மகிழடித்தீவு படுகொலை 1991, ஆனித் திங்கள், 12ம் நாள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1991, ஆனித் திங்கள், 12ம் நாள் மகிழடித்தீவுக் கிராமம் நினைவழியாத இரண்டாவது துயரத்தை சந்தித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த பெரும்படுகொலை நடந்துமுடிந்தது. 132 பேரை கொன்றழித்து, 400 வீடுகளை எரித்து நாசமாக்கி சொத்துக்களைச் சூறையாடிச்சென்ற இராணுவத்தினரை யாரும் தட்டிக் கேட்கவில்லை. விரும்பியநேரம் வரலாம், விரும்பிய தொகையை சுட்டுக்கொல்லலாம், விரும்பிய பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தலாம். விரும்பிய வீடுகளை கொழுத்தி எக்காளமிடலாம். என்ற சுதந்திரத்தை சிங்கள இராணுவத்துக்கு சிங்கள அரசு வழங்கியிருந்தது.
சிங்கள இராணுவத்தினரது இன அழிப்பு சுதந்திரத்தின் இரண்டாவது அரங்கேற்றம் மகிழடித்தீவில் நடந்து முடிந்துபோனதை அறிய விரும்பினேன். கொலைகார கும்பலுக்குள் அகப்பட்டு தப்பிக்கொண்ட கணபதிப்பிள்ளை மோட்சமலர், முத்துலிங்கம் விமலாதேவி, வல்லிபுரம் காரிகாதேவி. கறுவல்தம்பி ஆயில்ப் போடி ஆகியோர் இக்கொடூரக் கொலை பற்றி மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
எல்லா இடமும் வெடி சுட்டுக் கேட்குது. அப்ப நான் என்னுடைய இரண்டு மகனையும் சொன்னன், வெடிசுட்டுக் கொண்டு வாறான், வாருங்கோ சனங்கள் எல்லாரும் போறபக்கம் போய் சேந்திருப்பமெண்டு. சொல்லிக்கொண்டு வெளிக்கிட்டேக்க பாத்தா குளக்கட்டால சுட்டுச் சுட்டு வந்திட்டான். பிடிச்சுக் கொண்டுவாற ஆம்பிளையள், பொம்பிளையள் எல்லாருக்கும் அடியெண்டால் கண்ணால பாக்கேலாது. அடிச்சுக் கொண்டு வாறபொழுதே வீடுகளைக் கொழுத்திப்போட்டு உயிரோடு அதுக்க ரெண்டொருபேராய் தள்ளிவிடுறான். அப்பிடியே வந்தவங்கள் என்னையும் என்னோடு தம்பி குலசேகரத்தையும் பிடிச்சு இழுத்திட்டுப் போனான். எரிஞ்சு கொண்டிருந்த வீடொண்டுக்க ரெண்டுபேரையும் தள்ளிவிட்டான். கையெடுத்துக் கும்பிட்டும் அவனுக்கு இரக்கமே வரல்ல. படுபாவி வீட்டுக்க தள்ளின உடன அதுக்க நிறைய நெல்லுமூடைகள் அடுக்கியிருந்தது. அதில் ஏறி. தம்பி குலசேகரம் சுவருக்கு மேலா பின்பக்கமாய் குதிச்சான். இனி நான் என்ன செய்யிறது, எரிஞ்சு சாகிறதைவிட கால்முறிஞ்சாலும் பறவாயில்லையெண்டு ஏறி குதிச்சன். குதிச்சவுடன் ரெண்டு பேருமா அடுத்த வீட்டுப் பக்கமாய் ஓடி பின்பக்கம் கிடந்த தகரங்களால முடிக்கொண்டு பேசாமல் கிடந்ததும் தம்பி சொன்னான் 'இனி எங்கேயும் ஓடேலாது. சாகிறதெண்டால் இதுக்குள்ளேயே கிடந்து சாகுவம். வெளியில சுடுறசத்தமும் அழுற சத்தமும் கேட்க, கண்ண இறுக்கி மூடிக்கொண்டே கிடந்தம்' என கறுவல்த்தம்பி ஆயில்ப்போடி என்ற முதியவர் சொல்லும்போது நாக்குத் தடுமாறியது. எண்பத்தியொரு வயது நிரம்பிய அந்த முதியவரைக்கூட எரியும் நெருப்பில் தள்ளிவிட்ட கொடுமை மறக்கமுடியாது.
