Wednesday, 11 March 2026

யுத்தகாண்டம் பாகம் 7. தூயவன்

ஒன்றைச் சொல்கின்றான். ஒரு சண்டைக்கு போகும்போது மிஞ்சின சாப்பாட்டை சொப்பின் பாக்கில் கட்டி மரத்தடியில் புதைத்து விட்டுப்போனாங்கள். 3ம் நாள் சண்டை குழம்பி கலைப்பட்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனாங்கள் பசியோட இருந்த எனக்கு அந்த புளிச்சாப்பாடுதான் கைகொடுத்தது. கெரில்லாப் போராளிகள் அடிக்கடி சந்திக்கும் கடினங்களில் ஒன்றைக் கூறினான். அதற்கு அவசியம் வராமல் முடித்துவிட்டார்கள். முழுச்சாப்பாட்டையும் சாப்பிட்டு எல்லோருடைய பைகளும் சேகரிக்கப்பட்டு தடயங்கள் விடுபடாமல் உருமறைப்பு செய்யப்படுகின்றது.………………👇 7

வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்! மேசையை சுத்திவர எல்லோரும் இருப்போம். லாம்பு வெளிச்சத்தில், மறுக்க மறுக்க அம்மா போடுவார். புகழ்ந்தும் குறை கூறியும் சாப்பிடுவம். பள்ளிப்பகிடிகளும் ரியூசன் குறும்புகளும் அலசப்படும்.லாம்பு  அனைஞ்சாலோ, வெளிச்சம் குறைந்தாலோ சாப்பிட மாட்டம். இங்கு நிலைமை ! 

வீதியில் மக்கிமட்டும் தெரியுது. அருகில் இருக்கும் போராளியின் குரல் அல்லது அசைவுக்குரிய சத்தம் மட்டும் கேட்கிறது. கைகழுவவில்லை என்ற யோசனையே வரவில்லை. ஆனால் சாப்பாடு நல்லத்தான் இருந்தது. பசியோடு இருப்பவருக்கு பழம் சோறும் நல்லாய்த்தான் இருக்கும். என்னை கேட்டால் உலகிலேயே இந்த புரியாணி பார்சல்தான் என்பேன். அப்படியெண்டால் அழகும் மனநிலைக்கும் ஏற்ப மாறுபடுமா? மனம் அழகைப்பற்றி ஆராட்சியில் இறங்க இவன் இதனைப் பெரிய கண்டுபிடிப்பாக சந்திரனுக்கு சொல்ல, அவனுக்கு அருகில் இருந்த போராளி யாரடா? இவன். இந்த நேரத்தில் இதை கதைக்கிறவன் என்று விழிபிதுங்குவது அந்த இருளிலும் தெரிய மெல்லமாக மௌனமாகின்றான். 

மீண்டும் பயணம் தொடங்கிறது. உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பது இங்கும் பொருந்தும், மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். நடந்து கொண்டே இருந்தார்கள். எதிர்கால எதிர்ப்புக்களையும், நெஞ்சு நிறைந்த தாயகக்கனவுகளையும் சுமந்தவண்ணம் நடக்கிறார்கள். அன்னியரின் இடம் பிடிக்கும் ஆசை இவர்களுக்கு இல்லை. அவனை அழிக்க வேண்டும் என்னும் வெறியும் இவர்களுக்கு இல்லை. ஆனால் அழிவிற்கு அழிவே பதில் கூறும் என்பதால் துப்பாக்கிகளுடன் நடக்கின்றார்கள். வரலாற்றால் இவர்கள் உருவாக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே இனிய கனவினை நெஞ்சில் சுமக்க வேண்டியவர்கள். ஆனால் மூத்த தலைமுறைகள் சுமக்க வேண்டிய பாரத்தை தோளில் சுமந்த வண்ணம் நடக்கிறார்கள். அடுத்த தலைமுறை இதனைச் சுமக்கக்கூடாது என்பதற்காக, மித மிஞ்சிய பாரத்தைச் சுமக்கிறார்கள்.

