Sunday, 15 March 2026

விடியலுக்கு முந்திய மரணங்கள்

மனித முகங்களே காண முடியாத காடு, காட்டை ஊடறுத்துச் செல்லும் ஆற்றின் இரு கரையும் செழித்து இருந்த மரங்கள் எம்மை வரவேற்கின்றன. காட்டில் இருக்கும் ஒவ்வொரு பூவும் எம்முடன் பேசுகின்றன. அங்கே வீசும் தென்றல்; அங்கு பாடித் திரியும் பறவைகள்; ஓயாமல் ரீங்காரமிடும் வண்டுகள் இவைதான் எமது சொந்தங்கள். இந்த வகையில் தான் அந்தக் காடு ஒவ்வொரு கெரில்லாவாலும் நேசிக்கப்படும் தாயாகி விட்டாள்.

அன்றும் வழமை போல் காட்டில் குளிர்மை இருந்தது; எமது வீரர்கள் அணிவகுத்து நின்றனர். இராணுவ முகாமை அண்மிக்கப் பல மைல்கள் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் டிராக்டரில் ஏறினர். டிராக்டர்கள் இரைச்சலை எழுப்பிக்கொண்டு காட்டுப் பாதைகளூடாக வேகமாக ஓடுகின்றன. பாதைகள் சீரில்லை: பெரிய மரவேர்கள் பாதைக்குக் குறுக்கே கிடந்தன. குன்றுகளும் குழிகளும் பார்க்கின்ற இடமெல்லாம் தெரிகின்றன.

"தடாம்" "தொம்" என்ற சத்தம் பலமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றது. சேறும் சகதியுமான பாதை. சேற்றினுள் சில்லுகள் புதைந்து சேற்றை அள்ளி வீசுகின்றன. டிராக்டர்களில் இருந்த தோழர்களின் ஆடைகளில் சேறு படிந்தது;

"மாமா என்ன சேறடிக்குது?" என்றான் சைமன். ம் (ஆம்) அம்மான் அது அப்படித்தான்" என்றான் மாமா. பெட்டிக்குள் இருந்து சிரித்துக் கொண்டு சைமன் "மாமா பகிடி விடாமல் வடிவா (கேலி பண்ணாமல் ஒழுங்கா) ஓட்டு இல்லையேல் கல்லுகள் தான் வரும்" என்றான்.

"அதையும் பார்ப்போம் என்பதுபோல் மேலும் வேகமாக ஓட்டுகிறான்.

"இரண்டுபேரும் சண்டையிட்டுக் கொண்டால் நமக்கென்ன .....

பாராடிக்காம போகும்" என்றான் பழசு.

டிராக்டர்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வேதாவின் டிராக்டர் சேற்றில் புதைந்து விட்டது. எந்தப் புதைவிலிருந்தும் டிராக்டரை எடுத்து விடும் திறமை அவனிடமிருந்தது. எல்லோரும் உதவி புரிந்தும் முடியவில்லை; சிறிய இறாத்தல் படிக்கல்லை (எடைக்கல்லை) எடுத்து வந்தான் வேதா.

"உம் நிறுக்கப் போகிறான் பாருங்க" என்றான் சைமன் "சும்மா போடாப்பா சைமன்" என்றவன் ஒருமுன் சில்லை நிலத்தில் முட்டாதவாறு படிக்கல்லைக் கொடுத்துவிட்டு ஒரு இழுவை தான் மூசிக்கொண்டு. டிராக்டர் வந்து விடுகின்றது. வேதா இலேசாக ஒரு சிரிப்புச் சிரித்தான்.