வெடிச்சத்தம் சுத்திக் கேட்டுக் கொண்டிருந்தது. நம்மட அக்காவுக்கு குழந்தை பிறந்து பன்ரெண்டாம் நாள். மற்றவளுக்கும் சின்னக் குழந்தை. அக்கா சொன்னா, 'தங்கச்சி நாங்களெல்லாரும் கதவைப் பூட்டிட்டு உள்ள இருப்பம். இல்லக்கா குழந்தையையும் தூக்கிட்டு மில்லுக்கு போவம். எல்லாரும் அங்கேதான் போறாங்கள். எண்டு சொல்லீட்டு பிள்ளையையும் தூக்கீட்டு போனம். மில்லுக்கு முன்துண்டு, நடுத்துண்டு, உள்துண்டு எல்லாம் நிறையப்பேர் இருந்தாங்கள். குழந்தப் பிள்ளையல் எல்லாம் அழுதாப்போல பிள்ளயளின்ர அழுகையை நிப்பாட்ட எல்லாரும் பால்கொடுத் திட்டிருந்தாங்க. வெடிச்சத்தம் பக்கத்தில கேட்குது. உடன எல்லாரும் அரோகரா அரோகரா என கடவுள கும்பிடத் தொடங்கினாங்க. உள்ளுக்க வந்தவன் படபடெண்டு சுடத்துவங்கினான். வகித்தால் தலையால களுத்தாலயெல்லாம் வெடிப்பறியுது. நானும் வெடிப்பட்ட மாதிரி குப்பறவிழுந்து கிடந்து ரத்தமெல்லாம் அள்ளி மேல்ல பூசிக்கொண்டு அசையாமல்க் கிடந்தன். மில்லுக்க இருந்த எல்லாரையும் சுட்டிட்டான். என்னோட அக்காவும் சேர்ந்து அஞ்சுபேர் மட்டும் தப்பினனாங்க. எல்லாரும் செத்தாப்போல் ரத்தத்தை அப்பீட்டுக் கிடந்ததால தப்பீட்டம். சூட்டுச் சத்தம் நிண்டு கொஞ்ச நேரத்தில பிள்ள.... பிள்ள.... என அம்மா கூப்பிடுற சத்தம் கேட்குது. எழும்பிப் பார்த்திட்டு அக்காட குழந்தையையும் தூக்கிட்டு பக்கத்து வீட்டு குந்தில வந்திருந்தன். அங்க பாத்தா கையில்லாமலும் கண் தோண்டினாப் போலும் தலை வெட்டினால் போலும் கிடந்தாங்க. பிள்ளைக்கு பால்கொடுத்தாப்போல அப்படியே சவமாய் கிடந்தாங்க. கைக்குழந்தை ஒன்று சிதறி சுவரில ஒட்டினாப்போல கிடந்ததது. மில் வச்சிருந்த குமாரநாயகமும் அவரோட பொஞ்சாதி புவனேஸ்வரி, அவங்கட நாலுபிள்ளையள் எல்லாரையுமே சுட்டிட்டாங்க' என முத்துலிங்கம் விமலாதேவி என்ற இளம்பெண் அக்கொலையின் கொடூரம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
முதலொரு பாட்டிவந்து சுட்டிட்டு போக மறுகா அடுத்த பாட்டிவந்து சுட்டிட்டாங்கள். 'அவங்கள் சுட்டிட்டுப்போக மூண்டவது பாட்டியொண்டு திரும்ப வந்து சுட்டாங்கள். மூண்டாவதா வந்த பாட்டி மில்லுக்க கிடந்த எல்லாச் சவத்தையும் ஒண்டா இழுத்துப் போட்டிட்டு ஓலையள், ரயர்கள் எல்லாம் மேல போட்டு கருக்கினாங்கள். அக்கம் பக்கம் பிடிச்சிட்டு வந்த ஆம்பிளைங்க எல்லாரையும் கிடங்குக்குள்ள சுட்டுச்சுட்டு போட்டான். கிடங்க ஒரு தரம் சுத்தி வரச்சொல்வாங்கள். சுத்தி வந்த உடன ஒரு சூடு சுட்டு கிடங்கில போட்டவுடன் அடுத்தாளச் சுத்தச் சொல்வாங்கள். சுத்திவந்த உடன சூடு விழும். இப்பிடியா முப்பத்தியேழு பேர குழிக்குள்ள சுட்டுச் சுட்டுப்போட்டன்.