இப்பொழுது வயல் வெளியினூடு நடக்கின்றார்கள். காடுகள் வெட்டி மக்கள் காணிகள் ஆக்கிய பகுதிகளில் இன்று கள்ளி படர்ந்துள்ளது. எருக்கலை இறுமாப்புடன் இடம் பிடித்துள்ளது. முழங்காலிற்கு மேலாக வளர்ந்திருந்த புற்களை மிதித்து பாதை அமைத்த வண்ணம் நடந்து கொண்டு இருக்கின்றார்கள். மீண்டும் ஓடத்தொடங்குகின்றார்கள். வரம்புகள் குறுக்கிடும் போது பாய்ந்தார்கள். அருகில் இருக்கும் வயல் வாக்கால்களிலுள் வீழ்ந்தார்கள். அடிபட்ட இடத்தை நின்று தேத்துவிட நேரமில்லை ஓடி ஓடி இடைவெளியை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். பின்னால் வருபவர்கள் தன்னைத்தொடர்கின்றார்களா என நின்று பார்க்கமுடியாது.

ஓடிவா, ஓடிவா எனக் கூப்பிட்டபடியே போராட்டம் கடினம் என்பதை மீண்டும், மீண்டும் உணர்ந்து கொண்டு ஓடுகின்றார்கள். ஆரம்பத்தில் அனுபவித்த கடினங்கள் இப்பொழுது இனிமையான அனுபவங்களாக இருக்கிறது. இது மாதிரித்தான் இன்றைய கடினமான நகர்வும் நாளையொரு அனுபவமாக மனதில் தித்திக்கும் என்பதை அனுபவமாக வளர்த்த வண்ணம் ஓடுகின்றார்கள்.

திடீரென இவன் பின்னால் வந்துகொண்டிருந்த மிரேஸ் விழுந்துவிட்டான். அவன் கொண்டுவந்த பெட்டியில தான் ஐஸ் போட்டு இரத்தம்  வைக்கப்பட்டுள்ளது. திரும்பிப்பார்க்கின்றான். நல்லகாலம் பெட்டி திறக்கப்படவில்லை. ஆள் எழுந்து ஓடிவந்து சேர்ந்தான்.

"என்ன மச்சான் நடந்தது?" "பின்னால வந்தது ஒன்று பாட்டாவை மிதித்துப்போட்டுது. விழுந்து போட்டன் ஒரு பாட்டா தவறுப்பட்டுட்டது. இந்த இருட்டில் அதையா தேடுறது. மற்றதையும் கழட்டிப்போட்டு வந்தனான். பாதம் முழுக்க நெருஞ்சி முள்ளு பதம் பார்க்குது" மூச்சிரைக்க மூச்சிரைக்க சொல்ல பெரிய பாவமாக இருக்கிறது. ஆனால் இரத்தம் உள்ள பெட்டிக்கு மட்டும் ஒன்றும் இல்லை என்றவுடன் நம்மதியாக இருக்கிறது.

வயல் வெளியைக்கடந்து ஆறுமுத்தன் புதுக்குளம் எனும் ரோட்டில் ஏறுகின்றார்கள். மீண்டும் நடக்கத் தொடங்குறார்கள். அப்பொழுது வலப்பக்கம் திரும்பி அங்கிருந்த வீடு ஒன்றைக்காட்டி சந்திரன் சொல்கிறான். "இதுதான் போர்க்கண்ணா வீடு" உடனேயே அதனை ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறான்.

மேற்படி செய்தி ஏனையவர்களுக்கும் வரிசையில் கடத்தப்படுகின்றது. எல்லோரும் ஒரு கணம் தங்கள் வேகத்தை குறைத்து அவ்வீட்டை பார்த்துவிட்டு மீண்டும் வேகமாக நகருகின்றனர்.

ஆம்! இந்த வன்னிப்பெருநிலம் முற்று முழுதாக விடுபடுவதற்கு மாங்குள முகாம் தகர்ப்பு அவசியமாக இருந்தது. அதனை ஒரு முறை செய்ய முற்பட்டு தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக அத்தாக்குதல் வெற்றியில் முடிந்து அதற்கு மூல காரணமாக அமைந்தது லெப் கேணல் போர்க்கண்ணை கரும்புலியாக சக்கை லொறி கொண்டுபோய் முகாமினுள் வெடித்தது. இன்றும் அந்த இடத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது.

