நிலைமையை கணத்தில் விளங்கிய வான்மதி இவன் கையில் இருந்த ஸ்ரிஞ்சையும் மிகுதி மருந்துகளையும் பறித்து எடுத்தவள் வேகமெடுக்கும் றக்ரரைக் கலைத்து ஓடிப் பிடித்து தாவி ஏறுகின்றாள். றக்ரர் ஓடிக்கொண்டிருக்கிறது. இருபக்கமும் எறிகணைகள் அகோரமாக விழுந்து வெடித்துக் கொண்டிக்கின்றது. பராலைற் வெளிச்சத்தில் அம்மருந்துகளை நிதானமாகவும் வேகமாகவும் ஏற்றியவள். மீண்டும் றக்ரரில் இருந்து குதித்து இவர்களை நோக்கி வருகின்றாள். அவளின் வேகமான செயற்பாடு இராணுவ மருத்துவர்களுக்கு உதாரணமாக அமைகின்றது.....................👇 12
ஆளின் நிலமை மோசமாகத்தான் இருக்கு. கடைசியாக எவ்வளவு செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்திருக்கு, இனி..... கூறியவன் முடிக்காமல் மீதம் இருக்கும் காயக்காரர்களைக் கவனிக்கப் போகின்றான்.
ஏனைய காயக்காரர்களையும் மற்றய றக்ரரிலும் ஜீப்பிலும் ஏற்றி அனுப்புகின்றார்கள். இறுதியாக சில காயக்காரர்களையும் ஏற்றிக்கொண்டு இவனும் அவ் றக்ரரில் தொற்றிக் கொள்கின்றான். வேகமாக பின்வாங்குகின்றார்கள். இவர்களை ரவைகளும் எறிகணைகளும் கலைத்துக்கொண்டு வருகின்றனவா? அல்லது திட்டத்தை கைவிட்டு ஓடுபவர்களைப் பார்த்து எள்ளிநகையாடுகின்றனவா? விளங்கிக் கொள்வதில் சிரமப்படுகின்றான்.
மருதோடைச் சந்திவரை சுமார் 1 கி.மீ பின் வாங்கினார்கள். அங்குள்ள வீடு ஒன்றில் அவருடன் முன்னர் வந்த குழுவினர் சிகிச்சை அளிக்கக்கூடிய ஒழுங்குகளைச் செய்திருந்தனர். ஏறக்குறைய ஐம்பது போராளிகள் வரை வீட்டிலுள்ளும் முற்றத்திலும் கிடத்தப்பட்டுள்ளனர். சிலருக்கு இரத்தம் கொப்பளித்துக் கொண்டு ஓடுகின்றது. இவர்களின் மருத்துவப்பலம் மூன்றாகப்பிரிந்து இருந்தது. பொறுப்பாளருடன் முதலில் இவர்கள் நின்ற இடத்தில் ஒரு குழுவும், இடையில் நகர்த்துவதற்காக ஒரு குழுவும் இப்போது இவர்கள் நிற்கும் இடத்தில் ஒரு குழுவும் என, ரோச் வெளிச்சத்தில் ஓடும் இரத்தப்பெருக்குகளை முதலில் நிறுத்துகின்றார்கள். எறிகணை மழை அப்பிரதேசம் எங்கும் வஞ்சகமின்றி பொழிந்து கொண்டிருக்கின்றது. அவை வெடிக்கும் சத்தமும் இவர்கள் ஓடித்திரிவதனால் ஏற்படும் சத்தமும் தங்களிடையே போட்டி போடுவதுபோல் இருக்கின்றது. இவர்களின் பரிதாப நிலையைப்பார்த்து கனரக இயந்திரத்துப்பாக்கிகள் எக்காளச்
சிரிப்பூட்டிக் கொண்டிருக்கின்றன.
இவர்கள் கொண்டுவந்த பொருட்களை இறக்கி ஒழுங்குபடுத்தி சற்று நிதானமாக சிகிச்சையை ஆரம்பிக்கின்றார்கள். அப்பொழுது கிரிச் என பிறேக் அடித்து நிற்கிறது ஜீப் அதிலிருந்து சில காயங்களுடன் இறங்கிய மனோச் சொல்கிறார். டாக்டர் உங்களோட கொஞ்சப்பேரைக் கூட்டிக்கொண்டு உடனே பின்னால போங்கோ! இவன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்கின்றான். பல போராளிகள் காயத்தினால் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்களை விட்டுவிட்டோ அல்லது மீண்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வதைக் கனவிலும் நினைக்க முடியாது. குறைந்தது. நோநிவாரணி கூடக்கொடுக்கப்படவில்லை. டொக்டர் யோசிக்க நேரமில்லை பிளட் பாங் செற்றப்பையும் உங்களுடன் கொண்டு போங்கோ. போய் நொச்சிக்குளம் பள்ளிக்கூடத்தில் ஒழுங்கு படுத்துங்கோ, நாங்கள் பின்னால வாறம் தொடர்போட போங்கோ கட்டளைகள் வேகமாகப் பிறப்பிக்கப்படுகின்றது.