டிராக்டர் ஓட்டுவதில் மாமாவிடம் ஒரு தனி இயல்புண்டு. ஒரு பக்கம் உயரம். மற்றக்கரை சரியான பள்ளம். ஓடி வரும் போதுதான் தென்படுகின்றது. புரளப் போகிறோம் என்று எல்லோரும் ஒரு கணம் நினைத்தோம். வெட்டித் திருப்பி பிறேக்கை அழுத்தினான் மாமா. சிறு மரச்செடிகளை முறித்து நின்றதும் திரும்பி ஒரு பார்வை; தான் டிரக்டரைப் புரளவிடாமல் எடுத்திட்டேன் என்ற புழுகு. "எப்படி அம்மான் ஓட்டம்"? என்றான் மாமா ..... நல்லாயிருக்கு ஃபீல்டை (தாக்குதலை) இதிலேயே முடிச்சிடப்பாத்திற்ற" என்றான் கெனடி. "கிழடு நீ சும்மாயிரு" என்றான் வேதா;-இருவரும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். டிராக்டர்கள் மீண்டும் ஓடத் தொடங்குகின்றது.

இருபக்கமும் நின்றிருந்த மரக்கிளைகளை உரசின. முட்கள் உடலைக் கீறின. பள்ளம் ஒன்றில் சில்லுகள் விழுந்து பெட்டிக்குள் இருந்தவர்களைத் தூக்கிக் குத்தியது. குலுக்கியதிலிருந்து மீழ்வதற்கு முன் அடுத்த பள்ளம். மாறி மாறி உடலை நோகப்படுத்தியது. எனினும் இப்பாதைகளூடாக இலட்சிய முனைப்போடுதான் இயங்கினோம்.

நெஞ்சில் நிறைந்திருந்த மண்ணின் நினைவுகள் நீண்ட பயணத் தொடரின் வேதனையை அப்போது உறுத்தவில்லை. காட்டுப்பாதையூடாக ஒடிக்கொண் டிருந்த டிராக்டர்கள் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றுக்குள்ளே புதையலாம்; இறங்கி நடந்தால் தனியே டிராக்டரை எடுக்கலாம். என்று பேசிக் கொள்கின்றனர்.

மாலை நான்கு மணிக்கு ஆரம்பமான பிரயாணம் இன்னும் முடியவில்லை "இரவு நேரத்தில் அதுவும் குளிரில் தண்ணிக்குள் இறங்கி நடக்கிறதெண்டால்"... என  இழுத்தான் கெனடி. எல்லோரும் டிராக்டர்களில் இருந்து இறங்கி ஆற்றினுள் இறங்கினர். 

காதுகள் ஊடாகக் காற்று ஜில் என்று குளிர்ந்தது. முழங்காலுக்குச் சற்றுமேலே மடித்துவிடப் பட்ட பச்சைநிற உருமறைப்பு ஆடைகள், ஒன்றாகச் சேர்த்துக்கட்டிய சப்பாத்துக்கள் (காலணிகள்) இரண்டும் ஒரு கையில்; ஒவ்வொருவர் தோள்களிலும் பைகள்; மறுகையில் ஆயுதங்கள் இந்நிலையில் சேற்றினுள் புதைகின்ற கால்களை இழுத்து இழுத்துத் தூக்கி நடந்து கொண்டிருக்கின்றனர். தண்ணீர் மட்டம். இடுப்பளவையும் தாண்டி வயிற்றையும் நனைத்தது சிலர் தடுமாறி விழுந்து விடச் சரிந்தபோது மற்ற நண்பர்கள் அவர்களை அணைத்து நிலைப்படுத்திக் கொண்டு ஆற்றைக் கடந்து விடுகின்றனர். நீளமான உருமறைப்பு ஆடைகளில் இருந்து நீர் சிந்திக் கொண்டிருந்தது. இரண்டு டிராக்டர்கள் தோழர்களை மறுகரையில் ஏற்றத் தயாராக நின்று கொண்டிருந்தன.

வேதா தோழர்களைத் திரும்பிப் பார்க்கிறான்.

