Sunday, 15 March 2026

தாயகத்தின் தாய் 1 -பொட்டம்மான்

அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது பணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது.

ஏதோவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத் தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொரு பெயராலும், குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும் பணிமனையின் எல்லாக்கோவையையும் போல் ஒன்றாகத்தான் துாங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்றவரல்ல.

என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நினைவுப்பதிவுகளில்... கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஓயாத கதையுமாய்... நகைச்சுவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக தெரிவு செய்ய வைக்கும் பண்புகள்தான் அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும்.

சில பெண் பிள்ளைகளுடன் இளையவனாய் ஒரேயொரு மகன் என்பது அந்த மகன் மீது அதீத அன்புக்கு காரணமாய் அமைவது இயல்புதான். அம்மாவுக்கும் அப்படித்தான், சில பெண் சகோதரிகளுடனான அந்த ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம்.

காலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்ற பாசத்தின் தளத்தில் எழும் வேதனை மட்டுமல்ல.

அம்மா அந்தக்காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில்

எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமுறியவர். அரசியல் மென்முறைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறுவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர்.

காலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து... ஒரு சராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இதுவரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும், மனதில் ஆயுதப் போராட்ட நியாயக்கருத்துக்கள் ஆழப்பதிவாகி இருந்தன. அந்த நியாயத்தின் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் - ஆயுதம் ஏந்தப் புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது? பெற்ற பாசமா? இனத்தின் சோகமா? என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத் தெரிவை மனதால் ஏற்று சம நிலைக்கு வர காலம் பிடித்தது.

இப்போது மகன் போராளி. தெருவில் போக வர அம்மாவை எதிர் கொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட குழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது பெரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித் திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான்.

இயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பெடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போராளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரிய நியாயமில்லைத்தான். அதேபோல் வடமராட்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயோ அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்துப்போயோ என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தே வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான்.

இதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில் என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனத்துடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. "அதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்" என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி "வயிற்றுக்காயம்" "பதினைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு" "இன்னும் சாப்பிடத் தொடங்கேல்ல" என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் ஏற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா.

மருத்துவமனை "கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்" உறுதியின் வெளிப்பாடுகள்.

"என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு, காவு குழு அனுப்புங்கோ"

.." எம்மையா? எதிரியையா? என சிந்திக்க வைக்கும் எழுத்தில் சொல்லமுடியாத வசவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள்.

"ஐயோ தங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ...ஓ..."

"வேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ" கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள்.

மருந்துகளின் நெடியை மீறிய புண்களின் மணம்.

மகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுக்கும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்து வைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார்.....

-தொடரும் 

ச.பொட்டு.

No comments:

Post a Comment