அரோகரா அரோகரா எண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதழுது எல்லாரும் கிடங்க சுத்தி வருவாங்கள். அந்த கொடிய காட்சிய பாத்திட்டு இருக்கவே உயிர் போனாப்போல இருந்தது. வெட்டினதும் சுட்டதும் ஒரு பாட்டி. இன்னொருபாட்டி வடிவான பிள்ளையளாப் பாத்துப் பிடிச்சு மாறிமாறிக் கெடுத்திட்டாங்கள். அதை எப்படிச் சொல்லுறதெண்டே தெரியல்ல' வல்லிபுரம் காரிகாதேவியென்ற பெண் சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டாள். அவளது கண்கள் குளமாகியிருந்தது. வாய் திறந்து சொல்ல முடியாத துயரக்கதைகள் அவளது நெஞ்சை முட்டிக் கொண்டது. நெஞ்சை மெதுவாக அமத்திப் பிடித்துக் கொண்டு மறு கையால் கண்களை துடைத்துக் கொண்டாள். அவளது நிலையை உணர்ந்த கணபதிப்பிள்ளை மோட்சமலர் (முன்பள்ளி ஆசிரியர்) அந்தக் கொடுமையை மளமளவென சொல்லத்தொடங்கினார்.
'நான் மாவடி முன்மாரி பிள்ளையளுக்கு (முன்பள்ளி) பாடம் சொல்லிக் கொடுத்திட்டு சைக்கிளில வீட்ட வந்து கொண்டிருந்தனான். வரேக்க பாத்தன் கண்ணிவெடியில ரைக்கரர் மேலே போய் கீழவந்து விழுந்தது. நேர்றோட்டில அப்படியே வடிவா தெரிஞ்சுது. பார்த்தவுடன சைக்கிளோட விழுந்திட்டன். விழுந்தெழும்பிப் பாத்தன் ஆமி சுட்டிட்டு வாறான். எழும்பி ஓடினன். என்ன கலைச்சு வாறான். குளத்துக்கால ஓடினன். பின்புறமா பெரியம்மா வீட்ட போயிடலாமெண்டு ஓடினன். றோட்டு சைற்றெல்லாம் ஆமி படுத்துக்கிடந்து சுடுறான். சிவப்பு சட்டையோட ஓடினதால் என்ன வடிவா கண்டிட்டான். அதால பின்னாலேயே வந்து எனக்கு சுட்டிட்டான். எனக்கு ரெண்டுவெடி. ஒண்டு முழங்கால் சில்ல உடச்சிட்டு. மற்றவெடியும் அடுத்த கால் எலும்ப உடச்சிட்டுது. அப்படியே குப்பற விழுந்து கிடந்தன். நான் செத்திட்டதா ஆமியும் நினச்சான். சுத்தியிருந்த சனங்களும் நினைச்சாங்க.இரவு வரையும் ஒருத்தரும் தூக்கவரல்ல. நான் தண்ணி.... தண்ணி என அணுங்கின சத்தம் என்ன தேடிவந்த பெரியப்பாவுக்கு கேட்டிட்டுது. அவங்கதான் வண்டில்ல என்ன ஏத்திட்டுப் போனாங்க. பொழுதுபடும் வரையும் ஒருத்தரும் வரேல்ல. எல்லாரும் பயத்தில அங்கங்கு ஓடிட்டாங்கள். ஓடேக்க பட்டவங்கள் பிடிச்சு சுட்டான். உயிரோட வீட்டுகளுக்க புகுத்தீட்டு நெருப்பு வச்சான். நாநூறு வீடுகள் கொழுத்துப்பட்டுட்டுது. எல்லா வீட்டிலேயும் நிறைய