Sunday, 15 March 2026

சரிதமாய் வாழவே போகின்றார் - போரியல் கவிதை

சரிதமாய் வாழவே போகின்றார்
❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛

போகின்றார் மாவீரர் போகின்றார் - பகை போர் வென்றார்- சாவென்றே போகின்றார்........

கொற்றவன் பெரும்படை 
வகுத்தணி செல்ல, முழங்கிசை கரையவே போகின்றார் ........

மலர் சாற்றிய ஊர்தியில் செங்கொடி போர்த்தியே மரியாதையோடிவர் போகின்றார். ........

நற்றமிழ் தாய்மண்ணின் பெருங்கடன் முடித்து பொன்முடி சூடியே போகின்றார் .......

இவர் பெற்றவள் கதறவே யெம்தேச மக்களும் வெம்மியே சாரையாய் போகின்றார்........

உடல்தனை மண்ணுக்கும் உயிரினை தமிழுக்கும் உணர்வோடளித்தே போகின்றார் ......

தன் திடங்கொண்ட பருவமிடுக்கு மேனியில் பூக்கள் சொரியவே போகின்றார் ...........

வீட்டு படலையில் தீபம் நிறைகுடங் கருங்கொடி தோரணந் தொங்கவே போகின்றார்...........

ஆழ் கடலினைப் போல் பெரும் காவியம் படைத்து காவலர் தீரர் போகின்றார்...........

போர்ப்புலி வீரர் வீழமுன் மண்ணில் வேங்கைகளாயிரம் 
முளைக்கின்றார் ........

மார்பினைத் தட்டியே மானத்துள் வாழ்ந்திவர் மண்டியிடாமலே போகின்றார் ...........

எம் ஊர்வாழ வுயிர்தந்த மாசற்ற மாவீரர் துயிலில்லம் நாடியே போகின்றார்...........

இவர் பேர்சொல்லி நாளை தமிழர்கள் நெஞ்சினில் சரிதமாய் வாழவே போகின்றார்.............

கோ. திருநாமம்

-சூரியப்புதல்வர்கள்.  2001

No comments:

Post a Comment