வயல்களெல்லாம் எரிந்து கிடந்தன.....
வைரவர் கோயில் வரை தைரியமாய் நடந்து வந்த வேலவருக்கு கால்கள் மெல்ல அச்சம் காட்டின. இராணுவ முகாமின் தொலைத் தொடர்புக் கோபுரம் தெளிவாகத் தெரிந்தது.
இடுப்பில் கிடந்த துவாயை இலுப்பை மரத்தின் கீழ் விரித்துவிட்டு அதில் அமர்ந்தார். சிலுசிலுவென்று
காற்று அவரை ஆனந்தத்தோடு தழுவியது!
திரும்பிப் பார்த்தார். தூரத்தே வயல் காணிக்குள் கார்த்திகேசரின் கல்வீடு கம்பீரமாய் நின்றது!
" என்னென்டுதான் இந்தச் சனங்கள் வீடுவாசலை மறந்து போச்சுதுகளோ?....' வயிறு பற்றி எரிந்தது!
'இரவிரவா மனிசரைக் கிடக்க விடாமல் குண்டு போட்டா .. சனம் எழும்பி ஓடாம என்ன செய்யிறது...' தன்னைத்தானே தேற்றிக் கொள்ள முயற்சித்தார்.
எலும்பும் தோலுமாய் ...... நாயொன்று ஆடி ஆடி வந்து வைரவர் கோயில் கொட்டிலில் சுருண்டு கிடந்தது !
'தைப்பூசம்....சித்திராப்பறுவம், வைகாசி விசாகம் எண்டு இந்தக் கோயிலிலை எத்தினை விசேஷம் நடக்கும்.......
நீளமான பெருமூச்சொன்றுதான் அவரிடமிருந்து வெளிப்பட்டது.
ஒவ்வொரு விசேஷத்துக்கும் கூடும் சனக்கூட்டத்தை நினைத்துப் பார்த்தது அவர் மனம். 'அந்தக் காலம் இனி எப்ப வரும்..? என்ற ஏக்கம் நெஞ்சில் படர்ந்தது.
அண்ணாந்து பார்த்தார். வைரவர் கோயில் கொட்டிலின் ஓடுகள் சில நொருங்கிவிட வெறும் சிலாகைகள் தெரிந்தன!
இலுப்பைமரம் கிளைகளை அசைத்து அசைத்து அவருக்கு சாமரை
வீசிற்று. ஓர் அரசகுமாரனைப் போல அவர் ஒருகணம் பெருமிதம் கொண்டார்!
சோளகம் தொடங்கி விட்டால் வயல் வெளிக்குள் பெரிசு சிறிசு வேறுபாடின்றி பட்டமேற்றுவார்கள் .... இப்போது வயல்வெளியின் வான்பரப்பு வெறிச்சோடி அவர் மனதில் வேதனையைப் பிறப்பித்தது!
இரண்டு மாதங்களுக்கு முன்னால் மாட்டுக்குப் புல்லுச் செதுக்க வந்த கணபதி சற்றுத் தள்ளித்தான் சடலமாக எடுக்கப்பட்டான் நண்டும் குஞ்சுமாய் இழுபடும் கணபதியின் மனைவிக்காக அவர் இரங்கினார்! கணபதிக்கு வெடி பிடித்ததைக் கேள்விப்பட்டு வேலவரின் மூத்தவள் ஓடோடி வந்தாள். அப்பு வெளிக்கிட்டு வாணை ...வீடு போனாப் போகட்டும்......" அவர் மறுத்துவிட்டார்!
உனக்கும் ஒருநாளைக்கு கணபதிக்கு நடந்ததுதான் நடக்கும்......' அவள் கோபத்தோடு போய்விட்டாள்.
இலுப்பை மரத்தில் இப்போது குருவிகள் கீச்சிட்டன. வெள்ளை நிறத்தில் சிறியதாய் ... இலுப்பம் பூக்கள் அவர்மேல் விழுந்தன!
அவரின் மனைவி பொன்னு முன்பெல்லாம் இந்த இலுப்பம் பூக்களைப் பொறுக்கித் துவையலாக்கித் தருவாள்!
மனைவி நினைப்பு அவரை ஒரு கணம் மௌனமாக்கியது!
ராசாத்தி குடுத்துவைச்சவள்... பூவோடையும் பொட்டோடையும்
போட்டாள்? மனது மனைவியை வாழ்த்தியது!
