண் ஈழ மண்ணில் மட்டுமன்றி. இந்தியத்தின் தமிழ்நாட்டில் ஆறு கோடித்தமிழருடன் அகில உலக நாடுகளில் வாழும் தமிழர் கூட்டமெலாம் வாழ்த்தும் தமிழன் 'தம்பி' யன்றோ? தமிழீழ நாட்டார் வேட்கையொன்றே! தமிழீழமெனப்படும் தாய்த்திருநாட்டை மீள அமைத்து விடுதலை பெற்று வாழப் போரிடுவது ஏம் முரிமையன்றோ!
போர்த்துக்கீயன். ஒல்லாந்தன் பின் ஆங்கிலேயன், சிங்களவன், இத்தனை பேருடன் இந்திய நாடும் ஈழ மண்ணை ஆக்கிரமிப்பதா? இந்திய ராணுவம் ஈழம் வந்தது ஈழத்தமிழர்க் குதவிடவல்லவே!
பொங்கி எழுந்திடும் விடுதலை உணர்வை "தமிழீழமே எம் தாரக மந்திரம்" எங்கும் எழுந்த இத்தேசிய அலையை, சங்கொலி எழுப்பும் புலிகளின் உறுமலை, தமிழீழ எழுச்சிக்கு வடிவமைத்திட்ட விடுதலைப் புலிகளை வேட்டையாடிட வந்தனர் இந்தியப்படைகள் ஈழத்துள் மண்டியிட்டனரா தமிழீழ மக்கள்? 'வண்டி விட்டனர் அவர் தலை மீது!
அச்சம் என்பது மடைமையடா அஞ்சாமை தமிழரின் உடைமையடா அடிமை வாழ்வினைத் துடைத்திடவே எம் ஆருயிர்தனையும் அர்ப்பணிப்போமெனச் செயற்படும் புலிகளின் தனித்தலைவன்! எழுந்தனன் பிரபாகரன் எரிமலையாய் இந்தியப்படைகள் அஞ்சி நடுங்கிட ஈழ மக்கள் எழுச்சிப் பண் பாடிட!
சிங்களப் படை அனைத்தும் புலிப்படையிடம் மோதித் தோற்று முகாம்களுக்குள்ளே முடங்கிய பின்னர் ஜே.ஆர். அழைத்தான் இந்தியப்படைகளை!
ஓரிரு நாளில் ஒரு இலட்சம் படை வந்து குவிந்தது தமிழீழ மண்ணில்! தமிழரைக் காக்கவா இந்தியம் வந்தது?
தமிழரின் இயக்கமாம் புலிப்படை இளைஞரை வேரோடழிக்கவே உலக வல்லரசுகளில் நான்காம் பெரும்படை ஈழம் வந்தது!
"இருப்பதோ ஆக ரெண்டாயிரம் புலிகளே!
இவர்களை அழிப்பதா எமக்குப் பெரிது?
எழுபத்திரண்டு மணிகள் போதும் புலிகளை அழித்துத் துடைப்போமென்று இறுமாப்புடனே இந்திய ராணுவம் ஈழ மண்ணுள் நுழைந்ததாயினும் சண்டை துவங்கிய முதல் நாளன்றே சரீரம் சிதறிட இறந்தனர் பல ராணுவத்தினர்!
இந்திய வீரம் 'புலிகளால்' உடைந்தது! இந்திய ராணுவம் ஈழத்தமிழரை காக்கவா வந்தது? அல்லவேயல்ல! சிங்கள ராணுவக் கொடுமையிலும் விட இரண்டு மடங்கு இந்திய ராணுவம் ஈழத்தமிழரை வேட்டையாடியது!
ஆறாயிரம் அப்பாவித் தமிழர்கள் கோரமாய்ச் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அடியும், உதையும், அக்கிரமங்களும் காந்தி நாட்டு ராணுவம் செய்தது!
ஆயிரமாயிரம் தமிழ்க்குல மகளிரின் மானம் கெடுத்து கற்பையும் உறிஞ்சினர்!
கொலையும் செய்து தெருக்களில் வீசினர்!
வணிகர் கடைகளில், தமிழரில்லங்களில் கொள்ளையடித்த நகை, பொருள், பெறுமதி கோடிக் கணக்கில்! கோடிக்கணக்கில்!! சிறையிடப்பட்டோர் சித்திரவதைகளின் உச்சக்கட்டத் துயரனுபவித்தனர்! மக்களோடு தம்மைக் காத்திட எழுந்த புலிகளின் போரோ, புதியதோர் பரணி,
இரண்டரையாண்டுகள் நடந்தப் இப்போரில்.
புலிகளின் தாக்குதல் காரணமாக இந்திய ராணுவம் பேரழிவுற்றது! தலையற்றவர் பல்லாயிரம் உடல் சிதறியோர் பல்லாயிரம்! கையற்றவர், காலற்றவர் கண்ணற்றவர், காதற்றவர் எண்ணிலடங்கா இந்தியப்படையினர்! முப்பது காசுக்குக் காட்டிக் கொடுத்தான் கிறிஸ்துவை யூதாஸ் எனும் துரோகி! முப்பது இலட்சம் தமிழீழ மக்களை தமிழின மாந்தரின் விடுதலைப் போரை-முதுகில் குத்தவும் தமிழரை பிரிக்கவும் ஆட்சி அதிகாரம் எதுவுமற்ற மாகாண சபை எனும் எலும்பைக்காட்டி தமிழரில் கயவரை எடை போட்டறிந்து தன் கைக்குள் போட்டது இந்திய அரசு!
