அண்ணளவாக ஐந்து யார் இடைவெளிவிட்டு ஏ.கே. வகை ரைபிள்கள், எல்.எம் ஜிக்கள், ஆர்.பி.ஜி எறிகணைசெலுத்திகள், பெங்களூர் டோபிடோக்கள் என நாலாவித இலகு, கனரக ஆயுதங்களை சுமந்த வண்ணம் அவனை கடந்துசெல்கின்றனர் போராளிகள். அவர்களின் முகங்களை அவதானிக்க முயல்கின்றான், இருபது தொடக்கம் முப்பது பிராயத்திற்கு உட்பட்டவர்களாகவே அனைவரும் காணப்படுகின்றனர். அரும்புமீசையுடைய முகங்கள், பருவத்திற்கேயுரிய குறும்புகளை
வெளிப்படுத்தும் சில முகங்கள், போர்க்களங்களையும் கண்டதால் கடின பயிற்சிகளையும் பல உணர்வுகளை வெளிக்காட்டாமல் விறைப்புடன் தென்படும் முகங்கள், வானம் இடிந்து விழுந்தாலும் கவலைப்படமாட்டோம் என்பதை உணர்த்துவன போன்ற கள்ளமில்லா சிரிப்புடைய முகங்கள், சிரமப்பட்டு தங்களை போர்க்குணம் நிறைந்தவர்களாக மற்றவர்களிற்கு காட்ட முனையும் முகங்களென பலமுகங்கள் கடந்துசெல்கின்றன.
எப்படித்தான் தங்கள் வதனங்களை வைத்திருந்த போதும் தெரிந்தவர்கள் அருகில்வரும்போது "டொக்டர் போயிற்றுவாறம்" என ஒரு புன்சிரிப்புடன் விடைபெற்றே செல்கின்றனர். சாதாரண மருத்துவப் போராளிகளையும் ஏனைய போராளிகள் டொக்டர் என அழைப்பது இவர்கள் மத்தியில் ஒரு மரபாகவே இருக்கின்றது. "ஓம் போயிட்டு வாங்கோ" வென்று வாங்கோ... மீண்டும் சந்திப்போம், அங்க சந்திப்போம்...'என விடை கூறுகிற போது அவனை அறியாமலே அவன் ரோமங்கள் சிலிர்க்கின்றன.
2.30 மணியளவிலேயே அவனுக்கும் அறிவித்தல் தரப்பட்டிருந்தது. "குறுப் மூவ் பண்ணத்தொடங்கிற்று, நீங்களும் ஆயத்தமாகுங்கள்" என, அவர்கள் உடனடியாகத் தங்களை தயார்ப்படுத்துகின்றனர். ஒரு பிரதான மருத்துவநிலையை நிறுவுவதற்கான பொருட்களை ஏற்கனவே பகிர்ந்து வைத்திருந்தார்கள். இங்கு பிரதான மருத்துவநிலை எனப்படுவது களமுனைகளில் இருந்து காயமடைந்த போராளிகள் குருதிப் பெருக்குக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே கொண்டு வரப்படுவர். அவர்களிற்கு இங்கு மேலதிக சிகிச்சைகள் அளித்து, மீளவுயிர்ப்பளித்து, சத்திரசிகிச்சை கூடத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக கையளிக்கப்படும்வரை, உயிரைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளே பொதுவாக நடைபெறும். இந்நிலை பொதுவாக களமுனைகளில் இருந்து நான்கு, ஐந்து கி.மீ கள் பின்னால் இருக்கும். ஆனால் இம்முறை இவ்வாறு இருக்கப்போவதில்லை, இதனை எண்ணியதால் என்னவோ அவன் மனம் விவரிக்கமுடியாத உணர்வுகளால் ஆட்பட்டிருந்தது. காரணம் இது ஒரு வித்தியாசமான சண்டைமுறை, இதுவரை காலமும் சண்டைகளில் அவர்களிற்கு தேவையான பொருட்களை நடைபெற்ற வாகனங்களில் கொண்டு நகர்வதே வழக்கம். ஆனால் இம்முறை அனைத்துப்பொருட்களையும் அவர்களே தோழில் சுமந்து செல்லவேண்டும். இதனைவிட இன்னுமொரு காரணமும் இருந்தது, அவர்கள்தான் களநிலமைக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். அவர்களின் திட்டங்களில் சிறிது பிசகல் ஏற்பட்டாலும் எதிரியினால் நாலாபக்கமும் சுற்றி வளைக்கப்பட்ட பிரதேசமொன்றில் அகப்பட்டுக் கொள்வார்கள். குறிப்பாகக் கூறினால் கொலை வலையம் ஒன்றினூடாக ஊடுருவப் போகின்றார்கள், எதிரியின் எறிகணைவீச்சு, விமானக் குண்டுவீச்சு என்பன அடிக்கடி