ஏனோ அவன் மனம் அங்கலாக்கின்றது...! போர்க்கண்ணை உங்கள் போன்றவர்களால் விடுவிக்கப்பட்ட மண்ணில் இன்று எதிரி உலாவருகின்றான். ஏன! உங்கள் வீட்டில் கூட ஒருவரும் வசிக்கவில்லை.

போராட்டத்தில் தற்காலிக பின்னடைவுகளும் தந்திரோபாயப் பின் வாங்கல்களும் தவிர்க்க முடியாதவைதான்  ஆனால் அவைகள் நிரந்தரமானவையாக முடியாது.
மீண்டும் இம்மண்ணில் மக்கள் வந்து வசிப்பார்கள். அதுவரை எங்களுக்குத் துணையாக இரும். உங்கள் பணியை நிறைவேற்றவே நாங்கள் இப்பொழுது நகர்ந்து கொண்டிருக்கின்றோம். மேற்படி எண்ணமிட்ட இவன் மனம் மலரவன் எழுதிய "போர் உலா" புத்தகத்தை அசை போடுகின்றது. 

அவ்வீட்டைக் கடந்தவுடன் போராளிகள் புதிய உத்வேகம் பெற்றவர்களாக வேகம் எடுக்கின்றார்கள். அவர்களின் வேகத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த அணித்தலைவர்கள் கட்டளை பிறப்பிக்கவேண்டி இருக்கிறது. வோக்கியில் கொண்டு நிரைகளை அடிக்கடி முன்னும் பின்னும் தொடர்பு ஒழுங்குபடுத்துகின்றார்கள். நாங்கள் நகர்வில் இதுவரையும் எவ்வித இடஞ்சல்களையும் சந்திக்கவில்லை என்பதை இடை இடையே கட்டளைத் தலைமைப்பணியகத்திற்கு அறிவிக்கின்றார்கள். இவ்வாறே இன்னொரு பேரணி கண்டிவீதிக்கு மேற்காக இவர்களுக்கு சமாந்தரமாக நகர்வை மேற்கொள்ளுகின்றது.

இப்பொழுது நேரம் இரவு பத்துமணி. நொச்சிக்குளம் எனும் இடத்தை வந்தடைகின்றார்கள். வீதியின் ஓரமாக இருக்கப் பணிக்கப்படுகிறார்கள். அங்கிருந்து ஆகாயத்தை பார்க்கின்றான். நிலவை காணவில்லை. "இவர்களின் கடின வாழ்க்கையினை பார்க்க முடியாததால் தன்னை மறைத்துக் கொண்டான் போலும், அப்படியானால் தாரகைகள் ஏன் இன்னும் காணப்படுகின்றன? ஏன் எங்களை பார்த்துக் கண் சிமிட்டுகின்றன. பல ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?

ஆனால் நீங்கள் வெப்பம் நிறைந்தவர்கள் என்பதும் தெரியும். சூரியனைப்போல் பல மடங்கு பெரியவர்களும் உங்களில் இருக்கின்றார்கள். நீங்களும் எங்கள் போராளிகள் போன்றவர்களே. ஒரு பார்வையில் வழிகாட்டிகள். இன்னொரு பார்வையில் ஆபத்தானவர்கள். தியாகத்திலும் நீங்கள் நெருப்பைப் போன்றவர்கள். எவரையும் நெருங்கவிட மாட்டீர்கள். இலாவிட்டால் இவ்வளவு பாரிய வெற்றிகளை இம்மண்ணிற்காக பெற்றுக் கொடுத்திருப்பீர்கள்? 