என்னம்மான் வேதா! இறங்க வேணுமோடா? எனத் தோழர்கள் வேதாவைக் கேட்கின்றனர். அதற்கு அவன் இல்லையம்மான் இருங்கோ என்றான். டிராக்டர் ஆற்றினுள் இறங்கியது. பெரிய சில்லுகள் நீரை அள்ளித் தோழர்கள் மீது வீசுகின்றன. பெட்டிக்குள் இருந்தவர்கள் நனைகின்றனர். குளிரையும் ஊடறுத்து டிராக்டர் உருண்டு கொண்டிருக்கின்றது. மாமாவின் டிராக்டரும் பின்னே வந்து கொண்டிருக்கின்றது. லையிற் வெளிச்சம் நீரில் பட்டு மரங்களில் தெறித்திருந்தது. காத்தானின் டிராக்டரும் ஆற்றில் இறங்கத் தயாராக வந்து நிற்கின்றது. ஒளி வெள்ளத்தில் அந்தப் பகுதி மிதந்தது.

வேதாவும் மாமாவும் அதிசிறந்த வாகனச்சாரதிகள். இவர்கள் வாகனம் ஓட்டும்போது தனி விமர்சனம் எழும். ஒட்டிசுட்டான் போலிஸ் நிலையத் தாக்குதலை முடித்துவிட்டு ஓட்டிய ஓட்டம் தான் நினைவில் வரும். இவர்களால் பயிற்றப்பட்ட சாரதிகள் எத்தனை பேர் ......! "டிராக்டர் புதைந்துவிட்டது" என்று காத்தானின் செய்தியை வேதாவின் வோக்கி ரோக்கி அலறியது. வேதா ஆற்றுள் இறங்கிச் செல்கிறான். டிராக்டர் கரை வந்து சேர்கிறது. ஆபத்தானதும் துயரம் மிக்கதுமான பாதைகள் ஊடாகப் பிரயாணம் தொடர்கிறது. எல்லோரிடமும் மெளனம் சூழ்ந்திருக்கின்றது. யாருக்கும் பேச்சு வரவில்லை சீரியஸாகி இருக் கின்றனர்.