இடம்பெறும் பிரதேசம், எதிரியும் எம்மவரும் நடமாடும் பிரதேசம், இரு பகுதியினரதும் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசம், எதிரியின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் என்பனவற்றை அவர்கள் முதலில் கடந்து சென்று நிலையெடுக்கவேண்டும். தாக்குதல் ஆரம்பித்து 40 நிமிடத்தினுள் குறிக்கப்பட்ட பிரதேசத்தினை ஊடறுக்கும் கண்டி வீதியின் ஒரு பகுதியின் பிரதான மற்றும் மினி முகாங்கள் அவர்களின் கட்டுப்பட்டில் வந்துவிடும். உடன் இவர்கள் வீதியைக் குறுக்காகக் கடந்து, அதாவது கிழக்கிலிருந்து மேற்காக வீதியைக் குறுக்கறுத்து விலகி குறைந்தது இரண்டு கிலோ மீற்றர் விலத்தியே தங்களின் மருத்துவப் பணிகளை ஆரம்பிக்கவேண்டும், எதிரி எதிர்பாராத வகைகளில் வியூகங்கள் அமைத்தால் தான் குறைந்த பலம் இருந்தாலும் வெற்றிகளை பெற முடியும். அதனால் தான் என்னவோ இப்படியான ஆபத்து நிறைந்த திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன போலும், ஆபத்துக்களை நோக்கி முன்னேறுங்கள் என "காப்மேயர்" என்னும் எழுத்தாளர் தனது வெற்றியின் இரகசியம் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது.இவ் மருத்துவக் குழுவிற்கு மனோஜ் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவர்களிற்கு வழிகாட்டியாகவும், உறுதுணைக்காகவும் வன்னி மாவட்டத் தளபதி குமணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனைவிட ஆண் போராளிகளுக்கு அருளும், பெண் போராளிகளுக்கு வான்மதியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மொத்தம் 45 போராளிகள் உள்ளனர், வரைபடங்கள், தொலைத்தொடர்புக் கருவிகள், திசையறிகருவிகள் என்பன பொறுப்பாளர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் உணவுப் பொதியும், தண்ணீர்க் கானும் வழங்கப்பட்டிருந்தது. சுமார் 30 கி.மீ இவர்கள் நடக்க வேண்டும். எதிரிக்கு கண்ணாமூச்சி காட்டி, அவனை நோக்கி நகர்ந்து, பின் அவனை விலத்தி கிழக்காக நடந்து, பின் சமாந்தரமாக நடந்து, மீண்டும் அவனை நோக்கித் திரும்பி செங்குத்தாக நடந்து தங்கள் இலக்கை அடைய வேண்டும். இது இவர்களுக்கான இரண்டு நாள் பயணமாகும். மேல் எழுந்தவாரியான திட்ட விளக்கத்துடன் இவர்கள் தயாராகுகின்றார்கள்.
அவன் தனது துப்பாக்கியைத் தவிர சிறுகைப்பை ஒன்றையும் தோளில் இணைத்துக் கொள்கின்றான். அதனுள் சிறு இடைத்தர சத்திர சிகிச்சைக்குரிய பொருட்களும் அவசர தேவைகளுக்கான மருந்துகளும் இருக்கின்றன. களமுனைகளில் இவற்றுக்கான தேவைகள் இருக்காது என்பதே பொதுவான அனுபவம். ஆயினும் தேவை ஏற்படின் பயன்படுத்த வேண்டிவரும் என்பதனால் அவற்றை மீண்டும் ஒரு தடவை சரிபார்த்துக் கொள்கின்றான். மேற்படி ஆயத்தங்களை செய்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் போராளிகளைப் பார்த்தவண்ணம் நிற்கின்றான் வாணன்.
அவனுக்கும் அழைப்பு வர தன் அணியினருடன் சேர்ந்து கொள்கின்றான். அவர்கள் தங்களுக்குரிய பொருட்களை தூக்கிக்கொள்கின்றனர். அதற்கு முன் தம் துப்பாக்கிகளில் ரவை ஏற்றி "சேஞ் லிவரை" உறுதிப்படுத்திக் கொள்கின்றனர், தொலைத் தொடர்புக் கருவிகளை நிறுத்தியே வைத்திருந்தனர், அளவுக்கதிகமான அலைவரிசைகளை எதிரி மொனிற்றர் பண்ணுவானாகில் சந்தேகம் கொள்ளக்கூடும்.