அது சரி உங்களை நம்பி அந்த காலத்தில் படை பயணம் செய்தார்களாம். நீங்கள் தான் அவர்களுக்குத் திசைகாட்டி அந்த காலத்தில் பயணம் செய்தார்களாம். மன்னர்களும் உங்களை வைத்து தான் நகர்த்தினார்களாம் அதனால்தான் வழிகாட்டி என அழைக்கப்பட்டீர்களாம். அப்படியாயின் உங்களை வேவுப்புலிகளுக்குத்தான் ஒப்பிடலாம், தெரியாத பாதையினுடாக போரியற்கால ஏற்பாடுகளுடன் பெரும் எண்ணிக்கையில் நகரும் எங்களுக்கு பாதுகாப்பான பாதைகள் எடுக்க எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பீர்கள். இவ்வாறு அவர்களும் தவித்திருக்கும்போது உங்களுடன் உரையாடுவார்களா?"

'என்னண்ணை! கனக்க யோசிக்கிறியள்?" அருகில் இருந்த சந்திரன் மெதுவாக கூப்பிட கனவுலகில் இருந்து விடுபடுகின்றான். "இல்லை மச்சான்! இப்படி எத்தின சண்டை பிடித்தால் தமிழீழம் கிடைக்கும்?" இவனது கேள்வி அவனுக்கு வியப்பைக் கொடுத்திருக்கவேண்டும்.

"ஏன் அண்ணை! அதுக்குள்ள அவ்வளவு களைத்துப்போய் விட்டீர்களா?" ஓம் என்றோ, இல்லை என்றோ பதிலைச் சொல்லாமல் ஆழமான பெருமூச்சொன்றை வெளிவிடுகின்றான்.

இவர்கள் இருக்கும் வீதியின் இருமருங்கிலும் பல வீடுகள் இருக்கின்றன. இது
எந்த இடம்? இவன் கேட்க "நொச்சிக்குளம்" சந்திரன் பதிலளிக்கின்றான். பார்க்க வீடுகள் எல்லாம் நல்லா இருக்குது. "யாழ்ப்பாணத்து வீடுகள் மாதிரி இல்லையா?" இரவினுள் தெரிந்ததை வைத்துக்கொண்டு கதைக்கிறான். ஓமண்ணை "இந்தமக்கள் தனியத்தோட்டம் செய்துதான் முன்னேறினவையள். எவ்வளவு கஸ்ரப்பட்டு தலைமுறை தலைமுறையாகக் கட்டின வீடுகள். ஒரு நாளில் போட்டது போட்டபடி கிடக்க விட்டுட்டுப்போக வேண்டியதாகப் போய்விட்டது."

அப்பொழுது பக்கத்தில் கிளியறிங் செய்யப்போன அணியினர் வந்து இரவு வீடுகளினுள் சென்று எழுப்பக்கூடாது. ரோச்சை அடிக்கக்கூடாது. வெட்டையில் நடமாடக்கூடாது. தப்பித்தவறி அவன்ற ரெக்கிக் காரங்கள் கண்டு அறிவிச்சாங்கள் என்றால், எல்லாரையும் செல்லாலையே புக்கையாக்கி போடுவாங்கள். மீண்டும், மீண்டும் அறிவுறுத்தப்பட்டு வீடுகளினுள் அனுமதிக்கப்படுகின்றார்கள். தங்கும்படி சொல்கிறார்கள். சத்தம்
அப்படி இருந்தும் ரோச்சை கையால் பொத்திப் பிடித்து அடித்தபடியே பெரிய கல்வீடு ஒன்றினுள் செல்கின்றார்கள், தூசி மனம் நாசியை அடைக்கிறது. சிலந்தி வலைகள் முகத்தில் அப்பிக்கொள்கின்றது.

தளபாடங்கள் எல்லாம் கிடக்கின்றன. மேசை ஒன்றில் ஆடைகள் சிதறிக்கிடக்கின்றன. மக்கள் இல்லாததால் பாழடைந்த வீடுகளுக்கு உதாரணமாகக் காட்சியளிக்கின்றது. இந்த வீட்டினைக் கட்டும் போது எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள்! என எண்ணியபடி அண்ணார்ந்து பார்க்கின்றான். யாழ்ப்பாணத்து வீடுகளிலும் பார்க்க அறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஏன் இப்படி கட்டியிருப்பார்கள், யாரிடம் காரணம் கேட்கலாம்? யோசித்தான். ஏன் இவற்றை கதைத்து நேரத்தை வீனாக்குவான்? 