ஒன்றும் செய்ய முடியாத நிலை எல்லோரும் ஓடி ஓடி மீண்டும் காயக்காரரையும் பொருட்களையும் றக்ரர்களில் ஏற்றுகின்றார்கள். இரண்டு றக்ரர்களும் நிறைந்துவிட்டது. முன்னால நின்றது பிரகாசமான வெளிச்சத்துடன்
புறப்பட்டுவிட்டது
இரண்டாவதினுள் இவன் ஏறுகின்றான். வடிவாக நிற்பதற்கும் இடமும் இல்லாமல் பிடிப்பதற்கும் பிடிமானம் இல்லாமல் ஒரு கையில் றைபிளையும் வைத்துக்கொண்டு தடுமாறுகின்றான். இவனது பரிதாப நிலையைப் பார்க்கின்றான். ஒரு கை முறிந்த போராளி அவன் தனது மறுகையில் றைபிளையும் தாங்கோ என வேண்டுகின்றான். பரா வெளிச்சத்தில் அவன்
முகத்தைப் பார்க்கின்றான். என்பு முறிவினால் ஏற்பட்ட பாரிய வலியை அவன் முகம் பிரதிபலிக்கவே செய்கின்றது. றக்ரர் ஸ்ராட் பண்ணி ஓடத்தொடங்க பள்ளம் பிட்டிகளில் ஏறி இறங்க, போராளிகள் போடும் வேதனைக்குரல்கள் இதயத்தை வாட்டுகின்றன.
எறிகனைகளால் விரட்டப்பட்ட அவ் உழவு இயந்திரம் இராட்சத வேகமெடுக்கின்றது. திடீரென றக்ரர் நிற்க றைவர் இறங்கிப்போய் முன்னால் பார்க்கின்றான். றக்ரர் முன்சில்லு மீண்டும் காத்துப்போய்விட்டது. இவன் இதயம் பக்கென நின்றமாதிரி இருக்கிறது. என்ன செய்யலாம்? இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு போராளி இறங்கிப் போகின்றான். அவன் அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து வந்து அச்சில்லின் முன்னால் போடுகின்றான். றைவர் றக்ரரை முன் நகர்த்தி அக்கல்லின் மேல் அச்சில்லையேற்ற முற்பட நகரத் தொடங்குகிறது. உடனேயே அப்போராளி எதிர்திசையில் நின்று ஒரு காலால் கல்லை நகரவிடாமல் உதைத்து தடுக்கின்றான்.
றக்ரர் சில்லு சற்று சறுக்கினாலும் அவன் கால் "சம்பல்" ஆகும். காற்றில்லாத ரயர். ஆதலால் றிம்மும் ரயரும் அவன் காலை நேரடியாகத் தாக்கும். ஆனால் அவன் அதைப்பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் ஆச்சரியம் றக்ரர் ஏறியதால் அவன் நகரவிடாமல் தடுப்பதுதான். அப்பொழுது இவனுக்கு எங்கோ வாசித்தது ஞாபகம் வருகிறது.
ஒரு இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி பிரண்டுவிட்டது. அதனுள் ஒரு இளம் பெண் சிக்குப்பட்டு உதவி கேட்டுக் கத்துகின்றாள். அதனை பார்த்த ஒருவன் அக்காரை தூக்கிச்சரித்த வண்ணம் மறுகையால் அவளை வெளியில் இழுத்து காப்பாற்றினான். பொதுவாக இக்கட்டான சந்தர்ப்பங்களில் அப்படியான பலம் வருமாம் ஆனால் அவளே அதே மாதிரி பிறகு ஒரு முறை செய்து காட்டும்படி கேட்க, அவனால் காரை அசைக்கக்கூட முடியவில்லையாம்.
அச்சில்லு கல்லின் மேல் ஏறவும் அவன் தனது காலை சரியான நேரத்தில் விலத்தவும் பொருத்தமாக இருந்தது. இன்னொரு போராளி மண்வெட்டிப் பிடியை உரிய இடத்தில் இறக்கினான். இப்பொழுது கல்லை விட்டு சில்லை முன் நகர்த்திப் பார்க்க சில் நிலத்தில் முட்டவில்லை உடனேயே றக்ரர் விரையத்தொடங்கியது.
நொச்சிக்குளம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றார்கள். திட்டப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆனால் அது கவலையையும் கொடுக்கவில்லை. இவ்வளவு போராளிகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும். விடிந்தால் இவை சாத்தியமில்லை. ஒருமுறை திரும்பி வந்த வழியைப் பார்க்கின்றான். ஏராளமான பரா வெளிச்சங்கள் வானை ஆக்கிரமித்துள்ளன. சண்டை உக்கிரமாக நடந்த வண்ணம் உள்ளது காயங்கள் இன்னும் அதிகமாக வரும். மிகவும் இக்கட்டான நிலையினுள் இறுகப்போகின்றோம் என்பது மட்டும் வெள்ளிடைமலையாகின்றது. றக்ரர் குலுங்கக் குலுங்க முறிபட்ட என்புகளின் விளிம்புகள் உரஞ்சுப்பட உரஞ்சுப்பட ஏற்படும் நோவினால் போராளிகள் கத்துவது வாகன இரச்சலையும் எறிகணை சத்தங்களையும் மீறி காதுகளில் புகுந்து இதயத்தைத் தாக்குகின்றது.