சூரியன் அவரின் தலைக்குப் பின்னால் தகதகத்துக் கொண்டிருந்தது! காற்று மூசி மூசி வெறித்தனமாய் வீசியது!
தூரத்தே..... வயல் வரம்பில்... வரிசையாய் உருவங்கள். அவர் சடாரென்று நிலத்தில் கிடந்த துவாயை எடுத்துக்கொண்டு கொட்டிலுக்குள் மறைந்தார்.
மறைந்து கொண்டவர் அந்த உருவங்களை உற்றுப்பார்த்தார். எங்கடை பிள்ளையள் தான்...."
எல்லோரும் முதுகில் பொதிகளுடன்... விதம் விதமான துப்பாக்கிகளுடன் ஒன்று இரண்டு பேர் மட்டும் நீளமான குழாய்களை தோளில் சுமந்து சென்றார்கள். உந்தக் காம்புக்கு (CAMP) சாத்துப்படி விழப்போகுது... ! தன்னளவில் ஊகித்துக் கொண்டார்.
நெஞ்சுக்கூடு லேசாய் நடுங்கியது. ஒரு நாளைக்கு கணபதிக்கு நடந்தது தான் உனக்கும் நடக்கும்...' மூத்தவளின் எச்சரிப்பு குமிழிட்டது. இனி இஞ்சை இருக்கிறது வில்லங்கம் ....... மண்ணைத்தட்டி விட்டு எழுந்தார்.
தெரு பரபரப்பாக இருந்தது. மூத்தவன் கடைக்குட்டியை சைக்கிளில் வைத்து உருட்டியபடி வேலவர் தெருவைக் கடக்க எத்தனித்தார். அப்பு... என்ன இஞ்சை நிற்கிறாய் ....
சோதி கலகலத்தான்.
வளவளப்பான முகத்துடன்..... கொஞ்சம் சதைவைத்த உடம்புடன் .... அவனை அடையாளம் கண்டு கொள்ள சில வினாடிகள் எடுத்தன வேலவருக்கு .!....'எட சோதி . ஆளை அடையாளம் தெரியலை ... எப்படி உன்ரைபாடுகள்... மனிசி .. பிள்ளை குட்டிகள்.. எங்கை?.....!
"எல்லாரும் சின்னம்மா வீட்டிலை இருக்கினம்... அது சரியணை அப்பு... எப்ப இஞ்சாலை வந்தனி..."
' முந்தநாள் பொழுதுபட...
'ஏனணை அங்காலை ஏதும் சிக்கலோ... !"
" முந்தநாள் பின்னேரம் எங்கடை வயிரவரடியிலை போய் சும்மா படுத்திருந்தன். ஒரு 75 பெடியள் காணும். எல்லாரும் ஆமான துவக்குகளோடை..பைப்புகள்,
மம்பட்டியளும் கொண்டு...!
எங்கை போனவை?...
'கார்த்திகேசற்றை கல்வீட்டுக்கை போனாங்கள். ஆமிக்குச் சாத்தப்போறாங்கள் போல நடுச்சாமத்திலை ஒண்டெண்டா வரேலாது... நான் நேரத்தோட வந் திட்டன்'
சோதி கீழ்த்தாடையைத் தடவிக் கொண்டு தலையாட்டினான்
'நானும் கனநாளாய் ஊர்ப்பக்கம் போகலை. போனா தேங்காய் கீங்காய் ஏதும் விழுந்தால் எடுத் தரலாம் ...
கணபதி புல்லுக்குப் போய் நடந்தது தெரியுமே பேசாமல் உங்கினை சந்தையிலை பார்த்து வாங்கு..... அங்கை என்னத்திற்கு...!
வேண்டுறத்துக்கு காசும் இல்லையணை வேணும்..!
'ஏனடா... தொழில்துறை ஒண்டுக்கும் நீ போறலையே...!
கொஞ்சநாள் விறகு கட்டினன் சரிவரலை... கொஞ்சநாள் கிளாலிச் சனத்தை ஏற்றி இறக்கினன்... அதுவும் சரிவரலை...!
'அப்ப... இப்ப என்னடா மோனை செய்யிறாய்?...!
'உயிரைப் பார்க்காமல் வன்னியிலை போய் சாமான் கொண்டு வாறனான்... அதுவும் கையும் கணக்கும் சரியாய்ப் போகுது!
'எப்படி இருந்தனாங்கள்... இப்ப இப்படியெல்லாம் இழுபடுகிறோம்... இதுகளுக்கு ஒரு முடிவு வராமலே விடப்போகுது ... ! வேலவர் நெடுமூச்செறிந்தார் ...