இப்பொழுது அவர்கள் நடக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களிற்கு பின்னும் முன்னுமாக கண்டிவீதியின் இரு மருங்கிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பல நூறு போராளிகள் தெற்கு நோக்கி விரைந்த வண்ணம் உள்ளனர், மற்றவர்களிற்கு ஈடுகொடுத்து நடப்பதில் அவர்கள் சிரமத்தைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. காரணம் அவர்களைப் போல் அண்மைக்காலமாக இவர்கள் கடினபயிற்சிகளை மேற்கொள்ளாமை ஒன்று, மற்றையது இவர்களிடம் மேலதிக பாரமான பொருட்கள் இருந்தமை எது எவ்வாறோ இவர்கள் அவர்களுடன் நடந்தேயாக வேண்டியிருக்கிறது.
இவர்கள் கண்டி வீதியில் கனகராயன் குளத்தைத் தாண்டியுள்ள கலைச்செல்வன் குடியிருப்பிலிருந்து நகரும் அணியுடன் இணைகின்றார்கள், சிறிது நேரத்திற்கு முன் அவ் வீதியை எதிரியின் எறிகணை மழை நனைத்திருந்தது. அதன் பிரதிபலிப்புக்களை கண்ணுற்றவண்ணம் சென்று கொண்டிருக்கிறார்கள், நல்ல காலம் இப்பொழுது எவ்வித எறிகணை வீச்சும் நடைபெறவில்லை. தற்செயலாகவேனும் இப்பொழுது ஒரு எறிகணை விழுந்தால் போதும் அது தன் பிறவிப்பயனை நிச்சயம் அடைந்து விடும். அதாவது இவர்களில் சிலரை அது பலியெடுப்பதுடன் பலரை காயப்படுத்தவும் செய்யும்.
இரண்டு புறமும் கைவிடப்பட்ட குடிமனைகளும் வயல்வெளிகளும் பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றது. வலதுபுறம் பெரிய மென்பச்சை நிறமுடைய கல்வீடொன்று செல்விழுந்து சிதைந்து, பொலிவிழந்து காணப்படுகின்றது. அருகில் இருந்த தென்னை மரங்கள் சிலமுறிந்தும் சில எரிந்தும் தமது அவலநிலையை புலப்படுத்துகின்றன. முன்னால் சென்று கொண்டிருந்த சந்திரன் சொல்கிறான் "அண்ணை இது யாழ்ப்பாணத்தைச் சேணந்த பணக்காரர் ஒருவருடைய வீடு, முந்தி ரெஸ்ட்கவுசாக இதைப் பாவிக்கிறவையள்" அவன் கூற
"எம்மவர் தம் வழமான வாழ்விழந்து பலகாலமாகிவிட்டது என எண்ணிக்கொள்கின்றான்." தொடர்ந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து வறண்டு கிடக்கும் வயல்வெளிகளும், அதனைத்தொடர்ந்து எந்தக்காலத்திலும் பசுமை மாறாத காடுகளும் தென்படுகின்றது. இக்காடுகளில் காணப்படும் முதிரை, பாலை போன்ற வைரம்பாய்ந்த மரங்களைவெட்டி இப்பிரதேசத்தைக் கழனிகள் ஆக்க எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார்கள், என்னும் எண்ணம், ஏக்கம் ஒன்றை அவ்வூர் ஏற்படுத்துகின்றது.
குடியேற்றத்திட்டத்திற்குரிய குடிசைவீடுகள் உடைந்தும், சோபையிழந்தும் காணப்படுகின்றன. வளமிக்க வன்னிமண் எதிரியின் ஆக்கிரமிப்பை எதிர்பார்த்து தன் ஜீவிதத்தை இழந்துநிற்கின்றது. மரக்கொப்பில் காற்று
உரசியதால் ஏற்பட்ட சத்தம் சாதாரண காலமாயின் கீதமாக இருந்திருக்கும். ஏனோ அது இப்பொழுது இங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களின் உளைச்சலை வெளிப்படுத்தும் ஊளைச்சத்தமாகவே மனதில் படுகின்றது. இம்மண் மண்டியிடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்கள் இப்பொழுது அணிவகுத்து செல்கின்றார்கள். இது இம்மரங்களிற்கும் விளங்கியதுபோலும் காற்றசைவில் தம்மில் பூத்திருக்கும் சிறியமலர்களை இவர்கள்மீது தூவி வாழ்த்துகின்றன. அருகே வளர்ந்திருக்கும் புற்கள் அலைவடிவில் அசைந்து அவர்களை ஆராத்தி எடுக்கின்றன. வீதியோர மர நிழல்களைத் தாண்டி வரும்போது சூரியதேவன் எட்டித் தன் கிரகணங்களினால் இவன் வலக்கன்னத்தில் முத்தமழை பொழிகின்றான். அதுசற்றுச் சூடாகவும், இதமாகவும் இருப்பது போல் உணர்ந்ததால் கன்னத்தை ஒருமுறை தடவி தன்னுள் எதையோ எண்ணி புன்சிரிப்பொன்றை உதிர்க்கின்றான், இவனை கவனிக்கும் எவரும் "இவன் என்ன தன் பாட்டில் சிரிக்கின்றான்" பழைய மண்டைப்பீசோ! என எண்ணி விடுவார்கள் என நினைத்து முகத்தைத் தாழ்த்திக் கொள்கின்றான்.
