Thursday, 19 March 2026

இலட்சிய வீரர்கள் இறப்பதில்லை -சூரியப்புதல்வர்கள்

உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் எத்தனையோ அர்ப்பணிப்புக்கள் தியாகங்களைப்பற்றி படித்திருக்கின்றோம். கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் எமது இளைஞர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வார்த்தைகளாலும், எழுத்துக்களாலும் அளந்து விடமுடியாதவை.

இந்த மாவீரர்களின் தியாக உணர்வும், தன்னலமற்ற இலட்சிய உறுதியும், ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களும் தமிழினத்தை உலக அரங்கிலே தலைநிமிரச் செய்திருக்கின்றதென்பதை நாம் எல்லோரும் அறிவோம். உலகின் ஒடுக்கப்படும் மக்களின் ஒரு பகுதியாக, தமிழினமும் விடுதலை வேண்டிப் போராடுகின்றதென்பதை இந்த மாவீரர்களினது மெய்சிலிர்க்க வைக்கும் களச் சாதனைகள் உலகிற்கு உணரச் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இந்த வீரர்கள் வாழப்பிறந்தவர்கள், இவர்கள் தாய் தந்தை, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்ற குடும்பப் பாசப் பிணைப்பில் இணைந்தவர்கள். ஆனாலும் தனது குடும்பம், உறவு, தனது தனிப்பட்ட வாழ்க்கை என்பவை பற்றிச் சிந்திக்க முடியாதளவிற்கு தமிழினத்தின் செயற்பாட்டையும் கடமையையும் உணர்த்தியது. இதனால் இன்று இவர்கள் உலகம் போற்றும் மாவீரர்களானார்கள்.

தமிழன் தனது சொந்த மண்ணிலேயே சுதந்திரமாக நடமாடமுடியாது, வாழ முடியாது, நாளும் துன்பத்தையும் அழிவையும், இழப்புக்களையும் சந்திக்கின்ற ஓர் அவல நிலையைக் கண்டு இந்த இளைஞர்கள் மனம் நெகிழ்ந்தவர்கள். மனித வாழ்விற்கு அர்த்தம் வேண்டும் என்பதற்காக சுதந்திரம் வேண்டி தங்களை அழிக்கத் துணிந்தவர்கள். தங்களது சுதந்திரத் தாகத்தோடு சாவையும் அணைத்து இவர்கள் கடந்து சென்ற பாதைகளோ மிகவும் கொடூரமானவை. அவை விபரிக்கமுடியாதவை. ஆனாலும் இவர்கள் காலத்தால் சாகாவரம் பெற்றவர்கள்.

சிறிலங்கா அரசானது சமாதானம் என்ற பாதையிலிருந்து மாறி தமிழினத்தின் நீண்ட கால உரிமைப் போராட்டத்தை ஓர் பயங்கரவாதப் பிரச்சினையாக உலகிற்கு காட்ட நினைக்கின்றது. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். சிறீலங்கா அரசுகள் எதுவானாலும் தமிழினத்தின் உரிமைப்போராட்டத்திற்கு தீர்வுகாணப் போவதில்லை. மாறாக பொருளாதாரத் தடைகளாலும், இராணுவ நடவடிக்கைகளாலும் விமானக்குண்டு வீச்சுக்களாலும் தமிழினத்தின் உரிமைப் போரைச் சிதைத்து விடலாம் என்பதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளது.

சிங்கள ஆளும் வர்க்கத்தின் இந்தத் தொடர் போக்கானது தமிழினத்திற்கு ஒன்றையே மீண்டும் வலியுறுத்துகிறது. அதாவது தமிழினம் தனது சுதந்திரத்தைப் போராடித்தான் பெற வேண்டும் என்பதையே.

இந்த வகையிலே எமது வீரர்கள் நாளும் இரத்தம் சிந்தி, ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து எமது இனத்திற்காக தங்களை அர்ப்பணித்துச் சென்றுள்ளனர். நாளைய சந்ததி சுதந்திரமாக வாழ்வதற்காக இந்த மாவீரர்கள் வழியே நாமும் செல்வோம்.....

-சூரியப்புதல்வர்கள்

No comments:

Post a Comment