Sunday, 15 March 2026

தாயகத்தின் தாய் 4. -பொட்டம்மான்

வீரம் விளைந்த தமிழீழத் தாய் ஒருவரின் கதை!  மகனை இயக்கத்திற்கு கரும்புலியாக அனுப்பிவிட்டு, தாயக விடுதலைக்காக தானும் இயக்கத்திற்காக உழைத்த தியாகத்தாய் ஒருவரின் வீரமும் பாசமும் பிணைந்த இக்கதை ,தமிழர் சேனையின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளர் திரு பொட்டு அம்மானால் அன்றைய காலத்தில் எழுதப்பட்டது, 2003 சூரியப்புதல்வர்கள் வருடாந்திர இதழில் வந்ததை உறவுகள் படிக்கும் வகையில் நான்கு பகுதிகளாக தொகுத்து வழங்கியுள்ளேன்,இறுதிப்பகுதி இதோ உங்களுக்காக ....👇

……………………நல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் வலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின் கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர்.

வீரமும் அர்ப்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்தில் எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வெளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்.... மகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே? என்பதற்கான வழமையான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது.

"மனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும்.கதைக்க விட்டால் தப்பேலாது" என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச் சந்திப்பதில் உள்ள வசதிக் குறைவு... என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொறுப்பாளர்.

"மகன் தூரத்தில..., மட்டக்களப்பில... நிற்கிறான்... வர கொஞ்சம் காலம் செல்லும்" அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொறுப்பாளரின் வார்த்தைகள்.

அவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி.

"எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே....?"

"எனக்கு எல்லாம் தெரியும். நான் பெத்து வளத்த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே"

"உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்"

"வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன். வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்" என்ரபிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும் கதைக்கேல்லை.

"செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஓடிப்போய் ரூபவாகினிதான் பார்தனான்" "முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை - பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே..."

"றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை..."

அடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நின்றவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா.

தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.

எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில்.

எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்து போன அந்தக்கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான்.

முத்தாய்ப்பான வரிகள்.

"உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா".

இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா"

அம்மா தாயே உங்களை ஏமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. அத்தனை பற்றியும் அன்றே தெரிந்திருந்தும்... ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே....

தாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா.

முற்றும்.
❤💛

ச.பொட்டு

-சூரியப்புதல்வர்கள் 2003

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

No comments:

Post a Comment