படுப்பம் என நினைத்தவன் கீழே கிடந்த புடவை ஒன்றை எடுக்கின்றான். ஏனோ தெரியவில்லை மணந்து பார்க்கின்றான். பூஞ்சன மணம் அடிக்கின்றது. அவனுக்கு வீட்டு ஞாபகம் வருகின்றது. பெற்சீற் விரித்தாலும் அம்மம்மா பாவித்த நூல் பிடவை இரண்டு விரித்தால்தான் படுப்பான். அதுவும் அம்மாதான் விரித்துவிட வேண்டும். அம்மம்மா செத்தபிறகும் கனகாலம் அப்படித்தான் இருந்தான்.

வீட்டினுள் படுக்க வெக்கையாக இருக்கிறது. வெளியால காத்து வீசுகிறது நல்லா இருக்கும். பாரம் சுமந்தபடி நடந்து வந்ததால் உடல் சூடாகவும் களைப்பாகவும் இருக்கின்றது. மெல்லிய காற்று மேனியை வருடிவிட இதமாக இருக்கிறது.வீட்டில் எடுத்து வந்த புடவையை நிலத்தில் உதறி விரிக்கின்றான். இடுப்பில் பெல்ட் மாதிரி மடித்துக்கட்டியிருந்த சறத்தை அவிழ்த்து அதன் மேல் விரிக்கின்றான். ரைபிளை அதன்மேல் வைத்துவிட்டு அருகில் படுக்கின்றான். இவனுக்கு அருகில் ஒரு புறம் சந்திரனும் மறுபுறம் மிரேசும் படுக்கின்றனர். சிறிது நேரத்திலேயே நித்திரையில் மூழ்கி விட்டான்.

திடீரென உடல் குளிர தொடங்கியது. களைப்பு மாறி உடல் சூடு தணிந்தவுடன் குளிரை உணரக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் நுளம்பு கடித்த இடங்கள் தடித்திருந்தது. நுளம்புக்கடியையும் குளிரையும் தவிர்ப்பதற்கு இப்போது இருக்கும் ஒரே வழி நிலத்தில் விரித்திருக்கும் சாறத்தை எடுத்து அதனுள் புகுந்து உடலை வினாக்குறிபோல் குறுக்கிப்படுப்பதே "சே" வீரன் நிமிர்ந்து தான் படுக்க வேண்டும். வினாக்குறிபோல் குறுக்கிப்படுக்க கூடாதாம் புறநானுற்றில் கூறப்பட்டிருக்காம். அப்ப நான் வீரன் இல்லையா? இப்ப எனக்கு நானே வீரன் என நிரூபிக்க வெளிக்கிட்டால் நட்டத்தில்தான் முடியும் என்று நினைத்தவன் அவ்வாறே சறத்தினுள் புகுந்து படுக்கின்றான்.

நித்திரை வர மறுத்து பள்ளியில் ரீச்சர் சொன்ன கதை ஞாபகம் வருகிறது. துட்டகைமுனு இப்படித்தான் முடங்கிப்படுத்துக் கிடந்தவனாம். அப்பொழுது இளைஞனான தாய் கேட்டாவாம் ஏன் மகன் நீட்டி நிமிர்ந்து படுக்கலாம் தானே என. அதுக்கு அவன் எப்படியம்மா படுக்கிறது? வடக்கில் தமிழன் ஆளுகின்றான். தெற்கில் கடல் கிடக்கிறது. அதன் பின்னர் எல்லாள மன்னனோட சண்டை பிடித்து அனுராதபுரத்தைக் கைப்பற்றினவன். எல்லாளன் பொருத்தமற்ற முறையில் தன்ர வீரத்தையும் தயாளகுணத்தையும் நிரூபிக்க வெளிக்கிட்டு தன் தேசத்தையே தோல்வியுறச் செய்து விட்டான். துட்டகைமுனுவுடன் வயோதிபனான தான் தனியச் சண்டை பிடிக்க ஒப்புக்கொண்டது பெரிய பிழை. அதனால்தான் இப்ப நாங்கள் கஸ்ரப்படுகிறம். இப்படித்தான் எங்கட மன்னர்கள் வீரம் அது இதுவெண்டு காலத்திற்கு ஒவ்வாத மரபுகளுடன் போர் புரிய வெளிக்கிட்டு முதுகில் வாங்கினவையள். அலை பாய்ந்த மனதை நித்திரைக்கு கொண்டு வர வேண்டி இருந்தது. இல்லாவிட்டால் நாளைக்கு கஸ்ரப்படவேண்டும். இரவில் தூக்கம் வராதவர்கள் ஒன்று இரண்டு எண்ணிக்கொண்டிருக்க நித்திரை வருமாம் கேள்விப்பட்டது. ஞாபகம் வர எண்ணத் தொடங்குகிறான். அவனை நித்திரா தேவி அணைத்துக் கொள்கிறாள்.