நீரால் நனைந்த உடைகளைப் பிழிந்து உதறிக் கொண்டு சைமனும் ஜெகனும் ஏதோ பேசிப் பலமாகச் சிரித்துக் கொள்வது கேட்கின்றது. அந்தச் சிரிப்பு எல்லோரது மௌனத்தையும் குதறிக்கொண் டெழுந்தது. "கலரும் மாறிப் போச்சு" என்று ஜெகன் கெனடியோடு கேலி பண்ணிய தால் தான்) அந்தச் சிரிப்பு. அவனின் அந்தக் குறும்புத்தனம் எல்லோரையும் சிரிக்க வைத்துவிடும். தோழர்கள் மீது பயங்கரமாக அன்பைச் செலுத்தும் அவன் தோழர்கள் அந்த இருளில் நனைந்து பேசாமல் நிற்பதால் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு நாள் பலத்த மழை பெய்தது. எமது கூடாரங்கள் ஊடாக நீரடித்து ஓடிக்கொண்டிருந்தது. சடுதியாக ஏற்பாடு செய்திருந்த அமைவிடம். அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. இதனால் மரங்களுக்குக் கீழே ஒதுங்கிக் கொண்டும் பரண்களில் ஏறி மதிய முகங்களை முழங்காலில் வைத்துக் கொண்டும் நடுங்கியவாறும் இருந்த தோழர்களை நோட்டமிட்டவாறு அவன் நின்றுகொண்டிருக்கிறான். உணவுத்தயாரிப்பில் ஈடுபட முடியாதவாறு அடுப்பில் நீர் நிறைந்து கிடக்கின்றது. விறகுகளும் நனைந்து விட்டன. தேநீர்கூட அருந்த முடியாது. பசிக்களை ஒருபுறம். சனியன் பிடிச்ச மழை இந்த நேரத்திலையா பெய்யவேணும்' என நினைத்துக்கொண்டு தோழர்கள் பேசாதிருந்தனர். அந்த நேரத்தில் ஏதாவது கதை சொல்வான் ஜெகன். ஜெகன் கதை சொல்கிறான் என்றாலே ஒரே சிரிப்புத்தான். துயரம் சூழ்ந்த நாட்களில் இருந்து மீட்டு எழுந்து சந்தோஷங்களை ஊட்டும் திறன் அவனுக்குரியதே...

~~~~~~~~~~~~~~
காட்டுப்பாதையூடாக மரங்களையும், செடி கொடிகளையும் விலக்கிக்கொண்டு டிராக்டர் ஓடிக் கொண்டிருக்கிறது. இருண்ட காடு. சாமம் ஆகிவிட்டிருந்தது. பற்றைகளை முறித்துச் சலசல...... என்று சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி M16 தானியங்கித் துப்பாக்கியைச் சடுதியாகத் தயார் நிலைக்கு மயூரன் எடுத்திருந்தான். மயூரனை வேதா அழைத்தான். "அவதானமாகப் பார்" என மயூரனிடம் பணிக்கிறான். மயூரன் சிறந்த பார்வை சக்தியுள்ளவன். "முள்ளம் பன்றிகள் ஓடுகின்றன. என்று கூறிவிட்டு தனபாலோடு பேசிக்கொண்டிருக்கிறான்.

மயூரன் சிறந்த போர்ப்பயிற்சி எடுத்திருந்தான். மனதை ஒரு நிலைப்படுத்திக் குறியைச் சாய்ப்பதில் அவனிடமிருந்த திறமை எம்மை வியக்கவே செய்யும். அந்தச் சிறுவயதில் அப்படிப்பட்ட பயிற்சியை யாரும் பெறுவதே இயலாது. மாலை நேரங்களில் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்டிருந்த AIR GUN துப்பாக்கியை அவன் தூக்கிக்கொண்டு திரியும் அழகே அழகு!

பறந்துகொண்டிருக்கும் காக்கை குருவிகளை இலக்கு வைப்பதில்தான் அவனுக்குப் பிரியம். ஒரு முறை காகம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதன் இறக்கைகளை அகல விரித்து விமானம் இறங்குவது போல் இலக்கை நோக்கிப் பறந்து கொள்வதும் திடீரென மேலெழுவதுமாக இருந்தது. இந்த நேரத்தில் அவனது இலக்கு விரைவாக வைக்கப்படுகிறது. காகம் மணலில் இறக்கை விரித்துத் துடித்துக் கொண்டு கீழே விழுந்தது. இவ்வாறு பயிற்சி முகாமிலே அவனிடம் காணப்பட்ட திறமைகள் சொல்லிலடங்காது. களங்கள் அவனது திறமையைப் பன்மடங்கு வளர்த்தது.

சமையல் வேலைகளாயினும் சரி எந்த வேலைகளையும் திறம்படச் செய்து முடிப்பான். துடியாட்டம் மிக்க அவனது தோற்றமும் தெளிந்த சிரிப்பும் நெஞ்சில் இன்றும் திரையிடுகின்றன.

மயூரன் வயதில் இளையவனாக இருப்பதால் அவனை எல்லோருமே தம்பி என்றே அழைப்பர்.

பட்சிகளின், கீதங்களும் யானைகளின் பிளிறல்களும், நரியின் ஊளைச் சத்தங்கள் போன்றனவும். கானகத்தின் இன்னிசை நிகழ்வுகள். காத்தானின் டிராக்டர் வெளிச்சம் மரங்களைத் தழுவிச் சென்று கொண்டிருக்கிறது.

நடுக்காடு........

-தொடரும்........
-உறுமல் 16/7/1986

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர் 

குறிப்பு :

விடியலுக்கு முந்திய மரணங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொக்கிளாய் இராணுவ முகாமிலாகும் . புலிகள் நடத்திய இத்தாக்குதல் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு வீர காவியமாகும் 134 சிங்கள இராணுவத்தினரைப் பலி கொண்ட இத்தாக்கு தலில் 17 இளம் புலிகளின் தியாக வரலாறும் - அடங்கியிருக்கிறது. இந்த வீர காவியம் ஒவ்வொரு ''உறுமலிலும் " 5ம் 6ம் பக்கங்களில் தொடர்ந்து வெளிவந்தது.

No comments:

Post a Comment