Sunday, 15 March 2026

தாயகத்தின் தாய் 3 -பொட்டம்மான்

அன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை?

காலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி ஏன் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ?

சண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிபெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற் பொறுப்பை கைமாற்றிக் கொடுத்துவிட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதியநிலை.

அணிசேர்ப்பு, தொடர்வகுப்பு, கடும்பயிற்சி, எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்ப் படுத்தல்களுடன், தனிமைப் படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான்.

மகன் வழி தெருவில் எதிர்படாமல் போனதும், வழமை போல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை, பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லை.

மகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவிட அம்மா வெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது. "தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்" என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா.

அம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது
தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமன்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்.

அம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில், "சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று” வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்.... ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாதுதானே. “மகனது புதிய நடை,உடை, பாவனையில் வித்தியாசம் விளங்காது" "அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது" "அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை" ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த மகிழ்ச்சி....."

பிள்ளை “அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக் கேட்டது" "அம்மாவுக்கு நான்தான் தீத்துவேன்” என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது. "தம்பி இப்பதான் செல்லம்
கொஞ்சுது" என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து, "உணர்வு மறைத்து உணவூட்டி...." வீட்டில் ஒரே சிரிப்பும், கொண்டாட்டமும்தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே. மகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும், கதைகளுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது.

அன்று அவன் சொல்லிவிட்டுப் போனது போல தனியாக வரவில்லை. அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது.அவனது அம்மா, அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா, அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா.... என்று உறவு சொல்லி அழைக்க, வீடு களைகட்டியது.

ஒன்றுமே தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர். அம்மாவும்தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்...., வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்றபோதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாது. அம்மாவுக்கும்தான் ஒன்றுமே தெரியாதே.... அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர்.

அவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய் போய் விட்டனர்........

-தொடரும் 

-ச.பொட்டு

-சூரியப்புதல்வர்கள் 2003

No comments:

Post a Comment