அப்பொழுது காலடி ஓசை ஒன்று விரைவாக இவனை அண்மிப்பதையும், வலப்பக்கமாக இவனை விலத்த முனைவதையும் உணர்ந்து கடைக்கண்ணால் அவதானிக்கின்றான். ஆச்சரியம் இவனிலும் வயது குறைந்த பெண் போராளி ஒருவர் பெங்களூர் டோபிடோவை தோளில் உழவர் மண்வெட்டி கொண்டு செல்வது போல் சுமந்தவண்ணம் விலத்தி முன்னால் விரைந்து செல்கின்றாள். ஏனோ இவனுடல் சற்று சங்கடத்தில் நெளிகின்றது. இவனிலும் குறைந்தது எட்டு வயதாவது இளையவள் ஆக இருப்பாள், இவள் எதிரியின் தடையை உடைத்து மற்றவர்களுக்குப் பாதை
எடுத்துக் கொடுக்கப்போகின்றாள், அதனூடாக ஏனையபோராளிகள் பாய்ந்து எதிரிமுகாமினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தப் போகின்றார்கள், சிலவேளைகளில் டோபிடோவை முட்கம்பி வேலிக்கு அருகில் கொண்டு செல்லும்போது குண்டடிபட்டு இவள் இறக்கலாம். அல்லது இவள் இதனை வெடிக்கவைத்தவுடன் அவ்விடம் ரவை மழையினாலோ அன்றி சிறுரக நோக்கி செறிவாக்கப்படும் பீரங்கி வீச்சுக்களினாலோ சின்னா பின்னமாகிப் போகலாம், எதுவும் நிகழலாம். மனம் கனக்கின்றது "இவள் வயசில் நான் என்ன செய்து கொண்டிருந்தனான்" நினைத்து வெட்கப்படுகின்றான். சைக்கிளின்ற ரயர் தேயத்தேய யாழ்ப்பாண வீதிகளை வலம் வந்ததுதான் மிச்சம், நல்லவேளை காலம் பிந்தியாவது ஞானம் பிறந்தது. தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்கின்றான்.
இன்னும் எத்தனை இளைஞர்கள், யுவதிகள் தங்கள் பொறுப்பை உணராமல் பரப்புரை செய்பவர்களுக்கு...எனக்கேன் இதுவென தன்மனவோட்டத்தை திசைமாற்ற முயற்சிக்கின்றான், அப்பொழுது முன்னால் சென்ற போராளி சற்றுநின்று திரும்பிப்பார்த்து ஒரு புன்னகை பூத்து "அண்ணை போயிட்டுவாறன்" கூறியவள் அவன் விடையையும் எதிர்பாராமல் விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள். தன் கண்கள் பனித்துவிடுமோ என பயப்பட வேண்டியதாகிவிட்டது தன்னை ஒருமாதிரி கட்டுப்படுத்திக் கொள்கின்றான்.
உணர்வுகளால் உருப்போடப்பட்டவன் தான் போராளி. ஆனால் அவன் அவற்றால் அள்ளுண்டு போதல் ஆகாது. ஏனெனில் தன் கடமைகளை அவன் சரிவரச் செய்ய முடியாமல் போய்விடலாம் என எண்ணும்போது முன்னோர் சொல்வார்கள், "தம்பியுள்ளான் சண்டைக்கஞ்சான்" என இனி மாற்றித்தான்
சொல்லவேண்டும் அண்ணன் உள்ளவள் சண்டைக்கு அஞ்சாள். எனும் சொற்றொடரை உதடுகள் முணுமுணுக்கின்றது.
- யுத்தக்காண்டம் (2)
-தூயவன்
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
No comments:
Post a Comment