'நேரம் போகுது... ஆறுதலாய் வாறன் அப்பு ... வரட்டே...' சோதி விடைபெற்றுப் போக....
பேரப்பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வேலவர் வீடு வந்தார்
"ஏனணை அப்பு இவ்வளவு நேரமும் சென்றது......? நான் பயந்து போனன்..." மூத்தவள் வேலவரைக் கேட்டாள்.
"எங்கடை சோதியை தெருவிலை கண்டனான் மோனை கதைச் சாப்போல மினைக்கட்டுப்போனான் !
என்னவாம்...?
" வேற என்ன... சீவியப் பாட்டை நினைச்சு மனவருத்தப் பட்டுப் போறான்...பாவம்..."
வவுனியாவில போய் நல்லாச் சாமான் கட்டியந்து விக்கிறவன்... சும்மா உனக்கு முன்னாலை அழுகிறான்... நம்பிற்றியே..!'
மகளின் கூற்றைத்தான் அவரால் நம்ப முடியவில்லை. அவருக்கு எதுவித பதிலும் கூறாது மௌன மாகிப் போனார்....
-தெருச்சந்தியில் வாழைகளும், தோரணங்களும், கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. வீதிகளில் சனநடமாட்டமும் குறைந்திருந்தது ஓரமாக ... கூடாரமொன்றில் நான்கைந்து போராளிகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மலர்கள் தூவப்பட்டிருந்தன.
சில பாடசாலைச் சிறுவர்கள் அந்தப் போராளிகளின் படங்களைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
சைக்கிளை வேலி ஓரமாக வெயில் பிடிக்காது விட்டுப் பூட்டிவிட்டு அந்தக் கூடாரத்தின் அருகே போனார் வேலவர்!
பிள்ளையள் எந்தச்சண்டையிலே இவையள் செத்தவையாம், அந்த இரு சிறுவர்களையும் பார்த்து துயரம் பொங்கக் கேட்டார் அவர்.
'சண்டேலை சாகேலை அப்பு செல் அடிச்சுத்தான் செத்தவயள்..' துடிதுடிப்பான சிறுவன் சொன்னான்.
'பிளேனுகள் ஒன்டும் இப்ப பறக் கிறேலையே ...'
'பிளேன் அடிக்கேலயணை.. காம்பில இருந்து மோட்டர் அடிச்சுத்தான் இந்த அண்ணாக்கள் செத்தவை!...
மோட்டரோ எப்ப அடிச்சவன் ?
நேற்றுக்காலமை இடைக்காட்டிலை அடிச்சதல்லே ?.. 'சிறுவனின்
கேள்வி கூர் முள்ளாய் நெஞ்சுக்குள் குத்தியது.
கொண்டுவந்த காசுக்கு மீன் வாங் கிக் கொண்டு புறப்பட்டார். நெஞ் சுக்குள் ஏதோ கனப்பது போன்று இருந்தது...
முற்றத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டார். உடல் வியர்த்துக் கொட்டியது.
'அப்பு விசயம் கேள்விப்பட்டனியே ??
என்ன மோனே .....
'எங்கடை காத்திகேசற்றை கல் வீட்டுக்கல்லே நேற்று செல் அடிச்சவங்களாம். 6 பெடியள் செத்ததுகளாம்.....
'ஆரோ... காசுக்கு ஆசைப்பட்டு பெடியளைக் காட்டிக் குடுத்திட்டாங்கள் " மூத்தவளின் அந்த வார்த்தை மீண்டும் அவரைத் தைத்தது !
'உவன் சோதியன்..."
ஓ - சோதியன் சோதிக்கென்ன .....
அவர் குரல் நடுங்கியது
சோதியனை பொடியள் பொயின்ரில' பிடிச்சிருக்கிறாங்களாம்.
என்ன நாசமோ தெரியேல்லை '......
சொல்லியபடி மூத்தவள் பையிலி ருந்து மீனை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
சோதியின் சதை பிடித்த வளவளப்பான முகமும் செல் தாக்குதலில் சிதைந்த போராளிகளின் முகங்களும் மாறி மாறி அவர் மனக்கண்ணில் தோன்றின!
முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு, போராளிகளின் சாவுக்காக அவர் குமுறிக் குமுறி அழுதார்.…………………
-ஆதிலட்சுமி சிவக்குமார்
-வெளிச்சம் ஆடி,ஆவணி 1995.
No comments:
Post a Comment