போர்க்காயங்களால் இறப்பவர்களின் கணிசமானவர்கள் நோவினால் ஏற்படும் அதிர்ச்சியினாலேயே இறக்கின்றார்கள். இவன் மனமோ இருதலைக் கொள்ளி எறும்பாகின்றது. றக்ரரை நிறுத்தி எல்லோருக்கும் நோநிவாரணி கொடுப்போமா? என யோசிக்கின்றான். இல்லை அது இன்னும் ஆபத்தானது றக்ரரிலோ, அருகிலோ எறிகணை விழுந்து வெடிக்கலாம். எனவே தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகவே அமையும்.
நடப்பது நடக்கட்டும் என தன் எண்ணங்களை மாற்றிக்கொண்டான். காயமடைந்தவர்களின் வேதனைக் குரலைக் கேட்பதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ தன் கவனத்தை திசை திருப்ப சண்டை நடக்கும் திசையைப் பார்த்த வண்ணம் உள்ளான்.
இவனுக்கு முதலில் அனுப்பிய பிள்ளையின் ஞாபகம் வந்தது. அவள் தப்புவாளா? இல்லை இப்பவே இறந்திருப்பாளா? நாங்கள் என்ன ஒரு பைந் பிளட்டும் மூன்று பைந் திரவ ஊடகமும் தானே ஏற்றினாங்கள். மனம் அங்கலாய்த்துக் கொண்டிருக்க நொச்சிக்குளம் பாடசாலையை வந்தடைகின்றார்கள்.
நேரம் அதிகாலை 2 மணி. எப்படி நேரம் போனது என விளங்கவில்லை. மருத்துவப் போராளிகள் உட்பட ஆறு பேர்தான் நிற்கின்றார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நூறையும் தாண்டிவிட்டது. எல்லோரும் பாடசாலைக் கட்டிடங்களிலுள்ளும் மரங்களின் கீழும் கிடத்தப்பட்டுள்ளார்கள். அவசியமானவர்களுக்கு மட்டும் முதலுதவிச் சிகிச்சையைச் செய்கின்றார்கள். இப்பொழுது இவர்களின் வேலைப்பழு அதிகமாகி விட்டது. காயக்காரரை ஏற்றி இறக்குவதிலேயே மூச்சிளுக்கத் தொடங்கிவிட்டது. மேலதிகமாக உதவிக்குப் போராளிகளை அனுப்பும்படி மனோச்சுக்கு வேகமாக அறிவித்திருந்தார்கள். தங்களால் முடிந்த அளவிற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முதலில் கால் வெட்டி அனுப்பிய
போராளியைத் தேடிப்போய் பார்க்கின்றான். நிம்மதிப் பெருமூச்சு வெளிவருகின்றது. நாடித்துடிப்பு இருக்கிறது. ஆனால் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
முதலில் இவர்கள் நின்ற இடத்தில் பரா வெளிச்சமாவது உதவி புரிந்தது. இங்கு அதுவும் இல்லை. எக்காரணம் கொண்டும் வெளியில் ரோச்லைற் அடிக்க வேண்டாம். மேல பயிற்றர்காரன் நிக்கிறான். சாத்திப்போடுவான் ஒருவன் எச்சரிப்பது கேட்கின்றது. அதற்குள் இன்னுமொரு காயத்துக்கு இரத்தம் தேவைப்படுகின்றது. காவுங்குழுவைச் சேர்ந்த ஒரு போராளியில் இருந்து இரத்தம் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டு ஏற்றப்படுகின்றது.
காயங்களுக்கு அவசியம் தேவைப்பட்ட முதலுதவிகளையும் அவசர சிகிச்சைகளையும் செய்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது பூதாகாரமாக இருக்கும் பிரச்சனை வேறு. இவ்வளவு காயக்காரர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியாக வேண்டும் அதுவும் விடிவதற்குள் வாகனங்கள் எல்லாம் கண்டி வீதிக்கு மேற்குப் புறமாகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. இப்பகுதியினுடாக பெரிய பஸ்களை கொண்டுவரவும் முடியாது. அப்படி வாகனங்கள் வருவதை எதிரி அறிந்தால் போதும் நிலமை இன்னும் மோசமடைந்து விடும். சில காயக்காரரை உடனேயே அனுப்பவேண்டும் இல்லையேல் அவர்கள் இறக்கவோ அன்றி தங்கள் அங்கங்களை இழக்கவோ வேண்டிவரும்.
போர்க்களங்களில் காப்பாற்றக்கூடிய சில போராளிகள் இறப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய அங்க இழப்புகள் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்பவையே அதற்காக இதனை ஏற்க முடியாது. களமுனைத் தளபதிகளுக்கு வோக்கியில் அறிவித்தல்கள் பறந்த வண்ணம் உள்ளது.........
-தொடரும்......
-யுத்தகாண்டம்
-தூயவன்.
No comments:
Post a Comment