Wednesday, 18 March 2026

தியாகத்தீபம் அன்னை பூபதி

தமிழீழத்தின் வீரத்தாய்.
~~~~~~~~~~~~~~~~~~~
தியாக தீபம் அன்னை பூபதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பூபதி அன்னை 1932 கார்த்திகை 3 ஆம் நாள் பிறந்து விடுதலை வேட்கையும் அதற்கான தியாகமும் நாட்டுப்பற்றின் சிகரமாகத் தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாகப் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாகத் தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதி அறப்போர் அமைத்தார்..

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் அன்னை வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும் தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர்.

ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல, அன்னை பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர்.

மட்டக்களப்பு -அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிற இந்த வீரத்தாய், அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டு தொடங்கினார்.

⚡உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

⚡புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப் படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே, சாகும் வரை உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.

பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19, 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக 'சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமிருக்கிறேன். எனக்குச் சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது எனக் கடிதம் எழுதி வைத்தார். பத்துப்பிள்ளைகளுக்கு தாயார் இவர். நீர் மட்டும் அருந்தி சாகும்வரை உண்ணாநோன்பு இருந்தார்.

இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 1988 சித்திரை 19 ஆம் நாள் அன்று உயிர் நீத்தார்.

அவரது மரணம் பொறிதட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதியாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது.

அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழீழத்து நாட்டுப் பற்றாளர்களைச் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் கொலை செய்து வருவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதற்குரிய காரணங்களையும் நாம் வரலாற்று ரீதியாகத் தர்க்கித்திருந்தோம். 'மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க வேண்டுமென்றால் அந்தப் போராட்டத்தைத் தாங்கி நிற்கும் நாட்டுப் பற்றாளர்களை நசுக்க வேண்டும்' என்று அடக்கு முறையாளர்கள் தொடர்ந்து சிந்தித்தும் செயல்பட்டு வருவதையும் தமிழீழத்து நாட்டுப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள் நிரூபித்து நிற்கின்றன.

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகத் தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப்படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினைவு தினத்தை ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.

-விழுதுகள் பாகம்1.

No comments:

Post a Comment