நெல்லுமூடைகள் கிடந்தது. நெல்லுமூடைகள் மட்டுமில்ல, ஆக்களும் சேத்து எரிஞ்சிட்டாங்கள். கன குமர்பிள்ளைகளும் பள்ளி ரீச்சர்மாரும் புண்ணியமூர்த்தி G.S வீட்ட (கிராமசேவகர்) ஒடிப்போய் ஒண்டாய் இருந்தாங்கள். அங்கேயையும் வந்து சேந்திட்டான். வந்தவன் அங்க நிண்ட பிள்ளையள அடிச்சு மிரிச்சு சட்டையெல்லாம் கிழிச்சு செய்யக் கூடாத வேலையெல்லாம் செய்தான். புண்ணிய மூர்த்தி சேரிண்ட ஒரு மகளை (விஜிதா ரேணுகா) சட்டையெல்லாம் பிச்சு கெடுத்திட்டான். பிள்ள தனிய அம்பிட்டிட்டு. கொடுமை தாங்கேலாமல் பிள்ள மகிழடித்தீவ விட்டே ஓடீட்டுது. ரீச்சர்மார் பலர் இழுபறிப்பட்டு சட்டை சாறியெல்லாம் பிச்சிட்டான். ரேணுகா ரீச்சர் பாவம். எங்கேயோ தனிய மாட்டீட்டுது. அவங்கள படாதபாடு படுத்திப் போட்டாங்கள். இண்டைக்கும் அந்தப்பிள்ளையள் வாழா வெட்டியா
இருக்கிறாங்கள். அவங்களக்கேட்டா எதுவும் சொல்லமாட்டாங்கள். மயங்கி விழுந்திடுவாங்கள். இவங்கள மாதிரித்தான் பேரின்பநாயகி எண்டொருபிள்ள. நல்ல வடிவானபிள்ள. அந்தப் பிள்ள போல அழகான பிள்ளையை இஞ்ச காணேலாது. அந்தப் பிள்ளைளையைப் பிடிச்சு மாறிமாறி கெடுத்தாங்கள். பெத்ததாயின்ர கண்ணுக்கு முன்னால வச்சு படுபாவியள் செய்த கொடுமையை கடவுள் தான் என்னண்டு பொறுத்ததோ தெரியாது.
தாய் சங்கிலியக் கழட்டி கொடுத்து என்ர பிள்ளைய ஒண்டும் செய்யாதிங்கோ விட்டிடுங்கோ' என கும்பிட்டுக் கேட்டா. கையில கிடந்த காப்பைக் கழட்டிக் கொடுத்து தாலி, மோதிரம் எல்லாமே கழட்டிக் கொடுத்து என்ர பிள்ளைய ஒன்றும் செய்யாதீங்கோ என அழுது கெஞ்சி மண்டாடிக் கேட்டும் அவங்கள் விடல்ல. மறைப்பில் கொண்டு போய் மாறிமாறிக் கெடுத்தாங்கள். கடைசியா நெஞ்சு, கன்னம் எல்லாம் கடிச்சாங்கள். பிள்ளேன்ர உடம்பில கடிகாயம் இல்லாத இடமே இல்ல. ரத்தத் துவாலயோட பிள்ள மயங்கினாப் போலதான் விட்டிட்டுப் போனாங்கள் பாவியள். அந்தப் பிள்ள இப்பவும் இருக்கு. ஆனால் கலியாணம் கட்டி குழந்தைகள் பெத்து புருசனோட சந்தோசமாய் இருக்கிறாள். ஆனா மகிழடித்தீவ விட்டு அண்டைக்கு ஓடிப்போனதுதான். இண்டைக்கும் இந்தப்பக்கம் வரல்ல. ஆமிவாறானெண்டு சும்மா சொன்னாப்போதும். அறிவு மயங்கி விழுந்திடும். இந்தப் பக்கத்தால ஒரு பாட்டி இப்பிடி செய்ய, இன்னொரு பாட்டி முதலைக்குடாப்பக்கம் போய் பள்ளிக்கூடத்துக்குள்ள சேந்திருந்த