"அண்ணை எழும்புங்கோ" சந்திரன் தட்டி எழுப்புகிறான். நேரம் 5.30 ஒவ்வொரு போராளியாக துயிலெழுந்து கொண்டிருக்கின்றார்கள். அவன் மனம் வெறுமையை உணர்கின்றது. காலையில், துயிலெழுப்பவேண்டிய சேவல்கள் கூவவில்லை. காகங்கள் கரையவில்லை. குயில்கள் கூவவில்லை. ஆட்கள் இல்லாவிட்டால் சேவல்கள் இருக்கமுடியாதுதான் ஆனால் காகங்களும் காணாமல் போய்விட்டனவா? 

என்னண்ணை எழும்பி
யோசித்துக்கொண்டிருக்கிறியள். வெளிக்குப் போற ஐடியா? இல்லையா?

இங்கு எல்லாம் ஏ.சி லெட்தான் போயிட்டு வருவம் வாங்கோ!

 சந்திரன் அழைக்க மிரேஸ் கூறுகின்றான். அண்ணை காஞ்சோண்டிக்கதை தெரியும்
தானே? 

இவனும் சிரித்தவண்ணம் ஓம் என்கின்றான். கவனம் படக்கூடாத
இடங்களில் பொட்டமாக் பட்டுவிட்டால் பிறகு கரைச்சலாகப் போயிடும்.

கரிசனையாக எச்சரிக்கின்றான். காஞ்சோண்டிக் கதை தெரியும் ஆனால் அது எவ்வாறு இருக்கும் எனத்தெரியாது. கதைத்தபடி பற்றைகள் நோக்கிப்போனார்கள். ஒருவன் தென்னையொன்றில் ஏறி இளனிகளை மழ மழவென
காலால் உதைத்து வீழ்த்துகின்றான். நேற்று வெளியில் கன நேரம்

நடந்ததால வியர்வை ஆவியாகி உடலில் நீரினைக் குறைத்து விட்டது.

அதனால்தான் சிறுநீரின் செறிவு அதிகரிக்க ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும்போது சலக்கடுப்பு உயிரை வாட்டுகிறது. இளனி குடித்தால் நன்றாக இருக்கும் மனம் எண்ண, கால்கள் இளனிகளை நோக்கி நடக்கின்றன. அது
சரி தடயம் விடக்கூடாது என்று ஓடர் இளனியை குடித்துப்போட்டு
கோம்பையை ஒளித்தால் சரிதானே தன்னுள் எண்ணிக் கொண்டபடியே
இரண்டு இளனிகளை எடுக்கின்றான். தடி ஒன்றினால் ஓட்டை போட்டு குடிக்கிறான். வேறு சிலரும் அவ்வாறு செய்கின்றார்கள்.

 விடிய வெள்ளன ஆறு மணிக்கு இளனி குடிப்பது தன் வாழ்நாளில் இதுதான் முதன் முறையாக
இருக்குமென எண்ணி நிற்கின்றான். போராளிகளுக்கு உடனே தயாரிக்கக்
கூடியதாக அவலும் பால்மாக்களும் மதியத்திற்கும் இரவுக்குமாக உணவுப் பார்சல்கள் வழங்கப்படுகின்றன.…………………………

-தொடரும்........

-யுத்தகாண்டம்

-தூயவன்

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

No comments:

Post a Comment