ஈழ விடுதலைக்கு எதுவுமே செயாத EPRLF, ENDLF, TELO, 'புளாட்' என்பாரை வலையில் போட்டு கூலிப்படையாய் ஆக்கியதிந்தியா!
ஈழவிடுதலைக்கு எதிரிகளாகி, மக்களின் உடமையை கொள்ளையடித்து,
சமுக விரோதிகள் எனப் பெயர் பெற்றோர் இந்தியாவின் நண்பர்களாயினர்.
சிங்களத்தின் சட்டத்துக்கமைந்து, துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டி, தில்லு முல்லுத் தேர்தல் நடத்தி, 'பொம்மை' முதல்வராய் பதவி பிடித்தோர் கொல்லைப்புறத்தில் புலிகளை எதிர்த்திட இந்தியா தந்த ஊக்கத்தில் திளைத்து பள்ளி செல்லும், மாணவர் சிறுவரை கட்டாயப்படுத்தி இழுத்து வந்து முக்காலிப்படை (T.N.A.) முகாம்கள் அமைத்தனர்,
இந்தியா பணமுடன் பயிற்சியளித்து கருவியும் தந்தது !
தான் வெளியேறினும் புலிகளை அழித்திட துரோகப்படையை அமைத்திடுவதில் இந்திய ராணுவம் வரிந்து கட்டியது! மானத்தமிழனும் துரோகித் தமிழனும் தமக்குள் மோதிச் சாவதற்கென்றே இந்திய வேடன் விரித்த வலையே T.N.A. எனுமினத்து துரோகப்படை!
இந்திய ராணுவம் தமிழீழத்தில் தமிழினக் கொலையில் ஈடுபட்டது. புலிகளை அழித்திட வியூகம் அமைத்தனர் வியூகம் அனைத்தையும் புலிகள் உடைத்தனர்!
போதும் போதும் இந்தச் சண்டைகள்! வீணாக நாம் ஏன் செத்திட வேண்டும்! எந்த நிமிடமும்,எந்த நிலையிலும், எங்கும் புலிகள் தாக்கலாம் எமை! இருபதாண்டுகள் செல்லினும் புலியை வெற்றி கொள்ளுதல் இயலாத காரியம்! இந்திய ராணுவம் இந்த உண்மையை ஒப்புக் கொண்டது உலக நாடறிந்திட!
சீனப் போரில் ஏற்பட்ட இழப்புக்கள், பாகிஸ்தான் போரில் நிகழ்ந்த அழிவுகள். அனைத்தையும் விட ஈழப்போரில் இந்திய ராணுவம் ஈட்டிய அழிவுகள் அளப்பில புலிகளால்! என்று புலம்பினர் இந்திய அரசினர்!
வெற்றிகரமாக இந்திய ராணுவம் விடை பெறுகின்றது ஈழத்திலிருந்து! அராஜகச் செயலும், அட்டூழியமும் துரோகத் தனமும், துட்டர் கொட்டமும் விடுதலைக்காகப் புரட்சி நடத்திடும் மக்களின் முன்னே தூள் தூளாகும்!
இருபதாம் நூற்றாண்டில் ஈடிணையற்ற புரட்சியாளன்! பிரபாகரனெனும் பெயருடைத்தலைவன்! உறுதி நெஞ்சினன்! ஒளியுமிழ் கண்ணினன்! உலகத்தமிழர் நெஞ்செலாம் நிறைந்த நீலமேனியன்! வஞ்சக மற்ற அவன் சிரிப்பிலே வையகமெங்கும் தமிழர் மயங்குவர்!
நேர்மை,வாய்மை,தூய்மை அவன் வழி !
வெற்றித் திருமகள் அவனது துணைநலம்! '
சுதந்திர ஈழம்' அவனது குறிக்கோள்!
"கோழைகள் விலகட்டும் வீரர் பின் தொடரட்டும்' என்று முழங்கும் எம்மருந்தலைவன்! சலுகைகளுக்கோ பதவிகளுக்கோ விலை போகாத கர்ம வீரன்! தமிழீழம் அவன் உயிர்! தமிழீழம் அவன் உடல்! உயிரும், உடலும், உழைப்பும் தமிழீழ மண்ணின் விடுதலைக்காய்த் தரும் தலைவன் பிரபா!
அவன் புகழ் ஓங்குக!
ஐந்து நூறு ஆண்டுகளாய் அடிமைச் சேற்றில் புதையுண்டு விடியலுக்கு வழியின்றி வீழ்ந்து கிடக்கும் தமிழர்களை தூக்கி நிறுத்தி துயர் துடைத்து வாழ்ந்திடத் தமிழீழ தேசத்தின் முழுமையான விடுதலைக்கு தன்னையழித்து ஒளிபரப்பும் தண்ணொளி! மெழுகுவர்த்தியாகி வாழ்ந்திடும் தலைவன் என் தம்பி வாழிய நிலைத்து வாழியவே
-கோவை மகேசன்.
வீரவேங்கை இதழ் ,
சனவரி 1990.
தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்
No comments:
Post a Comment