ஆக்களில் ஒருமட்டான ஆம்பிளப் பிள்ளயளப்பிடிச்சுவந்து மில்லுக்கவச்சு சுட்டான். பொஞ்சாதிக்கு முன்னால புருசனையும், தாய்க்கு முன்னால பிள்ளைகளையும் எரியிற வீட்டுக்குள்ள உயிரோட புகுத்தினான். மில்லுக்க கிடந்த 132 பேரை ஓலைகளைப்போட்டு அங்கு கிடந்த டீசலை ஊத்தி எரிச்சி கருக்கிப்போட்டு பொழுதுபட ஆறுமணிக்குத்தான் ஊரைவிட்டு கிளம்பினான். குண்டு வெடிச்ச கிடங்கில சுட்டுச்சுட்டுப் போட்டதில கிடங்கு நிரம்பிவிட்டது. இல்லையெண்டால் இன்னும் சுட்டிருப்பான்' என மோட்சமலரும், காரிகாதேவியும் மாறிமாறி இந்தக் கொலையின் கொடூரத்தை சொல்லிமுடித்தனர். 'காயப்பட்டு கிடந்தவர்களை சிகிச்சை செய்யிற வசதியோ வைத்தியசாலையோ இஞ்ச இல்ல மகன்.நம்மட மகள் பொலநறுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக. தமிழனெண்டு சொல்லி வைத்தியம் செய்ய மறுத்திட்டான். பிள்ள ஆபத்தான நிலைக்கு வந்திட்டாள். திரும்ப அங்க இருந்து கொழும்புக்கு கொண்டுபோனன். ஆறு மாதத்திற்கு பின்னர்தான் சுகப்பட்டு கூட்டிட்டு வந்தன். நாசமாய் போவானுகள் அண்டைக்கு செய்த கொடுமைகளை சொல்லேலாது மகன். மில்லுக்குள்ள அவங்கள் கருக்கிட்டுப்போன சவங்கள பாக்க ஏலாது, தாயில பால் குடிச்சபடி நாலஞ்சு குழந்தையள் கருக்கிக்கிடந்தார்கள். என்ர பிள்ள எங்க... என்ரபுருசன் எங்க... எண்டு இனங்கண்டு கொள்ளமுடியாமல் புரட்டிப் பார்த்து அழுதிட்டு நிண்டதை யாருட்ட சொல்லுறது' என மோட்ச மலரின் அம்மா திருமதி.கணபதிப்பிள்ளை சொல்லிக் கண் கலங்கினாள்.
அருட்தந்தை யோசப் மேரியினதும், யோசப் பரராசிங்க எம்.பியினதும் முயற்சியில் குமார் பொன்னம்பலம், ஏ.எம்.எம். சகாப்தீன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு இப்படுகொலை பற்றி விசாரணை செய்து வெளி உலகுக்கு கொண்டுவர முற்பட்டபோதும் சிங்கள பேரினவாதம் அதை விழுங்கி மறைத்துவிட்டது. கேட்பாரற்று அநாதைகள்போல் அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரக்கதை மட்டுநகர் மண்ணில் தொடர்ந்தது. மகிழடித்தீவிலும் இறால்பண்ணையிலும், மில்கட்டிடத்தினுள்ளும் முடிந்துபோன தமிழர் வாழ்வு கொக்கட்டிச்சோலைப் படுகொலை என்ற பெயரோடு பத்திரிகைகளில் அவ்வப்போது பெட்டிச் செய்தியாகவந்து மறைந்து போயின.
-மௌனப் புதைகுழிக்குள்.1
-மணலாறு விஜயன்
No comments:
Post a Comment